Wednesday, July 1, 2009

111 புதிய விமானங்களை வாங்குவதால் தான் ஏர் - இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது : பா.ஜ.க.குற்றச்சாட்டு

111 புதிய விமானங்களை வாங்கும் திட்டம் தான் ஏர் - இந்தியாவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட காரணம் என்றும், அதனை விசாரிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. கேட்டுக்கொண்டிருக்கிறது. கடும் நெருக்கடியில் இருக்கும் தனியார் விமான கம்பெனிகள் எல்லாம் புதிதாக விமானம் வாங்கும் திட்டத்தில் இருந்து விலகி விட்டன. அல்லது அந்த திட்டத்தை தள்ளி வைத்திருக்கின்றன. ஆனால் ஏர் - இந்தியா மட்டும் இவ்வளவு நெருக்கடியிலும் கூட, புது விமானங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவது ஏன் என்று பா.ஜ.க., தலைவர்களில் ஒருவரான கிரிட் சோமையா கேள்வி எழுப்பினார். ஏர் - இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு, ரூ.55,000 கோடிக்கு புதிதாக விமானங்களை வாங்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இப்போது அந்த நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடிக்கு காரணமே இந்த விமானம் வாங்கும் திட்டம்தான் என்றார். வட்டியுடன் சேர்த்தால் அந்த தொகை ரூ.67,000 கோடி வந்து விடும் என்று சொன்ன அவர், தனியார் விமான கம்பெனிகளான ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் ஆகியவை புது விமானங்கள் வாங்கும் திட்டத்தில் இருந்து பின் வாங்கியிருக்கும்போது, ஏர் - இந்தியா மட்டும் ஏன் அதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்றார்.
நன்றி : தினமலர்


பெட்ரோல் டீசல் விலை உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை ரூ.2ம் உயர்வடைகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து பேசினார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முரளி தியோரா பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை ரூ.2ம் உயர்த்துவதாக அறிவித்தார். இந்த விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.
நன்றி : தினமலர்


எப்.எம். ரேடியோ, டீ.டி.எச். சேவைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்த பரிசீலனை

நாட்டில் எஃப்.எம். ரேடியோ மற்றும் தொலைக்காட்சி சேனல்களை நேரிடையாக வீடுகளுக்கு அளிக்கும் டீ.டி.எச். சேவை போன்ற துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்பொழுது, எஃப்.எம். ரேடியோ சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனத்தில், 20 சதவீத அளவிற்கே அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள முடியும். இந்த உச்சவரம்பை 24 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, டீ.டி.எச். சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஒன்றில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பை தற்போதைய 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தவிர, இன்டர்நெட் சேவை துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கான அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பையும் உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
நன்றி : தினமலர்


மாதம் ரூ.25 லட்சத்துக்கு மருந்து சாப்பிட்ட மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைவதற்கு முந்திய ஒரு ஆண்டு காலம், ஏகப்பட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு இருதய கோளாறு, நரம்பு தளர்ச்சி, தசை தளர்ச்சி, மன அழுத்தம், உடல் அசதி, எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற ஏராளமான நோய்கள் இருந்ததாக சொல்லப் படுகிறது. அதற்காக அவர் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஆனால் டாக்டர்கள் எழுதி கொடுத்ததை விட அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார். அதுவே அவரது உயிருக்கு எமனாக மாறியது. மைக்கேல் ஜாக்சன் சாப்பிட்ட மருந்து, மாத்திரைகள் ஆபத்தானவையாக இல்லா விட்டாலும் அவர் உட்கொண்ட அளவு ஆபத்தானது என்று அவரது குடும்ப வக்கீல் பிரையன் ஆக்ஸ்மன் கூறினார். வழங்கு விசாரணையின் போது ஜாக்சன் வலி நிவாரணி யான விக்கோடின் மாத்திரைகள் தினம் 40 உட்கொண்டதாக கூறப்படுகிறது. பல்வேறு பெயர்களில் ஜாக்சன் மருந்து, மாத்திரைகள் எழுதி வாங்கி இருக்கிறார். 2001ம் ஆண்டு மிக்கிபைன் பார்மசிக்கு ரூ. 3.5 லட்சம் பாக்கி வைத்து உள்ளார். கடைசி காலத்தில் அவர் மாத்திரை, மருந்து வகைக்கு மட்டும் மாதம் ரூ. 25 லட்சம் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


மொபைல் நம்பரை மாற்றாமலேயே வேறு ஆப்பரேட்டருக்கு மாறிக்கொள்ள டிராய் அனுமதி

மொபைல் நம்பரை மாற்றிக்கொள்ளவோ, நம்பரை மாற்றாமல் ஆப்பரேட்டரை மாற்றிக்கொள்ளவோ வாடிக்கையாளர்களுக்கு வசதியையும் உரிமையையும் டெலிபோன் ஓழுங்குறை ஆணையம் ( டிராய் ) அளித்திருக்கிறது. ஒவ்வொரு மொபைல் ஆப்பரேட்டரும் குறிப்பிட்ட ஒரு நம்பருடன் ஆரம்பிக்கும் நம்பரை மட்டுமே நமக்கு கொடுப்பார்கள். நாம் ஒரு ஆப்பரேட்டரில் இருந்து வேறு ஆப்பரேட்டருக்கு மாற விரும்பினால், அந்த புது ஆப்பரேட்டரிடம் புது நம்பரை தான் வாங்க வேண்டும்.பழைய நம்பர் நம்மை விட்டு போய் விடும். நமக்கு பழைய நம்பர் பிடித்திருந்தால் பழைய ஆப்பரேட்டரிடம்தான் இருந்தாக வேண்டும். இப்போது டிராய் கொண்டு வந்திருக்கும் புது விதிமுறைப்படி, நாம் வைத்திருக்கும் பழைய நம்பரை மாற்றாமலேயே வேறு ஆப்பரேட்டருக்கு மாறிக்கொள்ளலாம். அதே போல புதிதாக ஒரு மொபைல் நம்பரை வாங்கியிருந்து, அதை மாற்ற விரும்பினாலும் இனிமேல் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ஆக்டிவேட் செய்த 90 நாட்களுக்குள் நம்பரை மாற்ற, ஒரு விண்ணப்பம் எழுதி ஆப்பரேட்டரிடம் கொடுத்து விட்டால் போதுமானது. மாற்றிக்கொடுத்து விடுவார்கள்.
நன்றி ; தினமலர்