Monday, July 20, 2009

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்!

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் மேல் முறையீட்டு மனுக்கள் பெறப்படுகின்றன என்று மாநிலத் தகவல் ஆணையர் ஆர். பெருமாள்சாமி தெரிவித்திருக்கிறார்.
இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மேல்முறையீட்டு மனுக்கள் மாநிலத் தகவல் ஆணையத்துக்கு வருகின்றன என்றால், அதற்கு என்ன பொருள்? தகவல் பெறும் உரிமை குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்பதாக நினைக்க வைத்தாலும், தகவல் மறுக்கப்படுவதால்தான் அதிக அளவில் மாநிலத் தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்கிறார்கள் என்பதுதானே உண்மையான பொருள்! அதாவது, தகவல் தர மறுப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்பதுதான் இதன் தன்னிலை விளக்கம்!
தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்கள் வரையிலும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. ஒளிவு மறைவு இல்லாமல் அதிகாரிகள் பதில் கூறினார்கள். இத்தகைய பதில்கள் அரசு நிர்வாகத்தின் கோளாறுகளை அம்பலப்படுத்தும் வலுவான சாட்சியங்களாக மாறுவதைக் கண்டவுடன், அரசாங்கமே "சில துறைகள் பதில் தர வேண்டியதில்லை' என்று சட்டப்படி விலக்கு அளித்தது. அரசின் இந்த தவறான முன்னுதாரணம், அரசு அதிகாரிகளுக்கு தெம்பைக் கொடுத்துவிட்டது. அவர்களும் பதில் அளிக்காமல் இருக்கும் வழிகளைக் கண்டடைந்துவிட்டனர்.
அண்மையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் "ஒரு பள்ளிச் சுற்றுச் சுவர் அமைக்கும் பணிக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?' என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேள்வி கேட்டார். "அந்தப் பணி அனுமதிக்கப்பட்டு, இத்தனை லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டது' என்று பதிலும் கிடைத்தது. அந்த பதில் கிடைத்தபிறகுதான் சுற்றுச்சுவர் எழுப்பாமலேயே பணம் கரைந்த ஊழலை அம்பலப்படுத்தவே இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார் என்பது அதிகாரிகளுக்குப் புரிந்தது. அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்துவிட்டனர். சக ஊழியர் பாதிக்கப்படுகிறார்; நாளை நமக்கும் இதே கதி ஏற்படலாம் என்ற புரிதலுடன் பதில் தர மறுக்கின்றனர் அரசு அதிகாரிகள்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்குள் பதில் தராவிட்டால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம். அபராதம் விதிக்கலாம். பதில் அளிக்காமல் இருந்தால்தானே இந்த பிரச்னை!. அதனால் பதில் அளித்துவிடுகிறார்கள். என்ன பதில் தெரியுமா? ""தாங்கள் கேட்டுள்ள கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 2 (ஊ)-ல் குறிப்பிட்ட தகவல் என்ற வரையறையில் வராது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது''.
இதற்காக அதே துறையில் மீண்டும் இரண்டாவது முறை முறையீடு செய்தாலும் இதே பதில்தான். ஆகவே மாநிலத் தகவல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். ஆகவேதான், மாநிலத் தகவல் ஆணையத்துக்கு மேல்முறையீட்டு மனுக்கள் குவிகின்றன. கடந்த ஜூன் மாதம் வரை ஒரு லட்சத்து பதினோராயிரம் மனுக்கள் பெறப்பட்டு அதில் 8341 மனுக்கள் மட்டுமே விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான மேல்முறையீட்டு மனுக்கள் வரும் என்றால், அவற்றுக்கு நியாயம் கிடைக்கச் செய்வது மிகமிக அரிது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனைக் கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம். அவற்றில் சில கேள்விகள் வேண்டுமானால் "தகவல்' என்ற வரையறைக்குள் வராமல் இருக்கலாம். ஆனால் எல்லா கேள்விகளையும் ஒட்டுமொத்தமாக மறுப்பது எந்தவகையில் நியாயம்? ஆனால் அப்படித்தான் செய்கிறார்கள்.
"ஓர் ஓய்வூதியதாரர் இறந்த மாதத்தில், அவர் உயிரோடு இருந்த நாள்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமா, இல்லையா?' என்ற மிகச் சாதாரண கேள்விக்கு, தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீடு அலுவலர் இருவரும் சொல்லி வைத்தாற்போல, பிரிவு 2 (ஊ)-வை மேற்கோள்காட்டி பதில் தர மறுப்பதைக் காணும்போது, அதிகாரிகள் திட்டமிட்டுத் தெளிவாக செயல்படுகிறார்கள் என்பது புரிகிறது.
மாநில அரசு அதிகாரிகள்தான் இப்படியென்றால், பொதுத்துறை நிறுவனமான வங்கிகள்கூட இதே பாணியைக் கையாளுகின்றன. "எந்தெந்த வைப்பு நிதிக்காக (வருமான வரிப் பிடித்தம் தவிர்க்க) படிவம்-15ஜி தரப்பட்டது என ரசீது அல்லது அத்தாட்சியை வங்கி தன் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமா, இல்லையா?' என்பது ஒரு சாதாரண கேள்வி. தரவேண்டும், வேண்டியதில்லை என்ற எந்த பதிலையும் தெரிவிக்கலாம். ஆனால் அவர்களும் கிளிப்பிள்ளை போல சொல்கிறார்கள்- "தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 2 (ஊ)-ல் குறிப்பிட்டுள்ள....'
முள்ளை முள்ளால் எடு, வைரத்தை வைரத்தால் அறு, சட்டத்தை சட்டத்தால் நெரி- அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
நன்றி : தினமணி

இடைத்தேர்தல் புறக்கணிப்பு : ஜெ., அறிவிப்பு

தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. ஊட்டியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி : தினமலர்


ஒரே கட்டுப்பாட்டு அறை மூலம் தனலட்சுமி ஏ.டி.எம்., கண்காணிப்பு

தனலட்சுமி வங்கியின் மத்திய கட்டுப்பாட்டு அறை கேமரா மூலம், அனைத்து ஏ.டி.எம்., வங்கிகளின் நடவடிக்கைளும் கண்காணிக்கப் பட உள்ளன. கேரளாவில் செயல்படும் தனலட்சுமி வங்கி, தனது தானியங்கி வங்கி சேவையை (ஏ.டி.எம்.,) மேம்படுத்தி, அதன்மூலம் 'தனித்துவ மாதிரி அயல் ஆதாரத் தீர்வையை' இந்தியாவிலேயே முதன் முறையாக அமல்படுத்த உள்ளது. இதற்காக, ஜெர்மனியின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கம்பெனி 'வின்கோர் நிக்ஸ்டாரின்' அங்கமான ஏ.ஜி.எஸ்., என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கியின் மூத்த அதிகாரியான ஆனந்த் குப்தா கூறுகையில், 'இப்புதிய திட்டத்தின் கீழ், வங்கியின் மத்திய கட்டுப்பாட்டு அறையில் உள்ள கேமரா மூலம் அனைத்து ஏ.டி.எம்.,களின் நடவடிக்கைகளும் மேற்பார்வை செய்யப்படும். இதனால், அதிக பாதுகாப்புடன் கூடிய சுலபமான சேவை மக்களுக்கு கிடைக்கும்' என்றார். வங்கியின் அனைத்து கிளைகளிலும் பாதுகாப்பு கருதி, டிஜிட்டல் அறிவிப்பு இடம் பெற உள்ளது.
நன்றி : தினமலர்


பிளாஸ்டிக் பொருட்கள் விலை அபார உயர்வு: குடம் விலை இனி ரூ.35

கச்சாவிலை உயர்வு காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் விலை உயர்ந் துள்ளது. இதனால் குடம், பக்கெட், பிளாஸ்டிக் மக், பிளா ஸ்டிக் கப், பிளாஸ்டிக் பைகள் போன்றவை 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படும் போது உப பொருளாக வெளிவரும் நாப்தாவில் இருந்து தான் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் கிடைக்கின்றன. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும் போதெல்லாம், நாப்தாவின் விலையும் உயருகிறது. பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் விலையும் உயருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட குடம் தற்போது 35 ரூபாய்க் கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிளாஸ்டிக் பக்கெட் 40 ரூபாய்க் கும், 'மக்' என்ற கோப்பை ஏழு ரூபாயில் இருந்து 10 ரூபாய்க் கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், 10 பைசாவில் இருந்த ஒரு 'கேரி பேக்' தற்போது 20 பைசாவாகவும், பிளாஸ்டிக் டம்ளர் 10 பைசாவில் இருந்து 20 பைசாவாகவும் விலை உயர்ந்துள்ளது. தண்ணீர் பாட்டில் தயாரிக்க பயன்படுத்தப்படும் பெட் பாட்டில் மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், தண்ணீர் பாட்டில் தயாரிப்பதற்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்கும் நிறுவனங்கள் சத்தமின்றி அதிகபட்சம் இரண்டு ரூபாய் வரை ஒவ்வொரு தண்ணீர் பாட்டிலுக்கும் உயர்த்தி விட்டன.
தமிழகத்துக்கு மாதந்தோறும் ஒரு லட்சம் டன் மூலப்பொருள் தேவை. ஆனால், தற்போது 40 ஆயிரம் டன் மட்டுமே சப்ளையாகிறது. காரணம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுவும் ஒரு தனியார் நிறுவனம் தான் பெரிய அளவில் தயாரிக்கிறது. அந்தந்த மாநிலங் களை சேர்ந்தவர்கள், பக்கத்து மாநில நிறுவனங்களே அதிகளவில் மூலப் பொருட்களை வாங்கி 'ஸ்டாக்' வைத்து கொள்கின்றன. இதனால் தமிழகத்தின் தேவைக்கேற்ப மூலப் பொருட்கள் கிடைப்பது இல்லை. வெளிமாநில நிறுவனங்களுக்கு அருகிலேயே குறைவான விலைக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதால், அவர்களால் குறைந்த அடக்க விலையில் உற்பத்தி செய்ய முடிகிறது. ஆனால், பல வரிகளை செலுத்தி தான் வெளிமாநிலங்களில் இருந்து மூலப் பொருட்களை தமிழக உற்பத்தியாளர்கள் வாங்குகின்றனர். இதனால், வெளிமாநில பிளாஸ்டிக் நிறுவனங்களுடன் தமிழக உற்பத்தியாளர்களால் போட்டி போட முடிவதில்லை. வெளிமாநிலங்களில் இருந்து மாதந்தோறும் 50 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருட் கள் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிளாஸ் டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் சங்கரன் கூறியதாவது:பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற் சாலை தென்னிந்தியாவில் எங்குமே கிடையாது. மூலப் பொருட்கள் பிரச்னையால் தான் பிளாஸ்டிக் பொருட்களின் விலை உயருகிறது. மதுரையில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அழகிரி அறிவித்துள்ளார். இது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொழிற்சாலை வந்தால் பிரச்னை தீர்ந்து விடும். லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், வெளிமாநில நிறுவனங்களுடன் போட்டி போட முடியும். தமிழகத்தில் இருந்து வெளிமாநிங்களுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகும். இவ்வாறு சங்கரன் கூறினார்.
'மரங்களுக்கு பாதுகாப்பு': பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற குற்றச்சாட்டு பொதுவாக உள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பொருட்களால் அதிக நன்மையும் உள்ளதாக கூறுகின்றனர். கடந்த காலங்களில் இரும்பை பயன்படுத்தி கார்கள் தயாரிக்கப்பட்டன. இதனால், கார்கள் அதிக எடை கொண்டதாக இருந்தன. ஆனால், தற்போது கார் தயாரிப்பில் 30 சதவீதம் வரை பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதனால், கார்கள் எடை குறைவானதாகவும், அதிக மைலேஜ் தரக் கூடியதாகவும் இருக்கிறது. இதனால், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைகிறது. காற்றில் கார்பன்-டை-ஆக்சைடு கலப்பதும் பெரிய அளவில் தடுக்கப்படுகிறது. இமாச்சல பிரதேச ஆப்பிள்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப ஏழு கோடி மரப் பெட்டிகள் தேவைப்படும். ஆனால், தற்போது பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதால் மரங்கள் அழிக்கப் படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதே விஷயம் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலிலும் சுட்டிக் காட்டப்படுகிறது.
நன்றி : தினமலர்


'10 ரூபாய் நாணயத்தால் விற்பனை அதிகரிக்கும்'

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயத்தால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும், என பல்வேறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஐந்து ரூபாயை போலவே 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. அதிகம் புழங்க உள்ள இந்த 10 ரூபாய் நாணயத்தால் தங்கள் நிறுவன பொருட்கள் அதிகம் விற்பனையாகும், என இந்துஸ்தான் யூனி லீவர் உள்ளிட்ட பல்வேறு நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் கொடுத்தாலே சாக்லேட், குளிர்பானங்கள், ஷாம்பு பாக்கெட்கள், பிஸ்கட்கள், சில வகை சோப்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியும். பைசாக்கள் அதிகம் மதிப்பில்லாதவை என்ற காரணத்தால் இந்த பொருட்களை வாங்க மக்கள் தயங்குவதில்லை. ஆனால், பாக்கெட்டில் உள்ள ரூபாய் நோட்டை எடுத்து பொருட்களை வாங்க சிக்கனமான ஆசாமிகள் தயங்குவர். 10 ரூபாய் நோட்டு வடிவத்தில் இருந்ததால் அதை அதிகம் பயன்படுத்த மக்கள் தயங்கினர். ஆனால், தற்போது 10 ரூபாய் நாணயம் அதிகம் புழக்கத்துக்கு வந்து விட்டால், அதன் மதிப்பு பைசாவில் உள்ளதால் 10 ரூபாய்க்கு கிடைக்கும் பொருட்கள் அதிகம் விற்பனையாகும், என வர்த்தக நிறுவன வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 'இரண்டு ரூபாய் ஷாம்பு வேண்டும், ஒரு ரூபாய் சாக்லேட் வேண்டும்' என கேட்கும் வாடிக்கையாளர்கள் இனி, '10 ரூபாய் சோப்பு வேண்டும்' என ரூபாயின் மதிப்பை வைத்தே பொருட்களை அதிகம் வாங்குவர், என்கின்றனர் வர்த்தக வல்லுனர்கள்.
நன்றி : தினமலர்


'மகாராஜா'வை காப்பாற்ற அரசு அதிரடி தடை அமல்

'மகாராஜா'வை காப்பாற்றி, நிதி சிக்கலில் இருந்து மீட்க மத்திய அரசு போட்டது ஒரு அதிரடி தடை. 'அரசு அதிகாரிகள் யாரும் ஏர் இந்தியா தவிர மற்ற விமானங்களில் பறக்கக் கூடாது' என்பது தான் அது. ஏர் இந்தியா (மகாராஜா அதன் சின்னம்) நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதன் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட முடியாமல் தத்தளிக்கிறது. பைலட், இன்ஜினியர்கள் தவிர, நிர்வாக பணியாளர்களுக்கு சம்பளம் இல்லா ஐந்தாண்டு சிறப்பு விடுப்பு அளிக்கும் திட்டம் உட்பட பல சிக்கன திட்டங்களை நிறைவேற்றி நிறுவனத்தை காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றன.
ஏர் இந்தியா நிறுவனத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க மத்திய அரசும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பல நூறு கோடி நஷ்டத்தில் உள்ள ஏர் இந்தியா, முடங்கி விடாமல் தவிர்க்க நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது. அது மட்டுமின்றி, ஏர் இந்தியா போக்குவரத்து வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருக்க இன்னொரு வித்தியாசமான முடிவையும் அறிவித்துள்ளது. அரசு அதிகாரிகள், வேறு மாநிலங்களுக்கு சென்றாலும், வெளிநாடுகளுக்கு சென்றாலும், ஏர் இந்தியா விமானத்தில் தான் பயணிக்க வேண்டும். ஏர் இந்தியா விமானம் இல்லாத நகரங்களுக்கு செல்லும் போது, அருகே உள்ள நகரம் வரை ஏர் இந்தியாவில் பயணித்து, அங்கே உள்ளூர் விமானத்தை பிடித்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானம் போக முடியாத இடங்கள் இருந்தால், அங்கு தனியார் விமானத்தில் பயணிக்க வேண்டிய நிலை வந்தால், சிவில் விமானப்போக்குவரத்து துறை அனுமதியை பெற வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளது. அரசு செலவழிக்கும் பயணத்தில் மட்டுமல்ல, அரசு தரப்பில் உள்ள பல்வேறு அமைப்புகளில் இருந்தும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் அதிகாரிகள் பயணம் செய்யும் போது, இந்த புதிய விதிகள் பொருந்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்