Thursday, August 7, 2008

பி.எஸ்.என்.எல்., இன் முதன்மை பங்கு வெளியீட்டு திட்டத்திற்கு யூனியன் கடும் எதிர்ப்பு

கோடி சந்தாதாரர்களை கொண்ட ரூ.4,20,000 கோடி மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்.,நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை, முதன்மை பங்கு வெளியீடு மூலம் ( ஐ.பி.ஓ.) வெளியிட்டு, அதன் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அப்போது அதன் ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஓ.பி., திட்டாத்தின் கீழ் ( ஊழியர்களும் பங்குதாரர்களாகும் திட்டம் ) ஒவ்வொரு ஊழியர்களுக்கும் பங்கு ஒன்றுக்கு ரூ.10 விலையில் பங்குகளை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஒவ்வொரு ஊழியரும் அதிக பட்சமாக 500 பங்குகள் வரை வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் பங்குகள், பங்கு சந்தையில் லிஸ்ட் செய்யப்படும்போது அதன் பங்கு மதிப்பு ரூ.300 - 400 ஆக உயர்ந்து விடும். அப்போது பங்குகளை விற்கும் ஊழியர்களுக்கு ரூ.1.5 - 2 லட்சம் வரை கிடைக்கும் என்று மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். ஆனால் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் பங்குகளை ஐ.பி.ஓ., மூலம் கொடுப்பதற்கோ ஊழியர்களையும் பங்குதாரர்களாக்கும் இ.எஸ்.ஓ.பி., திட்டத்திற்கோ பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் ஒத்துக்கொள்ளவில்லை. இது குறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜாவுக்கும் யூனியன் தலைவர்களுக்கு மிடையே இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தைக்குப்பின் அமைச்சர் ராஜா பேசியபோது, பி.எஸ்.என்.எல்., போர்டு கடந்த வாரமே ஐ பி ஓ மூலம் நிதி திரட்ட முடிவு செய்து விட்டது. இது குறித்து இன்று தான் அதன் யூனியன் தலைவர்களிடம் பேசினேன். ஐ பி ஓ வெளியிடுவதால் நிறுவனத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் இ.எஸ்.ஓ.பி.,திட்டத்தால் ஊழியர்களுக்கு ஏற்படும் பலன்கள் குறித்தும் அவர்களிடம் விளக்கி இருக்கிறேன் என்றார். ஆனால் இந்த இரு திட்டங்களையும் யூனியன் நிராகரித்து விட்டது. எங்களுக்கு ஐ பி ஓ.,விலோ, இ எஸ் ஓ பி., யிலோ ( ஊழியர்களும் பங்குதாரர்களாகும் திட்டம் ) விருப்பம் இல்லை. ஐ.பி.ஓ.,வினால் நன்மைகள் ஏற்படும் என்ற அரசின் விளக்கத்தில் நாங்கள் திருப்தி அடையவில்லை என்று பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச்செயலாளர் நம்பூதிரி கூறி விட்டார். இது குறித்து பி.எஸ்.என்.எல்.,நிறுவனத்தின் சேர்மன் குல்தீப் கோயல் தெரிவிக்கையில், ஐ பி ஓ., வுக்கான வேலைகள் துவங்கப்பட்டு விட்டன. ஆனால் எப்போது வெளியிடப்படும் என்று இப்போது சொல்லமுடியாது. இது குறித்து யூனியனில் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்

லேசான முன்னேற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே அதிக மாற்றம் ஏதும் இல்லாமல் மந்தமாகவே இருந்தது. மதியத்திற்கு மேல் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தாலும் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 43.71 புள்ளிகள் மட்டுமே ( 0.29 சதவீதம் ) உயர்ந்து 15,117.25 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 6.30 புள்ளிகள் மட்டும் ( 0.14 சதவீதம் ) உயர்ந்து 4,513.85 புள்ளிகளில் முடிந்தது. பணவீக்க விகிதம் இன்று அறிவிக்கப்பட இருப்பதாலும் பங்கு சந்தையில் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை என்கிறார்கள். சிஎன்பிசி - டிவி18 எடுத்த கணிப்பில், பணவீக்கம் 12.01 சதவீதமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அதற்கு முந்தைய வாரத்தை விட 0.03 சதவீதம் அதிகம்.
நன்றி : தினமலர்

இனிமேல் இருசக்கர வாகன கடன் கிடையாது : ஐ சி ஐ சி ஐ வங்கி முடிவு


இதுவரை இருசக்கர வாகனங்களுக்கு கடன்கொடுத்து வந்த இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ சி ஐ சி ஐ வங்கி, இப்போது அந்த தொழிலில் இருந்து விலகி விட்டது. இருசக்கர வாகன டீலர்களின் இருப்பிடத்திலேயே ஒரு ஸ்டால் அமைத்து இருந்துகொண்டு, ஐ சி ஐ சி ஐ வங்கி ஊழியர்கள் இதுவரை வாகன கடன் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சமீப காலமாக வங்கிகள், அவர்களது நிர்வாக செலவை குறைத்துக்கொண்டு வருகின்றன. அதனடிப்படையில் முதலில் சிட்டிபேங்க், வாகன கடன் தொழிலில் இருந்து விலகியது. இப்போது அதற்கு அடுத்ததாக ஐ சி ஐ சி ஐ வங்கியும் விலகுகிறது. இவர்களும் நிர்வாக செலவு அதிகரித்து விட்டது என்றும் அதனை குறைக்கவே இந்த தொழிலில் இருந்து விலகுவதாக சொல்கிறார்கள். டீலர்களின் இருப்பிடத்தில் இருந்து இதுசம்பதமான வேலைகளை பார்த்து வந்த ஐ சி ஐ சி ஐ வங்கி ஊழியர்களை திரும்பி வந்து விடுமாறு அந்த வங்கி சொல்லிவிட்டது. இது குறித்து ஐ சி ஐ சி ஐ வங்கியில் விசாரித்தபோது, நாங்கள் வாகன கடன் தொழிலில் இருந்து முழுவதுமாக விலகி விடவில்லை. எங்களது கடன் திட்டத்தை சிறிது மாற்றி அமைக்கப்போகிறோம். அதன் பின்பு வேறு முறையில் வாகன கடன் கொடுக்க வந்து விடுவோம் என்றனர்.
நன்றி : தினமலர்


பெட்ரோல், டீசல் விலை குறையாது மத்திய அரசு திட்டவட்டம்


'சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்கும் எண்ணம் ஏதும் இல்லை' என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சமீப நாட்களாக உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்து, உச்சத்திற்குச் சென்ற கச்சா எண்ணெய் விலை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வரத் துவங்கியிருக்கிறது. பேரல் ஒன்றின் விலை 147 அமெரிக்க டாலர் வரை சென்றது. பெட்ரோலிய தேவை அதிகமுள்ள அமெரிக்காவில் பெட்ரோல் தேவை குறைந்துள்ளதால் நிலைமை மாறியுள்ளது. கடந்த சில நாட்களாகப் படிப்படியாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் பேரல் ஒன்றின் விலை 120 அமெரிக்க டாலருக்கும் கீழ் இறங்கியது. நேற்று 117.75 டாலர்கள் வரை சரிந்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்த மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சுந்தரேசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், இங்கு பெட்ரோல், டீசல் விலை உடனடியாகக் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அச்சுறுத்தி வந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த ஜூன் மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் லிட்டருக்கு மூன்று ரூபாயும், வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.50 ம் அதிகரிக்கப்பட்டன. அப்போது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 119 முதல் 120 டாலர்கள் வரை இருந்தது. தற்போது இந்த விலையை தான் தொட்டு இருக்கிறது. இதன் காரணமாக விலை குறைக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமில்லை. கச்சா எண்ணெய் சரிவால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பின் சதவீதம் குறைந்து இருக்கிறது. ஜூன் 5 தேதி விலை ஏற்றப்பட்ட போது, வருவாய் இழப்பு ஓராண்டுக்கு ரூ. இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 600 கோடியாக இருந்தது. விலை உயர்வுக்குப் பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டு மொத்த வருவாய் இழப்பு ரூ. இரண்டு லட்சத்து ஐந்தாயிரத்து 740 கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு சுந்தரேசன் கூறினார்.
நன்றி : தினமலர்


காத்திருங்கள் ஆறு மாதம் பணவீக்கம் குறையலாம்


'நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிதமாக, 7.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக இருக்கும்' என்று, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் சேர்மன் சி.ரங்கராஜன் கருத்து தெரிவித்தார். பணவீக்கம் குறைய ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதிகரித்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கு தலைவலியை கொடுத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி அதிரடி முடிவுகளை எடுத்தது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி முதலில் அறிவித்தது. பின்னர், சமீபத்தில் அறிவித்த நிதிக் கொள்கையில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் சேர்மன் சி.ரங்கராஜன், டில்லியில் விழா ஒன்றில் நேற்று பங்கேற்க வந்த போது நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நிலவும் பல காரணங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்குள்ளாக மிதமாக இருக்கும். முடிந்த 2007-2008ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது. தற்போது, 12 சதவீதத்தை நெருங்கியிருக்கும் பணவீக்கம், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக 8லிருந்து 9 சதவீதத்திற்குள் வரும் என எதிர்பார்க்கிறேன். கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 118 டாலருக்கு கீழ் வந்து இருப்பதால், பணவீக்கம் இறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் நல்லதொரு மாற்றம் ஏற்படும். இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.

நன்றி : தினமலர்

கச்சா எண்ணெய் விலை குறைவதால் பங்குச் சந்தையில் திருப்பம்


முதலீட்டாளர்களின் பிரார்த்தனை பலித்துவிட்டது. கச்சா எண்ணெய் 'பகவான்' இந்த வாரம் கருணைக் கண்ணை திறந்து விட்டார். விளைவு, சந்தையில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான நேரம். இந்த வாரம் சந்தை கூடியதற்கு முக்கிய காரணங்கள்: கச்சா எண்ணெய் விலை குறைந்தது; அமெரிக்கா பெட் வட்டி விகிதங்களை கூட்டாமல் அதே 2 சதவீதத்திலேயே வைத்திருந்தது. கச்சா எண்ணெய், பேரலுக்கு 147 டாலர் அளவு சென்றிருந்த போது, இன்னும் ஒரு மாதத்திற்குள் 120 டாலருக்கு கீழே வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டர். ஆனால், தற்போது, 120 டாலருக்கும் கீழே வந்து எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திங்களன்று சந்தை ஒரு மந்த நிலையிலேயே இருந்தது. நேற்று முன்தினம், அமெரிக்கா பெட் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் செய்யுமா, செய்யாதா என்று குழப்பத்திலேயே பலரும் இருந்ததால், ஒரு கவனமான பாதையிலேயே முதலீட்டாளர்கள் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆதலால், சந்தை அன்றைய தினம் 79 புள்ளிகள் கீழேயே முடிவடைந்தது.
நேற்று முன்தினம் துவக்கம் 15 புள்ளிகள் குறைவிலேயே ஆரம்பித்தது. ஆனால், உலகின் மற்ற பகுதியின் நிலவரங்களை வைத்து சந்தை ஏற ஆரம்பித்தது. அதாவது, கச்சா எண்ணெய் விலை எதிர்பார்த்திருந்த 120 டாலருக்கும் கீழே குறந்ததால், சந்தையில் மறுபடியும் வாங்குபவர்கள் நிறைய இருந்தனர். ஆதலால், இங்கும் சந்தைகள் ஜிவ்வென ஏறின. முடிவாக மும்பை பங்குச் சந்தை 383 புள்ளிகள் கூடி முடிவடைந்திருந்தது. நேற்றும் துவக்கம் மேலேயே இருந்தது. நடுவில் ஒரு சமயத்தில் சந்தை 400 புள்ளிகளுக்கு மேலாக ஏறிச்சென்றிருந்தது. காரணம் என்ன? : அமெரிக்கா பெட் வட்டி விகிதங்களை எதுவும் கூட்டாமல் அதே 2 சதவீதத்திலேயே வைத்திருந்தது. இதனால், நேற்று முன்தினம் நமக்கு பிறகு தொடங்கிய அமெரிக் காவின் பங்குச் சந்தைகள் 3 சதவீதம் வரை மேலே சென்றது. இது போல மேலே ஏறிச் செல்லும் சந்தையில் லாபம் பார்ப்பவர்கள் இருக்கத்தானே செய்வார்கள். அப்படியே இருந்தது சந்தையிலும். ஆதலால், சந்தை 300க்கும் அதிகமான புள்ளிகளை இழந்து முடிவாக 112 புள்ளிகள் மட்டும் லாபத்தில் இருந்தது. எலிகான், ஆர்.என்.ஆர்.எல்., திரிவேணி இண்டஸ்ட்ரீஸ், மாருதி, பஜாஜ் இந்துஸ்தான் ஆகிய கம்பெனிகள் நல்ல முன்னேற்றம் கண்டன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 112 புள்ளிகள் கூடி15,073 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை 14 புள்ளிகள் கூடி 4,517 புள்ளிகளிலும் முடிவடைந்தது. 15 ஆயிரம் புள்ளிகளை தாண்டி மும்பை பங்குச் சந்தை முடிந்திருப்பது சென்டிமென்டாக நல்ல ஒரு அறிகுறி. நிலைத்து நிற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பணவீக்கம் குறையுமா?: கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் எல்லாருடைய எதிர்பார்ப்பும் பணவீக்கம் குறையுமா என்பது தான். கட்டாயம் குறைய வேண்டும். வரும் வாரங்களில் இதற்கான அறிகுறிகள் தெரியும். பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பில் வங்கி பங்குகள், கட்டுமானத்துறை பங்குகள் மேலே சென்றன. குறிப்பாக வங்கிப் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் நல்ல ஏற்றங்களை கண்டுள்ளன.
புதிய வெளியீடுகள்: பல கம்பெனிகள் தங்களது புதிய வெளியீடுகளை தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றாலும், நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன், பி.எஸ்.என்.எல்., கம்பெனிகள் தங்களது வெளியீடுகளை கொண்டு வர தங்களது போர்டிடம் அனுமதி பெற்றுள்ளன. பி.எஸ்.என்.எல்., வெளியீடு 42,000 கோடி ரூபாய் அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க கம்பெனிகளின் வெளியீடுகள் இன்னும் ஆறு மாதத்திற்குள் பல வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வங்கிகள், தங்களது மூலதனத்தை கூட்டுவதற்காக புதிய வெளியீடுகளைக் கொண்டு வரலாம். வரும் நாட்களில் எந்த பெரிய தாழ்வுகளுக்கும் வழியில்லை. ஏற்றங்கள் பெரிதாக இல்லாவிடினும் சந்தை 15 ஆயிரம் புள்ளிகளில் நிலைத்து நிற்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


விபத்து ஏற்படுத்தாத கார் நிசான் நிறுவனம் வடிவமைப்பு


எதன் மீதும் மோதாத காரை, நிசான் மோட்டார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த கார்கள் விற்பனைக்கு வருகின்றன. ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனம், எதன் மீதும் மோதாத பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எரிபொருளை மிகவும் குறைவாக பயன்படுத்தும் வகையில் புதிய காரை வடிவமைத்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதால், 1995ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டுக்குள் நிசான் நிறுவனங்களின் கார்கள் விபத்துக்குள்ளாவதை பாதியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, முன்புறம், பக்கவாட்டுப்பகுதி, பின்புறங்களில் சென்சார்களுடன் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூர இடைவெளியில் கார்கள் அல்லது சுவர்கள் தென்பட்டால், சென்சார்கள் எச்சரிக்கை மணி எழுப்புவதோடு, ஆக்சிலேட்டரை குறைத்து, வாகனத்தை நிறுத்திவிடும். குறிப்பிட்ட இடைவெளியில் வாகனத்தை செலுத்தும் வகையிலும், லேன் மாறாதவகையில் வாகனத்தை இயக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வேகத்தை தாண்டும் போது, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், காஸ் மூலம் இயங்கும் தானியங்கி கருவி, ஆக்சிலேட்டர் பெடலை முன் நோக்கி அழுத்தும். இதன்மூலம், எரிபொருள் சிக்கனமாவதோடு, விபத்தே ஏற்படாத கார்கள் பயன்பாட்டுக்கு வரும். அடுத்த ஆண்டு முதல் இந்த கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
நன்றி : தினமலர்