சந்தை தடுமாறுகிறது; ஆனால், தடம் புரளவில்லை; பாதுகாப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. திங்கள் மேலே சென்றது. நேற்று முன்தினமும், நேற்றும் அந்த ஏற்றத்தை பறித்துக் கொண்டன. கச்சா எண்ணெய் விலை குறைவு சந்தையை திங்களன்று 336 புள்ளிகள் மேலே செல்ல வழிவகுத்தது. ஆனால், சந்தை நேற்று முன்தினம் ஏன் குறைந்தது? ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டில் தொழில் உற்பத்தி 5.2 சதவீதமாக இருந்தது. இது, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட பாதியளவே ஆகும். தொழில் உற்பத்தி குறைவதற்கு கூடிவரும் பணவீக்கம், கூடிவரும் வட்டி விகிதங்கள் முக்கியமானவை. மேலும், உலகளவிலும் பங்குச் சந்தைகள் கீழேயே இருந்தன. இதுவும் சரிவுக்கு ஒரு முக்கியமான காரணமாகும். இதனால் தான், இவைகள் பங்குச் சந்தையை நேற்று முன்தினம் ஒரு பாடுபடுத்தி விட்டது. அதாவது 291 புள்ளிகள் வரை குறைய வழிவகுத்துவிட்டது. நேற்றும் சந்தை கீழேயே துவங்கியது. அதாவது, 100 புள்ளிகளுக்கும் அதிகமாக கீழேயே இருந்தது. நடுவில் சிறிது மேலே சென்றது. மறுபடி கீழே வந்தது. முடிவாக 119 புள்ளிகள் கீழே சென்று முடிவடைந்தது. ரோலர் கோஸ்டர் போல இருந்தது. காரணம் செபி பார்ட்டிசிபேட்டரி நோட் சம்பந்தமாக ஒரு கூட்டம் கூட்டுவதாக இருந்தது தான். வெளிநாட்டு பி-நோட்டுகளை முடிப்பதற்காக விதிக் கப்பட்டிருந்த காலக்கெடுவான 18 மாதங்கள், 24 மாதங்களாக தள்ளி வைக்கப் படும் என தெரிய வருகிறது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 15,093 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,529 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சுருக்கமாக சொன்னால், தொழில் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, பி-நோட் என புள்ளி விவரங்களால் கிளம்பிய பீதியால் பங்குச் சந்தையின் ஓட்டம் தடைபட்டது. முதலீடு செய்தீர்களா? சந்தையில், 13,000 அளவிலிருந்து சிறிது சிறிதாக முதலீடு செய்து வந்தவர்களுக்கும், வங்கிப் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கும் நிச்சயம் லாபம் கிடைத்திருக்கும். அதே போல ஒவ்வொரு இறக்கத்திலும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வந்தவர்களுக்கும் லாபம் கிடைத்திருக்கும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை 15,000 அளவிலேயே கடந்த சில நாட்களாக இருப்பது ஒரு ஆறுதலான விஷயம். நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதத்திற்குள் இருக்கும் என பலரும் கணித்துள்ளனர். அது போலவே இருந்தால் சந்தையில் பெரிய பாதிப்பு இருக்காது. சந்தை சீராக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இன்று வாரத்தின் கடைசி வர்த்தக நாள் என்பதால் அடக்கி வாசிக்கப்படலாம். பக்கவாட்டிலேயே நகருவதற்கு வாய்ப்புகள் அதிகம். 10, 20 சதவீதம் லாபம் இருந்தால் காசாக்க பாருங்கள்.
தங்கம் ஏன் விலை குறைகிறது?: கடந்த பல மாதங்களாக, தங்கம், கோலோச்சிக்கொண்டிருந்ததை யாரும் மறுக்கமுடியாது. பங்குச் சந்தை விழுந்திருந்ததும், கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் முக்கியமான காரணங்களாக இருந்தன. தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆதலால் உலகளவில் தங்கம் விலையும் குறைந்து வருகிறது. மேலும் டாலர் மதிப்பு ரூபாய்க்கு எதிராக அதிகரித்து வருகிறது. அதுவும் ஒரு காரணம். கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் அது பங்குச் சந்தையின் எழுச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது. சந்தை மேலே செல்லும் போது முதலீட்டாளர்கள் ஆர்வமாக பங்குச் சந்தைக்கு வருவது சகஜம். ஆதலால், தங்கம் விலை குறைய ஆரம்பித்தது. தங்கம் விலை குறைய ஆரம்பித்தால், இன்னும் சிறிது நாட்களில் கூடலாம் என்ற நினைப்பில் வாங்க ஆரம்பிப்பார்கள். இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்