நிலங்கள், வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை சரிந்து, பல புரோக்கர்கள் வேறு தொழிலுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக, ஒருவர் தன்னுடைய நிலம், வீடு எதுவாக இருந்தாலும் நேரடியாக விற்பதை விட புரோக்கர்கள் மூலம் எளிதாக விற்க முடியும் என்ற நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. சென்னை நகரில் ஐ.டி., நிறுவனங்கள் கால் பதித்த காலம் அது.
நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் புரோக்கர்கள், தாங்கள் வைத்தது தான் விலை என்ற அளவில் செயல்பட்டு வந்தனர். இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலங்களின் விற்பனை கனஜோராக நடந்ததுடன், நிலங்களின் மதிப்பும் உயரத்துவங்கியது. நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட புரோக்கர்கள், அதிக ஆசையில் ஆங்காங்கே விற் பனைக்கு உள்ள நில உரிமையாளர்களை அணுகி, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து, தாங்களே நிலத்திற்கான விலையை நிர்ணயம் செய்து, சந்தை விலையை அதிகரிக்கத் துவங்கினர். இதனால், ஒரு கிரவுண்டு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலங் கள் எல்லாம், குறுகிய காலத்தில் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டன. முழு நேர ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அதிகளவில் களமிறங் கினர். இதில் கிடைத்த லாபத்தைப் பார்த்த பலர், வெளியூர்களிலிருந்தும் சென்னைக்கு வந்தனர். சென்னையை தொடர்ந்து, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் எல்லை தாண்டி புரோக்கர்கள் நெட்ஒர்க் விரிந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தே ஐ.டி., தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது. தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்த நிறுவனங்கள், ஊழியர்களை வெளியில் அனுப்பத் துவங்கின. அதே நேரம், ஐ.டி., நிறுவனம் மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களை நம்பி லோன் மேளாக்களை நடத்திய வங்கிகள், வட்டி வீதத்தை உயர்த்த ஆரம்பித்தன. இதனால், மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெற்று வந்தவர்கள் வீடோ, நிலமோ வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பாகவே, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி துவங்கியது. இந்த வீழ்ச்சி அலையில், புரோக்கர் தொழிலில் நீண்ட நாட்களாக இருப்பவர்கள் தாக்கு பிடித்தனர். மற்றவர்கள், இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். நிலத்திற்கு பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டவர்கள், குறிப்பிட்ட காலம் முடிந்ததால் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல், தொழிலைத் தொடர முடியாமல் நொடித்துப்போயுள்ளனர். தங்களது சொந்த ஊர்களில் பல்வேறு தொழில்களை பார்த்துவந்த நிலையில் புரோக்கர் தொழிலில் ஆர்வத்துடன் இறங்கியவர்களில் பலர், 'அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை'யாக, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து, தென்சென்னை பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் கூறுகையில், ''இப்போது சென்னையில் பல இடங்களில் நிலங்களை விற்க முடியாமல் உரிமையாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். பலர் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லத் துவங்கிவிட்டனர். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டதால் ஏற்பட்ட நஷ்டம் தான் இதற்கு காரணம்,'' என்றார். - நமது சிறப்பு நிருபர் -
நன்றி : தினமலர்