Saturday, October 31, 2009

வினை விதைத்தவன்...

பயங்கரவாதம் மதமறியாது என்பது மட்டுமல்ல, மனிதாபிமானமும் அறியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது புதன்கிழமையன்று பெஷாவரில் அரங்கேற்றப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு. இதுவரை பாகிஸ்தான் கண்டறியாத மிகவும் கொடூரமான இந்தத் தாக்குதலில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் ஒரு புராதன நகரம். பெஷாவர் நகரில் கடைத்தெரு என்பது "பர்தா' அணிந்த மத்தியதர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மகளிர் அதிக அளவில் செல்லுகின்ற இடம். பெஷாவரின் மையப்பகுதியில் அமைந்த கிஷாகுவானி பஜார் எனும் நாற்சந்தியில் அமைந்த கடைத்தெரு மத்தியான வேளைகளில் குழந்தைகளுடன் பெண்கள் அதிக அளவில் காணப்படும் இடம். அந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறார்கள் பயங்கரவாதிகள்.

இந்தத் தாக்குதலும் சரி, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டனின் பாகிஸ்தான் விஜயத்தன்று நடைபெற்றிருப்பது என்பது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. அமெரிக்காவின் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தும் போருக்கு எதிரான சவாலாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று கருதினால் தவறில்லை.

இதுபோன்ற தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கும் ஒரு நிர்வாகத்தின் தலைமையில் இயங்கும் ராணுவம் தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் கட்டுப்படுத்தும் மனத்துணிவை இழந்துவிடும் என்று இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் நினைத்திருக்கலாம். அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படும் என்றுகூட அவர்கள் நம்பக்கூடும்.

கடந்த ஒருமாதமாகவே இதுபோன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானில் நடந்தேறியவண்ணம் இருக்கின்றன. சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்பட பல இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தேறியிருக்கின்றன. தீவிரவாதிகளின் எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக பாகிஸ்தானிய மக்களின் எண்ண ஓட்டம் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது என்பதுதான் உண்மை. தங்களது மானசீக ஆதரவால் வளர்ந்த தலிபான்கள் } மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று வித்தியாசம் பாராமல், தங்கள் மீதே தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தானியப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

தலிபான்களுக்கு ஆரம்பத்தில் பாகிஸ்தானிய பொதுமக்கள் மத்தியில் இருந்த ஆதரவு இப்போது கடுமையான எதிர்ப்பாகவும், வெறுப்பாகவும் மாறியிருக்கிறது. ராணுவத்தைவிடத் தீவிரமாக தலிபான்களையும் பயங்கரவாதக் குழுக்களையும் எதிர்க்க மக்கள் துணிந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அரசும் ராணுவமும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை வேரறுக்க இதைவிட நல்ல வாய்ப்பு பாகிஸ்தான் ராணுவத்துக்குக் கிடைக்காது என்கிற நிலைமை. மக்களின் முழுமனதான ஆதரவு அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இருக்கும் நேரம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்குவதற்குப் பதிலாக, பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்றும், இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு நமக்கு உதவக்கூடியவர்கள் என்றும் பிரித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க முற்படுகிறது என்பதுதான் வேடிக்கை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ஒரு விபரீதமான கற்பனையை முன்வைக்க முற்பட்டிருக்கிறார் ஒரு மூத்த பாகிஸ்தானிய அதிகாரி. தலிபான்களுக்குப் பணஉதவி அளித்து அவர்களை வளர்ப்பதே இந்தியாதான் என்று திருவாய் மலர்ந்திருக்கும் அந்தப் பாகிஸ்தானிய அதிகாரி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். ஒரு வருடத்திற்கு முன்னால் இதே தலிபான்களை தேசபக்தர்கள் என்றும் தங்களது ராணுவத்துடன் தோளோடு தோள் சேர்ந்து நின்று இந்தியாவுக்கு எதிராகப் போராடும் சகோதரர்கள் என்றும் இதே பாகிஸ்தானிய ராணுவம் வர்ணித்ததை அவர் இப்போது சற்று நினைவூகூர்ந்தால் நல்லது.

பாகிஸ்தானிய மக்களிடையே இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருந்த காலம் கடந்துவிட்டது. பாம்புக்குப் பால்வார்த்ததன் விளைவை பாகிஸ்தான் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரம் இது. இனியும் கற்பனைப் பூச்சாண்டிகள் பயன்படாது என்பதையும் தீவிரவாதக் குழுக்களின் சகவாசத்தால் எந்தவித நன்மையும் ஏற்படாது என்பதையும் பாகிஸ்தானிய ராணுவமும் அரசும் உணர வேண்டிய தருணம் இது.

போதும், அப்பாவி மக்களை ரத்தம் சிந்த வைக்கும் கொடூரம். அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நேரம் அல்ல இது. தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டிய நேரம்.
நன்றி : தினமணி