இம்மாதம் முதல் வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு, 20 ஆண்டு தவணை எடுத்தவர்களின் மாதத்தவணை குறைந்தபட்சம் 52 ரூபாய் அதிகரிக்கும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளால், பல்வேறு வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதம் இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இம்மாதத் தவணையை அடுத்த மாதம் செலுத்தும் போது, கூடுதல் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும். இதன்படி, 20 ஆண்டு தவணைக்கு ஒரு லட்சம் கடன் வாங்கியோரின் மாதத்தவணை குறைந்தபட்சம் 52 ரூபாய் அதிகரிக்கும். எச்.டி.எப்.சி., வங்கி, புதிதாக வீடு வாங்க கடன் வாங்குவோருக்கான புளோட்டிங் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 11.75 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 12 சதவீதம் முதல் 12.25 சதவீதம் வரை இந்த வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளது. எச்.டி.எப்.சி.,யின் பிக்சட் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 14 சதவீதமாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ.,யின் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 15.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இதேபோல, அனைத்து வங்கிகளும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளன. இதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்.டி.எப்.சி., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.,யில் பிக்சட் வட்டி விகிதத்தின் அடிப்படையில், ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியோருக்கு, வட்டி உயர்த்தப்படவில்லை. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி டிபாசிட்களுக்கான வட்டிவிகிதத்தை 0.75 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. நிறுவனங்களுக்கான வட்டி மற்றும் மொத்தக்கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் 17.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, எஸ்வங்கி, ராஜஸ்தான் வங்கிகளும் வட்டி விகிதத்தை மாற்றி உள்ளன.
நன்றி : தினமலர்