Sunday, October 19, 2008

நானோவுக்கு போட்டியாக குறைந்த விலை கார்

டாடாவின் நானோ காருக்கு போட்டியாக அஜந்தா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ஒரு லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடாவின் கனவுத் திட் டமான ஒரு லட்ச ரூபாய் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை குஜராத் துக்கு மாற்றப்பட்டுள்ளது. சிங்கூர் பிரச்னையால் திட்டமிட்டபடி நானோ கார், குறித்த காலத்திற்குள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாடா நிறுவனத்துக்கு போட்டியாக கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிப்பு நிறுவனமான அஜந்தா, குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, ஒரெவா என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத், கட்ச் மாவட்டத்தில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலையில் காரின் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அஜந்தா நிறுவனங்களின் இயக்குனர் ஜய்சுக் படேல் கூறுகையில், 'ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய அனுபவம் உள்ளது. இதனால், எலக்ட்ரிக் காரை தயாரிப்பதில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. காரின் மாடல் தான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு பணி முடிவடைந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது' என்றார். அஜந்தா நிறுவன வட் டாரங்கள் கூறுகையில், 'காரின் விலை 90 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்துக்குள் இருக்கும். இதுபற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து விசாரணைகள் வரத் துவங்கியுள்ளன' என்றன.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையில் 'உல்டா புல்டா' கனஜோர் : சேதுராமன் சாத்தப்பன்

சந்தை, 10 ஆயிரத்திற்கும் கீழே வராது என்று தைரியமாக நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் பயப்படும்படியாக 10 ஆயிரத்திற்குக் கீழே வந்துள்ளது. உலகளவில் சந்தைகள் இறங்கும் போது இங்கும் இறங்கினால், அதனால் இறங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உலகளவில் சந்தைகள் மேலே செல்லும் போது கூட இங்கு சந்தை இறங்குவது, சந்தையில் முதலீட்டாளர் கள் மத்தியில் சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. 'மேகம் கறுக்குது, மழை வரப் பார்க்குது' என்ற ஆவலோடு பங்குச் சந்தையைப் பார்த்தால், கடும் வெயில் வாட்டி எடுக்கிறது. சந்தை வியாழனன்று இறங்கவே இறங்காது என்று பலரும் பந்தயம் கட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு வலுவான காரணங்களும் இருந்தது.
அதாவது, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை புதனன்று சந்தை நேரத்திற்கு பிறகு எடுத்திருந்தது. அது சந்தையை வியாழனன்று பலப்படுத்தும் என்றே எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு. ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகைகளுடன், புதன்கிழமை மேலும் பல சலுகை அறிவித்தது. இதன் மூலம் வங்கிகளுக்கு மொத்தமாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இந்த சலுகைகளின் மூலம் வியாழக்கிழமை சந்தை ஏற்றத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது உல்டா புல்டா. வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர்., மேலும் குறைக்கப் படாது என மத்திய நிதி அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். கிட்டத்தட்ட 800 புள்ளிகள் குறைந்து முதலீட்டாளர் வயிற்றில் புளி கரைத்தபடி இருந்தது. ஆனால், ஆபத்பாந்தவனாக வந்த செய்தி பணவீக்கம் குறைந்திருக்கிறது என்றது தான். அது, சந்தையில் கிட்டத்தட்ட 570 புள்ளிகள் சரிவிலிருந்து மீள்வதற்கு உதவியது. முடிவாக 227 புள்ளிகள் நஷ்டத்திலேயே முடிவடைந்தது. அனைத்து துறைகளும் இறங்கின என்றே கூற வேண்டும்.
காரணம் இது தான்: பங்குச் சந்தையின் ஜாம்பவான் பங்குகளை அதிகம் வைத்திருக்கும் ஹெட்ஜ் பண்ட் ஒன்று சந்தையில் அதிகமாக பல பெரிய கம்பெனியின் பங்குகளை வியாழனன்று விற்கத் தொடங்கியதால், சந்தையில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் 6 சதவீதத்திற்கு மேலாக குறைந்தது. உலக சந்தைகளை ஒட்டி வெள்ளியன்று காலை சந்தை மேலேயே துவங்கியது. ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு சரியத் தொடங்கியது. அதுவும் 10,000 புள்ளிகளுக்கு கீழே. கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000க்கும் கீழே சென்று சந்தை முடிவடைந்தது. இதுவே முதல் முறையாகும். நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் என்று பாடத் தோன்றுகிறது. எதிர்பார்க்காத எல்லாம் நடப்பது தான் பங்குச் சந்தை. வேண்டாம் என்றால் எல்லாரும் வெளியேற முயற்சிப்பர். வேண்டும் என்றால் எல்லாரும் போட்டி போட்டு வருவர். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 606 புள்ளிகள் குறைந்து 9,975 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 194 புள்ளிகள் குறைந்து 3,074 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. கச்சா எண்ணெய்: பேரலுக்கு 147 டாலருக்கு மேலே சென்றிந்த எண்ணெய், தற்போது இந்த வாரம் 70 டாலர் அளவில் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேலே குறைந்துள்ளது. இவ்வளவு குறைவாக தற்போது இருப்பதற்கு காரணம், அமெரிக்காவில் கையிருப்பு கச்சா எண்ணெய் அதிகமாக இருப்பது என்று சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும் விலை குறைவது நமக்கு நல்லது தான். ஏனெனில், நம் நாட்டுடைய இறக்குமதியில் முதலிடம் வகிப்பது கச்சா எண்ணெய் தான். புதிய வெளியீடுகள்: புதிய வெளியீடுகளா அப்படியென்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு சந்தை வந்துள்ளது. இது நிச்சயம் தொழில் வளர்ச்சியை பாதிக்கும். ஏனெனில், பல கம்பெனிகள் வங்கிகளிடமிருந்து அதிக வட்டியில் கடன்கள் வாங்குவதை விட, முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு முதல் திரட்டுவதை ஒரு வாய்ப்பாகக் கருதின. மேலும், அரசாங்க கம்பெனிகள் தங்களுடைய பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் திட்டமும் தள்ளிப் போகிறது. பங்குச் சந்தையும் ஒரு கரம் தானே; ஏற்றமும் இறக்கமும் இருக்கத்தானே செய்யும். வாங்குவதற்கு நல்ல சந்தர்ப்பமா? சந்தையில் இதுவரை அதிகம் ஈடுபடாத, சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள் எல்லாரும் கேட்கும் கேள்வி இது தான். 15,000 புள்ளிகள் இருக்கும் போதே இது அருமையான சந்தர்ப்பம் என்று கூறப்பட்டது. தற்போது, சந்தை 10,000க்கும் கீழே வந்துள்ளது. பழங்கள் பழுத்து தொங்குகின்றன. ஆனால், பறிப்பதற்கு ஆட்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தும் வகையில் நடைமுறை மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆதலால், மறுபடி வெளிநாட்டுப் பறவைகள், இந்திய பங்குச் சந்தை குளத்தை நோக்கி வர ஆரம்பிக்கலாம். சந்தையில் உள்ள புரோக்கர்களும், சந்தை வல்லுனர்களும் 10,000 போகும், 8,000 வரை போகும் என்று தங்களது வாடிக்கையாளர்களிடம் பயமுறுத்தி வருவதும், மற்றொரு பக்கம், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கிறது பயப்பட தேவையில்லை என்றும், சந்தை ஓராண்டுக்கு இப்படித்தான் இருக்கும் என சொல்லி வருகின்றனர். இப்படி குட்டையை கலக்கி சிலர் மீன் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். புதிய முதலீட்டாளர்கள் தீர்க்கமான முடிவு எடுக்கும் வரை ஒதுங்கியிருப்பதே மேல்.
நன்றி :தினமலர்