Friday, January 8, 2010

வாய்ச்சொல் பலன் தராது...

அரசுப் பேருந்து ஒட்டுநர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டக்கூடாது என்ற தடை பாராட்டுக்குரியது. தமிழகப் போக்குவரத்துத் துறையின் இந்த உத்தரவை, பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களும் வரவேற்றுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிச்சென்றதே 9 குழந்தைகள் இறந்த விபத்துக்குக் காரணம் என்பதால், அதன் எதிரொலியாக இந்தத் தடை அறிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், இந்தத் தடை, காலத்தின் கட்டாயம். மிகமிக அவசியமானதுதான்.
பணியின்போது ஓர் ஓட்டுநர் தன் கைவசம் செல்போன் வைத்திருக்கக் கூடாது என்ற விதிமுறையால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியாது. கடுமையான தண்டனைகள் என்பது வெறுமனே ஒரு வார கால பணியிடை நீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் என்பதாக இருப்பது மட்டும் பணியில் செல்போன் பேசும் பழக்கத்தைத் தடுத்துவிடாது. பேருந்தில் நம்மை நம்பித்தான் சுமார் ஐம்பது பயணிகள் அமர்ந்து வருகிறார்கள், அவர்கள் வாழ்க்கை நம் கையில் இருக்கிறது என்ற அச்சமும் பொறுப்புணர்வும் இல்லாவிட்டால், தம்மிடம் செல்போன் இல்லாதபோதிலும்கூட, நடத்துநர் அல்லது உடன் வரும் சகஊழியர் வைத்திருக்கும் செல்போனைப் பயன்படுத்தவே முற்படுவார்கள்.

மேலும், விபத்து என்பது தனிப்பட்ட ஒரு வாகனம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருப்பதில்லை. பெரும்பாலும் இரண்டு வாகனங்கள் மோதிக்கொள்வதாகவே இருக்கின்றன. அரசுப் பேருந்து ஓட்டுநர் மட்டும் செல்போன் பேசாமல் வண்டி ஓட்டினாலும், எதிரில் நடந்து வருபவர் அல்லது வாகனம் ஓட்டி வருபவர் செல்போன் பேசியபடி வந்தாலும் விபத்து நேரிடவே செய்யும். தனியார் போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களும் இந்த விதிமுறையைச் சரியாகப் பின்பற்றாவிட்டால், இதை அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு மட்டும் அமல்படுத்துவதால் முழுப்பயன் கிடைக்காது.

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது என்பதும் அவ்வாறு பேசுவது போக்குவரத்து விதியை மீறும் செயல் என்பதும் தற்போதும் நடைமுறையில் உள்ள விதிமுறைதான். இருப்பினும் பொதுவாக வாகன ஓட்டுநர்கள் ஒருவர்கூட இதைப் பின்பற்றுவதில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கூட, காதுக்கும் தோளுக்கும் இடையில் செல்போனை வைத்துக்கொண்டு கழுத்து ஒடியப் பேசிச் செல்வதை அன்றாட வாழ்க்கையில் நூறு மீட்டருக்கு ஒரு நபரைக் காண முடியும் என்பதாகவே இன்றைய தமிழகத்தின் போக்குவரத்து நிலைமை இருக்கிறது. இதைப் போக்குவரத்துப் போலீஸôரால் ஏன் தடுக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்தில் இதுநாள் வரை செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிச் சென்றதற்காக எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது?

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசியபடி செல்லும் மிக ஆபத்தான கொடிய வழக்கம் ஒழிய வேண்டுமென்றால், அதைக் காவல்துறையால் மட்டுமே செய்ய முடியும். இதுபோன்ற உயிர்காக்கும் உயர் நடவடிக்கை வேறு எதுவாகவும் இருந்துவிட முடியாது. விபத்து நேர்வுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றான இச்செயலையும் மிகஆபத்தானதாக அறிவித்து ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை மட்டுமே இந்தப் பழக்கத்தை ஒழிக்க உதவும்.

ஹெல்மட் விவகாரத்தில் அரசு இரண்டும்கெட்ட நிலைப்பாட்டை மேற்கொண்டதைப் போல, செல்போன் விவகாரத்திலும் நடந்துகொள்ளக்கூடாது. ஹெல்மட் அணியாவிட்டால் அதை அணியாதவருக்கு மட்டுமே பாதிப்பு. செல்போன் அப்படியல்ல. விபத்தில் சாகிறவர் அல்லது காயமடைபவர் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய நபர் மட்டுமல்ல. அப்பாவியாக எதிரில் வந்தவரும்தான். சக மனிதனின் உயிர் பற்றிய அக்கறை இல்லாமல் தன் கவனத்தைச் சிதறவிட்டு வாகனம் ஓட்டுபவரின் உரிமத்தை ரத்து செய்வதைத் தவிர வேறு எந்தவிதமான தண்டனையும் இந்தப் பழக்கத்தை நீக்கிவிடாது.

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது அல்லது ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக்கொண்டு வாகனம் ஓட்டியதால்தான் விபத்து நேரிட்டது என்பது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படுமெனில் விபத்துக் காப்பீடுகள் பெற இயலாது என்பதையும் போக்குவரத்து விதிகளில் சேர்க்க வேண்டும்.

ஒரு நெடுஞ்சாலையில், அல்லது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்கும் நாற்கரச் சாலையில், பழுதான வாகனங்களுக்கு கண்மறைப்பை ஏற்படுத்தாமல் எப்படி, எந்த இடத்தில் நிறுத்துவது, பழுதான விவரத்தை பலநூறு மீட்டர் தொலைவுக்கு முன்பே அறிவிப்பு செய்து மற்ற வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவுவது எப்படி, இரவு நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்கிற அடிப்படை விஷயங்கள்கூட இன்றைய ஓட்டுநர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால்தான் வாரத்துக்கு இரண்டு சம்பவங்களில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பின்னால் வந்த வாகனம் மோதி மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாகனங்களை ஆங்காங்கே அப்படியே நிறுத்திவிடும் ஓட்டுநர் மனநிலையைப் போக்க முற்படாத, ஹைவேஸ் பேட்ரோலிங் எதற்காக?

காவல்துறை இவ்விஷயத்தில் விதிமுறையைக் கடுமையாக அமல்படுத்துவது ஒருபுறம் இருக்க, வட்டாரப் போக்குவரத்துக் கழகத்துக்கும் மிகப்பெரும் பொறுப்பு உள்ளது. ஓட்டுநர் உரிமம் அளிக்கும் முன்பாக, ஒரு விபத்து நடந்தால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன, நாட்டின் பொருளாதாரத்தை அது எப்படிப் பாதிக்கிறது, ஊனமடைபவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது குறித்து ஒரு செயல்விளக்க வகுப்புக்கூட நடத்தாமல், கண்மூடித்தனமாக ஓட்டுநர் உரிமங்களை, டிரைவிங் ஸ்கூல் சொல்கிறபடி, அள்ளி வழங்கும் முறை தவிர்க்கப்படாதவரை சாலை விபத்துகள் குறைய வாய்ப்பில்லை. சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தாமல் வெறுமனே ஓட்டுநர் உரிமத்தை மட்டுமே வழங்குவதால் என்ன பயன்?

நன்றி : தினமணி

அரசு அலுவலகங்களில் வர்த்தக இணையத்தளத்திற்கு தடை

மகாராஷ்டிரா அரசு அலுவலகங்களில் வர்த்தக இணையத்தளத்திற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் பலர், வேலை நேரத்தின் போது ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக மனிகன்ட்ரோல் டாட் காம் மற்றும் பிஎஸ்இ இன்டியா டாட் காம் இணையத் தளத்தை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் படி, இனிமேல் மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில், அலுவலர்கள் யாரும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.
நன்றி : தினமலர்


கர்நாடகாவில் 30 ஆயிரம் கோடி மதிப்பில் இரும்பு ஆலை: மித்தல் திட்டம்

கர்நாடகாவில் 30 ஆயிரம் கோடி மதிப்பில் இரும்பு ஆலை அமைக்க தொழிலதிபர் லட்சுமி மித்தல் திட்டமிட்டுள்ளார். இதற்காக, அம்மாநில முதல்வர் எடியூரப்பாவை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். உலகிலேயே மிக அதிக அளவிலான இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையைக் கொண்டுள்ள ஆர்சிலார் மித்தல் நிறுவனம் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கு பல்வேறு மாநிலங்களை பரிசீலித்து வருகிறது. இரும்புத் தாது அதிகம் கிடைக்கும் பகுதியில் தொழிற்சாலையை தொடங்க இந்நிறுவனம் ‌திட்டமிட்டுள்ளது. இதனால், கர்நாடக மாநிலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இங்கு தொடங்க உத்தேசித்துள்ள ஆலை ஆண்டுக்கு 60 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். உருக்கு ஆலையுடன் 750 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையத்தையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 ஆயிரம் ஏக்கர் தேவைப் படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்