Wednesday, November 5, 2008

சிங்கூரில் டாடாவுக்கு பதில் சீன ஆட்டோ நிறுவனம் ?

மேற்கு வங்கம் சிங்கூரில் இருந்து டாடா வெளியேறி விட்டதால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. அதில் வேறு ஏதாவது தொழிற்சாலையை துவங்க வைக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் இடது சாரி கட்சி ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் நேற்று சீன வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் வொர்க்ஸ் என்ற நிறுவனம் கோல்கட்டா வந்து அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த நிறுவனம், உலகில் 19 நாடுகளில் தொழிற்சாலை வைத்திருக்கும் உரால் இந்தியா லிமிடெட் என்ற இன்னொரு பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து, சிங்கூரில் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ முயற்சி செய்வதாக தெரிகிறது. எனவே நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது உரால் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ஷராப்பும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்திற்குப்பின் ஷராப், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, நாங்கள் ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிங்கூரில் தொழிற்சாலை அமைக்க அதிக ஆவலுடன் இருக்கிறோம். அவர்களுக்கும் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து துவங்குவதாக இருக்கும் தொழிற்சாலைக்காக கல்யாணி, கராக்பூர், ஹால்டியா போன்ற இடங்களை பார்வையிட இருக்கிறோம் என்றார். இது குறித்து அரசு அதிகாரிகள் பேசியபோது, மேலே குறிப்பிட்ட இடங்களை அவர்கள் பார்வையிட இருந்தாலும் எங்கள் மனதில் சிங்கூர்தான் இருந்துகொண்டிருக்கிறது. சீன நிறுவனம் ஆரம்பத்தில் பெரிய டிரக் மற்றும் மினி பஸ்களை மட்டுமே தயாரிக்கும். இந்த கூட்டு நிறுவனத்திற்கு 600 ஏக்கர் நிலம் மட்டுமே தேவையானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : 500 புள்ளிகளை இழந்தது

மும்பை பங்கு சந்தை மீண்டும் ஒரு சோதனையான நாளை சந்தித்திருக்கிறது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி 5 சதவீதத்தை இழந்திருக்கிறது. சர்வதேச பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்கு சந்தையையும் பாதித்தது. இன்றும் அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டன. ஆயில், மெட்டல், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ், டெலிகாம் துறை அதிகம் பாதிக்கப்பட்டன. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், செய்ல், டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் அதிகம் வீழ்ச்சி அடைந்திருந்தன. காலை வர்த்தக ஆரம்பத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகளும் நிப்டி 90 புள்ளிகளும் உயர்ந்திருந்தாலும், காலை 10.40 க்குப்பின் குறைய துவங்கியது. அது அப்படியே தொடர்ந்து மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 511.11 புள்ளிகள் ( 4.81 சதவீதம் ) குறைந்து 10,120.01 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 147.15 புள்ளிகள் ( 4.68 சதவீதம் ) குறைந்து 2,994.95 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

இந்தியாவில் சிமென்டிற்கான டிமாண்ட் குறைந்தது

அக்டோபர் மாதத்தில் சிமென்டிற்கான டிமாண்ட் குறைந்திருக்கிறது. இதனால் பெரும்பாலான சிமென்ட் கம்பெனிகள் உற்பத்தியை குறைத்திருக்கின்றன. இது, இந்தியாவில் உற்பத்தி துறையில் சரிவு ஏற்பட்டு வருவதை காட்டுவதாக சொல்லப்படுகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1.51 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்திருந்த ஹோல்சியம் குரூப் கம்பெனியை சேர்ந்த அம்புஜா சிமென்ட்ஸ், இந்த வருடம் அக்டோபரில் 1.45 மில்லியன் டன் சிமென்ட் தான் உற்பத்தி செய்திருக்கிறது. அதன் சப்ளையும் குறைந்திருக்கிறது. ஹோல்சியம் குரூப்பை சேர்ந்த இன்னொரு பிரபல சிமென்ட் கம்பெனியான ஏ.சி.சி., யின் உற்பத்தியும் 1.13 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த அக்டோபரில் 1.76 மில்லியன் டன்களாக இருந்த சிமென்ட் உற்பத்தி, இந்த அக்டோபரில் 1.74 மில்லியன் டன்களாக குறைந்திருக்கிறது. சப்ளையும் 3.4 சதவீதம் குறைந்து, 1.75 மில்லியன் டன்களில் இருந்து 1.70 மில்லியன் டன்களாகி இருக்கிறது. ஆனால் இன்னொரு பிரபல சிமென்ட் கம்பெனியான ஆதித்ய பிர்லா குரூப்பை சேர்ந்த கிராஸிம் இன்டஸ்டிரீஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், 1.93 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்தியாவில் சிமென்ட் துறையில் 55 சதவீத மார்க்கெட் ஷேர், ஹோல்சியம் குரூப் மற்றும் பிர்லா குரூப் கம்பெனிகளிடம் தான் இருக்கிறது.
நன்றி தினமலர்


கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அல்ல. சவுதி அரேபியா, எண்ணெய் ஏற்றுமதியின் அளவை குறைத்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள்.லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை, கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவாக நேற்று பேரலுக்கு 5.43 டாலர் உயர்ந்து 65.91 டாலராகி விட்டது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 69.88 டாலராக உயர்ந்து விட்டது. உலகில் அதிகம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா, அது ஏற்றுமதி செய்யும் எண்ணெய்யின் அளவில், நாள் ஒன்றுக்கு 9,00,000 பேரல்களை குறைத்திருக்கிறது. யூரோவுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததற்கு காரணம் என்கிறார்கள். கடந்த மாதம் கூடிய ஓபக் மாநாட்டில், நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேரல்கள் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகளை அது கேட்டுக்கொண்டது. அது எப்போதிருந்து முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரியவில்லை. இருந்தாலும் கடந்த ஜூலை மாதத்தில் பேரலுக்கு 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை அதன் பின் மளமளவென குறைய துவங்கி, 60 டாலர்களை ஒட்டி வந்திருந்தது. இப்போது கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்