சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் 10 ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வதால், உள்ளூர் சந்தையிலும் மேலும் விலை உயரும் நிலை உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலே தங்கத்தின் விலை உயரத் துவங்கியது. புத்தாண்டு தினத்தன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.ஏழாயிரத்து 960க்கு விற்கப்பட்டது. அடுத்த நாள் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.ஏழாயிரத்து 904 ஆக குறைந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை படு வேகமாக உயர்ந்து கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி ரூ.10 ஆயிரத்து 40 ஐ எட்டியது. இதுவே அதிக பட்ச விலையாக கருதப்பட்டது. தற்போது, கடந்த 7ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.ஆயிரத்து 189 என இருந்தது அடுத்தடுத்த நாட்களில் ரூ.ஆயிரத்து 201, ரூ.ஆயிரத்து 192 என படிப்படியாக அதிகரித்தது. அதன் பிறகும் 10 மற்றும் 11ம் தேதிகளில் ரூ.ஆயிரத்து 204, ரூ.ஆயிரத்து 218 என உயர்ந்தது. 12ம் தேதி ரூ.ஆயிரத்து 232 என உயர்ந்து சவரனுக்கு ரூ.ஒன்பதாயிரத்து 856 என இருந்தது. கடந்த 15ம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.ஆயிரத்து 267 என உயர்ந்து, சவரனுக்கு ரூ.10 ஆயிரத்தை தாண்டியது. நேற்றைய தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. ஆயிரத்து 259 என, சவரனுக்கு ரூ.10 ஆயிரத்து 72 ஆக உள்ளது. கச்சா எண்ணெய்க்கு ஈடாக தங்கத்தை முதலீடு வைப்பதால், கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போதெல்லாம் தங்கத்தின் விலை பாதிக்கிறது. கடந்த வருடத்தில் இருந்து தங்கத்தின் விலை உயரத் துவங்கியது. சர்வதேச சந்தையில் உள்ள மதிப்பீட்டை வைத்தே தங்கம் விலை நிர்ணயிக்கப்படுவதும் விலை ஏற்றத்திற்கு காரணம். இந்த விலையேற்றம் குறித்து தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் எல்.கே.எஸ்.அகமது கூறுகையில், 'வெளிநாட்டில் பங்குச் சந்தையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. தவிர, கச்சா எண்ணெய் விலை உயர்வும் காரணம். அமெரிக்க டாலர் வீழ்ச்சி காரணமாக, அமெரிக்க மக்கள், தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். கடந்த ஒரு வார விலையுடன் ஒப்பிடும் போது தங்கம் விலை சவரனுக்கு சராசரியாக ரூ.480 வரை அதிகரித்துள்ளது. அதாவது 7 சதவீதம் வரை விலை உயர்வடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 983 டாலர் என உள்ளது. இது ஆயிரம் டாலரை எட்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே, தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்