Tuesday, November 18, 2008

9,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது சென்செக்ஸ்

சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து இந்தியாவிலும் பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு கீழும் நிப்டி 2,700 புள்ளிகளுக்கும் கீழும் சென்று விட்டது. டெலிகாம், டெக்னாலஜி, பேங்கிங், பவர், மெட்டல், கேப்பிட்டல் குட்ஸ், மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சரிந்து கொண்டிருந்த சென்செக்ஸ் பகல் வேளையில் 8,871.71 புள்ளிகள் வரை சென்றது. பின்னர் ஓரளவு மீண்டு வந்து, வர்த்தக முடிவில் 353.81 புள்ளிகளை ( 3.81 சதவீதம் ) இழந்து 8,937.20 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2,664.30 புள்ளிகள் வரை சென்று, பின்னர் 116.40 புள்ளிகளை ( 4.16 சதவீதம் ) இழந்து 2,683.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ, என்டிபிசி, ஏசிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், நால்கோ, யூனிடெக், ஐடியா செல்லுலார் மற்றும் ஹெச்சிஎல் டெக் ஆகியவை 6.8 - 13 சதவீதம் குறைந்திருந்தது. இருந்தாலும் ரான்பாக்ஸி, ஹீரோ ஹோண்டா, சன் பார்மா பங்குகள் உயர்ந்திருந்தன. உலக அளவில் பங்கு சந்தைகளில் இன்று வீழ்ச்சியே காணப்பட்டது. வளர்ந்த நாடுகள் பலவற்றில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வங்கிகள் உள்பட பல பெரிய நிறுவனங்கள் வேலை இழப்பு செய்தது போன்ற காரணங்களால் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆசிய சந்தைகளான ஷாங்கை 6.31 சதவீதம், ஹாங்செங்க் 4.54 சதவீதம், ஜகர்த்தா, ஸ்டெயிட் டைம்ஸ், தைவான், கோஸ்பி, போன்றவை 3 - 4 சதவீதம், நிக்கி 2.28 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தைகளான எஃப்.டி.எஸ். இ 80 புள்ளிகள், சி.ஏ.சி., மற்றும் டி.ஏ.எக்ஸ்., 62 புள்ளிகள் மற்றும் 64 புள்ளிகள், குறைந்திருந்தன. அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 113 புள்ளிகள், நாஸ்டாக் 23.50 புள்ளிகள் குறைந்திருந்தன. உலகின் மிகப்பெரிய வங்கிகளான ஹெச்.எஸ்.பி.சி.,வங்கி 500 பேரையும் சிட்டி குரூப் 52,000 பேரையும் அடுத்த வருடத்தில் வேலையில் இருந்து நீக்குவதாக இன்று அறிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


சிதம்பரத்தின் யோசனையை நிராகரித்தார் ராகுல் பஜாஜ்

பஜாஜ் ஆட்டோவின் சேர்மனும் ராஜ்ய சபா உறுப்பினருமான ராகுல் பஜாஜ், வாகனங்களின் விலையை குறைக்க வேண்டும் என்ற நிதி அமைச்சர் சிதம்பரத்தில் யோசனையை நிராகரித்தார். இன்று புதுடில்லியில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் பேசிய சிதம்பரம், மக்கமிடையே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதமாக, வாகன உற்பத்தியாளர்கள வாகனங்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேர்மன் ராகுல் பஜாஜ், நாங்கள் ஒன்றும் மேஜிக் செய்து விலையை குறைக்க முடியாது. வங்கிகள் வட்டியை குறைத்தால் மட்டுமே நாங்களும் விலையை குறைக்க முடியும் என்றார்.
நன்றி : தினமலர்


ஏர்லைன்ஸ், ரியல் எஸ்டேட்ஸ், வாகன தயாரிப்பாளர்கள் விலையை குறையுங்கள் : சிதம்பரம் வேண்டுகோள்

வாகன தயாரிப்பாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் விமான கம்பெனிகள் கட்டணத்தை குறைக்குமாறு நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வேண்டுகோள் விடுத்தார். உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை தொடர்ந்து, கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் துறையினருக்கு எக்சைஸ் டூட்டியை குறைப்பதாகவும் அவர் உறுதியளித்தார். ஹோட்டல்கள் கண்டிப்பாக கட்டணத்தை குறைக்க வேண்டும். ஏர்லைன்ஸ்கள் கண்டிப்பாக கட்டணத்தை குறைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபர்கள், அவர்கள் விற்பனை செய்யும் வீடுகள் மற்றும் அபார்ட்மென்ட்களின் விலையை குறைக்க வேண்டும். கார் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் விலையை குறைக்க வேண்டும் என்று சிதம்பரம் கேட்டுக்கொண்டார். புதுடில்லியில், உலக பொருளாதார அமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார். மக்களிடையே செலவு செய்யும் போக்கை ஊக்கப்படுத்தும் விதமாக அவர் அவ்வாறு பேசினார். தேவைப்பட்டால் எக்சைஸ் டூட்டியை குறைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி திருப்தி அளிக்கக்கூடிய விதமாக இருப்பதாக சொன்ன அவர், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, இந்த நிதி ஆண்டில் 200 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைய தவறிவிடும் என்று தெரிகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் , வளர்ந்த நாடுகளில் டிமாண்ட் குறைந்து விட்டதுதான் இதற்கு காரணம் என்றார்.
நன்றி : தினமலர்


52,000 ஊழியர்களை குறைக்கிறது சிட்டி குரூப்

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாகவும், அமெரிக்க வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் கடும் நிதி நெருக்கடி காரணமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிட்டி குரூப், உலக அளவிலான அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 52,000 பேரை ( 14 சதவீதம் ) குறைக்கிறது. இதன் மூலம் அதற்கு ஏற்படும் செலவில் 20 சதவீதத்தை குறைக்கலாம் என்று அது கணக்கிட்டுள்ளது. சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இந்தியரான விக்ரம் பண்டிட், ஏற்கனவே கொஞ்சம் பேரை வேலையில் இருந்து நீக்கியது மற்றும் சிட்டி பேங்க்கின் சில துறைகளை மற்றவர்களுக்கு விற்றதன் மூலம் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 23,000 பேரை குறைத்திருந்தார். செப்டம்பரில் இவர்களை குறைத்ததற்குப்பின் அதன் ஊழியர்கள் எண்ணிக்கை 3,52,000 ஆக இருந்தது. இப்போது அதிலிருந்தும் 52,000 பேரை குறைப்பதால் இனிமேல் அதன் உலக அளவிலான ஊழியர்கள் எண்ணிக்கை 3,00,000 ஆக குறைந்து விடும். இந்த நடவடிக்கைகள் குறித்து விரைவில் விக்ரம் பண்டிட் அதன் ஊழியர்களுக்கு அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு மூலம் 2009 ம் ஆண்டு, அதன் செலவில் 12 பில்லியன் டாலர்களை குறைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். கடந்த நான்கு காலாண்டுகளில் சிட்டி குரூப்பிற்கு ஆன மொத்த செலவு 62 பில்லியன் டாலர்கள். கடந்த வாரத்தில் மட்டும் நியுயார்க் பங்கு சந்தையில் சிட்டி குரூப்பின் பங்கு மதிப்பு 19 சதவீதம் குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


25 ஆயிரம் பேருக்கு வேலை: இன்போசிஸ் புது திட்டம்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், ஐரோப்பா மற்றும் ஜப்பானில் இருந்து ஏற்றுமதி ஆர்டர்களை எதிர்பார்த்துள்ளது. 25 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது.இந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற இன்போசிஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:நடப்பாண்டில் கம்பெனி வருவாயில், வட அமெரிக்காவில் இருந்து கிடைத்த பங்களிப்பு மட்டும் 68 சதவீதம்; ஐரோப்பாவில் இருந்து 28 சதவீதம் கிடைத்தது; மீதம் மற்ற நாடுகளில் இருந்து கிடைத்துள்ளது.வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்த தலா 40 சதவீதமும், உலகின் மற்ற நாடுகளில் இருந்து 20 சதவீதமும் வர்த்தக ஆர்டர்களை எதிர்பார்த்துள்ளது.கடந்த காலாண்டில் கம்பெனியின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த காலாண்டில் இருந்து 40க்கும் மேல் இருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.தற்போதுள்ள சூழ்நிலையில் சற்று தொய்வு இருந்தாலும், நீண்ட கால நோக்கில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த நிதியாண்டில் மேலும் 25 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு நியமிக்க இருக்கிறோம். இதில், 9 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த மார்ச் மாதத்திற்கு மேலும் 16 ஆயிரம் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
நன்றி : தினமலர்


வட்டி அதிகரிப்பால் கார்கள் விற்பனை சரிவு

கடந்த அக்டோபர் மாதத்தில் பயணிகள் கார்கள் விற்பனை 6.6 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் கார்கள் விற்பனை குறைந்துள்ளது இது மூன்றாவது முறை.இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள விவரங்களில் தெரிய வந்துள்ளதாவது:கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 877 கார்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், 98 ஆயிரத்து 900 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு விற்பனையோடு ஒப்பிடுகையில், இது 6.6 சதவீதம் குறைவு. ஒரு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், கார்கள் விற்பனை மூன்று முறை குறைந்துள்ளது. 2005ம் ஆண்டுக்குப் பின், இப்போது தான் நடந்துள்ளது. ஜூலை மாதத்தில் கார்கள் விற்பனை 1.71 சதவீதமும், ஆகஸ்ட் மாதத்தில் 4.36 சதவீதமும் குறைந்தது.இருந்தாலும், செப்டம்பர் மாதத்தில் விற்பனை 2.84 சதவீதம் அதிகரித்துள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களின் கெடுபிடி, உயரிய வட்டி வீதம் போன்றவையே கார்கள் விற்பனை குறைய காரணம்.
நன்றி : தினமலர்

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் பஸ்: டாடா - ஐ.எஸ்.ஆர்.ஓ., புதிய திட்டம்

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் பஸ்சை உருவாக்குவதில், டாடா
நிறுவனத்துடன் இணைந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஆர்.ஓ.,) ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஐ.எஸ்.ஆர்.ஓ., தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது:ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில், திரவ வடிவிலான ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஐ.எஸ்.ஆர்.ஓ., நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது. அந்த அடிப்படையில், டாடா நிறுவனத்துடன் இணைந்து, சுற்றுச் சூழலுக்கு உகந்த வாகன தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில், இன்ஜினின் வடிவத்தை ஐ.எஸ்.ஆர்.ஓ., தீர்மானித் துள்ளது. இன்ஜினின் மாதிரி வடிவமும் தயார் நிலையில் உள்ளது. திட்டத்தின் வாகனப் பிரிவு தயாரிப்பை, டாடா நிறுவனம் பார்த்துக் கொள்ளும். இந்த புதிய முறையில் தயாரிக்கப்படும் முதல் வாகனம் அடுத்த ஆண்டு சாலைகளில் ஓடும்.மொத்தத்தில் இந்த புதிய ரக வாகன தயாரிப்பில், திரவ ஹைட்ரஜன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியா சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 2009ம் ஆண்டின் முதல் பகுதியில், இந்த இன்ஜின் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும்.இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.ஹைட்ரஜனில் இயங்கும் பஸ், தயாரிக்கும் திட்டத்திற்கு தலைமை வகிக்கும் ஞானகாந்தி கூறியதாவது:எரிபொருள் செல்களுக்குள் ஹைட்ரஜனை செலுத்தும் போது, அது 80 கிலோ வாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. அதன்மூலம் அதிக சுமை கொண்ட பஸ்சையும் ஓட்டிச் செல்ல முடியும். இந்த பஸ், சி.என்.ஜி.,யில் இயங்கும் பஸ் போல இருக்கும். எட்டு பாட்டில்களில் அதிக பிரசரில் அடைக்கப்பட்ட ஹைட்ரஜனானது, வாகனத்தின் மேற்
பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாள் இரவும் அந்த ஹைட்ரஜன் வாயு பாட்டில்களை மாற்றிக் கொள்ள முடியும்.ஹைட்ரஜனில் பஸ்சை இயக்கும் போது ஆகும் செலவானது, டீசலில் இயங்கும் பஸ்சுக்கு ஆகும் செலவை விட அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வகை பஸ் சுற்றுச் சூழலுக்கு உகந்தது. மாசு ஏற்படுத்தாது. இந்த வகை பஸ்கள் அறிமுகமானால், நகரங்களில் வாகனங்களால் மாசு ஏற்படுவது குறையும்.இவ்வாறு ஞானகாந்தி கூறினார்.
நன்றி : தினமலர்