Saturday, August 23, 2008

நானோ தொழிற்சாலை அமைக்க இங்கு வாருங்கள் : டாடாவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் அழைப்பு

டாடாவின் கனவு காரான நானோவின் தொழிற்சாலையை எங்கள் மாநிலத்தில் அமையுங்கள். நாங்கள் அதற்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து தருகிறோம் என்று மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக் டாடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் தொழிற்சாலை அமைத்துள்ள டாடா மோட்டார்ஸ், அங்கு தொடர்ந்து ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருவதை அடுத்து அதன் தலைவர் ரத்தன் டாடா நேற்று மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறி விடுவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா முதல்வர் தேஸ்முக் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து பிரச்னைகள் இருக்குமானால் அவர்கள் ( டாடா ) தாராளமாக இங்கு ( மகாராஷ்டிரா ) வரலாம். நாங்கள் அவர்களுக்கு தேவையான நிலம் கொடுப்பதோடு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றார். டாடாவுக்கு இங்கு ரத்தின கம்பள வரவேற்பு காத்திருக்கிறது என்றார் அவர். மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதியை குறிவைத்து அங்கு தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத டாடா மோட்டார்ஸ் சேர்மன் ரத்தன் டாடா, நேற்று கோல்கட்டாவில் பேசியபோது, இங்கு எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால் இங்கிருந்து வெளியேறி விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் இன்று கோல்கட்டா வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மேற்று வங்க முதல்வர் புத்ததேப் பட்டாசார்ஜிடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது தவிர சிங்கூரில் உள்ள பிரச்னைக்குறிய நில உரிமையாளர்கள் பலரும், டாடா இங்கிருந்து வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை என்றிருக்கிறார்கள். அங்குள்ள கிரிஷி ஜாமி ரக்ஸா கமிட்டியை சேர்ந்த பலர் டாடா தொழிற்சாலையில் இப்போது வேலை செய்து வருகிறார்கள். அவர்களும் டாடா இங்கிருந்தால் தான் எங்களது வாழ்க்கை தரம் உயரும் என்றிருக்கிறார்கள். சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் இதுவரை ரூ.1,500 கோடி முதலீடு செய்திருக்கிறது. அக்டோபரில் நானோ காரை வெளியிட திட்டமிட்டு அங்கு மும்முரமாக வேலை நடந்து வரும் நிலையில், நானோ தொழிற்சாலைக்காக எடுக்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் 24ம் தேதியில் இருந்து அங்கு தொடர் போராட்டம் நடத்துவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பாணர்ஜி அறிவித்திருக்கிறார்.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைய ஆரம்பித்தது

சில தினங்களாக உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை கொஞ்சம் குறைந்திருந்தது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.38 டாலர் குறைந்து 119.83 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 1.35 டாலர் குறைந்து 118.81 டாலராக இருக்கிறது. டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சொல்கிறார்கள். டாலரின் மதிப்பு குறைந்திருந்தால் மக்கள் டாலரில் முதலீடு செய்யாமல் ஆயில் போன்ற முக்கிய பணமதிப்புள்ள பொருட்களில் முதலீடு செய்கிறார்கள். டாலர் மதிப்பு உயர்ந்து விட்டால் மக்கள் மீண்டும் டாலரில் முதலீடு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான ஓபக், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறது என்று வந்த தகவலாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்

'பணவீக்கம் 13 சதவீதத்தை தாண்டாது'

'பணவீக்கம் எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டுவிட்டது. 13 சதவீதத்திற்குள்ளாக கட்டுப்படுத்தப்படும். இனிவரும் வாரங்களில் பணவீக்கம் குறையத் துவங்கும்' என, மத்திய வர்த்தக அமைச்சகச் செயலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நாட்டின் பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 9ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.63 சதவீதத்தை எட்டியுள்ளது. 13 சதவீதம் இன்னும் தொட்டும் விடும் தூரம் தான் என்று சொல்லும் அளவிற்குப் போய்க்கொண்டு இருக்கிறது. மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்து மும்பையில் நேற்று நடந்த சர்வதேசக் கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய வர்த்தக அமைச்சகச் செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:
அத்தியாவசியப் பொருட்கள் விலை குறித்த காபினட் கமிட்டி, தற்போதுள்ள விலைவாசி நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலையைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோதுமை மற்றும் அரிசி கையிருப்பு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் கையிருப்பும் போதுமான அளவில் உள்ளது. எனவே, பணவீக்கம் இனி வரும் வாரங்களில் குறையத் துவங்கும். எந்த சூழ்நிலையிலும் 13 சதவீதத்திற்கு மேல் செல்லாது.விலைக்கான காபினட் கமிட்டி, அடுத்த வாரம் மீண்டும் கூடி விவாதிக்க உள்ளது.இவ்வாறு ஜி.கே.பிள்ளை கூறினார்.
நன்றி : தினமலர்


'நானோ' கார் திட்டத்திலிருந்து வெளியேறுகிறேன்: தொழிலதிபர் டாடா அதிருப்தி


'சிங்கூர் டாடா கார் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டமும், வன்முறையும் தொடர்ந்தால், இங்கு கார் தயாரிக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு, மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறுவோம்' என தொழிலதிபர் ரத்தன் டாடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்கு வங்கம், சிங்கூரில் டாடா நிறுவனத்தின் கார் தொழிற்சாலை உள்ளது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான ஒரு லட்ச ரூபாய் நானோ கார், இங்கு தான் தயாராகிறது. இந்த ஆண்டு அக்டோபரில் நானோ கார் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.சிங்கூரில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், 400 ஏக்கரை சம்பந்தபட்ட விவசாயிகளிடம் திரும்ப அளிக்கவில்லை எனில், இம்மாதம் 24ம் தேதியில் இருந்து தொழிற் சாலை அமைந்துள்ள பகுதியில் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இதனால், ரத்தன் டாடா கோபமடைந்துள்ளார். கோல்கட்டாவில் டாடா நிறுவன பொதுக் குழு கூட் டத்தில் அவரின் கோபம் வெளிப் பட்டது. அவர் பேசியதாவது:சிங்கூர் கார் தொழிற்சாலைக் காக, ஏற்கனவே ரூ.1,500 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. தொடர்ந்து, தொழிற்சாலை மீதும், அங்கு பணிபுரியும் மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தொழிலாளர்களை அடி வாங்குவதற்காக இங்கு அழைத்து வரவில்லை. பணியாற்றுவதற்காக வே அழைத்து வந்துள் ளோம். அசாதாரணமான சூழ்நிலையால் தொழிலாளர்களிடையே பீதி ஏற்பட்டுள் ளது. வன்முறையும், போராட்டங்களும் தொடருமானால், கார் தயாரிப்பை கைவிட்டு மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. இதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். இந்த விஷயத்தில் நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை மேற்கு வங்க மக்கள் தீர்மானிக்க வேண்டும். மேற்கு வங்க மக்களுக்கு நாங்கள் விரும்பத்தகாத நபர்களா என்பதை அவர்களே தெரிவிக்கட்டும்.திட்டமிட்டபடி நானோ கார் குறித்த காலத்தில் விற்பனைக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், சிலர் இதற்கு எதிராக செயல்படுகின்றனர். மேற்கு வங்கத்தின் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. ஒப்பந்த அடிப்படையிலேயே நிலங்களை வாங்கியுள்ளோம். சிங்கூரை விட்டு வெளியேறும் பட்சத்தில், மேற்கு வங்கத்தில் எங்களின் எதிர்கால முதலீடு கேள்விக் குறியாகும். மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்துவது குறித்து டாடா மோட்டார்ஸ் இயக்குனர் ரவிகாந்த் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இவ்வாறு ரத்தன் டாடா பேசினார்.இப்பிரச்னை குறித்து, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கூறுகையில், எனக்கு மே.வங்க விவசாயிகள் மீது மட்டுமே அக்கறை. டாடா நிறுவனத்தினர் எழுதிய கடிதத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இல்லை' என்று கூறியுள்ளார்.டாடா தெரிவித்த கருத்துக்களால், மே.வங்க தொழிலதிபர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
நன்றி : தினமலர்