Tuesday, November 3, 2009

மனம் நோகாமல் சொல்

தமிழகத்தில் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில், ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தில் "கற்றல் உளவியல்' ஒரு பாடமாக இருக்கிறது. ஆனால், அந்தப் பாடத்திட்டத்தின் உள்ளீடுகள், இக்காலத்துக்கேற்றவையாக இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்லிவிடலாம். மாறிவரும் உலக நடைமுறைகளால் மாற்றம் பெற்றுள்ள இக்கால வளர்இளம் பருவ மாணவர்களின் மனப்போக்கு, அவர்களை நுட்பமாகக் கையாளும் அவசியங்களை உள்ளடக்கியதாக உளவியல் பாடங்கள் மாற்றப்பட வேண்டிய தேவை இன்று உருவாகியுள்ளது.

மாணவர்களைப் பிரம்பால் அடிப்பது, முட்டிபோடச் செய்வது என்பது இன்று சட்டப்படி குற்றம் என்பதால், விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரைத் தவிர, ஆசிரியர்கள் எவருமே இதில் ஈடுபடுவதில்லை. இருப்பினும், அடிப்பதற்குப் பதிலாக, அவமானப்படுத்துவது என்பதாக தண்டனைகள் மாறியுள்ளன. இது புதுவகையான சிக்கலை ஆசிரியர்-வளர்இளம் பருவ மாணவர் இடையே ஏற்படுத்தி விடுகிறது.

பிரம்படி ஏற்படுத்தும் வலியைவிட மனதைக் காயப்படுத்தும் அவமானத்தின் வலி கொடூரமானது. ஆசிரியர் தன்மீது நிகழ்த்தும் இந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் வளர்இளம் பருவ மாணவர்கள், அதை சமூகத்தில் வன்முறைகளாக வெளிப்படுத்திவிடுகிறார்கள். வகுப்பறையில் தாங்கிக்கொள்ள முடியாமலும், அந்த வலியை வெளிப்படுத்தி மனஇறுக்கம் தளர வழிதெரியாதவர்களும், நொறுங்கிப்போய்த் தாழ்வு மனப்பான்மையால் பயனற்றவர்களாக மாறுகிறார்கள். அவர்களில் மிகச் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு செங்கம் அருகே, தாமதமாக வந்த மூன்று மாணவிகளைத் தலைமையாசிரியர் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் அதை ஓர் அவமானமாகக் கருதி, வீடு திரும்பாமல் அங்கே அழுது நின்றபோதும் மன்னிக்காமல் விரட்டப்பட்டனர். மூவரும் கிணற்றில் குதித்ததில், இருவர் இறந்தனர். வருந்தியழும் நிலையில் மன்னித்திருந்தால் இந்தச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

கோவையில் ஒரு பள்ளி மாணவி, வகுப்புத் தேர்வில், துணுக்குச் சீட்டுகளை மறைத்துவைத்து எழுதினார். அதை அப்படியே பெற்றோரிடம் காட்டுகிறோம் என்று, அவர் வீட்டுக்குத் தகவல் கொடுத்து வரச்செய்தனர். பெற்றோர் வரும் முன்பாகவே மாணவி மாடியிலிருந்து குதித்து இறந்தார். விடைத்தாளைக் கிழித்துப்போட்டுவிட்டு மறுபடியும் எழுதச் செய்திருக்கலாம்.

ஒரு மாணவனும் மாணவியும் ஒன்றாக நகரைச் சுற்றியதை வகுப்பறையில் வெளிப்படுத்தி அவமானப்படுத்தியதால், ஆம்பூரில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இன்றைய வளர்இளம் பருவத்தினரின் மனநிலை முற்றிலுமாக மாறிக் கிடக்கிறது. அவர்களுக்கு எல்லாமும் பத்து வயதிலேயே தெரிந்துவிடுகிறது. காதல், காமம், சுயமரியாதை, அறிவு, ஏமாற்று, செல்போன் பயன்பாடு, கணினியில் செயல்பாடு, இணையதளத்தில் அனைத்தையும் திறந்து பார்க்கும் வாய்ப்பு என எல்லாவற்றிலும் நாம் துரத்திப் பிடிக்க முடியாத அளவுக்கு வேகமாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய விஷயங்கள் தெரிந்திருக்கும் தங்களைப் பெரியவர்களாக மதிக்க வேண்டும், அவ்வாறு நடத்த வேண்டும் என்று வளர்இளம் பருவத்தினர் பெற்றோர்களிடமும் சமூகத்திடமும் எதிர்பார்ப்பதில் தவறில்லை. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பது பழைய உளவியல். இன்றைய நாளில் அறிவில் மிஞ்சியவன் ஆசான். ஆசிரியருக்கு இணையாக அல்லது கூடுதலாக விஷயங்கள் தெரிந்திருக்கும் வளர்இளம் பருவ மாணவனுக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றுமில்லாத சாதாரண நிகழ்வாகக் கருதப்பட்ட நடவடிக்கைகள்கூட, இன்று தங்கள் உணர்வு மீதான அவமதிப்பாகக் கருதும் சூழல் இருக்கிறது.

நாளுக்குநாள் மாறிக்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கையில் வளர்இளம் சிறார்களின் போக்கு என்ன?, அவர்கள் எதனை "சீரியஸôன' விஷயமாகக் கருதுகிறார்கள், எது அவர்களுக்கு "சப்பை மேட்டராக' இருக்கிறது, எவையெல்லாம் அவர்களுக்கு "சான்சே இல்ல' என்பதாய் புறக்கணிக்கப்படுகிறது, எதை அவர்கள் "கிரேட் இன்சல்ட்' என்கிறார்கள், எதில் "அட்ஜஸ்ட்' செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுடன் இருக்கும் ஆசிரியர்களால்தான் நன்கு உணர முடியும். அதே நேரத்தில் அவர்களை அவமானப்படுத்தாமல், மனம் நோகாமல் தவறைச்சுட்டிக் காட்டும் உளவியல் அவர்களின் இன்றைய தேவையாக இருக்கிறது.

வகுப்பறை என்பது வெறுமனே கற்பித்தல் மட்டுமல்ல, அது ஒரு பழகு சூழல். அங்கு சக மாணவர்களுக்கு முன்பாகவும், பெற்றோருக்கு முன்பாகவும் எப்படி நாகரிகமாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இன்றைய மாணவர்களிடம் இருக்கின்றன.

உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்குமே இது பற்றிய புத்தொளிப் பயிற்சி தருவதுடன், கல்வியியல் கல்லூரி பாடத்திட்டத்திலும் மாற்றங்களைச் செய்தால், மாணவர்- ஆசிரியர் இடையிலான ஆரோக்கியமான உறவுக்கு வழியேற்படும். வகுப்பறையில் நடக்கும் இந்தச் சம்பவங்களின் கசப்பும் இனிப்பும் சமூகத்திலும் பிரதிபலிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியம்.
நன்றி : தினமணி

சர்வதேச நிதியத்திடம் 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியது ரிசர்வ் வங்கி

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தில் இருந்து ரிசர்வ் வங்கி 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 6.7 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாயின் மதிப்பில், இது 33 ஆயிரம் கோடியாக உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வரும் சர்வதேச நிதியத்தின் தலைமையகம் உள்ளது. இந்த சர்வதே நிதியத்திடம் 3 ஆயிரத்து 217 டன் தங்கம் இருப்புள்ளது. தற்போது, இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து இருப்பதால், சர்வதேச நிதியத்திடம் இருந்து 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்க ரிசர்வ் வங்கி மு‌டிவு செய்து, சர்வதேச நிதியத்திடம் அனுமதி கேட்டது. இதற்கு தற்போது சர்வதேச நிதியகமும் அனுமதி அளித்துள்ளது. சர்வதேச நிதியத்திடம் வாங்கப் படும் தங்கம், இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
நன்றி : தினமலர்


இனப்படுகொலையாவது ஒன்றாவது...

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.

சிங்கள இளைஞர்களை டயரால் எரித்துக் கொன்று ஆறுகளில் வீசிய இலங்கை அரசை எதிர்த்து, உண்மையான கோபத்தில், ஐ.நா. சபையின் மக்கள் உரிமைக் கமிஷனிடம் புகார் செய்யக் கிளம்பிய அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நண்பர் பண உதவி செய்ய முன்வந்தார்.

அந்தப் பணத்தை வைத்து ஜெனீவாவுக்குச் சென்று, மக்கள் உரிமைக் கமிஷன் கட்டடத்தின் முன்வாயிலில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்லும் ஒவ்வொருவரிடமும் இலங்கையில் நடக்கும் அநியாயத்தைக் கூறினார். யாரும் முதலில் செவிமடுக்கவில்லை. அந்த இளம் எம்.பி.யின் பிடிவாதத்தால் கடைசியில் மக்கள் உரிமைக் கமிஷன் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அந்த எம்.பி.யின் கருத்துகளைக் கேட்டது.

அப்படி லட்சியத்துடன் செயல்பட்ட எம்.பி. யார் தெரியுமா? இன்று இலங்கையின் அதிபராக ஐ.நா. மக்கள் உரிமைக் கமிஷனால் கண்டிக்கப்படுகிற சாட்சாத் மகிந்த ராஜபட்சதான். அவருடைய நண்பர்கள், இன்று மகிந்தாவிடம் எல்லா பழைய லட்சியங்களும் போய்விட்டன, அவருடைய மீசையையும் அவருடைய கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரத்தையும் தவிர என்கின்றனர்.

சில நாள்களுக்கு முன் வந்துள்ள செய்தியில் யுத்தத்திற்கான எல்லா சட்டதிட்டங்களையும் புறக்கணித்ததோடு தன் சொந்த நாட்டு மக்கள் போர் அபாயத்திலிருந்து ஒதுங்கி இருந்த இடங்களில்கூட தாக்குதல் நடத்திக் கொலை பாதகச் செயல்புரிந்த இலங்கை அரசு தண்டனைக்குரியதாக பல மேற்கத்திய நாடுகளாலும் கருதப்படுகிறதென்ற செய்தி வந்துள்ளது. யுத்தத்தால் படுகாயமுற்ற மக்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் இலங்கை அரசு சுமார் 30 முறை தாக்குதல் தொடுத்தது என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

யுத்தம் நடந்த இடத்தில் தன் சொந்த நாட்டு நிருபர்களையோ வெளிநாட்டு நிருபர்களையோ இலங்கை அனுமதிக்காததால் சாட்சிகள் இல்லாத யுத்தமாக இது நடந்தது. இலங்கை அரசு கொடுக்கும் செய்தி மட்டும் தான் வெளியில் வந்தது. ஐ.நா.வின் பிரதிநிதிகளையோ, செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகளையோ, யுத்தம் நடந்த இடத்தில் அனுமதிக்கவில்லை என்பது அகில உலகத்திற்கும் இன்று தெரிந்துவிட்டது என்று துணிந்து எழுதியவர் "ஸன்டேலீடர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க என்ற சிங்களவர். தனது அரசு தவறு செய்கிறது என்று கூறியதால் அவர் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் திரண்டு இதற்குக் கண்டனம் தெரிவித்தது.

சமீபத்தில் திசைநாயகம் என்பவர் இலங்கை அரசின் நீதித்துறையால் 20 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து அனைத்து உலகினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சியவாதியாக இருந்த மகிந்த தான் இவ்வளவு கொடுமைகளுக்கும் தலைமை தாங்குபவர். அன்று அரசு ராட்சசனாக மாறிவிட்டது என அறிந்து நியாயம் கேட்கப் போன ஒரு மனிதர்தான் இன்று ராட்சசனாக மாறி தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக தனது நாட்டின் ஒரு பகுதியினரின் இனப்படுகொலைக்குக் காரணமானவர் என்று உலக நாடுகளால் குற்றம்சாட்டப்படுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் இரண்டரை லட்சம் மக்கள் தனிமைச்சிறையில் தனது குடும்பத்திலிருந்தும், பிள்ளைகள், ஊரார் உற்றாரிடமிருந்தும் பிரிக்கப்பட்டுக் கம்பி வேலிகள் இட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏன் அவர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்யவில்லை என்று உலகினர் கேட்டபோது, யுத்தம் நடந்ததால் பூமி எங்கும் கண்ணி வெடிகள் உள்ளன என்ற பதிலைக் கொடுத்த இலங்கை அரசு, சமீபத்தில் 50 ஆயிரம் மக்களை விடுதலை செய்யப் போகிறோம் என்றது. அப்படி என்றால் கண்ணி வெடிகளால் தான் தமிழ் மக்களைச் சிறை வைத்துள்ளோம் என்ற வாதம் தவறுதானே! பொய்தானே! உலகையும் உலகத் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்காகக் கூறிய பொய்க்காரணம் தானே!

இலங்கையின் அரசியலோடு இந்தியாவின் ஒரு பகுதியின் அரசியல் பின்னிப் பிணைந்தது தமிழ்மொழியால். இந்த அடையாளம் இன்றைய தமிழ்ச் சந்ததியினரின் மூதாதையரால் கட்டமைக்கப்பட்டது.

தமிழர்கள் ஒரு வரலாற்று நியதியின் பாற்பட்டவர்கள். இந்த வரலாற்று நியதி இன்று சிதற ஆரம்பித்துள்ளது. பாரதி, பிஜி தமிழர்களுக்காகப் புலம்பியதும், பாரதிதாசன், தென்னாசியத் தமிழர்களுக்காகப் புலம்பித் தீர்த்ததும் இந்த நியதியில் விழுந்த அடியை உணர்ந்ததால்தான்.

சமீபத்தில் தமிழ் மக்களில் சுமார் 50,000 பேர் நம் எல்லோரின் கண்முன் செத்து மடிந்தது வரலாறு. இது சாதாரணம் என இன்று நினைத்துள்ளவர்கள் கணிப்பு தவறு. சுமார் 20 பேர் புரிந்த தற்கொலை ஏதோ ஒன்றுக்கான அறிகுறி. தமிழ் மக்களை இனி இந்தியா கவனிக்காது என்ற உற்பாதங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன.

இலங்கையில் நடந்த இன அழிப்பு, மேற்கத்திய நாடுகளை உலுக்கிய அளவுக்கு இந்தியாவை உலுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளை உலுக்கியதால் இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று கூறி அனைத்துலக நிதியம், இலங்கை கேட்ட சுமார் 2.6 பில்லியன் டாலர் பணத்தை உடனே கொடுக்கவில்லை.

ஜெர்மனியும் ஆர்ஜென்டினாவும் இலங்கை அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி பணம் கொடுக்கும் முடிவை எடுக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகுதான் 2009 ஜூன் மாதம் இப் பணம் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டது.

இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகளானாலும் இரண்டையும் நடத்த வேண்டிய முறையில் நடத்த இலங்கைக்குத் தெரிகிறது. இலங்கை அரசுக்கு இந்தியாவும் சீனாவும் வேண்டிய அளவு உதவி செய்ததுபோலவே பாகிஸ்தான் (நூறு மில்லியன் டாலர்) ஈரான் (450 மில்லியன் டாலர்) லிபியா (500 மில்லியன் டாலர்) மனித உரிமையற்ற ராணுவ ஆட்சி நடைபெறும் பர்மா (50,000 டாலர்) ஆகியன பல்வேறு முறையில் உதவுகின்றன; அல்லது உதவ முன்வந்துள்ளன.

மலேசியாபோல எந்த இன அடையாளத்தையும் அங்கீகரிக்காத நாடாக இலங்கை தன்னை உருவமைக்க நினைக்கிற சூழலில் ஒரு பெரிய அடி சமீபத்தில் இலங்கைக்கு விழுந்திருக்கிறது. தமிழர்களைச் சித்திரவதை செய்து வருகிற இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் என்று அழைக்கப்படும் வியாபார ஒப்பந்தம் மூலம் இந்தப் பேரிடி விழுந்துள்ளது. அதாவது 2005-ம் ஆண்டிலிருந்து சுங்கவரி இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை, துணிகளை ஏற்றுமதி செய்து வந்தது. சுமார் ஒரு லட்சம் இலங்கை மக்கள் ஈடுபட்டிருக்கும் இந்த துணி ஏற்றுமதியில் சுமார் ஆயிரம் மில்லியன் யூரோ அளவு வியாபாரம் நடக்கிறது. இலங்கையின் கைகளில் தமிழ் மக்களின் ரத்தம் தோய்ந்திருப்பதால் இந்த வியாபார உடன்படிக்கையைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

இதற்காக ஐ.நா.வின் மக்கள் உரிமைக் கமிஷனர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு ஓர் உண்மையறியும் குழுவை நியமித்தால் போதும் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கு உடன்பட இலங்கை மறுக்கிறது. இந்தியா இலங்கையை அது எது செய்தாலும் ஆதரிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறதுபோலும்.

அதாவது ஐ.எம்.எப். நிறுவனம் 2.6 பில்லியன் டாலர் பணத்தைக் கொடுக்காவிடில் இந்தியா அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இச்செய்தி ஓர் ஆங்கில நாளிதழில் (அக்.22. 2009) வந்துள்ளது. இலங்கையின் துணை நிதியமைச்சர் சரத் அமுனுகாமா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இச்செய்தியை உறுதியும் செய்திருக்கிறார்.

இப்போது நமக்குத் தெரிகிறது, நமது இந்தியா ஒரு பணக்கார நாடு என்று. நம் அரசு பணத்தில் மிதக்கிறது என்று. நம் நாட்டில் ஏழை விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்வதில்லை என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறது.

இனி தமிழர்களை வதைக்காதே என்று எங்கோ இருக்கிற வெள்ளைக்கார ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக்கூட வியாபாரத் தடையை ஏற்படுத்த முடியாது. பணக்கார இந்தியா இருக்கவே இருக்கிறது, பண உதவி செய்ய!

இலங்கை அரசு இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. முள்கம்பிவேலி முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்ட செயல் இலங்கைக்கு ஏற்படுத்திய அபகீர்த்தியைப் போக்க ராஜபட்ச அவருடைய தமிழக நண்பருக்குக் கடிதம் எழுதித் தீர்த்துக் கொண்டார். தமிழக நண்பர், பத்துப் பேர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஐரோப்பியர்களின் கவனத்தைச் சின்னாபின்னப்படுத்தியுள்ளனர். நாங்களே குறை சொல்லாதபோது ஐரோப்பியனே உனக்கென்ன கவலை?

மக்கள் உரிமை, "ஜீனோûஸட்' என்னும் இனப்படுகொலை, தமிழ் மக்களின் உரிமை என்பதெல்லாம் ஐரோப்பியர்கள் நேரம் போகாததால் கண்டுபிடித்த விஷயங்கள்!

நெஞ்சு பொறுக்குதில்லையே...!

(கட்டுரையாளர்:தமிழவன்
போலந்து நாட்டு வார்ஸô பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்).
நன்றி : தினமணி


தலையங்கம்:இதுவல்ல கூட்டணி தர்மம்!

எந்த ஒரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் யார் ஆட்சியமைப்பது, எப்படி ஆட்சி அமைப்பது என்கிற குழப்பம் ஏற்படுவதும், ஓர் ஆட்சி பதவி ஏற்பதில் தாமதம் ஏற்படுவதும் ஏற்புடையது. ஆனால், தேர்தலுக்கு முன்பு அமைந்த கூட்டணியாகக்கூட அல்ல, கடந்த பத்து ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகும், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு இன்னும் பதவி ஏற்காமல் இருப்பதை நினைத்து ஆச்சரியப்படுவதா இல்லை இது என்ன கூட்டணி என்று எள்ளி நகையாடுவதா என்று தெரியவில்லை.

கடந்த 2004 சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இதே கூட்டணி ஒரு விசித்திரமான முடிவை எதிர்கொள்ள நேர்ந்தது. அதிக இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 69 இடங்களிலும், அதைவிடக் குறைந்த இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 70 இடங்களிலும் வெற்றி பெற்றபோது, நியாயமாக முதல்வர் பதவியைப் பெற்றிருக்க வேண்டிய தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் பதவியுடன் திருப்தி அடைந்து கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியது.

இன்னும் சற்றுப் பின்னோக்கிச் சென்று 1999 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், தேசியவாத காங்கிரஸ், தனது தாய்க் கட்சியுடனான மனமாச்சரியங்களை மறந்துவிட்டு, மதச்சார்பின்மை என்கிற ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் சிவசேனையுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்திருந்தால், கடந்த பத்து ஆண்டுகள் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பற்றி கனவே கண்டிருக்க முடியாது.

1999-ல் ஏறத்தாழ சமீபத்திய சட்டப்பேரவை முடிவுகளைப் போலத்தான் முடிவுகள் அமைந்திருந்தன. அப்போது, துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதுடன், உள்துறை, நிதி மற்றும் மின்சாரம் ஆகிய முக்கிய துறைகளும் அந்தக் கட்சிக்குத் தரப்பட்டது. கடந்த 2004 தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைத்தபோதும் அதே நிலைமைதான் தொடர்ந்தது.

2009 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி வெளிவந்தபோது, காங்கிரஸ் கட்சியின் பலம் 82 ஆக உயர்ந்து, தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இதுதான் தருணம் என்று காங்கிரஸ் தனது "பெரிய அண்ணன்' தோரணையைக் காட்ட முற்பட்டிருப்பதுதான் பத்து நாள்கள் ஆகியும், தனிப்பெரும்பான்மை உறுதி செய்யப்பட்ட பிறகும் மகாராஷ்டிரத்தில் ஓர் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறியாகத் தொடர்கிறது.

தேசியவாத காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. 1999-ல் இருந்த அதே நிலைமை ஏறத்தாழ இப்போதும் நிலவுவதால், தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அது. உதவி முதல்வர் பதவியுடன் உள்துறைப் பொறுப்பும் எந்தக் காரணம் கொண்டும் பேரம் பேசப்படக்கூடாது என்பதுதான் அந்தக் கட்சியின் தரப்பு வாதம்.

ஆனால், காங்கிரஸ் தரப்பு, இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசியவாத காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்துவது என்பதில்தான் குறியாக இருப்பதாகத் தெரிகிறது. சிவசேனை மற்றும் பாரதிய ஜனதாவுடன் எந்தக் காரணம் கொண்டும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்கிற தைரியம் காங்கிரஸ் தரப்புக்கு. மேலும், அடிப்படையில் மகாராஷ்டிரத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலோர், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவாரின் தலைமையை ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பவர்கள்.

தனது எதிரிகள் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதும், காங்கிரஸ் மேலிடமே தன்னை வேறு வழியில்லாமல்தான் சகித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அரசியல் சாணக்கியரான சரத்பவாருக்குத் தெரியாமலில்லை. அதனால்தான், அவர் எந்தவித பேச்சுவார்த்தையிலும் நேரிடையாகக் கலந்துகொள்ளாமல் தனது நம்பிக்கைக்குரிய சீடர்கள் மூலம் காயை நகர்த்தி வருகிறார்போலும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சி விடுத்திருக்கும் இன்னொரு அஸ்திரம், உள்துறையை இரண்டாகப் பிரிப்பது என்பதும், 2004-ல் முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அந்தக் கட்சிக்குக் காங்கிரஸ் அளித்த சுற்றுச்சூழல், தொழிலாளர் நலம் போன்ற துறைகளைத் திரும்பிப் பெறுவது என்பதும். தேசியவாத காங்கிரûஸ எவ்வளவு விரைவில் காங்கிரஸýடன் இணைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இணைத்துவிட வேண்டும் என்பதும் காங்கிரஸ் கட்சியின் திட்டம்.

முதல்வர் உள்பட, மகாராஷ்டிர அமைச்சரவையின் அதிகபட்ச அளவு 43 அமைச்சர்களாகத்தான் இருக்க முடியும். அதனால் தேசியவாத காங்கிரஸின் கோரிக்கை 21:21 என்ற விகிதத்தில் அமைச்சரவையைப் பிரித்துக் கொண்டு, 43-வது இடம் முதல்வருக்கு ஒதுக்குவது என்பதாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, 23 : 20 என்ற விகிதத்தில் அமைச்சரவை அமைவதுடன் தனக்கு உள்துறையும் கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. விளைவு? முடிவுகள் வெளியாகிப் பத்து நாள்களாகியும் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி தொடர்கிறது.

எந்தவித சமரசமும் ஏற்படாத நிலையில், இனியும் பதவி ஏற்றுக்கொள்ளாமல் போனால் நகைப்புக்கு இடமாகிவிடும் என்பதால் முதல்வரும், துணை முதல்வரும் மட்டும் இன்று பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். அமைச்சரவை பற்றிய முடிவுகள் இன்னும் எத்தனை நாள்கள் இழுத்தடிக்குமோ யாருக்குத் தெரியும்?

சரத்பவாரின் மருமகன் அஜித்பவார் ஏற்கெனவே அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சுமார் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். "பெரிய அண்ணன்' போக்கில் காங்கிரஸ் தொடர்ந்து நடந்தால், தேவ கௌடா பாணியில் சரத்பவாரும் அஜீத்பவாரை ஒரு குமாரசாமி ஆக்கிவிடாமல் இருக்க வேண்டும்.
நன்றி : தினமணி

100 சிசி பைக் உற்பத்தி அதிகரிக்க பஜாஜ் முடிவு

இந்தியாவில், என்ட்ரி லெவல் பைக் என்றால், 100 சிசி பைக்கை தான் குறிப்பிடும். இந்த வகை பைக் விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது ஹீரோ ஹோண்டா நிறுவனம் தான். சில ஆண்டுகள் வரை, இந்த வகை பைக் விற்பனையில் அக்கறை காட்டாது இருந்த, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கடந்த ஜூலை மாதம், 100 சிசி திறன் கொண்ட டிஸ்கவர் டி.டி.எஸ்., எஸ்.ஐ., பைக்கை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.40 ஆயிரம் என்றும் அறிவிக்கப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

எதிர்பார்க்காத அளவுக்கு, இந்தியாவில் 100 சிசி பைக் விற்பனை ஜூலை செப்டம்பர் காலத்தில் 38.90 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, தனது 100 சிசி பைக் உற்பத்தியை அதிகரிக்க செய்ய, முடிவு செய்துள்ளது. தற்போது மாதத்துக்கு 85 ஆயிரம் பைக்குகள் என்ற அளவுக்கு உற்பத்தி அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், மாதத்துக்கு 2.6 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்யப்படும். அடுத்த சில மாதங்களில் 100 சிசி பைக் சந்தையில் காணப்படும் நிலவரத்தை கருத்தில் கொண்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடிவு செய்யலாம் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.
நன்றி : தினமலர்