Saturday, April 18, 2009

கணிப்பும், திணிப்பும்

தேர்தல் கணிப்புகளை வெளியிடலாமா கூடாதா என்கிற சர்ச்சை தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சி ஏற்படத் தொடங்கியது முதல் தொடங்கிவிட்டது. ஊடகங்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும், தொலைக்காட்சிச் சேனல்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, எப்படி எல்லாம் மக்களைக் கவர முடியும் என்று களமிறங்கியதும் கருத்துக் கணிப்புகளின் முக்கியத்துவம் அதிகரிக்கக் காரணமாக அமைந்தன. 1824-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆன்ட்ரூ ஜாக்சன் போட்டியிட்டபோதுதான் நினைவு தெரிந்து கருத்துக் கணிப்பு என்று ஒன்று நடத்தப்பட்டதாகச் சொல்வார்கள். 1916-ல் லிட்டரரி டைஜஸ்ட் என்கிற பத்திரிகை பத்து லட்சம் தபால் கார்டுகளை வாசகர்களுக்கு விநியோகித்து வெளியிட்ட அமெரிக்க அதிபராக உட்ரோ வில்சன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற கருத்துக் கணிப்பு சரியாக அமைந்தது முதல், இந்தக் கருத்துக் கணிப்பு யுக்தி தேர்தல் நடைபெறும் நாடுகளில் எல்லாம் பரவலாக வரவேற்படையத் தொடங்கியது. இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் இப்படிப்பட்ட கருத்துக் கணிப்புகளைச் சரியாகவும் விஞ்ஞான முறைப்படியும் நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான். 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாக்காளர்களைக் கொண்ட மக்களவைத் தொகுதிகளில், கட்சி ரீதியாக, மத ரீதியாக, ஜாதி ரீதியாக, ஆண்கள், பெண்கள் என்று பல்வேறு உணர்வுகள் காணப்படும் நிலையில், ஒரு சில நூறு பேர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் எப்படித் துல்லியமானதாக இருக்க முடியும்? ஊடகங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதும், அரசியல் கட்சிகளால் நடத்தப்படுவதும் சகஜமாகிவிட்ட நிலையில், இந்த ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள், பல சந்தர்ப்பங்களில் கருத்துத் திணிப்புகளாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சொல்லப்போனால், விஞ்ஞான ரீதியாக நடத்தப்படுவதாகக் கூறும் கருத்துக் கணிப்புகள் பல, அந்தந்த ஊடகங்கள் சார்ந்த கட்சிக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகளைக் கணித்து, அதன் மூலம் வாக்காளர்களை மூளைச்சலவை செய்ய யத்தனிக்கின்றன என்பதை, அந்த ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போதே தெரிகிறது. அப்படியானால், கடந்த தேர்தலில் இந்தத் தொலைக்காட்சிச் சேனல், சரியாகக் கருத்துக் கணிப்பு வெளியிட்டதே, எப்படி? அந்தக் கருத்துக் கணிப்பு நிறுவனம் வெளியிட்ட கணிப்பு ஏறத்தாழ சரியாக அமைந்தது ஏன் என்றெல்லாம் கேட்கலாம். இந்தத் துல்லியக் கணக்கை, அரசியல் நோக்கர்கள் தங்கள் மேஜையில் அமர்ந்தபடிகூடச் செய்து விட முடியும். சரியாக அமைந்தால் சட்டையின் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். இல்லாவிட்டால், யாரும் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசு அமைய இருக்கும் ஆரவாரத்தில் அதை சட்டை செய்ய மாட்டார்கள். ஜோசியம் சொல்வதுபோல, காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக நடத்தப்படும் இந்தக் கருத்துக் கணிப்புகளையும், கருத்துத் திணிப்புகளையும் தடை செய்வது என்பது சரிதானா? கருத்துக் கணிப்புகள் சரியாக அமைந்தன, அமையவில்லை என்பது வேறு விஷயம். அதற்காகக் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிப்பது என்பதும், தேர்தல் முடியும்வரை, ஜோசியர்கள்கூடத் தங்களது ஆருடங்களை வெளியிடக் கூடாது என்று கூறுவதும், ஏற்புடையதல்ல. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் வரம்பு மீறுகிறது என்பது மட்டுமல்ல, குடிமகனின் ஜீவாதார உரிமையையே பறிப்பதாக அமையும் செயல் என்றுதான் கூற வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர எல்லா அரசியல் கட்சிகளுமே துடிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, கடைசிக் கட்டத் தேர்தல் முடியும் வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று ஒத்த குரலில் கைகோர்க்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் ஜீவாதார உரிமை என்று குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு 19(1)(அ)வின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு உரிமைக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி சாதாரணக் குடிமகனுக்கு என்னென்ன உரிமை உண்டோ அதே உரிமைதான் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள், யார் வெற்றியோ தோல்வியோ அடைய வேண்டும் என்று ஒரு குடிமகன் விரும்புகிறான் என்பதை வெளியிடும் உரிமை ஊடகங்களுக்கும், தனிமனிதனுக்கும் உண்டு. ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்ட வாக்காளர், வேட்பாளர்களின் நிறை குறைகளை எடை போட்டு வாக்களிக்கும் உரிமையும் தகுதியும் உள்ள வாக்காளர், கருத்துக் கணிப்போ, கருத்துத் திணிப்போ அதையும்தான் அலசி ஆராய்ந்து, முடிவெடுக்கட்டுமே! இதனால் கவரப்பட்டு அவர் தவறான முடிவெடுக்கக் கூடும் என்று தீர்மானிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்குக் கிடையாது. அது வாக்காளரை ஒரு முட்டாள் என்று சொல்லாமல் சொல்லும் ஆணவம். கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் தடை உடனடியாக விலக்கப்பட வேண்டும்!
நன்றி : தினமணி

மே மாதத்தில் மாருதி சுசுகி வெளியிடும் இன்னுமொரு சிறிய கார்

இந்தியாவில் பயணிகள் கார் விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம், பல சிறிய கார் மாடல்களை வைத்திருக்கிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு சிறிய காரை இந்த வருடம் மே மாதத்தில் அது வெளியிடு கிறது. ஏற்கனவே ஆறு சிறிய கார் மாடல்களை வைத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம், இந்த மே மாதத்தில் ஏழாவதாக ரிட்ஸ் என்ற மாடல் காரை வெளியிடுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஸ்பிளாஸ் என்ற பெயரில் வெளிவரும் இந்த புதிய ரக கார், இந்தியாவில் ரிட்ஸ் என்ற பெயரில் வெளிவருகிறது. மாருதியின் ஸ்விப்ட் காரைப்போலவே இருக்கும் ரிட்ஸ், 3.7 மீட்டர் நீளம் உள்ள கார். ஐரோப்பிய சந்தையில் இருந்து வேகன் - ஆர் மாடலை எடுக்க திட்டமிட்டிருக்கும் சுசுகி நிறுவனம், அதற்கு பதிலாக ரிட்ஸ் ஐ அறிமுகப்படுத்துகிறது. வேகன் - ஆர் மாடலை விட இது 18 சென்டிமீட்டர் நீளமுள்ளது. மாருதி சுசுகி மாடல்களில், முதன் முதலில் கே 12 எம் இஞ்சின் பொறுத்தப்பட்டு வெளிவரும் மாடல் இதுதான்.
நன்றி : தினமலர்

விவசாய கடன்களுக்கான வட்டி குறைப்பு செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்தது எஸ்.பி.ஐ.

வேர்ஹவுஸ் மற்றும் கோல்ட்ஸ்டோரேஜ் களில் சேமிக்கப்படும் விவசாயப்பொருட்கள் மீது கொடுக்கப் படும் கடன்களுக்கான குறைந்த சதவீத வட்டி திட்டத்தை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்திருக்கிறது. வீட்டு கடனுக்கு 8 சதவீத வட்டி, கார் கடனுக்கு 10 சதவீத வட்டி என்று அதிரடி வட்டி குறைப்பு திட்டத்தை அறிவித்த இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வேர்ஹவுஸ் மற்றும் கோல்ட்ஸ்டோரேஜ்களில் சேமித்து வைக்கும் விவசாய பொருட்கள் மீது கொடுக்கப்படும் கடனுக்கும் 8 சதவீதம் தான் வட்டி என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்திருந்தது. இந்த திட்டம் ஏப்ரல் மாதம் வரை மட்டும்தான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு கிடைத்திருக்கும் அதிகப்படியான வரவேற்பை அடுத்து, இந்த திட்டம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று அறிவித்திருக்கிறது. ஒரு வருட காலத்திற்கு மட்டும் கொடுக்கப்படும் இவ்வகை கடனுக்கு ஸ்டேட் பேங்க், 8 சதவீதம் மட்டும் வட்டியை வசூலித்துக்கொள்கிறது.
நன்றி : தினமலர்


நானோ காருக்கான இதுவரை வந்த விண்ணப்பம் 5,00,000 : இதனால் டாடா மோட்டார்ஸூக்கு வந்தது ரூ.15 கோடி

உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ 'வை வாங்க விருப்பம் தெரிவித்து இதுவரை 5,00,000 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது என்றும், அதன் மூலம் டாடா மோட்டார்ஸூக்கு ரூ.15 கோடி ( ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.300 ) கிடைத்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்களை விற்க ஆரம்பித்து 15 நாட்களே ஆன நிலையில், இந்தளவுக்கு அதற்கு வரவேற்பு இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நானோ காருக்கான புக்கிங் கடந்த 9 ம் தேதி ஆரம்பமானது. வரும் 25ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது. நானோ காருக்காக கடன் வாங்கினால், வட்டி 10 சதவீதம்தான் ( பொதுவாக வட்டி 11.75 சதவீதம் வசூலிக்கப்படுகிறது ) என்று அறிவித்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டுமே இதுவரை ஒரு லட்சம் விண்ணப்பங்களை விற்றிருக்கிறது. மொத்தம் விற்பனை ஆன விண்ணப்பங்களில் ஐந்தில் ஒரு பங்கை ஸ்டேட் பேங்க்கே விற்பனை செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸின் உயர் அதிகாரி ஒருவர், இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. புக்கிங் 25ம் தேதி வரை இருப்பதால் அதன் பின்னரே மொத்தம் வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு என்பதை சொல்வோம். அதன் பின் அவைகள் எல்லாம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, 60 நாட்களுக்குள் ஒரு லட்சம் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்றார். நாங்கள் ஏற்கனவே சொல்லியிருப்பதை போல, முதலில் ஒரு லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு, வரும் ஜூலை மாதத்தில் நானோ கார் சப்ளை செய்வது ஆரம்பமாகும் என்றார். நானோ காருக்கான விண்ணப்பங்களை ஸ்டேட் பேங்க், 850 க்கும் அதிகமான நகரங்களில் இருக்கும் அதன் 1,350 கிளைகளில் விற்பனை செய்கிறது. டாடா மோட்டார்ஸ் அதன் 30,000 அவுட்லெட்கள் மூலமாக விண்ணப்பங்களை விற்கிறது. இது தவிர நானோ காருக்காக டாடா மோட்டார்ஸூடன் ஒப்பந்தம் செய்திருக்கும் டாடா மோட்டார் பைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க்,மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவையும் விண்ணப்பங்களை விற்கின்றன. பொதுவாக வங்கிகளில், ஐந்து வருடங்களுக்கு மட்டுமே கார் லோன் கொடுக்கப்பட்டாலும், நானோ காருக்காக மட்டும் அது ஏழு வருட லோனாக மாற்றப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


தாலிபான்களில் ரேடியோ ஸ்டேஷன், வெப்சைட்களை செயல் இழக்க செய்ய அமெரிக்கா முயற்சி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரமடைந் திருப்பதை அடுத்து, அந்த இரு நாடுகளிலும் தாலிபான்களின் ரேடியோ ஸ்டேஷன் மற்றும் வெப்சைட்களை செயல் இழக்க செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளிலும், தாலிபான் தீவிரவாதிகளால் லைசன்ஸ் பெறாமல் நடத்தப்படும் ரேடியோ ஸ்டேஷன் மூலமாகவும் வெப்சைட்கள் மூலமாகவும்தான் அவர்கள் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுவது, பயமுறுத்துவது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் இவைகளை பயன்படுத்துகிறார்கள். தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு இந்த சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாலேயே அவர்களால் எளிதாக தீவிரவாத செயல்களில் ஈடுபட முடிகிறது என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே இவைகளை செயல் இழக்க செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க ராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாகிஸ்தானிய வெப்சைட்கள் மற்றும் சாட்டிங் ரூம்களில் அடிக்கடி வெளியிடப்படும் வீடியோக்கள், தீவிரவாத செயலை நியாயப்படுத்தும் விதமாகவும் மக்களை கோபமூட்டும் விதமாகவும் அமைந்திருப்பதால், அவைகளையும் முடக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
நன்றி : தினமலர்


சிறப்பு பொருளாதார திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்வதாக டி.எல்.எஃப்.அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எஃப்., அது உருவாக்கி கொடுக்க ஒத்துக்கொண்ட, ஐ.டி.மற்றும் ஐ.டி.சார்ந்த நிறுவனங்களுக்கான நான்கு சிறப்பு பொருளாதார திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. சோனாப்பூர், காந்தி நகர், புவனேஷ்வர் மற்றும் கோல்கட்டாவில் அது உருவாக்கி தர ஒப்புக்கொண்ட சிறப்பு பொருளாதார திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தை அணுகியிருக்கும் டி.எல்.எப். நிறுவனம், தாங்கள் அந்த திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாகவும் அதற்கான அனுமதியை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. வர்த்தக அமைச்சகம் தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி அளிக்கும். இன்றைய சூழ்நிலையில், ஐ.டி.மற்றும் ஐ.டி.தொடர்பான தொழில் பாதிக்கப்பட்டிருப்பதால், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இடங்களை பிடிப்பதற்கு டிமாண்ட் இருக்காது என்று டி.எல்.எஃப்., கருதுகிறது. எனவேதான் அது இந்த திட்ட பணிகளில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


இரண்டு வருடங்களில் முதல் முறையாக லாபம் சம்பாதித்த சிட்டி பேங்க்

அமெரிக்காவை வாட்டி எடுத்த சப்பிரைம் மார்ட்கேஜ் லோன் திட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது அங்குள்ள சிட்டி பேங்க் தான். பல இன்னல்களை சந்தித்து வந்த அந்த வங்கியில் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நஷ்டம்தான் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலையை இழந்ததுடன் அதன் நிர்வாக மட்டத்திலும் பல மாறுதல்களை சந்தித்தது. இப்போது அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியால் ( அமெரிக்க அரசாங்கத்திற்கு சிட்டி பேங்கில் 40 சதவீத பங்குகள் இருக்கின்றன ) நடந்து கொண்டிருக்கும் அந்த வங்கி, இந்த வருடத்தின் முதல் மூன்று மாத காலத்தில் முதன் முதலாக லாபம் சம்பாதித்திருக்கிறது. கடந்த வருட முதல் மூன்று மாத காலத்தில் 5.1 பில்லியன் டாலர் ( சுமார் 25,500 கோடி ரூபாய் ) நஷ்டம் அடைந்திருந்த அந்த வங்கி, இந்த வருட முதல் மூன்று மாத காலத்தில் 1.6 பில்லியன் டாலர் ( சுமார் 8,000 கோடி ரூபாய் ) லாபம் ஈட்டியிருக்கிறது. அதன் மொத்த வருவாயும் கடந்த வருடத்தை விட 99 சதவீதம் உயர்ந்து 24.8 பில்லியன் டாலர் வந்திருக்கிறது. 2007 இரண்டாவது காலாண்டிற்குப்பின் இப்போது தான் நல்ல லாபம் சம்பாதித்திருக்கிறோம் என்றார் சிட்டி பேங்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியரான விக்ரம் பண்டிட்.
நன்றி : தினமலர்


வோடஃபோன் நிறுவனத்திற்கு ஸ்டேட் பேங்க் கொடுக்கிறது ரூ.10,000 கோடி கடன்

இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனமும் இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனமும் இணைந்து நடத்தும் வோடஃபோன் நிறுவனத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.10,000 கோடி கடன் கொடுக்க சம்மதித்திருக்கிறது. மூன்றாம் தலைமுறை ( 3 ஜி ) சேவையில் நுழையும் வோடஃபோன் நிறுவனம், அதற்கு தேவையான நிதிக்காகவும், பிராட்பேன்ட் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தேவையான நிதிக்காகவும் இந்த கடன் வழங்கப்படுகிறது என்று ஸ்டேட் பேங்க் தெரிவித்திருக்கிறது. ஐந்து வருட கடனாக வழங்கப்படும் இந்த தொகைக்கு, முதல் இரண்டு வருடங்களுக்கு 13.25 சதவீத வட்டியும், அதற்கு பிறகு, அப்போதுள்ள நிலைமையை பொறுத்து, வட்டியும் வசூலிக்கப்படும். ரூ.10,000 கோடியை ஸ்டேட் பேங்க் கடன் கொடுத்தபின், அதில் ரூ.7,000 கோடி கடனை மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மாற்றி விடும் என்றும், மீதி ரூ.3,000 கோடி கடனை மட்டும் அது வைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 13.25 சதவீத வட்டி என்பதும் ஸ்டேட் பேங்க் கின் முக்கிய வட்டி விகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்டேட் பேங்க்கிடமிருந்து ரூ.10,000 கோடி கடன் வாங்கும் வோடஃபோன் நிறுவனம், அதில் ரூ.6,000 கோடியை, இப்போதிருக்கும் சேவையை விரிவாக்கம் செய்வதற்கும் பழைய கடனை அடைக்கவும் பயன்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்