
றாலும், மக்கள் பணவீக்கம் குறைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள இன்னும் நாட்களாகும். சாதாரண மக்களுக்கு பணவீக்கம் குறைந்துள்ளது என்றால், காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகியவையும் குறைய வேண்டும். குறையவில்லையே? காத்திருக்க வேண்டும்.வரும் ஜனவரியிலிருந்து பணவீக்க சதவீதம் மாதம் ஒரு முறை வெளியிடப்படும். இது, சந்தையில் ஒரு ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க உதவும்.பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி இன்னும் ஒரு ரேட் கட் செய்யலாம் என்று எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். சர்வதேச நாடுகளை பின்பற்றி ரிசர்வ் வங்கியும் அறிவிக்கும் பட்சத்தில், பங்குச் சந்தை மீண்டும் புத்தொளி பெறும்.பணப்புழக்கம்: பணப்புழக்கம் குறைவாகவே உள்ளது. பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது, வட்டி விகிதங்களைக் கூட்டும். ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்தாலும், நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் இன்னும் சிறிது கூடலாம். மூன்று முறை ரேட் கட் செய்தும் பணப்புழக்கம் இன்னும் சரியாகவில்லை. வெள்ளியன்று வங்கிகளுக்கு கால் மணி 21 சதவீதம் வரை சென்றது. எந்த பங்குகள் இந்த வாரம் அதிகம் கூடின?: ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் 34 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 14 சதவீதமும், பாரதி ஏர்டெல் 21 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 28 சதவீதமும் கூடின. சந்தையில் இன்னும் பல பங்குகள் மிகவும் கவர்ச்சிகரமான விலைக்கும் கிடைக்கிறது. முதலீட்டாளர்களிடையே பயம் இன்னும் தெளியாததால், வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. தைரியமாக இறங்கியவர்கள் லாபம் பார்க்காமல் இல்லை. சிறு உதாரணம். திங்கட்கிழமை(தீபாவளியன்று) சென்செக்ஸ் பட்டியலில் உள்ள அம்புஜா சிமென்ட் 43 ரூபாய் என்ற கீழ்நிலைக்கு சென்றது. அப்போது, அந்த பங்கை கவனித்து வாங்கியவர்களுக்கு நான்கே நாளில் 40 சதவீத லாபம் கிடைத்து இருக்கும். வெள்ளியன்று 62 ரூபாய் வரை சென்றது.வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 743 புள்ளிகள் கூடி 9,788 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 198 புள்ளிகள் கூடி 2,985 புள்ளிகளில் முடிவடைந்தது. இந்த வாரம் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தது, முதலீட்டாளர்களுக்கு நிம்மதியாக இருந்தது. காலாண்டு முடிவுகள்: இதுவரை வந்துள்ள இரண்டாவது காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது விற்பனை கூடியிருந்தாலும், லாப சதவீதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. நிறைய கம்பெனிகள் நஷ்டங் களை சந்தித்துள்ளன அல்லது குறைவான லாபங்களைப் பெற்றுள்ளன. ஆதலால், டிசம்பர் காலாண்டு முடிவுகள் பங்குச் சந்தைக்கு ஒரு ஆசிட் டெஸ்ட் ஆகும். அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: நிலைமை சரியானது போலத் தோன்றினாலும், பணப்புழக்கத்தை பொறுத்தவரை இன்னும் நிலைமை சரியாகவில்லை என்று தான் தோன்றுகிறது. வெள்ளிக்கிழமை பிறந்தது உண்மையில், 'விடிவெள்ளி'யா அல்லது மின்னலா... என்ற பாணியில் முதலீட்டாளர்களை மகிழ்ச்சியூட்ட வந்ததா என்பது வரும் வாரத்தில் போக போகத்தான் பார்க்க முடியும். ஆகையால், சந்தை வேகமாக முன்னேறாமல் சிறிது மெதுவாகவே மேலேயே சென்று கொண்டிருந்தால், அது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை தரும்.
நன்றி : தினமலர்