Saturday, April 18, 2009

கணிப்பும், திணிப்பும்

தேர்தல் கணிப்புகளை வெளியிடலாமா கூடாதா என்கிற சர்ச்சை தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சி ஏற்படத் தொடங்கியது முதல் தொடங்கிவிட்டது. ஊடகங்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும், தொலைக்காட்சிச் சேனல்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, எப்படி எல்லாம் மக்களைக் கவர முடியும் என்று களமிறங்கியதும் கருத்துக் கணிப்புகளின் முக்கியத்துவம் அதிகரிக்கக் காரணமாக அமைந்தன. 1824-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆன்ட்ரூ ஜாக்சன் போட்டியிட்டபோதுதான் நினைவு தெரிந்து கருத்துக் கணிப்பு என்று ஒன்று நடத்தப்பட்டதாகச் சொல்வார்கள். 1916-ல் லிட்டரரி டைஜஸ்ட் என்கிற பத்திரிகை பத்து லட்சம் தபால் கார்டுகளை வாசகர்களுக்கு விநியோகித்து வெளியிட்ட அமெரிக்க அதிபராக உட்ரோ வில்சன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற கருத்துக் கணிப்பு சரியாக அமைந்தது முதல், இந்தக் கருத்துக் கணிப்பு யுக்தி தேர்தல் நடைபெறும் நாடுகளில் எல்லாம் பரவலாக வரவேற்படையத் தொடங்கியது. இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் இப்படிப்பட்ட கருத்துக் கணிப்புகளைச் சரியாகவும் விஞ்ஞான முறைப்படியும் நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான். 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாக்காளர்களைக் கொண்ட மக்களவைத் தொகுதிகளில், கட்சி ரீதியாக, மத ரீதியாக, ஜாதி ரீதியாக, ஆண்கள், பெண்கள் என்று பல்வேறு உணர்வுகள் காணப்படும் நிலையில், ஒரு சில நூறு பேர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் எப்படித் துல்லியமானதாக இருக்க முடியும்? ஊடகங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதும், அரசியல் கட்சிகளால் நடத்தப்படுவதும் சகஜமாகிவிட்ட நிலையில், இந்த ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள், பல சந்தர்ப்பங்களில் கருத்துத் திணிப்புகளாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சொல்லப்போனால், விஞ்ஞான ரீதியாக நடத்தப்படுவதாகக் கூறும் கருத்துக் கணிப்புகள் பல, அந்தந்த ஊடகங்கள் சார்ந்த கட்சிக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகளைக் கணித்து, அதன் மூலம் வாக்காளர்களை மூளைச்சலவை செய்ய யத்தனிக்கின்றன என்பதை, அந்த ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போதே தெரிகிறது. அப்படியானால், கடந்த தேர்தலில் இந்தத் தொலைக்காட்சிச் சேனல், சரியாகக் கருத்துக் கணிப்பு வெளியிட்டதே, எப்படி? அந்தக் கருத்துக் கணிப்பு நிறுவனம் வெளியிட்ட கணிப்பு ஏறத்தாழ சரியாக அமைந்தது ஏன் என்றெல்லாம் கேட்கலாம். இந்தத் துல்லியக் கணக்கை, அரசியல் நோக்கர்கள் தங்கள் மேஜையில் அமர்ந்தபடிகூடச் செய்து விட முடியும். சரியாக அமைந்தால் சட்டையின் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். இல்லாவிட்டால், யாரும் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசு அமைய இருக்கும் ஆரவாரத்தில் அதை சட்டை செய்ய மாட்டார்கள். ஜோசியம் சொல்வதுபோல, காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக நடத்தப்படும் இந்தக் கருத்துக் கணிப்புகளையும், கருத்துத் திணிப்புகளையும் தடை செய்வது என்பது சரிதானா? கருத்துக் கணிப்புகள் சரியாக அமைந்தன, அமையவில்லை என்பது வேறு விஷயம். அதற்காகக் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிப்பது என்பதும், தேர்தல் முடியும்வரை, ஜோசியர்கள்கூடத் தங்களது ஆருடங்களை வெளியிடக் கூடாது என்று கூறுவதும், ஏற்புடையதல்ல. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் வரம்பு மீறுகிறது என்பது மட்டுமல்ல, குடிமகனின் ஜீவாதார உரிமையையே பறிப்பதாக அமையும் செயல் என்றுதான் கூற வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர எல்லா அரசியல் கட்சிகளுமே துடிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, கடைசிக் கட்டத் தேர்தல் முடியும் வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று ஒத்த குரலில் கைகோர்க்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் ஜீவாதார உரிமை என்று குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு 19(1)(அ)வின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு உரிமைக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி சாதாரணக் குடிமகனுக்கு என்னென்ன உரிமை உண்டோ அதே உரிமைதான் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள், யார் வெற்றியோ தோல்வியோ அடைய வேண்டும் என்று ஒரு குடிமகன் விரும்புகிறான் என்பதை வெளியிடும் உரிமை ஊடகங்களுக்கும், தனிமனிதனுக்கும் உண்டு. ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்ட வாக்காளர், வேட்பாளர்களின் நிறை குறைகளை எடை போட்டு வாக்களிக்கும் உரிமையும் தகுதியும் உள்ள வாக்காளர், கருத்துக் கணிப்போ, கருத்துத் திணிப்போ அதையும்தான் அலசி ஆராய்ந்து, முடிவெடுக்கட்டுமே! இதனால் கவரப்பட்டு அவர் தவறான முடிவெடுக்கக் கூடும் என்று தீர்மானிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்குக் கிடையாது. அது வாக்காளரை ஒரு முட்டாள் என்று சொல்லாமல் சொல்லும் ஆணவம். கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் தடை உடனடியாக விலக்கப்பட வேண்டும்!
நன்றி : தினமணி

No comments: