Monday, August 31, 2009

ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை கிடுகிடு: டிபன் விலை சர்...

தமிழகத்தில் உணவுப் பண்டங்கள் தயாரிப்பின் மூலப்பொருளான அரிசி, எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை ஓராண்டில் ஒன்பது முறை அதிகரித்து விட்டது. இதனால், ஓட்டல்களில் சாப்பாட்டின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, 2008 ஜூன் 3 முதல், ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஓட்டல்களில், அரசின் பார்வையில் இருந்து தப்பிக்க, 20 ரூபாய்க்கு சாப்பாடு என்பது பெயரளவில் வழங்கப் பட்டு வருகிறது. அதையும், சில ஓட்டல்கள் சத்தமின்றி கைவிட்டு விட்டன. தற்போது, தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இவற்றின் விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கும் அரசு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால், வெளி மார்க்கெட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. தங்களின் ஓட்டல் மீதான நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், மதிய சாப்பாடு விலையை சத்தமின்றி ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.
சேலம், திருச்சி, திருநெல்வேலி உட்பட, தமிழகத்தின் பிற மாவட்டங்களில், 27 ரூபாய்க்கு விற்கப்பட்ட அளவு சாப்பாடு தற்போது, 28 ரூபாயாகவும், 33 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு 37 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய தொழில் நகரங்களில், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட அளவு சாப்பாடு 33 ரூபாயாகவும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு 45 ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தை, கடந்த 28ம் தேதி முதல் ஓட்டல் உரிமையாளர்கள் அரங்கேற்றி உள்ளனர். சாப்பாடு விலை ஏற்றத்தைத் தொடர்ந்து, டிபன் வகைகளின் விலை, அடுத்த வாரம் முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உணவுப் பண்டங் கள் தயாரிப்பின் மூலப்பொருளான அரிசி, எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை ஓராண்டில் ஒன்பது முறை அதிகரித்து விட்டது. ஆறு மாதத்துக்கு முன் நாங்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் ஆகியவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்து வைத்திருந்தோம். ஆனால், தற்போது அவற்றின் இருப்பு தீர்ந்து விட்டதால், புதிதாகக் கொள்முதலைத் துவக்கி உள்ளோம். இதில், அத்தியாவசிய சமையல் பொருட்களான கடுகு முதல் பருப்பு வரை அனைத்து பொருட்களும், 20 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்வை சந்தித்துள்ளன. சமையல் காஸ் விலை, மூன்று மாதத்தில் 170 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தில் இருந்து எங்கள் தொழிலை காத்துக் கொள்ளும் வகையில், உணவுப் பண்டங்களின் விலையை உயர்த்தியுள்ளோம். ஓட்டல்களில் சாப்பாடு விலையில் இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் டிபன் வகையின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். செப்டம்பர் 1 முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளதால், ஓட்டல்களில் காபி, டீ விலை உயர்வு குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.
நன்றி : தினமலர்


Sunday, August 30, 2009

உலகின் 3-வது பெரிய 'வர்த்தகம்'!

போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, உலகில் லாபகரமாக (?!) நடக்கும் 3-வது மிகப் பெரிய சட்டவிரோதத் தொழில் "குழந்தைகள் கடத்தல்' என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். உலக அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 35 லட்சம் பேர் வரை கடத்தப்படுகின்றனர் என்கிறது கணக்கெடுப்பு ஒன்று.

அதிலும், குழந்தைகள் கடத்தலுக்கான பிரதான இலக்கு இந்தியாவும், பாகிஸ்தானும். எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளும்; எல்லையைக் கடக்கும் குழந்தைகளும் இங்கு அதிகம்.

நம் நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள்; சிறுவர்கள். குடும்ப வறுமையால் இத்தொழிலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் அதிகம் பேர் உண்டு. இவர்களுக்கு இணையாக, கடத்தப்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்கிறது அந்த கணக்கெடுப்பு.

பிச்சை எடுக்க, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புகளுக்காக, பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பெண் சிசுக்கொலை, பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவது என அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமுதாயம். இதனால், ஆண்-பெண் விகிதங்களில் ஏற்படும் மாற்றம்,
சமுதாயத்தின் போக்கை ஏற்கெனவே மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டது.

இதன் அடுத்த முகத்தை அண்மையில் காட்டியது "தத்து மையங்களில் இருந்து குழந்தைகள் விற்பனை' எனும் செய்தி. பேசும் திறனற்ற பிஞ்சுக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம், தத்து மையங்களைக் கண்காணிப்பதில் அரசு கோட்டைவிட்டதை வெளிக்கொண்டு வந்தது.

ஒரு மாவட்டத்தில் எத்தனை தத்து மையங்கள் செயல்படுகின்றன? அவற்றில் எவை அரசு அங்கீகாரம் பெற்ற தத்து மையங்கள்? என்பதைக் கண்காணிக்கத் தவறியதன் விளைவை அரசு நன்கு உணர்ந்து கொண்டது. தற்போது தத்து மையங்கள், அரசின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"பணத்துக்காக பள்ளிச் சிறுவன் கடத்திக் கொலை' எனும் சம்பவங்களும் தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணத்துக்காக கடத்தப்படும், விற்பனை செய்யப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஆண், பெண் என எவ்விதப் பாகுபாடுமின்றி, குழந்தைகளைக் கடத்திச் சென்று, பணம் கேட்டு பெற்றோரை மிரட்டுகின்றனர்.

"தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் குழந்தைகள். இவர்களில் தினசரி நூற்றுக் கணக்கானோர் காணாமல்போவதாக புகார் வருகிறது. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை' எனக் குறிப்பிடுகிறது தமிழக அரசின் "மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு.

பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. அதேபோல, மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களும் செயல்படுகின்றன. மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூடுவதும், ஆலோசனை நடத்துவதுமாகக் கலைகின்றனர். ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யத் தவறியதன் விளைவு, குழந்தைகள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒருங்கிணைப்புக் குழுவினர் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது, இத்திட்டத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. குழந்தைக் கடத்தல் தொடர்பாகத் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்.1098 அதுபற்றிய விவரம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? குறிப்பாக குழந்தைகளுக்கு.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு தவறு, பெற்றோர் மற்றும் பள்ளிகளின் தரப்பில் ஏற்படுகிறது. சரியானபடி நடக்கவில்லை என்பதற்காக பெற்றோர், ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து ஓடிப்போன குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகம். குழந்தைகள் தங்களிடமிருந்து விலகிச் செல்லாத சூழலை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் உருவாக்கத் தவறியதன் விளைவு, காணாமல்போன குழந்தையைத் தேடி அலைய வேண்டிய சூழலை உருவாக்குகிறது.

இதுதொடர்பாக, மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள், குழந்தைகள் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது மாவட்ட அளவில் குழு இருந்தாலும், ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலான குழுவாக அதை மாற்றி, குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வை பட்டிதொட்டிகளுக்கும் பரவச் செய்யலாம்.

அதேபோல, காணாமல்போன, கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடும் ஊடகங்கள், பெண்கள், குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

குழந்தைகள் நாடாளுமன்றம் அமைக்கும் பல தொண்டு நிறுவனங்கள், அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் பல குமுறல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. இவற்றை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த அரசு தவறிவிட்டது.

தமிழகத்தில் சிலை கடத்தல், விபசாரத் தடுப்பு, திருட்டு விசிடி தடுப்பு போன்றவற்றுக்குத் தனிப்பிரிவு கொண்டிருக்கும் தமிழக காவல்துறை "குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு' எனத் தனிப் பிரிவு தொடங்கவும் முன் வர வேண்டும்.

இதுதவிர, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றுவோம் எனும் குறிக்கோளுடன் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை ஒதுக்கிடும் மத்திய, மாநில அரசுகள், குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், தொலையும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை எவராலும் தடுக்க முடியாமல் போகும்.

எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் கடத்தல் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது அவசியம். சட்டத்தைக் கடுமையாக்கினாலும் தவறில்லை.

தீவிரவாதத் தடுப்புக்கு என அளிக்கும் முக்கியத்துவம், குழந்தைகள் கடத்தல் தடுப்புக்கும் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளம் இப்படியும் கொள்ளைபோகிறது; இதைத் தடுத்தாக வேண்டியது அவசர அவசியம்.

கட்டுரையாளர் : எஸ். ஜெய்சங்கர்
நன்றி : தினமணி

"அரசு' மரத்தில் தேள் கொட்டினால்...!

உடல்நலன் குறித்து எந்த அளவுக்கு நமது முன்னோர்கள் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழி மூலம் அறியலாம்.

உடல்நலன் மற்றும் அதைச் சார்ந்த மருத்துவத்தில் தொன்மையும், பாரம்பரியமும் மிக்க நாமும், நம்மை ஆள்பவர்களும் இப்போது அதில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகிறோம் என்பதை நினைக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது.

அறிவியல் வளர்ச்சியால் எண்ணற்ற மருந்து மாத்திரைகள் கிடைத்தாலும், ஆரோக்கிய வாழ்வு கிடைத்திருக்கிறதா? என்றால் இல்லை என்பதே உண்மை.

வளர்ந்துவிட்ட மருத்துவ வசதிகளும் வர்த்தக மயமாகிவிட்டன. இதனால் நோயின் தன்மைக்கு ஏற்ற சிகிச்சை பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை.

செல்வத்தை அழித்துப் பெறுகிற சிகிச்சையால்கூட தனிமனித ஆயுள் கூடியிருக்கிறதா? என்றால், அதிலும் ஏமாற்றம்தான்.

நமது முந்தைய சந்ததியினரில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்து வாழ்ந்தனர். ஆனால் இப்போதைய இந்தியனின் சராசரி வயது 62 என்கிறது ஓர் ஆய்வு.

நமது நாட்டில் 5 வயதுக்கு உள்பட்ட 20 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் (யுனிசெப்) அறிவித்துள்ளது.

பிறந்து 28 நாள்களுக்குள்ளேயே ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் இறப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகத்தில் 35,000 குழந்தைகள் இறப்பதாக ஓர் கணக்கெடுப்பு கூறுகிறது.

சத்துக்குறைபாடு காரணமாக பிரசவ காலத்தில் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. மலேரியா, மஞ்சள் காமாலை எனப் பல்வேறு நோய்கள் அவ்வப்போது பரவிவரும் நிலையில் பத்தில் 4 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாக டாக்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தைராய்டு, ரத்தசோகை என பெண்களைப் பாதிக்கும் நோய்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது.

ஆனால், இந்தியா வல்லரசாகிறது என பீற்றிக்கொள்ளும் நமது அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் நோய்களைத் தீர்க்க உரிய கவனம் செலுத்துகிறார்களா? என்றால் இல்லை என்பதே பதில். சத்துக்குறைபாடு காரணத்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தசோகை நோய் பாதிப்பைத் தடுக்கும் மருந்துகூட அரசு மருத்துவமனைகளில் அறவே இல்லை.

இதற்கு ஏதாவது தனியார் நிறுவனம் "ஸ்பான்சர்' செய்தால் "புண்ணியம்' என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கையேந்தும் பரிதாப நிலையே உள்ளது.

ஆனால், கர்ப்பிணிகளுக்கு "நிதி உதவி' என மக்கள் வரிப்பணம் குறிப்பிட்ட கட்சியினருக்கு கமிஷனாகக் கிடைக்கும் வகையிலேயே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதேபோல தனியார் நிறுவனத்துக்குப் பயனளிக்கும் வகையிலேயே மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

எய்ட்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என மேல்நாட்டு இறக்குமதி நோய்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம், நமது நாட்டின் வறுமை காரணமாக ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்குத் தரப்படுவதில்லை.

நாட்டில் பெரும்பாலானோர் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சர்க்கரை நோய்க்கு இலவசப் பரிசோதனை வசதியும், உரிய மருத்துவ வசதியும் பரவலாக ஏற்படுத்தவில்லை.

அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகளுக்கு ஏழைகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. அங்கு கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதி தருவதில்லை.

அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை. ஆனால், "கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக' தனியார் நிறுவனத்துக்கு மக்கள் வரிப்பணத்தில் ஆம்புலன்ஸ் வாங்கித் தந்து சேவைக்கு நிதியும் அளிக்கிறது அரசு.

ஆசிரியர்கள் பற்றாக்குறை; அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத வகுப்பறைகள், விடுதிகள் இல்லாமல் வீடுகளை வாடகைக்குப் பிடிக்கும் அவலம் என கல்வி பயிலும் கட்டாயத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.
இதுபோன்ற சமூகநலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த அரசை யாரும் நிர்பந்திப்பதில்லை. அப்படியே வலியுறுத்தினாலும், அதை அரசும் கண்டுகொள்வதில்லை.

ஆனால், பயிற்சி மருத்துவர், பட்டமேற்படிப்பு மாணவர்கள், டாக்டர்கள் என மருத்துவம் சார்ந்தோர் கேட்கும் ஊதிய உயர்வும், ஊக்கத்தொகை உயர்வு மட்டும் உடனே கிடைக்கிறது.

மந்திரத்தில் மாங்காய் காய்க்கிறதோ இல்லையோ, அரசு இயந்திரமாக இருப்போர் கேட்டால், பிச்சைப் பாத்திரம் கூட அட்சய பாத்திரமாகிவிடும் அதிசயம் நடக்கிறது.

காரணம், அவர்கள் கையில் போராட்டம் என்ற "தேள்' இருப்பதுதான்.
இதைப் பார்க்கும்போது கிராமத்துப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. "தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிகட்டுமாம்'!

போராட்டம் என்பது "அரசு' என்ற தென்னை மரத்தில் கொட்டும் தேள்! இதனால், "தேர்தல்' என்ற "பனை'மரத்தில் நெரிகட்டிவிடக் கூடாது என்ற அச்சம் ஆளும்கட்சிக்கு ஏற்படுகிறது.

எனவே "அரசு' மரத்தில் தேள்கொட்டினால் ஆதாயம் நிச்சயம் என்பதே இப்போதைய புதுமொழியாகிவிட்டது.

கட்டுரையாளர் : வ. ஜெயபாண்டி
நன்றி : தினமணி

பயணப்படி, ஊக்கத்தொகை: ஏர் இந்தியா நிறுத்துகிறது

ஏர் -இந்தியா நிறுவனம், ஊழியர்களுக்கான பயணப்படி மற்றும் ஊக்கத் தொகையை நிறுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவிலான பொருளாதார சரிவு, எந்தத் துறையையும் விட்டு வைக்கவில்லை. விமான நிறுவனங்கள், கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் -இந்தியா, ஏழாயிரத்து 200 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதனால், மாதா மாதம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக் கூட கஷ்டப்படுகிறது. நஷ்டத்தை சமாளிக்க, ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் பயணப்படியை நிறுத்த, அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஊழியர்களுக்கான மொத்த செலவில், ஊக்கத்தொகைக்கு மட்டும், 30 முதல் 70 சதவிகிதம் வரை செலவு ஆகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய விமான நிறுவன அதிகாரிகள், ' ஊழியர்களின் பணியாற்றுதல் திறமைக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை யை மாற்று வழியில் ஈட்ட முடிவெடுக்கப்படும்' என தெரிவித்தனர். ஊக்கத் தொகை மற்றும் பயணப்படிக்காக மட்டும், மாதம் 350 கோடி ரூபாய் விமான நிறுவனத்தால் செலவிடப்படுகிறது. நிறுவனத்தின் முடிவுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும், பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விமான நிறுவன ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி : தினமலர்


நீதி வாழ்வது யாரால்?

எங்கும் நீதித்துறையைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளைப் பற்றிய விமர்சனங்கள் நன்மைக்காக இருக்குமானால் வரவேற்க வேண்டியதுதான். ஏனென்றால் மக்களும், நீதியும் பிரிக்க முடியாதவர்கள்.

""மக்களில் 91 விழுக்காட்டினர் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு நீதித்துறையை நாடாமல் புறக்கணிக்கின்றனர்...'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. சின்ஹா கூறியுள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி மட்டுமல்ல, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்தலைவரும் ஆவார்.

அனைவருக்கும் நீதி கிடைக்கும் வழியைச் சொல்லித்தர மறந்து விட்டோம். நீதியைப் பெறுவது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள உரிமை. நாட்டில் 9 விழுக்காட்டினர்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை நாடுகின்றனர். பெரும்பாலானோர் பிரச்னைகளை நீதிமன்றத்தின் மூலம் சந்திக்காமல் அவர்களாகவே சமாளித்துக் கொள்கின்றனர்.

பிரச்னைகளைத் தீர்க்க பெரும்பாலான மக்கள் காவல்துறை அல்லது அரசியல்வாதிகளின் உதவியை நாடுகின்றனர். ரவுடிகளைத் தேடுகின்றனர். அதாவது 91 விழுக்காடு மக்களை நாம் நீதித்துறையைப் புறக்கணிக்கச் செய்திருக்கிறோம் என்பது வேதனையாகும். சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வரவும், சட்டங்கள் சரியாக அமலாவதற்கும் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பது பற்றிய சிந்தனையைக் கொண்டு வருவது மிக அவசியம் என்பது அவர் கருத்தாகும்.

இவ்வாறு பொதுமக்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. வழக்கறிஞர்களைத் தேடி அலைந்து, அவர்களின் உதவியோடு நீதிமன்றங்களை அணுக வேண்டும். இப்படி ஒரு நாளா? இரண்டு நாளா? ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டும்.

ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்தாலும் அந்த நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது. வெளியே வந்ததும், "வழக்கறிஞர் வாய் திறப்பாரா?' என்று எதிர்பார்த்திருக்க வேண்டும்.

தம் சொந்த வேலையையும் விட்டு, பணத்தையும் செலவழித்துவிட்டு, "நியாயமான தீர்ப்பு கிடைக்குமா?', என்று ஏங்கிக் கிடக்க வேண்டும். இதனால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்வால் துவண்டு போன ஒரு குடிமகன் என்ன நினைப்பான்?

"சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம்' என்ற மரபுப் பழமொழி இதனால் ஏற்றபட்டதுதான். காலம் கடந்து கிடைக்கும் தீர்ப்பு கூட மறுக்கப்பட்ட நியாயம்தானே! இந்தக் காலதாமதத்திலிருந்து மீள வழி கண்டறியப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நடக்கிற காரியமா?

"ஆண்டுக்கணக்கில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன' என்று மூத்த வழக்கறிஞர்களும், அவர்களோடு சேர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அங்கலாய்க்கின்றனர். இதற்கு முடிவுகட்டாமல் மக்களைக் குறை கூறிப் பயன் என்ன?

""நீதிமன்றங்களில் அதிக அளவு வழக்குகள் தேங்கியுள்ளதே இப்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதுதவிர பல வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதிலும் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நீதிமன்றங்களை நாடும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்'' என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இதற்கு நீதித்துறை தொடர்பான சட்டங்களைத் திருத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகளை நீதித்துறையில் பயன்படுத்த வேண்டும்.

நீதிமன்றத்தில் உள்ள பழமையான மற்றும் சிக்கலான பல நடைமுறைகளைக் கைவிட வேண்டும். இதன் மூலம் விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

நீதிமன்றக் கட்டணங்கள், வழக்கறிஞர்களை அமர்த்தும் செலவு போன்றவை ஏழை மக்கள் எளிதில் செலுத்தும் வகையில் இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு நீதிமன்றத்தை அணுகுவதே பெரும் பிரச்னையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டத்தின்முன் அனைவரும் சமம்; சட்டத்திலிருந்து யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறை இதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது. சாதாரண குடிமகன் ஆண்டுக்கணக்காகக் காத்துக் கிடக்க நேருகிறதே தவிர, அரசு வழக்குகள் இரவு பகல் பாராமல் விசாரிக்கப்பட்டு ஆணைகள் இடப்படுகின்றன.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக அன்றைய அரசாங்கம் நீதிமன்ற ஆணைகளைப் பெற்று இரவோடு இரவாக அரசுக் குடியிருப்பிலிருந்தே வெளியேற்றியது; பெண்களும், பிள்ளைகளும் நிராதரவாகத் தெருவில் நின்ற காட்சிகளை மறக்க முடியுமா?

பல்லாண்டுகளாகப் பணிபுரிந்த அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்யவும், புதியவர்களை அந்த இடத்தில் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு நீதிமன்றமும் துணை போனது. மனிதநேயம் பற்றிய சிந்தனை வேண்டாமா? இவ்வாறு ஆளுவோருக்குத் துணைபோகாதபோது நீதிபதிகளே மிரட்டப்படுவதான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

2009 ஜூன் 29 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ஒரு முன்ஜாமீன் விசாரணையின்போது, ""ஏற்கெனவே நான் இந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளேன்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கூறுகிறார். இதுபற்றி உங்களுக்கும் (மனுதாரரின் வழக்கறிஞர்) தெரியும்...'' என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் கூறினார்.

இதுபற்றி நாடெங்கும் கண்டனக் கணைகள் கிளம்பின. நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் யார் என்பதை விசாரித்து பிரதமர் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தினர்; கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.

தொடர்புடைய நீதிபதியே அமைச்சர் பெயரைக் கூறாத நிலையில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்னையே எழவில்லை என்று இப்பிரச்னை ஒரு வழியாக முடித்து வைக்கப்பட்டது. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை என்று கூறியதுதான்.

இதுபோல் நீதிபதிகளை மிரட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதை அறியாதார் யார்? ஆனால் இதற்கு இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார்? பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகளை யாரால் என்ன செய்துவிட முடியும்?

தருமத்திற்கும், நீதி நேர்மைக்கும் இவ்வாறு எத்தனையோ தடைகள் வரலாம்; வரும்.

இவ்வளவையும் கடந்துதான் இலக்கைச் சென்றடைய வேண்டும். வேண்டியவர், வேண்டாதார் எனப் பாராமல், பணத்திற்கும், பதவிக்கும் சோரம் போகாமல் உண்மையைத் தேடும் நீதி தேவதை வணக்கத்துக்குரியவள்தான்.

நீதி என்னும் நதி மேட்டுக்குடி பக்கமே பாய்ந்திடாமல் எல்லா இடங்களிலும் பாயும்படி செய்திட வேண்டும். ஏழை எளிய மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் தேடிச் சென்று சேர வேண்டும்.

இதுபற்றி நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நீதித்துறையை ஆக்கபூர்வமாக விமர்சித்ததற்காக நீதிமன்ற அவமதிப்புச் செய்ததாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.

""இந்த நாட்டில் ஏசுநாதர்கள் சிலுவையில் அறையப்படுகிறார்கள். பாரபாஸ்கள் உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்கள். இதற்கான நன்றியை நீதித்துறைக்குத்தான் கூற வேண்டும்...'' என்பதும் அவரது விமர்சனம்தான்.

சமூக சீர்திருத்தவாதிகள் எல்லாம் இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாகியுள்ளனர். முன்னாள் கேரள முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு முதல் பெரியார் ஈ.வெ.ரா. வரை இவ்வாறு கண்டனத்துக்கு உள்ளானவர்களே!

""நூற்றுக்கு நூறு சரியானதோர் சமூகம் என்பது ஒருபோதும் இருக்கவே முடியாது. சமூக அநீதிகளை எவ்வாறு களைவது என்பதே நம்முடைய தலையாய குறிக்கோளாக விளங்கிட வேண்டும். சமுதாயத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்; பெண்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறார்கள்; இம்சிக்கப்படுகிறார்கள். உழைப்பாளி மக்களைக் கடுமையாகச் சுரண்டி வருகிறார்கள். நாம் இத்தகைய சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடியாக வேண்டும்...'' என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் "நீதிக் கோட்பாடு' பற்றிய அண்மை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே எழுப்பப்படுகிறது; அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தாய்மொழி மூலமாகவே நடத்தப்பட வேண்டும்; நீதிமன்றங்களின் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்பட வேண்டும்; நீதிபதிகளின் சொத்துரிமை பற்றிய மசோதாவில் அவர்களின் சொத்து விவரங்கள் மக்களுக்குத் தெரியும்படி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நீதியின் பெருமையைப் பற்றிப் பேசாத இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். நீதி தவறும் நாட்டில் இயற்கையே பொய்த்துப் போகும்; பருவமழை தவறுவதுடன், பலவித உற்பாதங்களும் உள்ளாகும் என்றே அறநூல்கள் கூறுகின்றன.

நமது நீதிமன்றங்கள் பல நெருக்கடியான நேரங்களிலும் பாராட்டும்படியான தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வியக்கத்தக்க வகையில் செயல்பட்டு வருகின்றன.

இவை தேசத்தைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றன என்பது நமக்கெல்லாம் பெருமைதான். அதனைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி

Saturday, August 29, 2009

ஏர் - இந்தியா ஊழியர்களுக்கு ஊக்க தொகை குறைக்கப்பட்ட விவகாரம் : குழு அமைப்பு

இப்போது கொடுத்து வரும், உற்பத்திக்கு தகுந்த ஊக்க தொகை மற்றும் பறக்கும் நேரத்திற்கு தகுந்தஊக்க தொகை ஆகியவற்றில் 50 சதவீதத்தை குறைக்க ஏர் - இந்தியா நிர்வாகம் எடுத்திருக்கும் முடிவை, பெரும்பாலான யூனியன்கள் எதிர்க்கின்றன. இதனையடுத்து, அந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர நான்கு கமிட்டிகளை நியமிக்க ஏர் இந்தியாவின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் அர்விந்த் யாதவ் முடிவு செய்திருக்கிறார். அந்த கமிட்டிகள், அதன் அறிக்கைகளை வரும் செப்டம்பருக்குள் அளிக்கும் என்றும், அது வரை ஊக்க தொகை பாதியாக குறைக்கப்பட்டிருக்கும் என்று ஏர் - இந்தியா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. தற்போது ஏர் - இந்தியா ஊழியர்களுக்கு மாதா மாதம் கொடுத்து வரும் சுமார் 3,100 கோடி ரூபாய் சம்பளத்தில், பாதி, ஊக்க தொகையாகவே இருந்து வருகிறது. எனவே இதனை பாதியாக குறைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஏர் - இந்தியாவின் இந்த முடிவை பெரும்பாலான யூனியன்கள் எதிர்க்கின்றன. அது குறித்து போராட்டம் செய்யவும் அவைகள் திட்டமிடுகின்றன.
நன்றி : தினமலர்


வெள்ளையடித்து வெப்பத்தைக் குறைப்போம்

கடந்த ஜூன் ஆறாம் நாளை உலகச் சுற்றுச்சூழல் தினமாக உலகெங்கும் கொண்டாடி முடித்துவிட்டார்கள். வழக்கம்போல பிளாஸ்டிக் குப்பைகளைத் தடை செய்ய வேண்டும், மின்சார நுகர்வைக் குறைக்க வேண்டும், பழைய காகிதங்களையும் துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும், கரிமக் குப்பைகளை உரமாக்க வேண்டும், குளியல் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் நீரைத் தோட்டங்களில் பாய்ச்சி, கறிகாய்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் தாராளமாக அள்ளி வீசப்பட்டுள்ளன.

நோக்கியா நிறுவனம் பழைய செல்பேசிகளையும் இதர மின்னணுச் சாதனங்களையும் சேகரித்துச் சமையல் பாத்திரங்களாகவும் பூங்கா பெஞ்சுகளாகவும் மறுசுழற்சி செய்து வழங்கப் போவதாகச் சொல்கிறது. அத்துடன் தன்னிடம் தரப்படும் ஒவ்வொரு செல்பேசிக்கும் ஒரு மரக்கன்றை நடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. நல்ல நோக்கம். நல்ல முயற்சி.

மனிதக் காரியங்களால் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பது கட்டாயம் என்று விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் எச்சரிக்கிறார். தமிழகத்தின் நீண்ட கடற்கரையே ஒரு சாபமாக மாறிவிடலாம் என அவர் கூறுகிறார்.

வளிமண்டல வெப்பநிலை ஒரு செல்சியஸ் டிகிரி உயர்ந்தாலும் ஹெக்டேருக்கு முக்கால் டன் என்ற அளவில் நெல் உற்பத்தி குறையும். கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையோர வயல்கள் மூழ்கினால் நெல் உற்பத்தி வெகுவாகக் குறையும்.

இமயமலைப் பனியாறுகள் உருகி நேபாளத்தில் வெப்ப அபாயத்தை உண்டாக்கி வருகின்றன.

அடுத்த 50 ஆண்டுகளில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது.

அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்லத் திட்டமிடுகிறார்கள்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன உலகின் விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் எனப் பலவகையான காரணிகள் உள்ளன.

இதெல்லாம் சரிதான். அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.

அமெரிக்க அரசின் ஆற்றல்துறை அமைச்சர் ஸ்டீவன் சூ வீடுகளின் கூரைகள், மொட்டை மாடிகள், சாலைகள், வாகனங்களின் மேற்பரப்புகள் என வெயில்படுகிற எல்லாப் பரப்புகளிலும் வெள்ளையடித்துவிட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அவர் சொன்னால் அர்த்தமிருக்கும்.

வெள்ளை நிறப்பரப்புகள் தம் மீது விழும் வெப்பத்தில் எண்பது விழுக்காடு வரை பிரதிபலித்து வானுக்குத் திருப்பி அனுப்பிவிடும்.

மொட்டை மாடியில் வெள்ளையடிப்பதால் வீட்டுக்குள் இறங்கும் வெப்பம் குறைந்து மின் விசிறிகள், குளிர் சாதனங்கள் போன்றவற்றின் தேவை குறையும். கார்களின் மேற்பரப்பு வெள்ளையாக இருந்தால், உள்ளே சூடு குறைந்து ஏசி போடாமல் சமாளிக்க முடியும்.

இவ்விதமாக வெள்ளையடிப்பது, உலகிலுள்ள அத்தனை கார்களும் பதினோரு ஆண்டுகளுக்கு ஓடாமலிருந்தால் ஏற்படக்கூடிய வெப்ப உமிழ்வு குறைவின் நல்விளைவை ஏற்படுத்தும் என்று கலிபோர்னியாவிலுள்ள தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த ஆர்ட் ரோசன்பெல்ட், ஹஷிம் அக்பரி, சுரபி மேனன் ஆகிய விஞ்ஞானிகளின் ஆய்வுகள் காட்டுகின்றன.

நூறு சதுர அடி பரப்புள்ள வெள்ளைக் கூரை, ஒரு டன் கரியமில வாயுவால் ஏற்படக்கூடிய பசுங்குடில் விளைவை ஈடு செய்யும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதன்மூலம் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்குப் பத்து லட்சம் டாலர் வரை மின்சாரச் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

கலிபோர்னியா மாநில அரசு அங்குள்ள வர்த்தக நிறுவனங்களில் வெயில்படும் பரப்புகள் யாவும் வெள்ளை நிறம் பூசப்பட வேண்டுமென சட்டமியற்றியுள்ளது.

விரைவில் அந்தச் சட்டம் தனியார் வீடுகள் மற்றும் பண்ணைகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.

இங்கிலாந்திலும் அதே போன்றதொரு சட்டம் வரப்போகிறது. நாமும் அதை மேற்கொள்ளலாம்.

அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் நாடாக இந்தியா உள்ளது.

அவற்றில் 68 சதவிகிதம் நிலக்கரியை எரிப்பதால் உருவாகின்றன.

மரம் நடுவது, மழை நீர் சேமிப்பு, மின்சார உபயோகத்தைக் குறைப்பது, நடை அல்லது சைக்கிள் மூலம் பயணிப்பது போன்றவற்றுடன் நம் வீட்டு மொட்டை மாடிகளில் வெள்ளைச் சாயம் பூசுவதன் மூலம் நம்மாலான அளவில் வளிமண்டலம் சூடாவதைக் குறைக்கும் பங்களிப்பைச் செய்யலாம்.

கட்டுரையாளர் : கே.என். ராமசந்திரன்
நன்றி : தினமணி

வீதியில் விளையாடும் விதி!

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை ஒன்று திடுக்கிடும் புள்ளிவிவரத்தைத் தருகிறது. 2006 - 2007-ம் ஆண்டுகளில் 178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையின்படி, சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் மரணமடைவதாகத் தெரிகிறது. படுகாயமடைவோரின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கும் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.

அந்த ஆய்வில் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், உலகிலேயே மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் பலியாவது இந்தியாவில்தான் என்பதுதான். 2007-ல் மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,14,590. அதாவது, ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 13 பேர் இந்தியாவில் சாலையில் நடக்கும் விபத்துகளில் மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட 6.9 சதவிகிதம் அதிகம்.

இந்தியாவைவிட அதிகம் மக்கள்தொகையும், மோட்டார் வாகனங்களும் உள்ள நாடு சீனா. ஆனால், அங்கே 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள் 89,455 பேர்தான். அதுமட்டுமல்ல, இந்தியாவில் சாலை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் அதேவேளையில் சீனாவில் இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகிறார்கள் என்பதுதான் நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

சாலை விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டிருப்பதைவிட மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. பல விபத்துகள் முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மரணமடைவது இந்தப் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவும் இல்லை.

இந்தியாவைவிட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலை விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடி இருப்பதும்தான். சுவீடன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகக் குறைவாகவே சாலை விபத்துகள் நடைபெறுவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மிக அதிகமாகப் பலியாவது லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும்தான். சாலை மரணங்களில் 22 சதவிகிதம் பலியாவது இவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறது அறிக்கை. அதற்கு முக்கியக் காரணம், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும், முறையான உரிமம் இல்லாமல் உதவியாளர்கள் லாரியை இயக்குவதும், சரியான வாகனப் பரிசோதனை இல்லாமல் இருப்பதும்தான் என்பதையும் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

19 சதவிகிதம் இரண்டு சக்கர வாகனங்களும், 11 சதவிகிதம் பஸ்களும், 9 சதவிகிதம் பாதசாரிகளும் சாலை விபத்துகளில் பலியாவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் என்கிற பெருமையை ஆந்திரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் தட்டிச் செல்கின்றன. அடுத்தபடியாக 12.5 சதவிகிதம் சாலை மரணங்களுடன் உத்தரப் பிரதேசமும், 12 சதவிகிதம் சாலை மரணங்களுடன் தமிழ்நாடும் சாலை விபத்துகளில் சாதனையாளர்களாகத் தலைகுனிகின்றன.

நகர்ப்புற சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. மேலும் ஆட்டோக்களும், இரு சக்கர வாகனங்களும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்றன. ஆனால், நாம் கவனிக்காமல் விட்டுவிடும் விஷயம் என்னவென்றால், சாலை விதிகளை மதிக்காமல் நினைத்த இடத்தில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளும்கூட சாலை விபத்துகளுக்குக் காரணமானவர்கள் என்பதை.

வளர்ச்சி பெற்ற நாடுகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள்கள் செல்ல அகலமான நடைமேடைகள் நகர்ப்புறங்களில் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பிளாட்பாரங்கள் கடைத்தெருவாகி விடும் நிலையில் பாதசாரிகள் சாலையைப் பயன்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் இங்கே ஏற்பட்டு விடுகிறது. மேலும், ஆங்காங்கே இடைவெளிவிட்டு பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போதிய வசதிகள் செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாதசாரிகளின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு சாலைகளும், சாலை விதிகளும் வளர்ச்சி பெற்ற நாடுகளில் அமைக்கப்படுவதால்தான் அங்கே விபத்து விகிதம் குறைகிறது என்று தோன்றுகிறது.

சாலைகளைக் கட்டணச் சாலைகளாக்குவதில் அரசு காட்டும் முனைப்பும் அக்கறையும் விபத்துகளைத் தவிர்ப்பதில் காட்டத் தவறுகிறதே, அங்கேதான் பிரச்னையே எழுகிறது. உரிமம் வழங்குவதிலும், வாகனப் பரிசோதனையிலும் லஞ்சம் வாங்க அனுமதித்துவிட்டு, கணக்கு வழக்கில்லாமல் வாகனங்களைச் சாலையில் ஓட விட்டுவிட்டு, பிரமாதமாக சாலைகளை அமைத்துக் கட்டணம் வசூலித்து என்ன பயன்?

நன்றி : தினமணி

ரூ.10,000 கோடிக்கு ஆர்டரை எதிர்பார்க்கும் எல் அண்ட் டி

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பவர், இன்ஃப்ராஸ்டிரக்சர் மற்றும் ஹைட்ரோகார்பன் துறைகளில் ரூ.10,000 கோடிக்கு ஆர்டரை எதிர்பார்க்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் தான் எல் அண்ட் டி நிறுவனம் ரூ.11,000 கோடிக்கு ஆர்டரை பெற்றிருக்கிறது. செப்டம்பர் மாதத்திற்குள் மொத்தம் ரூ.90,000 கோடிக்கு ஆர்டர்கள் பெறப்படும் என்றும் எல் அண்ட் டி யின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் ஏ.எம்.நாயக் தெரிவித்தார். மத்தியில் நிலையான ஆட்சி நடந்து வருவதால், இன்ஃப்ராஸ்டிரக்சர் துறை மீது அதீக அக்கறை காண்பிக்கப்படுவதாலும் அந்த துறையில் முதலீட்டு செலவு அதிகரித்து வருகிறது என்றும் எனவே அந்த துறை வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். எனவே 2008 - 09 நிதி ஆண்டில் இதுவரை, எங்களுக்கு வந்துள்ள ஆர்டர் 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றும் அதில் 15 சதவீத ஆர்டர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கிறது என்றும் நாயக் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


மொபட் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

இரு சக்கர வாகனங்களில் ,மொபட் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மொபட் விற்பனை ஒரு லட்சத்து 28 ஆயிரம் மொபட் வாகனங்கள் விற்பனை ஆயின. கடந்தாண்டு இதே காலாண்டில், விற்பனை ஆனது ஒரு லட்சத்து ஆறாயிரம்; 20 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மோட்டார் பைக் விற்பனையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, டி.வி.எஸ்., விற்பனை பிரிவு தலைவர் எச்.எஸ்.கோயின்டி கூறுகையில், கிராமங்கள் மறறும் சிறு நகரங்களில் தான் அதிக அளவில் மொபட் வாங்குகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில் இவற்றின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எங்கள் மொபட் வாங்குபவர்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மொபட்கள் அதிக சரக்குகள் ஏற்றிச்செல்லவும், கிராம பகுதி செயல்பாட்டுக்கும் அதிகம் பயன்படுத்தபடுகின்றன. சிலர் இந்த மொபட் மலிவு விலையில் கிடைப்பதாலும், இயக்குவதற்கு சுலபமாக இருப்பதாலும் இரண்டாவது பைக்காக வாங்கி பயன்படுத்துகின்றனர்' என்றார்.
மொபட் உற்பத்தியில் டி.வி.எஸ்., கைனடிக் ஆகிய இரு பெரிய கம்பெனிகள் மட்டுமே உள்ளன. அதில் கைனடிக்கின் லுனா மொபட் உற்பத்தியை நிறுத்தி விட்டது. டி.வி.எஸ்.,ன் எக்செல் சூப்பர் மட்டுமே தற்போது நிலையான மொபட்டாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்டு வளர்ச்சியில் மொபட் விற்பனை 7 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
நன்றி : தினமலர்


Friday, August 28, 2009

அதிர்ச்சியளிக்கும் இலங்கை

இந்த நவீன யுகத்தின் அனைத்து வகையான போர்த் தந்திரங்களும் பயன்படுத்தப்பட்ட ஒரே இடம் ஈழம்தான். இப்படியொரு மிகச் சிக்கலான போர்க்களத்தை வேறு எந்த நாட்டு ராணுவமும் அறிந்திருக்க முடியாது. அப்பாவி மக்கள் நிறைந்திருந்த இந்தப் போர்க்களத்தை பல்வேறு நாடுகளின் படைகளும் தங்களது பயிற்சிக்களமாகப் பயன்படுத்தின என்னும் குற்றச்சாட்டு பலமுறை எழுந்தது. இப்போது அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கலாமோ என்கிற சந்தேகம் வலுவடைந்திருக்கிறது.

உலகின் மிக வலுவான ஆயுதப் போராளிகளை வீழ்த்திவிட்ட இலங்கை ராணுவம் இப்போது புதிய ராஜீய உறவுகளை வலுப்படுத்துவதற்கும் நிதி திரட்டுவதற்கும் ஈழ மண்ணைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிகிறது.

அதற்காக பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் படைகளுக்கு பயிற்சியளிக்கப் போவதாக இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் செறிந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளில் போர்ப் பயிற்சிக்களங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கருதப்படும் நிலையில், இப்படியொரு செய்தி இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே, வடக்கு இலங்கையின் அம்பாந்தோட்டையில் "வணிகப் பயன்பாட்டுக்கான' துறைமுகத்தை சீனா அமைத்து வருகிறது. இந்தத் துறைமுகத்தை கடற்படைத் தளமாக மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

தொடக்க காலத்தில் இந்தத் துறைமுகத்தை வர்த்தகத்துக்காகப் பயன்படுத்தினாலும், சில வசதிகளை மேம்படுத்தினால் எப்போது வேண்டுமானாலும் கடற்படைத் தளமாக மாற்றிக்கொள்ள முடியும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

சாலைகள், மின் நிலையங்கள் என இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சீனாவின் பங்கு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை இருநாட்டு உறவு தொடர்பான நடவடிக்கைகள் என ஒதுக்கிவிட முடியாது.

இலங்கையில் காலடி வைத்ததன் மூலமாக இந்தியாவைத் "தாக்கும்' தொலைவுக்கு சீனா வந்துவிட்டது என்பதுதான் உண்மை. "தாக்கும்' தொலைவுக்குள் முக்கிய அணுமின்நிலையங்கள் இருக்கின்றன என்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு சீன-இலங்கை உறவு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில், தலிபான்களுடன் போரிடுவதற்கு பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்கப் போவதாக இலங்கை கூறியிருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு நேரடியான எதிரிகள். இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட்ட ஒரே விஷயம் இலங்கை விவகாரம்தான்.

ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புகளில் இலங்கையைக் காப்பாற்றுவதற்கு மூன்று நாடுகளும் போட்டிபோட்டன. ஆனால், போரில் உதவியும் சர்வதேச அரசியலில் ஆதரவும் அளித்த இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்யப்போகிறது என்றே தோன்றுகிறது.

ஏற்கெனவே, பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இப்போது, இலங்கை-பாகிஸ்தான், இலங்கை-சீனா இரு தரப்பு உறவுகள் வலுவடைந்தால், இந்தப் பிராந்தியத்தில் இந்த மூன்று நாடுகளின் ஆதிக்கம் மேலோங்கக்கூடும்.

இதனால் பொருளாதார அளவில் இல்லையென்றாலும், பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தியாவிடம் இலங்கை உதவி கேட்டிருக்கும் தற்போதைய நிலைமை மாறி, ஆதரவு கேட்டு இந்தியா இறங்கி வரவேண்டிய நிலைகூட ஏற்படலாம்.

இந்த விஷயத்தில் இலங்கை மிகத் தந்திரமாகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவைவிட பாகிஸ்தானும் சீனாவுமே நம்பகமான நாடுகள்.

அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக எந்த நேரத்திலும் தமக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்கக்கூடும் என்கிற சந்தேகம் இலங்கைக்கு இன்னும் இருக்கிறது.

அதனால், சீனாவை தாஜா செய்வதற்காகவே தைவானை தனிநாடாக அங்கீகரிக்க இலங்கை மறுத்திருக்கிறது.

அதே நேரத்தில், காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேச விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையை எடுக்கத் தயக்கம் காட்டி வருகிறது. இந்தியா மீது சந்தேகப்படாமல் இருந்திருந்தால், இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையையே இலங்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானையும் சீனாவையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற ராஜதந்திரம்தான் இலங்கையை மெüனம் காக்க வைத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இருக்கும்வரை இந்தியாவுக்குப் பிடிக்காத எதையும் வெளிப்படையாகச் செய்ய இலங்கை தயங்கியது.

இனியும் அப்படி இருக்கத் தேவையில்லை எனக் கருதியே, பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்க வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. அதனால், விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு உதவியது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பெரிய சறுக்கலாகவே கருதப்படுகிறது.

முன்பிருந்ததைப் போன்று இலங்கை பலவீனமான நாடல்ல. விடுதலைப் புலிகளுடனான போர் மூலமாக, புதிய போர் உத்திகளைக் கற்றுக் கொண்டிருப்பது இலங்கையின் முதல் பலம்.

இதுதவிர, சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தால்கூட, உலக நாடுகளைச் சமாளிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் புதிய அனுபவங்கள் மூலம் இலங்கை தெரிந்து கொண்டிருக்கிறது.

இப்படி போர்த் தந்திரத்திலும், ராஜதந்திரத்திலும் வலுவடைந்துள்ள இலங்கை, இந்தியாவின் எதிரிகளுடன் கூட்டு இப்போது வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் வெளியுறவு உத்திகளை வகுப்பதில் இந்தியா கொஞ்சம் பிசகினாலும் அது வரலாற்றுத் தவறாக முடிந்துவிடும்.

கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி

பினான்சியல் சர்வீசில் தடம் பதிக்கிறது நோக்கியா மொபைல் நிறுவனம்

இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் முத்திரை பதித்துள்ள நோக்கியா நிறுவனம், பினான்சியல் சர்வீசிலும் கால் தடம் பதிக்கிறது.இந்த சேவையை பயன்படுத்தி நோக்கியா போன் பயன்படுத்துபவர்கள் பண பறிமாற்றம் செய்து கொள்ள முடியம். மேலும் பில் கட்டுவடு, டிக்கெட் எடுப்பது போன்ற வேலைகளையும் நோக்கியா பினான்சியல் சர்வீஸ் மூலம் முடித்துக் கொள்ளலாம். வங்கி கணக்குகள் இல்லாதவர்கள் இந்த புது சேவையால் பயனடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : தினமலர்


ஜின்னாவின் நிறைவேறாத இரண்டு ஆசைகள்

புதிதாகப் பிறந்த பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர் முகமது அலி ஜின்னா. அவர் இங்கிலாந்தில் படித்தவர். தாதாபாய் நௌரோஜி, சி.ஆர்.தாஸ், கோகலே, திலகர், காந்திஜி, நேருஜி, நேதாஜி, சர்தார் பட்டேல் போன்ற இந்திய தேசத்தின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். அவர் இரண்டு அழகிய மாளிகைகளை தனது அயராத முயற்சியால் எழுப்பினார்.

அவற்றில் ஒன்று மும்பை மௌண்ட் பிளசண்ட் சாலையில், தான் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட அழகிய வீடு. இன்னொன்று தனது மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும், அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவுடனும் வாழவேண்டும் என்ற லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய பாகிஸ்தான் ஆகும்.

மும்பையில் அவர் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட மாளிகை மிகவும் அழகியது. பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டது. மேல்நாட்டுப்பாணியில் நவீன வசதிகள் கொண்டது. நேர்த்தியான வராந்தாக்கள் உடையது. பரந்துவிரிந்த அழகிய மலர்த்தோட்டம் சூழ்ந்தது. இந்த அரண்மனையை வடிவமைப்பதிலும், கட்டுவதிலும், பராமரிப்பதிலும் தனிக்கவனம் செலுத்தினார் ஜின்னா.

இந்த அழகிய மாளிகையில் தான் 1944 செப்டம்பரில் காந்தி - ஜின்னா பேச்சுவார்த்தை நடந்தது. இங்கு வந்து தான் நேதாஜி, ஜின்னாவுடன் உரையாடினார். பண்டித ஜவாஹர்லால் நேரு 15-8-1946 அன்று இங்குதான், ஜின்னாவுடன் தேசவிடுதலைக்கான வழிமுறைகள் பற்றி விவாதித்தார். இங்கு தான் ஜின்னாவின் ஒரே குழந்தை, தீனா, 15-8-1919 அன்று பிறந்தார். இப்படி வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மாளிகை இது. தான் வசிப்பதற்காகவே, அணு அணுவாகப் பார்த்துக்கட்டிய மாளிகையில், தொடர்ந்து வசிக்க முடியாமல், பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்பதற்காக கராச்சி சென்றது, ஜின்னாவின் துரதிர்ஷ்டமே!

ஜின்னா கராச்சிக்குச் சென்ற பின்பு அந்த மாளிகை பூட்டியே கிடந்தது. அதுசமயம் மும்பையில் மிக அதிகமான இட நெருக்கடி. ஆகவே வாடகைக் கட்டுப்பாடு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அந்த மாளிகையை அரசு பயன்பாட்டுக்கு எடுக்கலாமா? என மத்திய அரசை, மும்பை மாநில அரசு தொடர்ந்து வேண்டியது. செய்தி அறிந்த பண்டித நேருவோ, ""ஜின்னாவின் அனுமதி இல்லாமல், எவரும் அதைத் தொடக்கூடாது'' என்றார். அத்துடன் அப்பொழுது பாகிஸ்தானில் இந்திய அரசின் தூதராகப் பணிபுரிந்த ஸ்ரீபிரகாசாவை அழைத்து, ஜின்னாவை நேரில் சந்திக்கும்படியும், அவர் அந்த மாளிகை பற்றி என்ன நினைக்கிறார், எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை அவரிடமிருந்து அறிந்து தனக்குத் தெரிவிக்குமாறு பணித்தார்.

ஸ்ரீபிரகாசா இக்கேள்வியை எழுப்பியவுடன், ஜின்னா அதிர்ச்சி அடைந்தார். ""ஸ்ரீ பிரகாசா! என் இதயத்தில் அடிக்காதீர்கள்! என் இதயத்தில் அடிக்க வேண்டாம் என்று ஜவஹரிடம் சொல்லுங்கள். இதை ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வைத்துக் கட்டியிருக்கிறேன் நான். இதுபோன்ற வீட்டில் யார் வசிக்க முடியும் தெரியுமா? எவ்வளவு நேர்த்தியான வராந்தாக்கள்? ஒரு சிறிய ஐரோப்பியக் குடும்பம் அல்லது பண்பட்ட இந்திய இளவரசர் ஒருவர் வசிக்கத் தகுந்த வீடு இது. நான் மும்பையை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. மறுபடியும் திரும்பிச் சென்று அந்த வீட்டில் வசிக்கும் காலத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்''~என்றார் ஜின்னா.

நீங்கள் மறுபடியும் மும்பைக்குச் சென்று வசிக்க விரும்புகிறீர்கள் என்பதை நான் எனது பிரதமர் (நேருஜி) இடம் சொல்லலாமா? என ஸ்ரீபிரகாசா கேட்க, அதற்கு ஜின்னா ""ஆம்! நிச்சயமாகச் சொல்லலாம்'' என்றார். இவ்விவரம் பிரதமர் நேருஜிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரோ ""ஜின்னாவின் மனதை நான் அறிவேன்; அவ்வீட்டில் எவரும் கைவைக்கக் கூடாது. ஜின்னாவின் பதில் வரும் வரை காத்திருப்போம்'' என்றார். இது ஜின்னாவுக்கு ஸ்ரீபிரகாசாவால் தெரிவிக்கப்பட்டது.

ஜின்னா, இறுதியாக 16-8-1948 அன்று ஸ்ரீபிரகாசாவுக்குப் பதில் எழுதுகிறார். ""இவ்விஷயத்தில் ஜவாஹர்லாலும், நீங்களும் மிகவும் கனிவோடும் கவனத்தோடும் நடந்தமைக்கு நன்றி. இவ்வீட்டை அமெரிக்க அரசின் தூதுவர் அலுவலகத்திற்கு வாடகைக்கு விடலாம். அவர்கள் வெள்ளையர்கள் என்பதற்காக அல்ல. அவர்கள் வீட்டைக் கவனமுடன் பாதுகாப்பார்கள் என்பதால்தான்'' என்று.

அவர் கடிதம் எழுதியது 16-8-1948 அன்று. ஆனால் அதற்கு அடுத்த 1 மாதத்திற்குள்ளாக 11-9-1948 அன்று மறைந்துவிட்டார்!

""என் இறுதிக்காலத்தில் மும்பைக்குச் செல்வேன். நான் ஆசையுடன் கட்டிய அந்த அழகிய மாளிகையில் வசிப்பேன்! இதை என் அன்புக்குரிய ஜவாஹர்லாலிடம் சொல்லுங்கள்'' என்றார் ஜின்னா. மும்பையின் அந்த அழகிய வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஜின்னாவின் முதல் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது!

ஜின்னா எழுப்பிய இரண்டாவது மாளிகை, இந்தியாவை உடைத்து பாகிஸ்தானை உருவாக்கியது. இதன் மூலம் அவரைப் பிரிவினைவாதி என்றும், பிடிவாதக்காரர் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாதி என்றும் இந்தியர்கள் குறை சொல்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பிக்கை இல்லாதவர். காங்கிரúஸôடு சமரசம் செய்வதிலேயே காலம் கடத்தியவர். இஸ்லாமியர் நலனில் அக்கறை காட்டாதவர் - என்று பாகிஸ்தானியர் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆங்கிலேயருக்கு அனுசரணையாகச் செயல்படவில்லையே. காங்கிரûஸ எதிர்ப்பதில் கடுமை காட்டவில்லையே~ என்று அன்றைய ஆங்கிலேய அரசு குறைபட்டுக் கொண்டது.

இப்படி அனைத்துத் தரப்பினரின் கடுமையான விமர்சனத்துக்கு உட்பட்டவர்தான் ஜின்னா. ஆனால் உண்மையில் அவர் ஒரு தேசியவாதி. சமயச்சார்பற்றவர். ஒன்றுபட்ட இந்தியாவைப் பாதுகாக்க நினைத்தவர்.

ஒரு வலுவான தேசியவாதியாக, உண்மையான காங்கிரஸ்காரராகத் தான் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார் ஜின்னா. காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார் அவர். ""நான் முதலில் இந்தியன். அதன் பிறகுதான் நான் இஸ்லாமியன்'' எனக் கருதினார்.

கோகலேயின் ஆலோசனைப்படிதான் ஜின்னா முஸ்லிம் லீகில் சேர்ந்தார். அடிப்படை மதவாதிகளிடமிருந்தும், ஆங்கிலேயர்களின் அரவணைப்பிலிருந்தும், முஸ்லிம் லீகைக் காப்பாற்றி காங்கிரúஸôடு நல்லுறவை வளர்க்க வேண்டும் என்பதுதான் அவர் முஸ்லிம் லீகில் சேர்ந்ததன் நோக்கம்.

ரஹமத் அலியின் பாகிஸ்தான் பிரிவினைத்திட்டத்தை அவர் ஏளனம் செய்தார். இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அப்துல்லா ஹரூன் 1938-ல் முஸ்லிம் லீக் மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தார். பிரிவினைக்கு ஆதரவாக அப்துஸ் சத்தார் கைரி, அப்துல் மஜீத் சிந்தி ஆகியோர் கொண்டு வந்த தீர்மானங்களைத் தனது வாதத் திறமையால் தோற்கடித்தார்.

1939-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய ஜின்னா, ""இந்தப்பக்கம் அமர்ந்திருக்கும் முஸ்லிம் லீக் நண்பர்களே! அந்தப்பக்கம் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் நண்பர்களே! உங்கள் முன்னால் கிடக்கும் முட்டுக்கட்டைகளைத் தூக்கி எறியுங்கள்! கட்டிக்கொண்டிருக்கும் உங்கள் கைகளை விரித்து எடுங்கள். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுங்கள். உண்மையான வெற்றி உங்களைத் தேடி வரும்'' என முழங்கினார்.

இப்படி இந்திய தேச ஒற்றுமை பற்றிப் பேசிய ஜின்னா, 1940 ஜனவரி முதல் பிரிவினைப் பாதையில் மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார் என்பது, ஜின்னாவின் இந்தியா பாகிஸ்தானின், சோக வரலாறாக முடிந்தது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? தேச விடுதலைக்கான பேச்சுவார்த்தையில், தான் ஓரம் கட்டப்படுவதாக அவர் நினைத்தார்; தேச மக்கள் அனைவரின் சார்பாகவும் பேசும் உரிமையும், தகுதியும் காங்கிரஸýக்கு மட்டுமே இருப்பதாக ஆங்கிலேய அரசு சொல்வதை அவர் ஏற்க மறுத்தார். இஸ்லாமியர்கள் சார்பாகப் பேசுவதற்குத் தனக்கு மட்டுமே தகுதி உண்டு; தன்னை மட்டுமே அழைத்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினார். இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெறுவதற்காகவும், அவர்களின் ஒரே பிரதிநிதி தான்தான் என்பதை நிலைநாட்டுவதற்காகவும், ஜின்னா முதல்முறையாக மதத்தை (இஸ்லாம்) முன்வைத்துப் பேசத் தொடங்கினார். அவருக்கு ஆதரவு வளரத் தொடங்கியது.

காங்கிரஸ் ஜின்னாவை மதிப்பதற்கும், பிரிட்டிஷார் ஜின்னாவுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் இந்த உத்தி பயன்பட்டது. ""அவரது உள்ளார்ந்த உண்மையான நோக்கம் பிரிவினை அல்ல; இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளை முஸ்லிம் லீக் ஆட்சி செய்ய வேண்டும்; ஒன்றுபட்ட இந்திய ஆட்சியில், ஜின்னாவுக்கு ஒரு முக்கிய பொருத்தமான பதவி வழங்கப்பட வேண்டும்'' என்பதுதான். அவரது உள்நோக்கத்தை அவரால் செயல்படுத்த முடியவில்லை.

முதல் சுதந்திர தினப் பேருரையில் ""காலப் போக்கில் இங்கே வாழும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அரசியல் பொருளாதார ரீதியில், இந்துக்களாக அல்லது இஸ்லாமியர்களாக இருக்க மாட்டார்கள்; இத்தேசத்தின் குடிமக்களாகத்தான் இருப்பார்கள்'' என்றார் ஜின்னா. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக பாகிஸ்தானை உருவாக்க முடியவில்லையே என ஏங்கினார்; மனவேதனைப்பட்டார்; நோய்வாய்ப்பட்டார்; அதன்பின்பு அவர் நீண்டநாள் வாழவும் இல்லை. இவ்வாறு சமயச் சார்பற்ற ஜனநாயக நாடாக பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற ஜின்னாவின் கனவும் நிறைவேறாமல் போய்விட்டது.

இறுதிக் காலத்தில் ஜின்னா மனவேதனையால் துன்புற்றபோது, துயரத்தோடு அவர் கூறுகிறார்: ""பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம் நான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டேன். தில்லிக்குத் திரும்பிச் சென்று கடந்த காலத்தில் நடந்த தவறுகளை மறந்து, மன்னித்து, மீண்டும் சகோதரர்களாக இருப்போம் என்று ஜவாஹர்லாலிடம் கூற விரும்புகிறேன்''~என்று.

இப்படி மும்பையில் தான் கட்டிய அழகிய மாளிகையில் இறுதிக் காலத்தில் வசிக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறவில்லை; பாகிஸ்தானை மதச்சார்பற்ற நாடாக அமைக்க வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறவில்லை! இப்படி தான் நினைத்ததை நிறைவேற்ற முடியாத மனிதராகவே ஜின்னா மறைந்தார்.

ஆனாலும் நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மிகப்பெரிய தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை மறுக்க இயலாது.
கட்டுரையாளர் : அ. பிச்சை
நன்றி :தினமணி

சமச்சீரான முடிவு!

சமச்சீர் கல்வி அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலாகும் என்று அறிவித்திருக்கும் தமிழக அரசைப் பாராட்டவும், துணிந்து இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதற்கு நன்றி சொல்லவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதனால் மட்டும் கல்வியின் தரம் அதிகரித்துவிடுமா என்று குதர்க்கமாகக் கேள்வி கேட்பவர்கள், இன்றைய குழப்பமான நிலைமை தொடர்வதனால் கல்வியின் தரம் மேம்படுமா என்கிற எதிர்கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

தமிழகத்தில் மட்டும் விநோதமாக மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ - இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் இயங்குகின்றன. போதாக்குறைக்கு சி.பி.எஸ்.இ. முறை என்று தேசிய அளவிலான கல்வித் திட்டம் போதிக்கும் தனியார் பள்ளிகள் வேறு. பள்ளிக் கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்திலானதாக இருந்தால் மட்டும்தான் சமநிலைச் சமுதாயம் உருவாகிறதோ இல்லையோ, அரசு அனைத்துத் தரப்புகளுக்கும் நியாயம் வழங்குவதாக இருக்கும்.

தனது 2006 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சமச்சீர் கல்வி முறை வாக்குறுதியை ஏதோ ஒப்புக்கு நிறைவேற்றாமல், தமிழக அரசால் முறையாக ஒரு குழு அமைக்கப்பட்டு, மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி குறித்து ஆய்வு நடத்தி இப்போது படிப்படியாக நிறைவேற்ற முனைந்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒன்று. இந்த விஷயத்தில் அரசு மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தில் கல்விக்கொள்கை பல தடவை மாற்றப்பட்டது என்பதுடன் தனியார்மயம் அனுமதிக்கப்பட்ட பிறகு ஒருபுறம் தரம் தாழ்ந்த கல்வியும், இன்னொருபுறம் பணக்காரர்களுக்கு மட்டும் தரமான கல்வியும் என்கிற நிலைமை ஏற்பட்டு விட்டிருக்கிறது. ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்டு படித்தால் மட்டுமே வருங்காலம் உண்டு என்பதுபோல ஒரு மாயை உருவாக்கப்பட்டு, அந்த மாயையின் மூலம் கொள்ளை லாபம் அடிக்கும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தனியாரால் தெருவுக்குத் தெரு காளான்களாக உருவாகிவிட்டிருக்கின்றன.

தேசிய அளவிலான உயர்கல்வித் தகுதிகளுக்கு சி.பி.எஸ்.இ. முறையில் படித்தால் மட்டுமே தேர்வு பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளாக அரசு படிப்படியாகக் கல்வித்துறையின் மீது காட்டத் தவறிய கண்டிப்பும், முனைப்பும்தான். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஏதோ படித்தால் படிக்கட்டும் என்று ஆட்சியாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தினர் என்பதை எப்படி மறுக்க இயலும்? நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார் கல்வி நிறுவனம் நடத்தாத அரசியல்வாதிகளே இல்லை என்கிற நிலைமை அல்லவா ஏற்பட்டு விட்டிருக்கிறது!

தமிழில் படிக்காமல் அல்ல, தமிழே தெரியாமல் தமிழகத்தில் படித்து முனைவர் பட்டம் வரை பெற்றுவிட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலக் கல்வி தேவை என்கிற கோஷத்தால், தமிழ் படிப்பதே கேவலம் என்றும், தமிழ் படிக்கவே வேண்டாம் என்றும் ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே, இதை என்ன சொல்ல?

சமச்சீர் கல்வி இதற்கெல்லாம் முடிவு கட்டுமா என்றால் சந்தேகம்தான். ஆனால் சமச்சீர் கல்வி முறை மூலம், தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ.யின் தரத்துக்கு இணையான கல்வித் திட்டத்தை உருவாக்கி, அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ எங்கே படித்தாலும் ஒரே தரத்திலான, தேசிய அளவில் போட்டியிடும் தகுதியிலான கல்வி போதிக்கப்படும் என்கிற உத்தரவாதத்தை ஏற்படுத்த முடியும்.

பல பள்ளிக்கூடங்களில் தரமான ஆசிரியர்கள் இல்லை. வகுப்புக்கு ஓராசிரியர்கூட இல்லாத நிலைமை தொடர்கிறது. பயிற்று மொழியாகத் தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர்வது என்றால் ஆங்கிலம் தான் பாட மொழியாக இருக்கும். தமிழ் பொதுப் பயிற்று மொழி என்று அறிவிக்கப்பட வேண்டும். கிராமப்புற பள்ளிக்கூடங்களிலும்கூட ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

தரமான கல்வியைத் தனியார்தான் தரமுடியும் என்கிற தவறான கண்ணோட்டம் தகர்க்கப்பட வேண்டும். முடிந்தால் பள்ளிக்கல்வி என்பது அரசின் நேரடிக் கண்காணிப்பில், கட்டணம் இல்லாமல் இருப்பதுதான் முறை. உயர்கல்வியில் மட்டும்தான் தகுந்த கண்காணிப்புடன் தனியார் அனுமதிக்கப்பட வேண்டும். இப்படி நாம் சாதித்தாக வேண்டியது எத்தனை எத்தனையோ...

பள்ளிக்கல்வி அமைச்சரின் முனைப்பும் ஆர்வமும் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது ஆகிய இரண்டு விஷயங்களையும் சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த அறிவிப்பு முதற்படிதான். பாடத்திட்டம், ஆசிரியர் தகுதி, கட்டமைப்பு வசதிகள், அரசின் நேரடிக் கட்டுப்பாடு இவைதான் சமச்சீர் கல்வியை வெற்றி அடையச் செய்யும். பள்ளிக்கல்வி முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்தான் சமச்சீர் கல்வி என்பது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பது நமது கருத்து.

சமச்சீர் கல்வி என்பது காலத்தின் கட்டாயம். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறது தமிழக அரசு. இதன் மூலம் அடித்தட்டு மக்களின் ஒட்டுமொத்த வாழ்த்துகளையும் அரசு பெறுவதுடன், வருங்காலச் சந்ததியினரின் நல்வாழ்வுக்கும் வழிகாட்டி இருக்கிறது!
நன்றி : தினமணி

ஏ.டி.எம்., கட்டுப்பாடுகள் அக்., 15ல் அமல்

வங்கிக் கணக்கு இல்லாத பிற ஏ.டி.எம்., களை, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தினால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கும் திட்டம், அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தல் மற்றும் கணக்கில் உள்ள பணத்தை அறிய பிற வங்கி ஏ.டி.எம்.,களைப் பயன்படுத்தும் போது, அதனால், அந்த வங்கியின் சேவை பாதிக்கப்படுவதோடு, வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கி, பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால், வங்கியின் செலவினம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, பிற வங்கி ஏ.டி.எம்.,களை மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்துபவர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்கலாம் என, இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரைத்தது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கியும் ஒத்துக் கொண்டது. இந்தத் திட்டம், அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத் தப்பட உள்ளது. இந்தத் திட்டம் அமல்படுத்தப் பட்டால், மாதத்திற்கு ஐந்து தடவைக்கு மேல், பிற வங்கி ஏ.டி.எம்., களைப் பயன்படுத்தும் போது, வாடிக்கையாளர்களிடம், ஒரு தடவைக்கு 20 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த சேவை கட்டணம், எந்த வங்கியின் ஏ.டி.எம்., பயன்படுத்தப் பட்டதோ, அந்த வங்கிக்கு சென்றடையும்.

நன்றி : தினமலர்


தேசமா? அம்பானிகளா?

1960-ல் குஜராத் மாநிலம் அங்கலேஸ்வர் நகருக்கு விஜயம் செய்த அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் வெண்ணிற ஷெர்வானி முழுவதும் எண்ணெய்க் கறையானது. அந்தக் கறை அவருக்குள் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. பெட்ரோலியப் பொருள்களுக்காக வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. அந்தக் கறை படிந்த ஷெர்வானியுடனே நாடாளுமன்றத்தில் பேசப் போவதாக தன்னுடன் வந்தவர்களிடம் கூறினார். இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதில் அந்த அளவுக்கு அவருக்குள் பெருமித உணர்வு ஏற்பட்டது. அந்த இடத்தில் தோண்டப்பட்ட முதல் பெட்ரோலியக் கிணறுக்கு "வசுந்தரா' என பூமித் தாயின் பெயரை வைத்தார் நேரு.

சொன்னபடியே, இந்தியாவின் முதல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை முதன் முதலாக நாடாளுமன்றத்தில்தான் நேரு அறிவித்தார். அதன் பிறகே ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொண்டனர். நாடு முழுவதும் உற்சாகம் பொங்கியது. ஆனால், இன்றைய நிலை வேறு. எல்லாம் மாறிவிட்டது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய அளவிலான இயற்கை எரிவாயு வளம் கடந்த 2002-ம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தி முதன் முதலாக பிரதமர் மூலமாகவோ, நாடாளுமன்றம் மூலமாகவோ அறிவிக்கப்படவில்லை.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழுவில் முகேஷ் அம்பானி அறிவித்த பிறகே இந்த விவரத்தை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. தோண்டுமிடமெல்லாம் இயற்கை எரிவாயு கிடைத்தது.

இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்புக்கு அவர்கள் வைத்த பெயர் திருபாய். நாட்டு மக்களுக்குப் பெருமித உணர்வோ மகிழ்ச்சியோ ஏற்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது?

நேரு காலத்தில் எண்ணெய் வளங்களைக் கண்டறியும் விஷயத்தில் இந்திய அரசு எவ்வளவு துணிவுடனும் வெளிப்படையாகவும் நடந்து கொண்டது என்பதற்கு முதல் நிகழ்வு சரியான உதாரணம். நேருவின் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதற்கு இரண்டாவது நிகழ்வே சாட்சி. நேருவின் கொள்கைகள் தெளிவாகவும் திட்டவட்டமானதாகவும் இருந்தன. எண்ணெய் வளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போனால் பொருளாதார வளர்ச்சி தாராளமாக இருக்காது என தேசிய வளங்களுக்கான அப்போதைய அமைச்சர் கே.டி. மாளவியா அறிவித்தார். ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்தக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்துவிட்டன.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிவதற்கும் வெளிக்கொண்டு வருவதற்கும் செலவுகள் அதிகமானதால், இந்தத் துறையில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 1997-ம் ஆண்டில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி, 1999-ம் ஆண்டிலிருந்து இதுவரை 7 சுற்று ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. தற்போது அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான சர்ச்சைக்குக் காரணமான கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை எரிவாயுவும் இதுபோன்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒதுக்கப்பட்டதுதான்.

கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவுக்கும் எண்ணெய்க்கும் பல தரப்பிலிருந்தும் இப்போது உரிமை கோரப்படுகிறது. இங்கு கிடைக்கும் எரிவாயுவில் 10 சதவீதத்தை வழங்கவேண்டும் என அந்த மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தனியார் நலனுக்காக நாட்டு நலனை அடகு வைத்துவிடக்கூடாது என்கிறார் அவர். பொதுமக்களும் ஊடகங்களும் ஆதரிப்பதால் இந்தக் கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.

அதேபோல், காக்கிநாடாவில் இருந்து சென்னைக்கு எரிவாயுக் குழாய் அமைப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் மெத்தனம் காட்டி வருவதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். மும்பை, குஜராத், உத்தரப் பிரதேசம் என வடக்குப் பக்கமே அந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் போராட வேண்டியிருக்கிறது. அம்பானி குடும்பத்துக்குள் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவின் ஒரு பகுதி அனில் அம்பானியின் ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த எரிவாயு சப்ளைக்கு மற்றவர்களுக்குத் தருவதைவிட குறைந்த விலை நிர்ணயிக்க வேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம். இதை எதிர்த்து இந்திய அரசு இப்போது வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், விடை கிடைக்காத பல கேள்விகள் எழுகின்றன. மிகப்பெரிய தேசிய வளத்தை நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கறாராக அமல்படுத்துவதை விட்டுவிட்டு, மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளத்தை, தனியார் நிறுவனம் ஒன்று தனது சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகப் பெற முடியாத நிலையும் இருப்பதாகத் தெரிகிறது.

கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்திருக்கும் முதலீடுகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். கடுமையாக முயன்றும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், அம்பானி சகோதரர்களின் சண்டை வீதிக்கு வந்திருக்கிறது. இந்தச் சண்டையில், முதலீட்டை அதிகரித்துக் காட்டுவது, விலையைக் குறைத்து நிர்ணயிப்பது, குறைந்த உற்பத்தி போன்ற தந்திரங்கள் கிருஷ்ணா-கோதாவரி திட்டத்தில் கையாளப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு உரிய விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
அத்துடன், எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் தற்போதைய கொள்கைகளையும் சட்டங்களையும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.

புதிதாக வகுக்கப்படும் கொள்கைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், திட்டங்களைச் செயல்படுத்தும்போது இடம்பெயரும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வகை செய்வதாகவும் அமைய வேண்டும். இதைச் செய்யும் வரையில் அம்பானிகள் விவகாரத்தால் எழுந்திருக்கும் சர்ச்சை ஓயப்போவதில்லை.
கட்டுரையாளர் : பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

Thursday, August 27, 2009

ஊழலின் உறைவிடம்!

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸôர் திடீர் சோதனை நடத்தி, ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தது ரூ.1 லட்சம் வரை கணக்கில் வராத தொகையைக் கைப்பற்றினர். அதாவது ஒரு நாள் சராசரி "மாமூல்' அளவு இது!

அரக்கோணத்தில் ரூ. 1.90 லட்சம் பிடிபட்டதுடன், அந்த அலுவலகத்தின் இணை சார்-பதிவாளர் தன் சொந்தச் செலவில் 7 பேரை தினக்கூலிக்கு பணியமர்த்தியிருக்கிறார் என்றால், கையூட்டு எந்த அளவுக்குக் கிடைக்கிறது என்பது வெளிப்படை.

இப்படி திடீர் சோதனைகளை முடுக்கி விட்ட தமிழக அரசையும், தொடர்புடைய அதிகாரிகளையும் பாராட்டத்தான் வேண்டும். அதேநேரத்தில், இவர்கள் மீது உண்மையாகவே நடவடிக்கை எடுத்து, தண்டிக்கப்பட்டால்தான், இந்த அலுவலகங்களில் லஞ்சம் ஓரளவு கட்டுப்படும். இல்லாவிட்டால் இந்த நடவடிக்கைகள் வெறும் விளம்பரத்துக்காக என்பதாய் பிசுபிசுத்துப் போய்விடும்.

இச்சோதனைகளின் விளைவாக, எல்லா கட்டணங்களையும் வங்கி வரைவோலையாகக் கொண்டு வாருங்கள் என்று, ஏதோ பணத்தை கையால் தொடுவதற்கே கூச்சப்படுவதைப்போல, பத்திரப் பதிவகங்களில் தற்போது சொல்லப்படுகிறது. பிரச்னை, கட்டணங்கள் ரொக்கமா அல்லது வரைவோலையா என்பதல்ல. கையூட்டு வாங்குகிறார்களா இல்லையா என்பதுதான்.

பத்திரப் பதிவகங்களில் இந்த அளவுக்கு ஊழல் நடப்பதற்குக் காரணம், நில விற்பனையைப் பதிவு செய்யவும், நில உரிமையாளர் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கும், நிலத்தின் மதிப்பைக் குறைத்துப் பதிவு செய்து, பத்திரச் செலவைக் குறைக்கவும்தான். இந்திய மொத்த வருவாயில் (ஜிடிபி) தற்போது ரியல் எஸ்டேட் வணிகத்தின் பங்கு 10 சதவீதத்துக்கும் மேல். ஆகவே, பத்திரப் பதிவுகளுக்கு கையூட்டும் ஊழலும் மோசடிகளும் அதிகமாகிவிட்டன. கருப்புப் பணத்தைக் கையில் வைத்திருப்போரின் முதல் வேலை நிலம் வாங்குவதுதான். இருந்தும், நியாயமான ஆவணங்களைப் பதிவு செய்யவும் கையூட்டு இல்லாமல் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு சீர்கேடான நிலைமை பத்திரப் பதிவகங்களில் இருக்கிறது.

2004-ம் ஆண்டு உலக வங்கி ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில்தான் சொத்துப் பதிவுக்கான செலவினங்கள் மிக அதிகம். மேலும், நில ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் லஞ்சம் ஆண்டுதோறும் ரூ.123 கோடி என்ற தகவல் நிலஅதிர்வு போன்றதுதான்.

மேலும், நிலமதிப்பைக் குறைத்துப் பதிவு செய்வதன் மூலம் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு, நாட்டின் மொத்த வருவாயில் 1.3 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 2007-ல் இந்தியாவின் மொத்த உற்பத்தி வருவாய் (ஜிடிபி) 1,21,749 கோடி அமெரிக்க டாலர் என்றால், நிலமதிப்பைக் குறைக்கும் மோசடிகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு 1,582 கோடி அமெரிக்க டாலர்கள்! அரசுக்கு வர வேண்டிய ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வருமானத்தையும் இழந்து, இவர்களுக்குச் சம்பளமும் கொடுத்து, கையூட்டும் மக்கள் கொட்ட வேண்டும் என்றால் இந்த நிலைமையை என்னவென்பது?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலிப் பத்திர ஊழல் பல ஆயிரம் கோடி அளவுக்கு நடந்தது. அதில் சிலர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். நியாயமாக, ஒவ்வொரு சார்-பதிவாளருக்கும் இந்தக் குற்றத்தில் பொறுப்பு உண்டு. ஒரு வங்கியின் காசாளர் ஒரு நூறு ரூபாய் கள்ளநோட்டைத் தெரியாமல் வாங்கி, அது கண்டுபிடிக்கப்பட்டால், அதை வங்கிக் கணக்கில் சேர்க்க முடியாது. அந்த இழப்பை அவர்தான் செலுத்த வேண்டும். ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான போலிப் பத்திர ஊழலில் சார்-பதிவாளர்கள் தொடர்பே இல்லாதது போல, கழற்றிவிடப்பட்டார்கள்.

போலிப் பத்திரம் எந்த அளவுக்கு புழக்கத்தில் சென்றுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய, நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் பத்திரங்களை நேரில் கொண்டுவந்து மறுமுத்திரை பெற்றுச் செல்ல அறிவுறுத்தி, அந்த நேரத்தில் போலிப் பத்திரத்தைக் கண்டறிவதுடன் நில ஆவணங்களை கணினியில் ஒழுங்குபடுத்தலாம் என்ற நல்ல ஆலோசனையை அரசு முன்வைத்தபோது, அதை அப்படியே அமுக்கி, நடைமுறைப்படுத்த முடியாதபடி செய்தவர்களும் பதிவுத்துறை அதிகாரிகள்தான். காலைச் சுற்றிய பாம்பு கடித்துவிடும் என்ற அச்சம்!

பத்திரப்பதிவுக்கு வரும் வீடு அல்லது நிலத்தின் வழிகாட்டி மதிப்புக்கும், சந்தை மதிப்புக்கும் பெருத்த வேறுபாடு நிலவுகிறது. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பத்திரப்பதிவு அதிகாரிகளுக்குத் தரப்பட்டிருக்கிறது. அதனாலும் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் ஆகியவை சொத்தின் மதிப்பில் சுமாராக 7.7 சதவீதம் வருவதும்தான் இந்த ஊழல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். இதைச் சீர்செய்யாதவரை இத்துறையில் ஊழலை ஒழிக்கவே முடியாது.

ஆவணங்களை முழுமையாக கணினிமயமாக்குவதுடன், ஒவ்வொரு ஊரின் பெயர், நிலத்தின் புல எண் குறிப்பிட்டாலே, அது யார் பெயரில் உள்ளது, எந்த ஆண்டு கடைசியாக விற்பனைப் பரிமாற்றம் நடந்தது, தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு என்பதை அனைவரும் பார்க்கும் வெளிப்படைத் தன்மை இருந்தாலே போதுமானது - பதிவுத்துறை ஊழலை 99 சதவீதம் ஒழித்துவிட முடியும்.

நன்றி : தினமணி

ஏர்-இந்தியாவில் சம்பள குறைப்பு: பேச்சில் உடன்பாடு இல்லை

ஏர்-இந்தியா நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர் சங்கங்கள் இடையே, சம்பளம் மறுசீரமைப்பு குறித்து நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஏர்-இந்தியா நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க, பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பணியாளர்களுக்கு வழங்கப்படும், 'பிளையிங் அலவன்சில்' 50 சதவீதம் குறைக்கும் திட்டம் குறித்து, பணியாளர்கள் சங்கங்களுடன் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஏர்-இந்தியா நிறுவனம், 1,400 கோடி ரூபாய் வரை பிளையிங் அலவன்சாக வழங்கி வருகிறது. தங்கள் நிறுவனத்தின் நஷ்டத்தை குறைக்க, அதை 700 கோடி ரூபாயாக குறைக்க திட்டமிட்டது.
இது குறித்து ஏர் கார்ப்பரேஷன் பணியாளர்கள் சங்க மண்டல செயலர் விவேக் ராவ் கூறியதாவது: ஏர்-இந்தியா நிர்வாகத்தினருடனான பேச்சு நேற்று முன்தினம் மதியம் தொடங்கி நேற்று காலை வரை நீடித்தது. ஆனால், அதில், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. பணியாளர்களின் சம்பளம் குறைப்பதைத் தவிர்த்து, கம்பெனியை நஷ்டத்தில் இருந்து காக்க, வேறு மாற்று வழிகள் உள்ளன. எந்த வகை சம்பள குறைப்பையும் நாங்கள் எதிர்க்கிறோம். மற்ற வீணான செலவினங்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை, சம்பள குறைப்பு என்பது ஒரு தீர்வாகாது. எங்கள் நிலையில், தொடர்ந்து உறுதியாக இருப்போம். இவ்வாறு விவேக் கூறினார்.

நன்றி : தினமலர்





பெட்ரோல், டீசல் விலை உயராது

'சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை' என, பெட்ரோலியத் துறைச் செயலர் ஆர்.எஸ்.பாண்டே தெரிவித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பேசிய பாண்டே கூறியதாவது: சர்வதேச அளவில், தற்போதைய எண்ணெய் விலைகள் சாதகமானதாக இல்லை. ஆனால், அதற்காக, எரிபொருள் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை, தற்போது பேரல் 3,750 ரூபாயாக(டாலர் மதிப்பில் 75) விற்கப்படுகிறது. இதனால், வாகன எரிபொருள் விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு, அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாண்டே கூறினார்.
நன்றி : தினமலர்


1,400 ரூபாயை தாண்டியது ஒரு கிராம் தங்கம்: ஒரே நாளில் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் நேற்று 1,400 ரூபாயை தாண்டியது. சவரன், 11 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் விலை சில வாரங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம், 1,397 ரூபாய்க்கும், சவரன், 11 ஆயிரத்து 176 ரூபாய்க்கும் விற்றது. நேற்று காலை நிலவரப்படி சவரனுக்கு, 24 ரூபாய் அதிகரித்து, 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் சவரனுக்கு மேலும் 16 ரூபாய் அதிகரித்து, சவரன், 11 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனையானது. அதாவது, நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு கிராம், 1,400 ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது. 'இந்த விலை ஏற்றம் மேலும் தொடரும். இந்த விலை ஏற்றத்தால் பழைய நகைகளை மக்கள் விற்கத் துவங்கி விட்டனர்' என, தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


Wednesday, August 26, 2009

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் அறிமுகம்

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் பொதுமக்கள் சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்களின் தேவைக்காக இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டிவிசனல் மண்டல நிர்வாகி அனில் சிங்கால் அளித்த பேட்டியில் : 4 பேர் அமரும் வசதி கொண்ட இந்த பேட்டரி காரை பர்ஸ்ட் ககம் பர்ஸ்ட் செர்வ் என்ற அடிப்படையில் புக் செய்து கொள்ளலாம். புக்கிங் செய்ய 98948-56789 என்ற டோல் ப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். புக் செய்த நபர்கள் ஸ்டேஷன் வாயிலில் இருந்து அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் கோச் வரை சென்று இறக்கி விடும் என்றார்.

நன்றி : தினமலர்



ஜின்னாவாலான உபகாரம்...!

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கை நீக்க தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டாலும், நீக்கிய விதம் மட்டுமல்ல -நீக்கியதே தவறு என்றுதான் தோன்றுகிறது.

தேசப் பிரிவினைக்குக் காரணமான முகம்மது அலி ஜின்னாவை ஒரு வரி கூட பாராட்டி எழுதக்கூடாது என்பது கட்சியின் சித்தாந்தமாகவே இருக்கலாம். ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பாராட்டியதற்காக விளக்கம் கேட்டிருந்தால் நியாயம். அத்வானி செய்யாததையா ஜஸ்வந்த் செய்துவிட்டார்?

இந்தப் புத்தகம் மட்டுமே அவருடைய நீக்கத்துக்குக் காரணம் என்று தோன்றவில்லை. மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு ராஜ்நாத் சிங், அத்வானி உள்பட அனைவருமே அவரவர் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கட்சியின் தோல்வியை ஆராய சிம்லாவில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதன் மூலம் உண்மையான ஆத்ம பரிசோதனையை மேற்கொள்ள பாஜக தலைமை தவறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

காங்கிரஸýக்கு மாற்றாக இடதுசாரிகளைத் தவிர எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவான ஜனதா கட்சி அதிக நாள்கள் ஒற்றுமையுடன் செயல்பட முடியாமல், நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டாற்போலக் கொட்டிச் சிதறியபோது, உருவான கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி. நேர்மையானவர்கள், வித்தியாசமானவர்கள், லஞ்ச ஊழல் கறைபடியாதவர்கள் என்று இந்தக் கட்சியின் தலைமையில் இருந்தவர்கள் மதிக்கப்பட்டனர் என்பதும் நிஜம். படித்தவர்கள், பண்பாளர்கள் நிறைந்த கட்சி என்ற காரணத்துக்காகவே மக்களிடம் தனி மரியாதையைப் பெற்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், அதிமுக பிறகு திமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், இந்திய தேசிய லோக தளம் போன்ற கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியால் அக் கட்சி தெற்கிலும் கிழக்கிலும் வளர முடிந்தது. காங்கிரஸýக்கு மாற்றாக ஒரு நிலையான கூட்டணியை அமைக்க முடியும் என்றும், அந்தக் கூட்டணியால் ஐந்தாண்டுகள் ஆட்சியில் தொடர முடியும் என்றும் பாரதிய ஜனதா கட்சி நிரூபித்தது என்பதுதான் அதன் மிகப்பெரிய சாதனை எனக் கூறலாம்.

ஒரிசாவில் நடந்த வகுப்புக் கலவரத்துக்குப் பிறகு பிஜு ஜனதா தளம் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகி, தனித்து தேர்தலைச் சந்தித்து மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. அடுத்து அப்படி விலகிச் செல்ல பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய தேசிய லோகதளத்துடனான கூட்டு ஹரியாணாவில் முறிந்துவிட்டது.

மீண்டும் கூட்டு வைக்க தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகள் தயங்குகின்றன. சரத் பவார் கட்சி சரி என்று சொன்னால் பாரதிய ஜனதாவை கைகழுவிவிட சிவசேனை தயாராகவே இருக்கிறது. அகாலி தளமும் இந்தக் கூட்டணியை முறித்துக் கொள்ள விரும்பினாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் இன்றைய நிலைமை.

இந்த நிலையில் கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுவாக்க என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக ஆராய்ந்து தவறுகளைத் திருத்திக் கொள்வதை விட்டுவிட்டு இருப்பவர்களை வெளியேற்றும் போக்கு விந்தையாக இருக்கிறது. உள்கட்சி ஜனநாயகம் இல்லாமல் இருப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. கருத்துப் பரிமாற்றத்திற்கு இடமளிக்கும் கட்சி என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி அதைவிட மோசமாக அல்லவா இருக்கிறது!

அனைவருக்கும் பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு தனி மாநில அந்தஸ்து ரத்து, நாடு முழுவதற்கும் ஒரே மொழி (வேறென்ன ஹிந்திதான்), அயோத்தியில் ராமருக்குக் கோயில் என்ற கொள்கைகளால் கட்சிக்கும் பயன் இல்லை, மக்களுக்கும் பயன் இல்லை. தேர்தலில் வெற்றி பெறவாவது இவை உதவுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. இந்த நிலையில் ""தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்'' என்று இனியும் தொடர்ந்தால் கட்சியின் வளர்ச்சி தேய்பிறையாகி பிறகு ஜனதா கட்சியைப்போல அடையாளமே இல்லாமல் மறைந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

தூய்மையான நிர்வாகம், சுதேசி கொள்கைக்கு முன்னுரிமை, சுயச்சார்பே எங்கள் லட்சியம் என்றெல்லாம் முழங்கி மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிப்பதையே தங்களுடைய தேசியக் கடமையாக வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அரசு செயல்பட்டதை அதன் ஆட்சிக்காலத்தில் பார்த்தது நாடு.

முரண்பாடுகளின் மொத்த உருவாகக் காட்சி அளிக்கும் இன்றைய பாரதிய ஜனதா கட்சி, அன்றைய ஜனதா கட்சியைப்போல இன்னொரு சிதைந்த கதைதானோ? தேசிய அளவில் பலமானதொரு மாற்று அமைப்பு அவசியம். இதை பாஜகவால்தான் தர முடியும். அதைக்கூட பாஜக தலைமை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறது? தவறு ஜஸ்வந்த் சிங் போன்ற தனி நபர்கள் மீது இல்லை, தங்களிடம்தான் என்பதை கட்சித் தலைமை உணர வேண்டும்.

ஜின்னாவால் இந்தியா பிளவுபட்டது என்பதெல்லாம் இருக்கட்டும். இப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியை சிதைத்துக் கொண்டிருக்கிறார் என்பது என்னவோ உண்மை!

நன்றி : தினமணி

யாரிடம் யார் பாடம் கேட்பது!

விவசாயத்தில் தலையாய பிரச்னைகள் நிறைய உள்ளன. இன்று விவசாயிகளே அழிந்து வருகின்றனர். விவசாயமே தெரியாத பல தொழிலதிபர்கள், லகரத்தில் சம்பளம் வாங்கும் மென்பொருள் கணினிப் பொறியாளர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தினர் இத்தகையோர் தமிழ்நாட்டு கிராமங்களில் விவசாய நிலங்களை என்ன விலை கொடுத்தாவது வாங்கி அவற்றை அப்படியே அசையாச் சொத்தாக வளைத்துப் போட்டுவைக்கும் போக்கு நாளுக்குநாள் அதிகமாகிறது.

பாரம்பரியமாக விவசாயம் செய்து வருபவர்கள் இதனால் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இன்று விவசாயம் வருமானம் தரக்கூடியதாக இல்லை. இன்னமும் விவசாயிகள் கடனில்தான் வாழ்கின்றனர். பெரும் வருமானத்தில் கணிசமான பகுதி வட்டிகட்டவே செலவாகிறது. கள் / பதனீர் இறக்கும் அனுமதிக்கு விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதற்கு எதுவும் சட்டம் கொண்டுவரப்படவில்லை.

விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ""தின்பதற்கு அவல் கேட்டால் உரலை இடி'' என்ற கதையாக விவசாயத்தை மேலும் நஷ்டப்படுத்த, இந்தத் தமிழ்நாடு வேளாண்மை தொழில் ஆலோசகர் ஒழுங்காற்று சட்டம் என்ற மசோதாவை 23}6}2009ல் அறிமுகம் செய்து மறுநாளே எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளனர். வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்த விவசாய அனுபவமே இல்லாத ஏட்டுச்சுரைக்காய் பட்டதாரிகள் - அதாவது வேளாண்மையைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரிகளை வேளாண்மை நிபுணர்களாகப் பதிவு செய்து கொண்டு, அவர்களுக்கு மட்டுமே விவசாயிகளுக்குக் கற்றுத்தரும் உரிமையை வழங்க, இம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

""பதிவுபெறாத எந்த ஒரு நபரும் தமிழ்நாட்டுக்குள் வேளாண்மை ஆலோசகராகத் தொழில் செய்வதோ அல்லது வேளாண்மைப் பணிகளை ஆற்றுவதோ கூடாது. பதிவுபெற்ற பட்டதாரிகள் மட்டுமே விவசாயம் தொடர்பாக எல்லா தொழில்நுட்பங்கள், உழவியல் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.''

இச்சட்ட திட்டங்களை மீறுவோர்கள், அதாவது பதிவுபெறாதவர்கள், விவசாயிகளிடம் ஆலோசனைகூறி முதல்முறை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம். இரண்டாவது முறை குற்றவாளிக்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம்.

எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் நம்மாழ்வார், சுந்தரராமன், அந்தோணிசாமி, கோமதிநாயகம், கோ. சித்தர், உடுமலை செல்வராஜ், கட்டுரையாசிரியர் ஆர்.எஸ். நாராயணன் போன்ற நூற்றுக்கணக்கான முன்னோடிகளுக்குச் சிறைத்தண்டனை காத்திருக்கிறது. அபராதங்கள் காத்திருக்கின்றன.

மசோதாவின்படி விவசாயிகளுக்கு ஆலோசனை கூற தகுதியுள்ள தமிழ்நாடு வேளாண்மை மன்றம் மொத்தம் 29 உறுப்பினர்களைக் கொண்டது. பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளில் 20, த.நா. வேளாண்மை பல்கலையிலிருந்து 5 பேராசிரியர்கள், அரசு நியமன உறுப்பினர்கள் 4. அது என்ன 29 என்ற கணக்கு? பாட்டா செருப்பு விலை மாதிரியா? முப்பதோ அல்லது நாற்பதோ வைத்துக் கொள்ளுங்கள். இந்த மன்றம் யோசனைகூறி அதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்போது இப்படித் தவறான யோசனை கூறிய பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளுக்கு வழங்கவேண்டிய தண்டனைபற்றி இந்தச் சட்டத்தில் இடம் இல்லாதது ஒரு பெருங்குறைதான். இனிமேல் விவசாயத்தைக் கெடுக்க என்ன மிஞ்சியுள்ளது?

இந்த வேளாண்மை மன்றத்தை இயக்கப்போகும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும், வேளாண் துறையும் கடந்த 40 ஆண்டுகளில் செய்துவந்த கொடுமை, துரோகம் ஆகியவற்றுக்குத் தண்டனை உள்ளதா? பசுமைப்புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்களை மண்ணில் இட்டு மண்ணில் உள்ள கோடிக்கணக்கான மண் புழுக்களையும், பில்லியன் பில்லியன் அளவில் நுண்ணுயிரிகளையும் கொன்று குவித்துள்ளனர்.

உண்ணும் விளைபொருள்கள் மீது விஷமான பூச்சி மருந்துகளை அடித்து உண்ணும் உணவு விஷம்; தண்ணீர் விஷம்; மூச்சுக்காற்று விஷம்; இப்படியெல்லாம் சூழலைக் கெடுத்துப் போதிய விளைச்சல் இல்லாமல் கடனில் மூழ்கி, வாழ வழி இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயிகளைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய பல்கலைக்கழக வேளாண் போதகர்களுக்கு என்ன தண்டனை தருவது? இவையெல்லாம் போதவில்லையா? இவர்கள் செய்துள்ள வேளாண் கொடுமைகளுக்கு ஒரு பரிசாக தமிழ்நாடு அரசு "வேளாண்மை மன்றத்தை' வழங்கியுள்ளதை விவசாயிகள் நிராகரிப்பது நிச்சயமான உண்மை.

அனுபவம் வாய்ந்த விவசாயிகளுக்கு இந்த மன்றத்தில் இடமில்லை. விவசாய சங்கத் தலைவர்களுக்கு இந்த மன்றத்தில் இடமில்லை. இந்த மன்றத்தின் யோசனையைக் கேட்டு எந்த விவசாயியும் பயிரேற்றப் போவதில்லை. ஏனெனில் விவசாயத்தைப் பொறுத்தவரை ஏட்டுச்சுரைக்காய்ப் பட்டதாரிகளால் எதையும் சாதிக்க முடியாது. பட்டறிவு, பாரம்பரிய அறிவு, விவசாயிகளின் அறிவுப் பரிமாற்றங்கள் சாதிக்கக்கூடியதை இந்த மன்றத்தால் சாதிக்க இயலுமா?

வேளாண்மை செழிக்க யார் யாரிடம், எவ்வாறு பாடம் கேட்பது; எவ்வாறு கற்பிப்பது என்ற கேள்விகள் வரும்போது இரண்டு மறைந்த மகாமேதைகள் நினைவுக்கு வருகின்றனர். ஒருவர் இந்தியர். மற்றொருவர் இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர். யார் அந்த இந்தியர்? அவர்தான் எஸ்.ஏ. தபோல்கர். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காந்தியவாதி. கணிதப் பேராசிரியர். விவசாயத்தில் பட்டதாரி இல்லை. மண்ணியலில் இவர் பெற்ற நிபுணத்துவம், இவரை ஒரு நர்ண்ப் இட்ங்ம்ண்ள்ற் என்று கூற வைத்தது. இவர் படைத்தது டகஉசபவ ஊஞத அகக. சூரிய அறுவடையை ஒழுங்காகச் செய்தால் எல்லோருக்கும் எல்லாமும் உண்டு என்றவர். காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.

இவருடைய தாரக மந்திரம் ""விஸ்வம் புஷ்டம் கிராமே அஸ்மின் அனாதுரம்'' இது ரிக் வேதத்தில் உள்ளது. இதன் பொருள், ""உலக மக்கள் நலமாய் வாழ நாம் வாழும் இடங்களில் (கிராமங்களில்) ஏராளமாக உணவைப் பெற முடியும்''.

வேளாண் கல்விக்கு தபோல்கர் மூன்று வழிகளைக் கூறுகிறார்.

1. ஸ்வாத்யாயம்: அதாவது தன்னறிவு, தன்னைத்தானே தயார் செய்துகொள்ளும் கல்வி, 2. ஸ்வாஸ்ரேயம்: அதாவது தன் கையே தனக்குதவி. தற்சார்பு நிலை. 3. பிரயோக்பரிவார்: பலர் ஒன்று சேர்ந்தும் சேராமலும், பெற்ற கல்வியைப் பகிர்ந்து கொண்டு பயன்பெறுதல். இந்தப் பிரயோக்பரிவார் அமைப்பில் பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் தாங்கள் பெற்ற தன்னறிவை மற்றவர்கள் பயனுக்காக எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும். ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட உழவியல் நுட்பத்தினால் கூடுதல் மகசூல் பெற்றால் அதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பல நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர். மாடித் தோட்டங்களை உருவாக்கியவர். பழத்தோட்டங்களை உருவாக்கியவர். மண்ணில் உள்ள விஷத்தைப் போக்கி நுண்ணூட்டங்களை மண்ணில் உருவாக்கி வளப்படுத்த பல தானிய விதைகளை விதைத்துப் பசுந்தழைகளை மடித்து உழும் ஒரு தொழில்நுட்பம் விவசாயிகளின் கருத்துப் பரிமாற்றத்தால் விளைந்ததுவே, இதற்குத் தபோல்கரின் பிரயோக் பரிவார் காரணம்.

கற்பதிலும் கற்பிப்பதிலும் தலைசிறந்த முன்னுதாரணம் ""வேளாண்மை உயில்'' என்ற காவியத்தைப் படைத்த ஆல்பர்ட் ஹோவார்ட் ஆவார். இவர் அன்று இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர். இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் கர்சான் கேட்டுக்கொண்டதன் விளைவால் லண்டன் ராயல் கமிஷன் ஆஃப் அக்ரிகல்ச்சர் அமைப்பு, இந்திய விவசாயத்தை நவீனப்படுத்தும் பொருட்டு, 1905-ம் ஆண்டு ஆல்பர்ட் ஹோவார்டை இந்தியாவுக்கு அனுப்பியது. புசா என்ற இடத்தில் அவருக்குப் பதவியும், சோதனை இடமாக 90 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.

எவ்விதமான ரசாயனமும் இல்லாமல் இந்திய விவசாயிகள் கடைப்பிடிக்கும் உழவியல் நுட்பங்களைக் கண்டு ஹோவார்ட் வியந்தார். இந்திய விவசாயிகளிடம் பாடங்கள் கற்க விரும்பினார். விவசாயிகளைப் புசாவுக்கு அழைத்து, விவசாயிகளை ஆசான்களாக கௌரவித்து ஆசிரியர்கள் அமர வேண்டிய நாற்காலிகளில் உட்கார வைத்து, தான் தரையில் அமர்ந்துகொண்டு துபாஷி (மொழி பெயர்ப்பாளர்) உதவியுடன் குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

"வேளாண்மை உயில்' என்ற தனது நூலில் ஹோவார்டு இவ்வாறு குறிப்பிடுகிறார்: ""இந்திய விவசாயிகள் செய்வதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த யாரும் ஸ்ப்ரேயரைப் பயன்படுத்தவில்லை. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். பூச்சிக்கோ நோய்க்கோ விவசாயிகள் நஞ்சு தெளிக்காமல் இருப்பதைக் கண்டு வியப்புற்றேன். பொருத்தம் இல்லாத பயிர் ரகம், சாகுபடி முறை எவை என்பதைப் பூச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. நோய் இயல் நிபுணர், பூச்சியியல் நிபுணர், பாக்டீரியா நிபுணர், வேதியியல் நிபுணர், புள்ளியியல் நிபுணர் உதவியில்லாமல் ஆரோக்கியமாக விவசாயம் செய்வது எப்படி என்று விவசாயிகளிடம் கற்றுக்கொண்டேன்''

1935-ல் ஹோவார்டு இங்கிலாந்து திரும்பி ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் இயற்கை விவசாயத்துக்கு வித்திட்டவர். பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் இவரைக் குருவாக மதித்துப் பின்பற்றினர்.

""காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்ற கவிஞரின் பாட்டுக்கு ஏற்ப இந்தியாவுக்கு நவீன விவசாயம் கற்றுக் கொடுக்க வந்தவர் இங்குள்ள விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு ""வேளாண் உயில்'' என்ற நூலைப் படைத்தார். அது வேளாண்மைக்கே உயிர். அந்த நூலில் ஒரு பொன்னான வரி உண்டு: ""பூமியின் வளம் என்பது வங்கிக்கணக்குப் புத்தகம் அல்ல. எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் கணக்கு வைக்க முடியாது...'' மண்ணிலிருந்து நாம் சுரண்டி எடுத்தது அதிகம். கொடுத்தது குறைவு. எடுக்கப்பட்டவை உலக வங்கிக்கடனை விடவும் அதிகம். எடுத்தவற்றை ஈடு செய்யப் பஞ்சகவ்யம், மண்புழு எரு, பல்வேறு குணபங்கள், உலர் மூடாக்கு, பசுந்தாள் உரம் கொண்டுதான் இழந்த வளத்தை மீட்க வேண்டும். அன்று இயற்கை விவசாயத்திற்குச் சோதனைக்கூடமாக விளங்கிய புசா, இன்று நவீன ரசாயனம் போதிக்கும் ஐய்க்ண்ஹய் அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ஹப் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ஆக வளர்ந்துள்ளது. இன்று இந்தியாவில் செம்மை நெல் சாகுபடி என்ற பெயரில் ""ஒற்றை நாற்று நடவு'' பிரபலமாகிவிட்டது. ஆனால் இதைக் கண்டுபிடித்தது பிரயோக் பரிவார் முறையில் மடகாஸ்கர் விவசாயிகளின் கூட்டுமுயற்சி ஆகும்.

கடந்த 40 ஆண்டுகளாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் மண்வளத்தைக் கெடுத்து, உணவு உற்பத்தியைக் குறைத்து, இன்று உணவு இறக்குமதி செய்யும் அளவில் விவசாயத்தையே கேவலமாக்கி, பன்னாட்டு விதை நிறுவனங்களுக்குக் காட்டிக் கொடுத்து விவசாயத்தை மானம் இழக்கச் செய்த எட்டப்ப ஏட்டுச்சுரைக்காய் விவசாயப் பட்டதாரிகளுக்கு இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தான் கற்காத ஒன்றை விவசாயிகளுக்கு கற்பிக்கும் தகுதி உள்ளதா? என்று அவர்கள் தங்களின் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துச் சொல்லட்டும்.

மண்ணை வளப்படுத்தும் ஒரு விவசாயத்தை, வளங்குன்றா வேளாண்மையைக் கற்றுக்கொடுக்கும் ஒரு தகுதி இயற்கை விவசாய முன்னோடிகளுக்கு மட்டுமே உண்டு. தொல்சிறப்புள்ள இந்திய விவசாயத்தை அழிக்க முயலும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டை ஒரு சோதனைக்கூட எலியாகப் பயன்படுத்த இந்த வேளாண்மைச் சட்டத்தைத் திணிக்க முயல்வதை, வேரோடு களைவோம்.

கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

ஒதுங்கி நிற்காதீர்

தமிழ்நாட்டில் இதுவரை 54 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே போதுமான அளவுக்குப் படுக்கைகள் கிடையாது, மருத்துவப் பரிசோதனை வசதிகள் கிடையாது. இந்நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான ஆய்வகம் மற்றும் நோயாளிகளுக்குத் தனிப்பிரிவுகளை அதிகரிப்பது அரசு மருத்துவமனைகள் மட்டுமே செய்யக்கூடியவை அல்ல.

சுனாமி போன்ற தேசிய பேரிடர் காலங்களில் எப்படி எல்லா நிறுவனங்களும் லாபநோக்கு இல்லாமல் களத்தில் இறங்கிப் பணியாற்றினவோ, அதேபோன்று தேசத்தையே பீதிக்குள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சல் விஷயத்திலும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் லாபநோக்கு இல்லாமல் செயல்பட வேண்டும். பல கோடி ரூபாய் வரிச் சலுகை பெறுகிற, லாபம் சம்பாதிக்கிற மருத்துவ நிறுவனங்கள் இன்னமும்கூடக் களத்தில் இறங்கிச் சேவை புரியாமல் ஒதுங்கி நிற்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

பன்றிக் காய்ச்சலைச் சமாளிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் அழைப்பு விடுத்தபோது, ""தங்கள் மருத்துவமனைக்குள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்தால், மற்ற நோயாளிகள் பயந்து வெளியேறிவிடுவார்கள்'' என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தன.

பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் பணிக்கு 9 தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இவர்களோ எரிகிற வீட்டில் எடுத்தவரை லாபம் என்பதாகச் செயல்படுகிறார்கள். முதல்கட்ட பரிசோதனைக்கு ரூ.750 கட்டணம் என்றும், அதை மேலும் உறுதிப்படுத்தும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு ரூ. 5,000 கட்டணம் என்றும் அறிவித்திருப்பதைப் பார்த்தால், தமிழக அரசுக்கு இந்த ஆய்வகங்கள் மீது எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்பதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் சென்னையில் கிங் இன்ஸ்ட்டிட்யூட், வேலூர் சிஎம்சி ஆகிய இரு மையங்களில் மட்டுமே பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை நடத்த முடியும் என்ற நிலையில், இந்த ஆய்வை நடத்தும் பொறுப்பைத் தனியார் மருத்துவமனைகள் ஒரு சமுதாயக் கடமையாக, சமூகத்துக்கு செய்யும் பங்களிப்பாகக் கருதித் தாங்களாகவே இலவசமாக நடத்த முன்வந்திருக்க வேண்டும். இந்தப் பரிசோதனைகளை நடத்தத் தேவைப்படும் ரசாயனங்களுக்குச் செலவுகள் அதிகம் ஏற்படும் என்றால், அதை அரசிடம் கேட்டுப் பெற வேண்டுமே தவிர, பொதுமக்களிடம் கட்டணமாக வசூலிப்பதற்கான நேரமும் இதுவல்ல; அப்படியான நோயும் இதுவல்ல.

"எல்லோராலும் அரசு மருத்துவமனைக்கு வர முடியுமா? வசதி படைத்தவர்கள் இந்தச் சிகிச்சையைப் பணம் செலுத்திப் பெறுவதில் என்ன ஆட்சேபணை' என்று மேலெழுந்தவாரியாகச் சிலர் நியாயப்படுத்தலாம். இந்த அபரிமிதமான ஆய்வுக் கட்டணம் என்பது தங்கள் மருத்துவமனைக்குள் எந்த நோயாளியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டுப் போடப்பட்ட பாதுகாப்பு வளையம் மட்டுமே என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய அபரிமிதமான கட்டணம் நிர்ணயிப்பது முறையல்ல. இந்த அபரிமித கட்டணங்களைச் சுட்டிக்காட்டியே, கையூட்டின் அளவை அரசு மருத்துவமனை ஊழியர்களும் நிர்ணயித்தால், ஏழை எங்கே போவான்?

இன்றைய பிரச்னை நோயாளிகளைக் காப்பது மட்டுமல்ல, நோய் பரவாமல் தடுப்பதுதான் மிக முக்கியமான பணி. இதற்கு ரத்தப் பரிசோதனை மிகவும் அவசியம். இதற்கு பன்றிக்காய்ச்சல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தினால்தான் அவர்களைத் தனித்து இருக்கச் செய்து, அல்லது வீட்டிலேயே தங்கச் செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும். பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை மற்றும் சிகிச்சை எல்லா மருத்துவமனைகளிலும் இலவசம் என்ற அறிவிப்பினால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவை ஏற்பட்டால் மூச்சுக் கவசம் இலவசமாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும்கூட அரசுக்கு வலியுறுத்தியது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த அரசும் முயற்சி செய்யவில்லை. தனியார் மருத்துவ நிறுவனங்களும் முன்வரவில்லை. பொதுமக்கள் அதிகம் கூடுகிற பஸ் நிலையம், ரயில்நிலையங்களில் பயணிகளுக்கும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கும் ஏன் இலவசமாக இத்தகைய மூச்சுக்கவசம் வழங்கக்கூடாது?

இப்போதும்கூட தனியார் மருத்துவமனைகளும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தேசத்தின் பிரச்னையில் தங்கள் இணைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே நிற்பார்கள் என்றால், வேறு எப்போதுதான் இவர்கள் தேசத்துக்கு உதவப் போகிறார்கள்! இப்போது செய்யப்படும் ஒவ்வொரு சிறு உதவியும் மிகமிக இன்றியமையாதவை என்பதை அவர்கள் உணர வேண்டும்; இல்லையேல், அரசு உணர்த்த வேண்டும்.

நன்றி : தினமணி

ஐடி துறையின் வீழ்ச்சிக் காலம் விரைவில் முடியும் : டாடா கன்சல்டன்சி நிதி அதிகாரி அறிவிப்பு

ஐடி துறையில் பெரிய வீழ்ச்சிக் காலம் இருக்காது என்று டாடா கன்ஸல்டன்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது. டிசிஎஸ் சமீபத்தில் தேர்வு செய்த 24,000 பேருக்கும் வேலை தரப்படும் என உறுதியளித்தார். இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம் இதுபற்றிக் கூறுகையில், ஐ.டி., துறை வேகமான மீட்பு பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்றார். 20 சதவீத வளர்ச்சியை இந்தத் துறை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.இந்த ஆண்டு 46.3 பில்லியன் அளவுக்கு ஐடி துறை வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்த காலாண்டில் இது 3 முதல் 4 சதவிகித அளவு உயரும் வாய்ப்புள்ளதாக நாஸ்காம் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும். சமீபத்தில் 24,000 பேரை பணிகளுக்காக தேர்வு செய்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் நிச்சயம் வேலை தரப்படும் என்றார். இவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்கெனவே பணி ஆணைகள் வழங்கப்பட்டு விட்டனவாம். விரைவில் இரு தவணையாக மற்றவர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டு விடுமாம்.
நன்றி : தினமலர்


சுகாதார குறைபாடு காரணமாக லண்டனில் இந்திய ரெஸ்டாரண்ட் மூடல்

சுகாதார குறைபாடு காரணமாக லண்டனில் இந்திய ரெஸ்டாரண்ட் ஒன்று மூடப்பட்டுள்ளது. லண்டனின் பரபரப்பான பகுதியில் இயங்கி வந்த ரெஸ்டாரண்ட் ஏ நைட் இன் இந்தியா. இந்த உணவு விடுதியில், பிரிட்டனர் சுகாதார துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சமையல் செய்யும் இடத்தில் எலிகள் ‌திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போதிய அளவு சுடுதண்ணீரும் இல்லை. லீசெஸ்ட் ‌மேஜிஸ்திரேத்திடம் சுகாதார கேடு குறித்த சாட்சிகள் ஒப்படைக்கப்பட்டன. சுகாதார அதிகாரியின் பரிந்துரையை பரிசீலித்த நீதிபதி ஓட்டலை மூட உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட உணவு விடுதிக்கு தவற‌ை திருத்தி ‌கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. போதிய நீராதாரம் , கைகழுவும் இடத்தில் பேக்டீரியா தடுப்பு ஜெல், சுத்தமான தரை, சுகாதாரமான கிச்சன் என உணவு விடுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை சரி செய்து, சுகாத‌ார அலுவலகரின் அனுமதி பெற்றால் ஓட்டலை மீண்டும் திறக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Tuesday, August 25, 2009

மொபைல் போனில் லைப் பார்‌ட்னர் தேடலாம் : ஏர்டெல் அறிமுகம்

மொபைல் போனில் லைப் பார்ட்னரை தேடும் புது சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எம். ஷாதி என்ற இந்த சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏர்டெல் சி.இ.ஓ., ராஜிவ் ராஜகோபால் அத்தகவலை தெரிவித்தார். இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் *321*11’, என்ற டோல் ப்ரீ எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். பின்பு சேவையை பெற்றதும் பொருத்தமான மணப்பெண்/ மாப்பிள்ளை குறித்த முழு தகவல்கள்கள் மொபைலில் வரும். ஒரு முறை இந்த சேவைக்கு சப்ஸ்க்ரைப் செய்தால், 5 நாட்களுக்கு தொடர்ந்து இச்சேவையை பெறலாம். பின்பு இதை புதுப்பிக்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க சென்னையில் புதிய மருத்துவமனை

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் இனி அந்த கொடிய நோயை மூன்றே ஊசிகளில் குணமாக்கிக் கொள்ள முடியும் என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. கருப்பை புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்ச‌ை அளிப்பதற்காக சென்னை வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஹீலியாஸ் மருத்துவமனை . இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக டாக்டர் மஞ்சுளா தேவியும் தலைவராக டாக்டர் நந்தகுமாரும் பொறுப்பேற்றுள்ளனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை கூடுதல் ஆணையர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊசியை ஒருமுறை போட்டுக் கொண்டால் பின்னர் வாழ்நாள் முழுக்க கருப்பை புற்றுநோய் தாக்காது, பக்க விளைவுகளும் கிடையாது என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


அமெரிக்காவுக்கு ஏன் இந்த வீண் வேலை?

சமீபத்தில் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டுக்கான (2009) கண்காணிப்புப் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மதச் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல; மதச் சுதந்திரத்தைப் பற்றி அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் விவாதிக்க இந்தியா வர இருப்பதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால், நல்லவேளையாக இந்திய அரசு அதற்கு விசா அளிக்க முன்வரவில்லை.

2007 டிசம்பரில் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைக் கலவரம் வெடித்தது. இதில் 40 பேர் பலியாயினர்; 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர். ஆனால், மாநில அரசு அதைத் தடுக்கவோ கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவோ போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது அக்கமிஷன்.

இதேபோல 2002-ல் குஜராத்தில் ஹிந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால், வன்முறைக்குக் காரணமானவர்களைக் கைது செய்து தண்டனையளிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் வகுப்பு மோதலைத் தடுத்து நிறுத்தி மனிதநேயத்தைக் கடைபிடிக்குமாறு இந்தியாவை நிர்பந்திக்குமாறு அதிபர் பராக் ஒபாமாவை அமெரிக்க கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், பெலாரஸ், கியூபா, எகிப்து, இந்தோனேசியா, லாவோஸ், ரஷியக் குடியரசு, சோமாலியா, தாஜிகிஸ்தான், துருக்கி, வெனிசுலா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க கமிஷனின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

இராக் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டோம் என்பதை அமெரிக்கா முதலில் தன்னைத்தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளட்டும். முன்னாள் அதிபர் புஷ், முஸ்லிம்களுக்கு எதிராக எப்படிச் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆப்கானிஸ்தான் மீதும், இராக் மீதும் அமெரிக்கப் படைகள் எப்படி குண்டுமழை பொழிந்தன? அங்குள்ள சாமானியர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதும், போர்க் கைதிகள் குவான்டமானோ சிறையில் என்ன சித்தரவதைக்குள்ளானார்கள் என்பதும் உலக மக்கள் அறிந்ததே. அமெரிக்காவின் பல பகுதிகளில் இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதும், பள்ளிகளில் குழந்தைகள் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொலை செய்யும் அளவுக்கு அங்கு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கி வருவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் அமைதி, மனித நேயம் குறித்துப் பேசவோ விவாதிக்கவோ அமெரிக்காவுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்டு பிறநாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எந்தவகையில் நியாயமானது?

அமெரிக்க கண்காணிப்புப் பட்டியலில் இஸ்ரேலும் பாகிஸ்தானும் இடம்பெறாதது ஏனோ? இரண்டும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள் என்ற காரணத்தினால்தானே?

ஆப்பிரிக்க-அமெரிக்கரான பராக் ஒபாமா, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வேண்டுமானால் அமெரிக்காவுக்கு புதுமையாக இருக்கலாம். இந்தியாவில் குடியரசுத் தலைவர் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகிய இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அமெரிக்கச் சமுதாயத்தில் நடைபெறும் இனவெறித் தாக்குதலை இந்தியா சுட்டிக்காட்டினால் என்னவாகும்?

பாகிஸ்தானில்கூட அந்த நாட்டு அரசு சிறுபான்மையினருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகளைப் போல் சித்திரித்து வரும் அமெரிக்கா பாகிஸ்தானை கண்டுகொள்ளாதது ஏன்?

110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு இனத்தவர்களும் வாழ்கின்றனர். தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் அதைச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு எதிர்கொள்ள நீதித்துறையும் நிர்வாகத்துறையும் இருக்கிறது. மேலும் சம்பவங்களைத் தோலுரித்துக் காட்ட பத்திரிகைகளும் தகவல் சாதனங்களும் உள்ளன.

மதச்சார்பின்மை பற்றியும், மதசகிப்புத்தன்மை பற்றியும் அமெரிக்கா நமக்குக் கற்றுத்தர வேண்டியதில்லை. சகோதரத்துவம், அமைதி ஆகியவற்றை நாம் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம்.

அமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ளட்டும். அதற்கு ஏன் இந்த வீண் வேலை?

கட்டுரையாளர் : ஜெ. ராகவன்
நன்றி : தினமணி

ஓக்ஹார்ட் ஹாஸ்பிடல்சிடம் இருந்து 10 மருத்துவமனைகள் வாங்குகிறது போர்டிஸ் ஹெல்த் கேர்

ஓக்ஹார்ட் நிறுவனத்தின் 10 மருத்துவமனைகளை டில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் போர்டிஸ் நிறுவனம் ரூ.909 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பையில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், கோல்கட்டாவில் உள்ள மூன்று மருத்துவமனைகள் மற்றும் பெங்களூருவில் உள்ள 5 மருத்துவமனைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும். இவற்றின் மொத்த படுக்கைகள் எண்ணிக்கை 1902 ஆகும். இந்த எட்டு மருத்துவமனைகளுடன், தற்போது கட்டப்பட்டு வரும் இரு மருத்துவமனைகளையும் சேர்த்து வாங்கியுள்ளது போர்டிஸ். இந்த ஒப்பந்தத்துக்கான பணத்தில் ரூ.350 கோடியை பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டுகிறது போர்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓக்ஹார்ட் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக இந்த மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. இவற்றை வாங்க கடந்த ஆண்டிலிருந்தே அப்பல்லோ மற்றும் மணிப்பால் மருத்துவமனை நிர்வாகங்கள் முயன்று வந்தன. ஆனால் இறுதியில் இந்த டீல் போர்டிஸுக்கே சாதகமாக முடிந்தது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கிடையே நடந்துள்ள மிகப் பெரிய மருத்துவமனை விற்பனை ஒப்பந்தம் இதுவே. இதற்கு முன்னதாக போர்டிஸ் நிறுவனம் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டை கடந்த 2005ம் ஆண்டு வாங்கியது தான் மிகப்பெரிய ஒப்பந்தமாக இருந்தது. இணைப்பு மூலம் நாட்டின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனை நெட்வொர்க்காக வொக்கார்ட்
நன்றி : தினமலர்