Wednesday, October 21, 2009

கனவு கானல்நீர் ஆனதுவோ...?

சமத்துவம் என்பது அரசியல், பொருளாதார, சமுதாய ரீதியாக அடையப்பட வேண்டிய லட்சியமாக சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கருதினார்கள். வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தின் முழுப்பயனையும் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு திட்டங்களையும் தீட்டினார்கள்.

பொருளாதார வல்லரசாக இந்தியா உயர வேண்டும் என்று விரும்பி ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. நம் நாட்டில் ஏழை, பணக்காரர்களிடையேயான வேற்றுமை மறைய வேண்டும், நாட்டின் பொருளாதார வளங்களின் பலன்களை அனைவரும் அடைய வேண்டும் என்று பாடுபட்டார் அவர்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத் மிகுமின் நிறுவனம் போன்ற அரசுத்துறை தொழில்நிறுவனங்கள்கூட தொழிலாளர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் வாயிலாக அனைவருக்கும் எல்லா வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்தன. பொதுக் கல்வி, பொதுக் குடியிருப்பு, பொதுச் சுகாதாரம், பொது வேலைவாய்ப்பு என்று சீராகச் சென்று கொண்டிருந்த நாட்டை கடந்த 20 ஆண்டுகளில் மடைமாற்றிவிட்டனர் இப்போதைய ஆட்சியாளர்கள். அதிலும் குறிப்பாக பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம், உலகமயம் என்றெல்லாம் பேசி ஏழைகளை மேலும் சுரண்டவும், சாதாரண லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரர்களாக்கவும் வழிகோலுகின்றனர் என்பதுதான் வேதனை.

இப்போது நாட்டின் செல்வ வளம் வெகுசில குடும்பங்களுக்கே சொந்தம் என்ற அளவுக்குச் செல்வக்குவிப்பு தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் தேசிய அளவில் வேலைவாய்ப்பு, ஊதிய விகிதம் போன்றவற்றை ஆராய்ந்த ஓர் அமைப்பு, தனியார் துறையில் கம்பெனிகளின் உயர் அதிகாரிகளுக்குத் தரப்படும் ஊதியம், படிகள் ஆகியவற்றைச் சாமானியர்களின் ஊதியங்களுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டைப் போல இருக்கிறது என்று சுட்டிக்காட்டியது.

உலகிலேயே இந்தியாவில்தான் இத்தனை வித்தியாசமுள்ள ஊதிய விகித முரண்பாடு இருக்கிறது என்றும் அது சுட்டிக்காட்டியது.

விவசாயத்துறையில் அனைவரையும் ஈடுபடுத்த நில உச்ச வரம்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நாளில் அதை மிக மிக முற்போக்கான சட்டமாகவே கருதினார்கள். உச்ச வரம்பு அளவு மாறுபட்டாலும் எல்லா மாநிலங்களிலும் அது அமல் செய்யப்பட்டது. அந்தச் சட்டத்தாலும் அடுத்து அறிமுகம் செய்யப்பட்ட பசுமைப் புரட்சியாலும் நம்முடைய விவசாயம் வளர்ந்ததா வீழ்ந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. ஆனால் அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அடுத்தபடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சட்டம் இயற்றியபோதுகூட, ஆலை அதிபர்கள் அதிகம் சிரமப்பட்டுவிடக்கூடாதே என்று அந்த போனஸ் அளவுக்கும் உச்ச வரம்பு வைத்து சட்டம் இயற்றியது மத்திய அரசு. இன்றுவரை அந்தச் சட்டத்தை மறந்தும் திருத்துவதற்கு நமது ஆட்சியாளர்களுக்கு நேரமே கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு பரம ஏழைகளுக்காகவே உழைத்து ஓடாக உருகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தனியார் துறையில் உயர் பதவியில் இருப்பவர்களின், கண்களைக் கூசும்படியான அதிகபட்ச சம்பளத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது தன்னார்வக் குழுவொன்று. அதைப் பரிசீலிப்போம் என்றுகூட கூற மனம் இல்லாமல், அப்படியொரு எண்ணமே இல்லை என்று கூறிவிட்டது அரசு.

சமத்துவம் என்ற லட்சியத்துக்கு நம்முடைய ஆட்சியாளர்கள் காட்டும் மரியாதை இதுதான். ஆனால் இதுவெறும் கோஷம் அல்ல;

""இறையாண்மைமிக்க, சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு'' என்று நம்மைப்பற்றி பெருமையுடன் கூறிக் கொள்கிறோம். நமது அரசியல் சட்டத்திலேயே இதைக் குறிப்பிட்டுப் பெருமை தட்டிக் கொள்கிறோம். ஏழை பணக்கார இடைவெளியைக் குறைப்பதைப் பற்றி முன்பெல்லாம் உதட்டளவு ஆர்வம் காட்டிவந்ததுகூட இப்போது இல்லை என்கிற நிலைமை. அதைப் பற்றியே சிந்திக்காமல் லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரர்களாக்குவதைப் பற்றி மட்டுமே நமது ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்களோ என்றுகூடத் தோன்றுகிறது.

இந்தியாவில் வாழும் அத்தனை மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, குடியிருக்க வீடு, அனைவருக்கும் கல்வி, நோயுற்றால் இலவசச் சிகிச்சை ஆகியவற்றை உறுதி செய்வது என்பதுதான் சுதந்திர இந்தியா எதிர்நோக்கும் சவால் என்றும், ஏழை பணக்கார இடைவெளி குறைக்கப்பட்டு, சமத்துவ, சமதர்ம, மதச்சார்பற்ற சுதந்திர நாடாக உலகில் தலைநிமிர்ந்து நிற்பதுதான் குறிக்கோள் என்றும் சுதந்திரம் பெற்ற அன்று நமது முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஆற்றிய உரையை தினமும் அதிகாலையில் நமது ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் படிக்கவோ, கேட்கவோ செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
நன்றி : தினமணி

இந்திய நிறுவனங்களில் ஆளெடுப்பு விகிதம் கிடுகிடு உயர்வு

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் ஆளெடுப்பு நடவடிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளெடுப்பு விகிதம் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளதாம். தகவல் தொழில்நுட்பத் துறை, பிபிஓ, ரியல் எஸ்டேட் ஆகிய பிரிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளனவாம். இதுதொடர்பாக இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், அனைத்துப் பிரிவுகளிலுமே வேலைக்கான ஆளெடுப்பு சுறுசுறுப்படைந்துள்ளது. குறிப்பாக ஐ.டி, பிபிஓ பிரிவுகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஆளெடுப்பு கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. மேலும் என்ட்ரி மற்றும் ஜூனியர் லெவல் வேலைகளுக்கு அதிகம் பேர் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.
நன்றி : தினமலர்


வெள்ளி விலை உயர்வால் கொலுசு உற்பத்தி பாதிப்பு

வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் இயங்கும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகளில், வெள்ளிக் கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி ஆகியவற்றின் உற்பத்தியில், நேரடியாக 60 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும், சராசரியாக 50 டன் அளவுக்கு கொலுசு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வெள்ளி கிலோ 18 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மார்க்கெட் நிலவரப்படி, கிலோ 28 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கிறது. வெள்ளி விலை உயர்வால், கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தால், கலக்கத்தில் உள்ளனர்.
சேலம், வெள்ளி பட்டறை இயக்குனர் செல்வம் கூறியதாவது: சேலம் கொலுசுக்கு, வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்ததால், விலை உயர்வால் பாதிப்பு இல்லை. தீபாவளிக்கு பின் தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவியது, ஆனால், தொடர்ந்து வெள்ளியின் விலை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இதனால், வெள்ளி ஆபரணங்கள் ஆர்டர் கொடுக்கும் பணி முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி, உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி விலை உயர்வால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய, கொலுசு மீதான 4 சதவீத ஆபரண வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். இவ்வாறு செல்வம் கூறினார்.
நன்றி : தினமலர்


அடிவயிற்றை முறுக்கவில்லையா?

ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே! தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா?

கட்சிகளெல்லாம் கிடக்கட்டும்! எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?

""ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு'' என்று தாய் மகளிடம் சினந்து கேட்டாளாம். ""போனவன் போயிட்டான்; நான் இருக்கேனே'' என்று மகள் புன்முறுவலோடு விடை இறுத்தாளாம்!

""கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்!

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஏதோ வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போல ராஜபட்சவுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறது. பஜ்ஜி மாவுக்குத் தனித்து எந்த மதிப்புமில்லை! அது வெங்காயத்தோடோ, வாழைக்காயோடோ சேரும்போதுதான் அதற்குப் பெயரும் கிடைக்கிறது; வடிவமும் கிடைக்கிறது!

இந்தப் பஜ்ஜி மாவுக்கெல்லாம் வடிவம் கொடுப்பவர் கருணாநிதி என்பது ராஜபட்சவின் எண்ணமாக இருக்கலாம்! அப்படிப்பட்ட கருணாநிதியின் உயிர்நாடியோ, சென்னைக் கோட்டையில் இருக்கிறது. சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ, சோனியாவின் தயவில் இருக்கிறது. சோனியாவோ சிங்களவர்களின் உற்ற நண்பர். ஆகவே, சோனியாவின் தோழமை இருக்கும்வரை இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கத் தேவையில்லை என்பது ராஜபட்சவின் எண்ணம்!

ஆனாலும் விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச "உன் கதையையும் முடித்திருப்பேன்' என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?

""ராஜபட்ச! உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்துவிட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒரு நாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை''-என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே!

ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே! அதுவும் ராஜபட்ச, "ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன்' என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்று கொண்டு, "இரத்தம் கொதிக்கிறது' என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?

அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே!

இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்து கொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?

போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், "நன்றாக இருக்குமா?' என்று திருமாவளவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே!

இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! ""என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை'' (966).

முன்பொருமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உச்சத்திலிருந்தபோது மாநிலங்களின் அமைச்சர்களெல்லாம் பங்கேற்ற கூட்டத்தில், செல்வாக்குமிக்க மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய், "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை' என்று பேச, "இந்தி இருக்குமானால், இந்தியாவே இருக்காது' என்று அன்றைய தமிழக அமைச்சர் செ. மாதவன் பேசிவிட்டார் என்பதற்காக, ஊர்ஊராக நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செ. மாதவனை உட்காரவைத்து ஊர்வலம் விட்டு, ஐந்து ஆண்டு அரசியலை இதைச் சொல்லியே ஓட்டினார்களே தி.மு.க.வினர்!

அன்று மாமன்னன் அசோகன் இலங்கைக்குத் தன் மகள் சங்கமித்திரையை அனுப்பிப் பௌத்தத்தை வளர்த்ததுபோல, இன்று தன் மகள் கனிமொழியை அனுப்பிச் சிங்களவர்களோடு நேசத்தை வளர்க்கும் கருணாநிதி, ராஜபட்சவை எதிர்த்துத் திருமாவளவன் பேசுவதை ரசிக்க மாட்டார் என்றாலும், கருணாநிதி ரசிக்காததை எல்லாம் செய்யாமலிருப்பதற்குத் திருமாவளவன் என்ன தி.மு.க.வின் ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளரா?

தமிழுக்கும், தமிழனுக்கும் கேடு என்றால் சீறிவரும் சிறுத்தையாக இருந்தவரை, நாடாளுமன்றப் பதவியைக் கொடுத்து அடங்கிப் போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே கருணாநிதி!

முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரûஸயும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம்! ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக்கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன? முள்வேலி முகாம்களில் ஈழத் தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துவதை ஓர் அமெரிக்கப் பெண்மணி சத்தம்போட்டு உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழ்நாட்டுக்கும் வந்து சொல்ல விரும்பியபோது, அவருக்கு "விசா' வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி! அந்தப் பெண்மணியின் வருகை தன்னுடைய சாயத்தை வெளுக்கச் செய்துவிடும் என்னும் அச்சம்தானே காரணம்!

இந்தப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் "உல்லாசப் பயணத்தில்' இங்கிருந்தே இலங்கை அதிகாரிகள் உடன்வந்தார்களாம். கொழும்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாம்; ஹெலிகாப்டர்களில் பறந்தார்களாம்; ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினார்களாம்; முப்பொழுதும் முப்பழங்களோடும் விருந்துகளாம்; வேதமே பாராட்டிய சோமபானங்களுக்கும் குறைவில்லையாம்! அரசியல் நெறியற்ற டக்ளஸ் தேவானந்தா கூட்டிவைத்த கூட்டத்தில் கலந்துரையாடினார்களாம்! இதற்குச் சிங்களவர்களோடேயே உரையாடியிருக்கலாமே!

ஈழத்துக்கான போர் சிங்களக்காடையர்களோடு மூன்றுமுறை நடந்தது; முப்பதாண்டுக் காலம் நடந்தது; அப்போதெல்லாம் இடையிடையே போர் நடக்கும்; சிங்களக்காடையர்கள் முண்டிப் பார்ப்பார்கள்; பின்பு பின்வாங்கி ஓடிப்போவார்கள்.

ஈழத்தில் வரிவசூல் நடந்தது; காவல் நிலையங்கள் இருந்தன; நீதிமன்றம் நடந்தது; பராமரிப்புப் பணிகளும், நிர்வாகப் பணிகளும் செவ்வனே நடந்தன. அந்தக் காலகட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத சுதந்திர நாடாகவே ஈழம் இயங்கியது!

நான்காம் ஈழப் போர் ஈழத்தைச் சுடுகாடாக்கியது. சிங்களக்காடையர்கள் ஒன்றும் ஓரிரவில் வீரர்களாய் மாறிவிடவில்லை. இந்தியப் பெருநாடு சிங்களவர்களை முன்னிறுத்தி அந்தப் போரை நடத்தி இந்தக் கொடுமையை அரங்கேற்றியது!

பாரதி சொன்னதுபோல எல்லாமே "பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே!'

நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே! பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு மருந்தில்லை; கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளை பெற வசதியில்லை.

ஈழத்துக்கு முற்றாக விடுதலை கேட்டவர்கள் இன்று முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து வீட்டுக்குப் போக மட்டும் விடுதலை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார்கள்; இந்த நிலைக்கு இவர்களை ஆளாக்கிய சோனியா காந்தி, கருணாநிதி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபட்சவைச் சந்தித்து,""நாட்டுக்கு விடுதலை கேட்கவில்லையே; வீட்டுக்குப் போகத்தானே விடுதலை கேட்கிறார்கள்; கொடுத்துவிட்டுப் போங்களேன்'' என்று எடுத்துச் சொல்லப் போய் இருக்கிறார்கள்! தமிழனின் தலைவிதியைப் பார்த்தீர்களா?

இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறுவேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?

இப்படிக் கருணாநிதி அறிவித்த மறுநாளே சிங்காரச் சென்னையில் சுவரொட்டிகள் மின்னின. ""நான்கே நாளில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கலைஞரை வணங்குகிறோம்.''

அண்ணா விடுதலை இயக்கமாகத் தோற்றுவித்த ஒரு கட்சியில் விடுதலை என்பதை எவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலம்; அதையும் ரசிக்கிறார் கருணாநிதி என்பதுதான் அதைவிடப் பேரவலம்!

உலகத் தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. ஈழப் பேரழிவுகளுக்குப் பிறகு உலகத் தமிழர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதி நடத்துவதை ஏற்கவில்லை! சில மாதங்களுக்கு இந்த மாநாட்டைத் தள்ளிவைத்து அவர்களை அமைதிப்படுத்தலாம் என்னும் கருணாநிதியின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரை மாற்றி நடத்தப் போகிறார்கள். உலகத் தமிழர்களின் சினம் நியாயமானதுதானே!

உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார்; எம்ஜிஆர் நடத்தினார்; ஜெயலலிதா நடத்தினார்; ஆனால், கருணாநிதியால் நடத்தவே முடியால் போய்விட்டதே!

தமிழைத் தாயாக உருவகிப்பது தமிழர்களின் வழக்கம். தாய் ஒருத்தி; பிள்ளைகள் இருவர்! இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மார்பிலும் தமிழ்ப்பால் சுரந்தாள் அவள்! அவர்கள் இனத்தால், நிறத்தால், ரத்தத்தால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் அனைத்தாலும் ஒன்று; நிலத்தால் மட்டுமே வேறு, வேறு!

அண்மையில் அவளுடைய சிறிய பிள்ளைக்கு ஊறு நேர்ந்துவிட்டது; பொறுப்பாளா அவள்? அந்தப் பிள்ளைக்கு ஊறு விளைவித்த அரக்கன் அழிந்து, அந்தப் பிள்ளை தன்னுடைய மண்ணில் காலூன்றும் வரை உறக்கம் வருமா அவளுக்கு?

அந்தச் சிறிய பிள்ளையின் மண்ணைப்பிடுங்கிக் கொள்ள ஓர் அரக்கன் முயன்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அரக்கனுக்குத் துணைபுரிய தில்லிவாசிகள் விரும்பியதையும் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால், மூத்த பிள்ளையின் மண்ணிலிருந்தே சிலர் தில்லியின் விருப்பத்தின்பேரில் அரக்கனுக்கு உதவியாக இருந்ததைத்தான் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! கண்ணகி அழுததைப் போல் அரற்றி அழுகிறாள் தாய்! தன் இளைய மகனின் வம்சத்தில் எண்பதாயிரம் பேர் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு மாண்டுமடிந்ததை எண்ணி அழுகிறாள். இளைஞர்களெல்லாம் செத்து, இளம்பெண்களே விஞ்சி நிற்கும் கொடுமையை எண்ணி அழுகிறாள். அறத்தை "மடவோய்' என்று வாயாற வைகிறாள். நான் உயிர் பிழைத்திருப்பேனோ என்று அரற்றுகிறாள்!மறனோடு திரியும் கோல் ""மன்மோகன்'' தவறு இழைப்பஅறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ?''(-சிலம்பு, துன்பமாலை 40).

இளைய பிள்ளையின் வம்சத்தை அழிக்க மூத்தபிள்ளையின் வழியினரில் சிலரே மாற்றானுக்கு உதவிவிட்டு, தன்னுடைய வெக்கை தணியத் தனக்கே விழா எடுக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் விழாவினைப் புறந்தள்ளி விட்டாள் தாய்! உலகத் தமிழ் மாநாட்டை அவள் ஏற்கவில்லை! தாயல்லளோ அவள்!

அது மட்டுமன்று; தமிழ் மாநாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார் கருணாநிதி!

சென்ற மத்திய ஆட்சிக் காலகட்டத்தில் சோனியாவோடு சேர்ந்துகொண்டு ஈழத்தைச் சுடுகாடாக்கியதை இது போன்ற தீர்மானங்களால் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறார் கருணாநிதி!

""ஈழத் தமிழர்களுக்கு எந்தச் சலுகைகள், உரிமைகள் அளித்தாலும் எனக்கு உடன்பாடே! ஆனால், இங்கே ஈழத் தமிழர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை. திபெத்தியர்கள், பர்மியர்கள், வங்கதேசத்தினர் என்று ஏராளமானோர் அகதிகளாய் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மட்டும் மத்திய அரசு தனித்துப் பிரித்துப் பார்க்குமாறு கருணாநிதியால் செய்ய முடியுமா?

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை என்றால் அவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புப் போன்ற எல்லாம் உண்டா? அப்போது தானே அது முற்றான குடியுரிமையாய் இருக்க முடியும்!'' என்றெல்லாம் அடுக்கி அடுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கேட்டாரே! ஒன்றுக்காவது விடை சொன்னாரா முதலமைச்சர் கருணாநிதி?

கருணாநிதி தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசை ஏற்கும்படி செய்ய வேண்டும்; அல்லது அரசை விட்டு வெளியே வந்து அதற்காகப் போராட வேண்டும்! அப்படியெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு பேச்சுக்குப் போட்டு வைப்போம் என்று, தான் நம்பாததையே தீர்மானமாக்குவது முழு மோசடி இல்லையா?

ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசிலிருந்து என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் அனைவருக்கும் இசைவே!

கருணாநிதியும், சோனியாவும் அந்த இனத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு ஈடுகட்டவும், பாவங்களுக்குக் கழுவாய் தேடவும், எந்தச் சலுகை வேண்டுமானாலும் அளிக்கட்டும்; அளிக்க வேண்டும்! வெறும் 500 கோடி ரூபாயை அளித்துக் கைகழுவி விடும் ஏமாற்று வேலை வேண்டாம்!

ஆனால் அவர்கள் பிறப்பால் ஈழத் தமிழர்கள்; ஈழம் அவர்களின் தாயகம்! அங்கே அவர்களுக்கு வீடு வாசல், நிலம் கரை அனைத்தும் உண்டு. அவர்களுக்குச் சொத்துகளும் அங்கேதான்; சொந்தங்களும் அங்கேதான்!

ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி அரசியலில் ஆக்கம் இழந்த பிறகு.... அது நடக்காதா என்ன? முன்பு தெருவிலிருந்தவர்கள் இப்போது திருவை அடைந்திருக்கிறார்கள்; மீண்டும் திருவை இழந்து தெருவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?

அப்போது தாங்கள் விரும்பும்வண்ணம் தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்!

தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் உண்டு. ஒன்று தமிழ்நாடு; இன்னொன்று ஈழம்!

போர்த் தோல்வி காரணமாகச் சோர்வுற்றிருக்கும் தமிழர்களை விரட்டிவிட்டால், இலங்கை முற்றாகச் சிங்களவர்களின் நாடாகிவிடும் என்பது ராஜபட்சவின் எண்ணம்! கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, தமிழ்நாடு என்று போனபோன இடங்களில் ஏதாவதொரு உரிமை பெற்று அவர்கள் ஆங்காங்கே இருந்துவிட வேண்டும் என்பதுதான் ராஜபட்சவின் விருப்பம்! அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிவிடும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்காகத்தான் கொடுமைகள் மிகுந்த முள்வேலிச் சிறை முகாம்களின் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறார் ராஜபட்ச!

இறைமகன் ஏசுவை சிலுவையில் அறையக் காரணமான யூத மத போதகர்கள் யாரையாவது ஏசுவின் உண்மைச் சீடர்கள் பதினோரு பேரில் எவனாவது கட்டிப்பிடித்ததுண்டா?

யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், முன் தோன்றிய மூத்த தமிழினத்தைக் கருவறுத்த ராஜபட்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும் சிரித்து மகிழ்வதையும் சிலர் கட்டித் தழுவிக் கொள்வதையும் நிழற்படங்களில் பாருங்கள்!

அடிவயிற்றை முறுக்கவில்லையா?

கட்டுரையாளர் : பழ . கருப்பையா
நன்றி : தினமணி

கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு

'இந்த நிதியாண்டில் இந்தியாவில் கார் விற்பனை, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும்' என, இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இந்திய தொழில் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் கார் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால், இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறையினர் கவலை அடைந்தனர். ஆனால், இந்த நிதியாண்டில் கார்களின் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவில் 1.7 லட்சம் கார்கள் விற்பனையாயின. இந்தாண்டின் இதே மாதத்தில் 1.29 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் கார் விற்பனை வளர்ச்சி 1.31 சதவீதமாக இருந்தது. இந்த நிதி ஆண்டில் வளர்ச்சி வீதம் இரட்டை இலக்கத்தை எட்டும், என இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 7.67 சதவீதமும், மற்ற வாகனங்களின் விற்பனை 9.6 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பங்குச் சந்தை எழுச்சி, பருவமழை மீண்டும் துவங்கியது, பண்டிகை காலம் போன்ற பல சாதகமான அம்சங்கள் இருந்ததால் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர, பண்டிகை கால தள்ளுபடி, வரி குறைப்பு, அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களும் கார்களின் விற்பனையை அதிகரித்துள்ளன. இவ்வாறு ஆட்டோமொபைல்ஸ் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமலர்