Wednesday, December 31, 2008

சலுகை கட்டணம்: ஏர் இந்தியா அறிவிப்பு

முன் கூட்டியே டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கான சலுகை கட்டண திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முன்கூட்டியே டிக்கெட் வாங்கும் பயணிகள் மற்றும் சுற்றுலா செல்வோருக்கான சலுகை கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளது. சில குறிப்பிட்ட வழித்தட விமான டிக்கெட்களுக்கு சலுகை விலையில் ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு 'ஈசி பேர்' 2,575 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 2,375 ரூபாய் கட்டணம். சென்னையிலிருந்து மும்பைக்கு 'ஈசிபேர்' கட்டணம் 4,600 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 3,925; 14 நாட்களுக்கு முன் வாங்கினால் 3,425 ரூபாய் கட்டணம். டில்லிக்கு 'ஈசி பேர்' கட்டணம் 5,225 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 4,425; 14 நாட்களுக்கு முன் வாங்கினால் 4,125 ரூபாய் கட்டணம். கோல்கட்டாவிற்கு 'ஈசி பேர்' கட்டணம் 4,725 ரூபாய்; ஏழு நாட்களுக்கு முன் வாங்கினால் 4,125; 14 நாட்களுக்கு முன் வாங்கினால் 3,675 ரூபாய் கட்டணம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
நன்றி : தினமலர்


ஜி.எஸ்.எம்., சேவை துவக்கியது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், ஜி.எஸ்.எம்., மொபைல் சேவையை நேற்று நாடு முழுவதும் துவக்கியது. இதன் மூலம், சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., என, இரண்டு சேவைகளையும் வழங்கும் முதல் தொலை தொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி நிருபர்களிடம் கூறியதாவது: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், 11 ஆயிரம் நகரங்களில் தற்போது ஜி.எஸ்.எம்., சேவையை துவக்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் 22 ஆயிரம் நகரங்களுக்கு சேவை விரிவுபடுத்தப்படும். இந்த ஜி.எஸ்.எம்., நெட்வொர்க்கை வழங்குவதற்காக, கடந்த 15 மாதங்களாக 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப் பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் சி.டி.எம்.ஏ., சேவையை ஏற்கனவே நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில், ஜி.எஸ்.எம்., மொபைல் சேவையை இதுவரை கிழக்கு மாநிலங்களின் எட்டு வட்டங்களில் மட்டுமே வழங்கி வந்தோம். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 3 ஜி ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. இந்த உயர் தரமான மொபைல் சேவை வழங்குவதற்காக 4,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் இலங்கை மற்றும் உகாண்டா நாடுகளிலும், ஜி.எஸ்.எம்., சேவையை துவக்க உரிமம் பெற்றுள்ளது. இவ்வாறு அனில் அம்பானி கூறினார்.
நன்றி : தினமலர்