Monday, June 8, 2009

2020 வாக்கில் ஜப்பானில் எலக்ட்ரிக் கார் ஓடுமா என்பது சந்தேகமே

இன்னும் 10 ஆண்டுகளில், அதாவது 2020 வாக்கில் ஜப்பான் முழுவதிலும் நச்சுக்காற்று எதையும் வெளியிடாத எலக்ட்ரிக் கார்களை மட்டுமே ஓட விட வேண்டும் என்ற ஜப்பான் கார் தயாரிப்பாளர்களின் கனவு நனவாகாது போல் தெரிகிறது. சில நிறுவனங்கள் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து சோதனை செய்து பார்த்து விட்டும் கூட, அதனை வியாபார ரீதியில் தயாரித்து விற்பது கஷ்டம் என்று ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனமான பியூஜி கெய்ஸாய் கம்பெனி தெரிவித்திருக்கிறது. மிட்சுபிஷி மோட்டார்ஸ் அடுத்த மாதத்திலும், நிஸன் மோட்டார் அடுத்த வருடத்திலும் எலக்ட்ரிக் கார்களை வெளியிடுவதாக சொல்லியிருக்கிறது. இப்போது அது சாத்தியமில்லாத ஒன்று என்று சொல்வதற்கு காரணம், பெட்ரோல் அல்லது டீசல் கார்களைப்போல் எலக்ட்ரிக் கார்களை வெகு தூரத்திற்கு ஓட்டி செல்ல முடியாது என்கிறார் கள். குறைந்த தூர பயணங்களுக்கு மட்டுமே எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த முடியுமாம். எலக்ட்ரிக் கார்களை ஒரு தடவை சார்ஜ் செய்தால் அதன் மூலம் 160 கி.மீ.தான் போக முடியும். இது, பெட்ரோல் கார்கள் செல்லும் தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு தூரம்தான். மேலும் எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் ஸ்டேஷன்கள் நாடு முழுவதும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அதை ஓட்டுபவர்கள் அதிக சிரமத்திற்குள்ளாவார்கள். இன்னொரு மிகப்பெரிய பிரச்னை எலக்ட்ரிக் கார்களின் விலை மிக அதிகமாக இருப்பதுதான். பொதுவாக ஒரு எலக்ட்ரிக் காரின் விலை 45,99,000 யென்னாக ( சுமார் 22,07,500 ரூபாய் ) இருக்கும் என்கிறார்கள். அரசாங்கம் அதற்கு மானியம் கொடுத்தால் வேண்டுமானால் 29,90,000 யென்னுக்கு ( 14,35,200 ரூபாய் ) க்கு கிடைக்குமாம். இப்படி பல பிரச்னைகள் இருப்பதால் எலக்ட்ரிக் கார் என்பது அவ்வளது சாத்தியமில்லாதது என்கிறது அந்த ஆராய்ச்சி நிறுவனம்.

நன்றி : தினமலர்


அப்பல்லோ ஹெல்த் சிட்டிரூ. 150 கோடியில் விரிவாக்கம்

அப்பல்லோ மருத்துவமனை குழுமம், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஹெல்த் சிட்டி மருத்துவமனையை 150 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்துகிறது. இது தொடர்பான அறிவிப்பை, மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்துள்ளார்.இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,500 படுக்கை வசதிகளுடன் கூடிய 43 மருத்துவ
மனைகளை அப்பல்லோ குழுமம் நடத்தி வருகிறது. நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் இம்மருத்துவமனை குழுமம், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஹெல்த் சிட்டி மருத்துவமனையை 150 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்த உள்ளதாக அதன் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.விரிவுபடுத்தப்படும் வளாகத்தில், பல்வேறு நோய்களுக்கான நவீன மருத்துவப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ரேடியோ சர்ஜரி பிரிவு, முழங்கால் தொடர்பான நோய்களுக்கான பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் திறமைவாய்ந்த எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்களைக்கொண்டு, மிகத் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.அழகுக் கலை மற்றும் உடல் அழகுபடுத்துவதற்கான சிகிச்சையில், சர்வதேச அளவில் சிறந்த அனுபவம் பெற்றவர்களைக்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு நவீன மருத்துவ சிகிச்சைகளை, விரிவுபடுத்தப்படும் திட்டத்தின் மூலம் செயல்படுத்துவதற்கு அப்பல்லோ மருத்துவக் குழுமம் திட்டமிட்டுள்ளது.
நன்றி : தினமலர்