Tuesday, February 17, 2009

பங்கு சந்தையில் தொடர்ந்து சரிவு

பங்கு சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு ஏற்பட்டிருக்கிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக பங்கு சந்தையில் பங்குகள் அதிக அளவில் விற்கும் போக்கு காணப்பட்டது. இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், டெக்னாலஜி, மற்றும் ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதால் சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு இறங்கி விட்டது. நிப்டி 2,800 புள்ளிகளுக்கும் கீழே சென்று விட்டது. இரண்டு நாட்களில் சென்செக்ஸ் 600 புள்ளிகளையும் நிப்டி 175 புள்ளிகளையும் இழந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்டிபிசி, இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஹெச்.டி.எப்.சி., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், செய்ல், டி.சி.எஸ்., ஹெச்.டி.எப்.சி.பேங்க் போன்றவைகள் அதிகம் நஷ்டமடைந்திருக்கின்றன. இன்று மும்பை பங்கு சந்தையில் நிப்டி 270.45 புள்ளிகள் ( 2.91 சதவீதம் ) குறைந்து 9,035.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 78.00 புள்ளிகள் ( 2.74 சதவீதம் ) குறைந்து 2,770.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

புதுச்சேரி விமான நிலையம் செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகும் : குர்ஜார்

இந்த வருடம் மார்ச் மாதம் செயல்படுவதாக இருந்த புதுச்சேரி விமான நிலையம், செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கோவிந்த சிங் குர்ஜார் தெரிவித்தார். தற்போது கட்டப்பட்டு வரும் புதுச்சேரி விமான நிலையம், முன்பு போடப்பட்ட திட்டப்படி, வரும் மார்ச் மாதத்தில் இருந்து செயல்பட வேண்டும். ஆனால் அங்கு வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் திறப்பு விழாவுக்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று அவர் தெரிவித்தார். எதிர்பார்த்தபடி அங்கு வேலைகள் முடியாமல் இருக்கிறது என்றார் அவர். ரன்வேயை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அது வெளியில் வருவதால் அதனை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்று சொன்ன அவர், புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானங்களை இயக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஆர்வமாக இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


நேற்று மட்டும் முதலீட்டாளர்கள் இழந்தது ரூ.ஒரு லட்சம் கோடி

மத்திய அரசு 2009 - 10 கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நேற்று ஒரு நாள் மட்டும் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ரூ.ஒரு லட்சம் கோடியை இழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய தொழில் துறைகளை மேம்படுத்த எந்தவித திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என்று கூறப்பட்டதால் நேற்று பங்கு சந்தை சரிவை சந்தித்தது. பட்ஜெட்டுக்கு முந்தைய இரண்டு வாரங்களில் கொஞ்சம் முன்னேறி இருந்த சென்செக்ஸ், நேற்று ஒரே நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்து விட்டது. குறிப்பாக மெட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. வெள்ளிக்கிழமை அன்று பங்கு சந்தை முடிந்தபோது ரூ.30,71,114.61 கோடியாக இருந்த சந்தை முதலீடு, நேற்று வர்த்தகம் முடிந்த போது ரூ.29,79,509.44 கோடியாக குறைந்திருந்தது. ஒரே நாளில் சந்தை முதலீடு ரூ.91,000 குறைந்திருக்கிறது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்த இடைக்கால பட்ஜெட் இழந்திருப்பதால், இனி வரும் நாட்களிலும் சந்தை சரிந்து கொண்டுதான் இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மெட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்கள் தொடர்ந்து சரிந்து தான் இருக்கும் என்கிறார்கள்.

தங்கத்தின் விலை என்றுமில்லாத அளவாக உயர்வு

ஏற்கனவே உயரத்தில் இருக்கும் தங்கத்தின் விலை இன்று என்றுமில்லாத அளவாக உயர்ந்து விட்டது. புதுடில்லியில் இன்றைய காலை வர்த்தகத்தின் போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15,200 ஆக உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 960.20 டாலராக இருக்கிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக உலகம் முழுவதும் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், முதலீட்டாளர்கள் இப்போது தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவே தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் 10 கிராமுக்கு ரூ.360 கூடியிருக்கிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதாலும் இந்தியாவில் இது கல்யாண சீசனாக இருப்பதாலும் இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து விட்டது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதால், இன்று ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 37 டாலருக்கும் கீழே சென்று விட்டது. இன்று நியுயார்க் மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்சில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 76 சென்ட் குறைந்து 36.75 டாலராக இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் பேரலுக்கு 147.27 டாலர் வரை சென்ற கச்சா எண்ணெய் விலை இப்போது, அதிலிருந்து 75 சதவீதம் வரை குறைந்து விட்டது. அமெரிக்க பொருளாதாரம் கடும் சரிவில் இருப்பதால் அங்கு அதிகமான பேர் தினமும் வேலையை இழந்து வருகிறார்கள். எனவே அங்கு மக்களின் வாங்கும் சக்தி பெருமளவில் குறைந்து விட்டது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பானிலும் இப்போது நிலைமை மோசமாக இருக்கிறது. எனவே அங்கும் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து விட்டது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து வருகிறது.
நன்றி : தினமலர்

நன்றி : தினமலர்

பிரிட்டனில் 9,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது கே.எஃப்.சி

பிரபல அமெரிக்க ஃபாஸ்ட் புட் நிறுவனமாக கே.எஃப்.சி., பிரிட்டனில் 9,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இன்னும் மூன்று முதல் ஐந்து வருடங்களில் அங்கு 300 க்கும் மேற்பட்ட புது ரெஸ்ட்டாரன்ட்களை துவங்குவதன் மூலம் அது 9,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 150 மில்லியன் பவுன்ட்கள் முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக டெலகிராப் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிட்டனும் இப்போது கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் அங்குள்ளவர்கள் இப்போது குறைந்த செலவில் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை பயன்படுத்தி கே.எஃப்.சி., அங்கு புதிய ரெஸ்ட்டாரன்ட்களை திறக்க முன்வந்துள்ளது. இப்போது பிரிட்டனில் இருக்கும் கே.எஃப்.சி., ரெஸ்ட்டாரன்ட்களில் 22,000 பேர் ஷிப்ட் முறையில் வேலைபார்க்கிறார்கள். அவர்களுக்கு மணிக்கு 5.73 பவுன்ட் ( சுமார் ரூ.395 ) என்ற கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தாலும், கே.எஃப்.சி., நிறுவனம் கடந்த வருடத்தில் 36 புதிய ரெஸ்ட்டாரன்ட்களை திறந்திருக்கிறது. இந்த வருடத்தில் 44 புதிய ரெஸ்ட்டாரன்ட்களை திறக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


பட்ஜெட்டில் வரி விதிப்பு இல்லாதது ஏன்: பிரணாப் பதில்: தேவையற்ற கடனுக்கும் எதிர்ப்பு

பார்லிமென்டின் ஒப்புதல் இல்லாமல் வரி விதிப்பதையும், தேவையற்ற வகையில் கடன் வாங்குவதையும் நான் விரும்பவில்லை. அப்படி செய்வது தவறான செயல். அதனால், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். இடைக்கால பட்ஜெட் சமர்ப்பித்த பின், லோக்சபா 'டிவி'க்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: அடுத்து பதவியேற்க உள்ள அரசு, பொருளாதார மந்தநிலையை சமாளிக்கும் வகையில், முழுமையான பட்ஜெட்டில் திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் தற்போதைய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டே செயல்பட்டுள்ளேன். பொருளாதார மந்தநிலை காரணமாக, வளர்ச்சி வீதம் 2 சதவீதம் கீழே இறங்கியிருந்தாலும், 9 சதவீத வளர்ச்சி வீதத்தை அடைய நாடு தொடர்ந்து பாடுபடும். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முழுமையான சீர்திருத்த நடவடிக்கைகளை இந்த இடைக்கால பட்ஜெட்டில் எடுக்க முடியவில்லை. அரசியல் சட்ட ரீதியான கட்டுப் பாடுகளே அதற்கு காரணம். தற்போதைய அரசின் பதவிக்காலம் மே 22 - 23ம் தேதியுடன் முடிவடைந்து விடுகிறது. மேலும், தேர்தலும் நடைபெற உள்ளது. அதனால், பார்லிமென்டின் ஒப்புதல் இல்லாமல், தேவையற்ற வகையில் கடன் வாங்குவதையும், வரிகள் விதிப்பதையும் நான் விரும்பவில்லை. கடன் வாங்கினால், வரிகள் விதித்தால், அது தவறான செயலாகி விடும். அடுத்த அரசு எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை, இந்த பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளேன். குறிப்பாக மொத்த நிதிப்பற்றாக்குறை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மந்த நிலையைப் போக்க நிதி உதவி தேவைப்படும் போது அரசு பரிசீலக்க வேண்டிய விஷயம். முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். சிதம்பரம் கருத்து: 'விரைவான மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சியின் மீது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இடைக்கால பட்ஜெட் உள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: உலக நிதி நெருக்கடியால், இந்த ஆண்டு சிரமமான ஆண்டாக மாறியுள்ளது. இந்தக் கால கட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பிக்க கடும் பணியாற்றியுள்ளார் அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அவரின் செயல் பாராட்டத்தக்கது. உலக அளவில் கடும் மந்த நிலை நிலவினாலும், 2008 -09ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி
7.1 சதவீதத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அது திருப்தி அளிக்கும் விஷயம். இவ்வாறு சிதம்பரம் கூறினார். உலக வங்கி உதவும்: இதனிடையே பட்ஜெட் தாக்கலுக்குப்பின் வழக்கமாக நிதித்துறை செயலர் உட்பட அதிகாரிகள் நிருபர்களிடம் பேசினர். பொருளாதார விவகாரச் செயலர் அசோக் சாவ்லா, நிதித்துறை செயலர் அருண் ராமநாதன் ஆகியோர், 'நடப்பாண்டில் சுணக்கம் தீர தனி நிதி உதவி இருக்காது. தேவைப்பட்டால் அரசு உதவும். 'மேலும் உலக வங்கியிடம் இருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி பெறப் போகிறோம். இதில், 15 ஆயிரம் கோடி பொதுத்துறை வங்கிகள் நிதி ஆதாரத்தை வலுவூட்ட தரப்படும். எஞ்சியுள்ள பணம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற நிறுவன வளர்ச்சிக்கு செலவழிக்கப்படும். 'இன்றைய நிலையில் மொத்த வளர்ச்சியில் நிதிப்பற்றாக்குறை 7.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது' என்றனர். அதே சமயம் கவர்ச்சி இல்லாத பட்ஜெட் என்பதால், சென்செக்ஸ் புள்ளிகள் 329 குறைந்தது. நேற்றைய பங்குச் சந்தை குறியீட்டெண் 9,305.45 ஆகக் குறைந்தது.
உள்கட்டமைப்புக்கு ரூ.லட்சம் கோடி: மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறைக்கு, 99 ஆயிரத்து 534 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம், மின்சாரம், குடியிருப்பு மற்றும் சாலை உட்பட நாட்டின் கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டமான 'பாரத் நிர்மாண்' திட்டத்திற்கு 40 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு தேசிய ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்காக 11 ஆயிரத்து 842 கோடி ரூபாயும், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 14 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா' திட்டத்திற்கும், 8,800 கோடி ரூபாய் கிராமப்புறக் குடியிருப்பிற்கும், 9,992 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கும் செலவிடப்படும். இவை பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பாரத் நிர்மாண் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி 261 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு 40 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்