அரிசி இறக்குமதி செய்ய, நீண்டகா லத்திற்குப் பின்னர் மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் உயிர்நாடித் தொழில் விவசாயம். அதிலும், அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக உள்ள நிலையில் இத்தகைய இறக்குமதிக்கான அனுமதி நாட்டில் விவசாயம் தேய்ந்து வருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் (2009, ஜூலை 24-ம் தேதி) மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்படி, இந்தியாவின் அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் பயிரீடு 1 கோடியே 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.
தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது. மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. ஆனால், இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆம், காவிரிப் படுகைப் பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன. இதனால், வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.
2005}06-ம் ஆண்டு தகவல்படி அரிசி உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் 1,68,435 ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது என்று தமிழக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது. (நாகை மாவட்டம் இரண்டாமிடத்திலும், தஞ்சை மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.) நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிற நிலையில், தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.
செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும், இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.
குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம், கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது. 1974-ல் தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன. ஆனால், தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.
மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம். இதனால் ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால், தண்ணீர் இல்லாத நிலையில் - வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் - விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதனால் விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.
தமிழகத்தில் 2004}2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61,46,044 டன்கள் ஆகும். ஆனால், 2005}06-ல் 61,16,145 டன்கள் தான். இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.
கிராமப்புற வங்கிகள், விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட, வர்த்தக வங்கிகள் தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.
இந்நிலை மாறி விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.
இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும். கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.
கட்டுரையாளர் : மணிஷ்
நன்றி : தினமணி
Saturday, December 26, 2009
ஐந்தில் மகிழாதது...
தமிழ்நாட்டில் செயல்வழிக் கல்வி தொடங்கப்பட்டபோது சில ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டாலும், "தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தை மாற்றி அமையுங்கள், வீட்டுப்பாடங்களை ஒழியுங்கள்' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்திய சென் இப்போது கூறியுள்ள கருத்தைப் பார்க்கும்போது, செயல்வழிக் கல்வி நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அமார்த்திய சென் ஏதோ போகிற போக்கில் இந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போகவில்லை. அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய கிழக்கு அறக்கட்டளை (இந்தியா) என்ற அமைப்பு, மேற்கு வங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை 2001-02ம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துகொண்டு தொடர்ச்சியாக கண்காணித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையை வைத்துதான் அவர் கூறியிருக்கிறார்.
தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்யும்படி சொல்லும்போது, அக்குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்துக்கு உரித்தான விளையாட்டு, மகிழ்ச்சிகளை இழந்துவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, சமூகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சேர்ந்துகொள்கின்றன. வசதி படைத்தவர்களும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை தனிவகுப்புகளுக்கு (டியூஷன்) அனுப்புகின்றனர். இது அவர்களின் கல்வித் தரத்திலும் பிரதிபலிக்கிறது.
இந்த ஆய்வுகளின்படி, தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் சிறார்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 சதவீத குழந்தைகளால் எழுதப் படிக்க முடியவில்லை. முஸ்லிம் குழந்தைகளில் 27 சதவீதம் பேரும், பொதுப் பிரிவில் 8 சதவீத குழந்தைகளாலும் எழுதப் படிக்க முடியவில்லை. இதற்கு தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுகளுடன் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்வதும்தான் என்பதே இந்த ஆய்வின் வெளிப்பாடு.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்கும் முறையே வேறாக இருக்கிறது. குழந்தைகளுக்கு 5 வயதுவரை வகுப்புகளில்கூட எழுத பணிக்கப்படுவதில்லை. உரையாடல், விளையாடுதல் இவை மட்டுமே அவர்களின் வகுப்பறையாக இருக்கின்றன. குழந்தைகள் அங்கே குழந்தைகளாகவே இருக்கின்றனர். 5 வயதுக்குப் பிறகு, தொடக்கப் பள்ளி வகுப்புகளில் அறிவியல், மொழி ஆகியவற்றின் அடிப்படை, படித்தல், எழுதுதல், ஓவியம் போன்ற குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ற நுண்கலை அறிமுகம் என சொல்லித்தரப்படுகிறது. பிறகுதான் பாடதிட்டத்தை மிகவும் செறிவானதாக கனமானதாக மாற்றுகின்றனர். ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இல்லை.
நர்சரி பள்ளிகள் அறிமுகமாகாத நிலையில், இந்தியாவிலும் குழந்தைகள் 5 வயது வரை நன்றாக விளையாடினார்கள். வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டார்கள். பேசினார்கள், சொல்லிக்கொடுத்த வழிபாட்டு பாடல்களையும் கதைகளையும் திருப்பிச் சொன்னார்கள். பிறகுதான் அவர்கள் முதல் வகுப்பில் நேரிடையாக சேர்ந்து பயின்றார்கள். அப்போதும்கூட முதல் வகுப்பு செல்லும் குழந்தையுடன் ஒரு கரும்பலகையும், தமிழ் மொழிப் புத்தகம் ஒன்றும் கூட்டல் கழித்தலுக்கான வாய்ப்பாடு புத்தகமும் மட்டுமே கையில் இருந்தது. மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில அரிச்சுவடி கற்றுத்தரப்பட்டது.
இப்போதெல்லாம் பிரி-நர்சரி வகுப்புகள், கிரீச் என குழந்தைகள் வீட்டில் தங்கவே இல்லாத சூழல்களை இந்திய சமுதாயம் வரிந்து உருவாக்கிக் கொண்டுவிட்டது. நர்சரி குழந்தைகளை தங்கள் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஆங்கிலத்தை எழுதிப் பழக்குகிறார்கள். எண்களை ஆயிரம் வரை எழுதித் தள்ளுகிறார்கள். வீட்டுப் பாடங்களையும் செய்கிறார்கள். புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்கிறார்கள். தனிவகுப்புகளுக்கும் செல்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் அவர்களுக்கு விளையாட, குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எங்கே நேரம் இருக்க முடியும்!
ஆங்கிலேயர் காலத்தில் முதல் பாரம் முடித்தவர்கள்கூட எழுதுவது பேசுவது படிப்பது மூன்றையும் தவறில்லாமல் செய்ய முடிந்தபோது இன்றைய பிளஸ் 2 மாணவர்கூட தவறில்லாமல் தமிழைக்கூட எழுதவும் முடியாத நிலை உருவானதை நினைக்க வேண்டியிருக்கிறது.
தற்போது சமச்சீர் கல்விக்காக பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பாடத்திட்டங்கள், அமார்த்திய சென் குறிப்பிடும் வகையில், எளிமையானதாகவும் வீட்டுப்பாடங்களுக்குத் தேவை இல்லாத வகையிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக் கல்விக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு மனிதன் வளர்ந்த பிறகு அசைபோட குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாவிட்டால், அவன் சமூகக் குற்றங்கள் செய்யும் வாய்ப்புகள் நேரிடுவதோடு, உணர்வுபூர்வமான சிக்கல்களிலிருந்து மீள்வதில் பெரும் குழப்பத்தையும், இயலாமையையும் சந்திக்க நேர்கிறது என்பதுதான் உளவியல் கூறும் உண்மை.
"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் கனவின் குழந்தைகள்' என்பதற்காக, நம்முடைய நிறைவேறாத வாழ்க்கை லட்சியங்களை அவர்கள் மீது திணிப்பது நியாயமாகாது. ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழியை படிப்புக்காக மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.

Labels:
ஆசிரியர்,
தமிழகஅரசு,
தலையங்கம்,
தாய்மொழி,
மாணவர்
தமிழகம் பிரிக்கப்பட வேண்டுமா?
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதையடுத்து நாட்டின் பிற பகுதிகளிலும் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. வன்முறை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்திய அரசுக்கு இந்த மொழிதான் புரிகிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து புந்தேல்கண்ட், பஸ்சிமாஞ்சல் (மேற்கு உத்தரப் பிரதேசம்) மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இப்போது உ.பி.யின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலத்தை அமைப்பதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்துமாறு பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்கா தனிமாநிலம் அமைக்க வேண்டுமென்று பாஜகவும், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் கோரிக்கை எழுப்பியுள்ளன. இது 102 ஆண்டுகாலக் கோரிக்கையாம். எல்லைப் பகுதியின் காவலர்களாக இருக்கும் அவர்கள் உணர்வுரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் மேற்குவங்க மாநிலத்தின் மற்ற பகுதியிலிருந்து தனிமைப்பட்டுக் கிடக்கின்றனராம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா தனிமாநிலக் கோரிக்கையும் எழுந்துள்ளது. மகாராஷ்டிர பாஜகவின் இந்தக் கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கிறது. விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை எழுப்புபவர்கள் ஒருங்கிணைந்த மகாராஷ்டிரத்துக்காக உயிர் நீத்த 105 தியாகிகளின் கனவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அது கூறுகிறது.
இதேபோல போடோ மக்கள் முன்னணி உறுப்பினர் பிஸ்வமூர்த்தி, "போடோலேண்ட்' அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே கோரியுள்ளார். அசாம் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
பிகார் மாநிலத்தைப் பிரித்து, "மிதிலாஞ்சல்' மாநிலமும், குஜராத் மாநிலத்தைப் பிரித்து, "சௌராஷ்டிரா' மாநிலமும் அமைக்க வேண்டும்; உ.பி.யின் கிழக்குப் பகுதியையும் பிகாரின் சில பகுதிகளையும் பிரித்து "போஜ்புர்' மாநிலமும் அமைக்க வேண்டும் என இது தொடர்கிறது.
2000-ல் பிகாரிலிருந்து "ஜார்க்கண்ட்' மாநிலமும், உ.பி.யிலிருந்து "உத்தரகண்ட்' மாநிலமும், மத்தியப் பிரதேசத்திலிருந்து "சத்தீஸ்கர்' மாநிலமும் பிரிக்கப்பட்டன. இப்போது தெலங்கானா அமையுமானால் இது இந்தியாவின் 29-வது மாநிலமாகும்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய குரல் கேட்கிறது. தமிழகத்தை இரண்டாகப் பிரித்தால் நல்லது. சிறிய மாநிலமாக இருந்தால் வளர்ச்சியிருக்கும்; நிர்வாகமும் எளிதாக இருக்கும். ஆனால் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது பாமகவின் முன்னுரிமைக் கோரிக்கை அல்ல என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனை வேறு சிலரும் வரவேற்றுள்ளனர்.
ஆனால் தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ""அப்படிப்பட்ட கருத்து திமுகவிலும் இல்லை; தமிழ்நாட்டு மக்களுக்கும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது போன்ற யோசனைகள் மிகவும் ஆபத்தானவை மட்டுமல்ல, அபத்தமானவை. இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தொடங்கும்போதே, "ஏன் இதனை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்றாகப் பிரிக்கக் கூடாதா?' என்ற அடுத்த கேள்வியும் எழும். அத்துடன் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமும் நீர்த்துப் போகும்.
அந்தக் காலத்தில் தமிழகம் பல நாடுகளாக இருந்தது என்பது உண்மைதான். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பவை முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டன. அத்துடன் பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கி.மு. 300 முதல் 600-ம் ஆண்டு வரை அரசாட்சி செய்திருக்கின்றனர். பல்லவர்களை வென்று காஞ்சியைக் கைப்பற்றி சாளுக்கியர்களும் சிலகாலம் ஆட்சி செய்துள்ளனர்.
இதுதவிர, தொண்டை நாடு, கொங்கு நாடுகளும் இருந்தன. மூவேந்தருக்குக் கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் குன்றுதோறும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு பல சிற்றரசர்கள் தனியாகவே ஆண்டுவந்தனர். மேலும் தமிழ்நாட்டில் பல ஊர்களே நாடு என்ற பெயரில் வழங்கின. ஒரத்த நாடு, பாப்பா நாடு, பைங்கா நாடு, வள நாடு எனக் கூறலாம். இந்த ஊர்களே ஒரு நாடாக பல பண்ணையார்களால் ஆளப்பட்டுள்ளன. இன்றும் அவ்வூர்களில் அவர்களின் வம்சாவளியினர் இருக்கின்றனர். இவையெல்லாம் கடந்த கால வரலாறு.
நாடு விடுதலை பெற்றதும், மாநில வரையறை பற்றிய கேள்வி எழுந்தது. பிரதமர் நேருவின் தட்சிணப் பிரதேசத் திட்டம் ஏற்கப்படாததால் மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து அமைப்பதற்காக "மாநிலப் புனரமைப்புக் குழு' நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரை செயல்படுத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணம் என்பது திராவிட நாடாக-பல மொழிகள் பேசும் மாநிலமாக இருந்தது. 1953-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் முதலில் பிரிந்தது. 1956-ல் மலபார் மாவட்டம் பிரிந்து கேரளத்தில் இணைந்தது. தென் கன்னட மாவட்டம் பிரிக்கப்பட்டு கர்நாடகத்துடன் சேர்ந்தது. மீதம் இருந்ததே தமிழ்நாடானது.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கட மலையும், தெற்கு எல்லையாக குமரியாறும், கிழக்கும், மேற்கும் கடலாகவும் இருந்தன என்று தமிழக வரலாறு கூறுகிறது. இதனையே, "வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து' என பண்டைய புலவர்களும் பாடியுள்ளனர்.
ஆனால் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தின் பல பகுதிகள் பறிபோய்விட்டன. தமிழகத்தின் வட எல்லையான வேங்கடம், சித்தூர் முதலிய பகுதிகள் ஆந்திரத்துக்கும், தேவிகுளம், பீர்மேடு முதலிய தமிழ்ப்பகுதிகள் கேரளத்துக்கும், கோலார் தங்கவயல் முதலிய தமிழ்நிலம் கர் நாடகத்துக்கும் எடுத்துத் தரப்பட்டபோது இதுபற்றி இங்கே யாரும் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டில் இருந்த பெரிய கட்சிகள் எல்லாம் கண்டும், காணாமல் இருந்தபோது, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யும், அவர் கட்சியினருமே குரல் கொடுத்தனர். எல்லைப் போராட்டங்களை எடுத்து நடத்தினர். வடஎல்லை பாதுகாப்புக் குழுவின் செயலாளராக இருந்த கே. விநாயகம், சித்தூர் மாவட்டத்தில் வாழ்ந்த 4 லட்சம் தமிழர்களுக்காகப் பாடுபட்ட மங்கலக்கிழார் இவர்களைத் தமிழக வரலாறு மறக்காது.
எனவே இழந்த மண்ணை மீட்காவிட்டாலும், இருக்கும் மண்ணையாவது இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். மாநிலத்தைக் கூறுபோடுவதைவிட அதன் முன்னேற்றத்துக்காக உழைப்பதே பெருமையாகும்.
தமிழ்நாட்டில் நிர்வாகம் எளிதாக இருக்க வேண்டுமானால் அரசுத் துறைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் தலைநகரிலேயே தேக்கி வைப்பது கடந்த காலங்களில் தேவையாக இருக்கலாம்; இனித் தேவை இல்லை. நாட்டின் கடைகோடியில் இருக்கும் ஒருவர் எல்லாவற்றுக்கும் அரசுத்துறையை நாடி சென்னைக்கு மூட்டை கட்டிக் கொண்டு வர வேண்டும் என்பது என்ன நியாயம்?
தொழில் துறையை கோவை அல்லது திருப்பூருக்கும், வேளாண்மைத்துறையை தஞ்சாவூர் அல்லது திருச்சிக்கும் மாற்றவேண்டும். இது தவிர மதுரை, நெல்லை, சேலம் முதலிய புறநகரங்களுக்கும் பிற துறைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிவது ஆபத்தாகும்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் தலைநகர் மாநிலத்தின் மையப்பகுதியாகிய திருச்சியில் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். ஆனால் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ள விடாமல் அதிகாரிகளே தடுத்து விட்டனர் என்று அப்போது கூறப்பட்டது. தலைநகரை மாற்றுவதற்குப் பதிலாகத் துறைகளை மாற்றுவது எளிதாகும்.
இன்றைய அறிவியல் உலகில் அமைச்சர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியும். "விடியோ கான்பரன்ஸ்' முறை இப்போதே செயல்பாட்டில் இருக்கிறது; மனம் வைத்தால் மார்க்கமா இல்லை?
அழகிய தேன்கூட்டைக் கல்வீசிக் கலைப்பதா? அவை கொட்ட வரும்போது எட்டி எட்டி ஓடுவதா? தெலங்கானா பிரச்னையைத் தொட்டுவிட்டு மத்திய அரசு செய்வது அறியாமல் திகைத்து நிற்பது போதாதா? சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுக்க வேண்டாம்.
கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்

கட்டுரை,
தமிழகஅரசு,
தெலங்கானா,
மத்தியஅரசு
Subscribe to:
Posts (Atom)