Tuesday, October 28, 2008

ஆசிய, அமெரிக்க பங்கு சந்தைகளில் இன்றும் கடும் வீழ்ச்சிதான்

கடந்த ஒரு வார காலமாக சரிவை மட்டுமே சந்தித்து வரும் ஆசிய பங்கு சந்தைகளில் இன்றும் சரிவுதான் காணப்படுகிறது.சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 7.20 சதவீதத்தை இழந்திருக்கிறது. சீனாவின் ஷாங்கை 2.87 சதவீதம், தைவானின் இன்டக்ஸ் 2.59 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆசிய சந்தைகளைப்போனவே அமெரிக்க சந்தையிலும் சரிவுதான் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள டவ்ஜோன்ஸ் 2.42 சதவீதத்தை இழந்திருக்கிறது. நாஸ்டாக் 2.97 சதவீதம் குறைந்திருக்கிறது. ஜப்பானை பொருத்தவரை வர்த்தக ஆரம்பத்தில் நிக்கி 2 சதவீதத்தை இழந்திருந்தது. இது கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி. பின்னர் மதிய வேளையில் கொஞ்சம் முன்னேறி 0.95 சதவீத இழப்புடன் இருந்தது. அங்குள்ள பங்கு சந்தை அதிகமாக சரிந்து வருவதை அடுத்து, ஷாட் ஷெல்லிங் முறையை நிறுத்தி விடலாமா என்றும் ஜப்பான் யோசித்து வருகிறது. ஜப்பானை போலவே இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலும் ஷாட் ஷெல்லிங் முறையை நிறுத்தி விட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்தியாவை பொருத்த வரை நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 191.51 புள்ளிகள் குறைந்து 8,509.56 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 59.80 புள்ளிகள் குறைந்து 2,524.20 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை. ஆனால் முகுராத் வர்த்தகம் மட்டும் நடக்கும். அது மாலை 5.15 க்கு தான் துவங்குகிறது. கடந்த வருட தீபாவளிக்கு 19,997 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், இந்த வருட தீபாவளிக்கு வெறும் 8,509 புள்ளிகளாகத்தான் இருக்கிறது. ஒரு வருடத்தில் 57 சதவீத புள்ளிகளை சந்தை இழந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

ஐசிஐசிஐ வங்கியின் பிரிட்டிஷ் கிளைக்கு ரூ.160 கோடி நஷ்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் இன் பிரிட்டிஷ் கிளை ரூ.160 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த சில காலமாகவே ஐசிஐசிஐ பேங்க், பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்திருக்கிறது. பெருமளவில் கடனை கொடுத்து அது திரும்ப வராததால் கடும் நிதி சிக்கலில் இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி, பின்னர் அந்த வங்கி கொடுத்த விளக்கத்தை அடுத்து அது சரியாகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவின் நலிவடைந்த நிதி வங்கியான லேமன் பிரதர்ஸூக்கு பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கடன் கொடுக்கப்போய், ஒரு பெரும் தொகையை இழந்தது. அதன் பின்னரும் ஒரிரு முறை சர்ச்சையில் சிக்கியது.கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக அடிக்கடி வெளிவரும் தகவலை அடுத்து,அந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் பலர் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்வது நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டின் நிதி நிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கிளை 35 மில்லியன் ( சுமார் 160 கோடி ரூபாய் ) நிகர நஷ்டமடைந்திருப்பது ( நெட் லாஸ் ) வெளியாகி இருக்கிறது.இந்த தகவலை அந்த வங்கியில் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பிரிட்டிஷ் ஐசிஐசிஐ வங்கி கிளையில் 4.9 பில்லியன் டாலர் டெபாசிட் இருப்பதாகவும் அதில் 39 சதவீதம் டர்ம் டெபாசிட் என்றும், அந்த கிளையின் கடன் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்