Showing posts with label இந்தியாஅரசு. Show all posts
Showing posts with label இந்தியாஅரசு. Show all posts

Friday, June 17, 2011

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.


""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?
 
நன்றி : தினமணி


Wednesday, June 8, 2011

யாரிடம் சொல்லி அழ?


கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எடுத்தது. அதாவது, நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடிவிட வேண்டும். 2022-ம் ஆண்டில் ஜெர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் அது.


இதற்கு அவசியமில்லை என்று ஜெர்மனியின் அதிபர் ஆஞ்செலா மெர்க்கெல் தனிப்பட்ட முறையில் சில மாதங்களுக்கு முன்பும்கூட கருத்து தெரிவித்திருந்தாலும், அவரும் நாடாளுமன்றத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறார். வேறு வழியில்லை. இதற்கு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை என இரண்டு இயற்கைச் சீற்றங்களும் ஒருசேரத் தாக்கியதில் ஃபுகுஷீமா அணுஉலை பாதிக்கப்பட்டது முதல் உலக நாடுகள் மற்றும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்சமும் விழிப்புணர்வும்தான் காரணம். இப்போது உடனடியாக 7 அணுஉலைக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதேசமயம் இந்தியாவில் ஒரு நிலைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. ஜெய்தாபூரில் அணுஉலைக்கூடம் அமைத்தே தீருவோம் என்று அரசு சொல்கிறது.

இதற்கு அரசுத் தரப்பில் தரப்படும் விளக்கம்: இத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அணுஉலைக் கூடம் மூலம் மின்உற்பத்தி மிகமிக அவசியத் தேவையாக இருக்கிறது. இப்போது அணுஉலைக் கூடங்கள் மூலம் நம் நாட்டுக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3 விழுக்காடு மட்டுமே. 2020-ம் ஆண்டு இது 6 விழுக்காடாக உயரும். 2030-ம் ஆண்டு இது 12 விழுக்காடாக உயரும். பாதுகாப்பு முறைகளில்தான் சிறிது மாற்றங்கள் தேவை. அதில் முழுமையாகக் கவனம் செலுத்தினால் பிரச்னையே இல்லை.

இதை இந்திய அரசு சொல்லும்போது நாம் ஜெர்மனியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெர்மனியில் அணுமின் உலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் 22 விழுக்காடு. அதாவது நான்கில் ஒரு பங்கு மின்சாரம் அணுஉலைக் கூடங்கள் மூலம்தான் அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. ஆனாலும் அதை இழக்கத் துணிகிறார்கள். எதற்காக? மக்கள் நல்வாழ்வுக்காக.

ஃபுகுஷீமா அணுஉலை விபத்தால் குடிநீரிலும்கூட கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும் நிலைமையைக் கண்கூடாகக் கண்டுவிட்டதால் ஏற்பட்ட முடிவு இது. மக்கள் நலன் கருதி இந்த முடிவை அவர்கள் மேற்கொள்கிறார்கள். பிற இயற்கை ஆதாரங்கள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முடிவை ஏற்றுக் கொள்கிறார்கள். மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, ஆபத்தைத் தெரிந்தே அரவணைப்பது மடமை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அணுஉலைக் கூடங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் ஜெர்மனி அரசுக்கும்கூட நன்றாகத் தெரியும். அவர்கள் நம்மைவிட பொறுப்பாக இந்தப் பணிகளில் ஈடுபட்டு, பாதுகாப்புக்கு அதிக அக்கறை தரக்கூடியவர்கள்தான். ஆனால் அவர்கள் அறிந்திருக்கிறார்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை யாவும் இயற்கைச் சீற்றங்களுக்கு முன்பாக அர்த்தமற்றவை என்பதை.

இந்தியாவின் அணுஉலைக் கூடங்கள் பாதுகாப்பற்றவை என்பது மட்டுமல்ல, இவற்றுள் தீவிரவாதிகள் புகுந்து அணுஆயுதம் செய்வதற்கான மூலப்பொருள்களைத் திருடிச் செல்வதென்பது வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் மிகவும் எளிது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இதை மும்பைத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு இருந்தும் இந்திய அரசு சொல்கிறது - பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரி செய்துவிட்டால் போதுமானது. அணுஉலைக் கூடங்களால் பிரச்னை இருக்காது என்று. எவ்வளவு பொறுப்பற்றதனம்?

அண்மையில் ஜெய்தாபூரில், அணுஉலைக் கூடத்துக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியை அரசு அடக்கி ஒடுக்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்த மக்களின் எதிர்ப்பு அரசியலாக்கப்பட்டு, அரசியல் சண்டையாக மாற்றப்பட்டதால் மக்களின் ஈனக்குரல் அமுங்கிவிட்டது. அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் அணுஉலைக் கூடம்தான் இந்தியாவிலேயே மிகப் பெரியது. இந்த அணுஉலைக் கூடத்தின் மின்உற்பத்தித் திறன் 9,900 மெகாவாட். இதற்காக இங்கே 2,400 ஏக்கர் நிலத்தை அரசு ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜெய்தாபூரில் அணுஉலை அமையவிருக்கும் பகுதி பல்லுயிர் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இடங்களில் முக்கியமானது. ஆனாலும் அந்த இடத்தைத்தான் இந்திய அணுமின் கழகம் தேர்வு செய்துள்ளது. அதற்கு அணு ஆற்றல் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இடத்தில் அணுஉலை அமையுமானால், இந்த பல்லுயிர் பெருக்கம் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது.

மேலும், நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் கொண்ட 4-வது நிலையில் உள்ள பகுதி இது என்று பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் இந்த இடத்தில் அணுமின் உலை வைப்பது எந்த விதத்தில் சரியான முடிவாக இருக்கும்? அமைக்கப்படவுள்ள ஈபிஆர் எனப்படும் புதிய தொழில்நுட்பத்திலான உலைகள், இதுவரை பரிசோதனைக்கு உட்படாதவை. இவற்றின் நன்மை தீமையை யார் அறிவார்? பிறகு எந்த தைரியத்தில் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது?

இந்தியாவில் கிடைக்கும் யுரேனியம் 10,000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு மட்டுமே போதுமானது. இதற்கும் மேலாக, அணுமின் உற்பத்தியை அதிகரித்தால் யுரேனியத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டும். இதற்கு ஆயிரம் கெடுபிடிகள், ஒப்பந்தங்கள், தடைகள். இதையும் மீறி இறக்குமதி செய்தாலும் அவற்றின் விலை அப்போது மேலதிகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இந்தியாவின் மின் தேவை ஒவ்வோராண்டும் 10 விழுக்காடு அதிகரிப்பதாகவும் அதனால்தான் இத்தகைய முடிவுகளை மேற்கொள்வதாகவும் அரசு காரணம் கூறுகிறது. இது ஒரு நொண்டிச் சாக்கு. இந்தியாவின் மின்உற்பத்தி தட்டுப்பாடு 13 விழுக்காடு என்றால், மின்விநியோகத்தில் வழித்தட இழப்பு 28 விழுக்காடாக இருக்கிறது. இப்போது இருக்கும் மின்உற்பத்தி நிலையங்களை அதன் முழுஉற்பத்தித் திறனுக்குப் பயன்படுத்தி, வழித்தட மின்இழப்பை 10 விழுக்காடாகக் குறைத்தாலே போதும். மின்தட்டுப்பாடு நீங்கிவிடும்.

மக்களைப் பற்றியும், நாளைய தலைமுறை பற்றியும் கவலைப்படாமல் பன்னாட்டு நிறுவனங்களின் மின்தேவையைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்பட்டால், இப்படியெல்லாம்தான் முடிவுகள் எடுக்கப்படும்!
நன்றி : தினமணி


Friday, December 3, 2010

வெட்கம் கெட்டவர்கள்!

சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று பழமொழி கேட்டிருக்கிறோம். "திருடன் கையில் சாவி கொடுத்த கதை' என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது.


ஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன.

தாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட எல்லா முறைகேடுகளும், அமைச்சர் ஆ. ராசாவின் ஒப்புதலுடன் இவரால்தான் அரங்கேற்றப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. அதையும் மீறி, இவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, "தினமணி' உள்ளிட்ட பல நாளிதழ்கள் தலையங்கத்தில் அதை வன்மையாகக் கண்டித்தன. இந்திய சரித்திரத்திலேயே நடந்தேறியிருக்கும் மிகப்பெரிய முறைகேடுக்குத் துணைநின்றவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சட்டை செய்யாமல் மத்திய அரசு நியமித்ததே இந்த "மெகா' ஊழலை மறைக்கத்தானோ என்று அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.

இப்படி அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமையில், திருடனே தீர்ப்பெழுதுவதுபோல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரியின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் பதில் அதைவிட விசித்திரம். ""இந்திய அரசுப் பணியின் உயர்ந்த பண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், 2ஜி அலைக்கற்றை சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று பெரிய மனது பண்ணி பி.ஜே. தாமஸ் பதில் அளித்திருக்கிறார். அதாவது தான் பதவி விலகுவதாக இல்லை என்பதுதான் பதில்.

தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக இருக்கும் ஒருவரை, அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா? என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் ஏனோ எழுப்பாமல் விட்டுவிட்டிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற அரசியல் சட்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை விசாரிக்கும் உரிமை அந்தக் குழுவுக்கு இருக்குமா என்பதும் நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டச் சிக்கல். தாமûஸ இந்தப் பதவியில் அமர்த்திவிட்டால், இதுபோன்ற பல அரசியல் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளைப் பற்றிய விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எண்ணமாக இருந்ததோ என்னவோ!

தான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகத் தேவையில்லை என்று பி.ஜே.தாமஸ் கூறியிருப்பதன் பொருள், யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப்போல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இது அவருக்கும் தெரியும், அவரைப் பதவியில் நியமித்தவர்களுக்கும் தெரியும்.

இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், பொறுப்பான பதவிகளை வகித்த இந்திய அரசுப் பணியைச் சேர்ந்த ஓர் அதிகாரி கொஞ்சமாவது மானம், ரோஷம் இருந்தால் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பாரா? பதவிக்காக இந்திய அரசுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு பி.ஜே.தாமஸ் ஓர் உதாரணம்.

தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இதைவிட ஒருபடி மேலே போய், சட்ட அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையுமே கேலிக்குரியவையாக மாற்றியிருப்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிகிறது. முறையாக ஒதுக்கீடு நடத்தப்படாததால் இத்தனை கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் என்று உத்தேசக் கணக்கு கூறுகிறார்களே தவிர, நான் லஞ்சம் வாங்கினேன் என்றோ, அந்தப் பணம் எனக்குக் கிடைத்ததென்றோ யாரும் கூறவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ராசா தரப்பு வாதம். 45 நிமிட அவகாசத்தில் ரூ. 1,600 கோடிக்கான வங்கி உத்தரவாதத்துடன் எப்படி சில நிறுவனங்கள் ஒதுக்கீடு அனுமதிக்கு விண்ணப்பித்தன என்கிற கேள்விக்கும், பிரதமரின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது ஏன் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரச்னையைத் திசை திருப்பத்தான் இப்போதும் முனைகிறார் அவர்.

இதெல்லாம் போகட்டும். இந்தியப் பிரதமர் என்கிற பதவி இருக்கிறதே, உலகிலேயே மிக அதிகமான அதிகாரத்தை உடைய பதவி அதுவாகத்தான் இருக்கும். இந்த அளவு அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக்கூடக் கிடையாது. அதிகாரம் மட்டுமா, மரியாதையும், கௌரவமும் உள்ள பதவியல்லவா அது? பண்டித ஜவாஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும் அமர்ந்த நாற்காலி அது. அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?

தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது அறிவுரையைக் கேட்கவில்லை என்ற உடனேயே அவரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா? "பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னவுடன் ஒன்று மறுத்திருக்க வேண்டும், இல்லை தனது அமைச்சரவையிலிருந்து அவரை அகற்றியிருக்க வேண்டும். அரசியல் நிர்பந்தம் என்றால், தனது சுயமரியாதையைகூடக் காரணம் காட்டி, சந்திரசேகர் செய்ததுபோலத் துணிந்து பதவி விலகி இருக்க வேண்டும்.

என்ன சொல்லி என்ன பயன்? இவர்கள் எல்லாம்...

நன்றி : தினமணி 

Friday, September 24, 2010

தேசத் துரோகிகள்!

இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ 70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?

தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.

முதலில் 655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் 11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார் 17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ 70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் 961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம் 669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம் 262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம் 149 கோடி என்று ஏறத்தாழ 44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு 85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு 80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.

961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.

ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.

அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.

70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.

எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின்

கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?

இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

 நன்றி : தினமணி  


Friday, September 17, 2010

ஏன்? எப்படி? எதற்கு?

ஜாதிவாரி கணக்கெடுப்பை 2011 ஜூன் மாதத்தில் தொடங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என்பது இத்தனை காலமாக இதைக் காலம் தாழ்த்தியதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும். இருந்தும் கூட்டணி ஆட்சியில் ஆதரவாக நிற்கும் அரசியல் கட்சிகளின் நெருக்குதலுக்கு ஆளான மத்திய அரசு, வேறுவழியின்றி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல்வாதிகளின் கலக அரசியலுக்குத் துணைபோகும் என்று ஒரு சாரார் எதிர்த்தாலும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசின் சலுகைகளையும் பயன்களையும் பெறவில்லை என்று இன்னொரு சாரார் வலியுறுத்தி வந்தனர். ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதென மத்திய அரசு தீர்மானித்து, அறிவித்துள்ளது.

இந்த முடிவால் மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச்செலவு

ரூ.2000 கோடி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிடக் கூடுதலாகவும் வாய்ப்பு உண்டு. இந்த முடிவை இரண்டு மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால், வழக்கமாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு இதையும் சேர்த்திருந்தால், இந்தச் செலவை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும்.

இருப்பினும்கூட, இப்போது இத்தனை பெரும் பொருள்செலவில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் ஜாதி, அவர்களின் வங்கி இருப்பு, சொத்துகள், அரசால் பெற்ற நலத்திட்டப் பயன்கள், கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மூலம் பெற்ற சலுகைகள், அவர்தம் குழந்தைகள் பெற்றுவரும் சலுகைகள், கலப்பு மணம் என்றால் அதன் விவரம், வருமான வரி செலுத்துபவரா போன்ற அனைத்துத் தகவல்களையும் பெற்று, இவர்கள் ஏற்கெனவே மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கொடுத்த தகவல்களையும் ஒப்பீடு செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் இந்தத் தகவல்கள் சரியானவையாக இருக்கும்.

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இருக்கும் ஜாதி, இன்னொரு மாநிலத்தில் பொதுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. சில மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோராக இருக்கும் ஜாதி, அண்டை மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறது. இந்த வேறுபாடுகளை, இந்தப் புள்ளிவிவரம் களைய முற்படுமா? அல்லது அந்தந்த மாநிலத்தில் தற்போது பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாதிகளை அந்தந்த வகைப்பாட்டிலேயே வைத்திருக்குமா?

புள்ளிவிவரத்தின்படி, குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் கல்வி வாய்ப்புகளிலும், அரசுப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று விட்டார்கள் என்று தெரியவந்தால், அவர்களுக்கான ஒதுக்கீட்டு அளவைக் குறைத்தும், வாய்ப்பு பெறாதவர்களுக்காக இடஒதுக்கீட்டு அளவை அதிகரித்தும் சட்டத்தை மாற்ற முனைவார்களா?

÷பிரிட்டிஷ் ஆட்சியின்போது எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் இப்போதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 70 ஆண்டு காலத்தில் இந்தியா மிகப்பெரும் மாறுதலை அடைந்துள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. குறிப்பாக, இடஒதுக்கீடு மூலம் பல சமுதாயங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனாலும், சலுகை மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த அதே குடும்பங்களே தொடர்ந்து சலுகையைத் தட்டிச்சென்று, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு நந்தியாகக் குறுக்கே நிற்பதைத் தடுக்கும் வகையில் "கிரீமி லேயர்' என்பதை அறிமுகம் செய்வதற்கும் அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டுச் சலுகை மூலம் டாக்டர் பட்டம் பெற்று பல லட்சம் சம்பாதித்தவர், தனது மகனுக்கும் இடஒதுக்கீட்டில் டாக்டர் படிப்புக்கு இடம்பெற்று, பல கோடி சம்பாதித்து, இப்போது பேத்திக்கும் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் இடம்பெறுவார் என்றால், அதே சமூகத்தின் இரு குடும்பங்களின் பலனை அவர் தட்டிப் பறிப்பதாகத்தானே அர்த்தம்? இப்படிப்பட்டவரை ஏன் "கிரீமி லேயர்' என்று கருதி, சலுகைகள் பெறுவதைத் தடுக்கக்கூடாது?

÷தனது சமூகத்துக்கே தடைக்கற்களாக இருக்கும் இத்தகைய சுயநலமிகளை இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சலுகைக்கு வெளியே நிறுத்த அரசு முற்பட்டால், அதை இதே அரசியல் தலைவர்கள் ஒப்புக்கொள்வார்களா? இடஒதுக்கீடு மூலம் அரசு வேலைவாய்ப்பு பெற்றவரின் குழந்தைகளில் ஒருவர் மட்டுமே அடுத்த முறை இச்சலுகையைப் பெற முடியும் என்று இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னர் அரசு தீர்மானிக்குமானால் அதை அரசியல்வாதிகள் ஏற்பார்களா?

ஏற்க மறுப்பார்கள் என்றால் - எந்த மாற்றமும் செய்ய உடன்பட மாட்டார்கள் என்றால், இந்தக் கணக்கெடுப்பு பொருளற்றது. வெறும் பொருள்செலவுதான் மிஞ்சும். அதற்காக மக்களின் வரிப்பணம் 2,000 கோடி ரூபாய் விரயமாக்கப்படுவதில் அர்த்தமேயில்லை.

ஜாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால், கணக்கெடுப்பு என்கிற பெயரில் ஜாதியம் நிலைநிறுத்தப்படுமானால், இது விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் முயற்சியாகத்தான் இருக்கும்!
நன்றி : தினமணி

Thursday, September 2, 2010

சதை ஆடுகிறதே...!

பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.

வெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது.

இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத்தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும், தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.

ஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது.

இருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை.

இப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்காரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.

முகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள்.

இந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது.

நிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது!
நன்றி : தினமணி

Tuesday, August 31, 2010

தூக்கில் தொங்கும் தீர்ப்புகள்!

தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது நாட்டின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்க முடியும். நாட்டுநடப்புகள் நன்றாக இல்லை என்று யாராவது அழுதுபுலம்பினாலோ, முணுமுணுத்தாலோ அதற்குக் காரணம் அவர்கள் பிறந்த பொன்னாட்டை வெறுப்பதால் அல்ல. தவறுகள் திருத்தப்படாதா, நான் பிறந்த நாடு போற்றுதலுக்கு மட்டுமே உரிய நாடாக மாறிவிடாதா என்கிற ஏக்கமும் ஆதங்கமும்தான் காரணமே தவிர, அது நாட்டுப்பற்று இல்லாமையால் அல்ல. 63 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருந்தும் முக்கியமான பிரச்னைகளில் முடிவெடுக்கக்கூடத் துணிவில்லாத அல்லது மனமில்லாத நாடாக இந்தியா தொடர்கிறதே என்று ஆதங்கப்படுவது தவறா என்ன?

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தீவிரவாத சக்திகளால் தாக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்படி இந்திய நாடாளுமன்றத்தையே தகர்த்தெறியும் திட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான அப்சல் குரு என்பவர் பிடிபட்டார். இது சர்வாதிகார நாடாக இருந்தால், அடுத்த சில நாள்களிலேயே அப்சல் குரு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்.

நாடாளுமன்றத்தைத் தாக்கிய குற்றத்துக்கான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து, 2002-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி குற்றவாளியான அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை அளிப்பது எனத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலேயே விஷயம் முடிந்துவிடாதே; மேல்முறையீடு செய்வதற்காக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பது என்று 2005 ஆகஸ்ட் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு இதற்குள் 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

2006-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான தடை விலக்கப்பட்டு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடுவதற்கான நாளும் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது, அப்சல் குருவின் மனைவி தபாசம், குடியரசுத் தலைவருக்கு ஒரு கருணை மனுவைச் சமர்ப்பிக்கிறார். இதுபோன்ற கருணை மனுக்களின் மீது குடியரசுத் தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. அவர், தனக்கு ஆலோசனை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அந்தக் கருணை மனுவை அனுப்புகிறார்.

இதெல்லாம் நடந்தது 2006-ம் ஆண்டில். மத்திய உள்துறை அமைச்சகம், குற்றவாளி அப்சல் குரு தொடர்பான கோப்புகளை தில்லி மாநில அரசுக்கு அனுப்பி அந்த அரசின் கருத்தைக் கோருகிறது. தில்லி அரசுக்குப் போன அப்சல் குருவின் கருணை மனு தொடர்பான கோப்பு கிணற்றில் போடப்பட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதின. பொதுநல சங்கங்கள் ஊர்வலங்கள் நடத்தின. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஊஹூம், அந்தக் கோப்பைப் பற்றிய பேச்சுமூச்சே காணோம்.

மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் திடீரென்று விழித்துக்கொண்டு தில்லி மாநில அரசுக்கு கோப்புப் பற்றி நினைவூட்டும். ஒருமுறை இருமுறை அல்ல, 16 முறைகள் மத்திய உள்துறை அமைச்சகம் குற்றவாளி அப்சல் குருவின் கருணை மனு மீதான தில்லி அரசின் கருத்தைக் கேட்டும் தில்லி அரசு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே இருந்திருக்கிறது.

இதுவே எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலமாக இருந்தால் இந்தக் காரணத்துக்காகவே அந்த ஆட்சியைக் கலைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் 16 கடிதங்களை தில்லி அரசு பார்த்தும் பார்க்காமலும் இருந்தது என்றால், அதுவே நம்பும்படியாக இல்லை.

கடந்த மே மாதம் 18-ம் தேதி தில்லி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சில விளக்கங்களைக் கேட்டு ஒரு கடிதம் அனுப்புகிறார். விளக்கங்கள் கிடைத்ததும் உடனடியாக தில்லி அரசு முடிவெடுத்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு வாரத்துக்கு முன்புதான் சற்று மனம்இறங்கி, குற்றவாளி அப்சல் குரு சம்பந்தப்பட்ட கோப்புகளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் தில்லி துணைநிலை ஆளுநர் தேஜேந்தர் கன்னா.

அப்சல் குருவைத் தூக்கிலிடுவது என்கிற தீர்ப்பில் தங்களுக்கு எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது என்று கூறியதுடன் அவர் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "அப்சல் குருவைத் தூக்கிலிடுவதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பற்றி நன்றாக மறுபரிசீலனை செய்துவிட்டு முடிவெடுக்கவும்' என்று அவர் பரிந்துரைத்திருப்பதுதான் விந்தையிலும் பெரிய விந்தை.

அப்சல் குரு இந்திய நாடாளுமன்றத்தையே தகர்க்க முயன்ற நாசகாரக் கும்பலைச் சேர்ந்தவர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர். அவரைத் தூக்கிலிடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்கிறாரே தில்லி துணைநிலை ஆளுநர், அப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் யார் என்றும் குறிப்பிட்டிருக்கலாமே...

இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அப்சல் குருவுக்காக வருத்தப்படுவார்கள் என்றோ குரல் கொடுப்பார்கள் என்றோ யாராவது நினைத்தால், அப்படி நினைப்பவர்கள்தான் தேசத் துரோகிகள். இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களைக் களங்கப்படுத்துவதும், அவர்களது தேசபக்தியைக் கொச்சைப்படுத்துவதும்தான் இப்படிக் கூறுபவர்களின் உள்நோக்கம். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

குற்றவாளியாகவே இருந்தாலும்கூட தூக்கிலிடுவதற்கு முன்னால் தீர யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை. ஆனால், தவறான காரணத்தைக் காட்டி தீர்ப்பைத் தள்ளிப்போடுவது ஏற்புடையதல்ல. கருணை மனுவை காலவரையில்லாமல் ஒத்திபோடுவது நீதிக்கும் இழுக்கு, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கும் இழைக்கப்படும் அநீதி.

தேசத்தை நேசிப்பதால் கோபம் வருகிறது. தூக்கிலிடப்பட வேண்டியது அப்சல் குருவையா, இவர்களையா? இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், இந்திய மக்களே கொதித்தெழுந்து நாடாளுமன்றத்தைத் தகர்த்தெறிந்து விடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை மேலெழுகிறது...
நன்றி : தினமணி

Monday, August 30, 2010

பாகிஸ்தான் - சீனா பாய்.. பாய்...!

இந்தியாவைச் சீண்டுவதும் பிறகு கைகுலுக்கிச் சமாதானம் பேசுவதும் சீனாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொண்டாக வேண்டும் என்கிற நல்லெண்ணத்தால், நாமும் நமது அண்டை நாடுகள் நமக்கு இழைக்கும் துரோகங்களையும், அவமானங்களையும் தொடர்ந்து மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்குப் பெயர்தான் ராஜதந்திரம் என்றோ, இதுதான் சாதுர்யமான வெளிவிவகாரக் கொள்கை என்றோ நமது ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால், அதன் விளைவுகள் விளைவிக்க இருக்கும் பாதகங்கள் அளப்பரியது என்று நாம் எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தியாவிலிருந்து உயர்நிலை ராணுவ அதிகாரிகளின் குழு ஒன்று பெய்ஜிங்குக்குச் செல்வதாக இருந்தது. அந்தக் குழுவில் இந்திய ராணுவத்தின் வடஎல்லையின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ஜஸ்வாலும் இடம்பெற்றிருந்தார். ஆனால், எந்தவிதக் காரணமும் குறிப்பிடாமல் அவருக்கு மட்டும் நுழைவு அனுமதி (விசா) வழங்க பெய்ஜிங் மறுத்து விட்டிருக்கிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கிழக்கு எல்லையில் பிரச்னைகள் இருப்பது உலகறிந்த உண்மை. அருணாசலப் பிரதேசத்தில் தொடங்கி நமது வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த பல பகுதிகளை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. இப்போது இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக இருப்பவர் முன்பு கிழக்கு கமாண்டின் தலைமைத் தளபதியாக இருந்தபோது, சீனாவுக்குச் சென்று வந்திருக்கிறார். எல்லைப் பிரச்னைக்காக நுழைவு அனுமதி வழங்காமல் இருப்பதாக இருந்தால் அவருக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டும்.

லெப்டினன்ட் ஜெனரல் ஜஸ்வாலுக்கு அனுமதி மறுத்திருப்பதற்குக் காரணம் என்ன என்று விசாரித்தபோது, இதற்குக் காரணம் பாகிஸ்தான் என்பது தெரிகிறது. சமீபகாலமாகவே, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு நாளும் பொழுதும் பலமடைந்து வருகிறது. பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகளை சீனாவின் பாதுகாப்பில் விடுவதற்கான ஆலோசனை பாகிஸ்தானின் ராணுவத்தால், அந்த நாட்டு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சில நாள்களுக்கு முன்னால் அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்திருந்ததை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

மேல்நாட்டு வல்லரசுகளும் சரி, சீனாவும் சரி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுவிடாமல் காஷ்மீர் பிரச்னை தீர்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

காஷ்மீரைத் தனி நாடாக்கி அங்கே தங்களது ராணுவத் தளத்தை நிறுவிவிட்டால் எண்ணெய் வளம் கொழிக்கும் மேற்காசியாவையும், பாரசீக வளைகுடாவையும், ரஷியாவையும், இந்தியாவையும், சீனாவையும் ஒருசேரக் கண்காணிக்கும் வகையில் செயல்பட முடியும் என்பதால்தான், எல்லா நாடுகளுக்குமே காஷ்மீர் மீது ஒரு கண்.

ஒருபுறம் தலிபான்களும் மற்றொருபுறம் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் மோதிக்கொள்ளும் நிலையில், தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ள பாகிஸ்தான், தனக்குக் கிடைக்காவிட்டாலும் காஷ்மீர் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதில் நிச்சயமாகக் குறியாக இருக்கும். அதனால்தானோ என்னவோ, இப்போது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் சீனப் படைகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும் திட்டமும் சீனாவால் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் மேலைநாட்டுப் பத்திரிகைகளில் கசிந்தவண்ணம் இருக்கின்றன. பாகிஸ்தானின் ராணுவத்துக்கு சீனா உதவுகிறது என்பதும், பாகிஸ்தானின் அணு ஆயுதச் சோதனைகளுக்கு சீனாதான் பக்கபலமாக இருந்து உதவியது என்பதும் புதிய செய்தி ஒன்றுமல்ல.

லெப்டினன்ட் ஜெனரல் ஜஸ்வாலின் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் அதற்கு ஒரே ஒரு விடைதான் கிடைக்கிறது. இந்தியாவின் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தானும் சீனாவும் கைகோத்து செயல்படுவதைப் பற்றிய கேள்விகளை எழுப்பி அவர் சீன ராணுவ அதிகாரிகளைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால்தான் சீனா இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை என்று இந்தியாவைச் சுற்றியுள்ள எல்லா அண்டை நாடுகளையும் தனது நட்பு வளையத்துக்குள் சீனா கொண்டு வந்திருக்கிறது என்கிற உண்மையைப் பலமுறை நாம் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். சமீபகாலமாக, இந்துமகா சமுத்திரத்தில், குறிப்பாக டீகோ கார்சியா உள்பட பல சிறிய நாடுகளில் சீனக் கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருவதையும் நாம் எச்சரிக்கையுடன் கவனித்தாக வேண்டும்.

ஒருபுறம் சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளைக்கூடத் துச்சமாக மதிக்கும் ஆணவம் சீனாவிடம் சமீபகாலமாகக் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் "வீட்டோ' சக்தியுடனான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட சீனா, மேலாதிக்கம் செலுத்தும் எண்ணத்துடன் செயல்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் நிறையவே காணப்படுகின்றன.

சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நேசக்கரம் நீட்டுவதெல்லாம் சரி. நமது பாதுகாப்பையும், ஒருவேளை ஆக்கிரமிப்புக்கு சீனாவோ, பாகிஸ்தானோ முனைந்தால் அதை எதிர்கொள்ள வியூகங்களையும் நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோமா?

நயவஞ்சகத்தை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்களை மீண்டும் ஒருமுறை நம்பி மோசம் போய்விடுவோமோ என்று பயமாக இருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் நம்பிக்கைகூடத் தங்கள் மீது இல்லையோ என்கிற நமது நியாயமான சந்தேகம்தான் அதற்குக் காரணம்!
நன்றி : தினமணி

Saturday, August 28, 2010

போதுமே போலித்தனம்!

இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.

அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.

உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.

இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.

இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன்படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,

இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?

ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?

எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும்பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதைவாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக்கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?

தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?

ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!
நன்றி : தினமணி

Friday, August 27, 2010

அதிகாரச் சதுரங்கத்தில் ஆட்டம்போடும் மத்திய அரசு

சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றிருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். சதுரங்கம் என்பது கடந்த 25 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் உருவான ஒரு விளையாட்டு ஆகும். 64 கட்டங்களைக்கொண்ட அட்டையில் இரண்டு பேர்கள் விளையாடுவதில் வெள்ளை - கறுப்பு ஆகிய வண்ணங்களில் யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நான்கு வகைப் படைகளையும் களத்தில் நிறுத்திப் போராடுவதால், அது சதுரங்கம் என்ற பெயரைப் பெற்றது. எதிரி அரசனைச் சுற்றி வளைத்து மேலும் நகர முடியாமல் கட்டுப்படுத்துவதுதான் வெற்றியின் அறிகுறி.

இந்தியாவிலிருந்து பாரசீகம் சென்று, அரபு நாடுகளில் புகுந்து, பிறகு ஐரோப்பிய நாடுகளிலும் சதுரங்க விளையாட்டு நால்வகைப் படைப் பிரிவுகளுடன் இந்தியா வகுத்த முறையில் பரவியது, ஒவ்வொரு நாட்டிலும் சதுரங்க விளையாட்டில் பிரசித்தி பெற்றவர்கள் அரண்மனை மண்டபங்களில் மன்னர்களால் பாராட்டப்பட்டனர்.

1886-ம் ஆண்டு முதல் உலக சதுரங்க அமைப்பு என ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அதன் கீழ் பல நாடுகளில் உள்ள சதுரங்க வல்லுநர்கள் போட்டியிட்டுப் படிப்படியாக முன்னேறி, கடைசியாக இருவர் ஆடும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் உலகச் சதுரங்க முதன்மையானவராகப் பட்டம் சூட்டப்பட்டார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின், 1948-1972 காலத்தில் ரஷியர்கள் முதலிடத்தை வகித்தனர். ஆதன் பிறகு அமெரிக்காவின் பாபி பிஷர் மூன்றாண்டுகள் முதலிடம் பெற்றார். 1975 முதல் 2000 வரை ரஷியாவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் முதலிடத்தைப் பெற்றனர்.

2000-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் உலகச் சதுரங்கப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார். இந்தியாவில் தொடங்கிய சதுரங்க விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்தவர் உலக முதலிடத்தைப் பெற்றது ஆனந்த் மூலமாகத்தான்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் 1969 டிசம்பர் 11-ல் விஸ்வநாதன் - சுசீலா தம்பதியரின் மகனாக ஆனந்த் பிறந்தார். சிறு வயதிலேயே அவருடைய தாய் சதுரங்க ஆட்டத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பள்ளிப் பருவத்திலேயே சதுரங்க விளையாட்டில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றவராக, கடுமையான போட்டிகளில் எளிதாகப் பரிசுகள் பலவற்றை அவர் தட்டிச் செல்ல ஆரம்பித்தார்.

சென்னையில் டான் பாஸ்கோ பள்ளியிலும், பிறகு லயோலா கல்லூரியிலும் அவர் படித்தார். அப்பொழுதும் அவருடைய சதுரங்க விளையாட்டுத் திறமை பலரும் பாராட்டும் அளவுக்கு வளர்ந்து வந்தது. 15-ம் வயதில் உலக முதல்வர் என்ற தகுதியைப் பெற்றார், 16-வது வயதில் இந்திய தேசிய சதுரங்கப் போட்டியில் முதலிடத்தை அடைந்தார், 1987-ல் 17-வது வயதில் உலக இளைஞர் (ஜூனியர்) சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டில் உலக அளவில் மாமுதல்வர் என்ற பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியராக அவர் ஆனார்.

1993 முதல் 2000 வரை உலகச் சதுரங்கப் போட்டிகளில் பிரசித்திபெற்ற சதுரங்க மேதைகள் பலரை அலைமோதச் செய்யும் அளவுக்கு ஆனந்த்தின் திறமை வேகமாக வளர்ந்துவிட்டது.

2000-ம் ஆண்டு டெஹ்ரான் நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷியக் கூட்டாட்சியைச் சேர்ந்த லாட்வியா பகுதியில் பிறந்து பிறகு ஸ்பெயின் நாட்டுக் குடிமகனாக ஆன அலெக்சி ஷிராவ் என்பவருடன் இறுதிக் கட்டத்தில் ஆனந்த் விளையாடினார். எதிர்ப்பட்ட அலெக்சி ஷிராவை 3.5 - 0.5 என்ற வலிவான முறையில் தோற்கடித்து, உலக சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார். சதுரங்கப் போட்டியில் உலக முதன்மையாளர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஆனந்த் அடைந்தார்.

ஆயினும், 2002 உலகச் சதுரங்கப் போட்டியில் அரையிறுதிக் கட்டத்தில் ஆனந்த் தோல்வி அடைந்தார், இருப்பினும் மனம் தளராமல், தொடர்ந்து ஊக்கத்துடன் வளர்ச்சி அடைந்து, 2007-ல் உலகச் சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார்.

2008-ல் நடைபெற்ற போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த விளாடிமிர் கரமிக்கைத் தோற்கடித்து தமது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 2010-ல் நடைபெற்ற உலகப் போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலாவைத் தோற்கடித்து, உலகச் சதுரங்க விளையாட்டு அரங்கில் தனிப்பெரும் மாமன்னராக முதலிடத்தில் ஆனந்த் இருக்கிறார்.

சதுரங்க ஆட்டத்தில் உலகப் புகழும் முதலிடமும் பெற்ற ஆனந்தைப் பாராட்டும் வகையில் சிறப்பு டாக்டர் பட்டம் தர, ஐதராபாத் பல்கலைக் கழகம் முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை கடந்த ஓராண்டு காலமாக மேற்கொண்டது. ஆனந்த்தின் ஒப்புதலையும் பெற்று, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், நிர்வாக மேற்பார்வை அமைப்பினர்களும், ஆனந்த்துக்கு 2010 ஆகஸ்ட் 23-ல் ஒரு சிறப்புப் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடும் செய்துவிட்டனர். ஆனால், இதற்கு இடையில் எதிர்பாராத ஓர் இடையூறு குறுக்கிட்டது.

ஐதராபாத் பல்கலைக் கழகம் ஒரு மத்தியப் பல்கலைக் கழகமாக மத்திய அரசாங்கத்தினரால் உருவாக்கப்பட்டது. அதனால், சிறப்புப் பட்டங்களைத் தருவதற்கான ஏற்பாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சகரத்தின் அனுமதியைப் பெற வேண்டும். உலகப் புகழ்பெற்ற ஆனந்த்துக்கு டாக்டர் பட்டம் தருவதற்கான விவரங்களை மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய கல்வி அமைச்சரகத்துக்கு ஐதராபாத் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அனுப்பிவிட்டார். அனுமதி கிடைப்பதில் சிக்கல் எதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் முறையான அனுமதியை விரைவுபடுத்தும்படி பல்கலைக் கழகம் கடிதங்களையும், வேண்டுகோள்களையும் அடிக்கடி அனுப்பியபடி இருந்தது.

இடையில் மத்திய கல்வி அமைச்சரக அதிகாரி ஒருவருக்கு ஓர் ஐயப்பாடு தோன்றியதாம். விஸ்வநாதன் ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி எழுந்தது. உடனே அங்கிருந்த கல்வி நிபுணர்கள் அது பற்றி ஆராய ஆரம்பித்தார்கள். வெளிநாட்டுக்காரருக்குப் பட்டம் தருவதென்றால், வெளிவிவகார அமைச்சரகத்தின் ஒப்புதலையும் வாங்கவேண்டும் என்று மற்றோர் அரசாங்க விதிமுறை உள்ளது.

இந்தியக் குடியுரிமை பற்றிய விவகாரம் எழுந்ததும், ஆனந்தின் மனைவி அருணா ஆனந்த், கணவரின் பாஸ்போர்ட் பக்கங்களின் நகல்களை அனுப்பி வைத்தார். அத்துடன் உலகக் கணித மாநாடும் ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனந்த்துடன் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியர் டேவிட் மம்போர்டுக்கும் சேர்த்து சிறப்பு டாக்டர் பட்டங்களை அளிக்க ஐதராபாத் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்தது. அதில் கலந்துகொள்ளும் கணிதப் பேராசிரியர்கள் 40 பேருடன் தொடர்ச்சியாக ஆனந்த் சதுரங்கம் ஆடுவதற்கும் நாள் ஒதுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்றே ஆனந்த், மம்போர்டு இருவரும் ஐதராபாத் வந்துவிட்டனர். மறுநாள் பல்கலைக் கழகச் சிறப்பு டாக்டர் பட்டங்களை வழங்க ஐதராபாத் பல்கலைக் கழகம் தயாராகிவிட்டது, பட்டம் பெறுபவர்களும் வந்துவிட்டனர். ஆனால், ஞாயிறு இரவு வரை மத்திய கல்வி அமைச்சரகத்தின் அனுமதி மட்டும் வரவில்லை. தில்லியில் ஞாயிறு. பிறகு திங்கள் (ஓணம்,) செவ்வாய் (ரக்ஷô பந்தன்) விடுமுறை நாள்கள். மூன்று மாதங்கள் தூங்கிக் கிடந்த அமைச்சரகம் மூன்று நாள்களில் விழித்துக் கொள்ளுமா? அனுமதி வரவில்லை என்பதால், சிறப்புப் பட்டம் அளிப்பது நின்றது. திங்கள்கிழமை தனது விடுதியில் ஆனந்த் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

எதனையும் பொருள்படுத்தாமல், தாம் ஏற்றுக்கொண்டபடி 40 கணிதப் பேராசிரியர்களுடன் ஒருங்கிணைந்த தொடர் சதுரங்க ஆட்டங்களை செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்த் நடத்தினார்.

ஆனந்த்துக்குச் சிறப்புப் பட்டம் வழங்கும் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி நாடெங்கும் பரவியது. பரவலாகக் கண்டனக்குரல்கள் எழுந்தன.

வெளியில் கிளம்பிய கூக்குரல்களின் ஓசை கேட்டு, உறங்கிக்கிடந்த கல்வி அமைச்சரகம் கண்விழித்தது. நடந்த தவற்றுக்கு மன்னிக்கும்படி மத்திய கல்வி அமைச்சர் கபில்சிபல், ஆனந்த்திடம் மன்னிப்புக் கேட்டார். ஏதோ நடந்தது நடந்துவிட்டது அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் ஆனந்த் அமைதியாக இருந்தார்.

ஆனந்த்திடம் மட்டுமல்ல, இந்திய மக்களிடமும் மத்தியக் கல்வி அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும். நீங்கள் அவமதித்தது தனிப்பட்ட ஒருவரை மட்டுமல்ல; கோடானு கோடி இந்திய மக்களை, இந்தியாவை!

ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி ஏன் எழுந்தது என்பது தெரியவில்லை. சதுரங்கச் சக்ரவர்த்தி ஆனந்த் பற்றி கணிப்பொறியில் ஒரு தட்டுத் தட்டினால் அவருடைய வாழ்க்கை வரலாறு பல பக்கங்களுக்கு வருகின்றனவே! அவர் பிறந்த இடம், படித்த இடம் எல்லாம் தமிழ்நாட்டில்தானே! தமிழ்நாட்டையே வேறு நாட்டாருக்குத் தாரை வார்த்து விட்டார்களா?

1987-ல் ஆனந்துக்கு பத்மஸ்ரீ பட்டத்தை இந்திய அரசாங்கம் வழங்கியது. 1991-ல் அவருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டில் பத்மபூஷண் வழங்கியது.

தாம் கலந்துகொள்ளும் ஓவ்வோர் உலகப் போட்டியிலும் இந்திய தேசியக் கொடியை முன்வைத்து இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்தவர். அவருக்கு இந்திய அரசாங்கம் செய்த பெருமை, மரியாதை இவ்வளவுதான்.

சிலருக்குப் பட்டம் கிடைப்பதால் பெருமை வரலாம். ஆனால், சிலருக்குப் பட்டம் தருவதால், தரும் அமைப்புக்குப் பெருமை கிடைக்கலாம். அந்தப் பெருமையை அடைய விரும்பிய ஐதராபாத் பல்கலைக் கழகத்தை மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது.

இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்று முன்பு பலர் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது அதையும் தாண்டி இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்ற டெல்லி என்று ஆகிவிட்டதா? தெற்கு வாழ்கிறது. அதைச் சகிக்க வடக்கு மறுக்கிறது. இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும்போதாது. அமைச்சர் கபில் சிபிலும் அவரது அமைச்சரகத்தின் பொறுப்பான உயர் அதிகாரிகளும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரவர் மனசாட்சியையே கேட்டுக் கொள்ளட்டும்!
கட்டுரையாளர் : இரா.செழியன்
நன்றி : தினமணி

Thursday, August 26, 2010

பாவம், கறவை மாடுகள்

இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் தெரிவிக்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, இதை மனிதர்களுக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் கறவை மாடுகளுக்காவது கொடுத்துவிடுங்களேன் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஏனென்றால், வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் 40 விழுக்காடும், புல் போன்ற பசுந்தீவன வகைகளில் 36 விழுக்காடும், பிண்ணாக்கு போன்ற தீவன வகைகளில் 57 சதவீத விழுக்காடும் பற்றாக்குறை நிலவுகிறது என்று கால்நடைத் துறை தரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டனர். இந்தியாவில் உள்ள கறவை மாடுகளுக்குக் கிடைக்கும் தீவனம் போதுமானதாக இல்லை. மேலும், இவை தரமானதாகவும் இல்லை. ஆகவே, கறவைமாடுகள் குறைவாகப் பால் தருகின்றன என்பதுதான் அந்தக் கருத்து.

இந்தியாவில் பால் உற்பத்தி தற்போது ஆண்டுக்கு 10 கோடி டன்னாக உள்ளது. இந்த அளவினை 2022-ம் ஆண்டில் 17.2 கோடி டன்னாக உயர்த்த வேண்டும் என்று (அதாவது ஆண்டுதோறும் 4 விழுக்காடு வளர்ச்சி) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவனம் தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லாததால், கறவை மாடுகள் பால் குறைவாக கொடுக்கும் நிலைதான் நீடிக்கிறது.

பால் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் 70 சதவீதம் தீவனத்துக்கே சென்றுவிடுகிறது என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தீவனத்தின் விலையோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அண்மையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், போதுமான தீவனம் வழங்குவதுடன் பால் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

பால் ஒரு வணிகப் பொருளாக உருமாறும் முன்பு, வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். இதனால் விவசாயிக்கு தீவனம் வாங்க வேண்டிய செலவு இல்லை. சாண உரமும் கிடைத்தது. வீட்டுக்குப் பாலும் கிடைத்தது.

பால் எப்போது வணிகப் பொருளாக மாறியதோ அப்போது செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணம் செலவிட்டு தீவனம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் தீவனம் விலை உயர்ந்துவிட்டதோடு, போதுமான அளவு கிடைப்பதும் இல்லை. இதற்கு அரசின் வர்த்தகக் கொள்கைகளும் காரணம்.

எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கில் 30 விழுக்காடு புரதம் இருக்கிறது. பசுக்களுக்கு இது போதுமானது. ஆனால், மத்திய அரசு எண்ணெய் பிழியப்பட்ட பிண்ணாக்கு ஏற்றுமதிக்கு 7 சதவீதம் ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிக்கிறது. 2009-ம் ஆண்டில் ஏறக்குறைய 5,000 கோடிக்கு பிண்ணாக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. பிறகு மாடுகளுக்கு பிண்ணாக்கு எப்படி கிடைக்கும்?

மாட்டுக்கு ஏற்ற உணவுதான் தவிடு. ஆனால், தவிட்டு எண்ணெய்க்காக அரிசி ஆலைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் பிழிவுக் கூடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு மூட்டைகள். தவிட்டு எண்ணெய்க்கு மேற்கு வங்கம், சீனா, இந்திய தொழிற்சாலைகளில் வரவேற்பு அதிகம். ஆகவே, தவிடும் கிடைப்பதில்லை.

வைக்கோலை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஏற்றிச் செல்வதற்கான கூலியே இதன் விலையை உயர்த்திவிடுகிறது. ஒரு லாரியில் 4 டன்னுக்கு மேலாக ஏற்ற முடிவதில்லை. இதை தொழில்நுட்பத் திறனுடன் செங்கல்போன்ற வில்லைகளாக அழுத்தி ஏற்றினால் 10 டன் வரை லாரியில் ஏற்ற முடியும். ஆனால், இதெல்லாம் கட்டுப்படியாகவில்லை.

ஒவ்வொரு மாநில அரசும் பசுக்களின் தீவனத்துக்கான தனி நிதிஒதுக்கீடு செய்து, இதில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கறவை மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைக்கிறதா என்பதை அறியவும், அதற்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தீவனத்தைப் பரிந்துரை செய்யவும் பால்வளத் துறையில் ஊட்டச்சத்து அலுவலர்கள் இல்லை.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், தனது உறுப்பினர்களுக்காக தீவன உற்பத்தியைச் செய்கிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. சுமார் 8000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தேவைக்கும், தீவன உற்பத்திக்கும் பெரும் இடைவெளி தமிழ்நாட்டிலும் இருக்கவே செய்கிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுப் பால் உற்பத்திச் சங்கங்கள் மூலமாக நாளொன்றுக்கு 22.5 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. இதுவே நல்ல தீவனம் கிடைக்கச் செய்தால், இதே எண்ணிக்கை கறவை மாடுகளிடம் இன்னும் கூடுதலாக பால் கிடைக்கும்.

இந்தியாவில் பால் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீவனப் பற்றாக்குறையைப் போக்கி, குறைந்த விலையில் தீவனம் கிடைக்கச் செய்தால், இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதுடன் அதிகமாகவே பால் உற்பத்தி பெருகிட வழியுண்டு. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். ஆனால், அரசு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 30 ஆயிரம் டன் பால் பவுடரை சுங்கவரி விலக்கு அளித்து இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில், பிண்ணாக்குக்கு ஊக்கத்தொகை அளிப்பதோடு, எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் 4 விழுக்காடு ஊக்கத்தொகை தருகிறது.

என்னத்த சொல்ல! "மாட்டைக் கடிச்சி மனுஷனையும் கடித்த கதை' என்கிற பழமொழியைக் கொஞ்சம் மாற்றிப் போடத்தான் வேண்டியிருக்கிறது.
நன்றி : தினமணி

Wednesday, August 18, 2010

வேண்டாம் வேதாந்தம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆறுதல் தரும் இரண்டு விவகாரங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன. முதலாவதாக, நாட்டில் முறைகேடான கனிமச் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுமத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இரண்டாவது, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் விவகாரங்கள். மத்திய அரசு இப்போதுதான் ஒன்றில் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொன்றில் நடவடிக்கை எடுக்க ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் யார் காதிலோ விழுந்து ஏதோ விஷயங்கள் நடக்கவே செய்கின்றன என்பது உறுதிப்படுவதன் மூலம் இந்த விழிப்புணர்வுக் குரல்களுக்கு வலுவும் தெம்பும் ஏற்படும்.

மத்திய அரசு அமைத்துள்ள குழு, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி, இரும்பு, மக்னீசியம் தாதுக்கள் முறைகேடாகச் சுரண்டப்படுகின்றன என்பது குறித்து ஆந்திர மாநிலம், ஜார்க்கண்ட், கர்நாடகம், சத்தீஸ்கர் ஒரிசா ஆகிய இடங்களில் ஆய்வுகள் செய்து தனது அறிக்கையை அளிக்கும்.

கனிமங்களை முறைகேடாகத் தோண்டியெடுத்தல் சாத்தியமா என்ற ஐயம் எழக்கூடும். ஆம், அவை நடைபெறுகிறது என்பதும், சில இடங்களில் மாநில அரசுகளின் மறைமுக ஒத்துழைப்புடனும், சில இடங்களில் மிக ரகசியமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், ஒரு சுற்றுச்சூழல் இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறைகேடாகத் தோண்டியெடுக்கும் நிலக்கரியை இங்குள்ள ஆதிவாசிகள் மலைகளின் குறுக்கு வழியில் சுமந்து செல்கிறார்கள். இவர்களை வழிமறிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் மாமூல்போக, இவர்களது கூலியில் ஒரு நாளைக்கு ரூ.50 கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளுக்கு இது கடத்தல் என்றோ முறைகேடு என்றோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ஒருநாள் கூலி மட்டும்தான். அவர்கள் வாழ்க்கை அப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த முறைகேடான கனிமச் சுரங்கங்களும் தாதுப்பொருள் கடத்தலும் ஆதிவாசிகளின் உழைப்பைச் சுரண்டுவதும் ஒருபுறமிருக்கட்டும், அரசு அனுமதியுடன் நடைபெறும் சுரங்கங்களில்கூட, அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவு.

தற்போது கர்நாடக மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பனிப்போர் என்கிற உண்மை ஒருபுறம் இருக்க, இதில் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

உலகிலேயே மிகச் சிறந்த, தரமான இரும்புத் தாது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள ராயல்டிதொகை ஒரு டன் இரும்புத் தாதுக்கு 27. ஆனால் உலகச் சந்தையில் பெல்லாரி இரும்புத் தாதுவின் விலை டன் 6,000 முதல் 7,000 வரை. சுரங்கம் தோண்டும் செலவு, போக்குவரத்துச் செலவு, வேலையாள் கூலி, கட்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அளிக்கும் லஞ்சம் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட ஒரு டன் இரும்புத் தாதுக்கு குறைந்தது 5,000 கிடைக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. அப்படியானால், ஏன் அரசு இவ்வளவு மலிவாக ராயல்டி தொகையை நிர்ணயிக்க வேண்டும்?

இது கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, ஆந்திரம், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும்கூட, கனிமங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் உரிமத் தொகைக்கும் (ராயல்டி) இந்த தனியார் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும் குறைந்தபட்சம் 1000 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது. முதலில் இந்த வேறுபாட்டைக் களைந்தாலே அரசுக்கு மிக அதிகமான வருவாய் கிடைக்கும். முறைகேடாக கனிமங்களைச் சுரண்டுபவர்களைவிட, முறையாகச் சுரங்கம் அமைத்து சுரண்டுபவர்கள்தான் மிகமிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

ஒரிசாவில் வேதாந்தா என்கிற நிறுவனம் நியம்கிரி என்ற மலையில் தொடங்கவிருந்த பாக்ûஸட் கனிமம் தோண்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று இது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருப்பதுடன், வேதாந்தா நிறுவனம் எவ்வாறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவற்றை மீறியுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

"....இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிக்கச் செய்வதுடன், இரு பழங்குடி மக்களின் நலனுக்கு முரணாக அமையும் இந்தத் திட்டத்தை அனுமதித்தால், ஆதிவாசிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் மீதும் அவர்களது சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இன்று இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே, ஆதிவாசிகள் நம் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான்.

கனிம ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸஸ், அண்மையில் வேதாந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாகக் கூறி, 2400 ஹெக்டேர் நிலத்தை, பூரி-கொனார்க் நெடுஞ்சாலையில் வாங்கியது பெரும் பிரச்னையானதால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, இதே நிறுவனத்தின் பாக்ûஸட் திட்டத்துக்கும் எதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் மூலவர் முருகனின் நவபாஷாண சிலையின் முன்புறம் அப்படியே இருக்க பின்புறம் நிறையச் சுரண்டப்பட்டு, சிலையே பாதிப்படைந்ததாகப் புகார்கள் உண்டு. சிலையின் பின்புறத்தைப் பார்த்தவர் இல்லை. மத்திய அரசு கடுமையாகவும், நியாயமாகவும், முதுகெலும்புடனும் செயல்படாவிட்டால் இந்தியாவையும் கூட பழனியாண்டவர் நவபாஷாண சிலைகதை போல ஆக்கிவிடுவார்கள்.

எல்லாம் விதிப்பயன் என்பதுதானே வேதாந்தத்தின் அடிப்படைத் தத்துவம். வேதாந்தத்தை நம்பும் இந்தியாவுக்கு வேதாந்தம் புகட்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் கச்சை கட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. எல்லாம் விதிப்பயன், வேறென்ன?
நன்றி : தினமணி

Monday, August 16, 2010

காஷ்மீர்: பிரதமர் முனைப்புக் காட்டுவாரா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடந்துவரும் வன்முறைப் போராட்டங்களால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவது, தில்லியில் ஆளும் அதிகார வட்டத்தினருக்குப் பெருங்கவலையை அளித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு அங்கு நிலைமை மோசமாக இருப்பதைப் பரவலாக அனைத்து அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். 1989-ல் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் "ஆஸôதி' கோஷம் முதன்முதலாக எழுந்தபோது இருந்த நிலைமையைவிட இப்போது நிலைமை படுமோசமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

பெண்கள் உள்பட பெரும்பாலானவர்கள் வீதிகளில் திரண்டு பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குவதிலிருந்து அவர்களின் கோபத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அசம்பாவித சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களை முதல்வர் ஒமர் அப்துல்லா சென்று பார்த்தபோது, முதல்வரின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கேள்வி கேட்டுள்ளார் ஒரு பெண். இதிலிருந்தே காஷ்மீர் மக்களின் மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நான்காம் தலைமுறையைச் சேர்ந்த காஷ்மீரி இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டு, தடையை மீறி வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை யார் பின்னிருந்து இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் காரணமா? அல்லது பிரிவினைவாதிகள் காரணமா? அல்லது நமது அண்டை நாடான பாகிஸ்தான் காரணமா? என்பது புரியவில்லை. எனினும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களால், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பாகிஸ்தான் முயல்வது மட்டும் தெளிவாகிறது.

தற்போதைய நெருக்கடிக்கு என்ன காரணம் என்று கேட்டால், அனைத்து நிலைகளிலும் தலைமை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்லலாம். மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்தால் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதை உரிய நேரத்தில் தெரிவிக்கும் தலைவர்கள் இல்லாததும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

கடந்த தேர்தலுக்குப் பிறகு பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், இதை தில்லியில் உள்ள தலைவர்களோ, ஸ்ரீநகரில் உள்ள ஆட்சியாளர்களோ புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசை நிறுவின. உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்து அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து, எங்கே எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வலுப்பெற்றுவிடுமோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். மாநில அரசு சரிவர செயல்படாததால் மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

மாநில அரசுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார் ஹுரியத் பிரிவினைவாத அமைப்பின் தலைவரும், பாகிஸ்தான் ஆதரவாளருமான சையத் அலி ஷா கிலானி. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறையில் இருக்கும் கிலானியுடன் மாநில அரசு நிர்வாகம் பேச்சு நடத்தும் அளவுக்கு நிலைமை அங்கு முற்றிவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கிலானியுடன் பேச்சு நடத்த முயன்றும் அவர் அதை நிராகரித்துவிட்டார். கிலானியைப் போல மஸôரத் ஆலம், ஆஸிய ஆந்திரபி போன்ற தீவிரவாதத் தலைவர்களும் இப்போது காஷ்மீர் விவகாரத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர்.

காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லா பொறுப்பேற்றபோது, இளம் தலைவர், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், எதையும் சிந்தித்துப் பார்த்துச் செயல்படக்கூடியவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. ஆனால், ஒமர் அப்துல்லா, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. 2009-ம் ஆண்டு காஷ்மீர் பெண்கள் இருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தபோது மக்கள் போராட்டம் வெடித்தது. ஆனால், நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயல்பட முதல்வர் ஒமர் தவறிவிட்டார். இதேபோல கடந்த ஜூன் 11-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது இளைஞர் டஃபைல் மட்டூ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதும் பிரச்னை என்ன என்பதை அறிந்து அதற்குத் தீர்வுகாண ஒமர் அப்துல்லா தவறிவிட்டார். இதையடுத்து வன்முறையும் போராட்டமும் தொடர்கதையாகிவிட்டது.

தற்போதைய நிலைமையை முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு உதவவும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி தயாராக இல்லை. இது தொடர்பாக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் திட்டமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மாற்றாக மக்கள் ஜனநாயகக் கட்சி உருவானபோது மக்கள் பிரச்னைகளைத் தேசிய அளவில் எடுத்துச் செல்ல புதிய அரசியல் கட்சி உருவானதாகவே மக்கள் நம்பினார்கள். ஆனால், அவற்றின் செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.

வன்முறை ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், 8 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கல்வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் சுட்டதாக போலீஸôர் கூறினாலும், நிலைமையைச் சமாளிக்க அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லையா? இது விஷயத்தில் போலீஸ் துறை சரிவர செயல்படத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். போராட்டத்தின் போது இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபடுவதைத் தவிர்க்க புதிய உத்திகளைப் பாதுகாப்புப் படையினர் கையாள வேண்டுமே தவிர, அதற்காக கண்மூடித்தனமான அடக்குமுறையைக் கையாளக்கூடாது.

பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தாலும், குதிரையை லாயத்தில் கட்டிவிட்டு கதவையும் இழுத்துப் பூட்டியதுபோல் அவரது பேச்சு உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் நபராவார்.

கடந்த காலங்களில் காஷ்மீர் பிரச்னை தலைதூக்கிய போதெல்லாம் அதைச் சமாளிக்கப் பின்னாலிருந்து செயல்பட்டவர் அவர். பிரதமர் ஆவதற்கு முன் ஒரு சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தியவர்.

இப்போது இரண்டாவது முறையாக மன்மோகன் பிரதமராகியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதிலும், காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வுகாணவும் அவருக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஆனால், இன்று நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் போல் வாய் பேசாமல் மௌனமாக இருக்கிறார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆராய பணிக்குழுவை பிரதமர் நியமித்திருந்தார். மத்திய அரசும் அக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. ஆனால், அவற்றைச் செயல்படுத்தத்தான் முன்வரவில்லை.

காஷ்மீரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, வன்முறை வெடித்து தடியடி, துப்பாக்கிச்சூடு நடந்து ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்தபோதிலும், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அதற்குத் தீர்வுகாண பிரதமர் அலுவலகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு பா.ஜ.க. எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நிலைமையை எப்படி பிரதமர் சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஸ்ரீநகருக்குச் சென்றார். பயங்கரவாதிகளுடன் பேசி அவர்களை ஜனநாயகப் பாதைக்கு அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்டே வி.பி.சிங் அங்கு சென்றார். ஸ்ரீநகரில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வி.பி.சிங்கை சந்தித்துவிட்டுச் சென்றனர். ஷபீர் ஷா, தேநீர் விருந்துக்கு வருமாறு வி.பி.சிங்கை அழைத்தார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

வி.பி.சிங், ஷபீர் ஷா வீட்டுக்குச் செல்லவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் அவரிடம் புலனாய்வுத் துறை போலீஸôர், "நீங்கள் அந்த இடத்துக்குச் செல்லவேண்டாம். அப்பகுதியைச் சுற்றிலும் வெடிமருந்துகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்' என்று கூறினர். ஆனால், வி.பி.சிங், உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிட்டார். இரண்டு மணிநேரத்தில் அவை அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ஷபீர் ஷாவை சந்தித்தார் வி.பி.சிங். பின்னர் வி.பி.சிங் தனது சகாக்களிடம், பிரதமராகிய நான் ஷபீர் ஷாவுடன் தேநீர் அருந்துவதாகக் கொடுத்த வாக்கை காப்பாற்றாவிட்டால் காஷ்மீர் மக்கள் என்னை பிற விஷயங்களில் எப்படி நம்புவார்கள் என்று கேட்டார்.

இப்போது நிலைமை என்ன?

மத்திய அரசும், மாநில அரசும் துரிதமாகச் செயல்பட்டு காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மத்திய அரசு எம்.பி.க்கள் குழுவை அங்கு அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். காஷ்மீர் விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் குறிப்பாக பாஜகவுடன் விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். ஆனால். இப்போதைய தேவை காஷ்மீர் மக்களின் வலியை இதர மாநிலத்தவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான்!

கட்டுரையாளர் :நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

Wednesday, January 27, 2010

அவர்களும் தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட (இ.எஸ்.ஐ.) மருத்துவமனைகளை மேம்படுத்தவும், புதிய மருத்துவமனை வளாகங்களை உருவாக்கவும் தமிழ்நாட்டுக்கு ரூ. 890 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது, தமிழகத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளால் பயன்பெறும் தொழிலாளர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே. இதை மனதில் கொண்டு பார்க்கும்போது, இந்த மருத்துவமனையின் எல்லைக்குள் வரமுடியாத தொழிலாளர்கள் பல கோடிப் பேர் இருப்பதை உணர முடியும்.

அண்மைக்காலமாக அயல்பணி ஒப்புகை என்பது எல்லாத் தொழில்துறைக்கும் பொதுவானதாக மாறி வருகிறது. உதிரி பாகங்களைத் தனியாரிடத்தில் கொடுத்து, செய்து வாங்கி, அதைத் தொழிற்கூடத்துக்குக் கொண்டுவந்து பொருத்துகிற, பயன்படுத்துகிற நிலைமை உருவாகியுள்ளது. மேலும், நிரந்தரப் பணியாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கும் வழக்கமும் பரவலாக ஏற்பட்டுவிட்டது. இதனால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சந்தா செலுத்தி உறுப்பினராக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் இ.எஸ்.ஐ. சந்தாதாரர்கள் எண்ணிக்கை 84 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே.

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், அந்தந்தத் தொழிற்கூடங்களில் பணியாற்றும் தாற்காலிகப் பணியாளர்களுக்கும் இந்த மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதில் என்ன சிக்கல் ஏற்படக்கூடும்?

அவ்வாறு செய்வது நல்ல யோசனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசு, நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்று காரணம் சொல்கிறது. அரசு அதிகாரிகள் சொல்லும் விளக்கம் இதுதான்: இ.எஸ்.ஐ. திட்டம் என்பது தொழிலாளர், தொழிற்கூடம் இரண்டும் உறுப்பினர்களாகச் சேர்ந்து நிதிசெலுத்தும் திட்டம். இதில் தொழிலாளர் தனது சம்பளத்தில் 1.75 சதவீதத்தையும் தொழிற்கூடம் தனது பங்காக 4.75 சதவீதத்தையும் செலுத்துகின்றனர். இத்திட்டத்தில் சிகிச்சை மட்டுமன்றி, மருத்துவமனைக்கு வந்ததால் பணிக்குச் செல்ல முடியாமல் ஏற்படும் சம்பள இழப்பு, பணிக்கால விபத்தில் தாற்காலிக ஊனம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு என பல்வேறு சலுகைகள் உள்ளன. இதையெல்லாம் தாற்காலிகப் பணியாளர்களுக்குத் தரஇயலாது என்பதுதான் அரசுத் துறையின் விளக்கம்.

தாற்காலிகத் தொழிலாளர்கள் இத்தகைய இழப்பீடுகள் பெறத் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், காய்ச்சலுக்கும், சாதாரண காயங்களுக்கும் மருத்துவ ஆலோசனை பெறவும், அதற்கான மாத்திரைகளைப் பெறவும் செய்தால், அதனால் என்ன செலவு ஆகிவிடப்போகிறது? தாற்காலிகத் தொழிலாளர் இ.எஸ்.ஐ. சந்தாதாரர் இல்லையென்ற போதிலும்கூட, அவர் சார்ந்துள்ள நிறுவனம் சந்தாதாரர் என்பதால் இந்தச் சிறிய மருத்துவச் சேவையை அவர்களுக்கும் ஏன் நீட்டிக்கக்கூடாது?

மேலும், 50 ரூபாய்க்குக் குறைவாகத் தினக்கூலி பெறும் நபரிடம் சந்தா வசூலிக்காமல், அந்தத் தொழில்நிறுவனத்தின் பங்கை மட்டுமே சந்தாவாகப் பெற்று அந்தத் தொழிலாளியைச் சந்தாதாரராகக் கருதி சிகிச்சை அளிக்க வழிவகை செய்யும் சட்டம், தாற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் பதிலி தொழிலாளர்கள் விஷயத்திலும் சலுகைகளை நீட்டிக்க சில சட்டத் திருத்தங்களைச் செய்தால் என்ன? இவர்களைப்போன்றே, மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) பெற்றுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களையும் இந்த மருத்துவமனைகளில் சிறு நோய்களுக்காக மருத்துவ ஆலோசனையும் மாத்திரைகளும் பெறச் செய்தாலும் பலர் நன்மை அடைவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஊழியர்கள் குறைந்த சம்பளம் பெற்று வருவதுடன், உடல்நலம் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளையோ அல்லது தனியார் மருத்துவமனைகளையோ நாட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, காய்ச்சல், கண் பரிசோதனை போன்ற எளிய மருத்துவ ஆலோசனைகளுக்கும்கூட இத்தொழிலாளர்கள், நிறுவனத்தின் பணிநேரம் (ஷிப்ட்) காரணமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுவதோடு, தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

இத்தொழிலாளர்களுக்கு பெரிய அறுவைச் சிகிச்சை அவசியமெனில் இவர்களில் 90 சதவீதம் பேர் தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற முடியும் என்றாலும், சிறுசிறு உடல்கோளாறுகளுக்கு மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

முன்பெல்லாம் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஏற்படுத்தி நிர்வகித்தன. காலப்போக்கில், ஏதாவது ஒரு மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெறவும் அதற்கான தொகையை நிறுவனம் செலுத்துவதுமான ஏற்பாடு உண்டானது. அதன்பின்னர் எல்லாமும் மறக்கப்பட்டுவிட்டது. கோடிகோடியாக லாபம் சம்பாதிக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட, தங்கள் தொழிலாளர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவதில்லை.

இந்நிலையில், அரசுதான் இவர்களுக்கு உதவ வேண்டும். இ.எஸ்.ஐ. நிர்வாகக் குழுவில் தொழிலாளர், தொழிற்கூடம், மத்திய, மாநில அரசுகள், மருத்துவத்துறை பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய நடைமுறையைத் தமிழகம் ஒரு முன்னோடியாக அமல்படுத்தலாம். தேவைப்பட்டால், இந்தத் தொழிலாளர் சார்பில், தொழிற்கூடங்களுக்குப் பதிலாக தமிழக அரசே ஒரு தோராயமான தொகையை இ.எஸ்.ஐ.-க்கு செலுத்துவதன் மூலம் ஆட்சேபணைகளையும் இல்லாமல் செய்துவிட முடியும். நிரந்தரப் பணியாளர்கள் குறைவதால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கையும் குறைந்துவரும் நிலையில், இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்கட்டமைப்புகளை ஏன் மற்ற தொழிலாளர்களுக்காகத் திறந்துவிடக்கூடாது!
நன்றி : தினமணி

அமைதிப் பேச்சில் அர்த்தம் இல்லை

இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பாக இருநாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் அடங்கிய குழுவினர் தில்லியில் அண்மையில் கூடி ஆலோசித்துள்ளனர்.

அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க இதுதான் சரியான தருணம் என, இக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் சட்ட அமைச்சர் இக்பால் ஹைதர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்று வெறியுடன் செயல்படும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதால் பயன் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. எல்லை தாண்டி இந்தியாவுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும்வரை பேச்சுவார்த்தை கிடையாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறியது.

ஆனால், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்தவாறே உள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைப் போன்றே அண்மையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும் நடந்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள பஞ்சாப் ஹோட்டலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து 100-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்த பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தப் பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தபடி செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசி வழிநடத்தியுள்ளனர்.

மும்பையில் நடந்த தாக்குதலின்போதும் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானில் இருந்துதான் கட்டளைகள் வந்தன. இப்போதும் அதே பாணியில் தாக்குதல் நடத்திப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் திட்டம். நல்லவேளையாக காஷ்மீர் போலீஸôர் மற்றும் சி.ஆர்.பி.எப். போலீஸôரின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடிந்தது.

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியபோது அதைப் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.

முதலில் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. பின்னர் அவரை மீண்டும் கைது செய்ய அனுமதிக்கக்கோரி "அப்பீல்' செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. அந்த மனு நிலுவையில் உள்ளது.

இதேபோல, மும்பைத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாகிர் ரஹ்மான் லக்வி, அப்துல் வாஹித், மஷார் இக்பால், ஷாகித் ஜமீல் ரியாஸ், ஹமாத் இக்பால் ஆகிய 5 பயங்கரவாதிகள் மீதான வழக்கும் இழுத்தடிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாதவரை, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்தியா எச்சரித்தபோது, இந்தியாதான் அமைதிப் பேச்சைத் துண்டிப்பதாக எகிறும் பாகிஸ்தான், பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. ஸ்ரீநகர் தாக்குதல் இதற்கு ஓர் உதாரணம். இதற்கான செல்பேசி ஆதாரங்களைக் கொடுத்தாலும் பாகிஸ்தான் வழக்கம்போல மறுக்கவே செய்யும்.

இதேபோல, எல்லையிலும் சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலமுறை தாக்குதல் நடத்துகிறது பாகிஸ்தான். துப்பாக்கியால் சுடுவதுடன் இல்லாமல் ஏவுகணைத் தாக்குதலையே நடத்துகிறது.

தங்கள் மண்ணில் பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என பாகிஸ்தானை இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவும் பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், பலனில்லை.

இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஏராளமான பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வேளையில், காஷ்மீர் மாநிலத்தில் பிரீபெய்டு செல்போன் இணைப்புக்கு அனுமதி இல்லை, படைகள் குறைக்கப்படமாட்டாது என்பன உள்ளிட்ட சில உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருவது பாராட்டத்தக்கது.

""ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுத்துள்ளதாகக் கருதக்கூடாது'' என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுவதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அதேபோல, ""ஸ்ரீநகர் சம்பவத்தைக் காரணம்காட்டி காஷ்மீரிலிருந்து பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்வதை நிறுத்தக்கூடாது'' என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

தினம் தினம் குண்டுவெடிப்புகள், மனிதகுண்டு தாக்குதல்கள் என பயங்கரவாதத்தின் வலியை தானே உணர்ந்து கொண்டபோதும், பலுசிஸ்தானில் நடைபெறும் குழப்பங்களுக்கு இந்தியா தான் காரணம் என அபாண்டமாகக் குற்றம்சாட்டி விஷமத்தனத்துடன் நடந்துகொள்கிறது பாகிஸ்தான்.

அமைதிப்பேச்சைத் தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் அறிவுஜீவிகளும் மக்களும் விரும்பினாலும் ஆட்சியாளர்களுக்கு அதில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் கோரிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் உண்மையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதவரை, அமைதிப்பேச்சு என்பதற்கே அர்த்தம் இல்லை.
கட்டுரையாளர் :எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி

Saturday, January 23, 2010

நாம்தான் கிடைத்தோமா?

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் குழுதான் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூற, இல்லையில்லை இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்று அடுத்த நாளே மறுத்து நமது வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.

பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.

இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.

அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?

நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?
நன்றி : தினமணி

Friday, January 22, 2010

மனம் வெளுக்க ஒரு வாரியம்!

அன்றாட வாழ்வில் ஒருவன் பணப்பையைத் திருடிவிட்டால், அவனுக்குத் தண்டனை கிடைக்கிறது. பட்டப்பகலில் வெட்டிக் கொன்றான் என்பதற்காக ஒருவனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனைகூட விதிக்கிறது. உளவு பார்த்து, நேரம் பார்த்துத் தப்புகள் பல செய்து, திருடியோ ஏமாற்றியோ உலவும் ஒரு கள்வர் கூட்டத்தை, மொத்தமாகக் கண்டுபிடித்துக் கைவிலங்கு மாட்டிச் சிறைக்கு அனுப்புகின்றனர். "சீட்டுக் கம்பெனி' என்று தொடங்கி, பல நூறாயிரம் கோடி என மக்களை வஞ்சித்து ஏமாற்றுபவர்களைச் சட்டம் விட்டுவைப்பதில்லை. கைக்கூலி, ஊழல், லஞ்சம் எனப் பெருகிவரும் தீமைகூடச் சிலபோது அகப்பட்டுக் கொள்கிறது.

சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுத்துபவர்களையும் மாசு பரவலையும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் நாளும் எச்சரித்தபடி இருக்கிறது. ஆனால்... மனத்தை மாசுபடுத்தும் சுற்றுச்சூழலைப் பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. புறச்சூழலை மாசுபடுத்துவதற்குக்கூட, மாற்றுத் தேடி விடலாம். அகச்சூழலை மாசுபடுத்துவதால், ஒரு சமுதாயம் அழிவதை, சிறுகச் சிறுக நஞ்சூட்டிக் கொல்வதுபோல், பண்பாட்டை-நாகரிகத்தை-நாணத்தை அழிப்பதைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை; மாசுபடுத்துபவர்களைத் தண்டிக்க வழியில்லை.

÷தொலைக்காட்சிகளாலும் திரைக்காட்சிகளாலும் நன்மைகள் விளையாமல் இல்லை. கால் பங்கு நன்மை என்றால், முக்கால் பங்கு தீமை வளர்க்கப்படுகிறது; பரப்பப்படுகிறது; பல கோடி மக்களின் நெஞ்சத்தில் நச்சுக் கிருமிகள் புகுத்தப்படுகின்றன.

÷ஒரு வடஇந்தியப் படத்தின் தமிழாக்கம். அதில் சிலர் பெரியதொரு மாளிகையின் பின்பக்கமாக ஏறி, உள்ளே குதித்து, உறங்குபவர்களை மிரட்டி, கட்டி வைத்து, வெகு லாவகமாகத் திருடிச் செல்வதை அப்படியே கற்றுக்கொடுப்பதுபோல் காட்டினர். இப்படி ஒரு திருடும் விதத்தைக் கற்றுக்கொண்ட இளைஞன், சில ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்றத்தில், அப்படக் காட்சியே தனக்கு வழிகாட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

கற்பழிப்புக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். முன்பு ஒரு முரடன், ஓர் இளம்பெண்ணை விரட்டிக்கொண்டு ஓடுவான்; அவளும் ஓடுவாள். அவள் தலையிலிருந்து ஒரு பூங்கொத்து கீழே விழும். பின்னால் ஓடிவந்த "வில்லன்' காலணியில் பட்டு அது நசுங்கிப்போகும். பின்னர் அப்பெண் அலங்கோலமாகக் கிடப்பதைக் காட்டுவார்கள். இடையில் நடந்தது குறிப்பாக உணரப்படும்.

இன்று ஒரு பெண்ணை ஏமாற்றி, மலைகள், பாறைகள் உள்ள இடத்துக்குக் கடத்திப்போய், அங்கே அவளைச் சேலையை உரிவதுமுதல், மானபங்கப்படுத்துவதுவரை "செய்முறைப் பயிற்சி'போல் காட்டுகிறார்கள். இப்படியே கதையிலும் திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், ஒருவரை ஒருவர் வஞ்சித்தல், கூடஇருந்தே குழிபறிப்பது எப்படி என விலாவாரியாக, விளம்பரமாகக் கற்றுக்கொடுத்தல் என ஆயிரம் காட்சிகள் நாள்தோறும் காட்டப்படுகின்றன.

அரைகுறை ஆடைபோய், ஒரு சிறு துணி மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். இதில் கதை மட்டுமன்று, பாடல்களும் அப்படித்தான். பாடல்களுக்கேற்ற காட்சிகளா, காட்சிகளுக்கேற்ற பாடல்களா என்பதே சிக்கலான கேள்விதான். ஒட்டிக் கொள்ளவா, கட்டிக்கொள்ளவா, தொட்டுக்கொள்ளவா, கூடிப் போவலாமா, ஓடிப் போவலாமா - இப்படித்தான் - இதைவிட, வெட்கத்தைவிட்டுப் பார்க்க வேண்டிய ஆட்டமும் பாட்டமும்! இவை யாவும் பார்த்துக் கொண்டிருக்கும் பல ஆயிரம் மக்களின் மனத்தில்போய் பதியும்; அதனால் ஒட்டுமொத்த சமுதாயம் பாதிக்கப்படும்; வருங்கால இளைய சமுதாயம் கெட்டு அழியும் என்று யாரும் கவலைப்படவில்லை.

எல்லாம் மக்களை ஈர்த்து, விளம்பரங்களைப் பெருக்கிப் பணத்தைப் பெருக்கும் பேராசையின் விளைவுதான். "ஆசைக்கோர் அளவில்லை, இந்த அகிலமெல்லாம் கட்டி ஆளினும்' என்பதற்கு ஒப்ப, மேன்மேலும் தீமைகளே கண்களைக் கவரவும் கருத்தைக் கெடுக்கவும் முற்படுகின்றன.

மனம் சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. மன ஓர்மையே தியானம் எனப்படுகிறது. இறைவனை "ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே' என்பர். அதுதான் மனத்தை "உரு'வேற்றி, நல்வழிப்படுத்துவது. மேலும் மேலும் தீயவற்றையே கண்டு கேட்டு உண்டு மோந்து அதிலேயே மனம் தோய்பவன், அதன் வண்ணமாகி விடுகிறான். இது பொழுதுபோக்குக்காக என்றும், மக்கள் மன இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக என்றும் சிறிது நேரமேனும் கடும் முயற்சி, உழைப்பை மறந்து மகிழ்ச்சிப்படுத்துவத ற்காக என்றும் சமாதானம் கூற முடியாது.

இவைகளையே நல்ல முறையில் காட்டி, இவற்றை விடப் பல மடங்கு மகிழ்ச்சிப்படுத்தலாம். அதற்குக் கூடுதல் திறமை வேண்டும். இன்று பச்சையாகவும் கொச்சையாகவும் காட்டுகிறார்களே, இதற்குத் திறமை தேவையில்லை. தெருவில் போகிறவன்கூட, ஒரு திரைப்பட இயக்குநராக, கதை, உரையாடல் எழுதுபவராக, பாடலாசிரியராக ஆகிவிட முடியும்.

மனத்தை எப்பொழுதும் உயர்வை நோக்கிச் செலுத்த வேண்டும். அப்படியெல்லாம் சொன்னால் படம் ஓடாது, பணம் போய்விடும் என்பது சத்தற்ற வாதம். திறமையாளன் காட்டுப் பூவிலும் மலர் மணம் இருப்பதை, அழகு பளிச்சிடுவதைக் காட்டுவான். எத்தனை நல்ல கதைகளை, நல்ல பாடல்களை நாம் கண்டு, கேட்டு மகிழ்ந்துள்ளோம்.

இன்று இந்த ஊடகங்களால் மொழியும் சிதைக்கப்படுகிறது. ஓர் உரையாடல், பண்பலை வானொலியில், ஒரு கிராமத்துப்பெண், தான் வீட்டுவேலைதான் செய்வதாகக் கூறவே, அவளிடம் "ஓ நீங்க ஹவுஸ் ஒய்பா' என்று எதிரொலிக்கிறார் கேட்டவர். அவ்வளவுதான். அதன்பிறகு எல்லாப் பெண்களும் தத்தம் வீட்டுவேலை செய்யும் இல்லத்தரசிகளாக இருந்தும், "ஹவுஸ் ஒய்ப்' என்றே கூறத் தொடங்கி விடுகின்றனர். ஏதோ பதவி உயர்வு கிடைத்துவிட்டதாம்!

÷சமையற்கலை கற்றுக்கொடுக்கும் போதும் அது படிப்பறிவில்லாத பெண்களும் பாமர மக்களும் பார்க்கும் காட்சி என்பதை மறந்து, ரைஸ், ஸôல்ட், பெப்பர், பொட்டாடோ, டொமாட்டோ, ஸ்பூன், குவான்டிட்டி, டேஸ்டு என இவ்வாறே கூறித் தங்கள் மேதைமையை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.

சிக்மண்ட் பிராய்டு மனிதருக்கு மூன்று மனம் உண்டு என்றார் மேல் மனம், நடுமனம், ஆழ்மனம் என்று. ஆழ்மனத்தில் போய்ப் பதிவன, ஒருவரின் குருதியில் மரபணுக்களில் போய்க் கலக்கின்றன. இவையே குடிவழி, பரம்பரைக்குப் போய்த் தொடர்கின்றன. தாத்தா இசைப்பேரறிஞராய்த் திகழ்ந்தால், ஓர் இடைவெளி விட்டுப் பேரனிடம்கூட அது வெளிப்படக்கூடும். இவ்வாறே நன்மையும் தொடரும்; தீமையும் தொடரும்.

"மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்' என்பது வள்ளுவம். ஆழ்மனத்திலும் தூயவராக உள்ளவர்க்கே, நல்ல பண்புள்ள பிள்ளைகள் பிறக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். "எழுமை எழுபிறப்பு' என்பார் அவர். அதாவது இத்தகையவை ஏழு பரம்பரை வரைகூடத் தொடரக்கூடுமாம்.

இன்றைய தொலைக்காட்சிகள் பெரிதும் மனத்தை மாசுபடுத்தும், பண்பாட்டைக் கெடுக்கும், மொழியைச் சிதைக்கும் கருவிகளாகவே செயல்படுகின்றன.

இக் காட்சிகளில் பல துறை வல்லுநர்கள்கூட, அளவற்ற ஆங்கிலச் சொற்களை அள்ளி வீசிக் கலந்து பேசி, தங்களின் "மேதா விலாசத்தை' விளம்பரப்படுத்திப் பெருமை தேடிக்கொள்ள நினைக்கிறார்கள்.

இங்கிலாந்து வானொலியில், ஆங்கிலத்தில் வாசிக்கப்படும் செய்திகளைக் கேட்பவர்கள், தங்கள் ஆங்கில மொழி உச்சரிப்பையும் மொழித்திறனையும் வளர்த்துக் கொள்வர் என்று கூறப்படுவதுண்டு.

ஆயினும் இன்று நம் நாட்டில், இத் தொலைக்காட்சி, திரைக்காட்சியினர், பிற நாட்டினர்-குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நாட்டினரின்-பண்பாட்டுச் சிதைவுக்கான படப்பிடிப்புகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டே, நம் நாட்டில் இதுவரை இல்லாத சிதைவுகளையும் புகுத்துகின்றனர். நன்மைகளைவிட்டுவிட்டுத் தீமைகளையே மேய்கின்றனர்.

புற மாசுத் தடுப்பு வாரியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்போல, மனமாசுத் தடுப்புக் கழகங்களும் தோன்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் புறக்கேடுகளை, தீமைகளை ஒழிக்க முயல்வதுபோல, மனத்திற்குள் தீமைகளையே விதைக்கும் காட்சிகளைப் பரப்பும் அகச்சூழல் கேடுகளையும் தடை செய்ய வேண்டும்.

இத்தகைய தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை, போட்டி கருதி, கூடுதலாகப் பரப்புபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இம் மன மாசு பரம்பரைக்குத் தொடரும்; கொடிய தொற்றுநோய்போல ஊரெல்லாம் பரவி இவற்றை எடுத்துக்காட்டிப் பணம் குவிப்பவர்தம் குடும்பம், உறவு, பேரன், பேத்தியையும் ஒருகாலத்தில் பாதிக்கவே செய்யும். எனவே இது "தற்கொலைக்குச் சமமாகும்' என அவர்கள் உணர வேண்டும். சமுதாய ஒட்டுமொத்த மனத்துக்கு இவர்கள் போடும் "தூக்குக் கயிறு' இவர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?

இவற்றை எல்லாம் யாரைய்யா கேட்பார்கள்; நீங்கள் "பழம் பஞ்சாங்கம்' என்று யாரேனும் கூக்குரலிடலாம். அது உண்மைதான். "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்று பாடுவதுபோல் நாமும் திருப்பிப் பாட வேண்டியதுதான். ஏனெனில் சமுதாயத்தைத் திரும்ப மீட்டெடுக்க முடியாத தீமைகளை விளைவிக்கும் கொடிய தீமை இது.
கட்டுரையாளர் :தமிழண்ணல்
நன்றி : தினமணி

Thursday, January 21, 2010

கசக்கும் உண்மைகள்

வரப்போகும் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தயாரிக்கும் வேலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகத்துறையினர் ஆகியோருடனான ஆலோசனைகள் முடிந்துவிட்டன. ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட நிதித்துறை நிர்வாகிகளுடன் இப்போது ஆலோசனை நடந்து கொண்டி ருக்கிறது.

பணவீக்க விகிதமும் பட்ஜெட் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த இரண்டும்தான் முகர்ஜி இப்போது உடனே கவனித்தாக வேண்டிய முக்கிய பிரச்னைகள்.

பணவீக்க விகிதம் இப்படியே அதிகரித்துக் கொண்டே போனால் அது மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடுகளை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும். அரசியல் ரீதியாகவும் ஆளும் கூட்டணிக்குத் தேர்தலில் பெருத்த தோல்வியை வழங்கும். பட்ஜெட் பற்றாக்குறையை இப்படியே வளரவிட்டால் அது நிதி நெருக்கடியில் போய் முடியும். பணவீக்க விகிதம் என்பதை பாமர மக்கள் மொழியில் சொல்வதென்றால் விலைவாசி உயர்வுதான்.

விலைவாசி உயர்வு பற்றி ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு உள்ள கவலையும் மத்திய அரசுக்கு உள்ள கவலையும் ஒன்றல்ல. விலைவாசி உயர்வால் வாங்கும் சக்தி குறைகிறதே, சத்துள்ள காய்கறிகளையும் நல்ல உணவுப்பொருள்களையும் நிறைய வாங்க முடியவில்லையே, எவ்வளவு சம்பாதித்தாலும் சாப்பாட்டுக்கே போகிறதே என்பதுதான் ஏழை, நடுத்தர மக்களின் கவலை.

மத்திய அரசின் கவலை பொருளாதார ரீதியிலானது. பணவீக்க விகிதம் இப்படி அதிகரித்துக் கொண்டே போனால் பட்ஜெட் பற்றாக்குறை அளவு அதிகரித்துவிடுமே, வரிவிதிப்பையும் அதிகப்படுத்த முடியாதே, தொழில் - வர்த்தகத்துறைகளுக்குத் தரும் வரிச் சலுகைகளையும் இதர பணச் சலுகைகளையும் குறைக்க முடியாமல், பொருளாதார நிர்வாகம் ஆட்டம் கண்டுவிடுமே என்பதுதான்.

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் குறைவது குறித்து மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை என்று கூறிவிட முடியாது, அதே சமயம் அவர்களுடைய கவலை பட்ஜெட் பற்றாக்குறையும் இதர பொருளாதாரக் காரணிகளும்தான் என்பதை மறுக்க முடியாது. சில வேளைகளில் பணவீக்க விகிதம் அதிகரித்தால்தான் தொழில்துறையில் உற்பத்தியே சூடு பிடிக்கும் என்பதால் ஆட்சியாளர்கள் அதை வரவேற்பதும் உண்டு.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நம்முடைய நிதி அமைச்சர்கள் மக்களுடைய பிரச்னைகளை அவர்களுடைய கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் கூறும் ஆலோசனைகளைக் கேட்பதையும், தொழிலதிபர்கள் - வியாபாரிகள் கேட்கும் சலுகைகளை வழங்குவதையுமே மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இதற்கு உதாரணம் தேடி எங்கும் அலைய வேண்டாம். நாடு முழுக்க உணவு தானியங்களையும் காய்கறி, பழங்களையும் சேமித்து வைக்க போதிய உலர் கிடங்குகளும் குளிர்பதனக் கிடங்குகளும் இல்லை என்று கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் உரத்துக் கூறி வருகின்றன. ஆனால் அந்தத் திசையில் ஒரு அடியைக்கூட மத்திய அரசும் மாநில அரசுகளும் எடுத்துவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைப்பது பற்றியது. நாடு முழுக்க உள்ள ஏழைகள், பழங்குடிகள், மலைவாசி மக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள் போன்றவற்றில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் கிடைப்பதற்காகப் பொது விநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிக்கு வருகிறவர்கள் ஆமோதிக்கிறார்கள், ஆனால் அதற்காக அலட்டிக் கொள்வதே இல்லை. விலைவாசி உயர்வு குறித்து வலியுறுத்திக் கேட்டால், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் கடமை என்று தட்டிக் கழிக்கிறார்கள்.

அத்தியாவசியப் பண்டங்களில் ஊக வியாபாரத்தையும், முன்பேர வர்த்தகத்தையும் அனுமதித்துவிட்டு விலைவாசியைக் குறைப்போம் என்று கூறுவது வெறும் உதட்டளவு உறுதிமொழியாகத்தானே இருக்கிறது? அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சிறு தானியங்கள், சர்க்கரை போன்றவற்றின் விலை பல மடங்கு அதிகரித்தாலும் சாகுபடியாளர்களான விவசாயிகளுக்குக் கிடைப்பதோ அதில் நாலில் ஒரு பகுதிதான். இடைத்தரகர்களும் ஊக வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும்தான் பெரும் பங்கை விழுங்குகிறார்கள். அவர்களுடைய செல்வாக்கு காரணமாகவே அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

கரும்பு சாகுபடி செய்தால் கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. கரும்பாலைகள் தொடங்கி அரசு அமைப்புகள் வரை அனைவராலும் அலைக்கழிக்கப்படுவதே மிச்சம் என்ற விரக்தி காரணமாகவே கரும்பு சாகுபடியே இனி வேண்டாம் என்று ஏராளமான மாநிலங்களில் விவசாயிகள் அதிலிருந்து விலகி வருகின்றனர். உள்நாட்டில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைவதற்கும் இதுவே காரணம்.

கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாக முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் அரசு, கரும்புச் சாகுபடியாளர்களுக்கோ, சர்க்கரை நுகர்வோருக்கோ ஆதரவாக வலுவான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதே உண்மை. பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த போதிய நிதி இல்லை என்ற பல்லவியையே மத்திய, மாநில அரசுகள் பாடிவருகின்றன. அதே வேளையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அந்த நிதியை பொது விநியோகத் திட்டத்துக்குப் பயன்படுத்தினால்தான் என்ன?

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற தானியங்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைக்க உலர் கிடங்குகளையும் பழங்கள், காய்கறிகளைப் பதமாக வைத்திருக்க குளிர்பதனக் கிடங்குகளையும் அவரவர் தொகுதிகளில் இந்த நிதியைக் கொண்டு அமைத்துக் கொள்ளுங்கள் என்று 3 ஆண்டுகளுக்கு நிதியைத் திருப்பிவிட்டால் என்ன?

தனியார் சூப்பர் மார்க்கெட்டுகள் சங்கிலித் தொடராகக் கடைகளைத் திறப்பது சாத்தியம் என்றால் ஆயிரம் கரங்களைக் கொண்ட மத்திய, மாநில அரசுகளால் பொது விநியோகச் சங்கிலியை அமைக்க முடியாதா?

மக்களால் மக்களே மக்களை ஆளும் அரசாக இருந்தால் இது சாத்தியம்; ஊக வியாபாரிகளுக்காக ஊக வியாபாரிகளால் ஊக வியாபாரிகளே நடத்தும் அரசாக இருக்கும்போது அசாத்தியம்!
நன்றி : தினமணி

Tuesday, January 19, 2010

போதும் போலித்தனம்!

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் பல பாகங்களில்,குறிப்பாகப் பெருநகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல மருந்துக் கடைகளில் போலி மருந்துகளும்,போதை மருந்துகளும் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.போதாக்குறைக்கு,பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திருப்பித் தரப்படுவதற்குப் பதிலாக ஏமாளி வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.2000-க்கும் அதிகமான வழக்குகள் மருந்துக்கடை அதிபர்கள்மீது தொடரப்பட்டுள்ளன.

1940-ல் பிரிட்டிஷார் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட மருந்து மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம் எந்த அளவுக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது என்பது சந்தேகம்தான்.அந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது மருந்து விற்பனை செய்யும் உரிமம் பறிக்கப்படவும் செய்யலாம்,அவ்வளவே.

போலி மருந்துகள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக எல்லா மாநிலங்களிலும் தனியாக ஒரு பிரிவு மக்கள் நல்வாழ்வுத் துறையில் இருந்தாலும்,அந்தப் பிரிவு போதிய ஆள்பலம் இல்லாத,தேவையான அதிகாரம் இல்லாத ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது.தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 40 மருந்துக் கண்காணிப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏறத்தாழ 30 இடங்கள் கடந்த மாதம் வரை நிரப்பப்படாமல் இருந்தன.

சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான மருந்துக் கடைகள் இருக்கின்றன.ஆனால் மருந்துக் கண்காணிப்பாளர்கள் வெறும் 12 பேர் தான்.இவர்களுக்கு ஜீப்போ,தேவையான பணியாளர்கள் பலமோ உண்டா என்றால் அதுவும் இல்லை.இதே நிலைதான்,இந்தியா முழுவதும்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்தில்லைதான்.ஆனால் அந்த முன்னேற்றம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும்,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் பயன்படும் அளவுக்குச் சாதாரண பொதுமக்களுக்குப் பயன்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.

இந்தியாவில் மருந்து தயாரிப்புத் துறையின் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.85,000 கோடி.அதில்,சுமார் ரூ.35,000 கோடி மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.இந்த ஏற்றுமதியில் போலி மருந்துகளும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே சீனா,இந்தியாவில் தயாரித்தவை என்கிற முத்திரையுடன் உலகச் சந்தையில் போலி மருந்துகளை விநியோகித்து இந்தியாவின் ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவிலேயே போலி மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வரும்போது உலக அரங்கில் இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி நமது ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படலாம்.

இந்தியச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 3 விழுக்காடு மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றித் தகவல் அளித்தால்,கைப்பற்றப்படும் போலி மருந்துகளின் தொகையில் 20 சதவிகிதம் அல்லது ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது தெரியவில்லை.போதுமான கண்காணிப்பாளர்களும்,அவர்களுக்குத் தேவையான வசதிகளும்,ஆள்பலமும் இல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளால் என்ன பயன் இருக்க முடியும்?

மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் போலி மருந்துகளையும் போதை மருந்து விநியோகத்தையும் தடுக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?மக்கள் விழிப்புணர்வு பெறாத வரையில் ஆட்சியாளர்கள் கண்துடைப்புச் சட்டங்களைப் போட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்!
நன்றி : தினமணி