Thursday, September 17, 2009

போதுமே கண்துடைப்பு!

பருவமழை தவறியதால் நாட்டில் நிலவும் வறட்சியை எதிர்கொள்ள மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி இருக்கிறார். மத்திய அமைச்சர்கள் தங்களது பங்களிப்பாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, தங்களது துறையைச் சார்ந்த அலுவலர்களும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாக நிதியமைச்சர் இனி தனது விமானப் பயணங்களில் முதல் வகுப்பில் பயணிப்பதைத் தவிர்த்து சாதாரண வகுப்பில் மட்டுமே பயணிக்கப் போவதாக அறிவித்தார். சொன்னதுடன் இல்லாமல் செயலிலும் இறங்கி கோல்கத்தாவுக்கும், நேற்று சென்னைக்கும்கூட சாதாரண வகுப்பில் பயணித்து அரசுக்கு ஒரு சில ஆயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் தனது பங்குக்கு சாதாரண வகுப்பில் பயணித்தார் என்பதுடன், அவரைப் பின்பற்றி ஏனைய மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் சாதாரண வகுப்பில் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

சாதாரண வகுப்பில் பயணிப்பதால் அரசுக்கு அப்படி என்னதான் மிச்சம் ஏற்பட்டுவிடும் என்று கேட்டுவிடக் கூடாது. நமது மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு அரசு செலவழிக்கும் தொகையில் 75 சதவீதம் அவர்களது சுற்றுப்பயணச் செலவுக்காகத்தான் என்பது தெரியுமா? விமானக் கட்டணம், அன்னியச் செலாவணி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணம், வெளிநாடு செல்லும்போது இவர்கள் அழைத்துச் செல்லும் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கான செலவு என்று ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரிப்பணம் நமது அமைச்சர்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணத்துக்காகச் செலவாகிறது (வீணாகிறது!) என்பதுதான் உண்மை.

2007 - 2008-க்கான புள்ளிவிவரப்படி, மத்திய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களுக்கான மொத்தச் செலவு ரூ. 182 கோடி. இதில் இவர்களது உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஆன செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 138 கோடி. மொத்த அமைச்சரவையின் சம்பளம் மற்றும் படிகள் வெறும் ரூ. 1.75 கோடிதான். இவர்களது வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் தொலைபேசிச் செலவு, அலுவலகத் தனி உதவியாளர்கள், வீட்டுத் தோட்டப் பராமரிப்பு, வாகனச் செலவுகள் என்பன மீதியுள்ள செலவுகள்.

நமது மத்திய அமைச்சர் பெருமக்கள் தங்களது சுற்றுப்பயணச் செலவுகளில், சாதாரண வகுப்பில் பயணம் செய்வதன் மூலமும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்து, அரசின் அல்லது அரசு நிறுவனங்களின் விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஆளுநர் மாளிகைகளில் தங்குவதன் மூலம் 10 சதவீதம் மிச்சம் பிடித்தால், ஆண்டொன்றுக்கு ரூ. 18 கோடி மிச்சமாகுமே என்பது நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு.

ஆண்டொன்றுக்கு இந்திய அரசின் மொத்தச் செலவு, 2009-10-க்கான நிதிநிலை அறிக்கையின்படி ரூ. 10,20,838 கோடி. இதில் ரூ. 18 கோடி எத்தனை சதவீதம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமைச்சர்களின் செலவுகளால் ஆகும் வரிப்பண இழப்பைவிட, நமது உயர் அதிகாரிகளின் பயணச் செலவுகளால் ஆகும் இழப்புகள் பல நூறு மடங்கு அதிகம் என்பது நமது நிதியமைச்சருக்குத் தெரியாதா என்ன? மைத்துனிக்குக் குழந்தை பிறந்தால், தில்லியிலிருந்து பெங்களூருக்கும், மைத்துனனுக்கு நிச்சயதார்த்தம் என்றால் தில்லியிலிருந்து புவனேஸ்வரத்துக்கும் ஏதாவது அலுவலக வேலையை உருவாக்கிக் கொண்டு அரசு செலவில் பறப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் உயர் அரசு அதிகாரிகளுக்கு யார் கடிவாளம் போடுவது?

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்வதை நமது உயர் அதிகாரிகள் தவிர்த்தாலே ஆண்டொன்றுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மிச்சமாகுமே!

அரசின் பணிகள் திட்டமிட்டபடி முடியாமல் ஏற்படும் காலதாமதத்தால் ஆண்டுதோறும் வீணாகும் வரிப்பணம் ரூ. 1,000 கோடியைத் தாண்டுமே, அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லையே, ஏன்?

இந்தியாவில் ஓடும் மோட்டார் வாகனங்களில் 60 சதவீதம் அரசு வாகனங்கள்தான். இவை முறையாகப் பராமரிக்கப்படாததால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் நஷ்டம் எத்தனை ஆயிரம் கோடி? அதனால் வீணாக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சம் பிடிக்கப்பட்டாலே கணிசமான அன்னியச் செலாவணி மிச்சமாகுமே, அது ஏன் கவனிக்கப்படுவதில்லை?

பொருளாதாரத் தேக்கத்தால் அடுத்த நிதியாண்டில் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் குறையும் வாய்ப்பு நிறையவே உண்டு. வறட்சியின் காரணமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற இனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. ஏற்கெனவே பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து வரும் மத்திய அரசு, மேலும் தள்ளாடும் என்பது நிஜம்.

இந்த நிலையில், நிர்வாக இயந்திரத்தின் திறனை அதிகரிப்பதன் மூலமும், திட்டமல்லாச் செலவை, அதாவது வட்டித்தொகை, பயணச் செலவு, அரசு விழாக்கள், திடீர் இலவச அறிவிப்புகள் போன்றவற்றைக் குறைப்பதன் மூலமும் மட்டுமே நிதிநிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அமைச்சர்கள் சாதாரண வகுப்பில் பறப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் இருக்கட்டும். கட்டுக்கடங்காமல் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் சர்வ வியாபியாகிய அதிகார வர்க்கத்துக்குக் கடிவாளம் போடுவது யார்? எப்படி? எப்போது?
நன்றி ; தினமணி

திருடனின் கையில் சாவி...!

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா? தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான். அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்றுகூடக் கூறப்படுவதுண்டு. மருந்து உற்பத்தியாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.

கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், "பரிசு' என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்ட வைக்கின்றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!

இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபசாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச் செலவையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய "ஃபைசர்' நிறுவனம்-

வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி "வையோக்ஸ்' என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர்விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு
நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்-

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள்தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.

கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கைவரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...

எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித்தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...

ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?.
நன்றி : தினமணி

ஊழலுக்கு எச்சரிக்கை!

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவரின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ள கருத்தும், ஊழல் செய்யும் அரசு ஊழியர்களின் சொத்து பறிமுதல் மசோதா தாமதமின்றி நிறைவேற்றப்படும் என்று மத்திய நீதித் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ள கருத்தும் நாட்டில் ஏதோ நல்லது நடப்பதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளன.

அதுமட்டுமல்ல, ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் பிரிவுகள் 309, 310, 311 திருத்தப்பட வேண்டும் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

அமைச்சர் பேசிய அதேவேளையில், உச்ச நீதிமன்றத்தில் மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை கோரும் வழக்கொன்றில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவரைத் தண்டிப்பதில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி அவசியமில்லை என்ற கருத்தையும் நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், சுதர்ஸன் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துகள் யாவும் மக்களைத் திருப்திப்படுத்தும் கருத்துகளாக இல்லாமல், நடைமுறையில் உண்மையிலேயே அமல்படுத்தப்படும் விஷயங்களாக மாற வேண்டும். மாறினால்தான் இந்தப் பேச்சுகளும் கருத்துகளும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

லஞ்சம் வாங்கியதாக அரசு ஊழியர்கள் கைது செய்யப்படும் செய்திகள் வருகின்றனவே தவிர, அவர்கள் தண்டிக்கப்பட்டதாகச் செய்திகள் வருவது மிகமிகக் குறைவு. இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து, கோடிகோடியாய்ச் சேர்த்து வைத்த லஞ்சப் பணத்தில் "வாய்தா' வழி சுகவாழ்வு வாழ்கிறார்கள்.

ஒவ்வோர் ஆட்சியிலும் கடந்த ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அமைச்சர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள். மீண்டும் ஆட்சி மாறியதும் அவர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகின்றன. அல்லது கட்சி மாறிய சிலநாளில் அவர் மீதான லஞ்ச வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். திடீரென நல்லவராகிவிடுகிறார். ஆனால் அவர்களது சொத்துகள் அனைத்தும் மக்கள் பணம் என்பது பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

இந்தியாவில் அனைவரும் அரசு ஊழியர்கள் அல்ல. அதிகபட்சமாக 2 சதவீதம் பேர் மட்டுமே அரசு ஊழியர்கள். அதேபோன்று அனைவரும் அரசியல்வாதிகளும் அல்ல. அவர்களிலும் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் மிகச் சிலர்தான். ஆனால் இவர்கள் செய்யும் ஊழலும், வாங்கிச் சேர்க்கும் சொத்துகளையும் பார்த்து மக்கள் மனமொடிகிறார்கள். அரசியல்வாதியாவது ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ அதற்கு முன்னதாகவோ மக்கள் மன்றத்தை எதிர்கொண்டு, அவர்களது அனுமதியுடன் மட்டும்தான் மீண்டும் லஞ்சம் வாங்க முடிகிறது. ஆனால், அதிகாரிகள் அப்படியா? ஒருமுறை நியமனம் பெற்றுவிட்டால், ஓய்வு பெறுவது வரை, அல்லது பிடிபடாதவரை தங்கு தடையின்றி லஞ்சத்தில் புரள முடிகிறது.

காவல்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்களும் கூட்டம் நடக்கும் நாளுக்கு மட்டுமே படி பெறும் சாதாரண நகராட்சி கவுன்சிலர்களும்கூட அவரவர் பகுதியில் பளிங்குக் கற்களால் இழைத்துக் கட்டியுள்ள மாளிகைகள் மக்கள் பார்வைக்கு மறைந்துவிடுமா என்ன? நகரின் முக்கிய பகுதிகளில் மனை, வீடுகள், கடைகளை மனைவி மற்றும் உறவினர் பெயரில் இவர்கள் வாங்கி, புதுப்புதுக் கார்களில் வலம் வரும் இவர்களைப் பார்க்கும் இந்தியக் குடிமகன், எல்லா அறநெறிகள் மீதும் நம்பிக்கை இழக்கிறான். விரக்தியின் உச்சத்தில், பாஞ்சாலி சபதத்தில் வரும் மகாகவி பாரதியின் கூற்றினைப்போல, ""வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிபெலாம்'' என்கிற மனநிலைக்கு ஆளாவது தவிர்க்க முடியாததாகிறது. இதனால்தான், லஞ்சத்தை வெறுப்பவர்கள்கூட, "வேறு வழியில்லையே' என்று நொந்துகொண்டு லஞ்சத்தைக் கொடுக்க உடன்படும் சூழ்நிலை உருவாகிறது.

ஒவ்வோர் அரசு ஊழியரும் சொத்துகள் வாங்கும்போது அது பற்றிய விவரத்தைத் தங்கள் துறை மூலமாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், எத்தனை அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு முறைப்படி தெரிவிக்கிறார்கள்? அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவதும், பினாமி பெயரில் சொத்து பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதும்தான் பெரும் ஊழல்களுக்கு கடிவாளம் போடும்.

இதெல்லாம் இருக்கட்டும். தலைமை நீதிபதி சொல்லும் கருத்து ஆழமானது, அவசியமானது என்றாலும்கூட, நீதிபதிகள் சொத்துகளை அறிவிக்க நீதித்துறையே பின்வாங்குகிறபோது அவர்தம் சொல்லுக்கு மதிப்பு இருக்குமா? ஐம்பதுகளில் உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தா காலத்திலிருந்து அவ்வப்போது எழுகின்ற "ஊழலை ஒழிப்பேன்' கோஷம் உதட்டளவு கோஷமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இப்போது வீரப்ப மொய்லியின் முறை... நல்லது நடந்தால் சரி...!
நன்றி : தினமணி

Thursday, September 10, 2009

ஜில்லென்று பயணித்த பயணம் போல சுகம்...

கடந்த மாதம் முழுவதும் சந்தை, 15,000க்கும் 16,000க்கும் இடையே இருந்து முதலீட்டாளர்களை சிறிது கலங்கச் செய்தது உண்மை தான். ஆனால், இந்த வாரம் ஜம்மென்று 16,000 புள்ளிகளையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜில்லென்ற மழையில், சுகமான காற்றுடன் ரயிலில் பயணம் செய்த அனுபவம் தான் அது. ஆமாம், ஜில்லென்று பரவலாக பெய்த மழையும் இந்த ஏற்றத்திற்கு ஒரு காரணம் தான். இந்த வாரம் ஏன் கூடியது? உலகளவில் பங்குச் சந்தைகள் நன்றாக இருந்தது. மேலும், இந்திய பங்குச் சந்தை முதலீடு செய்ய நல்ல இடம், அதுவும் தற்சமயம் சரியான நேரம் என்று, பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. சீசன் முடியும் போதும் மழையும் நன்கு பெய்ய ஆரம்பித்து, இருந்த பற்றாக்குறையை சிறிது போக்கி சென்றதும் ஒரு காரணம். ஜி 20 நாடுகளின் கூட்டணி நாடுகளின் பொருளாதாரத்தை நிலை நிறுத்த பாக்கேஜ்கள் தொடரும் என்று அறிவித்ததும் ஒரு காரணம்.
திங்கள் முதல் நேற்று வரை சந்தை 493 புள்ளிகள் கூடியது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 59 புள்ளிகள் கூடி 16,183 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 9 புள்ளிகள் கூடி 4,814 புள்ளிகளுடனும் முடிந்தது. சந்தை கடந்த 15 மாதத்தின் அதிகபட்சத்தை எட்டியுள்ளது. புதிய வெளியீடுகள்: புதிய வெளியீடுகளில் தற்போது இருக்கும் வெளியீடு ஆயில் இந்தியாவாகும். மற்ற வெளியீடுகள் நன்றாக பட்டியலிடப்பட்டிருக்கும் பட்சத்தில், ஆயில் இந்தியாவும் அமோகமாக செலுத்தப்பட்டிருக்கும். இன்று கடைசி தேதி என்று இருக்கும் போது, நான்கு தடவைகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு ஒரு தடவை கூட இன்னும் எட்டவில்லை. தற்போது வரும் எல்லா வெளியீடுகளும் விலை அதிகமாக இருப்பது போல் தோன்றுவதாலும், பட்டியலிடப்படும் போது முதலீட்டாளர்களுக்கு வட்டிக்கு கூட கட்டாமல் போய்விடுவதாலும் அதிகம் ஆர்வம் இல்லாமல் இருக்கிறது. இது சந்தைக்கு நல்லதல்ல. கம்பெனிகள் முதலீட்டாளர்களுக்கு சிறிது லாபம் வரும் படி விலைகளை நிர்ணயிக்கவேண்டும்.

வட்டி விகிதங்கள்: வங்கிகளிடையே பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாலும், அதிகம் பெரிய கம்பெனிகள் கடன்கள் வாங்காததாலும் வட்டி விகிதங்கள் குறைவாகவே இருக்கின்றன. வருங்காலங்களில் மக்களின் தேவைகள் அதிகமாகும் போது, கம்பெனிகள் தங்கள் உற்பத்தி தேவைகளுக்கு கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். ஆதலால், வட்டி விகிதங்கள் கூடும் வாய்ப்பு உள்ளது.

ஸ்டேட் பாங்கின் லாபங்கள்: வரும் இரண்டாவது காலாண்டு முடிவில் ஸ்டேட் பாங்க் தனது லாபம் 30 முதல் 35 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் வங்கி. மேலும் நிறைய லாபங்களை சம்பாதித்து வருகிறது. ஒவ்வொரு காலாண்டும் சிறப்பாக பரிணமித்து வருகிறது. ஆதலால், நீண்டகால அடிப்படையில் வாங்கி வைக்கலாம் இந்த வங்கியின் பங்குகளை.

தகிக்கும் தங்கம்: சாதாரண மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு தங்கம் சென்று விட்டது. ஒரு அவுன்ஸ் ஆயிரம் டாலர்களையும் தாண்டி விட்டது. முன்பு, 1,000 டாலர்களைத் தாண்டியிருந்தாலும், டாலர் எதிரான ரூபாயின் மதிப்பு அப்போது வலுவாக இருந்ததால் விலை உயர்வு தெரியவில்லை. தற்போது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வேறு விழுந்து வருகிறது. ஆதலால், 10 கிராம் சுத்தத் தங்கம் 16,000 ரூபாய் வரை சென்று நிற்கிறது. தங்கம் என்று பிள்ளைகளுக்கு பெயர் வைத்து மட்டுமே கூப்பிட முடியும் போல் இருக்கிறது.
- சேதுராமன் சாத்தப்பன் -

நன்றி : தினமலர்

Wednesday, September 9, 2009

கெட்டிதட்டிப் போய்விட்டது பா.ஜ.க.

ஒரு கட்சிக்காரர், எதிர்த்தரப்பினர் ஒருவரைப் பாராட்டினார் என்பதற்காக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி நடுநிலையிலிருந்து பார்க்கிற யார் யாருக்கும் செரிக்க முடியாத ஒன்றாகும்!

அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானைத் தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று சொல்லிவிட்டாரென்றும், வல்லபாய் பட்டேலை பிரிவினையோடு தன்னுடைய நூலில் தொடர்புபடுத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டிக் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர்.

இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறு வேறு; அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தும் வேறு வேறு; அவர்கள் கடைப்பிடிக்கின்ற சட்டங்கள் வேறு வேறு என்றெல்லாம் நாட்டை உடைத்து, அதன் காரணமாக இரு தரப்பாரின் ரத்தமும் ஆறாகப் பெருகி ஓடக் காரணமாகி, கடைசியில் மத அடிப்படையிலான பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டு போன ஜின்னா, எப்படி மதச் சார்பற்றவராக இருக்க முடியும் என்னும் கேள்வியே ஜஸ்வந்த் சிங்கின் "கல்தா'வுக்குக் காரணம்!

பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முதன்மைக் காரணம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நேருவும், வல்லபாய் பட்டேலும் துணைக் காரணங்கள் அல்லவா! ஜின்னாவைத் தலைமுழுகி விட்டு மீதமுள்ள இந்தியாவை எல்லா அதிகாரங்களோடும் நிம்மதியாக ஆளலாம் என்று ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கருதியது வரலாற்று உண்மைதானே!

பெருவாரியான இந்துக்களும் சிறுபான்மை இஸ்லாமியர்களும் சமநிலையில் சேர்ந்து வாழ்வதற்கு ஜனநாயகம் இடங்கொடுக்காது என்று ஜின்னா அஞ்சினார். ஜனநாயகம் என்பது எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஆகவே எண்ணிக்கையில் குறைந்தவர்கள் அஞ்சுவது இயல்புதானே!

நேருவும், ஜின்னாவும் ஒரே தரத்திலுள்ள அறிஞர்கள்தாம். ஆனால் தலைமையமைச்சராக வர நேருவால்தானே முடியும். காந்தி தலைமையமைச்சர் நாற்காலியை ஜின்னாவுக்கு வழங்கிப் பிரிவினையைத் தடுக்க முயன்றார்.

காந்தியின் வார்த்தை கல்வெட்டு; வார்த்தைப் பிறழ்ச்சி என்பதை வாழ்க்கை முழுவதிலும் அறியாதவர் காந்தி. இந்தியா அந்த மகாத்மாவின் காலடியில் சொக்கிக் கிடந்தது எல்லா வகையிலும் நியாயமே. காந்திக்கு மேல் சிறந்த தலைவன் ஒரே ஒருவன்தான் உண்டு; அவன் காந்தியைப் படைத்தவன்.

சமயச் சார்பற்ற இந்தியா என்று என்னதான் டமாரங்கள் முழங்கினாலும் இங்கே அதிகாரமில்லாத அலங்காரப் பதவிகளைத்தானே அப்துல் கலாம்கள் வகிக்க முடியும்.

காந்தியின் உறுதிமொழி ஒருபுறமிருக்கட்டும். இப்போதுள்ள பிரச்னை ஜின்னா அதிகார நாற்காலியில் உட்காருவது குறித்ததன்று. முஸ்லிம்கள் நிலையாக அதிகாரத்தை அடைவது குறித்தது.

சிக்கல் தெளிவாகப் புரிந்துவிட்ட நிலையில், இந்தியா உடையாமல் இருக்கப் புதிய வழிகளுக்கான முயற்சிகள் நடந்தன.

சிறுபான்மை என்னும் அச்சம் அகற்றப்பட 1946-ல் இந்தியாவுக்கு வந்த வெள்ளை அரசாங்கத்தின் காபினெட் தூதுக் குழு ஒரு நிகரற்ற யோசனையை முன்வைத்தது.

அந்தந்த மாநிலங்களுக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கிவிட்டு, மூன்று அதிகாரங்களை மட்டும் மத்திய அரசில் வைத்துக் கொள்வது என்பதுதான் அந்த யோசனை. இந்த யோசனைக்கு காந்தி இசைவாகத்தான் இருந்தார். ஜின்னாவும் சிறு சிறு திருத்தங்களுடன் அந்த யோசனையை - ஏற்கத் தயாராகிவிட்டார்.

காபினெட் தூதுக் குழுவின் யோசனைப்படி முஸ்லிம் மாநிலங்களான கிழங்கு வங்கம், கிழக்குப் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய முஸ்லிம் மாநிலங்களை முஸ்லிம்களே ஆண்டுகொள்வார்கள். மத்தியப் பிரதேசத்தையும், உத்தரப் பிரதேசத்தையும் இன்ன பிற மாநிலங்களையும் இந்துக்களும், இன்பத் தமிழ்நாட்டைத் "திராவிடக் குடும்பங்களும்' ஆளும்.

அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்படாத அதிகாரங்களும் மாநிலங்களையே சாரும் என்பதால், மத்திய அரசு ராணுவம், அயல்நாட்டு விவகாரம் என்று நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு போன்றவற்றில் மட்டுமே கருத்துச் செலுத்த முடியும்.

மாநிலங்கள் முற்றான தன்னாட்சியுடனும், மத்திய அரசு ஓர் இணைப்பு அரசாகவும் திகழும் என்பதுதான் காபினெட் தூதுக் குழுவின் பரிந்துரை. இதில் யாருடைய ஆதிக்கமும் யாரின் மீதும் படராது.

இதிலே மிகப்பெரிய விந்தை என்னவென்றால் எந்த வெள்ளைக்கார அரசு 1907-ல் வங்கத்தை இந்து வங்கம் என்றும் முஸ்லிம் வங்கம் என்றும் பிரித்து வகுப்பு வாதத்துக்கு வித்திட்டு வெறுப்பை வளர்த்துக் குளிர் காய்ந்ததோ, அதே வெள்ளைக்கார அரசு காபினெட் தூதுக் குழுவை 1946-ல் அனுப்பி, அதே வங்கப் பிரிவினை மாநிலப் பிரிவினையாகவே இருக்கட்டும், நாட்டுப் பிரிவினையாகிவிட வேண்டாம் என்பதற்குக் கடும் முயற்சி செய்தது.

1907-ல் தலைமை ஆளுநராக இருந்து வங்கத்தை மத அடிப்படையில் பிரித்தவர் கர்சன் என்னும் வெள்ளைக்காரர். கர்சனைக் "குரங்கு' என்று வாயார வைகிறான் பாரதி. ""கர்சன் என்னும் குரங்கு கவர்ந்திடுமோ'' என்பது பாரதியின் புகழ்பெற்ற பாடல் வரி.

கர்சனின் வங்கப் பிரிவினைதான் பெரிய அளவுக்கு விடுதலைப் போராட்டத்தை முடுக்கிவிட்ட வரலாற்று நிகழ்ச்சி.

1907-ல் வங்கத்தை மதரீதியாகப் பிரிப்பதற்கு நீ யார் என்று கேட்டவர்கள், காபினெட் தூதுக்குழுவின் பரிந்துரையைப் புறக்கணித்து 1947-ல் வங்கத்தை மட்டுமன்று, பஞ்சாபையும் பிளந்து முஸ்லிம் பாகிஸ்தான் ஏற்பட இசைந்து நின்றது காலத்தின் கேலிதானே!

காபினெட் தூதுக்குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டிருந்தால் இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட்டிருக்கும். ஆர்.எஸ்.எஸ். விரும்பியவண்ணம் "அகண்ட பாரதம்' நிலைபெற்றிருக்கும். ஆசியாவில் மட்டுமென்ன; அகிலத்திற்கே இந்தியாதான் பெரிய நாடாக இருந்திருக்கும். சீனா வாலைச் சுருட்டிக் கொண்டு நமக்குச் "சலாம்' சொல்லாதா?

இவையெல்லாம் நடக்க முடியாமல் போனதற்கு யார் காரணம்? உறுதியாகக் காந்தியும் ஜின்னாவும் காரணமில்லை. காபினெட் தூதுக் குழுவின் பரிந்துரைகளை, 1946 ஜூலையில் நடந்த மும்பை அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு, ஒதுக்கித் தள்ளியதோடன்றி அவற்றுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய நேருவே காரணம். அதன் விளைவாக, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது; ஜின்னா மீண்டும் பாகிஸ்தான் பல்லவிக்குப் போய்விட்டார்.

ஜஸ்வந்த் சிங் என்ன பிழையாகச் சொல்லிவிட்டார்? அவர்மீது பாய்ந்து பிறாண்டுகிறார்களே... ஜின்னா சமயச் சார்பற்ற கொள்கையுடையவர் இல்லையா?

உலக முஸ்லிம்களின் தலைவர் கலீபா. அவர் அந்தப் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டபோது, முஸ்லிம் அல்லாத காந்தி கவலை கொண்டார். அலி சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டு கிலாபத் இயக்கம் நடத்தினார். ஆனால் முஸ்லிமான ஜின்னா, கலீபாக்கள் தேவையில்லை என்றார். காங்கிரஸின் வேலை கலீபாக்களைக் காப்பாற்றுவது அல்ல என்றும் சொன்னார். ஜின்னா சமயச் சார்பற்ற கொள்கையினர்தானே! அவர் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் இந்துக்களின் நாடு சமயச் சார்பற்றதுபோல், முஸ்லிம்களின் நாடும் சமயச் சார்பற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

ஜஸ்வந்த் சிங் புத்தகத்திற்கு குஜராத் முதலமைச்சர் மோடி தடை விதித்திருக்கிறார். ஜின்னாவைப் புகழ்ந்ததும் குற்றமாம்; பட்டேலையும் நேருவையும் இடித்துரைத்ததும் குற்றமாம்.

கொக்கோகமும், காமசூத்திரமும் வெளியிடப்பட அனுமதி உள்ள நாட்டில், ஒரு சாதாரண அரசியல் கருத்துக்காக ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்தைத் தடை செய்த மோடி அரசின் செயல், நாடே வெட்கித் தலைகுனிய வேண்டிய அநாகரிகமான செயலாகும்.

நெருக்கடிநிலை காலத்தில் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டபோது, கொதித்தெழுந்த பாரதிய ஜனதா கட்சி, அதே செயலை அவர்களுடைய கட்சி முதலமைச்சர் செய்யும்போது வாளா இருப்பது ஏன்? ஒரு தலைமையமைச்சர் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்ட அத்வானி செயலற்றுப் போய்விட்டதைத்தானே இது காட்டுகிறது?

ஜஸ்வந்த் சிங், ஜின்னாவைப் பாராட்டியதற்குக் கொடுத்த விலை கட்சி நீக்கம். இதே வேலையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அத்வானி செய்தார். அவர் பாகிஸ்தானுக்கே போய் ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று பாராட்டி விட்டு வந்தார். வந்தவுடன் அவருடைய தலைப்பாகையைப் பிடுங்கி ராஜ்நாத் சிங்குக்குச் சூட்டி விட்டார்கள். தலைவர் பதவி மாற்றம் என்பது தலைப்பாகை மாற்றம் போல் அவ்வளவு சாதாரணமாக இருக்கிறது.

இவ்வளவுக்கும் அத்வானி சாதாரணத் தலைவரில்லை. பாபர் மசூதி இடிப்பின்போது உடனிருந்தவர்; அதற்குத் தூண்டு விசையாக இருந்தவர் என்று அவரைக் குற்றம் சொல்வார்கள். அப்படிப்பட்டவர் பாகிஸ்தானுக்கே சென்று ஜின்னா சமயச் சார்பற்றவர் என்று இதுவரை பாரதிய ஜனதா முகாமில் யாரும் சொல்லி அறியாத ஓர் உண்மையைச் சொன்னார் என்றால், அது அரசியல் குறிப்புடையது மட்டுமன்று; அரசியல் திருப்பத்திற்கு இடப்பட்ட வித்துமாகும்!

அத்வானி, ஜின்னாவைப் புகழ்ந்துவிட்ட காரணத்தால், புளகாங்கிதம் அடைந்து அவர் சமாதிக்குள் புரண்டு படுக்கப் போவதில்லை. பாராட்டையும், பழிப்பையும் இறந்தவர்கள் அறிய மாட்டார்கள்.

பாகிஸ்தானின் பிரிவினையை எதிர்த்துக் கொதித்துக் கிளம்பிய ஒரு கட்சியில், ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நாற்றுப் பிடுங்கி நடப்பட்டவரான அத்வானி, பாகிஸ்தானுக்கே போய் அந்தப் பிரிவினையின் காரண கர்த்தாவைப் பாராட்டிவிட்டு வந்தது, பூமியே ஆடியது போன்ற அதிர்ச்சியைத் தந்தது பழைய கட்சிக்காரர்களுக்கு.

ஒரு கட்சி தில்லி செங்கோட்டையில் அமர வேண்டுமானால் எல்லாத் தரப்பிலிருந்தும் பிரதிநிதித்துவம் வேண்டும். நாட்டின் பத்து விழுக்காடு மக்கள் ஒட்டுமொத்தமாகவும், முழுவீச்சாகவும் ஓர் அமைப்பை எதிர்ப்பார்களேயானால், அது அந்தக் கட்சியின் ஆட்சிப் பயணத்திற்கு மிகப்பெரிய தடையாகும்.

தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் இவர்கள் 500-லிருந்து 1000 வாக்குகள்தாம் பெற முடிகிறது. இது நகராட்சி உறுப்பினராவதற்கே போதுமானதில்லை.

ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள முதன்மைக் கட்சிகள் இவர்களோடு கூட்டுச் சேர இவர்கள் வைத்திருக்கின்ற வாக்கு வங்கி மோசமானதாக இருக்கிறது. போனால் போகட்டும்; நிரம்பக் கெஞ்சுகிறார்களே என்று யாராவது சேர வந்தால், கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த கதையாக ஆகி விடுகிறது. பாரதிய ஜனதாவுக்குத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சொந்தமாக வாக்கு வங்கி இல்லாவிட்டாலும், எதிர்ப்பு வாக்கு வங்கி எப்போதும் மாறாமல் இருக்கிறது. அந்த எதிர்ப்பு வாக்கு வங்கி சேர வந்தவர்களையும் சேர்த்துச் சீரழித்து விடுகிறது.

அதனால்தான் தெலுங்கு தேசம், திமுக மற்றும் அஇஅதிமுக, ஒரிசாவின் பட்நாயக் கட்சி, முன்பு இணைந்திருந்த உத்தரப் பிரதேசத்து மாயாவதி, இன்றோ நாளையோ அறுத்துக் கொள்ள நேரம் பார்க்கும் பிகாரின் நிதீஷ் குமார் என்று பல மாநிலக் கட்சிகள் பாரதிய ஜனதாவைப் பற்றிக் கொண்ட நோய், நம்மையும் தொற்றிக்கொண்டுவிடக் கூடாது என்று பயந்து ஓடுகிறார்கள்; அப்புறம் அத்வானி எப்படிச் செங்கோட்டையில் கொடி ஏற்ற முடியும்?

ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதாவின் அடிமட்ட அமைப்பாக இருக்கலாம். ஆனால் அடிமட்ட அமைப்புகளுக்கு வாக்காளர்களின் மனநிலை புரியாது. வீர சவர்க்கார் காலத்திலேயே அவர்கள் இருப்பார்கள். வீர சவர்க்காருக்குப் பிறகு கங்கையிலே ஏராளமான வெள்ளம் ஓடி வடிந்தும் விட்டதே!

சிறுபான்மை மக்கள் எப்போதும் பாதுகாப்புக் குறித்த அச்சத்தின் காரணமாக இறுக்கமாக ஒன்றுசேர்ந்து விடுவார்கள்! பெரும்பான்மை மக்களுக்கு அத்தகைய நெருக்கடி எதுவும் கிடையாது.

பாபர் மசூதி இடிப்பு இந்திய முஸ்லிம்களைப் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இணைத்தது இயற்கையே. நம்முடைய ஊர்ப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்னும் எண்ணம் அவர்களை அச்சுறுத்திக் கெட்டிப்படுத்திவிடும்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்விக்கு அத்வானியே காரணம் என்று அவர் தலையை இப்போது உருட்டுகிறார்கள்.

கூட்டணி வலிமையே தேர்தல் வலிமை என்று ஆகிவிட்ட காலத்தில், பாரதிய ஜனதாவின் மதவாதக் கொள்கையே பிற கட்சிகளெல்லாம் இதனோடு சேரத் தடை என்று உண்மை நடப்பை இனங் கண்டு கொள்ளாமல், பழைய தலைவர்களெல்லாம் வெளியேற வேண்டும் என்று பேசுவதால் இழப்பு யாருக்கு? கட்சிக்குத்தானே!

அடிப்படை உண்மை புரியாமல் மொட்டையாக இளைஞர்களை அழையுங்கள் என்றால் இதென்ன ஓட்டப்பந்தயமா? 80 வயது அத்வானியின் அறிவும், அனுபவமும், முடிவெடுக்கும் திறனும் முப்பது வயது இளைஞருக்கு இருக்க முடியுமா? தந்தையின்கீழ் பயிற்சி பெற்றுத் தகுதி பெறும் மகனைப்போல், இளைஞர்களும் பயிற்சி பெற்றுப் படிப்படியாகத்தான் வர வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியைப் புதிய தடத்தில் வழிநடத்தப் பாகிஸ்தானில் முடிவெடுத்த அத்வானி, நெருக்கடி காரணமாக அந்த முடிவில் பின்தங்கியதுதான் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம்.

சோஷலிசம் பேசிய காங்கிரஸ், முதலாளித்துவத்துக்கு அடிவருடுகின்ற கொள்கையை அரங்கேற்றவில்லையா? இது தலைகீழ் பல்டி ஆகாதா? திராவிடக் கருணாநிதி தேச பக்தர்கள் எல்லாம் கிடுகிடுக்கும் அளவுக்கு அதிதீவிர தேசியவாதி ஆகவில்லையா? இது தலைகீழ் பல்டி ஆகாதா? அதுபோல் அத்வானி தன்னுடைய மனதில் பாகிஸ்தானில் பூத்த சமயச் சார்பின்மைக் கொள்கைக்கு மாறுவது காலத்துக்கேற்ற மாற்றம்தானே? சிறந்ததைச் சிந்தித்தும் செயல்படுத்த முடியாத தலைமையும் குற்றமுடையது என்பான் வள்ளுவன்.

வயிற்றுப் பசியோடு தூங்கச் செல்கிறவன் இந்துவானால் என்ன? முஸ்லிமானால் என்ன? பசிக்கு என்ன மதவேறுபாடு? பசித் தீயை அணைப்பதற்குத்தானே அரசியல்!

ஜாதியைத் திருமணங்களோடு நிறுத்திக்கொண்டு, மதத்தை வழிபாட்டுத் தலங்களோடு நிறுத்திக்கொண்டு, பசியை முன்னிறுத்தி நடத்துவதுதானே முறையான அரசியல்! அதற்கு மட்டும்தானே அரசியல் கட்சிகள் வேண்டும். அதற்கு வெளியே உள்ள காரணங்களுக்காகப் பிறந்த அரசியல் கட்சிகளெல்லாம், மழைக்காலக் காளான்கள்போல, மறுமறு பொழுதுகளில் அழிந்து விடாவோ?

பழைய அமைப்புகள் காலத்திற்கேற்றவாறு தம்மைப் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே காலத்தோடு போராடி வளர முடியும்!

காலத்தோடு பொருந்த மறுப்பவை அல்லது இயலாதவை அழியும்! இது இயற்கை நியதி. சரித்திரம் கற்றுக் கொடுத்த பாடம்!

கட்டுரையாளர் : பழ. கருப்பையா
நன்றி : தினமணி

விலைக்கு வாங்கும் விபரீதம்!

கூட்டணி ஆட்சியால் ஏற்படுகிற ஒரு முக்கியமான நன்மை, ஆளும் கட்சி தன்னிச்சையாக விவாதமோ, எதிர்ப்போ இல்லாமல் எல்லா முடிவுகளையும் எடுத்துவிட முடியாது என்பது. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சரவை நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி இருப்பது. இதற்குக் காரணம் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவியும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜியின் எதிர்ப்பும் பிடிவாதமும்.

மம்தா பானர்ஜியின் எதிர்ப்புக்குக் காரணம் அரசியல்தான் என்றும், தீர்க்கதரிசனமான கண்ணோட்டம் அல்ல என்றும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சித்தாலும், அவரது வாதங்களில் இருக்கும் உண்மையும், நிலம் கையகப்படுத்தப்படும்போது விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும், விவசாயமும் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மை.

வியாபார நோக்கிலும், தொழிற்சாலை அமைப்பதற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் செயலுக்கு அரசு துணை போகக்கூடாது என்கிற மம்தா பானர்ஜியின் கருத்தில் நியாயம் நிறையவே இருக்கிறது. சிங்கூரில் நடந்த போராட்டத்தால் டாடாவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைவிட மேற்கு வங்கத்துக்குத்தான் அதிக நஷ்டம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்குபவர்கள், சிங்கூரில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தனிமனிதர்களைப் பற்றிக் கவலைப்படத் தயாராக இல்லை. அதேபோல, மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகப் பல நூறு ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்படுவது விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், 70 சதவீத நிலத்தைத் தனியார் விலைக்கு வாங்கி இருந்தால், மீதமுள்ள 30 சதவீத நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொடுக்க வழிசெய்யும் மசோதா ஒன்று மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வந்தது. மேலே குறிப்பிட்ட 70 : 30 என்கிற விகிதாசாரம், தொழிலதிபர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துபேசி எடுத்த முடிவே தவிர, விவசாயிகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்டதல்ல என்பது மம்தாவின் வாதம். மேலும், ஒரு போகம் மட்டுமே விளையும் வானம் பார்த்த பூமியும், விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலங்களும் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குக் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மம்தாவின் கருத்து.

எதற்காகக் கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தக் காரணத்துக்காக அல்லாமல் நிலம் வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், அப்படிப் பயன்படுத்தப்பட்டால், நில உரிமையாளருக்கு அந்த நிலம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும்கூட மம்தா பானர்ஜியின் கோரிக்கை. சிறப்புப் பொருளாதார மண்டலம், தொழிற்சாலை என்கிற பெயரில் அதிக அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, பிறகு அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.

அரசின் வளர்ச்சித் திட்டங்களான சாலை அமைப்பது, புதிய குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்துவது, கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை நிறுவுவது ஆகியவற்றுக்காக விவசாய நிலங்கள் தகுந்த நஷ்டஈடு தரப்பட்டுக் கையகப்படுத்தப்படுவதை யாருமே எதிர்க்கவில்லை. ஆனால், விவசாயிகளிடமிருந்து அரசின் உதவியுடன் குறைந்த விலைக்கு நல்ல விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டி ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

விவசாயி தானாக நிலத்தை விற்கவில்லை. அரசின் உதவியுடன் வலுக்கட்டாயமாக நிலம் குறைந்த விலைக்குக் கையகப்படுத்தப்படுகிறது. அப்படியானால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விவசாயிக்குக் கிடைக்க இருக்கும் அதிகரித்த விலை தரப்பட வேண்டியது நியாயம்தானே? விவசாயி தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த தனது வாழ்வாதாரத்தை இழக்கிறார். அவருக்கு மாற்று வேலையும், மாற்று இருப்பிடமும், லாபத்தில் பங்கும் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளில் என்ன தவறு?

விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாறுவதில் இன்னோர் ஆபத்தும் இருக்கிறது. அந்த இடங்கள் மறுபடியும் விவசாயத்துக்குப் பயன்படாத நிலங்களாகி விடுகின்றன. போதிய நீர்ப்பாசன வசதிகள் இல்லை என்கிற காரணம் காட்டி, விவசாயம் லாபகரமாக இல்லை என்கிற சாக்கில் நிலங்களைக் குறைந்த விலைக்குத் தனியாருக்காக அரசே முன்னின்று கையகப்படுத்தும்போது ஒரு விஷயம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஏற்கெனவே விவசாயம் லாபகரமாக இல்லை என்பதாலும், கடின உழைப்புக்கு நாம் தயாராக இல்லாததாலும் கிராமப்புறங்களில் விவசாயம் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வரைமுறையே இல்லாமல் நிலங்களைக் கையகப்படுத்தித் தனியாருக்குத் தாரை வார்ப்பது தற்கொலை முயற்சி அல்லாமல் என்ன?

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. உலகில் உள்ள அத்தனை தட்பவெப்ப நிலைகளையும் உள்ளடக்கிய ஒரே நாடு இந்தியா மட்டுமே. இங்கே விளையாத பொருள்களே கிடையாது. விவசாயத்தை லாபகரமாக்கவும், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் வழி காண்பதை விட்டுவிட்டு, உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று கருதினால், விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்று பொருள். அது பாதுகாப்பு அச்சுறுத்தலாகிவிடும்...

நன்றி : தினமணி

நாம் வாளாவிருக்கலாமா?

மனித சமுதாயத்தைப் பிடித்திருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு' என்று வர்ணிக்கப்படும் புகையிலை, உலகளாவிய நிலையில் தனது பேரழிவுகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டு வருவதைச் சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெளிவாக்குகிறது. "புகையிலை வரைபடம்' (டுபாக்கோ அட்லஸ்) என்கிற பெயரில் தனது 3-வது பதிப்பை உலக நுரையீரல் அமைப்பும், அமெரிக்க புற்றுநோய்க் கழகமும் வெளியிட்டுள்ளன.

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் "புகையிலை வரைபடம்' புகையிலையின் வரலாறு. புகையிலைப் பழக்கம் எந்தெந்த நாடுகளில் எந்த அளவுக்கு இருக்கிறது, இளைஞர் மத்தியில் இதன் தாக்கம், இதனால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் உயிரிழப்பு என்று புகையிலை சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இணையதளத்திலும் இலவசமாக அனைவருக்கும் எளிதில் புரியும்படியாகவும் பயனடையும் விதத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் செவ்விந்தியர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்டது இந்தப் பழக்கம். வட அமெரிக்காவில் பரவலாக பயிரிடப்பட்டிருந்த புகையிலை, ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது என்பதுதான் இந்த உயிர்க்கொல்லிப் பயிரின் சரித்திரம். 2010-ல் மட்டும் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு உலக மக்கள்தொகையில் குறைந்தது 60 லட்சம் பேரை உயிரிழக்கச் செய்யும் என்றும், அதில் மூன்றில் ஒரு பகுதியினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர் என்றும் "புகையிலை வரைபடம்' எச்சரிக்கிறது.

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 விழுக்காடு நபர்கள் தங்களது அதிகமாகச் சம்பாதிக்கும் மத்திய வயதில் உயிரிழப்பு அல்லது கடுமையான நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதை அந்தப் புள்ளிவிவரம் தெளிவுபடுத்துகிறது. இதனால் அவர்களது குடும்பமும், அவர்களது பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

உடல்நலக்குறைவு என்பதும் உயிரிழப்பு என்பதும் ஒருபுறம் இருக்க, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் உடல் உழைப்புத் திறனும் கணிசமாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. புகைபிடிப்பதால் நுரையீரல் பலவீனப்பட்டு, அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மற்றவர்களைப் போல விரைந்து நடக்கவோ, மாடிப்படி ஏறவோ முடிவதில்லை என்கிறது அந்த ஆய்வு. மேலும், அவர்களது வேலை நேரத்தில் புகைபிடிப்பதற்காக வெளியில் செல்வதால், எடுத்துக் கொண்ட பணியில் முழுக்கவனமும் செலுத்த முடிவதில்லை என்றும் குறிப்பிடுகிறது.

புகைபிடிக்கும் பழக்கத்தின் மற்றும் ஒரு சாபக்கேடாக குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் ஆண்மைக்குறைவு. புகைபிடிக்கும் பெண்கள் பிரசவத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதுடன் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் வளர்ச்சிக் குறைவு, அங்கஹீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறது அந்த ஆய்வு.

பெண்களைப் பொருத்தவரை, புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும், அதில் பாதிக்கும் அதிகமானோர் புகைபிடிப்பதாகவும் கூறுகிறது "புகையிலை வரைபடம்'. மற்றவர்களில் பெரும்பாலோர் வெற்றிலைப் பழக்கத்துக்கும், "குட்கா' எனப்படும் புகையிலையை அப்படியே மெல்லும் பழக்கத்துக்கும் அடிமையாகி இருப்பவர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், படிக்காத கிராமப்புற பெண்கள் மத்தியில் புகையிலைப் பழக்கம் கணிசமாகக் குறைந்து வருவதாகவும், படித்த, நகர்ப்புற 30 வயதுக்குக் குறைவான பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கிறது அந்த அறிக்கை.

""தாங்கள் ஆண்களைப் போல எல்லாம் செய்ய வேண்டும் என்கிற நாகரிக மோகம், படித்த பெண்கள் மத்தியில் அதிவேகமாக இந்தியாவில் வளர்ந்து வருவதன் தாக்கம்தான் இது. புகைபிடிப்பதாலும் ஆண்களைப் போல உடையணிவதாலும் ஆண்களுக்கு சமமாகிவிடுவோம் என்கிற கருத்து ஏற்பட்டிருப்பது, அவர்களது உடல்நிலையைப் பாதிக்கும் என்பதுகூடத் தெரியவில்லை. பெண்கள் நலவாரியங்கள் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்று ஆதங்கப்படுகிறார்கள் புற்றுநோய் எதிர்ப்புக் கழகத்தினர்.

புகைபிடிப்பவர்கள் தங்களது உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வதுடன் சுற்றிலும் இருக்கும் புகைபிடிக்காதவர்களின் உடல்நலத்தையும் பாதிக்கிறார்கள். தங்களது குடும்பத்தினரின் உடல்நலம் பாதிக்கப்படும், குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படும் என்பது தெரியாமல் வீட்டில் புகைபிடிப்பவர்கள்தான் ஏராளம். புகைபிடிப்பதும், புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதும் நாகரிகத்தின் அடையாளம் என்கிற தவறான கண்ணோட்டம் மாற்றப்பட்டால் மட்டுமே இந்த உயிர்க்கொல்லிப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

புகையிலைப் பழக்கம் என்பது ஒரு சமூக இழிவாகவும், புகையிலை எதிர்ப்பு என்பது ஒரு சமூக இயக்கமாகவும் உருவாக வேண்டும். குறிப்பாக, பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் இந்தப் பழக்கம் நாளைய தலைமுறையையே நாசமாக்கிவிடுமே, நாம் வாளாவிருக்கலாமா?

நன்றி : தினமணி

Tuesday, September 8, 2009

சத்யம் நிறுவனர் ராஜூவுக்கு மாரடைப்பு : மருத்துவமனையில் அனுமதி

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ரூ. 7 ஆயிரத்து 800 கோடி மோசடி வழக்கில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ கைது செய்யப் பட்டார். இந்த மோசடி குற்றத்துக்காக சஞ்சலகுட்டா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ராஜூவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர், ஐதராபாத் நிஜாம் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி : தினமலர்


Monday, September 7, 2009

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ய பி.பி.சி.எப்., கோரிக்கை

'நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளதால், 500 மற்றும் 1,000 ரூபாய் முகமதிப்புக் கொண்ட நோட்டுக்களை ரத்து செய்ய வேண்டும்' என, பாரதிய வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டமைப்பு (பி.பி.சி.எப்.,) கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு பாரதிய வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஓம் பிரகாஷ் சர்மா அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டில் போலி ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் கோடிக்கணக்கில் உள்ளது. அவற்றை கண்டுபிடிப்பது சிரமமான பணியாக உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே, போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட பாகிஸ்தான் ஆதரவு தருகிறது. போலி ரூபாய் நோட்டுக்கள் புழக்கம், பயங்கரவாதிகளின் தாக்குதலை விட ஆபத்தான ஒன்று. பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்ணால் காண முடியும். இதன் பாதிப்பை கண்ணால் காண முடியாது. ஆனால், பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
போலி ரூபாய் நோட்டுக்கள் தயாரிப்பு மற்றும் அதன் புழக்கத்தை கட்டுப்படுத்த உளவுத்துறையினர் தவறி விட்டனர். இந்த அபாயத்தை முறியடிக்க தற்போதுள்ள ஒரே வழி, இப்போது புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் முகமதிப்புக் கொண்ட நோட்டுக்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். புதிய வடிவில் ரூபாய் நோட்டுக்களை வெளியிட வேண்டும். இவ்வாறு ஓம் பிரகாஷ் சர்மா கூறினார். இதற்கிடையில், உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கான்பூர் ரிசர்வ் வங்கியின் மேலாளர் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், 'ஷாம்லி நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர், 500 ரூபாய் முகமதிப்பு கொண்ட 10 போலி ரூபாய் நோட்டுக் களை ரிசர்வ் வங்கியில் டிபாசிட் செய்துள்ளார்' என, தெரிவித்துள்ளார். இதேபோல், முசாபர் நகர் மற்றும் மீரட்டில் உள்ள எட்டு வங்கிகளின் மேலாளர்களுக்கு எதிராகவும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Sunday, September 6, 2009

மெழுகு குலையாத பழங்கள்

வெகு நாட்களுக்கு முன் நாகர்கோவில் செல்லும் வழியில் மணிமேடை சந்திப்பில் காலை வேளையில் அவ் வழியாகச் செல்லும்போது அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் கூடைகூடையாக ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இறங்கும். பழங்களெல்லாம் பாதுகாப்பாய் வைக்கோலால் பொதியப்பட்டிருக்கும். மொத்த விற்பனையாளர் அந்தப் பழங்களை இறக்கி, சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகித்துக் கொண்டிருப்பார்.

அன்று நாம் பார்த்த பழங்கள் மெருகு குலையாதவை. இன்றைய பழங்கள் மெழுகு குலையாதவை. அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மையோடு தீமையையும் செய்து கொண்டிருக்கின்றன.

இன்று பழம் விளைகிற ஊரில் பழத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை. விளைகிற ஊரிலிருந்து பழங்கள் வாகனங்கள், ரயில், விமானமென ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து உலகின் எந்த மூலைக்கோ பயணப்படுகிறது.

வழக்கமாக அமெரிக்கா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, டிராகன், கிவி போன்ற பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.

அந்தப் பழம் கெட்டுப் போகாமல் அது பயணப்படும் காலத்தையும் கால நிலையையும் தாங்கிக் கொள்ளும் விதமாக அது பதப்படுத்தப்படுகிறது. குறிப்பாக பார்க்கப் பளபளப்பாக இருக்கும் விலை உயர்ந்த ஆப்பிள் பழங்கள் ரசாயன மெழுகால் பூசப்பட்டு பொதியப்பட்டவை. கையால் அப்பழத்தைச் சுரண்டிப் பார்த்தாலே அந்தப் பழத்திலிருந்து மெழுகு உதிர்வதைக் காணலாம்.
பெரும்பாலானவர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களின் பளபளப்பில் அதுவே தரமான ஆப்பிளாகக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். அந்த ஆப்பிள் பழத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு இயற்கைத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட உண்ணத் தகுந்தவையா, ரசாயனப் பூச்சா என யாராலும் பகுத்தறிய இயல்வதில்லை.

ரசாயனப் பூச்சு மெழுகும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்த முறையான ஆய்வும் இல்லை. மக்களுக்கும் அது குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லை.

பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.

இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் தூரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.

மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.

நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர்.

சுத்தப்படுத்தப்பட்ட மெழுகானது சுவையற்றது, மணமற்றது, விஷமற்றது. ஆனால், இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கே உரிய மெழுகைத்தான் இந்த வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை.

பழங்களுக்கு மெழுகு பூச்சிடுவதால் வணிகர்களுக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மெழுகிடுவதால் பழங்களின் எடைக்குறைவைத் தவிர்க்க இயலும்.

பளபளப்பான தோற்றம், பழத்தின் இளமையைக் கூட்டுதல், பழத்தின் நீர்மம் ஆவியாகாமலும் பழம் சுருங்கிவிடாமலும் தடுத்தல், பழத்தின் பருமனைப் பெருக்கிக் காட்டுதல், பூச்சிகளிலிருந்தும் மற்ற காரணங்களாலும் பழம் பழுதடையாமல் காத்தல் என பல அம்சங்கள் அவர்களை இந்த மெழுகிடும் வேலையைச் செய்விக்கின்றன.

உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத பூச்சிடத்தகுந்த சாதனங்கள் விலை அதிகமானவை. அதனால் தரங்குறைந்த மெழுகுகளால் மெழுகப்பட்ட பழங்கள் பல பெரிய நிறுவனங்களின் அலமாரிகளை பளபளப்புடன் அலங்கரிக்கின்றன. அந்தப் பழங்களுக்கு மெழுகோடு ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பெயர்களும் பெருமையுடன் சூட்டப்படுகின்றன.

மெழுகிடப்பட்ட இந்தப் பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்புடைய நோய்களுக்கு வழிவகுப்பதோடு, புற்று நோய்க்குக்கூடக் காரணமாகிவிடும் என்ற மக்களின் அச்சத்துக்கு வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இன்னொரு பக்கம் கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. பணமே முக்கியமாகிவிட்டது. நாட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை.

அந்தந்த ஊரில் விளையும் கொய்யா, மாங்காய், பப்பாளி, வாழை, திராட்சை போன்றவற்றிலேயே நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. அதைப் பறித்த குறைந்த கால அளவுக்குள் அந்தந்த ஊர் மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் உட்கொள்ளலாம்.

பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமிலவாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.

சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தைவிட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறதாம்.

ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம்.

இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.

இந்நிலையில் நாகரிக உலகத்தைப் பார்த்து ஆப்பிளும் மெழுகைப்பூசி தன் அழகை மெருகேற்றிக் கொண்டதோ?

கட்டுரையாளர் : எஸ். நீலகண்டன்
நன்றி : தினமணி

குறைந்த விலை சிறிய கார்: போர்டு தயாரிக்கிறது

போர்டு மோட்டார் கம்பெனி, குறைந்த விலை சிறிய ரக கார் தயாரிப்பை துவக்கி உள்ளதாக, கம்பெனியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து, கம்பெனி மூத்த அதிகாரி கூறுகையில்,'இந்தியா, சீனா, கிழக்கு ஐரோப்பா மற்றும் தென்அமெரிக்கா போன்ற வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில், விற்பனை செய்வதற்காக, போர்டு மோட்டார் கம்பெனி, குறைந்த விலை சிறிய ரக கார் தயாரிப்பை துவக்கி உள்ளது. இந்த புதிய ரக கார், உலகின் பல்வேறு சந்தைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்த கார் தயாரிப்பு குறித்து போர்டு நிறுவனத்தின் ஆசியா-பசிபிக் மற் றும் ஆப்ரிக்கா பிரிவு நிர் வாக துணைத் தலைவர் ஜான் ஜி.பார்கர் கூறியதாவது: உலகளவில், குறிப்பாக ஆசியா-பசிபிக் பகுதிகளில் சிறிய கார் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியா, குறைந்த விலை கார் தயாரிப்பிற்கான தளமாக, உலகளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. போர்டு நிறுவனம் தயாரிக்கும், புதிய ரக சிறிய கார் வித்தியாசமானதாக இருக்கும். இதை, இந்தியாவில், அடுத் தாண்டு (2010) அறிமுகப்படுத்த உள்ளோம். இந்தியா பெரியளவிலான கார் சந்தை என்பதால், ஒரு விதமான காரை வைத்து, வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது மற்றும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது கடினம். எனவே, சிறிய ரக கார்களிலேயே, பல்வேறு விதமான கார்கள் தயாரிக்க, போர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், சிறிய ரக கார் தயாரிப்பிற்காக, போர்டு நிறுவனம், 2,500 கோடி ரூபாயை புதிதாக முதலீடு செய்துள்ளது. இவ்வாறு பார்கர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Saturday, September 5, 2009

ஆசிரியப் பணி என்னும் அறப்பணி

இதுவரை உலகில் இவ்வளவு உயர்ந்த இடத்தை யாருக்கும் அளித்தது இல்லை; அன்று முதல் இன்றுவரை இதில் மாற்றமும் இல்லை; இதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா? இருக்கிறது.

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆசிரியப் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன வெறும் மொழிகள் இல்லை; பொன்மொழிகள்! மனித வரலாற்றில் வழிவழி வந்த மாறாத மணிமொழிகள்.

மக்கள் மட்டுமல்ல, மாமன்னர்களே மண்டியிடும் இடம் குருவின் பாதங்கள். அவர் பேச்சே வேதம்; அவர் மூச்சே அரசியல்; அவர் அன்றி நாட்டில் ஓர் அணுவும் அசையாது; அவர் காட்டும் வழியில்தான் அரசாங்கமே நடந்தது.

முடியுடை மூவேந்தர்களாக இருந்தாலும் புலவர்களைப் போற்றியதற்குக் காரணம் இதுதான்; சாணக்கியனின் வழியில் சந்திரகுப்தன் போனதற்குக் காரணமும் இதுதான்; அர்த்தசாஸ்திரம் ஆக்கப்பட்டதற்கும் அதுவே காரணம்.

மாபெரும் இதிகாசமாகப் போற்றப்படும் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், பகைவர்களான கௌரவர்களுக்கும் ஒரே குரு துரோணாச்சாரியார். அவர் கட்டை விரலைக் கேட்டபோதும் கவலைப்படாமல் எடுத்துத் தந்த மாணவன் கதை, காலம் காலமாகக் கவலையோடும், கண்ணீரோடும் கேட்கப்படுகிறது.

கிரேக்க வரலாற்றில் இடம்பெற்ற ஆசிரியர் சாக்ரடீஸ், அவர் மாணவர் பிளேட்டோ, அவர் மாணவர் அரிஸ்டாட்டில் இவர்களை உலகம் இன்னும் இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறது. அறிஞர் அரிஸ்டாட்டில் மாவீரன் அலெக்சாண்டருக்கு மட்டுமா ஆசிரியராக இருந்தார்? அறிவுலகம் அனைத்துக்குமே ஆசிரியராகப் போற்றப்படுகிறார்.

""நான் வாழ்வதற்காக என் பெற்றோருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டுள்ளேன்'' என்றார் அந்த அலெக்சாண்டர்.

கல்வியா? செல்வமா? வீரமா? இவ்வாறு எத்தனை கேள்விகள் கேட்டாலும் அவற்றில் முதலில் வைத்துக் கேட்கப்படுவது கல்வியேயாகும். அதனை அளிப்பவர்கள் மதிக்கப்படுவதும், துதிக்கப்படுவதும் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பதை எடுத்துக்கூற வேண்டுமோ?

இவ்வாறு மரியாதை அளித்துவரும் மக்கள் சமுதாயத்துக்கு ஆசிரியர் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புக்குப் பங்கம் ஏற்படாதவண்ணம் நடந்து காட்ட வேண்டுமல்லவா? தேசத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் இளைய சமுதாயத்துக்குக் கல்வியும், ஒழுக்கமும் அளித்து அவர்களைப் பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய நன்றிக்கடனை நமது ஆசிரியர்கள் மறந்துவிடலாமா?

ஆனால் ஆசிரியர்கள் இதற்கெல்லாம் தகுதியுடையவர்களாக நடந்து கொள்கிறார்களா? அன்றைய கால ஆசிரியர்களைப்போல அர்ப்பணிப்பு உணர்வுடன் இன்றைய ஆசிரியர்கள் பணிபுரிகிறார்களா? சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தியாகம், தொண்டு இவர்களிடம் இருக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்ப்பதில் தவறில்லையே!

""மாணவர்கள் நாட்டை நிர்மாணிக்கும் சிற்பிகள். அவர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிடில் அவர்களுடைய செயல் நாட்டிற்குத் தலைகுனிவும், ஏமாற்றமும் உண்டுபண்ணும். ஐம்பது ஆண்டுகள் உலகின் பல பகுதிகளில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டவன் என்ற முறையில் ஒன்று கூறுவேன். ஆசிரியர் செய்வதை மாணவர் பின்பற்றுவர். ஆகவே முந்தியவர், சரியான வழிகாட்டுவது அவசியம். மேலும் மூளைத்திறனைவிட உன்னத உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...'' என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆசிரியப் பணி என்பது ஊதியத்துக்காக மட்டுமே செய்யப்படும் தொழில் அல்ல; தொண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த நாட்டின் இளைய தலைமுறை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது; அவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியும் சேர வேண்டும்; கல்வியும், அறிவும் அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும்; இந்த நாட்டைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை என்று இவர்கள் கூற முடியாது; கூறவும் கூடாது.

"ஆசிரியர் அடித்ததால் கிணற்றில் விழுந்து தற்கொலை' என்றும், "மாணவி மீது பாலியல் வன்முறை - பேராசிரியர் கைது' என்றும், "மாணவரைச் சாதியைச் சொல்லித் திட்டியதால் தலைமையாசிரியரை எதிர்த்துப் போராட்டம்' என்றும் வரும் செய்திகள் நாட்டின் நலனை நாடுவோருக்குக் கவலை தருகிறது. பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியதால் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாற்காலிகப் பணிநீக்கம்; அவர் மீதான ஊழல் புகார்கள் பற்றி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிடாமல் இருக்க அவரது பாஸ்போர்ட் முடக்கம்; இதற்குப் பல்கலைக்கழக அதிகாரிகளும், ஆசிரியர்களும் துணை என்னும் செய்திகள் ஆசிரியர் சமுதாயத்தை மாசுபடுத்துகின்றன.

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்தால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது; சில மாணவர்கள் அவசரப்பட்டு தன்னையே மாய்த்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தவறுகளைத் திருத்திக் கொள்வதால் பயன் என்ன?

இவையெல்லாம் எங்கேயோ நடப்பவை, யாரோ சிலரால் செய்யப்படுபவை என்றாலும் அந்தச் செய்திகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆசிரியர் சமுதாயத்துக்குத் தீராத பழியாகவே நின்று நிலவும். மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு ஒழிந்துபோகும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும்.

கறுப்புத் துணியில் கறைபட்டால் கண்ணுக்குத் தெரியாது. வெள்ளைத் துணியில் கறைபடக் கூடாது என்பதில் கவனம் தேவைப்படுகிறது. ஆசிரியர்கள் இந்தப் பண்பு நலன்களை வளர்த்தெடுத்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது; அனைவருக்கும் நல்லது.

""தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பள்ளி - கல்லூரிகளில் நியமிக்கப்படுகின்றனர்'' என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்; வரவேற்க வேண்டியதுதான்.

இதுதவிர, முறையான பயிற்சியில்லாத புதிய ஆசிரியர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறாத போலி பயிற்சிப் பள்ளிகள் புற்றீசல்கள் போல் புறப்பட்டதுதான். இதற்கு யார் காரணம்?

படிக்காமலேயே, பயிற்சி பெறாமலேயே பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் போதும், தேர்வில் அமர்ந்து விடலாம். அதன்பிறகு கல்வித்துறையை எதிர்த்து நீதிமன்றம் போய் வெற்றி பெற்று விடலாம் என்ற கல்வி வணிகர்களின் கணக்குத்தானே அரசியல்வாதிகளின் துணையோடு தொடர்கிறது.

நீதிமன்றமும் அரசு அங்கீகாரம் இல்லாமல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் நடத்திய கல்வி வணிகர்களுக்குத் தண்டனை தராமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் துணை செய்வதாகக் கூறிக்கொண்டு தீர்ப்பு என்ற பெயரால் துணைபோனது.

போலிப் பல்கலைக்கழகங்கள், போலி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், போலி மருத்துவர்கள் போலவே போலி ஆசிரியர்களும் புகுந்துவிட்டனர். இதற்கு யார் காரணம்? அரசும், கல்வித்துறையும்தான். போலிக் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்மேல் நடவடிக்கை எடுக்காமல், "அந்தக் கல்விக்கூடங்களில் சேர வேண்டாம்' என்று மக்களை எச்சரித்தால் போதுமா? இந்த எச்சரிக்கை எத்தனை பேருக்குத் தெரியும்?

கடுமையான வெயிலில் பாறைமேல் வைக்கப்பட்டுள்ள வெண்ணெய் உருகி ஓடுவதை, கையில்லாத ஊமையன் கண்ணால் பார்த்துக் கலங்கி நிற்கும் நிலையில்தான் உண்மையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தங்கள் காலத்திலேயே, தங்களுக்கு எதிரிலேயே கல்வி சீரழிவதைப் பார்த்து வேதனைப்படுகின்றனர்; மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணி ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.

உலகமெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாய்மொழிக் கல்வி தமிழ்நாட்டில் மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசாங்கமே உயர் தனிச் செம்மொழி என்று ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகும் தமிழ்வழிக் கல்வி எதிர்க்கப்படுகிறது. எல்லோரும் வரவேற்கும் "சமச்சீர் கல்வி'யை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பிறகும், "அதனை எதிர்த்து நீதிமன்றம் போவோம்' என்று மெட்ரிக்குலேஷன் நிர்வாகங்கள் அரசாங்கத்தையே மிரட்டுகின்றன.

இந்த நிலையில் ஆசிரியர்களுக்குப் பொறுப்புகள் அதிகம். ஆசிரியர் சங்கங்கள் இனியும் ஊதிய உயர்வு கேட்கும் சங்கங்களாக மட்டும் இல்லாமல், எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்களுக்குத் தங்கள் உரிமைகளோடு கடமைகளையும் செய்யும்படி எடுத்துக்கூறத் தயங்கக்கூடாது.

ஆசிரியர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் - குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் அவரும் ஓர் ஆசிரியரிடம் பயின்றவர்தாம். ஆசிரியர்கள் அந்த உயர்ந்த இடத்தை இழந்துவிடலாமா?

(இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்)

கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி

இப்படியும் ஓர் ஆசிரியர்!

வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.

மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.

இனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.

குப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.

அதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் "" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே! இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்'' என்று பல முறை சொல்லியும் அந்த மாணவர் அழுக்கான குல்லாவையே அணிந்து வந்தாராம். இதைச் சகித்துக் கொள்ள முடியாத அந்த ஆசிரியர், மாணவரின் தலையிலிருந்த குல்லாவை அவரே எடுத்துக்கொண்டு போய் சுத்தமாகத் துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தாராம்.

ஆசிரியரே தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்துச் சுத்தமாக்கிக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டதும் அந்த மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். அதன் பிறகு அந்த மாணவர் குல்லாவை எப்போதும் சுத்தமானதாகவே அணிந்து வந்தாராம்.

கல்வியை மட்டும் மாணவருக்குக் கற்றுத் தராமல் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுத்தந்த இந்த ஆசிரியர் யார்?

தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்தவர். ஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பி.எச்டி. டாக்டர் பட்டம் பெற்றவர். மிகச் சிறந்த கல்வியாளர். அவர் தான் டாக்டர் ஜாகீர் ஹுசைன். ஆசிரியர் தினத்தன்று அவரின் தியாகச் செயல்களை நினைத்துப் பெருமை கொள்வோம்.

அவர் நடத்தி வந்த பல்கலைக்கழகத்துக்கு காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் உள்பட பலரும் நிதியுதவி செய்து வந்துள்ளனர். இவரது பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தவர்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்த பலரும் திடீரென நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டனர்.

நிதி நிலைமை மோசமான நிலையிலும்கூட கல்விக் கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பாத ஜாகீர் ஹுசைன், நிதி நிலைமையைச் சரிசெய்ய தன்னுடைய சம்பளத்தையும் மற்ற ஆசிரியர்களின் சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதென முடிவு செய்தார். அவரிடம் பணிபுரிந்த ஆசிரியர்களும் அதற்கு உடன்பட்டார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

அனைவரும் மாதம் ரூ.300 சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆனால் மற்ற பல்கலைக்கழகங்களில் பணி செய்த ஆசிரியர்களின் சம்பளமோ ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்த நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ரூ.300 மட்டுமே சம்பளமாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த செய்தி மிகப்பெரிய தியாகமாகப் பேசப்பட்டது.

ஊதியக் குறைவுக்காக எந்தவித ஆர்ப்பாட்டங்களோ, பேரணிகளோ நடத்தவில்லை. அப்படி இருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்தது. மாதம் ரூ.300 சம்பளமாகப் பெறும் தொகையையும் குறைத்துக் கொண்டு ரூ.200 சம்பளமாகப் பெற்றனர். இதுவும் அதைவிட பெரிய தியாகச் செயலாகப் பேசப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு நிதி நிலைமை மேலும் மோசமாகவே ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை ரூ.150 ஆகவும் குறைத்துக் கொண்டனர்.

ஆனால் ஜாகீர் ஹுசைனோ தனது சம்பளத்தை ரூ.95 ஆக குறைத்துக் கொண்டார். இந்த 95 ரூபாய் மாதச் சம்பளத்தில் தான் சுமார் 20 ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.

இந்த தேச உணர்வும், தியாக உணர்வும் இருந்த கல்வியாளரைத்தான் இந்தியா தனது குடியரசுத் தலைவருக்கான கட்டிலில் மூன்றாவது முறையாக அமரவைத்து அழகு பார்த்தது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த முதல் இஸ்லாமியர். கீழே இருப்பவர் மேலே போக ஏறிச்செல்ல உதவும் ஏணியும், இக்கரையில் இருப்பவர் அக்கரைக்குச் செல்லத் தோணியும் உதவுவதைப் போல மாணவச் செல்வங்களுக்காகவே தங்களை உருக்கிக் கொண்டு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும் இந்த மெழுகுவர்த்திகள் போற்றுதலுக்குரியவர்கள். வணக்கத்துக்கு உரியவர்கள்.

ஆசிரியர் மட்டும் மனது வைத்துவிட்டால் அனைத்து மாணவர்களையும் அப்துல் கலாம்களாக மாற்றி விட முடியும். அவமானங்களும், அலட்சியங்களும் விண்ணைத் தொடும் வெற்றிகளுக்கான எரிசக்திகள் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சம்பவங்கள் மூலம் விளக்கி அவர்களை உருக வைக்க முடியும். ஆசிரியர் தினமான இன்று மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்துவோம்!

கட்டுரையாளர் : எஸ்.வி.எஸ். ஜெகஜோதி
நன்றி : தினமணி

மும்பையில் ரூ.1.77 கோடி கிரெடிட் கார்டு மோசடி

மும்பையில் பிரபல வங்கியில், ஒரு கோடி 77 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் கடைக்காரர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஹுக்கும்சிங் பிருத்விசிங் ராவ் என்பவனை மும்பை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன. மும்பை போன்ற நகரங்களில் வாடிக்கையாளர் வசதிக்காக, வங்கிகள் 'எலக்ட்ரானிக் டேட்டா கேப்ச்சர்'(ஈ.டி.சி) மிஷின்களை நிறுவியுள்ளன. இவற்றில் கிரெடிட் கார்டு மூலம், வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்தலாம். 7,500 ரூபாய்க்கு மேல் போனால் வாடிக்கையாளரின் அடை யாள அட்டை நகலை கடைக்காரர்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மும்பை அந்தேரியில் 'வெல்கம் எலக்ட்ரானிக்ஸ்' கடையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஈ.டி.சி., மிஷினை வைத்திருந்தது. வங்கி ஊழியர்கள் அந்தக் கடையின் வங்கிக்கணக்கில் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடந்ததைக் கண்டுபிடித்தனர். எப்போதும் மிகக் குறைவாகவே பரிவர்த்தனை செய்யும் அந்தக் கடையை சோதனையிட்டனர். அப்போது, போலி வாடிக்கையாளர் அட்டைகளும் போலி கிரெடிட் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து, மும்பைப் பெருநகர பொருளியல் குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனர் சஞ்சய் சக்சேனா கூறுகையில், 'ஹுக்கும்சிங் இதே கடை மூலம்தான் மோசடி செய்துள்ளான்.


பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. கடைசியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில்தான் ஒரு கோடி 77 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளது. மோசடிக்கு உடந்தையான 'வெல்கம் எலக்ட்ரானிக்ஸ்' கடைக்காரரையும் விசாரித்து வருகிறோம்' என்றார்.

நன்றி : தினமலர்


வாரம் தோறும் பிரிமியம்: எல்.ஐ.சி.,யின் ஜீவன் மங்கள்

வாரம் தோறும் பிரிமியம் செலுத்தும் வகையில் எல்.ஐ.சி.,யின் நுண் காப்பீட்டுத் திட்டமாக 'ஜீவன் மங்கள்' நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., கட்டடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'ஜீவன் மங்கள்' பாலிசியை மண்டல மேலாளர் வி.கே.சர்மா அறிமுகப்படுத்தி பேசியதாவது: நகர்ப்புற, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் 'மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பாலிசியான 'ஜீவன் மாதூர்' திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2006ல் துவக்கி வைத்தார். இரண்டாவதாக தற்போது 'ஜீவன் மங்கள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு காலவரையறைக்கு உட்பட்ட திட்டம். பாலிசி முடிவில் செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படும். இதன் பிரிமியத்தை ஒரே தவணை, ஆண்டு, காலாண்டு, அரையாண்டு, மாத தவணை, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மற்றும் வாரந்தோறுமாக செலுத்தலாம். கால முடிவிற்குள் பாலிசிதாரர் இறந்தால், வாரிசுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். விபத்துக்கான கூடுதல் காப்பீடு செலுத்தி, விபத்து பாதுகாப்பு பெறும் வாய்ப்பும் உள்ளது. 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை காப்புத் தொகை பெறலாம். எல்.ஐ.சி.,யின் 53வது ஆண்டு மற்றும் எல்.ஐ.சி., வார விழா இம்மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எல்.ஐ.சி., தனது பாலிசிதாரர்களுக்கும், சமுதாயத்திற்கும் நிறைவான சேவையை தந்து வருகிறது. இவ்வாறு சர்மா தெரிவித்தார். 'ஜீவன் மங்கள்' பாலிசியை சமூக சேவகர் சரோஜினி வரதப்பன் வெளியிட்டார். எல்.ஐ.சி., நிறுவன அதிகாரிகள், ஏஜன்ட்கள், என்.ஜி.ஓ.,க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்


Friday, September 4, 2009

காக்க.. காக்க..

அமெரிக்க நாட்டின் பல்வேறு கலைக்கூடங்களில் உள்ள இந்திய பஞ்சலோகச் சிலைகளை மீட்பதற்கு மத்திய புலனாய்வுத் துறையின் உதவியை நாடியுள்ளதாகத் தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து திருடப்பட்டு தற்போது நியூயார்க் நகரின் கலைக்கூடத்தில் இருக்கும் 12 நடராஜர் சிலைகளை இன்டர்போல் அமைப்பின் மூலமாக மீட்டுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய புலனாய்வுத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் காவல்துறைத் தலைவர் (பொருளாதார குற்றப் பிரிவு) எஸ். ராஜேந்திரன் அண்மையில் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் அரசு மட்டுமே கலைக்கூடங்கள் வைத்திருப்பதில்லை. தனியார் அமைப்புகளும் கலைக்கூடங்களை நிர்வகிக்கின்றன. பெரும்பாலும் இக் கலைக்கூடங்களில்தான் இந்தியாவிலிருந்து கடத்தப்படும் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய மண்ணை விட்டு வெளியேறிய கலைச் செல்வங்களை மீட்டுவருவது அத்தனை எளிதாக இருக்கவில்லை என்பதைத்தான் கடந்தகால அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மாபெரும் போராட்டத்துக்குப் பின்னர்தான் பத்தூர் நடராஜர் சிலையை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவர முடிந்தது. தமிழகத் தொல்லியல் துறையின் அன்றைய இயக்குநர் நாகசாமி மற்றும் அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் இருவரும் காட்டிய ஆர்வம்தான் காரணம் என்று கலைப்பொருள் ஆர்வலர்கள் இன்றும் மெச்சுகிறார்கள்.

ஆனால், அந்த ஒரு சிலையைத் தவிர குறிப்பிடும்படியாக இந்தியக் கலைப்பொருள் எதையும் நாம் மீட்டுக் கொண்டு வரவில்லை. இந்தியக் கலைச்செல்வம் என்று அனைவருக்கும் தெரிந்த கோகினூர் வைரத்தைக்கூட நம்மால் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

இதற்குக் காரணம், இந்திய தெய்வச் சிலைகள் மற்றும் கலைப் பொருள்கள் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டவை என்று தெரிந்திருந்தாலும்கூட சர்வதேச நீதிமன்றங்களில் வழக்காடும்போது அவர்கள் கேட்கும் அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் காட்ட முடிவதில்லை என்பதுதான். வெளிநாட்டுக் கலைக்கூடங்களில் இருக்கும் இந்தியச் சிலைகள் நம் நாட்டுத் தொல்லியல் துறையின் பதிவு பெற்ற சிலையாக இருந்தால் மட்டுமே நம்மால் வழக்காடவும் ஆதாரத்தைக் காட்டவும் இயலும்.

தற்போது நம்மிடம் உள்ள பஞ்சலோகச் சிலைகள் மற்றும் தெய்வச் சிலைகளை "காமா ரேய்ஸ் ஃபிங்கர் பிரிண்ட்' போன்ற நவீன தொழில்நுட்ப உதவியுடன் பதிவு செய்கிறார்கள். அனைத்துக் கோணங்களிலும் சிலையைப் படம் எடுத்து, சிலையின் எடையை மிகத் துல்லியமாகக் கணிக்கிறார்கள்.

ஆனால், அரசு கலைக்கூடங்களில் உள்ள சிலைகள் நீங்கலாக, தற்போது கோயில்களில் உற்சவமூர்த்திகளாக இருக்கும் அனைத்துப் பஞ்சலோகச் சிலைகளும் தொல்லியல் துறையிடம் பதிவு பெற்றவையாக இருப்பதில்லை. ஏற்கெனவே பதிவுபெற்ற சிலைகளாக இருந்தாலும்கூட, தற்போதைய நவீன தொழில்நுட்ப முறைகளில் அவற்றை மறுபதிவு செய்து சான்றுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.

இத்தகைய பதிவுகளை முறையாகவும் முழுமையாகவும் செய்தால் மட்டுமே நம்மால் இன்றைய நவீன உலகில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மீட்க முடியும். இதில் அரசு மற்றும் கோயில்களின் பஞ்சலோகச் சிலைகள் மட்டுமல்ல, தனியார் தங்கள் வீடுகளில், மடங்களில் வைத்து பல தலைமுறையாக வழிபடும் பஞ்சலோகச் சிலைகளையும்கூட பதிவு செய்துகொள்ள முடியும்.

பழைய நடைமுறைப்படி, பஞ்சலோகச் சிலைகளின் உள்ளீடற்ற பகுதியில் இருக்கும் வார்ப்பட மண் மட்டுமே "தெய்வசாட்சியாக' நீதிமன்றத்தில் நிற்க முடிந்தது. பத்தூர் நடராஜரை இந்திய மண்ணுக்கு மீட்டுவர உதவியது இந்த மண்தான். ஆனால் இப்போது அறிவியல் முறைப்படி மேலும் பல சான்றுகள் தேவைப்படுகின்றன.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் அனைத்திலும் உள்ள பஞ்சலோகச் சிலைகளை, சர்வதேச நீதிமன்றத்தின் தேவைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப முறையில் பதிவு செய்து வைக்க முன்வர வேண்டும். தனது கட்டுப்பாட்டில் இல்லாத சிறிய கோயில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளையும் நவீன முறைப்படி பதிவு செய்ய நிதியுதவி அளிப்பதும் அறநிலையத் துறையின் கடமையாகும்.

ஒவ்வொரு சிலையும் வெளிநாடுகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விலைபோகிறது என்பதால்தான் இந்தியச் சிலைகள், குறிப்பாக தமிழகக் கோயில்களில் உள்ள சிலைகள் திருடு போகின்றன. அனைத்துக் கோயில்களிலும் சிலைகளை வைக்கும் பாதுகாப்பு அறைகளை "கைரேகைத் திறவுகோல்' போன்ற நவீன முறைகளால் பலப்படுத்த வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி, சிலைகளை மீட்பதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் சிலைகளை இந்திய மண்ணில் பாதுகாக்கும் செலவு மிகக் குறைவாகவே இருக்கும்.

நன்றி : தினமணி

சர்க்கரை விலை உயர்வை தடுக்க நடவடிக்கை

சர்க்கரை விலை உயர்வை தடுக்கும் விதமாக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக 20.45 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கி வைக்க மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி வரும் மாதங்கள் அதிகம் பண்டிகைகள் நிறைந்த மாதங்கள் என்பதால், சர்க்கரையின் தேவை அதிகம் ஏற்படும். கரும்பை விட கோதுமை உள்ளிட்டவைகளுக்கு அதிக கொள்முதல் விலை கொடுக்கப் படுவதால், விவசாயிகள் அதிகமாக கரும்பு பயிரிடுவதை நிறுத்தி உள்ளனர். இதனால் இந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கியூபா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் இருந்து ‌சர்க்கரை இறக்குமதி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், சர்க்கரை விலை அதிகளவு உயர வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு விற்பனைக்காக செப்டம்பர் மாதத்திற்கு 20.45 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 18.34 லட்சம் டன் வெளி சந்தையிலும், 2.11 லட்சம் டன் ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யப் படும்.
நன்றி : தினமலர்


6 வாரங்களுக்குள் 2.5 பில்லியன் டாலர் ஆடர் பெறுவோம்: பெல் நிறுவனம்

இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடேட்(பெல்) வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 4 முதல் 6 வாரங்களுக்குள் 2.5 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆடர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவன சேர்மன் தெரிவிக்கும் போது, அதிக ஆடர்களை பெற பெல் நிறுவனம் போதுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏற்கனவே பல்வேறு திட்டங்களை வகுத்து விட்டோம். தற்போது முதல் காலாண்டு நிதியறிக்கை முடிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த வருடம் 150 பில்லியன் ரூபாய் உட்பட 1.3 டிரிலியன் ரூபாய் அளவிற்கான ஆடர்களில் கையெழுத்திடப் பட்டுள்ளது. இன்னும் 4 முதல் 6 வாரங்களில் 2.5 பில்லியன் டாலர் வரையிலான ஆடர்களை பெறுவோம் என தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


விபத்தில்லா தமிழகம் எப்போது?

உலக அளவில் சாலை விபத்துகளில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ள நிலையில், இந்திய அளவில் தமிழகத்திலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 2007-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 94,985 பேர் இறந்துள்ளதாக டபுள்யு.ஆர்.எஸ். தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை இரண்டாவதாகும்.

இது இவ்வாறு இருக்க தமிழகத்திலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

2006-ம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற சாலை விபத்துகளின் எண்ணிக்கை 3,94,432. இதில் தமிழகத்தில் மட்டும் 55,145 விபத்துகள் நடந்துள்ளன. இந்தியாவின் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இது 14 சதவீதமாகும் என என்.சி.ஆர்.பி. கூறியுள்ளது.

2007-ல் தமிழகத்தில் 59,140 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 12,036 பேர் இறந்துள்ளனர். 2006-ல் நடந்த 55,145 சாலை விபத்துகளில் 11,009 பேர் மரணமடைந்துள்ளனர். 2005-ல் நடைபெற்ற 51,152 சாலை விபத்துகளில் 9,216 பேர் இறந்துள்ளனர்.

2007-ம் ஆண்டில் நடைபெற்ற 59,140 விபத்துகளில் 5,557 விபத்துகள் அரசு பஸ்கள் மூலம் நிகழ்ந்துள்ளன. இதில் 1,543 பேர் இறந்துள்ளனர். தனியார் பஸ்கள் மூலம் நடந்த 4,029 விபத்துகளில் 832 பேர் இறந்துள்ளனர்.

லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் ஏற்பட்ட 10,355 விபத்துகளில் 2,851 பேர் இறந்துள்ளனர். கார், டாக்சி உள்ளிட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து 14,908. இதில் 2,574 பேர் பலியாகியுள்ளனர்.

அதுபோல் இரு சக்கர வாகனங்களால் ஏற்பட்ட 16,070 விபத்துகளில் 2,451 பேரும், மூன்று சக்கர வாகனங்களால் ஏற்பட்ட 4,857 விபத்துகளில் 1,187 பேரும் மரணமடைந்துள்ளனர்.

இவ்வளவு விபத்துகளும் சாலைப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் இன்றைய வேளையிலும் தொடர்வதுதான் வேதனை.

விபத்தைக் குறைக்கும் நோக்கோடு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் செயல்பட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

இதற்காக கடந்த 2000-01-ம் ஆண்டில் ரூ. 2 கோடியும், 2001-02-ல் ரூ. 3.75 கோடியும், 2002-03-ல் ரூ. 5 கோடியும், 2003-04-ல் ரூ. 5 கோடியும், 2004-05-ல் ரூ. 5 கோடியும், 2005-06-ல் ரூ. 6 கோடியும், 2006-07-ம் ஆண்டு ரூ. 6 கோடியும், 2007-08-ல் ரூ. 6 கோடியும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மேலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்காக தமிழக அரசு ரூ. 65 லட்சம் வழங்கியுள்ளது.

இப்படி நிதி ஒதுக்கப்பட்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சாலை விதிகளை நாம் மதிக்காததையே காட்டுகிறது. விபத்து ஏற்படாமல் தவிர்க்க ஒவ்வொரு தனிமனிதனும் சபதம் எடுத்தால்தான் முடியும் என்றபோதிலும், இவ்வளவு நிதி ஒதுக்கும் அரசு சாலைப் பாதுகாப்புக் குறித்து இன்னும் முனைப்புக் காட்ட வேண்டும் என்கின்றனர் மக்கள்.

தற்போது விபத்தை ஏற்படுத்தும் நபருக்கு அதிக அளவு தண்டனை தருவது குறித்து அரசு பரிசீலித்து வரும் நிலையில் முதற்கட்டமாக பாமரன் முதல் படித்தவர்வரை அனைவருக்கும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

இதைக் கடமையாக மட்டும் செய்ய நினைக்காமல், உயிர் காக்கும் சமூகசேவைபோல செய்ய அரசு முனைப்புக் காட்ட வேண்டும். இதற்காக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து பயிற்சி அளித்து, பின்னர் அவர்கள் மூலம் விழிப்புணர்வுப் பிரசாரத்தை நடத்தினால் சாலை விதிகளை மக்கள் அறிந்து செயல்பட முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் என்சிசி, என்எஸ்எஸ், பசுமைப்படை, இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள், சாரண மாணவர்கள், போலீஸ் நண்பர்கள் குழுவினர் உள்ளிட்டோருக்கு சாலைப் பாதுகாப்புக் குறித்த பயிற்சியை அளித்து அவர்களைக் கொண்டு ""சாலைப் பாதுகாப்புப் படை'' என பள்ளிகளில் புதிய அமைப்பை ஏற்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்கின்றனர் போக்குவரத்து காவல்துறையினர்.

அதுபோல், விபத்தால் ஏற்படும் பாதிப்புகளை நன்கு உணர்ந்தவர்கள் பெண்கள் என்கிற நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கும் இத்தகைய பயிற்சிகளை வழங்கிப் பிரசாரம் செய்தால் விபத்துகள் இல்லா தமிழகம் உருவாவது நிச்சயம் சாத்தியமாகும்.

கட்டுரையாளர் : வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி

முடிவு முதல்வரிடம்!

விவசாயம் செய்பவர்கள் பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளிடம் மட்டுமே தங்களுக்கு வேண்டிய அறிவை இனிமேல் பெற வேண்டும். தந்தையின் அனுபவ அறிவைப் பெறுவதுகூட சட்டவிரோதம். அதற்கு அத் தந்தை இனி தண்டிக்கப்படுவார்.

""இனி இவர்கள் சொல்வதை மட்டுமே தமிழக விவசாயிகள் கேட்க வேண்டும்...'' என்ற சட்ட மசோதாவை முதலமைச்சர் எப்படி அனுமதித்தார் என்பது இன்னமும் வியப்பாகவே உள்ளது.

தாத்தாவின் விரல் பிடித்து, தந்தையுடன் வயலில் நடந்து சென்று, விவசாய அறிவை சிறுவயது முதல் சுவீகரித்து வளர்ந்தது தான் விவசாய சமூகம். முன்னோர்களிடமிருந்து, பெற்ற அறிவை தலைமுறைக்குத் தலைமுறை மேம்படுத்தி வந்ததன் விளைவே நிலவள மேம்பாடு, கால்நடைகள் மேம்பாடு, விதை உற்பத்தி, புதிய ரகங்களை உருவாக்குதல், பூச்சிக் கட்டுப்பாடு, பருவத்திற்கேற்ற, மண்ணின் தன்மைக்கேற்ற ரகங்கள் உருவாக்கம் எனப் பலதும் நடந்தது. பச்சைப் புரட்(டு)சிக்கு முன் இந்தியாவில் இருந்த 4 லட்சத்துக்கும் அதிகமான நெல் ரகங்கள் எல்லாம் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பயிலாத "பாமர' விவசாயிகள் இப்படி மேம்படுத்திய அறிவின் விளைவால் உருவானதே.

பல்கலைக்கழகங்கள், பச்சைப்புரட்சி என்றுகூறி இந்த விதைவளத்தையும், விவசாயியின் அறிவையும் சிதைத்து, பண்ணையில் பயிரிடப்பட்ட பயிர்களின் வகைகளைக் குறைத்தது. ஒவ்வொரு பயிரிலும் இருந்த ரகங்களின் எண்ணிக்கையையும் அழித்தது. 10,000 ஆண்டுகள் சிதையாதிருந்த இந்திய வேளாண்மையை தனது உலக வணிக மேலாதிக்கத்துக்காக ஆங்கில அரசு சிதைத்திருந்தது. அமெரிக்காவின் ரசாயன விவசாய மாதிரியை விவசாயக் கல்வியாக்கிக் கொண்ட விவசாயப் பல்கலைக்கழகங்கள் மூலம் ஏற்கெனவே சிதைவுற்றிருந்தது, மேலும் சிதிலம் அடைந்தது. கடன் வாங்குவதே கேவலம் என்றிருந்த சமூகத்தை ""கடன் தள்ளுபடி செய், இல்லாவிடில் வாழ முடியாது'' என்ற நிலைக்குத் தள்ளி மானமிழக்கச் செய்தது இந்த விவசாயமுறை.

அறுபதுகளின் கடைசிவரையில், ஆங்கிலேயரின் கொள்கைகளால் சிதைவுற்றிருந்த பின்னரும், ஒரு விவசாயி தன் மகனுக்குப் படிப்பு ஏறாவிட்டாலும் "மாடும் காடும் உள்ளது, பிழைத்துக் கொள்வான்' என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், இன்றோ எல்லா தந்தையருமே விவசாயத்தை விட்டு ஓடிவிட முயல்கின்றனர். ""எங்கள் கிராமம் விற்பனைக்கு'' என்று வார்தா அருகே டோர்லி கிராமம் தன்னையே விற்க விளம்பரம் செய்த அவலம், திணிக்கப்பட்ட விவசாய முறையின் விளைவு. அரசின் கொள்கைகள் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றும் விதமாகவே உள்ளது. கம்பெனிகள் ஆயிரமாயிரம் ஏக்கர்களில் நிலம் வாங்குகின்றன. இந்தியாவில் மட்டுமன்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியக் கம்பெனிகள் விவசாயக் கம்பெனிகள் தொடங்கி பல்லாயிரம் ஏக்கர்களை வளைத்துப் புதிய காலனி ஆதிக்கத்துக்கு இந்திய அரசின் உதவியோடு அச்சாரம் போடுகின்றன.

நிறைய விளைந்து தள்ளிய விவசாயம் இங்கிருந்தது என்பதற்கும், ஆங்கிலேய அரசால் அது சிதைக்கப்பட்டது என்பதற்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவுகள் பல இன்னமும் அழியாமல் உள்ளன.

பச்சைப் புரட்சியையும் அமெரிக்க மாதிரி விவசாய முறையையும் ஆதரிப்பவர்கள் 1940-களில் நிகழ்ந்த வங்க பஞ்சத்தையே காரணம் காட்டுகின்றனர், ஓர் உண்மையை மறைத்து. 30 லட்சம் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த அதே காலத்தில் கோல்கத்தா துறைமுகத்திலிருந்து உலக வர்க்கத்துக்காக கப்பல் கப்பலாக அரிசியையும், சர்க்கரையையும் ஏற்றுமதி செய்தது ஆங்கில அரசு. பஞ்சத்துக்கான உண்மையான காரணம் விளையாததல்ல, விளைந்ததைப் பிடுங்கியதும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததுமே.

விவசாயம் என்பது வெறும் பயிர் வளர்ப்பதல்ல. அற்புதமான வாழ்வு முறை. எந்தவொரு அரசனின், அரசின் கையையும் எதிர்பார்க்காது வாழ்ந்த உன்னத வாழ்வு முறை. அதை கம்பெனிகள் நலனுக்காக வளர்த்தெடுக்கப்பட்டு இந்திய விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட இரவல் அறிவு வெறும் வணிகத்திற்கு சுருக்கியது.

இதனுடைய விளைவு 10,000 ஆண்டுகால நம்பிக்கை சிதைந்தது மட்டுமன்றி நீர் கெட்டது, கிணறுகள் வறண்டன, நிலம் மலடானது.

இந்தச் சிதைவையும் இதற்கான காரணத்தையும் அறிந்த சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகிழ்த்தனர். கிராமத்து மக்களின் கதைகளிலும், பழமொழிகளிலும் விடுகதைகளிலும், நாட்டுப்புற இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் விவசாய அறிவை மீட்டெடுத்து அதை அறிவியல் விளக்கங்களுக்கு உட்படுத்தி விவசாயிகளிடமே திரும்பத் தந்தனர். இது அவர்களுக்கு புதிய அறிவைக் கொடுப்பதாக அல்லாமல் அவர்தம் அறிவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் "விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக' இயக்கமாகத் தொடங்கியது இன்று தமிழகத்தின் எல்லா வட்டங்களுக்குமாகப் பரவியுள்ளது. இவர்கள் இத்துடன் நிற்கவில்லை. உலகில் உள்ள பலவகையான இயற்கை விவசாய முறைகளையும் அறிந்து தத்தமது பண்ணைச் சூழலுக்கும், கிராமச் சூழலுக்கும் ஏற்ப தன்மயப்படுத்தி பரப்பினர். வேளாண் பல்கலைக்கழகம் அறிவதற்கு முன்பே முதலமைச்சர் கருணாநிதி செம்மை நெல் சாகுபடி என்று பெயரிடப்பட்ட சாகுபடி முறையை 1999-லேயே தமிழக விவசாயிகள் கடைப்பிடித்து ஒற்றை நாற்று நடவு என்று பெயரிட்டுப் பரப்பினர். இவையனைத்தும் அரசின் உதவியோ, வேறு வெளி உதவிகளோ இன்றி நடந்தேறியது.

இயற்கை வழியில் விவசாயிகள் பெற்ற தன்னம்பிக்கையும், சுயசார்பையும் கண்ணுற்ற பிற விவசாயிகளும் பல்கலை அறிவியல் மீது நம்பிக்கையற்றுப் போயினர். இவ்விரு பிரிவினரும் பல்கலைக்கழகத்தின் அறிவைக் கேள்விக்குறியாக்குகின்றனர். பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைக்கின்றனர். கம்பெனிகளுக்குத் தன்னை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மரபணு மாற்றுப் பருத்தியை ஆதரிக்கத் தொடங்கிய பின் வேளாண்மைப் பல்கலை எத்தனை பருத்தி ரகங்களை வெளியிட்டுள்ளது என்று வினா தொடுக்கின்றனர். செலவுமிக்க பி.டி. பருத்தி மூலம் அதிகம் விளைகிறதா, புழு கட்டுப்படுகிறதா அல்லது பல்கலைக்கழகமே பாராட்டிப் பரப்பிய எளிய ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் அதிகம் விளைகிறதா, புழுக்கள் கட்டுப்படுகிறதா என்று ஒப்பீட்டாய்வை ஏன் செய்யவில்லை என்கின்றனர். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் எல்லா வணிகப் பயிர்களிலும் 30 - 50 சதவீதம்வரை விளைச்சலை அதிகப்படுத்த முடியும் என்று சொன்ன பல்கலைக்கழகம் இப்போது ஏன் அம்முறைகளைப் பற்றிப் பேசுவதில்லை, அதை ஏன் அமுக்கிவிட்டது என்று கேட்கின்றனர்.

இப்படி விவசாயிகளும், விவசாய சங்கத் தலைவர்களும் கேள்விகள் கேட்பது பல்கலைக்கழகத்திற்கு மட்டும் நெருடலாக இருக்கவில்லை. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கையை 70 சதத்திலிருந்து 20 - 25 சதமாகக் குறைக்க வேண்டும், கம்பெனிகள் விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற உலகமய, உலக வங்கிப் போக்குகளுக்கு எதிராக இருக்கிறது.

ஒவ்வொரு விவசாயியும் நடமாடும் விவசாயக் களஞ்சியமாக மாறுவதும் இரவல் அறிவின் அர்ச்சகர்களுக்கு நெருடலாக இருக்கிறது. இவை அடுத்த 10 - 20 ஆண்டுகளில் நடந்தேற வேண்டிய "சில' திட்டங்களை நடந்திடாது தடுத்துவிடும் என்பதால் தமிழக அரசைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன் வெளிப்பாடே பட்ஜெட் தொடரின் கடைசி நாளன்று எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்ட 30 சட்ட மசோதாக்களில் ஒன்றான இச்சட்டம். தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் - 2009 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்ட இம் மசோதாவை ஆதரித்து வாக்களித்த உறுப்பினர்கள் ஆற அமர அதைப் படிக்கும்போது, ஓர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையைப் பறிக்கக்கூடிய ஒரு மோசமான சட்டத்திற்கு வாக்களித்தோம் என்பதை உணர்வார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் முன் இப்போது இரு வழிகள் உள்ளன. தனக்கும் தம் ஆட்சிக்கும் பழியைச் சேர்க்க இருக்கும் இந்தச் சட்டத்தை முற்றாக ரத்து செய்வது. ஏனெனில் இத்தகு மன்றத்திற்கு எவ்விதத் தேவையும் இல்லை. மற்றொன்று தமது அரசு கம்பெனிகளின் போக்கில் போகிறது என்பதைக் காட்டும்விதமாக இம்மசோதாவை உடனே சட்டமாக்குவது.

முடிவு முதல்வரிடம்!


கட்டுரையாளர் : ஆர். செல்வம்

நன்றி : தினமணி


விதி வலியது...

ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் அந்த மாநில அரசியல் சரித்திரத்தில் ஒரு மிகப்பெரிய துயரமாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. என்னதான் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டாலும் அதையும்மீறி விதி விளையாடி விடுகிறது என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.

மருத்துவத்துக்குப் படித்துப் பட்டம் பெற்ற ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம் முதலே கரடு முரடானதாக இருந்தாலும், அதிர்ஷ்டக் காற்றும் அவருக்குச் சாதகமாக வீசி வந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். தனது 29-வது வயதில் 1978-ல் ராஜசேகர ரெட்டி சட்டப்பேரவை உறுப்பினரானதும் அடுத்த இரண்டே ஆண்டுகளில் துணையமைச்சராகப் பதவி ஏற்றதும் வெறும் தொடக்கமாக மட்டுமே இருந்தன. அவருடைய மிகப்பெரிய அரசியல் சாகசங்கள் கால் நூற்றாண்டுக்குப் பிறகுதான் அரங்கேற்றப்பட்டன.

2003-ல் ராஜசேகர ரெட்டியின் பாதயாத்திரை ஏற்படுத்திய அதிர்வு அடுத்த ஆண்டே, ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்று கருதப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. 2004 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜசேகர ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்தபோது, இந்த மனிதர் அசைக்கவே முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தொடர்ந்து எந்த ஒரு காங்கிரஸ் முதல்வராலும் பதவிக் காலம் முழுவதும் ஆட்சி செய்ய முடியாது என்கிற சரித்திரத்தைத் திருத்தி எழுதிய பெருமையும், இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் முதல்வர் என்கிற பெருமையும் நீலம் சஞ்சீவ ரெட்டிக்கும், காசா பிரம்மானந்த ரெட்டிக்கும் பிறகு ராஜசேகர ரெட்டியைத்தான் சாரும். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கும் ராஜசேகர ரெட்டியின் அரசியல் சாதுர்யமும், மக்கள் செல்வாக்கும்தான் காரணம் என்பதை எதிர்க்கட்சியினரேகூட ஒத்துக் கொள்வார்கள்.

ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலம் பற்றிய கணிப்பு எழுதப்படுமானால், இரண்டு விஷயங்களைத் தவிர்க்க இயலாது. முதலாவது, அவரது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அளவுக்கு இலவசத் திட்டங்கள் வேறு எந்த ஆட்சியிலும், எந்த அரசாலும் நிறைவேற்றப்பட்டதில்லை. அந்த இலவசத் திட்டங்களிலும் சரி, ஏழை எளியவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உண்மையிலேயே உபயோகமான குறைந்த விலையில் உணவுப் பொருள்கள், மருத்துவ வசதி, மின்சாரம் போன்றவைதான் வழங்கப்பட்டதே தவிர, ஊதாரித்தனமாக அரசு கஜானா சொந்த லாபத்துக்காக வீணடிக்கப்படவில்லை.
இரண்டாவதாக, அவரது ஆட்சியில், செயல்பாட்டில் இல்லாத புறம்போக்கு நிலங்கள் தனியார் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்கப்பட்டு ஏறத்தாழ ரூ. 1,500 கோடிவரை ஈட்டியது. இந்த விஷயத்தில் அரசு கஜானாவுக்கு வந்ததைவிடப் பல மடங்கு அரசியல்வாதிகளின், குறிப்பாக, ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவர்களின் பையை நிரப்பியது என்கிற குற்றச்சாட்டு இருப்பதும் உண்மை.

ஒரு முதல்வரின் மரணம், அதுவும் பதவியில் இருக்கும்போது மரணம் என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்திதான். 60 வயதிலும் துடிப்பாகவும், உற்சாகமாகவும் செயல்படும் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, தான் நடைமுறைப்படுத்தும் மக்கள் நல்வாழ்வுத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்று பார்வையிடச் சென்றபோது அகால மரணமடைந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.

மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்துத் தங்களது உயிரை அர்ப்பணிக்கும் தலைவர்களின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவது என்பது மக்களின் கடமை. நாகரிக மனிதன் செய்ய வேண்டிய நன்றிக் கடன். ஆனால், இதுபோன்ற தலைவர்களின் மரணத்தைச் சாக்காக வைத்து, உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் கட்சித் தொண்டர்களும், அவர்களுடன் சேர்ந்து சமூக விரோதிகளும் நடத்தும் அராஜகங்கள், மரண துக்கத்தை மறக்கடித்து விடுகின்றனவே!

பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் தில்லியில் நடந்த சீக்கியர் கலவரத்தின் வடுக்கள் இன்றுவரை மறைந்தபாடில்லை. எத்தனை பேர் உயிரிழந்தனர். எத்தனை வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டன. அப்போது, பெண்களும் குழந்தைகளும் பயத்தால் அலறிய ஓலம் இன்றுவரை காதில் ஒலிக்கிறதே...

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு நடந்த கலவரங்களும், ஆங்காங்கே கடைத்தெருக்கள் சூறையாடப்பட்ட சம்பவமும் மறக்கக்கூடியதா என்ன? சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் சிலையை ஒருவர் கடப்பாரையால் உடைத்த காட்சி இப்போதும் ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறதே...

தலைவர்களின் மரணத்துக்கு மௌன அஞ்சலி செலுத்துவதை விட்டுவிட்டு வன்முறையில் ஈடுபடுவதும், கடைத்தெருக்களைச் சூறையாடுவதும், பஸ்களையும், ரயில்களையும் கொளுத்துவதும் அநாகரிகம் என்று சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளாகியும், கல்வி அறிவு கணிசமாக அதிகரித்த பிறகும் புரியாமல் இருப்பது ஏன்? ரயில்களும், பஸ்களும் நிறுத்தப்பட்டதால் எத்தனை எத்தனை குடும்பங்கள் ஆந்திராவில் நடுத்தெருக்களில் தத்தளிக்கின்றனவோ? அஞ்சலி செலுத்த வேண்டிய நேரத்தில் அந்த அப்பாவி ஜனங்களின் சாபத்தை அல்லவா இந்தத் தொண்டர்கள் மறைந்த மாமனிதனுக்குப் பெற்றுத் தருகிறார்கள்...

எப்போதுதான் நாம் நாகரிக மனிதர்களாக வாழப் போகிறோமோ என்கிற கவலை தோய்ந்த சிந்தனையுடன், மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் குடும்பத்துக்கு "தினமணி' தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறது!
நன்றி : தினமணி

ஐரோப்பாவில் குண்டு பல்பிற்கு தடை

ஐரோப்பிய நாடுகளில் குண்டு பல்பு பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப் பட்ட இந்த குண்டு பல்புகளால், மின்சாரம் அதிகம் வீணாவதோடு, அதனை பயன்படுத்துவதன் மூலம் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனை தடுக்கும் விதமாக, ஐரோப்பாவில் குண்டு பல்பிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், குண்டு பல்பிற்கு பதிலாக ப்ளோரோசன்ட் லேம்ப்ஸ் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவிலும் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி : தினமலர்


கோடிகளை குவிக்கும் கோவில் பிசினஸ்: ஒரு ஷாக் ரிபோர்ட்

மனிதனுக்கு வேலை, பணம் உள்ளிட்ட எந்த பிரச்னைகள் ஏற்பட்டாலும், தன்னுடைய கவலைகளை தீர்த்து கொள்வதற்காக, அவன் மு‌தலில் தேடி செல்லும் இடம் கோவில். ஆத்மாவிற்கு அமைதியும் , நிம்மதியையும் தரும் இந்த கோவில்களில் தற்போதை‌ய நிலை, பணத்தை குவிக்கும் பிசினசாகி போனது தான். உடனடியாக கோடீஸ்வரராக நினைக்கும் சிலர், தங்கள் இடத்தில் ஒரு கோவிலை கட்டி, அங்கு ஒரு உண்டியலை வைத்து விடுகின்றனர். பின்னர், அந்த கோயிலை பிரபலப் படுத்தி, அதன் மூலம் கோடி கணக்கில் லாபம் பெறுகின்றனர். இதனால் தற்போது, தமிழகம் முழுவதும் கோயில் பிசினஸ் தான் கொடி கட்டி பறக்கிறது. இந்த கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டால் மட்டுமே மக்கள் ஏமாற்றப் படாமல் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், மக்களின் பணமும் சரியான தேவைகளுக்காக பயன்படுத்தப் படும். ஆனால் இதுபோன்ற தனியார் கோயில்களில் கிடைக்கும் பணம் குறிப்பிட்ட ஒருசிலருக்கு மட்டுமே போகின்றன. இதுகுறித்து, திருப்பூர் ஈஸ்வரன்கோயில், பெருமாள் கோயில் முன்னாள் திருப்பணிக்குழுத் தலைவர் முருகநாதன் தெரிவிக்கும் போது, ஒரு தனியார் கோயிலை அறநிலையத்துறை எடுப்பதால் அதை அரசு எடுத்ததாக ஆகிவிடாது. அங்கு வரும் காணிக்கை, நன்கொடை போன்றவை கணக்குப் பார்த்து தணிக்கை செய்து அது வேறொரு வேலைக்கு பயன்பட்டுவிடாமல் அறநிலைத் துறை பார்த்து கொள்கிறது. அதோடு அந்த கோயிலுக்கான பூஜை நேம நியமங்களை அறங்காவலர் குழு என்ற தனியார் தான் நிர்வகிப்பார்கள். ஒரு கோயிலை அறநிலையத்துறை நிர்வகிப்பது தான் உண்மையில் அந்தக் கோயில் நிர்வாகிகளுக்குப் பாதுகாப்பானது என்று தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் உட்பட ஏகப் பட்ட தனியார் கோயில்கள் தமிழகத்தில் தற்போது வளர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி : தினமலர்


Thursday, September 3, 2009

தண்ணீர்... தண்ணீர்!

பருவமழை பொய்ப்பதால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம். அடுத்து உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை குடிநீர். கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை நோக்கி தமிழகம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 92,000 கிராமங்களில் 3,300 கிராமங்களில்கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நிலைமை 160 பேரூராட்சிகளிலும் 52 நகராட்சிகளிலும் உள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் கிராமப்புற மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவதும், அதிகாரிகளை முற்றுகையிடுவதும் அதிக எண்ணிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன.

நாளுக்கு நாள் இதன்பிடி கிராமப்புற மக்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக மாறிக்கொண்டிருக்கிறது.

நகராட்சி, மாநகராட்சிகளில் இத்தகைய குடிநீர்ப் போராட்டம் நடந்தால், இந்தப் போராட்டத்துக்கு அரசியல் மற்றும் அதிகார ஆதரவு கிடைக்கும். ஏனென்றால், இதைக் காரணம் காட்டி இரண்டு லாரிகளில் தண்ணீர் விநியோகம் என்று சொல்லி, ஒரு லாரியை ஓட்டல்களுக்குத் திருப்பிவிட்டு நாள்தோறும் கணிசமான தொகையைப் பார்க்க முடியும். ஆனால் கிராம மக்களுக்காக குடிநீர் விநியோகம் என்பதை பேரூராட்சிகளால் செய்ய முடியாதே!

மேலும், கிராம மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.

அந்தந்த ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடிநீர்க் கிணற்றிலிருந்து தண்ணீரை மேனிலைத்தொட்டிக்கு ஏற்றி, விநியோகம் செய்யப்படுகிறதே தவிர, இவை பல இடங்களில் சுத்திகரிக்கப்படுவதுகூட இல்லை. ஆனால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. கிணறுகள் வற்றிவிட்டன.

தமிழக அரசின் கொள்கைப்படி, ஒரு தனிமனிதனுக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு கிராமத்தில் 40 லிட்டர், பேரூராட்சியில் 70 லிட்டர், நகராட்சியில் 90 லிட்டர், மாநகராட்சியில் 135 லிட்டர். இத்தகைய மாறுபட்ட அளவீட்டு முறையே அநியாயமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் குடிநீர்த் தேவை என்னவோ ஒரே அளவுதான். நகர மக்கள் குளிக்க, துணி துவைக்க, தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச, கழிவறைக்குப் பயன்படுத்த என்று எல்லா பயன் பாட்டுக்கும் சேர்த்துத்தான் மாநகராட்சி மக்களுக்கு அதிகமான அளவும், கிராமத்து மனிதனுக்குக் குறைந்த அளவும் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் கிராமத்து மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த
பட்சத் தேவைகூடப் பூர்த்தியாகவில்லை.

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி வழங்கும் குடிநீரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிப்பதற்குப் பயன்படுத்துவதே இல்லை. இவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க் கேன்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். உள்ளாட்சி விநியோகம் செய்யும் பெருமளவு குடிநீர், குளியல் மற்றும் நவீன கழிவறைக்கே செலவிடப்படுகிறது என்பது மற்றொரு கசப்பான உண்மை.

அண்மையில் கோவையில் ஒரு தனியார் கல்லூரி நடத்திய ஆய்வு, நீர்க் கசிவுகளும் குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் நீர்த் திருட்டும் மிக அதிகமாக இருப்பதால்தான் மக்களுக்குத் திட்டமிட்ட அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என்கிறது. நீர்த் திருட்டு இழப்பும்கூட, இத்திட்டத்தில் பயன்பெறும் வழியோர கிராமங்களின் தலையில் விழுகிறது.

கல்வியைத் தத்தெடுத்து வளர்க்கும் அரசியல்வாதிகள், குடிநீர் கேன் விநியோகத்தையும், அதற்கான ஆலைகளையும் தத்தெடுத்து சேவை செய்கிறார்கள். இவர்கள் உள்ளாட்சி விநியோகிக்கும் நீரை அப்படியே கேன்களில் பிடித்து, "பியூர் வாட்டர்' என்ற பெயரில் அடைத்து விற்கிறார்கள். "பியூரிபைடு ட்ரிங்கிங் வாட்டர்' என்று லேபிள் ஒட்டினால் சட்டப்படி குற்றம். ஆனால் "பியூர் வாட்டர்' என்பது திருட்டுக் குடிநீராக இருந்தாலும் தண்டனை இல்லை.

இதில் வேடிக்கையானதும் வேதனையானதும் என்னவென்றால், ஏரிகளையும் குளங்களையும் அழித்த நகர, மாநகரங்கள், தங்களுக்குத் தேவையான குடிநீரை, உலகத்தில் மழையே பெய்யாவிட்டாலும்கூட தங்களுக்கு மட்டும் கிடைக்கும்படி செய்துகொள்ள முடிகிறது.

ஏனென்றால், ஆட்சியாளர்களின் இருப்பிடமாக நகரம் இருக்கிறது. ஆனால் கிராம மக்கள் அப்படியல்ல. அவர்களது ஏரி மற்றும் நிலத்தடி நீரை அண்டை நகரங்கள் உறிஞ்சுவதால்தான் அவர்கள் கிணறு வற்றிப்போகிறது. அதனால்தான் அவர்கள் தாகத்துக்குத் தண்ணீர் இன்றித் தவிக்கிறார்கள்.

தமிழக அரசு குடிநீர்ப் பிரச்னைக்காக மொத்தம் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ. 21 கோடி வழங்கியுள்ளது. குறைந்த பட்சம், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கைகளில் மட்டுமாவது நேர்மையாகவும் முறைகேடுகளால் நிதி ஒதுக்கீடு காணாமல் போகாதபடியும் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நகர மக்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வதைச் சற்றே குறைத்துக்கொண்டு, கிராமங்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும்.
ஒரு லிட்டர் குடிநீரை ஒரு ரூபாய்க்கு வாங்கும் சக்தி நகர மக்களிடம் இருக்கலாம். கிராம மக்களிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்குகிற அளவுக்குத்தானே கிராமப்புறப் பொருளாதாரம் இருக்கிறது!

நன்றி : தினமணி

அனைவருக்கும் கிடைக்குமா அடிப்படைக் கல்வி?

அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி கற்கும் உரிமை வழங்கும் மசோதாவை ஜூலை மாதக்கடைசியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றின.

ஒருவகையில் இந்தியாவிலுள்ள அனைத்துத் தரப்பினரையும் இந்த மசோதா திருப்திப்படுத்தியிருக்கிறது. எல்லாக் குழந்தைகளும் கல்வி பெற இந்த மசோதா வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

எனினும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் போதிய விழிப்புடன் இருக்காவிடில் நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடும்.

கல்வி கற்க உரிமை வழங்கும் மசோதாவின் நோக்கத்தில் தவறு இருப்பதாக யாரும் சுட்டிக்காட்ட முடியாது. சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், சிலர் அதை விமர்சித்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தச் சமூகத்துக்கு இப்போது என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் இந்தச் சட்டம்செய்ய முனைந்திருக்கிறது.

காலம் கடந்து வந்திருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த விமர்சனத்தையும் இந்தச் சட்டத்தின் மீது வீசிவிட முடியாது.

1940-களில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து நியூயார்க்கில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

உலக அளவில் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஐ.நா. சட்டத்தில் இதை இடம்பெறச் செய்யவும் இந்தியா போராடியது.

இந்தியாவின் இந்தக் கருத்தை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டு அமல்படுத்தின.

ஆனால், அனைவருக்கும் கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியா, தனது மக்களுக்கு அந்த உரிமையை வழங்குவதற்கு இவ்வளவு காலம் தாமதித்திருக்கிறது.

தற்போதைய சூழலில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் சில பிரச்னைகள் எழக்கூடும். மாநிலங்களில் கல்வியின் நிலை குறித்தும் புதிய திட்டத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான எதிர்கால வழிமுறைகள் குறித்தும் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். திட்டத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்குவது குறித்துத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

இதுதவிர, தரமான ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்ற முன்வருவார்களா? சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியம்தானா? என்பன போன்ற நியாயமான சந்தேகங்களுக்கும் விடைகாண வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தாண்டி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் செலவை 50:50 என்கிற விகிதத்தில் மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்துகொள்ளும் என மக்களவையில் கல்வி அமைச்சர் அறிவித்தார்.

இந்த விகிதம் 67:33 என்கிற விகிதத்தில் இருக்கும் நிலையில், புதிய விகிதத்தை அமல்படுத்துவது குறித்து திட்டக் குழு அல்லது நிதி அமைச்சகத்துடன் உரிய ஆலோசனை பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. கூடுதல் நிதிச்சுமை குறித்து மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என்பதையும் அமைச்சர் விளக்கவில்லை.

அப்படியே கூடுதல் நிதிச்சுமையை ஏற்றுக்கொள்கிறோம் என மாநிலங்கள் கூறினாலும், அவைகளால் முடியுமா என்பதும் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இவை அனைத்துமே தெளிவாக்கப்பட வேண்டிய சந்தேகங்கள்.

இதுவரை கல்வி தொடர்பான பெரிய முடிவுகள் அனைத்தையும் மாநிலங்கள்தான் செய்து வந்தன.

இப்போது முதன்முதலாக மத்திய அரசு அந்த வேலையைச் செய்திருக்கிறது. இது மாநிலங்களின் உரிமை தொடர்பான விஷயம் என்பதால் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை காண வேண்டியது அவசியம்.

பள்ளி ஆசிரியர்கள் என்பவர்கள் அரசியல் ரீதியாகப் பெரும் சக்தி வாய்ந்தவர்கள். வாக்குச் சாவடிகளை இவர்கள்தான் கையாள்கிறார்கள் என்பதால், இவர்களைப் பகைத்துக் கொள்வதை எந்த அரசியல் கட்சியும் விரும்புவதில்லை.

அப்படியிருந்தும், மாணவர்களைத் திறம்படப் பயிற்றுவிக்கும் பணியைச் சரிவரச் செய்யாமலிருக்கும் ஆசிரியர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர்.

பெரும்பாலானோர் நகர்ப்புறங்களிலேயே வசிக்க விரும்புவதால், கிராமப்புறப் பள்ளிகளில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைகளையெல்லாம் போக்குவதற்குப் புதிய சட்டம் என்ன செய்திருக்கிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை.

இந்தியக் கிராமங்களில் தொடக்கக் கல்வி கிடைப்பதில் இப்போது பிரச்னையில்லை. தரமான கல்வியைப் பெறுவதில்தான் தடைகள் இருக்கின்றன.

ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு தொடக்கப்பள்ளி இருக்க வேண்டும்; இரு தொடக்கப் பள்ளிகளுக்கு ஓர் உயர்நிலைப் பள்ளி இருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் கல்வித்துறையில் இருக்கின்றன.

நாடு முழுவதுமே இந்த விதிமுறைகள் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கின்றன. மிக அருகிலேயே கல்வி கிடைப்பதை இது உறுதி செய்கிறது. ஆனால், கல்வியின் தரத்தைப் பற்றி எந்த விதிமுறையும் இல்லை.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மசோதாவை நிறைவேற்றும்போது நாடாளுமன்றத்திலும் இதுபற்றி விவாதிக்கப்படவில்லை. உண்மையில், தரம்தான் தொடக்கக்கல்வியின் அடிப்படைப் பிரச்னை.

பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குவதற்குப் புதிய சட்டம் வழிவகுக்கிறது. இப்படியொரு ஏற்பாடு அவசியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இதை முழுமையாக அமல்படுத்த முடியுமா என்பதுதான் பிரச்னையே. கல்வி வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் பணம் பண்ணுவதையே குறிக்கோளாகக் கொண்ட "கல்வித் தந்தைகள்' இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு நிச்சயம் முட்டுக்கட்டையாக இருப்பார்கள்.

அப்படியே சிலர் அரைமனதுடன் அமல்படுத்தினாலும், 25% பேரிடம் இழக்கும் நன்கொடையை மீதியுள்ள 75% பேரிடம் வசூலிக்கத்தான் போகிறார்கள். இது வேறுவிதமான பிரச்னைகளை உருவாக்கும்.

இன்னொரு பக்கம், "பொருளாதாரத்தில் பின்தங்கியோர்' யார் என்பதை அரசியல் சட்டம் வரையறுக்கவில்லை. அதனால் புதிய சட்டத்தை எதிர்த்துப் பள்ளிகளின் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்வதற்கும் வழி இருக்கிறது. இதுதவிர, பள்ளிகளில் புதிய முதலீடுகள் வருவதையும் இந்தச் சட்டம் பாதிக்கிறது.

இந்தச் சட்டத்தை இயற்றிவிட்டதால், தொடக்கக் கல்வி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் "தீர்ந்து' விட்டது என அரசு நினைப்பதுதான் எல்லாவற்றையும்விட மிகவும் அபாயகரமானது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் "வறுமையை ஒழித்துவிட்டதாக' நினைத்துக் கொண்டிருப்பதைப்போல்தான் இதுவும்.

சட்டங்களை இயற்றுவது, பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்படி மட்டுமே. அதை முழுமையாக அமல்படுத்துவதே பிரச்னையை முழுமையாகத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும்.

கல்வி என்பது சமூகத்தின் மிக அடிப்படையான பிரச்னை என்பதால், மத்திய அரசுடன் மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒத்துழைப்பது அவசியம்.

அப்படியில்லாமல், ஒருவரையொருவர் பழிசுமத்திக் கொள்வதாலும், சட்டங்களை இயற்றிக் கிடப்பில் போடுவதாலும் நிலைமை இன்னும் மோசமாகுமே தவிர, தீர்வு கிடைக்காது.

கட்டுரையாளர் : டி . எஸ். ஆர். சுப்பிரமணியன்
நன்றி : தினமணி