மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முஸôபர் ஹுசைன் பெய்க், அண்மையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில், 2006-ம் ஆண்டு நடந்த பாலியல் வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியது அவையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனால் ஆத்திரம் அடைந்த உமர் அப்துல்லா, இருக்கையை விட்டு எழுந்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சமாதானப்படுத்தும் புகைப்படங்கள் அடுத்த நாள் காலையில் பத்திரிகைகளில் வெளியானது.
"என்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. என் மீது அபாண்டமாக பழிசுமத்தப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் வரை பதவியில் நீடிக்க விரும்பவில்லை' என்று கூறிய உமர் அப்துல்லா, அன்று மாலையே ஆளுநர் என்.என்.வோராவைச் சந்தித்து நிபந்தனையுடன் கூடிய தமது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் வோரா, உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை கேட்டார். இந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் உமர் அப்துல்லா பெயர் இல்லை. எனவே அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாத நிலையில் முதல்வர் பதவியில் தொடருமாறு உமர் அப்துல்லாவை ஆளுநர் வோரா கேட்டுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் பணியைத் தொடர்ந்தார் உமர் அப்துல்லா.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் முதல்வர் உமர் அப்துல்லா, ஆளுநர் வோராவிடம் கொடுத்த ராஜிநாமா கடிதம் மிகவும் கவனமுடன் தயாரிக்கப்பட்டிருந்ததுதான். "என் மீதான குற்றச்சாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் விடைகிடைக்க வேண்டும். நான் குற்றம் இழைத்தவன் எனத் தெரியவந்தால் எனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று உமர் தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உமர் அப்துல்லா மிகவும் நுணுக்கமாக ராஜிநாமா கடிதத்தை எழுத உதவியது தந்தை பாரூக் அப்துல்லாதான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. தில்லி செல்வதற்காக பாரூக் ஸ்ரீநகர் விமான நிலையத்துக்குக் காரில் சென்றுகொண்டிருந்தபோது, மாநில சட்டப்பேரவையில் உமர் அப்துல்லாமீது எழுந்த குற்றச்சாட்டு, அதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்த தகவல் கிடைத்து உடனடியாக காரைத் திருப்பி வீட்டுக்கு வந்தார். பின்னர் ராஜிநாமா கடிதத்தை எப்படி எழுத வேண்டும் என்று எடுத்துக்கூறி அவருக்கு உதவியுள்ளார்.
சோபியான் விவகாரம் வெடித்ததிலிருந்தே உமர் அப்துல்லாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பாரமுல்லாவில் நான்கு பேர் கொல்லப்பட்டது காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் கற்பழிப்புச் சம்பவத்தை முதல்வர் உமர் அப்துல்லா பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகக் கூறி புகாரை மறுத்துவந்தார். ஆனால், பின்னர் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்ற உண்மையை அவர் புரிந்துகொண்டார். இதற்குள் ஆளுங்கட்சிக்கு அவப் பெயர் ஏற்பட்டு விட்டது.
இந்த விவகாரத்தை அரசு சரியாகக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். ஒரு சாதாரண விஷயம் இப்படி விசுவரூபம் எடுக்கும் என்று உமர் நினைத்துப் பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், கற்பழிப்புக் குற்றத்தை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டார் என்றும் கொள்ளலாம்.
ஆளுங்கட்சியை வீழ்த்த என்ன வழி என்று சிந்தித்துக் கொண்டிருந்த முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு சோபியான் விவகாரம் கைகொடுத்தது. சோபியான், பாரமுல்லா சம்பவங்களுக்காக முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது ஹுரியத் அமைப்புதான் என்றாலும் அதை கையிலெடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி அதைப் பெரிதுபடுத்தியது மெஹ்பூபா முஃப்திதான்.
பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் உமர் அப்துல்லாவுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு விவகாரங்களை மாநில அரசு சரிவர கையாளவில்லை என்று குலாம்நபி ஆஸôத் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் இடையே இறுக்கமான நிலை இருந்து வருகிறது.
அதாவது 2008 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ள போதிலும் ஆஸôத்தும் அப்துல்லாவும் கடந்த பல ஆண்டுகளாக இணைந்தே செயல்பட்டு வந்துள்ளனர். பாரூக் அப்துல்லா ஆதரவுடன்தான் குலாம்நபி ஆஸôத் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இப்போது தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக ஆஸôத் கூறியுள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமர்நாத் விவகாரத்தை அடுத்து குலாம்நபி ஆஸôத் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை மக்கள் ஜனநாயகக் கட்சி விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சி, தமக்கு ஆதரவு அளிக்கும் என்று ஆஸôத் எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்படக் காரணம் என்று வேறுசிலர் நினைக்கின்றனர். அன்று தேசிய மாநாட்டுக் கட்சி ஆதரவு அளித்திருந்தால் முதல்வராக நீடித்திருக்கலாம் என்பது ஆஸôத்தின் கருத்து.
காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆஸôத்தும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் புரவலர் முப்தி முகமது சய்யீத்தும் ஒன்றுசேர முடியாத எதிரிகள். ஆனால், சமீபத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு ஆஸôத் தூது விட்டதாக தேசிய நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. காங்கிரஸ் கட்சியில் ஆஸôத்தை பிடிக்காதவர்கள் சிலர் வேண்டும் என்றே அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்த இந்தச் செய்திகளை உலவவிட்டதாகத் தெரிகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸில் உள்கட்சிப் பூசலும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசலும் நீண்டநாளாக இருந்து வந்தது. இப்போது பாலியல் வழக்கு தொடர்பாக உமர் அப்துல்லா அதிரடியாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்ததன் எதிரொலியாக தேசிய மாநாட்டுக் கட்சியை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. அதாவது இப் பிரச்னை கூட்டணிக் கட்சிகளிடையே பழையபடி நெருக்கத்தை ஏற்படுத்த வழிவகுத்துவிட்டது. இது உமர் அப்துல்லாவுக்குச் சாதகமான அம்சமாகும்.
2006 பாலியல் வழக்கில் உமர் அப்துல்லாவுக்குத் தொடர்பு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையை சட்டப்பேரவையில் கிழித்து எறிந்து, பேரவைத் தலைவர் இருக்கையில் இருந்த மைக்கை பிடுங்கி எறிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி. ஆனால், அவரது செயல் நாடு முழுவதும் எதிரொலிக்கவில்லை.
ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சிவிலியன் பகுதிகளிலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், காஷ்மீர் எல்லைப் பகுதியில் போக்குவரத்து மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி கோரி வருகிறது. அக்கட்சியின் இந்த நிலைப்பாட்டுக்கு வேறுசில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் மெஹ்பூபா முஃப்தி.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாய்ப்பூட்டு போட்டு அடக்கி வைக்க ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி முயன்று வருகிறது. சட்டப்பேரவையில் தினமும் ஏதாவது பிரச்னையை எழுப்பினால், அது தொடர்பான தீர்மானத்துக்கு பேரவைத் தலைவர் முட்டுக்கட்டை போடுவார், அதன் மூலம் மக்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்பது மெஹ்பூபாவின் எண்ணம்.
பாலியல் வழக்கு விவகாரத்தில் எப்படியாவது முதல்வர் உமர் அப்துல்லாவை சிக்கவைத்து அதன் மூலம் ஆதாயம் பெறமுடியுமா என்று பார்க்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. அதனால்தான் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 300 பேர் பட்டியலில் உமர் பெயர் உள்ளதாக அது குறிப்பிட்டு வருகிறது. உயர் நீதிமன்றத்தில் உள்ள பட்டியலாகும் இது. ஆனால், முதன் முதலாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா பெயர் இல்லை.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது இளம் தலைவர்கள் அரசியல் களத்தில் புகுந்துள்ளனர். அத்தகைய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் ஒன்று. காஷ்மீரில் உமர் அப்துல்லாவும், மெஹ்பூபா முஃப்தியும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக உள்ளனர். உமர் அப்துல்லா, பாரூக் அப்துல்லாவின் மகன். ஷேக் அப்துல்லாவின் பேரன். மெஹ்பூபா, முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சய்யீத்தின் மகள். இருவரும் ஒரேசமயத்தில் அரசியல் களத்தில் குதித்தவர்கள்.
1998-ல் மக்களவை உறுப்பினராகி அரசியலில் நுழைந்தார் உமர் அப்துல்லா. 1996-ம் ஆண்டு பிஜ்பெஹ்ரா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியலில் நுழைந்தவர் மெஹ்பூபா முஃப்தி. பின்னர் 1999-ம் ஆண்டு முப்தி முகமது சய்யீத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மக்கள் ஜனநாயகக் கட்சியை உருவாக்கினார். அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஸ்ரீநகர் தொகுதியில் உமர் அப்துல்லாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மெஹ்பூபா. இதையடுத்து 2004 தேர்தலில் வெற்றி பெற்று அவர் மக்களவை உறுப்பினரானார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் உமர் அப்துல்லா வெளியுறவுத்துறை துணை அமைச்சராக இருந்தாலும், 2008 ஜூலையில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது உமர் அப்துல்லாவின் உருக்கமான பேச்சுதான் அவரை நாடறிய வைத்தது எனலாம்.
மெஹ்பூபா முஃப்தி பல கொலை முயற்சிகளில் உயிர்தப்பியவர். காஷ்மீர் மக்களின் மனநிலையை நன்கு அறிந்தவர். குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு என மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவர்.
மெஹ்பூபா காஷ்மீரை மையமாக வைத்துத்தான் அரசியல் நடத்தி வருகிறார். ஆனால், உமர் அப்துல்லா அப்படியல்ல; தேசிய அரசியலில் தமது பெயர் இடம்பெற வேண்டும் என நினைக்கிறார்.
உமர் அப்துல்லாவும், மெஹ்பூபாவும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி அரசியல் நடத்தி வந்தாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதர மாநிலங்களைப் போல பிராந்திய அரசியல் கட்சிகள் பலமடைந்து வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லது மட்டுமல்ல; அங்கு சகஜ நிலை திரும்பவும் வழிவகுக்கும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி