Thursday, August 20, 2009

உலகின் சக்தி வாய்ந்த 20 பெண்மணிகளில் ஒருவராக சந்தா கோச்சார் தேர்வு

உலகின் சக்தி வாய்ந்த 20‌ பெண்மணிகளுள் ஒருவராக ஐ.சி.சி., வங்கியின் சி.இ.ஓ., மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகில் அதிக செல்வாக்கான பெண்மணிகள் லிஸ்ட்டை கடந்த நான்கு வருடங்களாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிசினஸ் பத்திரிக்கை போர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்த வருட லிஸ்ட், புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் அதிக செல்வாக்கான பெண்கள் வரிசையில் முதல் இடத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கல் வந்திருக்கிறார். அதற்கு அடுத்ததாக, அமெரிக்க வங்கிகளை இன்சூர் செய்திருக்கும் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷனின் சேர்மன் ஷீலா பேய்ர் வந்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் பெப்சி கம்பெனியின் தலைமை நிர்வாகி இந்திரா நூயி ‌பிடித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா 12வது இடத்தையும், சந்தா கோச்சார் 20வது இடத்தையும் பிடித்துள்ளனர். சந்தா கோச்சர் ஐ.சி.ஐ.சி. ஐ, வங்கியின் முதல் பெண் சி.இ.ஓ., என்பது குறிப்பிடத்தக்கது. செலக்ஷன் குறித்து தெரிவித்த போர்ப்ஸ் பத்திரிகை, சக்திவாய்ந்த பெண்மணிகளை அவர்களது பாப்புலாரிட்டி வைத்து மட்டும் தேர்வு செய்வதில்லை, அவர்களின் ஆளுமை திறன் மற்றும் அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் அளவு அல்லது அவர்கள் தலைமை வகிக்கும் நாடு எவ்வளவு பெரியது என்பதை பொறுத்து தான் தேர்வு செய்யப்படுகிறார்கள் என தெரிவித்தது.
நன்றி : தினமலர்


நிர்வாகத்தில் கலந்துவிட்ட ஊழல்

இந்தியாவின் உயர் தொழில்நுட்பக் கல்வியை நிர்வகிக்கும் ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. சில வாரங்களுக்கு முன்பு சிபிஐ மற்றும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு இந்தப் புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் நடந்து முடிந்த சில நாள்களில் ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சிபிஐ பிடியில் சிக்கினார். கடந்த சில காலமாகவே செய்தித்தாள்களைப் புரட்டினால், ஊழல் புகாரில் சிக்கிக் கொண்ட பெருந் தலைகள் பற்றிய செய்திகள்தான் அதிகமாகத் தென்படுகின்றன.

தேசத்தின் வளத்தை ஒருகூட்டம் இப்படிச் சுரண்டிக் கொண்டிருக்கும்போது, சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்கவில்லை என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிப் பேருக்குத்தான் முறையான, தரமான நோய்த்தடுப்பு வசதிகள் கிடைக்கின்றன என ஓர் ஆய்வு கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் இந்தியா வந்த பில்கேட்ஸ், "உலகின் மிகவும் தரமற்ற மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று' என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். அவர் இப்படிக் கூறும்போது பிரதமரும் உடன் இருந்தார்.

இது போதாதென்று, அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சேற்றைவாரி வீசிக்கொள்ளும் நகைச்சுவைச் செய்திகளும் பத்திரிகைகளில் பக்கம் தவறாமல் இடம்பிடிக்கின்றன. மழை பெய்யாமல் வறட்சி ஏற்படும் என்கிற கவலையைப் போக்கும் வகையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நல்ல சேதிதான். ஆனால், இந்த மழையால் வீடுகள் நீரில் மூழ்குவதையும், போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லையே. மழை பெய்யாவிட்டால் பிரச்னை; பெய்தால் பெரிய பிரச்னை. இதுபோன்ற செய்திகள் மட்டும் செய்தித்தாள்களை ஆக்கிரமித்திருப்பது, நல்ல விஷயங்களே நாட்டில் நடக்கவில்லையா என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஊழல்வாதிகள் பிடிபடுவதற்கும், மழைநீரில் வீடுகள் மூழ்குவதற்கும், மருத்துவ வசதிகள் தரமற்றுப் போனதற்கும் தொடர்பில்லை என்று நினைத்தால் அது தவறு. இந்த மாதிரியான செய்திகள் ஒன்றைத் தெளிவாக்குகின்றன. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் நாட்டின் புதிய விதிமுறைகளாக மாறிவிட்டன என்பதுதான் இந்தச் செய்திகள் நமக்குச் சொல்லும் சேதி.

ஏஐசிடிஇ தலைவரின் ஊழல் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். 1987-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு ஏஐசிடிஇ. தொழில்நுட்பக் கல்வியை நாடு முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அமைப்பின் மரியாதை கட்டெறும்பு ஊர்ந்த சுவராகத் தேய்ந்துகொண்டே வந்திருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துகளை வாரி வழங்கியிருக்கும் லட்சணத்தைப் பார்த்தாலே இந்த அமைப்பு எவ்வளவு "நேர்மையாக' நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும்.

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என்று கூறுவதுதான் லேட்டஸ்ட் ஜோக். அரசியல்வாதிகளும் பெரிய பதவியில் இருப்போரும் பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் நடத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். நன்கொடை வசூலிக்கக் கூடாது என இவர்களுக்கு யார் உத்தரவு போடுவது? இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பும் ஊழலின் கூடாரமாகிப் போய்விட்டால் குறைகளை யாரிடம்தான் போய்க் கூறுவது?

அடுத்தது பூட்டா சிங் கேஸ். எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவர் இவர். ரூ. ஒரு கோடி லஞ்சம் பெற முயன்றதாக இவரது மகன் பிடிபட்டார். இதற்காகப் பூட்டா சிங் கொஞ்சமும் பதறவில்லை. தம்மீது ஊழல் பழி சுமத்துவது இது முதல்முறையல்ல என்றார். இது தமக்குக் கிடைத்த பெரிய மரியாதை என்றும் கூறினார். இன்னும் எத்தனை ஊழல் புகார்களில் சிக்கினாலும் இதையேதான் இவர் திரும்பத் திரும்பக் கூறப்போகிறார்.

அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது ஊழல். எல்லாக் காலகட்டத்திலும் இது தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது. முகலாயர் காலத்திலேயேகூட கடைநிலை நிர்வாகத்தில் ஊழல் இருந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பும் ஊழல் இருந்தது. ஆனால், அப்போதெல்லாம் ஊழல் என்பது ஒரு விதியாக இருக்கவில்லை. இப்போது எல்லா நிலையிலும் ஊழல் ஓர் எழுதப்படாத சட்டமாகவே மாறியிருக்கிறது. இது தெரியாத அல்லது மதித்து நடக்காத அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முட்டாள்களாகவே கருதப்படுகின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு சில ஆண்டுகள்வரை நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்பது சமூகத்தின் மிக அடிப்படையான தேவை. மிக மோசமான ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகள்கூட நோய்த் தடுப்பு மருந்துத் திட்டங்களை நூறு சதவீதம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலோ வெறும் 50 சதவீதம் பேருக்குத்தான் நோய்த்தடுப்பு மருந்துகள் சென்றடைகின்றன.

60 ஆண்டு கால இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் தோல்வி இது. இந்த விஷயத்துக்கு ஊடகங்கள் பெரிய முக்கியத்துவம் தராமல் போனது அதைவிட வேதனை. பில்கேட்ஸ் இதைச் சொன்னார் என்பதால்தான் இந்த அளவுக்காவது இந்த விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது.

கல்வி கற்கும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பவைதான் இதன் முக்கிய நோக்கங்கள்.

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் "கடுமையான நடவடிக்கைகள்' போல இந்தச் சட்டமும் அமலாக்கப்பட்டால், நோக்கங்கள் எதுவும் நிறைவேறாது.

உண்மையில், விடுதலையடைந்த புதிதில் உலக அளவில் கல்வி கற்கும் உரிமையைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியதே இந்தியாதான். சொந்த நாட்டுக்குள் அதைக் கொண்டுவருவதற்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

நாடு முன்னேற வேண்டுமானால், கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊழல், நிர்வாகச் சீர்கேடு, வளர்ச்சியில் தேக்கம், வருவாய் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் நெருக்கமான தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுச் சுகாதாரம், தொடக்கக் கல்வி, ஊழல் ஒழிப்பு, கட்டமைப்பு போன்றவற்றில் கவனத்தைத் திருப்ப வேண்டும். விடுதலையடைந்தபோதே இவற்றுக்குத்தான் அரசுகள் முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். ஏனோ அது நடக்கவில்லை. இப்போதாவது தொடங்க வேண்டும். பெரிய தாமதமில்லை.

கட்டுரையாளர் : டி . எஸ் . ஆர் . சுப்பிரமணியன்
நன்றி : தினமணி

அவசியம்தானா?

தமிழகக் காவல்துறையின் மாநில நுண்ணறிவுப் பிரிவு, தமிழ்நாடு அதிதீவிரப்படை, சிறப்பு இலக்குப்படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம் ஆகியவற்றுக்கு நவீன கருவிகளை வாங்க ரூ. 51 கோடிக்கு கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன; இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர்கள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட தமிழக முதல்வர் கருணாநிதியின் உரை வலியுறுத்துகிறது.

அத்துடன், உள்நாட்டுப் பாதுகாப்பு மேலாண்மையில் பணியாற்றுபவர்களுக்காகும் செலவை மத்திய அரசு முழுவதுமாக ஈடுகட்டலாம் என்ற யோசனையும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பைச் சிறப்பாகக் கையாண்டு வரும் மாநிலங்களுக்கு அதுபோன்ற உதவிகள் கிடைக்க வேண்டும், இல்லாவிட்டால் அது அந்த மாநிலங்களின் செயல்திறனைப் பாதிக்கும் என்ற எச்சரிக்கையும் அந்த உரையில் விடுக்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புக்காக மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இயங்கிவரும் "விரைந்து செயல்படும் குழுக்களுக்கான' (ஆர்.ஏ.எஃப்.) செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உரிய பயிற்சிகளை அளிக்கத் தனியாக ஒரு நிதியத்தையும் அமைக்க வேண்டும் என்று முதல்வர் தமது உரையில் கோரியிருக்கிறார்.

சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், குற்றச் செயல்களைக் கண்டுபிடிப்பதிலும் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் இப்போதும் திகழ்கிறது என்பதில் ஐயம் இல்லை. இன்றும்கூட தமிழ்நாட்டுக்கு வரும் வெளிமாநில காவல்துறை அதிகாரிகளும் வல்லுநர்களும் அதன் கட்டமைப்பையும் செயல்திறனையும் பாராட்டாமல் போவது இல்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில், ""தமிழகக் காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது, அதன் ஈரல் கெட்டுவிட்டது'' என்று இலக்கியச் சுவை பொங்க வர்ணித்தவர்தான் இன்றைய முதல்வர்.

இந்த ஆட்சியிலோ சட்டக் கல்லூரி மாணவர்களில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல்களின்போதும், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடனான மோதலின்போதும் தமிழகக் காவல்துறை செயல்பட்ட விதத்தை அல்லது செயல் இழந்துநின்ற நிலையை தமிழகம் மட்டும் அல்ல, அகில இந்தியாவே பதைபதைப்புடன்தான் பார்த்துக் கொண்டிருந்தது. எப்படி இருந்த தமிழகக் காவல்துறை எப்படி ஆகிவிட்டது என்று வருந்தாத தமிழர்களே இருக்க முடியாது.

இந்த நிலையில் இத்துறையின் வளர்ச்சிக்காகவும், மீட்சிக்காகவும் முதல்வர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வரவேற்கத்தக்கதே. அப்படி இருக்க 51 கோடி ரூபாய்க்கும் மேலும் சில கோடி ரூபாய்களுக்கும் தில்லி மன்றத்திலே போய் நீட்டோலை வாசிப்பதும், அதற்காகச் சிலமுறை தில்லிக்குக் காவடி எடுப்பதும் அவசியம்தானா என்ற கேள்வியும் எழுகிறது.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்க இதுவரை 4 கட்டங்களில் சுமார் 3,500 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக அரசு செலவிட்டிருக்கிறது. ஐந்தாவது கட்டமாக, வண்ணத் தொலைக்காட்சி இல்லாத அனைவருக்கும் சுமார் 25 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அரசே அறிவித்திருக்கிறது.

நமக்குத் தெரிந்து வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கதர் கிராம கைத்தொழில் வாரியத்தாலோ, தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர்களாலோ தயாரிக்கப்படுவதில்லை. இந்தப் பணம் எல்லாம் யாருடைய தொழில் செழிக்க, யாருடைய வங்கிக் கணக்கு பெருக்கச் செல்கின்றனவோ தெரியவில்லை. இதில் ஊழல் நடப்பதாகவும் கூறிவிட முடியாது. ஏன் என்றால் இந்தக் கொள்முதலுக்கான சர்வகட்சி கூட்டுக்குழுவில் கம்யூனிஸ்டுகள், பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் என்று அதிமுகவைத் தவிர ஏனைய அத்தனை மக்கள் நலன் பேணும் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கல்வி, சுகாதாரம், சாலை வசதி, மின்னுற்பத்தி, பாசன மேம்பாடு போன்றவற்றுக்குக் கிடைக்காத அரிய நிதியை இப்படி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குச் செலவிடும்போது, காவல்துறைக்காக வெறும் ரூ. 51 கோடிக்காக மத்திய அரசிடம் கையேந்துவது அவசியம்தானா? உள்துறை அமைச்சரே நம்மவர் எனும்போது, அதிநவீன வசதிகளை உரிமையுடன் கேட்டுப் பெறாமல், ஒரு சில கோடிகளுக்காக "காவடி' எடுப்பது அவசியம்தானா?
நன்றி : தினமணி

மும்பை நரிமன் பாயின்ட் கட்டிடத்தை மாற்றுங்கள் : ஏர் இந்தியாவுக்கு பிரபுல்படேல் பரிந்துரை

2008 - 09 நிதி ஆண்டில் ரூ.5,000 கோடி நஷ்டம் அடைந்திருக்கும் ஏர் - இந்தியா, மும்பை நரிமன் பாயின்ட்டில் இருக்கும் அதன் தலைமை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக காஸ்ட்லியான பகுதியாக இருக்கும் மும்பை நரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு அதன் தலைமையகத்தை மாற்றினால் பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்றார் அவர். அங்கிருக்கும் 22 மாடிகளை கொண்ட ஏர் - இந்தியா கட்டிடத்தில் பெரும்பாலான தளங்கள் ஏற்கனவே வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர் இந்தியா நிறுவனம் அதற்கான சீப் ஆப்பரேட்டிங் அதிகாரியையும் தேடி வருவதாக தெரிவித்தார். சர்வதேச அளவில் இதற்காக விளம்பரமும் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தெரிவித்தார்.
நன்றி : தினமலர்

ஆஸ்பைர் லேர்னிங் நிறுவனம் டையர் 2 மற்றும் டையர் 3 ஏரியாக்களில் தடம் பதிக்கிறது

ஆங்கிலம் கற்றால் வாழ்க்கையில் பிளஸ் தான் என்ற நிலை நீடிக்கிறது. இந்த துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து கொண்டுள்ள ஆஸ்பைர் லேர்னிங் கம்பெனி, ஆங்கில புலமையை பரப்ப, பயிற்றுவிக்க பிரான்சைசீக்களை தேடி வருகிறது. இந்த துறையில் பரிச்சயமும், ஆர்வமும் கொண்டவர்கள் வரவேற்கப்படுகின்றனர். டையர் 2 மற்றும் டையர் 3 ஏரியாக்களுக்கான பிரான்சைசீக்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்பைர் லேர்னிங் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் கூறுகையில் : தற்போதைய சூழல் ஆங்கிலம் கற்பது என்பது ஆப்ஷனல் கிடையாது, அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. இந்நிலையில் எல்லா மாணவர்களும் சோபிக்க எளிய முறையில் ஆங்கிலம் கற்க உதவுகிறது ஆஸ்பைர். 12 முதல் 17 வுயது வரை இருக்கும் மாணவர்கள் தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும், 5 முதல் 6 ஏரியா பிரான்சைசீக்களும் தே‌வை இது தான் எங்கள் டார்கெட். என அவர் தெரிவித்தார். ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளித்தாலும், ஆங்கிலம் தவிர வேறு துறைகளிலும் ஆஸ்பைர் பயிற்சி அளித்து வருகிறது. கணக்கு, அறிவியல், தேர்வுகளுக்கு தயாரகும் முறை, ஆகியனவற்றிலும் ஆஸ்பைர் பயிற்சியளிக்கிறது. ஐ.ஐ.டி., அனைத்து இந்திய இன்ஜினியரிங் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும் பயிற்சி அளித்து வருகிறது. ஆங்கிலத்தை‌ எளிமையான முறையில் கற்றுக் கொண்டு, சரளமாக பேசவும், சரியாக எழுதவும் கற்றுத் தருவதே ஆஸ்பைரின் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்

டாடா இன்டிகாம் மூலம் திரையுலக நட்சத்திரங்கள் பற்றி நாள்தோறும் அறிய சப்ஸ்கிரிப்க்ஷன் எஸ்எம்எஸ் அறிமுகம்

நாடு தழுவிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் தொலைதொடர்பு சேவைகள் அளித்து வரும் டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட், தென்னிந்தியாவில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் எஸ்எம்எஸ் சேவை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்தது. எஸ்எம்எஸ் சப்ஸ்கிரிப்க்ஷன் பொக்கே எனப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு பிடித்தமான திரையுலக நட்சத்திரங்;கள் (ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, சிரஞ்சீவி, வெங்கடேக்ஷ;, மம்முட்டி, மோகன்லால் மற்றும் பலர்) பற்றிய ஒரு தகவல் அல்லது சம்பவம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் .
இந்த சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்யுபி ஏபிசி (திரைப்பட நட்சத்திரத்தின் பெயரில் முதல் மூன்று எழுத்துக்கள் எ.கா. ரஜினிகாந்த்திற்கு எஎஸ்யுபி ஆர்ஏஜெ’’ என 582820 என்ற எண்ஹக்கு தங்களது டாடா இன்டிகாம் போனில் இருந்து அனுப்ப வேண்டும். தென்னிந்தியா முழுவதும் உள்ள இந்த சேவைக்கு ஒரு மாதத்திற்கு ரூ.15 கட்டணமாகும். இது தானாக மாதந்தோறும் புதுப்பித்துக் கொள்ளும். ஓட்டுமொத்தமாக தென்னிந்திய திரைப்படத்துறையின் செய்திகளை சுவைக்க வாடிக்கையாளர்கள் கோலிவுட், மோலிவுட் மற்றும் டோலிவுட் என கேட்டுப்பெறலாம். இதற்கு ஒரு மாத கட்டணம் ரூ.. 30 ஆகும். (தானாக புதுப்பித்துக் கொள்ளும்)
இதுகுறித்து கருத்து தெரிவித்த டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட்டின் தமிழ்நாடு வட்ட தலைமைச் செயல் அதிகாரி திரு. ராம்பிரசாத் கூறுகையில், இந்த தனித்தன்மை வாய்ந்த எஸ்எம்எஸ் சேவை, ஏற்கெனவே உள்ள பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுடன் பொழுதுபோக்கில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை அளிக்கும். இந்த புதிய எஸ்எம்எஸ் சப்ஸ்கிரிப்க்ஷன் பொக்கே மூலம் சந்தாதாரர்கள் தகவல்களைப் பெறலாம். தென்னிந்தியாவில் உள்ள திரைப்பட ரசிகர்களை குறிவைத்து அவர்களுக்கு உற்சாகமான அனுபவத்தை அளிக்கும் நோக்கத்துடன் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
நன்றி : தினமலர்