Friday, August 14, 2009

கார்ப்பரேட் லோன்களில் கவனம் செலுத்துகிறது எச்.எஸ்.பி.சி., வங்கி

கார்ப்பரேட் லோன்களில் கவனம் செலுத்துகிறது எச்.எஸ்.பி.சி., வங்கி. எச்.எஸ்.பி.சி., நிறுவனம் தனது பிசினசை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் லோன்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் 8 சதவீதம் குறைந்ததன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எச்.எஸ்.பி.சி., பொது மேலாளர் நைநா லால் கிட்வாய் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ரிசர்வ் வங்கியடம் இருந்து கவுகாத்தி, சூரத், நாசிக் ஆகிய பகுதிகளில் வங்கிகள் அமைக்க அனுமதி பெற்றுள்ளது. எனவே பரவலாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான லோன் வழங்கும் திட்டம் நல்ல ஆதரவை பெறும் என எச்.எஸ்.பி.சி., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


தவறான பாதையில் தவறான சிந்தனை...

கல்வித்துறையின் சீர்திருத்தம் பற்றிய அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று பள்ளிகளின் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம். இது சரியான ஒரு நடவடிக்கையா எனும் விவாதம் பல கல்வித்துறை அறிஞர்கள் மத்தியிலும் ஆசிரியர், பெற்றோர் மத்தியிலும் உருவாகியுள்ளது.
பொதுவாகவே ஒரு புதிய திட்டம் உருவாக்கப்படும்போது அதில் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளை முழுமையாகப் பெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை தொடரப்பட வேண்டும் என்பது மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ள ஆட்சிமுறை. ஆனால் நமது நாட்டில் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் திட்டமாக உருவாகி, பின் அவற்றை உத்தரவுகளாக மாற்றி சம்பந்தப்பட்ட துறைகளிடம் அளித்து நிறைவேற்றச் சொல்வார்கள். இதனால்தான் முடிவுகள் எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை என்பது அனுபவம் நமக்குக் கற்றுத்தந்த பாடம். மேல்மட்ட முடிவுகள் கீழ்மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் கருத்தில் கொள்ளப்படுவதோ, விவாதிக்கப்படுவதோ கிடையாது. தற்போது விவாதத்தில் இருக்கும் 10-ம் வகுப்புத் தேர்வைக் கைவிடும் திட்டமும் அந்தவகையான ஒரு பயனற்ற முடிவை அளித்து நமது மக்களை - குறிப்பாக கிராமப்புறங்களின் இளம்மாணவர்களைப் பாதித்து விடுமோ எனும் கவலை உருவாகியுள்ளது.

இளம் வயதில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் பாடங்களை ஒழுங்காகப் படிப்பது முதல் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது வரையிலான ஒழுக்க நடவடிக்கைகளை உருவாக்கும் ஒரே அம்சம் தேர்வுகளே என்பது அனுபவம் தந்த பாடம்.

நான் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணவனாக இருந்து படிக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். எங்கள் பள்ளியின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண்கள் வந்த பின்னர் தலைமை ஆசிரியரான பாதிரியார், குறிப்பிட்ட ஒருநாளில் குறிப்பிட்ட வகுப்பு நேரத்தில் எங்கள் வகுப்பிற்கு வருவார். அதற்கு முன்னரே நாங்கள் எடுத்த மதிப்பெண்களின் விவரங்கள் அடங்கிய முன்னேற்ற அட்டவணைகளில் மதிப்பெண்கள் குறிக்கப்பட்டு, பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்டு தயாராக ஆசிரியர்வசம் இருக்கும்.

தலைமை ஆசிரியர் வந்தபின் எத்தனை மாணவர்கள் குறைந்த மதிப்பெண் 35-க்கு குறைவாகப் பெற்றிருக்கிறார்கள் எனக் கூறப்பட்டு, அவர்கள் எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும். பின் வகுப்பாசிரியரிடம் ஏன் இவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என விசாரணை செய்யப்படும். ஒவ்வொரு மாணவனாக அழைக்கப்பட்டு தலைமை ஆசிரியர் முன்நிறுத்தப்பட்டு, அவரது கையிலிருக்கும் பிரம்பால் மாணவனின் உள்ளங்கையில் அடி கொடுக்கப்படும்.

எத்தனை அடிகள்? 31 மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு 4 அடிகளும், 32 மதிப்பெண் பெற்றவனுக்கு 3 அடிகளும் கிடைக்கும். 30 மதிப்பெண்களுக்குக் குறைவாக வாங்கிய மாணவன் முழங்காலிட்ட நிலையில் அடிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சென்ற தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கித் தோல்வி அடைந்து இந்த முறை வெற்றி பெற்றவர்களுக்குத் தனியே பாராட்டுதல்கள் வழங்கப்பட்டு இனிப்பும் வழங்குவார் தலைமை ஆசிரியர்.

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களில் 35 மதிப்பெண்களுக்குக் கீழே மதிப்பெண்கள் பெற்றவர்களின் பெற்றோர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டு அவர்கள் நேரில் வந்து தங்கள் பிள்ளைகளுடன் விடுதிக்காப்பாளரான பாதிரியாரைச் சந்தித்து ஏன் அந்த மாணவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் என்ற விவாதம் நடக்கும். தொடர்ந்து மூன்றுமுறை குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தோல்வியடைந்த மாணவன், ஒன்று பள்ளியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் அல்லது கீழ்வகுப்புக்கு இறக்கம் செய்ய ஒத்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற கடுமையான பல நடவடிக்கைகளின் விளைவாக மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிகள் நடத்தும் தேர்வுகளை மிகவும் அக்கறையுடன் அணுகுவார்கள். விளைவு அந்தக் காலத்தில், 11-ம் வகுப்பு முடிவில் நடக்கும் பொதுத்தேர்வு எங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. 100 சதவிகிதம் பொதுத் தேர்வில் தேர்ச்சி என்பது எங்கள் பள்ளியில் சர்வசாதாரணம்.

பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு எனும் ஒன்று இல்லை என்றால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாட போதனையிலும், வகுப்புக்கு வராமல், வந்து அன்றாடம் பாடங்களை நன்றாகப் படித்து பொதுத் தேர்வை அணுக வேண்டும் எனும் சிரத்தையிலும் ஈடுபாடு இல்லாமல் போய்விடும். நமது மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு எல்லா மாணவர்களையும் ஒவ்வோராண்டும் அடுத்த வகுப்பிற்கு அனுப்பிவிடும் பழக்கம் சென்ற 10 ஆண்டுகளாகப் பழக்கத்தில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் இதே நிலைமை. ஆனால் விளைவுகள் மிகவும் வருந்தத்தக்க நிலைமையில் உள்ளது என்பதை அம் மாநிலத்தின் ஓர் ஆய்வு கூறுகிறது. நிறைய ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல், வாசித்தல் போன்ற சாதாரணப் படிப்பு அம்சங்கள்கூடத் தெரிந்திருக்கவில்லை.

எனவே தரமான கல்வி எனும் உயரிய குறிக்கோளும் தேர்வு எனும் நடவடிக்கையும் பிரிக்க முடியாதவை. மேலும் ஆசிரியர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதை அவர்கள் போதிக்கும் பாடங்களில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை வைத்துத்தான் நம்மால் முடிவு செய்ய முடியும். ஆசிரியர்களும் தங்கள் வேலைத்திறனின் வெளிப்பாடு தேர்வுகள்தான் என்பதால் மிகுந்த சிரத்தையுடன் பாடங்களைப் போதிப்பதிலும், மாணவர்களை இடைவிடாது படிக்க வைப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.

1978-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்பிற்கும், 10-ம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வுகள் நடத்தும் முறை அமலுக்கு வந்தது. அதற்குமுன் பள்ளிப்படிப்பு 11 ஆண்டுகள்தான். கல்லூரியில் புகுமுக வகுப்பு (பியுசி) எனப்படும் ஓராண்டுப் படிப்பு முடித்து, பி.ஏ., பி.எஸ்ஸி, டாக்டர், என்ஜினீயர் போன்ற பட்டப்படிப்புகளில் சேர வேண்டும். 1978-க்குப் பின் இந்த ஓராண்டுப் படிப்பு பள்ளிப்படிப்புடன் சேர்க்கப்பட்டு 12 ஆண்டுப் படிப்பாக மாறியது.

ஆக இன்றைய நிலைமையில் 10-ம் ஆண்டு பொதுத் தேர்வு இரண்டு முக்கியமான பணிகளைச் செய்கிறது. ஒன்று மேலே படிப்பைத் தொடரும் மாணவர்கள் 10 ஆண்டுகள் கல்வியைத் தரமாகக் கற்று அதிக மதிப்பெண்கள் பெற்று 11-ம் வகுப்புக்கு முன்னேறுவது. இரண்டாவதாக 10-ம் ஆண்டு பள்ளிப் பொதுத் தேர்வை முடித்துவிட்டு பல வேலைகளுக்கும் சென்று விடுகிறார்கள் நிறைய இளைஞர்கள். டிரைவர், பியூன், கடைகளில் விற்பனையாளர்கள், பல தொழிற்சாலைகளின் ஊழியர்கள் என எண்ணிலடங்காத வேலைகளுக்கு 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் செல்லும் சூழ்நிலை இன்று உள்ளது. இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டால் இதுபோன்ற வேலைகளுக்குச் செல்வதற்கே 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் எனும் நிலைமையை நாம் உருவாக்கி விடுவோம். கிராமப்புறங்களில் ஏழைப் பெற்றோர் மத்தியில் இது ஒரு பெரும் சுமையாக உருவாகும். மேலும் நமது நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்தின் முதுகெலும்பாக இருப்பது சிறு மற்றும் குறுந்தொழில்களே.

இவற்றுக்குத் தேவையான தொழிலாளர்களையும், டிப்ளமா என்ஜினீயர்களையும் பல்லாயிரக்கணக்கில் உருவாக்கும் ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 10-ம் வகுப்பு தேறிய மாணவர்களே சேர்கிறார்கள்.

10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து பொதுத் தேர்வு 12-ம் வகுப்பில் தான் எனும் நிலைமை உருவானால் மிகுந்த குழப்பமும், கிராமப்புறத்தில் வேலை வாய்ப்பு பெறும் நிறைய குடும்பங்களுக்குச் செலவும் காலவிரயமும் கூடி சமூகப் பாதிப்பு உருவாகும்.

ஒரு நாட்டின் பள்ளிக் கல்வி முறையும் சமூக அமைப்பும் எவ்வளவு பின்னிப் பிணைந்துள்ளன எனும் உண்மையைப் புரிந்துகொள்ள நமது அண்டை நாடான பாகிஸ்தானைப் பார்த்தால் போதும். தனிநாடாகப் பிரிந்தபோது அங்கும் நம் நாட்டைப்போல் ஆங்கிலேயர் உருவாக்கிய பள்ளிப் படிப்புதான் தொடர்ந்தது.

நாம் அதைப் பரவலாக்கிய வேளையில், பாகிஸ்தானின் சர்வாதிகாரி ஜியா உல் ஹக், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள மதவாதிகளின் ஆதரவுடன் கல்வியில் மதத்தைப் புகுத்தினார். பள்ளிப்படிப்புத் தேவையில்லை; மதரசாக்கள் வழங்கும் இஸ்லாமிய மதக்கல்வியே போதும் என்ற வகையில் ஆங்கிலக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு பள்ளிப்படிப்பே ஸ்தம்பித்துவிட்டது. மதரசாக்களில் படித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்களாக இருந்தனர்.

கல்வியின் அடிப்படையில்தான் தொழில்கள், வியாபாரங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைய முடியும் என்பது உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் மதப்பற்று மட்டும் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் சமூகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டதனால் அவர்கள் வன்முறையை தங்கள் வாழ்க்கை முறையாகத் தேர்ந்தெடுத்து தாலிபான் போன்ற அமைப்புகள் உருவாயின என சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் பாகிஸ்தானின் இன்றைய நிலைமை பற்றிக் கூறுகிறார்கள். அதாவது வேறு எந்த வேலையும் கிடைக்காத 16 வயது முதல் 20 வயது வரையிலான இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தி அடாவடி வாழ்க்கையை மிக சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வார்கள்.

பர்வேஸ் முஷாரஃப் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 25,000 மதக் கல்வி நிலையங்களை மூடி நம் நாட்டில் இருப்பதுபோல் பள்ளிகளை ஆரம்பிக்கச் சபதமேற்றார். ஆனால் மதவாதிகளின் ஆதிக்கத்தால் அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. தீவிரவாதம் அந்நாட்டையே அழித்துவிடும் நிலைமை உருவானது.

பள்ளிக்கல்வி சரியான முறையில் உருவாகி மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வில் தேறிய பின் வேலைகளில் அமரும் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சியின் அடித்தளம் என்பதை பாகிஸ்தான் தலைவர்கள் ஏக்கப் பெருமூச்சுடன் இந்தியாவை ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வித்துறை சீர்திருத்தம் என்கிற பெயரில், ஒட்டுமொத்த சமுதாயத்தையே சீர்கேடுகளில் தள்ளிவிட முயலும் முயற்சியாகத்தான் முடியும் அரசின் 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யும் திட்டம்!
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி

தொடரும் கோவை விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் : மு‌டங்கி கிடக்கும் 2 லட்சம் யூனிட்டுகள்

கோவை மாவட்டம் விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. சுமார் 16,000 பேர் ‌வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி யூனிட்டுகள் ஸ்டிரைக் காரணமாக முடங்கி கிடப்பதால், நாள் ஒன்றுக்கு சுமார் 15 முதல் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது . கோவை மண்டலத்தில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி யூனிட்டுகள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் முடங்கி கிடக்கின்றன. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் அளிக்கும் ஜாப் ஒர்க்கை எடுத்து செய்யும் இந்த யூனிட்டுகள், யார்னை துணியாக மாற்றித்தருகின்றன. ஒரு மீட்டர் யார்னை துணியாக மாற்ற 12 முதல் 20 ரூபாய் வரை பெறப்பட்டு வந்தது. தற்போது அதற்கு அளிக்கப்படும் கூலி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தான் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் விதித்துள்ள சுமார் 80 லட்சம் அபராதத்தையும் திரும்ப‌ப்பெறுமாறு கோரிக்கை வைத்துளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மண்ட,த்தில் தயாரிக்கப்படும் 60 சதவீதம் துணி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் தற்போது வேலைநிறுத்தம் நீடிப்பதால், ஏற்றுமதி 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


மலேசியாவில் வேலைக்கு சேர இந்திய சமையல்காரர்களுக்கு கிடுகிப்பிடி

மலேசிய உணவகங்களில் சமையல் வேலை செய்ய இந்தியாவில் இருந்து அதிகமானோர் படையெடுத்துக் கொண்டிருந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து விட்டது மலேசிய உணவகங்கள், இனிமேல் சொந்த நாட்டில் இருப்பவர்களுக்கே சமையல் வேலையை அளிக்க தீர்மானித்துள்ளது. மலேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் எஸ் சுப்பிரமணியம் , மலேசிய உணவகங்களில் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை நியமிப்பதை தவிர்த்து உள்ளூர் வாசிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக மலேசிய அரசே கேட்டரிங் இன்ஸ்ட்டியூட் ஒன்றை நிறுவியுள்ளது. மேலும் கல்விக் கட்டணத்திலும் மலேசிய அரசு சலுகைகள் அறிவித்துள்ளது. அந்நாட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக மலேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் எஸ் சுப்பிரமணியம் கூறினார். இதே போல் முடித்திருத்தகங்களிலும் இந்தியாவில் இருந்து ஆட்களை பணியமர்த்துவது குறித்து மறு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டங்கள் இரண்டும், மலேசிய பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.
நன்றி : தினமலர்


யார் மணி கட்டுவது?

உலகம் அறிந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவராகப் பிரதமர் மன்மோகன் சிங் இருந்த போதிலும் அவருக்கு ஆலோசனைகள் கூறி உதவ ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜன் பொறுப்பேற்றிருப்பது வரவேற்கத் தக்கது.

பதவி ஏற்ற பிறகு ரங்கராஜன் சுட்டிக்காட்டியிருக்கும் சில முக்கியமான பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை உடனே துவக்கினால் நல்லது.

""வேளாண்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நம் நாட்டுப் பொருளாதாரமே பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாகப் பாசன மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்க, வேலைவாய்ப்புத் தரும் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வு மக்களைப் பாதிக்காமல் இருக்க குறுகிய கால மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் அவசியம். நம்மால் உடனே சாகுபடி செய்ய முடியாத பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்து நேரடியாக விநியோகிக்க வேண்டும். அடுத்த பருவத்துக்குப் போதிய அளவில் பருப்பு, எண்ணெய்வித்து சாகுபடிக்கு உற்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக சீராக இருந்த நம்முடைய ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிவீதம், கடந்த ஆண்டு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாகச் சரிந்துவிட்டது. கடந்த ஆண்டு 6.7% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு 6% முதல் 6.5% அளவுக்குள் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

வறட்சி, விளைச்சல் குறைவு என்று சந்தையில் பேச்சு வந்தாலே விலைவாசி உயர ஆரம்பித்துவிடும். வாங்கும் சக்தி குறைவாக உள்ள மக்கள் நிறைந்த நம் நாட்டில் விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறினால் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். கோடிக்கணக்கான மக்கள் பழையபடி வறுமைக் கோட்டுக்கும் கீழே போய்விடுவார்கள்.

பொது விநியோக முறையைச் சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் உண்மையிலேயே தீவிரமான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். ஏழைகளுக்கு மட்டும் அல்ல, மத்திய தர குடும்பங்களுக்கும் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பண்டங்கள் மானிய விலையில் இல்லாவிடினும் கட்டுபடியாகும் விலையில் தட்டுப்பாடு இல்லாமல் நல்ல தரத்தில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியிருக்கிறார் ரங்கராஜன்.

அவரது அறிவுரைகளை ஆட்சியாளர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களுடைய வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்வதையும் அப்படிச் செய்வது குறித்து கவலைப்படாமல் இருப்பதையும் உணர்ந்து அதைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் ""நிதிப் பொறுப்பு மசோதா'' கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதா கூறியபடி எந்த மாநிலமாவது, மத்திய அரசாவது நடக்கிறதா என்று பார்த்தால் இல்லை.

பொது விநியோக முறையில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை விற்பதன் மூலமும், மண்ணெண்ணெய், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை அரசுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விலை குறைத்து விற்பதன் மூலமும், விவசாயிகளுக்கு ரசாயன உரங்களுக்கு மானியம் தருவதன் மூலமும், விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் இலவசமாக மின்சாரம் தருவதன் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய்கள் மானியம் என்ற பெயரில் செலவாகின்றன.

இந்த மானியங்கள் அவசியமானவை என்று ஒப்புக்கொண்டாலும், மானியம் என்ற காரணத்தாலேயே வீணடிப்பதும், பாழ்படுத்துவதும் வரம்பின்றி அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமல் இல்லை.

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோட்டார், ஸ்டார்ட்டர், வயர் ஆகியவற்றைப் புதுப்பிக்காமலும், பராமரிக்காமலும் அலட்சியமாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஏராளம். அத்துடன் சிறு தொழில் நிறுவனங்களும், கடைகளும் இந்த மின்சாரத்தைத் தங்கள் பங்குக்குத் திருடுவதும் கணிசம். இந்தக் காரணங்களாலேயே அரசின் நிதி கோடிக்கணக்கில் பாழாகிறது.

மானியம் என்பது மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுப்பதுதான் என்பது அனைவருக்கும் தெரியும். கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, சாலை வசதி, தகவல் தொடர்பு இணைப்பு வசதி, மின்னுற்பத்தி போன்ற அவசியமான செலவுக்குத் தேவைப்படும் பணத்தை மானியமாகத் தருவதென்றால், அது அவற்றைவிட அவசியமான தேவைக்கானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த மானியத்தைச் செலவழிப்பதில் அர்த்தம் இருக்க முடியும். மானியங்களை முறையாகப் பயன்படுத்தாதவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம்தான் அலட்சியப் போக்கைத் தடுக்க முடியும். நிர்வாகம் என்பது அதுதான் அல்லவா?

நன்றி : தினமணி

உருகாத சாக்கலேட்டுகள் : வெப்ப பிரதேசங்களுக்காக பேரி கேல்பாட் நிறுவனம் புது முயற்சி

சாக்கலேட்டுகளுக்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் சற்று வெப்பம் அதிகமாக இருக்கும் நாடுகளில் பிரிட்ஜ் இல்லையென்றால் சக்கலேட்டு கூலாக மாறி விடுகிறது. சாக்கலேட் பிரியர்கள் சந்திக்கும் இந்த அசவுரியகத்திற்கு பை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது வெப்பத்தை தாக்கு பிடிக்கும் புதிய ரக சாக்கலேட்டுகள். சாக்‌கலேட் இன்டஸ்டிரீயில் தனக்கு என தனி முத்திரை கொண்‌டதுரி கேல்பாட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் சுமார் 55 டிகிரி வரை வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாக உள்ளன. கூடுதல் சந்தோஷம் என்னவென்றால், இம்மாதிரியான சாக்கலேட்டுகள் லோ கலோரி கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன . சாக்கலேட் விற்பனை குறித்து தெரிவித்த பேரி கேல்பாட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹான்ஸ் ரையன்ஸ் : மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் சாக்கலேட் பிரியர்கள் சற்று குறைவு தான் . அதற்கு சாக்கலேட்டுகள் உருகி விடுவதும் ஒரு காரணம் என்றார். பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் தான் அதிக அளவில் சாக்கலேட்டுகளை எக்ஸ்போர்ட் செய்வதாக கூறிய அவர் புதிய க்ளையன்டுகளை இணைப்பதற்காகத்தான் இம்மாதிரியான புதுமைகள் புகுத்தப்படுவதாகவும் கூறினார். புதிய உருகாத சாக்கலேட்டுகளுக்கு பேரி கேல்பாட் நிறுவனம் ' வால்க‌னோ' என்று பெயர் வைத்துள்ளது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த சாக்க‌லேட்டுகள் வெப்பத்துக்கு தான் ரெசிஸ்டன்ட் , ஆனால் வாயில் போட்டவுடன் எச்சில் பட்ட நிமிடத்தில் கரைந்து விடுமாம். எனவே சாக்கலேட்டின் தன்மை மாறாமல், வெப்பத்துக்கும் தாக்குப்பிடிக்கும் இந்த புதிய படைப்புக்கு அமோக வரவேற்பு இருக்கும் என பேரி கேல்பாட் நிறுவனம் நம்பிக்கை ‌தெரிவித்துள்ளது. உருகாத சாக்கலேட் தயாரிப்பு சக்சஸ் ஆனவுடன், ஆரோக்யமான, சத்து நிறைந்த சாக்கலேட்டுகளை உருவாக்கும் திட்டத்தில் களமிறங்குகிறது பேரி கேல்பாட்..

நன்றி : தினமலர்


வயதான விவசாயிகளுக்கு பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்துகிறது கேரள அரசு

வயதான விவசாயிகளுக்கு பென்ஷன் அளிக்கும் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தை நாட்டிலேயே கேரள அரசு தான் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது என்ற பெருமையையும் பெருகிறது. மலாயள புது வருடம் ஆகஸ்ட் 17ம் தேதி அன்று வருகிறது. அன்றைய தினம் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தால் சமூக பாதுகாப்பு வளையத்துக்குள் வயதான விவசாயிகள் வருகின்றனர் என கேரள வேளாண் துறை அமைச்சர் முல்லக்கரா ரத்னகரன், திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியபோது கூறினார். ஆகஸ்ட் 17ம் தேதியன்று நடக்கும் விழாவின் போது கேரள முதல்வர் அச்சுதானந்தன் திட்டத்தை துவக்கி வைக்கிறார் . அன்றைய தினமே கேரள மாநிலம் மான்கொம்பு என்ற இடத்தில் குட்டநாடு பகுதி அரிசி விளைநிலங்கள் இருக்கும் பகுதியில், நடக்கும் விழாவில் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கே.வி.தாமஸ் முதல் கட்டமாக வயதான விவசாயிகளுக்கு பென்ஷன் காசோலையை வழங்குகிறார். இந்த திட்டத்தால் பயணடைய, 60 வயதுக்கு மேல் இருக்கும் விவசாயியாக இருக்க வேண்டும். மேலும், 10 சென்ட்டில் இருந்து இரண்டு ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலத்தில் விவசாயம் செய்து வருபவராகவும், தனது 50 சதவீத வருமானத்தை விவசாயம் மூலம் பெறுபவராகவும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் உடைய விவசாயிக்கு மாதம் ரூ.300 பென்ஷனாக வழங்கப்படும். மேலும் விவசாயிக்கு பெண் குழந்தை இருந்த‌ால், அவரது திருமணத்தின் போது சுமார் 25,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும் ‌என தெரிகிறது. ஆனால் ஒரு விவசாயிக்கு எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் இந்த சலுகை செல்லும். இந்த ஆண்டில் மட்டும் சுமார் 250 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. விவசாயி மரணமடையம் பட்சத்தில் அவரது பென்ஷனில் பாதி, அவரது மனைவிக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிட‌த்தக்கது.
நன்றி : தினமலர்