Sunday, June 29, 2008

பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு இது சோதனை காலம்


சந்தை 15,000 புள்ளிகளுக்கு கீழே வரும் போதெல்லாம் முன்னர் சப்போர்ட் இருந்து வந்தது. தற்போது, எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் சந்தை விழுந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு காரணங்களுக்காக 14,000க்கும் கீழே இறங்கி பலரையும் கிறங்கடித்துக் கொண்டிருக்கிறது.
புதன் அன்றும், வியாழனன்றும் சந்தை சிறிது மேலே சென்றது. இரண்டு நாட்களில் கிடைத்த லாபங்களெல்லாம் வெள்ளியன்று காணாமல் போய்விட்டது.
நிரந்தரமற்ற அரசியல் சூழ்நிலை, சந்தை சரிய ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. இடதுசாரிகள், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை சந்தையின் பிடிப்புகளையெல்லாம் தளர்த்தி விட்டது.ரிலையன்ஸ், சாப்ட்வேர் பங்குகள், மெட்டல் பங்குகள், கட்டுமானத்துறை பங்குகள் எல்லாம் குறிப்பாக மேலே சென்றன. நேற்று நடந்த யூ.பி.ஏ., மற்றும் இடதுசாரி அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தள்ளி வைக்கப்பட்டன. இது, அவர்களுக்கிடையே நடைபெறும் ஒன்பதாவது பேச்சுவார்த்தை. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் கூட்டப்பட்டதாலும், சி.ஆர்.ஆர்., விகிதங்கள் கூட்டப்பட்டதாலும், பல வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை கூட்டியது.வியாழனன்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 201 புள்ளிகள் கூடுதலாகவும், தேசிய பங்குச்சந்தை 63 புள்ளிகள் கூடுதலாகவும் முடிவடைந்தது.இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் இடதுசாரி கட்சிகள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் கையெழுத்திடலாம் என்று பிரதமருக்கு சோனியா கூறியுள்ளார் என்றும், அதனால் அரசு கவிழும் நிலை வந்தாலும் பரவாயில்லை; அதை கூட்டணி எதிர்கொள்ளும் என்று வந்த செய்திகள், சந்தையை வெள்ளியன்று கலகலக்கச் செய்தது என்று தான் கூற வேண்டும். இது தவிர, வியாழனன்று அமெரிக்க பங்குச் சந்தைகளும் கீழே சென்றிருந்தது. குறிப்பாக, டோ ஜோன் 360 புள்ளிகள் கீழே சென்றிருந்தது. இவையெல்லாம் சேர்த்து, சந்தை ஒரு கட்டத்தில் 650 புள்ளிகளுக்கும் மேலே, கீழே சென்றிருந்தது. பணவீக்கம் வேறு ஒரு புதிய அளவான 11.42 சதவீதத்தை எட்டியிருந்தது.
கூடி வரும் கச்சா எண்ணெய் விலைகள், வங்கி மற்றும் ஆட்டோ துறைகளைப் பாதிக் கும் என்ற கோல்ட்மென் சாக்ஸ் நிறுவன அறிவிப்பு, அமெரிக்காவில் வங்கி மற்றும் ஆட்டோ பங்குகளை பாதித்தது. கூடி வரும் கச்சா எண்ணெய் விலைகள், இந்தியாவிலும் இந்தத் துறைகளை வெகுவாக பாதிக்கலாம்.
வெள்ளியன்று வங்கி துறை, ஆட்டோ துறை, பவர் துறை, கட்டுமானத்துறை ஆகியவை 4 முதல் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய சந்தைகளும் கீழேயே தொடங்கியதால், இந்திய சந்தைகள் வெள்ளியன்று மேலே வரவே இயலவில்லை. முடிவாக மும்பை பங்குச் சந்தை 619 புள்ளிகள் குறைந்து 13,802 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 179 புள்ளிகள் குறைந்து 4,136 புள்ளிகளுடன் முடிவடைந்தது.வரும் நாட்கள் எப்படி இருக்கும்?பணவீக்கம், அரசியல் சூழ்நிலை, கச்சா எண்ணெய் ஆகியவை சந்தையை இன்னும் பல நாட்கள் ஆட்டுவிக்கும். வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பது எதிர்பார்க்கவே முடியாதபடி இருக்கிறது. பங்குச் சந்தைக்கு சோதனை நாட்கள் இவை. கம்பெனிகள் நன்கு பரிணமித்துக் கொண்டிருக்கும் வேளையில், பங்குச் சந்தையின் இது போன்ற சரிவுகள், பல முதலீட்டாளர்களின் மனதையும் சரித்திருக்கும். வாழ்க்கையில் பல சோதனைகள் வரும், அது போல இதுவும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சோதனை காலம்.

நன்றி : தினமலர்

சேதுராமன் சாத்தப்பன்