Thursday, March 19, 2009

சோனி இந்தியா அறிமுகப்படுத்திய புதிய டிஜிட்டல் ஸ்டில் கேமராக்கள்

டிஜிட்டல் ஸ்டில் கேமரா வரிசையில் 11 புதிய மாடல்களை சோனி இந்தியா நேற்று புதுடில்லியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் விலைகள் ரூ.7,990 இலிருந்து ரூ.29,990 வரை இருக்கின்றன. 10 முதல் 12 மெகா பிக்ஸல் ரெசலுஸனுடன் கூடிய கேமராக்களை ஏற்கனவே சோனி இந்தியா இங்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் கேமராக்களும் அதி நவீன தொழில் நுட்பத்தை கொண்டது. இதன் மூலம் இந்திய டிஜிட்டல் ஸ்டில் கேமரா சந்தையில் சோனிக்கு இருக்கும் 37 சதவீத மார்க்கெட் ஷேரை 42 சதவீதமாக உயர்த்த அது திட்டமிட்டிருக்கிறது. இது 2009 நிதி ஆண்டில் நடக்கும் என்று நம்புவதாக சோனி இந்தியாவின் மேலாண் இயக்குநர் மசாரு தமகுவா தெரிவித்தார். இந்தியாவில் டிஜிட்டல் ஸ்கேமராக்களை உபயோகிப்போர் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து வருவதால், இப்போது உபயோகத்தில் இருக்கும் 10 லட்சம் கேமராக்கள் இனிமேல் 12 லட்சமாக அதிகரித்து விடும் என்றார். இதன் காரணமாக சோனி இந்தியாவுக்கு இப்போதிருக்கும் 150 ஷாப்கள் இனிமேல் 200 ஆக இந்த வருட இறுதிக்குள் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.
நன்றி : தினமலர்


உலக அளவில் இந்தியாவை ஒரு மருந்து தயாரிப்பு மையமாக்க தீவிர முயற்சி

2020ல் இந்தியாவை, உலக அளவிலான மருந்து தயாரிப்பு மையமாக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையை அடைவதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி ரூபாய் ( 2 பில்லியன் டாலர் ) வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்காக பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர்ஷிப் திட்டம் தேவைப்படுகிறது என்று மத்திய அரசின் மருந்து துறை செயலாளர் அசோக்குமார் தெரிவித்தார். மும்பையில் நடந்த ' பார்மாசூட்டிக்கல்ஸ் 2014 ' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையால், குறைந்த விலையில் மருந்துகளை தயாரிக்க இந்திய மருந்து கம்பெனிகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொன்ன அவர், இது நம்மால் முடியக்கூடிய ஒன்றுதான் என்றார். மத்திய அரசு சில மாநிலங்களில் மட்டும் இப்போது அறிமுகப்படுத்திய ' ஜன் ஆஸாதி ' என்ற திட்டத்தின் மூலம் குறைந்த விலையிலேயே தரமான மருந்துக்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது என்று சொன்ன அவர், இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்குள் விரிவுபடுத்தப்படும் என்றார். இது தவிர, இந்தியா ஒரு சர்வதேச கிளினிக்கல் சோதனை மையமாகவும் இப்போது திகழ்ந்து வருகிறது. சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் பல மருந்து கம்பெனிகள், அவர்கள் தயாரித்த மருந்துக்களை டெஸ்ட் செய்து பார்க்க இந்தியா கொண்டுவந்து இங்கு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரோச், பிளிட்ஸர், அஸ்ட்ரா ஜெனிக்கா, ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் அவர்களது மருந்துக்களை சோதனை செய்து பார்க்க, டிரக்ஸ் கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா ( டி சி ஜி ஐ ) விடம் அனுமதி பெற்று வைத்திருக்கின்றன. பிரபலமான மருந்து கம்பெனிகள், அவர்கள் தயாரிக்கும் ஒரே மருந்தை உலகின் வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்வது வழக்கம். அவ்வாறு இந்தியர்களிடையே சோதனை செய்து பார்க்க டி.சி.ஜி.ஐ.,யிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கேட்டு 2005 ல் 100 விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருந்தது. ஆனால் அது, 2008 ல் 350 விண்ணப்பங்களாக உயர்ந்து விட்டது.
நன்றி : தினமலர்


டிஎஸ்பி மெரில் லிஞ்சின் 10 சதவீத பங்குகளை விற்றார் ஹேமந்த்ரா கோத்தாரி

டிஎஸ்பி மெரில் லிஞ்ச் நிறுவனத்தில் இருந்த 10 சதவீத பங்குகளை விற்று விட்டார் அதன் சேர்மன் ஹேமந்த்ரா கோத்தாரி. நிண்ட காலமாகவே நான் இதை விற்று விட தீர்மானித்திருந்தேன். இப்போது விற்று விட்டேன் என்றார் ஹேமந்த்ரா கோத்தாரி. இவருக்கு அந்த நிறுவனத்தில் இருந்த பங்குகளில் 48 சதவீத பங்குகளை ஏற்கனவே கடந்த 2006 ம் வருடம் அவர் டிஎஸ்பி மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெரில் லிஞ்ச்க்கு விற்று விட்டார். இப்பேது மீதி இருந்த 10 சதவீதத்தையும் விற்றிருக்கிறார். எனவே இதன் மூலம் டி எஸ் பி மெரில் லிஞ்ச் நிறுவனம் முழுவதும் அதன் தாய் நிறுவனமான மெரில் லிஞ்ச் இடம் சென்று விட்டது. அதாவது மெரில் லிஞ்ச் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய பேங்க் ஆஃப் அமெரிக்காவிடம் சென்று விட்டது. மார்ச் 31ம் தேதியுடன் டிஎஸ்பி மெரில் லிஞ்ச்சில் இருந்து ஹேமந்த்ரா கோத்தாரி ஓய்வு பெற்று விட்டாலும், தொடர்ந்து நான் - எக்ஸிகூடிவ் சேர்மனாக டிஎஸ்பி மெரில் லிஞ்ச்சின் அசட் மேனேஜ்மென்ட் நிறுவனமான டிஎஸ்பி பிளாக்ராக் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கோத்தாரியில் பங்குகள் விற்கப்பட்டு விட்டதால் அதில் பணிபுரிந்து வரும் 450 ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


மெதுவாக உயிர்த்தெழுகிறது பங்குச் சந்தை?

கடந்த இரண்டு வாரங்களில் சந்தைகளில் ஏற்படும் மாற்றம் பெரும்பாலும் எதிர்பார்த்தது என்றாலும், வியப்புக்குரியது. இரண்டு வாரத்திற்கு முன் 8,000 புள்ளிகள் வரை தொடவிருந்தது. ஆனால், நேற்று இறுதியாக 9,000த்தையும் தாண்டி சிறிது கீழே வந்து நிற்கிறது. இது தான் பங்குச் சந்தை. கடந்த வார லாபப் போக்கு திங்களன்றும் சந்தையில் இருந்தது. உலகளவில் சந்தைகள் நன்றாகவே இருந்ததால், இந்தியாவிலும் சந்தைகள் திங்களன்று மேலேயே துவங்கின. லாபமும் அனைவருக்கும் இருந்தது. சந்தையும் 187 புள்ளிகள் வரை மேலே சென்றது. நேற்று முன்தினம் சந்தைகள் மேலே துவங்கினாலும், வந்த லாபமும் போய் முடிவாக நஷ்டத்தில் முடிந்தது. மெட்டல், கட்டுமானத் துறைகள் மேலே சென்றன. சாப்ட்வேர் பங்குகள் கீழே சென்றன. முடிவாக 79 புள்ளிகள் கீழே சென்றன. நேற்று துவக்கமும் மேலேயே இருந்தது. மறுபடியும் கட்டுமானத் துறை, மெட்டல் துறை பங்குகள் தான் ஏற்றத்திற்குக் காரணமாக இருந்தன.
மதியத்திற்கு மேல் துவங்கிய லண்டன் பங்குச் சந்தை கீழேயே துவங்கியதால் இந்திய பங்குச் சந்தைகள் பெற்ற லாபத்தில் பெருமளவை இழந்தன. சாப்ட்வேர், எண்ணெய் பங்குகள் கீழே விழுந்தன. முடிவாக மும்பை பங்குச் சந்தை 112 புள்ளிகள் லாபத்தில் மட்டுமே முடிவடைந்தது. சந்தை 1,000 புள்ளிகள் ஏறும் போது லாப நோக்கில் விற்பவர்களும் இருக்கத்தானே செய்வர். அதுவும் இருந்ததால் சந்தை சமாளிக்க முடியாமல் ஏற்றத்திலும் இறக்கம் கண்டது. முடிவாக மும்பை பங்குச் சந்தை 8,976 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை 2,794 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. அட்வான்ஸ் டாக்ஸ் கட்டிய தகவல்கள் வெளியாகியுள்ளது, சாதகமாகவும் - பாதகமாகவும் உள்ளது. வங்கிகள் அதிகமாகக் கட்டியுள்ளன. மற்ற கம்பெனிகளில் நிலைமை மேலும் - கீழுமாக உள்ளது. வங்கிகள் நல்ல முடிவுகளைத் தந்திருந்தாலும், வருங்காலங்களில் வராக்கடன்கள் குறையாமல் இருக்க வேண்டும் யார் சொன்னது, பொருளாதார மந்த நிலையால், பி.பி.ஓ., கம்பெனிகளுக்கு இனிமேல் வெளிநாடுகளிலிருந்து வேலைகள் கிடைக்காது என்று. எச்.சி.எல்., கம்பெனி 350 மில்லியன் டாலர் பெறுமான ஏழு ஆண்டு கான்ட்ராக்டை ரீடர்ஸ் டைஜஸ்டிமிருந்து பெற்றுள்ளது. இது இந்த மந்தமான சூழ்நிலையில் ஒரு அருமையான செய்தி.
அமெரிக்காவில் எழுச்சி: அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதுமே செலவழிக்கும் பொருளாதாரம் தான். கடன் வாங்கியும் செல்வழிப்பவர்கள் உள்ள நாடு. அதனால் தான் அங்கு சிறிது மந்தம் ஏற்பட்டவுடன் அது உலகெங்கும் பயத்தை ஏற்படுத்தியது. அங்கு தற்போது நிலைமைகள் சிறிது சிறிதாக மேலே தலைதூக்கிப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன என்று செய்திகள் வருகின்றன. பத்து ரூபாய் கிடைத்தாலும் அதில் இரண்டு ரூபாய் சேமிப்பவர்கள் நாம். செலவுகள் வரவுகளை மீறி பெரும்பாலும் இருக்காது. தற்காலங்களில் இரண்டு பேரும் சம்பாதிக்கும் நிலை வந்தவுடன் மேலை நாட்டுக் கலாசாரத்தை மெதுவாக கொண்டு வந்து விட்டோமோ என்ற பயமும் நமக்கு ஏற்படுகிறது. சந்தை எப்படி இருந்தாலும் மியூச்சுவல் பண்டுகளின் எஸ்.ஐ.பி., (தொடர்ந்த முதலீடு)களில் போடுவது நல்லது என்று லட்சக்கணக்கானவர்கள் போட்டு வந்தனர். சந்தையும் அது போல கடந்த ஆண்டு ஜனவரி வரை மேலேயே சென்றது. அதன் பின் குறைந்த வேகம் தான் அனைவருக்கும் தெரிந்தது. குறைந்து வரும் வேகத்தைப் பார்த்து தொடர்ந்து முதலீடு செய்த பலரும் நிறுத்தி விட்டனர். அதுபோல நிறுத்தியவர்கள், ஐந்து லட்சத்திற்கும் மேலாக இருக்கின்றனர் என்ற செய்திகள் வருகின்றன.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சரிவுகளை வாய்ப்புகளாக பாருங்கள். அப்படி பார்ப்பவர்களுக்கு இந்தச் சந்தையும் இனிக்கும். வரும் நாட்களும் சந்தை சிறிது மேலே இருக்க வாய்ப்புகள் அதிகம். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் கூட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும் சந்தையின் போக்கை தீர்மானிக்கும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்

மூலப்பொருட்கள் விலை குறைந்தாலும் உற்பத்தி பொருளில் மாறுதல் இல்லை

மூலப்பொருள் விலை குறைந்தாலும், இன்ஜினியரிங் பொருள்களின் விலையில் மாற்றம் பெரிய அளவில் ஏற்படவில்லை; சில இடங்களில் மட்டும் விலை குறைப்பு செய்து ஏற்றுமதி செய்கின்றனர். கோவையில் இன்ஜினியரிங் உற்பத்திப் பொருட்களான வெட்கிரைண்டர், வாகன உதிரி பாகங்கள், ரயில்வேக்கு தேவையான பொருட்களும் உற்பத்தியாகி வருகின்றன. காஸ்டிங் பொருட்களின் ஏற்றுமதி நன்றாக இருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவு இந்தியாவிலும் எதிரொலித்தது. ஒலிம்பிக் நடத்த பல லட்சம் டன் இரும்பை இந்தியா ஏற்றுமதி செய்தது. சீனாவின் தேவை குறைந்ததும், சர்வதேச மார்க்கெட்டில் இரும்பின் விலை குறைந்தது. இதையடுத்து, இரும்பு ஏற்றுமதியில் முன்னணி வகுத்த நாடான இந்தியாவிலும் விலை சரிந்தது. ஒரு கிலோ இரும்பு 55ல் இருந்து 30 ரூபாயாகக் குறைந்துள்ளது. இரும்பு விலை சர்வதேச அளவில் குறைந்ததோடு, கச்சா எண்ணெய் விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஒரு பேரல் 140 ரூபாய் வரை சென்று, இப்போது 40 ரூபாய் அளவில் உள்ளது. எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும், அது பெரிதும் எதிரொலிக்கவில்லை.
இன்ஜினியரிங் பொருட்கள் அனைத்தும் உலோகம் தொடர்பானவை. எனவே, சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களும் உள்ளூர் மார்க்கெட்டில் எதிரொலிக்கும். இரும்பு விலை குறைந்தாலும், தாமிரம் விலை ஏற்றம் கண்டுள்ளது. கிலோ 300 ரூபாய் வரை இறங்கிய தாமிர விலை, தற்சமயம் ஏறுமுகமாக உள்ளது; ஒரு கிலோ 380 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, மோட்டார் பம்ப் செட்களின் விலை குறைய வாய்ப்பில்லை. வாகனங்களில் பயன்படும் இரும்பு உருக்கின் தேவை குறைந்துள்ளது. வாகன விற்பனையில் காணப்படும் மந்த நிலையால், கார் உற்பத்தி குறைந்துள்ளது. 'காஸ்டிங்' பொருட்களின் விலையும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. காஸ்டிங் பொருள் ஏற்றுமதி செய்வோருக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சாதகமானதாக மாறியுள்ளது. இரும்பு விலை குறைவும், டாலர் மதிப்பு உயர்வும் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இன்ஜினியரிங் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், விரைவில் அதன் விலையும் குறையலாமென பலரும் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி : தினமலர்