Thursday, January 14, 2010

செல்' இன்றிச் செல்!

பணியின்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது.

÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் மட்டுமல்ல, தண்டவாளத்தைக் கடக்கும்போதுகூட செல்போன் பேசும் அளவு நம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது செல்போன். ஆதலால் இந்தத் தடை நிச்சயம் பலனளிக்கும்.

÷அதேநேரத்தில், செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பது ஓட்டுநர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்; பணியின்போது செல்போன் பேச வேண்டுமானால் தடை விதிக்கலாம்; செல்போனே எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது என சில போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சமரசத்துக்கு இடம் அளித்தால் இந்த உத்தரவே நீர்த்துப்போகும்.

÷போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேச செல்போன் அவசியம் என்று கருதினால், நடத்துநர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டுநர்கள் தொடர்புகொள்ள செல்போன் அவசியம் என்று வாதிடுவது நியாயமல்ல. அரசு சட்டம் இயற்றினால் அதில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.

÷செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதன்படி எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எல்லா சாலைகளிலும் யாராவது சிலர் செல்போன் பேசிக்கொண்டேதான் வாகனத்தை இயக்குகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் எப்போதாவது போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். செல்போன் பேசிக்கொண்டே கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

÷பொது இடத்தில் புகைபிடிக்க, எச்சில் துப்பத் தடைவிதித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. தொடர்ச்சியான கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே அரசின் சட்டங்கள் மீறப்படுவதற்கு முதற்காரணம்.

÷அதேபோன்ற நிலைமை இந்த விஷயத்திலும் ஆகிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனரா என்பது டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்காமல் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

÷மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் என்பதுடன் நின்றுவிடாமல், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும்.

÷தனியார் பேருந்துகள் சிறப்பான சேவையை அளித்தாலும், அதிக வேகம், தொழில்போட்டியால் விதிமீறல் என அவைகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காணிப்பு வளையத்துக்குள் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் கொண்டுவரப்பட வேண்டும்.

÷அதேபோல அரசு அலுவலகங்களிலும் பணியின்போது ஊழியர்கள் செல்போன் பேச சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், காத்துக்கிடக்கும் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வெட்டியாகப் பேசி அரட்டை அடிப்பது கண்கூடு. இதனால், பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அலுவலகங்களுக்கு வந்திருக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

÷அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதம் செல்போன். அதன் வருகைக்குப் பின்னர் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டு, இன்று "செல் இல்லாதோர்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அந்த நாகரிகப் புரட்சியே தனிமனித வாழ்வில் ஒரு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. செல்போனால் எந்த அளவு பயன் உள்ளதோ அதே அளவு பாதிப்புகளும் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. செல்போனால், மாணவிகளுக்குப் பல்வேறு மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக்கொண்டே செல்போன் பேசுவதால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

÷எனவே, செல்போன் பயன்பாட்டில் நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அரசு சட்டம் போட்டுத்தான் அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஏனெனில் என்னதான் சட்டம் இயற்றினாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கமே எந்த சட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும்.
கட்டுரையாளர் : எஸ்.ராஜாராம்
நன்றி : தினமணி

கறை விரும்பாத வெள்ளைக் கார்கள்

ஒரு கொலைச் சம்பவம் சரியாகக் கையாளப்படாதபோது,​​ அதைக் காண நேர்ந்திராதவர்களையும் காயப்படுத்தி,​​ மனதை ரணமாக்கி,​​ பீதிக்குள்ளாக்கிவிடும் என்பதற்கு ஓர் உதாரணம்,​​ அண்மையில் நெல்லைச் சீமையில் ஆழ்வார்குறிச்சி அருகே காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்!

இறந்தவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என்பதோ அல்லது ஆள்மாறாட்டத்தால் நடந்த கொலை என்பதோ இதில் முக்கியமில்லை.​ ஒரு மனிதர்,​​ ஒரு வன்முறைக்கும்பலால் வலதுகால் வெட்டித் துண்டிக்கப்பட்டு,​​ ரத்தம் சொட்டச்சொட்ட சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறார்.​ ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.​ பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்.​ விடியோ கேமராக்கள் வலம் வருகின்றன.​ தமிழக அரசின் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆள்,​​ படை,​​ வாகனங்களுடன் நிற்கிறார்கள்.​ ஆனாலும் சாலையில் விழுந்துகிடக்கும் மனிதருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.​ இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.​​

அவருக்குத் தண்ணீர் கொடுக்கச் செல்லும் நபர்,​​ அங்கே தலையை உயர்த்தி ஏதோ பேச வரும் உதவி ஆய்வாளரின் கைக்குள் சிக்காமல் விலகி ஓடுகிறார்-​ ஏதோ மனிதவெடிகுண்டைக் கண்டதைப்போல!​ ​ எதற்காக இந்தக் கொலை?​ அவர் சொல்ல வரும் விஷயம் என்ன?​ அத்தனை பேர் அருகிருந்தும் அவரது கடைசி வார்த்தையை,​​ அவர் பிரக்ஞையுடன் இருக்கும்போதே கேட்கத் துணியும் நபர்கள் யாருமே இல்லை.​ ​(சிறகுகள் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டு இவர்களைப் போலவே ​ இராமன்,​​ இலக்குமணன் ஒதுங்கி நின்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்?​ சீதையைக் கடத்திச் சென்ற ராவணன் பற்றித் தெரியாமலே போயிருக்கும்!)

அமைச்சருடன் இருந்த சில அரசியல்வாதிகளைத் தவிர,​​ பலரும் காவல்துறையில் பணிபுரிபவர்கள்.​ அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சிகள் நிச்சயமாக அளிக்கப்பட்டிருக்கும்.​ அவர்கள் ஏன் வெற்றிவேலை உடனடியாக ஒரு காரில் கொண்டு செல்லவில்லை?​ வலது கால் துண்டான நிலையில்,​​ ரத்தப் போக்குடன் துடித்துக் கொண்டிருந்த அவரை,​​ அங்கிருந்த ஏதேனும் ஒரு காரில் கொண்டு செல்லவும்,​​ எதிர்ப்படும் 108 ஆம்புலன்ஸýக்கு அவரை மாற்றி,​​ முதலுதவியை முறைப்படி அளிக்கவும் செய்திருந்தால் வெற்றிவேல் பிழைத்திருக்கக்கூடும்.​ அமைச்சர் அல்லது அவருடன் வந்த கார்களைப் பயன்படுத்த பலத்த யோசனை ஏன்?​ கார் ரத்தக் கறை பட்டுவிடுமே என்ற அச்சம்தானே!​ அல்லது,​​ காரிலேயே அவர் இறந்துவிட்டால் அந்தக் காரின் புனிதம் கெட்டுவிடுமே என்ற எண்ணமா?​ எதற்காகக் கடைசிவரை காத்திருந்து,​​ 108 வாகனம் வராது என்று தெரிந்தபிறகு அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்!.

"ஆம்புலன்ஸில் எல்லா வசதிகளும் இருக்கும் என்று நினைத்தோம்.​ இதுபோன்று காயமடைந்தவர்களைக் கையாண்டு பழக்கமில்லை' என்று பொது சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.​ கே.​ பன்னீர்செல்வம் சொல்வது அவரது அமைச்சர் பதவிக்கும்,​​ பொறுப்பு வகிக்கும் துறைக்குமே பெருத்த அவமானம்.​ இத்தகைய ஒரு பதிலை,​​ சாதாரண மனிதர்கள் சொல்லலாம்.​ ஆனால் ஓர் அமைச்சர் சொல்லலாமா?​ ​ 108-க்குப் போன் செய்வது ஏதுமறியா பாமரனின் வேலை.​ ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் ​ கட்டளையிட்டால்,​​ செயல்பட ஆள்,​​ படை,​​ வாகனம் எல்லாமும் உடன் நிற்கிறது.​ ஆனால் அமைச்சர்களும் வேடிக்கை பார்ப்பதென்றால்..

காமராஜ் முதல்வர் பதவியில் இல்லாத வேளையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது.​ மாநாட்டுக்கு வெளியே ஒரு காங்கிரஸ் தொண்டர்,​​ ஆளும் கட்சியினருடனான மோதலில் காயமடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட மேடைக்கு அழைத்துவரப்பட்டபோது,​​ "அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இங்கே ஏன் அழைத்து வருகிறீர்கள்' என்று காமராஜ்,​​ அவர்களைக் கடுமையாகத் திட்டி,​​ விரட்டி அடித்தார்.​ அவரது கோபத்துக்குக் காரணம் மேடை ரத்தக்கறை ஆகிவிடுமே என்ற அருவருப்பு அல்ல.​ மாநாட்டு மேடையில் இரத்தத்தைக் காட்டி தொண்டர்களை சூடுபடுத்துவதைத்தான் அவர் அருவருப்பாகக் கருதினார்.

ஆனால்,​​ சாலையில் வெட்டுப்பட்டுக் கிடக்கும் ஒருவரை இரு அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றிருந்தால்,​​ அவர்களது வெள்ளைக் கார்களில் படிந்திருக்கக்கூடிய ரத்தக் கறை ஆட்சியையும் அவர்கள் சார்ந்த கட்சியையும்கூட பெருமைப் படுத்தியிருக்கும்.​ ஆனால் அமைச்சர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை.​ அவர்களும் 108-க்குப் போன் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கான தலைமைப்பண்பு இல்லை என்பதைத் தவிர,​​ சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.

இந்தச் சம்பவம் முழுவதும் வடஇந்திய தனியார் டி.வி.​ சானல்களில் ஒளிப்பரப்பாகின.​ தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவான தனியார் டி.வி.​ சானல்கள் இதைத் தணிக்கை செய்து ஒளிபரப்பின என்றாலும்,​​ எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியில் இதே கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகின.​ அமைச்சர்களின் செயலை அம்பலப்படுத்துவதற்காக இதைச் செய்திருக்கிறார்கள் என்றாலும்,​​ இதைக் காண நேர்ந்த பொதுமக்கள்,​​ சிறார்கள் மனதில் எத்தகைய பதற்றத்தை,​​ பீதியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின என்பதை விவரிக்க இயலாது.​ ஓர் உயிரின் துடிப்பு,​​ பலரையும் துடிதுடிக்க வைத்தது.​ ​

அந்த அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் எத்தனை தவறோ அதே அளவுக்குத் தவறான செய்கை-​ தனியார் டி.வி.​ சானல்கள் இதை ஒளிபரப்பி அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்த முற்பட்டது!
நன்றி : தினமணி

'பால் விலையை உயர்த்தாவிட்டால் மீண்டும் போராட்டம்'

''பசும்பாலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வழங்க வலியுறுத்தினோம். இடைத்தேர்தல் வந்ததால், தேர்தல் முடிந்து அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். தற்போது திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிந்ததும், பொங்கலுக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அறிவித்தனர். அரசு பால் விலையை உயர்த்தாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்,'' என தமிழ்நாடு பால் உற்பாத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் கூறினார்.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம், தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் செய்கிறது. தமிழகம் முழுவதும், ஏழு லட்சத்துக்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் உள்ளனர். தினமும் 48 லட்சம் லிட்டர் முதல் 50 லட்சம் லிட்டர் வரை, பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும், அதைச் சார்ந்த விவசாயம் செய்து வருகின்றனர். அன்றாடம் மாடுகளுக்கு தேவையான தீவனம், பருத்திக் கொட்டை, தவிடு போன்ற அனைத்து பொருட்களும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், பால் உற்பத்தி செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு 29 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், பாலுக்கான கொள்முதல் விலை, குறைவாக உள்ளதால், கறவை மாடுகள் வளர்ப்பதை விவசாயிகள் கைவிடும் நிலையில் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் அம்மாநிலங்களில் பால் வளத்தை பெருக்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால், தமிழக அரசு பால் உற்பத்தியை பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஆவின் நிறுவனத்தில் நடக்கும் குளறுபடியால், பெரும்பாலான கொள்முதல் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்படுவதில்லை.


தமிழ்நாடு பால் உற்பாத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் கூறியதாவது: அரசு செப்டம்பர் மாதம் பால் கொள்முதல் விலையை உயர்த்தியது. இதன்படி, எருமை பால் ஒரு லிட்டருக்கு 18 ரூபாயிலிருந்து 23 ரூபாயாக உயர்த்தியது. பசும்பால் ஒரு லிட்டருக்கு 13.64 ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய் மட்டும் அதிகரித்து 15.64 ரூபாயாக அறிவித்துள்ளது. பசும்பாலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வழங்க வலியுறுத்தினோம். இடைத்தேர்தல் வந்ததால், தேர்தல் முடிந்து அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். தற்போது திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிந்ததும், பொங்கலுக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அறிவித்தனர். அரசு பால் விலையை உயர்த்தாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில், பால் கொள்முதல் விலை தவிர, ஊழியர்கள் பணிநிரந்தரம் குறித்து பேசினோம். பத்து நாளில் செய்வதாக கூறப்பட்டது. இரண்டரை ஆண்டாக பணிநிரந்தரம் செய்யாமல் உள்ளனர்.

ஆந்திரா, கர்நாடகா அரசுகள், பால் உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில்லை. கூட்டுறவு ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பாக்கி வைக்கப்படுகிறது. தர்மபுரியில் இரண்டு மாதமும், விழுப்புரத்தில் 40 நாட்களுக்கும், பணம் வழங்காமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கறவை மாடுகளை கணக்கு பார்க்காமல் வளர்க்கின்றனர். முறையாக கணக்கு பார்த்தால், லிட்டருக்கு 29 ரூபாய் வரை வழங்க வேண்டும். விலை உயர்த்துவதாக கூறி நான்கு மாதங்களான போதும், இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், பால் உற்பத்தி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.
நன்றி : தினமலர்


ரூ.1,900க்கு கம்ப்யூட்டர் பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

கிராம மக்களுக்கு தவணை முறையில்,1900 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் விற்பனை செய்யும் திட்டத்தை பி.எஸ்.என்.எல்., துவக்கி உள்ளது. பி.எஸ்.என்.எல்., சேவை பற்றி தெரிந்து கொள்ளவும், சலுகை விலையில் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கி ஏராளமான திட்டங்கள் பற்றி அறியவும் சிவகாசியில் இரண்டு நாட்கள் 'மெகா மேளா' நடத்தப்பட்டது.

கிராம எக்ஸ்சேஞ்சுகள் மூலம் நோவாநெட் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. பராமரிப்பு தேவையில்லை, இரண்டாண்டு உத்தரவாதம், சிக்கலற்ற மல்டி மீடியா, வைரசிலிருந்து முழுமையான பாதுகாப்பு, வாழ்நாள் முழுவதற்கும் மென்பொருள் உத்தரவாதம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மானிட்டர், கீபோர்டு, மவுஸ் வாடிக்கையாளரிடம் இருக்கும். மெமரி கன்ட்ரோல் பி.எஸ்.என்.எல்., வசம் இருக்கும். ஐந்து ஆண்டு உத்தரவாதம் உள்ளது. இதன் விலை 1,900 ரூபாய். மாதாந்திர கட்டணங்கள் ரூ.274, ரூ.325 க்கு உள்ளன. டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு 2,550 ரூபாய் செலுத்தி புதிய கம்ப்யூட்டர் பெறலாம். மாதம் ரூ.300 வீதம், 60 மாதங்களுக்கும், ரூ.455 வீதம் 36 மாதங்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் திட்டங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு கிராமப்புற டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளை தொடர்பு கொள்ளலாம்.
நன்றி : தினமலர்