பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.
வெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது.
இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத்தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும், தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.
ஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது.
இருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை.
இப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்காரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.
முகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள்.
இந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது.
நிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது!
நன்றி : தினமணி
Thursday, September 2, 2010
Subscribe to:
Posts (Atom)