Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Friday, June 17, 2011

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.


""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது.

இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.

பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?

இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?

இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?
 
நன்றி : தினமணி


Friday, December 3, 2010

வெட்கம் கெட்டவர்கள்!

சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று பழமொழி கேட்டிருக்கிறோம். "திருடன் கையில் சாவி கொடுத்த கதை' என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது.


ஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன.

தாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட எல்லா முறைகேடுகளும், அமைச்சர் ஆ. ராசாவின் ஒப்புதலுடன் இவரால்தான் அரங்கேற்றப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. அதையும் மீறி, இவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, "தினமணி' உள்ளிட்ட பல நாளிதழ்கள் தலையங்கத்தில் அதை வன்மையாகக் கண்டித்தன. இந்திய சரித்திரத்திலேயே நடந்தேறியிருக்கும் மிகப்பெரிய முறைகேடுக்குத் துணைநின்றவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சட்டை செய்யாமல் மத்திய அரசு நியமித்ததே இந்த "மெகா' ஊழலை மறைக்கத்தானோ என்று அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.

இப்படி அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமையில், திருடனே தீர்ப்பெழுதுவதுபோல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரியின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் பதில் அதைவிட விசித்திரம். ""இந்திய அரசுப் பணியின் உயர்ந்த பண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், 2ஜி அலைக்கற்றை சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று பெரிய மனது பண்ணி பி.ஜே. தாமஸ் பதில் அளித்திருக்கிறார். அதாவது தான் பதவி விலகுவதாக இல்லை என்பதுதான் பதில்.

தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக இருக்கும் ஒருவரை, அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா? என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் ஏனோ எழுப்பாமல் விட்டுவிட்டிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற அரசியல் சட்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை விசாரிக்கும் உரிமை அந்தக் குழுவுக்கு இருக்குமா என்பதும் நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டச் சிக்கல். தாமûஸ இந்தப் பதவியில் அமர்த்திவிட்டால், இதுபோன்ற பல அரசியல் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளைப் பற்றிய விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எண்ணமாக இருந்ததோ என்னவோ!

தான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகத் தேவையில்லை என்று பி.ஜே.தாமஸ் கூறியிருப்பதன் பொருள், யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப்போல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இது அவருக்கும் தெரியும், அவரைப் பதவியில் நியமித்தவர்களுக்கும் தெரியும்.

இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், பொறுப்பான பதவிகளை வகித்த இந்திய அரசுப் பணியைச் சேர்ந்த ஓர் அதிகாரி கொஞ்சமாவது மானம், ரோஷம் இருந்தால் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பாரா? பதவிக்காக இந்திய அரசுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு பி.ஜே.தாமஸ் ஓர் உதாரணம்.

தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இதைவிட ஒருபடி மேலே போய், சட்ட அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையுமே கேலிக்குரியவையாக மாற்றியிருப்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிகிறது. முறையாக ஒதுக்கீடு நடத்தப்படாததால் இத்தனை கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் என்று உத்தேசக் கணக்கு கூறுகிறார்களே தவிர, நான் லஞ்சம் வாங்கினேன் என்றோ, அந்தப் பணம் எனக்குக் கிடைத்ததென்றோ யாரும் கூறவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ராசா தரப்பு வாதம். 45 நிமிட அவகாசத்தில் ரூ. 1,600 கோடிக்கான வங்கி உத்தரவாதத்துடன் எப்படி சில நிறுவனங்கள் ஒதுக்கீடு அனுமதிக்கு விண்ணப்பித்தன என்கிற கேள்விக்கும், பிரதமரின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது ஏன் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரச்னையைத் திசை திருப்பத்தான் இப்போதும் முனைகிறார் அவர்.

இதெல்லாம் போகட்டும். இந்தியப் பிரதமர் என்கிற பதவி இருக்கிறதே, உலகிலேயே மிக அதிகமான அதிகாரத்தை உடைய பதவி அதுவாகத்தான் இருக்கும். இந்த அளவு அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக்கூடக் கிடையாது. அதிகாரம் மட்டுமா, மரியாதையும், கௌரவமும் உள்ள பதவியல்லவா அது? பண்டித ஜவாஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும் அமர்ந்த நாற்காலி அது. அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?

தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது அறிவுரையைக் கேட்கவில்லை என்ற உடனேயே அவரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா? "பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னவுடன் ஒன்று மறுத்திருக்க வேண்டும், இல்லை தனது அமைச்சரவையிலிருந்து அவரை அகற்றியிருக்க வேண்டும். அரசியல் நிர்பந்தம் என்றால், தனது சுயமரியாதையைகூடக் காரணம் காட்டி, சந்திரசேகர் செய்ததுபோலத் துணிந்து பதவி விலகி இருக்க வேண்டும்.

என்ன சொல்லி என்ன பயன்? இவர்கள் எல்லாம்...

நன்றி : தினமணி 

Wednesday, August 25, 2010

முதல்வரின் மனு நீதி

இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி லண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.

மத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.

அதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.

மக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.

இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.

முதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.

ஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.

சுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.

மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?

சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா? கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா?

தன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான "தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த "தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...?
கட்டுரையாளர் : பழ.நெடுமாறன்
நன்றி : தினமணி

Wednesday, August 18, 2010

வேண்டாம் வேதாந்தம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆறுதல் தரும் இரண்டு விவகாரங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன. முதலாவதாக, நாட்டில் முறைகேடான கனிமச் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுமத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இரண்டாவது, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் விவகாரங்கள். மத்திய அரசு இப்போதுதான் ஒன்றில் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொன்றில் நடவடிக்கை எடுக்க ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் யார் காதிலோ விழுந்து ஏதோ விஷயங்கள் நடக்கவே செய்கின்றன என்பது உறுதிப்படுவதன் மூலம் இந்த விழிப்புணர்வுக் குரல்களுக்கு வலுவும் தெம்பும் ஏற்படும்.

மத்திய அரசு அமைத்துள்ள குழு, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி, இரும்பு, மக்னீசியம் தாதுக்கள் முறைகேடாகச் சுரண்டப்படுகின்றன என்பது குறித்து ஆந்திர மாநிலம், ஜார்க்கண்ட், கர்நாடகம், சத்தீஸ்கர் ஒரிசா ஆகிய இடங்களில் ஆய்வுகள் செய்து தனது அறிக்கையை அளிக்கும்.

கனிமங்களை முறைகேடாகத் தோண்டியெடுத்தல் சாத்தியமா என்ற ஐயம் எழக்கூடும். ஆம், அவை நடைபெறுகிறது என்பதும், சில இடங்களில் மாநில அரசுகளின் மறைமுக ஒத்துழைப்புடனும், சில இடங்களில் மிக ரகசியமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், ஒரு சுற்றுச்சூழல் இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறைகேடாகத் தோண்டியெடுக்கும் நிலக்கரியை இங்குள்ள ஆதிவாசிகள் மலைகளின் குறுக்கு வழியில் சுமந்து செல்கிறார்கள். இவர்களை வழிமறிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் மாமூல்போக, இவர்களது கூலியில் ஒரு நாளைக்கு ரூ.50 கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளுக்கு இது கடத்தல் என்றோ முறைகேடு என்றோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ஒருநாள் கூலி மட்டும்தான். அவர்கள் வாழ்க்கை அப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த முறைகேடான கனிமச் சுரங்கங்களும் தாதுப்பொருள் கடத்தலும் ஆதிவாசிகளின் உழைப்பைச் சுரண்டுவதும் ஒருபுறமிருக்கட்டும், அரசு அனுமதியுடன் நடைபெறும் சுரங்கங்களில்கூட, அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவு.

தற்போது கர்நாடக மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பனிப்போர் என்கிற உண்மை ஒருபுறம் இருக்க, இதில் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

உலகிலேயே மிகச் சிறந்த, தரமான இரும்புத் தாது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள ராயல்டிதொகை ஒரு டன் இரும்புத் தாதுக்கு 27. ஆனால் உலகச் சந்தையில் பெல்லாரி இரும்புத் தாதுவின் விலை டன் 6,000 முதல் 7,000 வரை. சுரங்கம் தோண்டும் செலவு, போக்குவரத்துச் செலவு, வேலையாள் கூலி, கட்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அளிக்கும் லஞ்சம் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட ஒரு டன் இரும்புத் தாதுக்கு குறைந்தது 5,000 கிடைக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. அப்படியானால், ஏன் அரசு இவ்வளவு மலிவாக ராயல்டி தொகையை நிர்ணயிக்க வேண்டும்?

இது கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, ஆந்திரம், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும்கூட, கனிமங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் உரிமத் தொகைக்கும் (ராயல்டி) இந்த தனியார் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும் குறைந்தபட்சம் 1000 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது. முதலில் இந்த வேறுபாட்டைக் களைந்தாலே அரசுக்கு மிக அதிகமான வருவாய் கிடைக்கும். முறைகேடாக கனிமங்களைச் சுரண்டுபவர்களைவிட, முறையாகச் சுரங்கம் அமைத்து சுரண்டுபவர்கள்தான் மிகமிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

ஒரிசாவில் வேதாந்தா என்கிற நிறுவனம் நியம்கிரி என்ற மலையில் தொடங்கவிருந்த பாக்ûஸட் கனிமம் தோண்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று இது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருப்பதுடன், வேதாந்தா நிறுவனம் எவ்வாறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவற்றை மீறியுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

"....இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிக்கச் செய்வதுடன், இரு பழங்குடி மக்களின் நலனுக்கு முரணாக அமையும் இந்தத் திட்டத்தை அனுமதித்தால், ஆதிவாசிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் மீதும் அவர்களது சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இன்று இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே, ஆதிவாசிகள் நம் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான்.

கனிம ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸஸ், அண்மையில் வேதாந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாகக் கூறி, 2400 ஹெக்டேர் நிலத்தை, பூரி-கொனார்க் நெடுஞ்சாலையில் வாங்கியது பெரும் பிரச்னையானதால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, இதே நிறுவனத்தின் பாக்ûஸட் திட்டத்துக்கும் எதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் மூலவர் முருகனின் நவபாஷாண சிலையின் முன்புறம் அப்படியே இருக்க பின்புறம் நிறையச் சுரண்டப்பட்டு, சிலையே பாதிப்படைந்ததாகப் புகார்கள் உண்டு. சிலையின் பின்புறத்தைப் பார்த்தவர் இல்லை. மத்திய அரசு கடுமையாகவும், நியாயமாகவும், முதுகெலும்புடனும் செயல்படாவிட்டால் இந்தியாவையும் கூட பழனியாண்டவர் நவபாஷாண சிலைகதை போல ஆக்கிவிடுவார்கள்.

எல்லாம் விதிப்பயன் என்பதுதானே வேதாந்தத்தின் அடிப்படைத் தத்துவம். வேதாந்தத்தை நம்பும் இந்தியாவுக்கு வேதாந்தம் புகட்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் கச்சை கட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. எல்லாம் விதிப்பயன், வேறென்ன?
நன்றி : தினமணி

Sunday, August 15, 2010

கைவரிசை காட்டும் கரையான்கள்!

அண்மைக்காலமாக லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்படுவது செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் அடிக்கடி இடம்பெறும் செய்தியாகிவிட்டது. லஞ்சம் தொடர்பாக எப்போதாவது ஒருவர் பிடிபட்ட காலம்போய் இன்று தினம் ஒருவர் கைதுசெய்யப்படும் நிலை. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பதுடன் இனி வாங்கிய கையும் சும்மாயிருக்காது என சேர்த்துக் கொள்ளலாம்.

லஞ்சம் வாங்கியவர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், இந்தத் துறைதான் என்பது இல்லாமல் லஞ்சம் அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது புரியும்.

தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க இயலாமலோ, விரும்பாமலோ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்து, அத்தகைய ஊழியர்களைச் சிக்கவைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது பொதுமக்களிடையே லஞ்சம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. எனினும் லஞ்சம் கொடுப்பது தவறு என்னும் விழிப்புணர்வு முழு அளவில் ஏற்படவில்லை என்பதே உண்மை.

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளையோ, ஊழியர்களையோ காட்டிக் கொடுத்தால் தனக்கு ஆகவேண்டிய காரியம் தடைபட்டுவிடுமோ என்ற ஐயமும், அச்சமுமே மேலோங்க, எவ்வளவோ செலவாகிறது ஒரு ஐநூறு, ஆயிரம் கொடுப்பதால் நமது வேலை பிரச்னை இல்லாமல் முடிந்தால் சரிதான் என எண்ணும் பொதுமக்களாலேயே லஞ்சம் லஜ்ஜையின்றி முளைவிடத் தொடங்குகிறது. பிறகு அதை நீருற்றி, வாடவிடாமல் வளர்ப்பது அத்தகைய அலுவலர்களின் பணியாகிவிடுகிறது.

சமூகத்தின் அடித்தட்டில் அன்றாடம் பிடிசோற்றுக்கு ஏங்குவோர் ஐந்துக்கும் பத்துக்கும் அடிமைகளைப்போல உழைத்து ஓடாய்த் தேய்வதைப் பார்க்கலாம்.

ஆனால், அரசாங்கப் பணி கிடைத்துவிட்ட ஒரே காரணத்துகாக குளிரூட்டப்பட்ட அறையில் வியர்க்காமல் வேலைபார்க்கும் இவர்களுக்கு, அரசு பல்லாயிரக்கணக்கில் ஊதியத்தை அள்ளி வழங்கினாலும், சிறிதும் வெட்கமின்றி புன்னகை முகத்துடன் தலை சொறிந்தபடியோ, இறுகிய முகத்துடன் வலுக்கட்டாயமாகவோ லஞ்சம் பெறுவது தவறென்பது உரைப்பதில்லை.

லஞ்சம் வாங்கியதாகக் கைதாகும் பலரும் வறுமையில் வாடிக்கொண்டிருப்போராகத் தெரியவில்லை. சொந்த வீடு, மனை, கார் என சகல வசதியுடன் சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர்களாகவே தென்படுகின்றனர். அவர்கள் லஞ்சம் வாங்கியே இவ்வளவு வசதிபெற்றனரா அல்லது உயரும் விலைவாசியைத் தான் மட்டுமன்றி, தனது பல தலைமுறையும் சமாளிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் லஞ்சம் வாங்கினரா என்பது முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா என்பதுபோல விடைதெரியாத கேள்வியாகிவிடும்.

ஆனால், இதுபோன்ற பேர்வழிகள் அனைவருமே நினைக்கும் ஒன்று, லஞ்சம் வாங்கினால் தாங்களும் கவலைகளின்றி ராசாபோல வாழலாம் என்பதே!

பலநாள் அதிர்ஷ்டம், ஒருநாள் துரதிர்ஷடமாக மாறிவிடும்போது அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால், கைதாகி அழைத்துச் செல்லப்படும்போது சிலர் வெற்றிப்புன்னகை சிந்துவதைப் பார்க்கலாம். எப்படியும் வழக்கு தனக்குச் சாதகமாகவே முடியும், இறுதியில் "தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வென்றது' என்ற டயலாக் பேச தனக்கும் ஒரு வாய்ப்புக் கிட்டும் என்பதாக இருக்கலாம்.

சிலரோ முகத்தை மூடியபடி செல்வதைப் பார்க்கலாம். அதற்கு, இந்தத் துறையில் இருந்துகொண்டு இவ்வளவு குறைந்த தொகைக்காக சிக்கிக் கொண்டோமே என்ற வெட்க உணர்வும் காரணமாக இருக்கலாம்.

"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று கும்மியடிக்கக் கூறினான் எட்டையபுரத்து எரிமலை. இருபத்தியோராம் நூற்றாண்டில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிவிடுவர், லஞ்சம் வாங்குவதில் அவர்கள் 33 அல்ல, 50 சதவிகித பங்கு வகிக்கும் காலம் வரும் எனத் தெரிந்துதான் பாரதி இப்படி பாடினானோ?

லஞ்சம் வாங்கியதாகக் கைதுசெய்யப்படும் பலரையும் பத்திரிகைகளும், ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு அன்றைய தினத்தில் மட்டும் முடிந்தளவு முக்கியச் செய்தியாக்கிவிட்டு தொடரும் சில நாள்களில் மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. விளைவு, அந்த நபர் தன் மீதான குற்றச்சாட்டையோ, வழக்குகளையோ "எதிர்கொள்ளும்விதமாய்' எதிர்கொண்டு, சில நேரங்களில் அதே துறையிலோ, வேறு துறையிலோ பதவி உயர்வுடன் மீண்டும் மக்களுக்கு வழக்கம்போலப் பணியாற்றும் வாய்ப்புபெறும் அதிர்ஷ்டத்துக்கு உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்ந்துவிடுகின்றன. சிக்கிய லஞ்சப் பணம் சாட்சி சொல்ல வருவதில்லை. அதில் சிரித்தபடியிருக்கும் காந்தியும் சாட்சி சொல்ல வருவதில்லை.

அவர்கள் விஷயத்தில் ஒருவேளை "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பது கடைப்பிடிக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

கைதாகும் ஊழியர்கள் மீது இடைநீக்கம், துறைரீதியான விசாரணை என்பன போன்ற நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்போ என நினைக்க வைக்கத் தக்கவிதத்திலேயே அமைந்துள்ளன.

நேர்மையான விசாரணை, தாமதமில்லா தீர்ப்பு, சிறை, வேலைபறிப்பு போன்ற கடுமையான தண்டனைகளை அமல்படுத்தாதவரை லஞ்சம் வாங்குவோர் எதுகுறித்தும் கவலைப்படப்போவதில்லை.

அரசை ஒரு மரம் எனக் கொண்டால் அனைத்துத் துறைகளும் கிளைகளுக்கு ஒப்பாகும். எல்லாக் கிளைகளிலுமே லஞ்சம் என்ற கரையான் தன் கைவரிசையைக் காட்டுவது இயற்கைதான். தாமதமின்றி நடவடிக்கை எடுத்து அவற்றை முற்றிலும் ஒழித்தால்தான் மரமும் வளம்பெறும்; மரத்தின் நிழலைப் பாதுகாப்பு என நம்பி நிற்கும் மக்களும் நிம்மதியாய் நலம்பெறுவர்!
கட்டுரையாளர் :மா. ஆறுமுககண்ணன்
நன்றி : தினமணி

Wednesday, December 30, 2009

தனித்திரு,​​ விழித்திரு...

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன்,​​ ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6-வது முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்.​ பார​​திய ஜனதா கட்சி ஆத​ரவு தெரி​வித்​துள்​ளது.​

மாநிலத்தின் வளத்துக்கு நிலையான ஆட்சி அவசியம் என்பதாலும்,​​ மக்கள் நலன் கருதியும் ​ இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.​ கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்போது இதைத்தானே எல்லா கட்சிகளும் சொல்லி வருகின்றன.​ அதனால் இதிலொன்றும் ஆச்சரியமில்லை.​ ​

சிபுசோரனுக்கும் முதலமைச்சர் பதவிக்கும் ராசியே கிடையாது.​ 2005-ல் முதல்வராகப் பதவியேற்றார்.​ ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பத்து நாளில் பதவியை இழக்க வேண்டியதாயிற்று.​ இரண்டாவது முறையாக 2009-ல் முதலமைச்சரானார்.​ ஆனால் அவரால் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.​ இப்போது 3-வது முறையாக முதலமைச்சராகிறார்.​ அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை,​​ நிரந்தர எதிரியும் இல்லை என்பது தெரிந்திருந்தாலும்,​​ சிபு சோரன் கூடுதலாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய,​​ சொந்த அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்கும் தகவல்-​ முதல்வர் பதவியும் நிரந்தரமில்லை.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை அமைச்சராக சிபுசோரன் பதவி வகித்தபோது,​​ அவர் மீதான கொலை வழக்கு காரணமாக,​​ அவரை அமைச்சர் பதவியிலிருந்து ​ நீக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்றத்தில் நடத்திய அமளி,​​ கூச்சல் அத்தனையும் இப்போதும் கண்முன் நிற்கிறது.​ இப்போது சிபுசோரன் தன் மீது தொடுக்கப்பட்ட இரண்டு கொலை வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார்.​ ஆகையால் அவருக்கு தங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுவதாக பாஜக சொல்லிக்கொள்ள முடியும்.

ஜார்க்கண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட நாள் முதலாக மூன்று முறை பாஜகதான் ஆட்சி அமைத்துள்ளது.​ இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக,​​ தற்போது வேறு வழியின்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.​ இதனை சிபுசோரன் நன்கு அறிவார்.​ பாஜகவின் இந்த பலவீனத்தை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

பாஜக மட்டுமன்றி அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு உள்பட நான்கு அமைப்புகளின் ஆதரவில்தான் சிபுசோரன் ஆட்சி அமையவிருக்கிறது.​ அரசியல் சட்டப்படி இத்தகைய கூட்டணி ஆட்சி சாத்தியமாக இருந்தாலும்,​​ ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் இது எத்தகைய கேடுகளை ​ ஏற்கெனவே விளைவித்திருக்கிறது என்பதற்கு முந்தைய முதலமைச்சர் மது கோடா ஒரு சாட்சி.​ அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பிலிருந்து உருவான மது கோடா,​​ காங்கிரஸ்,​​ ஜேஎம்எம் முரண்களைப் பயன்படுத்திக்கொண்டு முதலமைச்சராகி,​​ ரூ.4000 கோடி பணம் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,​​ இப்போது சிறையில் இருக்கிறார் என்பதே போதும் இந்த மாநிலத்தின் வளத்தையும் ஊழல் வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதற்கு.

ஜார்க்கண்ட் கனிம வளம் நிறைந்த மாநிலம்.​ சுமார் 2 கோடி மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்.​ இன்னமும்கூட இந்த மக்கள் மிகவும் மோசமான வறுமையில் வாழ்க்கை நடத்தும் நிலைமை மாறவில்லை.​ ​ சிபுசோரன் தன் வாழ்க்கையில் முதன்முதலாக கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளானதே,​​ பழங்குடியல்லாத வெளியாட்களே வெளியேபோ என்ற போராட்டத்தின்போது சிருடி என்ற கிராமத்தில் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்தான்.​ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சின்னமே,​​ பழங்குடியினரைக் குறிக்கும் வில்லும் அம்பும்தான்.​ பழங்குடியினருக்கான போராட்டத்தில் உதித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,​​ பழங்குடியினர் முன்னேறவில்லை.

இந்த மாநிலத்தில் உள்ள 32,620 கிராமங்களில் 45 சதவீத கிராமங்கள்தான் மின்இணைப்பு பெற்றுள்ளன.​ இன்னும் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருண்டுதான் கிடக்கின்றன.​ வெறும் 8,484 ​ கிராமங்களுக்கு மட்டுமே அணுகுசாலை இருக்கிறது.​ இந்த நிலையில் அந்த மக்களின் வாழ்க்கை,​​ கல்வி,​​ வேலைவாய்ப்பு குறித்து அதிகமாக புள்ளிவிவரங்களை அடுக்க வேண்டியதில்லை.​ சொல்லாமலே புரியும்.

கனிம வளத்தைக் கொள்ளையடிக்க வரும் பெரும் நிறுவனங்கள் ஆட்சியாளர்களை தன்வயப்படுத்தத் தவறுவதில்லை.​ ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து விலகி ​ விலகிப் போய்,​​ அடுத்த தேர்தலுக்கு மட்டுமே இறங்கி வருகிறார்கள் என்பதுதான் இம்மாநில அரசியல் நிலவரம்.​ ​

நிலைமை இப்படி இருக்கையில்,​​ இந்த மாநிலத்தில் இத்தனை கட்சிகள் ஆதரவுடன் ஒரு கட்சி தனியாக ஆட்சி அமைத்தாலோ அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலோ பல்வேறு சமரசங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது.​ சமரசங்கள் என்றால்,​​ அரசியல் அகராதியில் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?​ ​

தேசியக் கட்சியான பாஜகவுக்கு உண்மையாகவே மாநிலத்தில் நிலையான ஆட்சி மக்கள் நலன் ஆகியவைதான் முக்கியம் என்றால்,​​ ஆட்சியில் பங்கு கொள்ளாமல் அதே நேரத்தில் ஒரு கண்காணிப்பாளரைப் போல செயல்பட வேண்டும்.​ தவறு நேரும் எந்த நிமிடத்திலும் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.​ தான் ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவார்களே என்ற எண்ணத்தில் தவறுகளைச் சகித்துக் கொள்ளுமேயானால்,​​ அந்த மாநிலத்தில் பல "மது கோடா'-க்கள் வளம் பெறுவார்கள்.​ மக்கள் வளம் பெற மாட்டார்கள்.
நன்றி : தினமணி

Wednesday, December 9, 2009

ஊழ​லின் ஊற்​றுக்​கண்!

உலக ஊழல் ஒழிப்பு தினம் என்று ஆண்​டுக்​கொரு முறை ஊழ​லுக்கு எதி​ரான விழிப்​பு​ணர்வை மக்​கள் மத்​தி​யில் ஏற்​ப​டுத்​து​வது என்​பதே அவ​மா​ன​க​ர​மான விஷ​யம்.​ கொலை கொள்ளை ஒழிப்பு தினம்,​​ விப​சார ஒழிப்பு தினம்,​​ உண்மை பேசும் தினம் என்​றெல்​லாம்​கூட ஏற்​ப​டுமோ என்று பய​மாக இருக்​கி​றது.​

ஊழல் என்​பது உல​க​ளா​விய விஷ​ய​மா​கி​விட்​டது என்​ப​தால் அதை அன்​றாட வாழ்க்​கை​யின் அம்​ச​மா​கவே பெரும்​பா​லோர் ஏற்​றுக்​கொண்டு விட்​ட​தா​கத் தோன்​று​கி​றது.​ ராஜா ராணி காலத்தி​லி​ருந்து ஆட்​சி​யா​ளர்​க​ளுக்கு நெருக்​க​மாக இருந்​த​வர்​கள் அதி​கப்​ப​டி​யான சலு​கை​களை அனு​ப​விப்​பது என்​பது புதிய விஷ​ய​மல்ல.​ அதே​போல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளில் பலர் குடி​மக்​க​ளின் நல​னைப் பற்​றியே கவ​லைப்​ப​டா​மல் சகல சௌ​பாக்​கி​யங்​க​ளு​டன் ராஜ​போ​க​மாக ஊதாரி வாழ்க்கை வாழ்ந்த சரித்​தி​ரம் உல​க​ளா​விய ஒன்று.​

ஆட்​சி​யை​யும் அதி​கா​ரத்​தை​யும் ஒரு சிலர் பரம்​பரை பாத்​தி​யதை கொண்​டாடி வரு​வ​தை​யும்,​​ குடி​மக்​க​ளின் நல்​வாழ்​வைப் பற்​றிய சிந்​த​னையே இல்​லா​மல் ஆட்​சி​யா​ளர்​க​ளும் அவர்​க​ளுக்கு நெருக்​க​மா​ன​வர்​க​ளும் செயல்​பட்டு வரு​வ​தை​யும் பார்த்து மக்​கள் கொதித்து எழுந்​த​தன் விளை​வு​தான் மன்​னர் ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்​ட​தும்,​​ மக்​க​ளாட்சி மலர்ந்​த​தும்.​ நியா​ய​மா​கப் பார்த்​தால் மக்​க​ளாட்​சி​யில் லஞ்​சம்,​​ ஊழல்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​கம்,​​ ஒரு சிலர் தனிச் சலு​கை​கள் பெறு​வது போன்​ற​வற்​றுக்கே இடம் இருக்​க​லா​காது.​

ஆட்சி முறை மாறி​யதே தவிர மன்​ன​ராட்​சி​யின் தவ​று​க​ளும் குறை​பா​டு​க​ளும் களை​யப்​பட்​ட​னவா என்று கேட்​டால் உதட்​டைப் பிதுக்க வேண்டி இருக்​கி​றது.​ பரம்​பரை ஆட்​சிக்​குக்​கூட மக்​க​ளாட்​சி​யில் முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாத நிலைமை.​ ஜார் மற்​றும் பதி​னெட்​டாம் லூயி மன்​னர்​க​ளுக்​குப் பதி​லாக ஹிட்​லர்,​​ முசோ​லினி,​​ இடி அமின் என்று சர்​வா​தி​கா​ரி​க​ளும்,​​ மக்​க​ளைப் பற்​றிய கவ​லையே இல்​லா​மல் தங்​க​ளது மனம் போன போக்​கில் நடந்த ஆட்​சி​யா​ளர்​க​ளும் மக்​க​ளாட்​சி​யி​லும் தொடர்​வ​து​தான் வேடிக்கை.​

வளர்ச்சி அடைந்த நாடு​கள்,​​ வளர்ச்சி அடை​யாத நாடு​கள் என்​கிற வேறு​பாடே இல்​லா​மல்,​​ மக்​க​ளாட்சி,​​ சர்​வா​தி​கார ஆட்சி,​​ ராணுவ ஆட்சி என்​றெல்​லாம் வித்​தி​யா​சம் பாரா​மல் எங்​கும் எல்லா இடத்​தும் நீக்​க​மற நிறைந்​தி​ருக்​கும் பரம்​பொ​ருள்​போல லஞ்​ச​மும்,​​ ஊழ​லும்,​​ அதி​கார துஷ்​பி​ர​யோ​க​மும்,​​ தனி​ந​பர் சலு​கை​க​ளும் பரந்து விரிந்​தி​ருப்​பது மனித சமு​தா​யத்​துக்கே களங்​க​மா​க​வும் அவ​மா​ன​மா​க​வும் தொடர்​கி​றது.​

லஞ்ச ஊழ​லைப் பொறுத்​த​வரை ஒரு வேடிக்​கை​யான விஷ​யம் என்​ன​வென்​றால்,​​ இது படித்​த​வர்​க​ளின் தனிச்​சொத்து என்​ப​து​தான்.​ கிரா​மங்​க​ளில் படிக்​காத ஏழை விவ​சா​யியோ,​​ தொழி​லா​ளியோ லஞ்​சம் வாங்​க​வும்,​​ ஊழல் செய்​ய​வும் வாய்ப்பே இல்​லா​த​வர்​கள்.​ அரசு அலு​வ​லர்​க​ளா​னா​லும்,​​ காவல்​து​றை​யி​ன​ரா​னா​லும் அவர்​கள் படித்​த​வர்​கள்.​ அவர்​கள்​தான் லஞ்​சம் வாங்​கு​கி​றார்​கள்.​ அப்​பாவி ஏழை​க​ளும்,​​ படிப்​ப​றி​வில்​லா​த​வர்​க​ளும்,​​ சாமா​னி​யர்​க​ளும்,​​ நடுத்​தர வர்க்​கத்​தி​ன​ரும் இந்​தப் படித்த "கன'வான்​க​ளின் பேரா​சைக்​குத் தீனி போட வேண்​டிய நிர்​பந்​தம்.​

பிகா​ரில் முதல்​வர் நிதீஷ் குமார் பதவி ஏற்​ற​தும் ஊழ​லுக்கு எதி​ரா​கக் கடும் நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டார்.​ லஞ்​சம் வாங்​கும்​போது கையும் கள​வு​மா​கப் பிடி​பட்டு,​​ ​ கைது செய்​யப்​பட்ட 365 அரசு ஊழி​யர்​க​ளில் 300 பேருக்​கும் அதி​க​மா​ன​வர்​கள் கோடீஸ்​வ​ரர்​கள் என்​பது ​ விசா​ர​ணை​யில் தெரிய வந்​தது.​

கடந்த நான்கு ஆண்​டு​க​ளில்,​​ சுமார் 1000 அரசு உயர் அதி​கா​ரி​கள் மற்​றும் ஊழி​யர்​கள்​மீது வழக்​குத் தொட​ரப்​பட்​டி​ருக்​கி​றது.​ இவர்​க​ளில் சிலர் சிறைத் தண்​ட​னை​யும் அனு​ப​வித்​த​வர்​கள்.​ ஆனா​லும் இவர்​க​ளில் ஒன்​றி​ரண்டு கணக்​கர்​க​ளும்,​​ கடை​நிலை ஊழி​யர்​க​ளும் தவிர யாரும் பதவி நீக்​கம் செய்​யப்​ப​ட​வில்லை.​ வழக்​கு​கள் தொட​ரப்​பட்டு நடந்து கொண்​டி​ருக்​கின்​ற​னவே தவிர தீர்ப்பு எழு​தப்​ப​ட​வில்லை.​ இவர்​க​ளைப் பதவி நீக்​கம் செய்ய மேல​தி​கா​ரி​கள் தயா​ரு​மில்லை.​ பிகா​ரில் மட்​டு​மல்ல,​​ இந்​தியா முழு​வ​துமே உள்ள நிலைமை இது​தான்.​

ஐம்​ப​து​க​ளில் உள்​துறை அமைச்​ச​ராக இருந்த குல்​ஜா​ரி​லால் நந்​தா​வில் தொடங்கி எத்​தனை எத்​த​னையோ பிர​த​மர்​க​ளும்,​​ உள்​துறை அமைச்​சர்​க​ளும்,​​ அர​சி​யல் தலை​வர்​க​ளும் ஊழ​லுக்கு எதி​ரா​கப் போரை அறி​வித்து விளம்​ப​ரம் தேடிக் கொண்​டார்​களே தவிர ஊழல் ஒழி​ய​வும் இல்லை.​ ஊழ​லுக்கு எதி​ரான வாய் சவ​டால் குறை​ய​வு​மில்லை.​

அர​சி​யல் தலை​வர்​க​ளின் ஊழ​லைக்​கூ​டப் புரிந்து கொள்​ள​லாம்.​ தேர்​த​லுக்​குச் செலவு செய்த பணத்தை லஞ்​சம் வாங்கி ஈடு​கட்டி,​​ அடுத்த தேர்​தல்​க​ளுக்​கான பணத்​தைச் சேர்த்து வைக்க முயற்​சிக்​கி​றார்​கள் என்று சமா​தா​னம் சொல்ல முடி​யும்.​ கொள்ளை அடித்​துக் கொள்​ள​வும்,​​ லஞ்​சம் வாங்​கிக் கொள்​ள​வும் மக்​கள் அவர்​க​ளுக்கு வாக்​க​ளித்து அனு​மதி வழங்கி இருக்​கி​றார்​கள் என்று மன​தைத் தேற்​றிக் கொள்​ள​லாம்.​

ஆனால்,​​ மக்​க​ளின் வரிப்​ப​ணத்​தில் சம்​ப​ளம் வாங்​கும் அரசு அதி​கா​ரி​கள்,​​ மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது எந்த விதத்​தில் நியா​யம்?​ வாங்​கும் சம்​ப​ளம் தங்​க​ளது தகு​திக்​கும் திற​மைக்​கும் ஏற்​ற​தாக இல்​லை​யென்​றால் ராஜி​நாமா செய்​து​விட்டு வேறு வேலை பார்த்​துக் கொள்​வ​து​தானே?​ மக்​க​ளாட்​சி​யில் மக்​க​ளுக்​காக உழைப்​ப​தற்​காக மக்​க​ளால் சம்​ப​ளம் கொடுத்து நிய​மிக்​கப்​பட்​டி​ருக்​கும் வேலைக்​கா​ரர்​கள்,​​ மக்​க​ளின் கோரிக்​கையை நிறை​வேற்ற மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது தடுக்​கப்​பட்​டால் ஒழிய,​​ லஞ்​ச​மும் ஊழ​லும் அன்​றாட வாழ்க்​கை​யின் ​ அங்​க​மா​கத் தொடர்​வ​தைத் தடுக்க முடி​யாது.​

லஞ்​ச​மும் ஊழ​லும் படித்​த​வன் செய்​யும் தவறு.​ "இவ​னெல்​லாம் படித்​தால் என்ன,​​ படிக்​கா​மல் போனால் என்ன?​' என்று கேட்​கத் தோன்​று​கி​றதா?​ படிக்​கா​விட்​டால் லஞ்​சம் வாங்க முடி​யாதே...!
நன்றி : தினமணி

Wednesday, November 11, 2009

குடியாட்சி குடிகளுக்காக இல்லையா?

"மக்களின் நலன் கருதி நாங்கள் இணக்கமாகப் போய்விட்டோம்' என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளுக்கு இனிப்பூட்டி மகிழ்ந்திருக்கிறார். எந்த மக்களின் நலன் என்பதை எடியூரப்பா விரித்துரைக்கவில்லை!

ஒரு தொடர்பும் இல்லாத ஒகேனக்கல்லுக்குச் சொந்தம் கொண்டாடி வம்படி அரசியலில் ஈடுபாடு காட்டுகிற எடியூரப்பாவா, இப்படி வாலைக் குழைத்துக் கொண்டு ரெட்டி உடன்பிறப்புகளிடம் மண்டியிட்டு நிற்கிறார் என்பதை நம்ப முடியவில்லை!

ஒரு சாதாரண ஏட்டையாவாக என்றாவது ஒருநாள் ஆகிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில், நாடு விட்டு நாடு சென்று, மொழி அறியாக் கன்னட தேசத்துக் காவல்துறையில் சேர்ந்து, கண்டவனுக்கெல்லாம் "சல்யூட்' அடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட ஆந்திரத்துச் செங்கரெட்டிக்குத் தன்னுடைய மக்கள் மூவருக்கும் ஒருநாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவே "சல்யூட்' அடிப்பார் என்று கடவுளே நேரில் தோன்றிச் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டார்.

செங்கரெட்டியின் காலம் அப்படிப்பட்ட காலம்; அது நேரு நாடாண்ட காலம். சோஷலிச பாணி சமுதாயத்தை உருவாக்க நேருவுக்கு நம்முடைய ஊரான ஆவடி அடியெடுத்துக் கொடுத்த காலம்.

""டாட்டா பிர்லா கூட்டாளி, பாட்டாளிக்குப் பகையாளி'' என்ற முழக்கங்களால் பெருமுதலாளிகள் ஒரு வரையறைக்குள் வைக்கப்பட்டிருந்த காலம். ஆயினும் காலத்தின் சுழற்சியை யார் மறிக்க முடியும்? மேற்கு வங்கப் பொதுவுடைமை முதலமைச்சர் புத்ததேவ்பட்டாச்சாரியா, டாட்டா பிர்லாக்களுக்குக் கூட்டாளியாகி விடுவார் என்று யார்தான் கருதியிருக்க முடியும்?

நவீன உற்பத்தி முறைகள் தோற்றுவித்திருக்கும் "பகாசுர' முதலாளிகளிடமிருந்தும், பன்னாட்டு முதலாளிகளிடமிருந்தும் தொழிலாளி வர்க்கத்தைக் காப்பாற்றப் பிறப்பெடுத்த பொதுவுடைமைக் கட்சிகள், பிறப்பு நோக்கம் மாறி, டாட்டாக்களுக்கு ஏழை உழவர்களின் நந்திகிராமத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கப் புறப்பட்டுவிட்ட காலம்தானே, ஆந்திரத்துச் செங்கரெட்டியின் மக்கள் பெல்லாரியில் செழித்து வளர்வதற்குரிய காலமாகவும் இருக்க முடியும்.

முன்பெல்லாம் பணமுதலைகள் தங்களின் சிறுசிறு தேவைகள் நிறைவேற அரசின் தயவுக்காகக் காத்துக் கிடப்பார்கள். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்குக் குறிப்பாக ஆளும் கட்சிகளுக்குச் சிறு சிறு கொடைகள் கொடுப்பதுண்டு.

அதற்காகப் பிரதமர் நேருவைச் சந்திப்போர் பட்டியலில் டாட்டா பிர்லாக்களின் பெயர்கள் என்றுமே இடம்பெற்றது கிடையாது. அண்ணல் காந்தி அடிகள் தில்லியில் தாழ்த்தப்பட்ட மக்களின் சேரிகளிலும் தங்குவார்; பிர்லா மாளிகையிலும் தங்குவார்! ஆனால் பெருமுதலாளியான பிர்லா, காந்தியைப் பொறுத்தவரை இன்னொரு சேவாதள ஊழியர்; அவ்வளவே!
ஆனால் இன்று முதலமைச்சர்களெல்லாம் சேவாதள ஊழியர்களாகிவிட்டனர். ஆளுநரின் நெஞ்சுக்கு உகந்த நிலை நீடிக்கும் வரை ஓர் அரசு பதவியில் நீடிக்கலாம் என்பது எழுதப்பட்ட அரசியல் சட்டம். பகாசுர முதலாளிகளின் நெஞ்சுக்கு உகந்த நிலை நீடிக்கும் வரைதான் ஓர் அரசு பதவியில் நீடிக்க முடியும் என்பது இன்றைய எழுதப்படாத அரசியல் சட்டம்.

கர்நாடகத்தில் ஒருவர் முதலமைச்சராக நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பது, பெல்லாரியில் சுரங்கத் தொழில் நடத்தும் மூன்று ரெட்டி உடன்பிறப்புகள் கையில் இருப்பதை நாடு அதிர்ச்சியோடு பார்த்து உறைந்து போனது. நாட்டின் பிரதமர் நாற்காலிக்கு அறிவிக்கப்பட்ட அத்வானியால்கூட நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையே.

சிறுத்தை கவ்வி விட்ட தொடையைச் சிறுத்தையிடமே விட்டுவிட்டு, மீதி உடலோடு எப்படியோ உயிர் பிழைத்து ஓடிப் போய் மீதிக் காலத்துக்கு ஆட்சி நடத்த முயல் என்றுதானே அத்வானியாலேயே சொல்ல முடிந்தது. ரத்த ருசி கண்டுவிட்ட சிறுத்தை ஊருக்குள் மீண்டும் மீண்டும் வராதா? இது ஒரு தொடைதானே என்று முடித்துக் கொள்கிற கதையா?

இரும்புத்தாது ஏற்றிச் செல்லும் சரக்குந்து (லாரி) ஒன்றுக்குச் சுங்கவரி ஒரு நடைக்கு ஆயிரம் ரூபாய் என்று அரசு விதித்திருப்பதை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் என்பது ரெட்டி உடன்பிறப்புகள், எடியூரப்பா அரசின் தலைக்குக் கேட்ட விலைகளில் ஒன்று.

தனியொரு நிறுவனம் தனக்கு என்ன வரி விதிக்க வேண்டும்; எவ்வளவு விதிக்க வேண்டும் என்னும் உரிமையை எடுத்துக் கொள்வது என்றால், இதற்கு அரசு எதற்கு?

ஒருவன் வங்கியிலே வாங்குகிற கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை அளவுக்குப் போகிறான். தனியாள்கள் கடன் கொடுத்தால் நூறு ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய்தான் வட்டி வாங்க வேண்டும். இல்லாவிட்டால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்ட கந்துவட்டிச் சட்டம் கடன் கொடுத்தவனைச் சிறையில் தள்ளும். ஆனால் இதே சட்டம் மத்திய அரசின் பார்வையில் இயங்கும் தனியார் வங்கிகளுக்குப் பொருந்தாதாம். அந்த வங்கிகள் தனியாரைப்போல் மூன்று மடங்கு, அதாவது முப்பத்தாறு விழுக்காடுவரை வட்டி வாங்குகின்றன. கட்டத் தாமதமானால் அபராத வட்டி வேறு! இந்த வட்டியைக் கட்டவே வழியில்லை; இந்த வட்டிக்குச் சேவை வரி வேறு போட்டார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

இப்படி ஈரக்குலையை அறுக்கும்வண்ணம் வரிமேல் வரியாகப் போட்டு மக்களை அடிவரை அரசு சுரண்டுவது ஒருபக்கம். அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய வருவாயை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, அலைக்கற்றை உரிமம் போன்றவற்றை மத்திய அமைச்சர் ஆ. ராசா போன்றவர்கள் அடிமாட்டு விலைக்கு விற்றுக் கருவூலத்தின் வருவாய் வரத்தை அடைத்துவிடுவது இன்னொரு பக்கம். அதே பாணியில்தானே பெல்லாரியில் இரும்புத்தாதுச் சுரங்கங்கள் அடிமாட்டு விலைக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

அரசுக் கருவூலம் நிறைந்தால்தானே அது சாலைகளாகவும் சோலைகளாகவும் மாறும்; ஏரிகளாகவும் வாய்க்கால்களாகவும் மாறும்; மருத்துவமனைகளாகவும் பள்ளிகளாகவும் மாறும்; ஏழைகளுக்கு அளிக்கப்படும் உணவு மானியங்களாக மாறும். அரசின் வருவாய்க் கால்கள் தனியாருக்குத் திருப்பிவிடப்பட்டால், தனியாரும், அவ்வாறு திருப்பிவிட்ட மந்திரிகளும்தானே கொழுப்பார்கள்.

""எங்கள் கையில் அறுபது சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நீ ஆட்சியில் இருப்பதும் இல்லாததும் எங்கள் கையில்; எங்களுக்குச் சுங்க வரி போட நீ யார்? எங்களுக்குச் செய்யும் சேவையை ஏழுமலையானுக்குச் செய்யும் சேவையாக எண்ணி மகிழும் அதிகாரிகளை மட்டுமே பெல்லாரியில் நியமிக்க வேண்டும்; எங்களுக்குப் பாதபூஜை செய்பவர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருக்க வேண்டும். எங்களுடைய பதிலாளாக இருந்து எங்களுக்காக ஆட்சி நடத்து; இன்னோர் ஆறு மாதம் பார்ப்போம். இல்லையென்றால் உன்னுடைய லிங்காயத் ஜாதியைச் சேர்ந்த பேரவைத் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் முதலமைச்சராவார்.''

இவையெல்லாம் பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளின் வெளிப்படையான அறிவிப்புகள். கூரைமேல் ஏறிக்கொண்டு இவற்றையெல்லாம் அறிவிப்பதில் அவர்களுக்கு எந்தக் கூச்சமுமில்லை. எடியூரப்பாவின் தலையைத் தப்பச் செய்வதற்கு எல்லா நிபந்தனைகளும் தில்லி மேலிடத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதுதான் பேரவலம்.

இனி முதல்வர் எடியூரப்பாவுக்கு மக்களிடம் என்ன மதிப்பிருக்கும்; அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு வழியாகத்தான் அதிகாரிகள் நியமனம், அவர்களின் இடமாற்றம், வரி விதிப்புகள் மற்றும் முக்கிய முடிவுகளும் முடிவாகும் என்றால் முதலமைச்சர் எதற்கு? எந்த அதிகாரி எடியூரப்பாவுக்குக் கட்டுப்படுவான்? எந்த அமைச்சருக்காவது ரெட்டி உடன்பிறப்புகளை எதிர்க்கத் துணிவு வருமா? தலைமைச் செயலகம் பெங்களூரில் இருக்குமே தவிர, அரசு பீடம் பெல்லாரியில் அல்லவா இயங்கும்.

ரெட்டி உடன்பிறப்புகள் கர்நாடகத்தை வேட்டைக்காடாக்குவதற்கு உடன்பட்டுப் பதவியிலிருப்பதைவிடச் சட்டமன்றத்தைக் கலைக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மக்களைச் சந்தித்திருக்கலாமே எடியூரப்பா. அது முன்மாதிரி அரசியலாகவும் இருந்திருக்குமே.

ஒருவேளை நெறியற்ற தேவ கௌடாவும், அவருடைய மகனும், நெறிமுறையற்ற காங்கிரஸýம் ஒன்றுகூடி, ரெட்டி உடன்பிறப்புகளின் "கையாள்' ஒருவரை முதலமைச்சராக்கி, அரசமைக்கும் இழி செயலில் ஈடுபட்டால் என்ன செய்வது என்று கேட்டால், இவற்றை எதிர்கொள்வதுதானே நெறி சார்ந்த அரசியல்?

நெறிசார்ந்த அரசியலை இந்தியாவுக்குக் கற்றுக் கொடுப்பதற்குத்தானே ராமன் அவதாரம் எடுத்தான். கர்நாடகத்தை ராமராஜ்யம் ஆக்காமல், அயோத்தியில் ராமனுக்குக் கோயில் கட்டி ஆகப் போவதென்ன?

ரெட்டி உடன்பிறப்புகள் இந்த அளவுக்கு அசுர வலிமை அடைய முடிந்ததற்குக் காரணம் ஆந்திர முதல்வராக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பதவிக்கு வந்ததும், அவருடைய குடும்பத்துக்கு ரெட்டி உடன்பிறப்புகளின் சுரங்கத் தொழிலில் கணிசமான பங்கு ஏற்பட்டதும்தான்.

ஆந்திர எல்லையிலுள்ள பெல்லாரியிலிருந்து இரும்புத்தாது கடத்தல் ஆந்திரம் வழியாகத்தான் நடக்கிறது. ஆந்திரத்தில் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான அதன் முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்தபோது, அவர் வைத்துவிட்டுச் சென்ற எல்லையில்லாத பணமும், சொந்தத் தொலைக்காட்சியும், சொந்தச் செய்தித்தாள் பின்னல்களும் அடுத்து முதல்வராக வந்த ரோசய்யாவுக்கு எதிராக ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியால் ஏவப்பட்டன.

பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளின் சுரங்கத் தொழில் போன்ற பகாசுர நிறுவனங்கள் எடியூரப்பாவை மட்டுமன்று, ஆந்திர முதல்வர் ரோசய்யாவையும் தவித்துத் தண்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் முந்நூற்றைம்பதுக்கு மேற்பட்டவர்கள் பல நூறு கோடிகளுக்கு அதிபதிகள். அவர்கள் அரசியலில் இருப்பதே அம்பானிகளுக்கு நிகராகத் தங்களை உயர்த்திக் கொள்வதற்குத்தான். இவர்கள் கையில் சட்டம் செய்யும் அதிகாரம். அவர்கள் யாருக்காகச் சட்டம் செய்வார்கள்?

பாக்சைட்டையும், இரும்புத் தாதுக்களையும், கனிம வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் தவிக்கிறது மத்திய அரசு. அந்தப் பகுதிகளிலெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களும் ஆதிவாசிகளும் வாழ்கிறார்கள். டாட்டா மற்றும் எஸ்ஸôர் ஸ்டீல் அங்கே காலூன்ற அறுநூறு எழுநூறு கிராமங்களிலுள்ள மக்கள் அகதிகள் ஆக வேண்டும்.

நாட்டின் வளம் அரசுக்குச் சொந்தம்; அரசு அடிமட்ட மக்களுக்குச் சொந்தம் என்னும் நிலை இங்கு கிடையாதே.

கனிமங்களை அரசு தோண்டும்; அந்தந்தப் பகுதி மக்கள் அதன் காரணமாக ஒளி பெறுவார்கள் என்னும் நிலை இங்கு இல்லையே.

ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களின் கனிம வளங்களையும், மலைவாழ் மக்களையும் பன்னாட்டு முதலாளிகள் சூறையாடி விடாதபடி, ஊருக்கு வெளியே இருக்கும் ஐயனார்களைப்போல பாதுகாத்து நிற்பவர்களே இந்த நக்சலைட்டுகள்தானே. குடியாட்சி தீர்வாக முடியவில்லை என்னும்போது மக்கள் வேறு ஏற்பாடுகளைத் தேடிக் கொள்கிறார்கள். இது குடியாட்சியின் குற்றமா? மக்களின் குற்றமா?

சோற்றுப் பதம் பார்ப்பதுபோல் சொல்லப்பட்ட தீமைகள் சிலவே. நாட்டின் உயிர்ப்புக் கொஞ்சம் கொஞ்சமாக நாடெங்கிலுமுள்ள கயவர்களின் கையில் அடங்கிக் கொண்டிருக்கிறது. குடியாட்சி, விழி பிதுங்கி நிற்கிறது.
இன்னொரு பக்கம் நக்சலைட்டுகள் நாட்டின் நாற்பது விழுக்காடு மாவட்டங்களில் வேரூன்றி நிற்கிறார்கள். நாட்டைச் சந்தைப் பொருளாதாரத்தின் பேரால் பன்னாட்டு முதலாளிகளிடம் கூறு போடுவதற்கு இவர்களே தடை என்று மத்திய அரசு நினைக்கிறது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஜாதிக்கட்சி, மதக்கட்சி, உதிரிக்கட்சி என்று அனைத்துமே தீமைகளுக்கு முன்னால் அவிந்து அடங்கிப் போய் விடுகிறபோது, தீமையின் பலன்களைப் பங்கிட்டுக் கொள்ள முண்டி அடித்துக் கொண்டு நிற்கும்போது, குடியாட்சி குடிகளுக்காக இல்லை என்று ஆகிவிடாதா?

நாடு நக்சலைட்டுகளிடம் சென்று கொண்டிருக்கிறது என்பது ஆட்சியாளர்களின், அரசியல் தலைவர்களின் அச்சமானால், அதை ராணுவம் கொண்டு களைய முடியாது. நாட்டை அவர்களிடம் செலுத்துவதே நீங்கள்தானே!
கட்டுரையாளர் :பழ. கருப்பையா
நன்றி : தினமணி

Monday, November 2, 2009

குறைகளும் குறைய வேண்டும்

நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் தவிர மற்ற அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் அனைத்து வேலை நாட்களிலும் விநியோகம் செய்ய வேண்டும்; வெளிநபர்கள் கடைகளில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது என, அண்மையில் நடைபெற்ற வட்ட வழங்கல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.

ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைத்தான் அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் நியாயவிலைக் கடைகளில் நடப்பது என்ன?

எந்தப் பொருள் என்று விநியோகம் செய்யப்படும் என்பது கடை திறக்கப்படும் வரை தெரியாது. எல்லா கடைகளிலும் வெளிநபர் ஒருவர் அதிகாரபூர்வ விற்பனையாளர்போல மக்களை உருட்டி மிரட்டிக் கொண்டிருப்பார். தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க வரிசையாக நிற்கும்போது திடீரென கவுன்டரை மூடுவதுபோல எந்த நேரம் பொருள்கள் தீரும் எனச் சொல்ல முடியாது.

ஒவ்வொரு கடையிலும் இருப்பு இல்லாத பொருள்கள் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் வழங்கல் அலுவலகத்துக்குத் தெரிவித்து, உடனுக்குடன் பொருள்களை அனுப்பும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான கடைகளில் போலி பதிவு மூலம் பொருள்களை வெளிமார்க்கெட்டில் விற்றுவிட்டு குடும்ப அட்டைதாரர்களை ஏமாற்றுவது, இரவோடு இரவாகக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளைக் கடத்துவது போன்ற செயல்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கூடுதல் சர்க்கரை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிக் கடைகளில் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

அதே தீபாவளி தினத்தன்று அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் "சரக்குகளை' நூறு சதம் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி, அதன்படி எந்தவகை மதுபானங்களும் இல்லை என்று கூறாத அளவு விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி தினத்தன்று மட்டும் தமிழகத்தில் மதுபான விற்பனை சுமார் 250 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

நியாயவிலைக் கடைகள், டாஸ்மாக் கடைகள் இரண்டையுமே அரசுதான் நடத்துகிறது. குடிமகன்களுக்கு டாஸ்மாக் மூலம் அளிக்கப்படும் முக்கியத்துவம், குடிமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் அளிக்கப்படாதது ஏன்?

வருமானம் ஒன்றுதான் இதற்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவிநியோகத் திட்டத்தால் அரசுக்கு செலவு; டாஸ்மாக் கடைகளால் வருமானம். அதனால் அதற்கு முக்கியத்துவம். ஆனால், தனியார் நிறுவனங்களைப்போல லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்படுவது நியாயமா?

நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைச் சீரமைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை.

மாதம் ஒருமுறை "கூட்டுறவு பறக்கும் படையினர்' நியாயவிலைக் கடைகளில் சோதனை(!) நடத்துவதும், முறைகேடுகளைக் கண்டறிந்து, கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறி பத்திரிகைகளுக்கு செய்தி அளிப்பதும் மட்டும் தீர்வு தருமா?

எடுக்கும் நடவடிக்கைகள் கடை ஊழியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினால் அல்லவா அவர்கள் மீண்டும் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருப்பார்கள்?

வழங்கல் அலுவலர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதும் அமைச்சர் வேலு தந்த அறிவுரைகளில் ஒன்று.

ஆனால், வழங்கல் அலுவலகங்களில் நடப்பதோ நேரெதிர். குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், சேர்த்தல் போன்றவற்றுக்காக பொதுமக்கள் செல்லும்போது அவர்களுக்கு முறையாக பதில்சொல்லக் கூட ஆள் இருப்பதில்லை. அலைக்கழிப்பு, மன உளைச்சலுடன்தான் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.

முறைகேடுகளுக்கு நியாயவிலைக் கடை ஊழியர்கள் மட்டுமே காரணம் என்றும் கூறமுடியாது. அவர்கள் தங்கள் தரப்பில் பல்வேறு காரணங்களை எடுத்து வைக்கின்றனர். குறைவான ஊதியம் என்பதே பிரதான காரணம்.

மற்றபடி முறைகேடுகளைத் தவிர்க்க அனைத்துப் பொருள்களையுமே பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க வேண்டும் என்று நியாயவிலைக் கடை ஊழியர்களே சொல்கின்றனர். ஆனால், எல்லா பொருள்களையும் பாக்கெட்டுகளில் அடைப்பது நடைமுறை சாத்தியமற்றது என அரசு தட்டிக் கழிக்கிறது.

பொதுவிநியோகத் திட்டம் என்பது நாட்டின் மிகப் பெரிய, சிறப்பான திட்டங்களுள் ஒன்று. அதில் குறைகள் ஏற்படுவது இயல்புதான்.

ஆனால், அதை அவ்வப்போது சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் எடை குறைவது போல குறைகளும் குறைந்தால் நல்லது.
கட்டுரையாளர் :எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி

Friday, October 23, 2009

புலனாய்வுத் துறை பற்றிய புலனாய்வு!

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஒரு குற்றம் நிகழ்ந்து ஆளும்கட்சியின் அதிகாரத்துக்கு உள்பட்ட மாநில போலீஸ் நடுநிலையுடன் விசாரணை நடத்தாது எனும் எண்ணம் பொதுமக்களுக்கும், பிற கட்சியினருக்கும் ஏற்பட்டால் சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கை வலுக்கும். சில சமயங்களில் குறிப்பிட்ட வழக்கு விசாரணையை சிபிஐதான் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிடுவதையும் காண்கிறோம்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆக்ட்டீ (ஏஐசிடிஇ) எனப்படும் அகில இந்திய பொறியியல் கல்விக் கவுன்சிலின் இரண்டு உயர் அதிகாரிகளின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டு தங்கள் வருமானத்துக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனர் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் மீது கட்டுக்கடங்காத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பல தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக அந்தஸ்து பெறவும், புதிய பொறியியல் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் இந்த ஆக்ட்டீ அனுமதி அளிக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சராக இருந்த புரந்தேஸ்வரி கேபினட் அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு ஆக்ட்டீயின் ஊழல் பற்றி எழுதி, இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். அதிகாரிகள் தனது ஊழல் கூட்டாளிகள் என்பதால் கேபினட் அமைச்சர் அர்ஜுன் சிங் அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட கோப்பினைத் தனது மேஜையில் எந்த நடவடிக்கையுமின்றி கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

இந்த ஆண்டு புதிய ஆட்சி அமைந்தபின், கபில் சிபல் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரானபின் சிபிஐ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதில் இரண்டு உயர் அதிகாரிகளும் கைதானார்கள்.
இதே ஜூலை மாதம் மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சரப்ஜித் சிங் தன் தந்தையின் ஆணையத்தின் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை அவ்வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கிறேன் எனக் கூறி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரûஸ எதிர்த்து பூட்டாசிங் போட்டியிட்டதாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாரிசுகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் காங்கிரûஸ எதிர்த்து அர்ஜுன் சிங் உள்ளடி வேலைகள் செய்ததாலும் இந்த இரண்டு வழக்குகளையும் சிபிஐ கையிலெடுத்து தடாலடி கைதுகள் நடந்தேறின என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆளும் கட்சியின் பலசாலிகள் நினைத்தால் சிபிஐ வழக்குகள் பாயும் அல்லது பாய்ந்த வழக்குகள் கிடப்பில் போடப்படும் எனும் பரிதாபமான நிலைமை நம் நாட்டில் உருவாகியுள்ளது. அரசியல் காற்று எத்திசையில் அடிக்கிறதோ அதன்படி கிடப்பில் போடப்படுவதும் முடுக்கிவிடப்படுவதும் நம் நாட்டின் குற்றவியல் நடைமுறையைக் கேலிக்கூத்து ஆக்கியுள்ளது.

மற்ற நாடுகளின் மத்திய உளவுத்துறை போலீஸ் தனித்தன்மையுடன் செயல்படும்போது நமது நாட்டின் சிபிஐ மட்டும் ஆளும் கட்சியின் அடிமையானது எப்படி? 1977-ம் ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி அன்றைய இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியை பிரபல ஜீப் ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்தது. அடுத்த தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்ற பின் முதல் வேலையாக சிபிஐ நிர்வாகத்தை மத்திய உள்துறையிடமிருந்து மாற்றி பிரதமரின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தார். தான் கைது செய்யப்பட்ட தனிப்பட்ட கோபத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என அப்போதே பலரும் முணுமுணுத்தனர்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்குச் சாதகமாக முடிவெடுத்த காலகட்டத்தில், சமாஜவாதி கட்சியின் அமர்சிங், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். முலாயம்சிங் மீதான வழக்கு முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி அரசின் பழி வாங்கும் செயல் எனவும் சிபிஐ சமர்ப்பித்த வழக்கின் அறிக்கையில் 288 தவறுகள் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அன்றைய மத்திய அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜ் வெளிப்படையாக முலாயம்சிங் யாதவின் மீது தவறான ஒரு வழக்குத் திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இது அரசின் வழக்குக்குச் சாவு மணி அடிக்கும் வேலை என்பது எல்லோருக்கும் தெரியும். சட்ட அமைச்சர் ஒருவர் நடைபெற்று வரும் வழக்கைப் பற்றிய எதிர்கருத்தைக் கூறினால் அரசு எந்தவகையில் வழக்கை நடத்த முடியும் என்பது நடுநிலையாளர்களின் அன்றைய கேள்வி.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ 2007-ம் ஆண்டு பதிவு செய்தது. பின் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய சூழ்நிலையில் முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சியின் ஆதரவு மத்திய ஆளும் கூட்டணிக்குத் தேவைப்பட்டது. எந்தச் சத்தமும் இல்லாமல் மத்திய சட்டத்துறை, முலாயம்சிங் வழக்கு சம்மந்தப்பட்ட கோப்பை அன்றைய சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதியிடம் அனுப்புமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் உண்மையில்லை எனவும், சிபிஐ தவறுதலாக முலாயம்சிங்கின் சொத்துகளுடன் அவரது மனைவி மற்றும் மருமகள் பெயரிலிருந்த சொத்துகளையும் சேர்த்துவிட்டது என மிக அறிவுப்பூர்வமான ஒரு சட்ட அறிவுரையையும் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார். 2008-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, ""இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?'' என்று உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்ப வழக்கு வாய்தா பெற்றது.

இதனிடையில் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேரங்களில் சமாஜவாதி கட்சியும் காங்கிரஸýம் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியது. சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதி, ""முலாயம்சிங் சொத்து பற்றி நான் அளித்த அறிக்கை சரியானதல்ல'' என ஒரு புதிய அறிக்கையை சிபிஐ மூலம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மேல் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் முலாயம்சிங் மிகவும் திறமையுடன் சிபிஐ அதிகாரிகளுடன் தனது கட்சித் தலைவர்கள் சட்டத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்திய பேரங்கள் பற்றிய 16 ஒலிப்பதிவு சி.டி.க்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அகில இந்தியாவின் நாகரிக மனிதர்களும் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ளும் இந்நிகழ்வு நம் நாட்டின் நடுநிலை ஆட்சிமுறையை எள்ளி நகையாடச் செய்தது.

மாயாவதியின் மீதான சிபிஐ வழக்கு 2003-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. தாஜ் புராதன வழித்தடம் எனும் 175 கோடி ரூபாய் திட்டத்தில் ஊழல் நடந்ததாக வழக்கு. ஓராண்டு விசாரணைக்குப்பின் சரியான சாட்சியங்களுடன் இவ்வழக்கை நடத்த முனைந்த சிபிஐ, அன்றைய வாஜ்பாய் அரசின் தலையீட்டினால் தயக்கம் காட்டியது. பாஜக கூட்டணியுடன் மாயாவதி நட்புறவுடன் இருந்த காலம் அது.

பின்னர் மத்தியில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கூட்டணி மாயாவதியுடன் சேர்ந்து உத்தரப்பிரதேசத்தில் அரசியல் செய்ய முயற்சிகள் நடந்தன. அதேநேரத்தில் சிபிஐ தீவிரமான விசாரணை முடிவில் மாயாவதியின் மீதான தாஜ் வழித்தடத் திட்டத்தின் ஊழல் பற்றிய தகுந்த ஆதாரங்களைத் திரட்டி வைத்திருந்தது. ஆனால் காங்கிரஸ் அரசியல் காரணங்களுக்காக அன்றைய அட்டர்னி ஜெனரல் மிலின்ட் பானர்ஜி மிகவும் நகைச்சுவையான ஒரு காரணத்தைக் காட்டி மாயாவதிக்கு எதிராகத் தகுந்த ஆதாரம் இல்லை எனக் கூறினார்.

அதாவது ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆரம்பமாக காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளில் மாயாவதி கையெழுத்திடாமல் அவரது செயலர் கையெழுத்திட்டுள்ளாராம். அரசாங்கக் கோப்புகளில் குறிப்பாணையில் முதல்வரும் உத்தரவுகளில் அதிகாரிகளும் கையெழுத்திடும் நடைமுறை பாவம் படித்த மேதை அட்டர்னி ஜெனரலுக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆனால், உச்ச நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளாமல் விசாரணையைத் தொடரும்படி தேசிய ஊழல் கண்காணிப்பு ஆணையரான சிவிசிக்கு மாயாவதியின் வழக்கை மாற்றியது.

சிவிசி சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் பார்வையிட்டபின், மாயாவதியின்மீது சரியான அத்தாட்சிகள் உள்ளன எனக் கூறி வழக்கைத் தீவிரப்படுத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. அதேவேளையில் மாயாவதிக்கு காங்கிரஸýடன் மோதல் வலுக்க வழக்குத் தீவிரமடைந்துள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு என்பதை அகில உலகத்துக்கும் பறைசாற்றி, சிபிஐ மத்திய அரசின் கைப்பாவை என உறுதி செய்துள்ளது. 1980-களில் பல நடவடிக்கைகளைக் கையாண்டு, 2006-ம் ஆண்டு லண்டனில் முடக்கப்பட்ட குவாத்ரோச்சியின் வங்கிக் கணக்கை உயிரூட்டி அவர் இருபத்தொரு கோடி ரூபாயைத் தனது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள வழிவகை செய்த சிபிஐ, காங்கிரஸ் கட்சியின் ஓர் அங்கமா அல்லது மத்திய அரசின் தலையாய உளவுத்துறையா எனும் சந்தேகத்தை நடுநிலை இந்தியர்கள் மனதில் எழுப்பியுள்ளது.

மத்தியப் புலனாய்வுத் துறை, மத்திய தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், நீதித்துறை போன்றவை ஆட்சியாளர்களின் தலையீடுக்கு இடம்கொடுக்காமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று நமது அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது.

சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது. ஆனால், எந்த ஓர் அமைப்பும் முறையாகவும், துணிவாகவும் இயங்குவது என்பது அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களைப் பொறுத்துத்தான் அமையும்.

டி.என். சேஷனின் தலைமையில் மத்தியத் தேர்தல் ஆணையமும், வி.என். விட்டலின் தலைமையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் சுதந்திரமாகச் செயல்பட்டது மட்டுமல்ல, அந்த ஆணையங்களின் அதிகாரம் எத்தகையது என்பதையும் தங்களது செயல்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தினார். பதவியின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் நிலைநாட்டுவதைவிட ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக நடந்து, தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்படும்போது, மத்தியப் புலனாய்வுத் துறை மட்டுமல்ல, எல்லா துறைகளுமே செயலிழந்து விடுகின்றன என்பதுதான் உண்மை.
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி

Thursday, October 22, 2009

கோடிகளைக் குவிக்கும் குவாத்ரோச்சி!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த குடும்பத்தினரைச் சுற்றிச்சுற்றி வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறது மத்திய அரசு.

போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தில் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டால் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் மூலம் இந்தியப் பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பலின் கதை எளிதில் முடிந்துவிடும்.

அரசுத் தரப்பினரே குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு இந்த ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க நினைக்கும்போது உச்ச நீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றம்தான் நீதியை நிலைநாட்ட முடியும்?

உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஊழல் பேர்வழிகள் உச்ச நீதிமன்றமே எங்களுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது; இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி; பொய் வழக்குப் போட்டு அரசியல் ரீதியில் எங்களைப் பழிவாங்க நினைத்தவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று பேசக்கூடும்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வெளிப்படையாகவே பாதுகாத்து வந்தார். ஆனால், 1991-ம் ஆண்டு பிரதமராக வந்த பி.வி. நரசிம்மராவ், ஒருபுறம் குவாத்ரோச்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிபிஐயின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் மறுபுறம் குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பியோடவும் உதவினார்.

பின்னர் 1999-ல் குவாத்ரோச்சிக்கு நெருக்கமானவரான சோனியா காந்தி அரசியலில் நுழைந்தார். தனது நாட்டைச் சேர்ந்தவரான குவாத்ரோச்சி நேர்மையானவர் என்று சான்றிதழ் அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் சோனியா காந்தியைச் சந்தித்தபோது, போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குவாத்ரோச்சியின் பெயர் அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, "அவரைச் சந்தேகத்துக்குரிய நபராகத்தான் சிபிஐ கருதுகிறதே தவிர, அவருக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

மேலும் குவாத்ரோச்சி குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை ஆளுங்கட்சியினர்தான் (தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு) அளிக்க வேண்டும் என்றார் சோனியா. போஃபர்ஸ் விவகாரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்ற விவகாரம் ஆதாரங்களுடன் இருந்தபோதிலும் வழக்கு பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது.

இனி போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்றது, அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சற்று நினைவுபடுத்திப் பார்ப்போம்.

1985-ல் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு, பிரிட்டன், ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய மூன்றில் எந்த நாட்டு பீரங்கிகளை வாங்குவது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்தது. இந்நிலையில் சுவீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனம் இரண்டு தரகர்கள் மூலம் பேரத்தை முடிக்கத் திட்டமிட்டது. ஆனால், அதன் முயற்சி உடனடியாகப் பலிக்கவில்லை. ஆனால், அந்த ஆண்டின் பிற்பகுதியில் லண்டனைச் சேர்ந்த ஏஇ சர்வீசஸ் (ஏஇஎஸ்) என்ற நிறுவனம் போஃபர்ஸ் நிறுவனத்தை அணுகி ஆயுதப் பேரத்தைச் சுமுகமாக முடித்துத் தருவதாக உறுதியளித்தது.

அதாவது, 1986-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ஆயுத பேரத்தை முடித்துக் கொடுத்தால் 3 சதவிகித கமிஷன் தர வேண்டும் என்றும் அப்படியில்லை எனில் எதுவும் தர வேண்டாம் என்று, ஏஇஎஸ் நிறுவனம் கூறியது. இதை போஃபர்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக இரு நிறுவனத்துக்கும் இடையே 1985-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி உடன்பாடு ஏற்பட்டது.

ஏஇஎஸ் நிறுவனத்தின் பின்னணியில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ செயல்படுகிறார்கள். அவர்களால் ராஜீவ் காந்தி அரசிடமிருந்து ஆயுத விற்பனைக்கான கான்ட்ராக்டைப் பெற்றுத் தர முடியும் என்பது உறுதியாகத் தெரிந்ததால்தான் போஃபர்ஸ் நிறுவனம் அதனுடன் உடன்பாடு செய்துகொண்டது.

சொல்லிவைத்தபடியே ஏஇஎஸ் நிறுவனம் கெடு தேதிக்கு 7 நாள்கள் முன்னதாக, அதாவது மார்ச் 22-ம் தேதி ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்றுவிட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் அந்த நிறுவனம் முதல்கட்டமாக 7.3 மில்லியன் டாலரைக் கமிஷனாகப் பெற்றது. இந்தப் பேரத்துக்காக அந்த நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய தொகை 36.5 மில்லியன் டாலர். கமிஷன் பணம் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சிக்குச் சென்றதும், பேரத்தின் பின்னணியில் அவர் செயல்பட்டதும் பின்னர் தெரியவந்தது.

போஃபர்ஸ் நிறுவனம் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி, ஜூரிச்சிலுள்ள நார்டுபினான்ஸ் வங்கியில், ஏஇஎஸ் நிறுவனக் கணக்கில் (வங்கிக் கணக்கு எண்: 18051-53) 7.3 மில்லியன் டாலரைச் செலுத்தியது.

இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, அதாவது செப்டம்பர் 16-ம் தேதி ஏஇஎஸ் நிறுவனம் அதிலிருந்து 7 மில்லியன் டாலரை எடுத்து குவாத்ரோச்சி மற்றும் மரியா இருவரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கணக்கில் சேர்த்தது.

1988-ல் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்ததும் குவாத்ரோச்சியும், மரியாவும் அந்தப் பணத்தை வட்டியுடன் எடுத்து வேறு இடங்களில் மறைத்து வைத்தனர். 1988-ம் ஆண்டு ஜூலை 25-ல் 7.9 மில்லியன் டாலரை கால்பர் நிறுவனத்திலிருந்து எடுத்து ஜெனீவாவில் உள்ள வெடல்ஸன் ஓவர்சீஸ் எஸ்ஏ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 1990 மே 21-ம் தேதி 9.2 மில்லியன் டாலரை அங்கிருந்து எடுத்து சானல் தீவுகளில் உள்ள ஐஐடிசிஎல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பின்னர் அதே ஆண்டு ஜூன் 5-ம் தேதி 2.4 மில்லியன் டாலரை ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து கார்ஃபின்கோ என்ற வங்கியில் ரோபஸ்டா என்ற ரகசியக் கணக்கில் போட்டனர். ஜூன் 12-ம் தேதி 5.3 மில்லியன் டாலர் ஆஸ்திரியாவில் உள்ள வங்கியில் "அராபிகா', "ரொபஸ்டா', "லக்ஸர்' என்ற ரகசிய கணக்கில் போடப்பட்டது.

பின்னர் 2003 ஜூனில் இன்டர்போல் அமைப்பு குவாத்ரோச்சி, மரியா இருவருக்கும் லண்டனில் உள்ள ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகள் 5அ5151516க, 5அ5151516ங மூலம் முறையே 3 மில்லியன் டாலர், 1 மில்லியன் டாலர் இருப்பதைக் கண்டுபிடித்தது. சிபிஐ வேண்டுகோளின் பெயரில் இவ்விரு கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதன்முறையாகப் பதவியேற்றதும் செய்த முதல்வேலை முடக்கி வைக்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கை விடுவித்ததுதான். அடுத்த கட்டமாக ஆர்ஜென்டினாவில் பிடித்து வைக்கப்பட்ட குவாத்ரோச்சி தப்பிக்க வழிசெய்தது.

இப்போது இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போஃபர்ஸ் ஊழல் வழக்கை முழுமையாகக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன். குவாத்ரோச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல; இந்த விவகாரத்தின் மூலம் சோனியாவுக்கு எந்தத் தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணம்தான் முக்கிய காரணம்.

1993-ல் குவாத்ரோச்சியின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையின்போது சோனியா, மரியா, குவாத்ரோச்சி ஆகிய மூவரும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் எனத் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் விடுமுறையை ஒன்றாகக் கழித்ததும், ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டதும், ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், ஒருவரின் குழந்தைகள் மற்றொருவர் அரவணைப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் மேலும் சிக்கல் ஏற்படுமே என்பது தெரிந்துதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த வழக்கைக் கைவிட முடிவு செய்தது.

சுவீடனில் போஃபர்ஸ் வழக்கை விசாரித்த சுவீடன் நாட்டுப் புலனாய்வு அதிகாரியான ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரிக்க வேண்டும், அவருக்கும் குவாத்ரோச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே இந்திய அரசிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அதுகுறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த வழக்கை மூடிமறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

இப்போது உள்ள இளந்தலைமுறையினர் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் வெளியானபோது குழந்தைகளாக இருந்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு போஃபர்ஸ் ஊழல் 320 மில்லியன் டாலர் தொடர்புடையது என்பது தெரியாது. ஏஇஎஸ் நிறுவனத்துக்கான கமிஷன் 36.5 மில்லியன் டாலர் தொகையும் இதில் அடங்கும். இந்த ஊழல் விவகாரம் வெளியானபோது 20 சதவிகிதத் தொகையே அதாவது 64 மில்லியன் டாலரே வழங்கப்பட்டிருந்தது. ஆயுத ஒப்பந்தத்துக்கான மொத்தத் தொகையில் அப்போது இந்திய அரசு 20 சதவிகிதம் மட்டுமே கொடுத்திருந்ததால் அப்போது வழங்கப்பட்ட கமிஷன் தொகையும் 20 சதவிகிதம்தான். இந்த ஊழல் விவகாரம் வெளியானதால் இந்திய அரசு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டது. இதையடுத்து கமிஷன் பணமும் கொடுக்கப்படவில்லை.

இப்போது குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் போஃபர்ஸ் நிறுவனத்துக்குச் சேரவேண்டிய 227 மில்லியன் டாலரும், குவாத்ரோச்சிக்கு கமிஷன் பாக்கி 29 மில்லியன் டாலரும் கிடைக்க வழியேற்பட்டுள்ளது.

அதாவது குவாத்ரோச்சிக்கு 29 மில்லியன் டாலர் கமிஷனாகக் கிடைக்கும் என்றால் இந்திய ரூபாயில் அவருக்குக் கிடைக்க இருப்பது ரூ. 140 கோடி. இந்த ஊழல் விவகாரத்தில் கிடைக்கும் மொத்த லஞ்சப் பணத்தை ரூபாயில் கணக்கிட்டால் அது ரூ.600 கோடியைத் தாண்டிவிடும். இதற்காக 20 ஆண்டுகள் காத்திருந்ததில் நஷ்டம் ஒன்றும் இல்லையே?
கட்டுரையாளர் : எஸ். குருமூர்த்தி
நன்றி : தினமணி

Thursday, September 3, 2009

ஊழல்: கிளைகளை வெட்டினால் போதுமா?

தேர்தல்கள் மூலம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசில் ஆள்வோருக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து வருபவை ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் என்றால் அது மிகையல்ல.

ஊழல்வாதிகள் மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்க இயலாத, பலகீனமான தலைமையை நாடு பெற்றிருப்பது துரதிருஷ்டவசமானது.

இந்திய ஜனநாயகத்தை செல்லரிக்க வைத்துக் கொண்டிருப்பதே ஊழல் அரசியல்வாதிகள்தான்.

வலுவற்ற சட்டங்களால் 94 சதவீதம் பேர், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பி விடுவதாகக் கூறப்படுகிறது.

சட்டம் என்பது சாமானியர்களைத் தண்டிக்க மட்டும் அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு.

"பொறியில் மாட்டிக் கொண்ட எலி, தப்பிக்கும் வாய்ப்பை கடைசிவரை நழுவ விடாது...'

அதேபோல, லட்சக்கணக்கில் ஊழல்செய்து மாட்டிக் கொள்ளும் அதிகாரிகள், நெஞ்சுவலியை (?) காரணம் காட்டி ஜாமீனில் வெளிவருகின்றனர்.

அதன்பிறகு, அவர்களது முதல் பணி, ஊழல் வழக்கிலிருந்து விடுபட என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை சாத்தியக் கூறுகளையும் கையாள்வது.

பதவிக்காலத்தில் அரசியல்வாதிகளுக்குச் செல்லப் பிள்ளைகளாக நடந்துகொண்டு, முறைகேடுகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள், ஊழல் வழக்குகளில் சிக்கினாலும், சிறிது காலத்தில், அதிலிருந்து லாவகமாக வெளிவந்து, மீண்டும் பதவிகளைப் பெற்றுவிடுவதை நடுநிலையாளர்கள் கவலையோடு பார்க்கின்றனர்.

உதாரணமாக மணல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளைச் சொல்லலாம்.

ஆறுகளில் 3 அடிக்கு கீழே, மணல் அள்ளக்கூடாது என்பது விதி. அதனை வலியுறுத்தி, குவாரிகளில் ஒப்புக்குப் பதாகை வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், குவாரிகளில் 20 அடிக்கும் குறையாமல் மணல் அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டால், இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதால் எத்தனை அடிகள் அள்ளுகின்றனர் என்பதைக் கணக்கிட இயலவில்லை எனச் சாதாரணமாக பதில் அளிக்கின்றனராம்.

3 அடி ஆழத்துக்கும், 20 அடி ஆழத்துக்கும் வித்தியாசம் தெரியாதா?

தற்போது ஊழல் நோய் முற்றி, அனைத்துத் துறைகளிலும் புரையோடி விட்டதால், 50 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசுகள், திடீரென விழித்துக் கொண்டு ஊழலை ஒழித்து, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கப் போவதாக அறிவித்து, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தன.

ஆனால், அச் சட்டத்தின் பல ஷரத்துகள் சாமானிய மனிதர்களைச் சென்றடையும் வகையில், முழுமையாக இல்லை என்பதே நிதர்சன உண்மை.

ஊழலுக்கு எதிரான சட்டங்கள் பலமாக இல்லாததே, அதில் ஊறித் திளைப்போருக்கு சாதகமாக உள்ளது என்கிற அடிப்படை உண்மை கூடவா அரசுக்குத் தெரியாமல் போனது!

முறைகேடுகளுக்குத் துணைபோகாத, சிபாரிசுகளை ஏற்காத நேர்மையான அதிகாரிகளின் துறைகளை மாற்றிப் பந்தாடுவதும், லாயக்கற்றவர்களை, தமக்கு வேண்டியவர்களை உயர் பதவிகளில் அமரவைத்து, காரியம் சாதித்துக் கொள்வதும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது.

திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறெங்கும் பதுக்கப்படாமல், முழுமையாகச் செலவிட்டாலே போதும் நாடு வல்லரசாகும்... சுவிஸ் வங்கிகள் திவாலாகும்!

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா வெகுவேகமாக பின்னேறிச் செல்வதற்கு முக்கியக் காரணம், கூட்டுவைத்துக் கொள்ளை அடிக்கும் மனோபாவம்தான்.

தேர்தலின்போது அணிமாறும் அரசியல் கூட்டணியை விட, இக்கூட்டணி ஆபத்தானது.

சில நேர்மையான அலுவலர்களையும் டிரான்ஸ்பர், டம்மி போஸ்ட் என இக்கூட்டணி நோகடிக்கச் செய்கிறது.

ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில், இந்தியா தற்போது 74-வது இடத்தில் உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

ஊழலின் வேர்களை அழிக்காமல், கிளைகளை மட்டும் வெட்டிக் கொண்டே இருந்தால், இப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

கட்டுரையாளர் : ப.செ. சங்கரநாராயணன்
நன்றி : தினமணி

Tuesday, September 1, 2009

எஃகுக் கோட்டை பாதுகாப்பில் "கறுப்புப்பணம்'

இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய ஒரு பரபரப்பான விவாதம் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்றது.

தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பரபரப்பு சற்றே ஓய்ந்தாலும், இப்பிரச்னை அவ்வப்போது எழுப்பப்படுகிற ஒன்றாக இருந்து வருகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுகையில் இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அரசுத்தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து நாடு வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டின் நிதித்துறைக் கொள்கை, தனி நபர்களின் அடிப்படைச் சொத்துரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, வங்கிக் கணக்குகள் பரம ரகசியமாகப் பராமரிக்கப்படுவதற்கான சட்டத்தையே இயற்றியுள்ளது. இந்த ரகசியப் பாதுகாப்புக்கான சட்டம் 1934-ம் ஆண்டுதான் நிறைவேற்றப்பட்டது என்றாலும் அந்த நாட்டு அரசாங்கம் நீண்ட காலமாகவே இது தொடர்பான ஒரு கொள்கை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளது. அதன்படி வரி ஏய்ப்பு என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.

வரி ஏய்ப்பு ஒரு நிர்வாக நடைமுறைத்தவறு என்று மட்டுமே பார்க்கப்படும். வரி மோசடி என்பதைத்தான் அந்த நாடு சற்று கடுமையாகக் கையாளும். இந்த நடைமுறை சுவிஸ் நாடு சுதந்திரமடைந்த 13-ம் நூற்றாண்டில் இருந்தே அங்கு அமலில் இருந்து வந்துள்ளது.

இது ஏதோ சுவிஸ் நாட்டில் மட்டும் நிலவுகிற நடைமுறை என்று கருதிவிடக் கூடாது. சர்வதேச ரீதியில் இவ்வாறு வங்கிக் கணக்குகளை ரகசியமாகப் பேணி வரி ஏய்ப்போருக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ள நாடுகளின் எண்ணிக்கை எழுபதுக்கும் மேல் இருக்கும்.

இத்தகைய ரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட கறுப்புப்பணமே என்பதை விளக்கத் தேவையில்லை. இது அந்தக் கறுப்புப்பணச் சொந்தக்காரர்களுக்கு ஒரு வசதியான ஏற்பாடு. ஆனால் இதனால் சுவிஸ் நாட்டுக்கு என்ன பயன்? சொந்த நாட்டுக்கு வெளியே எடுத்துச்சென்று பாதுகாக்கப்படும் சர்வதேச அளவிலான தனியார் சொத்துகளில், 30 சதவிகிதம் சுவிஸ் நாட்டின் வங்கிகளில் அடைக்கலம் புகுந்துள்ளன.

2008-ல் இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்கள். அந்த நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை வைத்துக் கணக்கிட்டால், இது 15 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த ரகசியக்கணக்கில் பாதுகாக்கப்படும் பணம், வாடிக்கையாளரின் மறைவுக்குப் பின்னால், அவரது வாரிசுகளுக்கே கூடத் தெரியாமல் போய் விடுவதால், கோரிக்கையற்றுப் போய், அந்த வங்கிகளுக்கே சொந்தமாகி விடுவதும் உண்டு.

சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை, இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் கறுப்புப்பணத்தில், இந்தியர்களுக்குச் சொந்தமான பணம் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி டாலர்கள். இந்திய ரூபாய்க் கணக்கில் இதன் மதிப்பு சுமார் 75 லட்சம் கோடிகள்! இந்த வகையில் சுவிஸ் நாட்டில் பணத்தைப் பதுக்கிவைக்கும் வெளிநாட்டவர்களின் சொத்து மதிப்பில் இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது. எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் இது!

இப்படிக் கறுப்புப்பணத்தை வெளிநாட்டுக்குக் கடத்திக் கொண்டு போய் ரகசியமாகப் பதுக்கி வைப்பது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. வளரும் நாடுகளிலிருந்து வெளியேறும் இந்தப் பதுக்கல் பணம் ஆண்டொன்றுக்கு சுமார் 10 லட்சம் கோடி டாலர் என்றால் இதில் இந்தியாவின் பங்கு 2200 முதல் 2700 கோடி டாலர் என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

160 வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தை இந்த வகையில் எட்டிப்பிடித்துள்ளது. இது இன்று நேற்று நிகழ்ந்ததல்ல. சுதந்திர இந்தியாவில் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிகழ்வு. இப்போது தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிற சூழலில், இப்படி இந்தியாவிலிருந்து புலம்பெயரும் கறுப்புப்பணம் பந்தயக் குதிரைப்பாய்ச்சல் போலப் பறக்கிறது. அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு முதலீட்டுக்காக என்று இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் 2004-05-ம் ஆண்டில் 96 லட்சம் டாலராக இருந்தது.

2006 - 2007-ல் 44 கோடி டாலராக உயர்ந்தது. இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீட்டில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகளாக இந்தியாவிலிருந்து அன்னியச் செலாவணி வெளியேறுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கும் பிடிபடாத வகையில் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் கறுப்புப்பணத்தின் பரிமாணம் என்ன என்பதை சுவிஸ் வங்கிகள்தான் அறியும்.

இந்தப் பிரச்னை இவ்வளவு வெளிச்சத்துக்கு வந்து விவாதப் பொருளாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, 2008 செப்டம்பரில் தொடங்கி வெடித்துள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடி. இது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நிதித்துறையையே சுனாமிப் பேரழிவு அலையாகத் தாக்கியுள்ளதால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய பல நாடுகளும், இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களில் குவிந்துள்ள தங்கள் நாட்டினரின் கணக்குகளைத் தேட ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா, 34 நாடுகளைக் குறி வைத்து வரி ஏய்ப்புத் தடுப்புக்கான சட்டம் ஒன்றையே நிறைவேற்ற முற்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தை அந்த நாட்டின் வங்கி ரகசியப் பாதுகாப்புச் சட்டங்களைத் தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடும் நிர்பந்தம் அளித்து வருகிறது.

அமெரிக்கா சுவிஸ் நாட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்களான 52,000 அமெரிக்கக் குடிமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. யுபிஎஸ் என்ற சுவிஸ் நாட்டு வங்கிக்கு எதிராக அமெரிக்க நாட்டின் சட்ட அமைச்சகம் இதற்காக ஒரு வழக்கையே தொடுத்தது. இந்த ஆண்டுத் துவக்கத்தில், அமெரிக்கப் பணமுதலைகள் 2000 கோடி டாலர்களை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்து, வரி ஏய்ப்புச் செய்துள்ள விவகாரத்தில், இந்த யுபிஎஸ் வங்கி 78 கோடி டாலரை அபராதமாகச் செலுத்தியது.

இப்போது ஆகஸ்ட் 13 அன்று பெருந்தொகைகளைப் பதுக்கி வைத்துள்ள 5000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தருவதற்கு இதே யுபிஎஸ் வங்கி, அமெரிக்க சட்ட அமைச்சகத்துடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் சுவிஸ் நாட்டு வங்கித்துறையின் எஃகுக் கோட்டைக்குள் எட்டிப் பார்ப்பதற்கு ஒரு சிறிய துவாரம் திறக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். ஆனால் அமெரிக்காவையோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளையோ பின்பற்றி இந்த வரி ஏய்ப்பு சொர்க்கங்களுக்குள் நுழைந்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான வங்கிக்கணக்கு விவரங்களை வெளிக்கொணருவது இந்திய அரசாங்கத்துக்கு அவ்வளவு சுலபமான வேலையல்ல.

சுவிஸ் நாட்டு அரசாங்கம் "இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது' என்று கடந்த மாதம் தகவல் தெரிவித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒருவேளை சுவிஸ் நாடு தகவல்களை இந்தியாவுக்குத் தந்தாலும் அதைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

சுவிஸ் நாட்டிலோ, இதர வரி ஏய்ப்பு சொர்க்கங்களிலோ பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் என்பது, இந்தியப் பொருளாதாரத்தில் புழங்கும் ஒட்டுமொத்த கறுப்புப்பணத்தின் ஒரு சிறு பகுதியே. உள்நாட்டிலேயே நிழல் பொருளாதாரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கறுப்புப்பணத்தின் அளவு, புலம் பெயர்ந்த கறுப்புப்பணத்தை விடப் பல மடங்காகும். இதை மதிப்பிடுவதற்கான முயற்சியைக்கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

இது தொடர்பான மதிப்பீடு ஒன்றை பொது நிதி மற்றும் கொள்கைகளுக்கான தேசியக்கழகம் மேற்கொண்டது 1985-ல் தான். அப்போது, 1983 - 84-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் ரூ. 31,584 கோடி முதல் ரூ. 36,786 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு, சர்வதேச அளவிலான ஊழல் விவகாரங்கள் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவில் வெடித்துள்ள காலச்சூழலில், கறுப்புப்பணத்தின் இன்றைய பரிமாணத்தைக் கணக்கிடுவதற்கான எந்த ஆய்வுக்கும், கடந்த 25 ஆண்டுகளில் மத்திய அரசு உத்தரவிடவில்லை என்பது தற்செயலான நிகழ்வில்லையே.

ஏற்கெனவே சேமித்துப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதும், அதன் சொந்தக்காரர்களை சட்டத்தின் கீழ் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுவதும் முக்கியமானதுதான். ஆனால் அதைப்போலவே முக்கியத்துவம் பெற்றது, கறுப்புப்பணத்தைச் சேமிக்க விடாமலும், அதை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாகப் பதுக்காமலும் தடுப்பதற்கான நடவடிக்கை.

இந்தத் திசையில் நம் நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்கக்கூட மறுத்து வருவது கவலை தரும் போக்காகும். தாராளமயப் பொருளாதாரத்தின் கீழ் வசதி படைத்தவர்களுக்கு வாரி வழங்கப்பட்டு வந்துள்ள வரிச்சலுகைகளும், வரி ஏய்ப்புக்கு வழியைத் திறந்து விடும் சட்டங்களில் உள்ள சந்து பொந்துகளும், வழக்குகளின் பெயரால் முடக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி பாக்கிகளும், இன்ன பிறவும்தான் கறுப்புப் பணக் குவியலுக்கான ஊற்றுக்கண். இதை அடைப்பதற்கான நடவடிக்கை ஏதுமில்லை.

மொரீஷியஸ் உள்ளிட்ட 76 நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்புத் தடுப்பு ஒப்பந்தங்கள், வரி ஏய்ப்புக்கும், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கும் போடப்பட்டுள்ள ராஜ பாட்டைகள். இந்த ஒப்பந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை கூடத் தொடங்கப்படவில்லை.

நம் நாட்டுக்குள் நுழைகின்ற அன்னிய நிதி முதலீடுகளில் ஒரு பெரும் பகுதி, உரிமையாளர் யார் என்று அறிவிக்கப்படாத அனாமதேயப் பங்கேற்புப் பத்திரங்கள் வழியாகத்தான் வருகின்றன. இந்தப் பங்கேற்புப் பத்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரே பரிந்துரைத்தும்கூட, அது மத்திய அரசால் ஏற்கப்படவுமில்லை; தடை விதிப்பதற்கான முயற்சியும் இல்லை. நாட்டின் மூலதனச் சந்தையில் - குறிப்பாகப் பங்கு வர்த்தகத்தில் - ஈடுபடுத்தப்பட்டு, சூதாட்ட பேரங்களில் பெறப்படும் கொழுத்த லாபங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளதும் தொடர்கிறது. இதுவும் கறுப்புப்பணப் பெருக்கத்திற்கான இன்னொரு வாய்ப்பு வாசல். இந்த லாபங்களை வரிவிதிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு செவிமடுப்பதேயில்லை.

எனவே, சுவிஸ் வங்கிகளின் எஃகுக் கோட்டை பாதுகாப்பில் பதுக்கப்பட்டுள்ள நம் நாட்டவர்களின் கறுப்புப்பணம் கண்டறியப்பட்டு, வெளிக்கொணரப்படும் என்பது இப்போதைக்கு வெறும் பேச்சு ஆரவாரம் மட்டுமே!
கட்டுரையாளர் : உ . ரா. வரதராசன்
நன்றி : தினமணி

Thursday, August 20, 2009

நிர்வாகத்தில் கலந்துவிட்ட ஊழல்

இந்தியாவின் உயர் தொழில்நுட்பக் கல்வியை நிர்வகிக்கும் ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. சில வாரங்களுக்கு முன்பு சிபிஐ மற்றும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு இந்தப் புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் நடந்து முடிந்த சில நாள்களில் ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சிபிஐ பிடியில் சிக்கினார். கடந்த சில காலமாகவே செய்தித்தாள்களைப் புரட்டினால், ஊழல் புகாரில் சிக்கிக் கொண்ட பெருந் தலைகள் பற்றிய செய்திகள்தான் அதிகமாகத் தென்படுகின்றன.

தேசத்தின் வளத்தை ஒருகூட்டம் இப்படிச் சுரண்டிக் கொண்டிருக்கும்போது, சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்கவில்லை என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிப் பேருக்குத்தான் முறையான, தரமான நோய்த்தடுப்பு வசதிகள் கிடைக்கின்றன என ஓர் ஆய்வு கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் இந்தியா வந்த பில்கேட்ஸ், "உலகின் மிகவும் தரமற்ற மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று' என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். அவர் இப்படிக் கூறும்போது பிரதமரும் உடன் இருந்தார்.

இது போதாதென்று, அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சேற்றைவாரி வீசிக்கொள்ளும் நகைச்சுவைச் செய்திகளும் பத்திரிகைகளில் பக்கம் தவறாமல் இடம்பிடிக்கின்றன. மழை பெய்யாமல் வறட்சி ஏற்படும் என்கிற கவலையைப் போக்கும் வகையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நல்ல சேதிதான். ஆனால், இந்த மழையால் வீடுகள் நீரில் மூழ்குவதையும், போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லையே. மழை பெய்யாவிட்டால் பிரச்னை; பெய்தால் பெரிய பிரச்னை. இதுபோன்ற செய்திகள் மட்டும் செய்தித்தாள்களை ஆக்கிரமித்திருப்பது, நல்ல விஷயங்களே நாட்டில் நடக்கவில்லையா என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஊழல்வாதிகள் பிடிபடுவதற்கும், மழைநீரில் வீடுகள் மூழ்குவதற்கும், மருத்துவ வசதிகள் தரமற்றுப் போனதற்கும் தொடர்பில்லை என்று நினைத்தால் அது தவறு. இந்த மாதிரியான செய்திகள் ஒன்றைத் தெளிவாக்குகின்றன. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் நாட்டின் புதிய விதிமுறைகளாக மாறிவிட்டன என்பதுதான் இந்தச் செய்திகள் நமக்குச் சொல்லும் சேதி.

ஏஐசிடிஇ தலைவரின் ஊழல் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். 1987-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு ஏஐசிடிஇ. தொழில்நுட்பக் கல்வியை நாடு முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அமைப்பின் மரியாதை கட்டெறும்பு ஊர்ந்த சுவராகத் தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துகளை வாரி வழங்கியிருக்கும் லட்சணத்தைப் பார்த்தாலே இந்த அமைப்பு எவ்வளவு "நேர்மையாக' நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும்.

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என்று கூறுவதுதான் லேட்டஸ்ட் ஜோக். அரசியல்வாதிகளும் பெரிய பதவியில் இருப்போரும் பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் நடத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். நன்கொடை வசூலிக்கக் கூடாது என இவர்களுக்கு யார் உத்தரவு போடுவது? இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பும் ஊழலின் கூடாரமாகிப் போய்விட்டால் குறைகளை யாரிடம்தான் போய்க் கூறுவது?

அடுத்தது பூட்டா சிங் கேஸ். எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவர் இவர். ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக இவரது மகன் பிடிபட்டார். இதற்காகப் பூட்டா சிங் கொஞ்சமும் பதறவில்லை. தம்மீது ஊழல் பழி சுமத்துவது இது முதல்முறையல்ல என்றார். இது தமக்குக் கிடைத்த பெரிய மரியாதை என்றும் கூறினார். இன்னும் எத்தனை ஊழல் புகார்களில் சிக்கினாலும் இதையேதான் இவர் திரும்பத் திரும்பக் கூறப்போகிறார்.

அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது ஊழல். எல்லாக் காலகட்டத்திலும் இது தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது. முகலாயர் காலத்திலேயேகூட கடைநிலை நிர்வாகத்தில் ஊழல் இருந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் ஊழல் இருந்தது. ஆனால், அப்போதெல்லாம் ஊழல் என்பது ஒரு விதியாக இருக்கவில்லை. இப்போது எல்லா நிலையிலும் ஊழல் ஓர் எழுதப்படாத சட்டமாகவே மாறியிருக்கிறது. இது தெரியாத அல்லது மதித்து நடக்காத அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முட்டாள்களாகவே கருதப்படுகின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு சில ஆண்டுகள்வரை நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்பது சமூகத்தின் மிக அடிப்படையான தேவை. மிக மோசமான ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகள்கூட நோய்த் தடுப்பு மருந்துத் திட்டங்களை நூறு சதவீதம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலோ வெறும் 50 சதவீதம் பேருக்குத்தான் நோய்த்தடுப்பு மருந்துகள் சென்றடைகின்றன.

60 ஆண்டு கால இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் தோல்வி இது. இந்த விஷயத்துக்கு ஊடகங்கள் பெரிய முக்கியத்துவம் தராமல் போனது அதைவிட வேதனை. பில்கேட்ஸ் இதைச் சொன்னார் என்பதால்தான் இந்த அளவுக்காவது இந்த விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது.

கல்வி கற்கும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பவைதான் இதன் முக்கிய நோக்கங்கள்.

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் "கடுமையான நடவடிக்கைகள்' போல இந்தச் சட்டமும் அமலாக்கப்பட்டால், நோக்கங்கள் எதுவும் நிறைவேறாது.

உண்மையில், விடுதலையடைந்த புதிதில் உலக அளவில் கல்வி கற்கும் உரிமையைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியதே இந்தியாதான். சொந்த நாட்டுக்குள் அதைக் கொண்டுவருவதற்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

நாடு முன்னேற வேண்டுமானால், கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊழல், நிர்வாகச் சீர்கேடு, வளர்ச்சியில் தேக்கம், வருவாய் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் நெருக்கமான தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுச் சுகாதாரம், தொடக்கக் கல்வி, ஊழல் ஒழிப்பு, கட்டமைப்பு போன்றவற்றில் கவனத்தைத் திருப்ப வேண்டும். விடுதலையடைந்தபோதே இவற்றுக்குத்தான் அரசுகள் முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். ஏனோ அது நடக்கவில்லை. இப்போதாவது தொடங்க வேண்டும். பெரிய தாமதமில்லை.

கட்டுரையாளர் : டி . எஸ் . ஆர் . சுப்பிரமணியன்
நன்றி : தினமணி