Saturday, August 23, 2008

நானோ தொழிற்சாலை அமைக்க இங்கு வாருங்கள் : டாடாவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் அழைப்பு

டாடாவின் கனவு காரான நானோவின் தொழிற்சாலையை எங்கள் மாநிலத்தில் அமையுங்கள். நாங்கள் அதற்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து தருகிறோம் என்று மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக் டாடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் தொழிற்சாலை அமைத்துள்ள டாடா மோட்டார்ஸ், அங்கு தொடர்ந்து ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருவதை அடுத்து அதன் தலைவர் ரத்தன் டாடா நேற்று மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறி விடுவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா முதல்வர் தேஸ்முக் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து பிரச்னைகள் இருக்குமானால் அவர்கள் ( டாடா ) தாராளமாக இங்கு ( மகாராஷ்டிரா ) வரலாம். நாங்கள் அவர்களுக்கு தேவையான நிலம் கொடுப்பதோடு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றார். டாடாவுக்கு இங்கு ரத்தின கம்பள வரவேற்பு காத்திருக்கிறது என்றார் அவர். மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதியை குறிவைத்து அங்கு தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத டாடா மோட்டார்ஸ் சேர்மன் ரத்தன் டாடா, நேற்று கோல்கட்டாவில் பேசியபோது, இங்கு எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால் இங்கிருந்து வெளியேறி விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் இன்று கோல்கட்டா வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மேற்று வங்க முதல்வர் புத்ததேப் பட்டாசார்ஜிடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது தவிர சிங்கூரில் உள்ள பிரச்னைக்குறிய நில உரிமையாளர்கள் பலரும், டாடா இங்கிருந்து வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை என்றிருக்கிறார்கள். அங்குள்ள கிரிஷி ஜாமி ரக்ஸா கமிட்டியை சேர்ந்த பலர் டாடா தொழிற்சாலையில் இப்போது வேலை செய்து வருகிறார்கள். அவர்களும் டாடா இங்கிருந்தால் தான் எங்களது வாழ்க்கை தரம் உயரும் என்றிருக்கிறார்கள். சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் இதுவரை ரூ.1,500 கோடி முதலீடு செய்திருக்கிறது. அக்டோபரில் நானோ காரை வெளியிட திட்டமிட்டு அங்கு மும்முரமாக வேலை நடந்து வரும் நிலையில், நானோ தொழிற்சாலைக்காக எடுக்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் 24ம் தேதியில் இருந்து அங்கு தொடர் போராட்டம் நடத்துவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பாணர்ஜி அறிவித்திருக்கிறார்.
நன்றி : தினமலர்


No comments: