Friday, August 14, 2009

யார் மணி கட்டுவது?

உலகம் அறிந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவராகப் பிரதமர் மன்மோகன் சிங் இருந்த போதிலும் அவருக்கு ஆலோசனைகள் கூறி உதவ ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜன் பொறுப்பேற்றிருப்பது வரவேற்கத் தக்கது.

பதவி ஏற்ற பிறகு ரங்கராஜன் சுட்டிக்காட்டியிருக்கும் சில முக்கியமான பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை உடனே துவக்கினால் நல்லது.

""வேளாண்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நம் நாட்டுப் பொருளாதாரமே பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாகப் பாசன மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்க, வேலைவாய்ப்புத் தரும் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வு மக்களைப் பாதிக்காமல் இருக்க குறுகிய கால மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் அவசியம். நம்மால் உடனே சாகுபடி செய்ய முடியாத பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்து நேரடியாக விநியோகிக்க வேண்டும். அடுத்த பருவத்துக்குப் போதிய அளவில் பருப்பு, எண்ணெய்வித்து சாகுபடிக்கு உற்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக சீராக இருந்த நம்முடைய ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிவீதம், கடந்த ஆண்டு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாகச் சரிந்துவிட்டது. கடந்த ஆண்டு 6.7% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு 6% முதல் 6.5% அளவுக்குள் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

வறட்சி, விளைச்சல் குறைவு என்று சந்தையில் பேச்சு வந்தாலே விலைவாசி உயர ஆரம்பித்துவிடும். வாங்கும் சக்தி குறைவாக உள்ள மக்கள் நிறைந்த நம் நாட்டில் விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறினால் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். கோடிக்கணக்கான மக்கள் பழையபடி வறுமைக் கோட்டுக்கும் கீழே போய்விடுவார்கள்.

பொது விநியோக முறையைச் சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் உண்மையிலேயே தீவிரமான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். ஏழைகளுக்கு மட்டும் அல்ல, மத்திய தர குடும்பங்களுக்கும் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பண்டங்கள் மானிய விலையில் இல்லாவிடினும் கட்டுபடியாகும் விலையில் தட்டுப்பாடு இல்லாமல் நல்ல தரத்தில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியிருக்கிறார் ரங்கராஜன்.

அவரது அறிவுரைகளை ஆட்சியாளர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களுடைய வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்வதையும் அப்படிச் செய்வது குறித்து கவலைப்படாமல் இருப்பதையும் உணர்ந்து அதைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் ""நிதிப் பொறுப்பு மசோதா'' கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதா கூறியபடி எந்த மாநிலமாவது, மத்திய அரசாவது நடக்கிறதா என்று பார்த்தால் இல்லை.

பொது விநியோக முறையில் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை விற்பதன் மூலமும், மண்ணெண்ணெய், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை அரசுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விலை குறைத்து விற்பதன் மூலமும், விவசாயிகளுக்கு ரசாயன உரங்களுக்கு மானியம் தருவதன் மூலமும், விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் இலவசமாக மின்சாரம் தருவதன் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய்கள் மானியம் என்ற பெயரில் செலவாகின்றன.

இந்த மானியங்கள் அவசியமானவை என்று ஒப்புக்கொண்டாலும், மானியம் என்ற காரணத்தாலேயே வீணடிப்பதும், பாழ்படுத்துவதும் வரம்பின்றி அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமல் இல்லை.

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோட்டார், ஸ்டார்ட்டர், வயர் ஆகியவற்றைப் புதுப்பிக்காமலும், பராமரிக்காமலும் அலட்சியமாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஏராளம். அத்துடன் சிறு தொழில் நிறுவனங்களும், கடைகளும் இந்த மின்சாரத்தைத் தங்கள் பங்குக்குத் திருடுவதும் கணிசம். இந்தக் காரணங்களாலேயே அரசின் நிதி கோடிக்கணக்கில் பாழாகிறது.

மானியம் என்பது மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுப்பதுதான் என்பது அனைவருக்கும் தெரியும். கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, சாலை வசதி, தகவல் தொடர்பு இணைப்பு வசதி, மின்னுற்பத்தி போன்ற அவசியமான செலவுக்குத் தேவைப்படும் பணத்தை மானியமாகத் தருவதென்றால், அது அவற்றைவிட அவசியமான தேவைக்கானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த மானியத்தைச் செலவழிப்பதில் அர்த்தம் இருக்க முடியும். மானியங்களை முறையாகப் பயன்படுத்தாதவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம்தான் அலட்சியப் போக்கைத் தடுக்க முடியும். நிர்வாகம் என்பது அதுதான் அல்லவா?

நன்றி : தினமணி

No comments: