Wednesday, December 2, 2009

கூட்டணி அரசு-கூட்டாட்சி எங்கே?

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் மிகவும் சூடானதொரு துவக்கத்தையே சந்தித்திருக்கிறது.

கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்ட இரண்டு அவசரச்சட்டங்கள், நாட்டின் கரும்பு விவசாயிகளைக் கொதித்தெழச் செய்தன. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் இந்த அவசரச்சட்டங்களைக் கடுமையாக எதிர்க்க முற்பட்ட நிலையில், மத்திய அரசு அந்த அவசரச்சட்டங்களை அதே வடிவில் மசோதாக்களாகக் கொணர்ந்து நிறைவேற்ற இயலாத ஒரு நெருக்கடியை எதிர்கொண்டது. இதில் மத்திய அரசு சற்றே பின்வாங்கி இந்த அவசரச்சட்டங்களின் ஆட்சேபத்துக்குரிய முக்கிய ஷரத்துக்களில் மாற்றம் கொண்டு வரச் சம்மதித்தது.

இதன் காரணமாகக் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒரு சிறிய வெற்றி கிடைத்துள்ளது. இது ஒருவகையில் இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியும் கூட.

எனினும், இந்தப் பிரச்னையின் மற்றொரு முக்கிய அம்சம் மத்திய - மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டது. நம் நாட்டின் அரசமைப்பு முறைக்குக் கூட்டாட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது வெறும் கோஷமாகவே நின்று விட்டது.

மத்திய அரசில் தனிக்கட்சி ஆட்சி என்பது கடந்த சில பொதுத்தேர்தல்களாகவே விடைபெற்றுக் கொண்டு விட்டது. ஒரு வலுவான தேசியக் கட்சி சில - பல மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்துத்தான் ஆட்சி நடத்த முடியும் என்றாகி உள்ளது. இந்த நிலை எதிர்காலத்திலும் நீடிக்கவே செய்யும் என்பதே எதார்த்தம்.

ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசு, மாநிலங்களின் உரிமைகளை மதித்து நடக்கிற கூட்டாட்சிக் கோட்பாட்டை மட்டுமன்றி, ஆட்சியில் பங்காளிகளாக உள்ள கட்சிகளை மதிக்கிற கூட்டணி தர்மத்தைக் கூடக் கடைப்பிடிக்க மறுத்து வந்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக - 2009 பொதுத் தேர்தலுக்குப் பின் - பதவியேற்றவுடன் மேற்கொண்ட முதல் நடவடிக்கையான பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக, திமுகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான டி.ஆர். பாலுவே குரல் எழுப்ப நேரிட்டது. இந்த முடிவை மத்திய அரசு கூட்டணிக்கட்சிகளைக் கூடக் கலந்தாலோசிக்காமல் எடுத்தது, கூட்டணி தர்மத்தை மீறுகிற இத்தகைய நடைமுறையை அனுமதிக்க முடியாது என்பதுதான் திமுக தரப்பில் ஒலிக்கப்பட்ட கம்பீரமான பிரகடனம். ஆனால், இதன் கம்பீரமும், வலிமையும், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா சென்னைக்குப் புனிதப்பணயம் மேற்கொண்டு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதியைச் சந்தித்த உடனேயே தொலைந்து போனது.

இப்போது, கரும்புக்கு விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் உள்ளடக்கம், மாநில அரசுகளை மதிக்கவில்லை என்று சொன்னால் அது பாதி உண்மைதான். மத்திய அரசு நிர்ணயித்து வந்துள்ள சட்டரீதியான குறைந்தபட்ச விலைக்குக் கூடுதலாக, மாநில அரசுகள் அறிவித்து வந்துள்ள மாநில அரசு பரிந்துரைத்த விலையை சர்க்கரை ஆலை அதிபர்கள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டியதில்லை என்று சட்டமியற்ற முற்பட்ட மத்திய அரசின் நடவடிக்கை, மாநில அரசுகளை இழிவுபடுத்துவதாகவே அமைந்தது என்பதுதான் முழு உண்மை.

மத்திய அரசு நிர்ணயிக்கிற விலையை நியாயமான-கட்டுபடியாகும் விலை என்று பெயர் மாற்றம் செய்து, அதற்குக் கூடுதலாக மாநில அரசு கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யுமானால், அதனால் நேரிடக்கூடிய சர்க்கரை விலை உயர்வின் சுமையை மாநில அரசுகள்தான் தாங்க வேண்டும் என்று விதித்தது இந்த அவசரச்சட்டம். பொது விநியோகத்திற்காகக் கட்டாயமாகத் தர வேண்டிய சர்க்கரைக்காக ஆலை முதலாளிகள் ரூ.15,000 கோடி வரை நிலுவைத் தொகையை வசூலித்துக் கொள்ளவும் அது வகை செய்தது. இப்போது இந்த 15,000 கோடி ரூபாயை வட்டச் செலவு கணக்கு எழுதித் தள்ளுபடி செய்ய சர்க்கரை முதலாளிகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கரும்பு விலை நிர்ணய ஏற்பாட்டில், மாநில அரசுகளுக்கு எந்தப்பங்கும், உரிமையும், அதிகாரமும் இல்லை என்பதைச் சட்டமாக்க மத்திய கூட்டணி அரசு முடிவெடுக்க முற்பட்டது, தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு போன்றவற்றில், காங்கிரசல்லாத கூட்டணிக்கட்சிகளின் அமைச்சர்கள் சிலர் இடம் பெற்றிருந்தாலும், கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தானடித்த மூப்பாக முடிவுகளைத் திணித்துச் செயல்படுத்தி வருகிற நடைமுறையையே இந்த நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மத்திய அரசின் இந்தப் போக்கு, தமிழ்நாட்டில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியது. அதனாலேயே அவர்கள் தங்களின் மவுன வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எதிர்ப்பை பகிரங்கமாகக் காட்ட வேண்டியதாயிற்று.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் கடல்சார் மீன்வளம் (முறைப்படுத்தல் மற்றும் நிர்வாகம்) நகல் சட்டம் வெளியிடப்பட்டுள்ள நடைமுறை கண்டனத்துக்குரியது. இந்த நகல் சட்டம் குறித்து ஏற்கெனவே மாநில அரசு அதன் கருத்துகளைத் தெரிவித்திருந்தும் அவை இதில் சேர்க்கப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளது வெறும் முறையீடு அல்ல; கடும் குற்றச்சாட்டே ஆகும்.

மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டமுன்வடிவு அப்படியே தாக்கல் செய்யப்படுமானால், அது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு புயலையே எழுப்பும்.

மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகார வரம்புக்கு மட்டுமே உள்ளடங்கிய விஷயங்களாகவே இருந்தாலும், அவற்றின் மீது மாநில அரசுகளோடு முன்கூட்டியே கலந்தாய்வு நடத்துவதுதான், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு ஒத்திசைவான நடைமுறையாக அமையும். ஆனால், மாநில அரசுகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் உள்ள பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் குறித்தே மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து சட்டமியற்ற முற்பட்டிருப்பது அரசியல் சட்டம் சார்ந்த ஒரு நெருக்கடியையே உருவாக்கும்.

மத்தியில் அமையும் கூட்டணி ஆட்சியில் சிறிய - பெரிய மாநிலக் கட்சிகளுக்குப் பங்கும் வாய்ப்பும் கிடைத்து வந்துள்ள போதிலும், அது மட்டுமே கூட்டாட்சிக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் தொடர் முயற்சிகளுக்குத் தடைக்கல்லாக இல்லை. இது கவலைக்குரிய ஒரு போக்கு என்பதை ஆளுங்கூட்டணிக்கட்சிகள் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சிகளும் உணர்ந்து, புரிந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கூட்டாட்சிக் கோட்பாடு - மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்கள் கடந்த காலங்களில் அரசியல் சட்டப்பிரிவு 356 ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டு எழுந்து வந்தன. சர்க்காரியா கமிஷன் பரிந்துரை, பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை காரணமாக, 356வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கலைக்கிற மத்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை லகான் போட்டு இழுத்துப் பிடித்து வைக்க நேரிட்டுள்ளது. ஆனால், 356வது பிரிவைத் தாண்டியும், மத்திய- மாநில உறவுகள் சம்பந்தமான கடுமையான பிரச்னைகள் எழுந்து நிற்கின்றன. இவையும் ஒரு பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு வலு சேர்ப்பதற்கான ஆரோக்கியமான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டியுள்ளன.

1983-ம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஷேக் அப்துல்லாவின் முயற்சியில் ஸ்ரீநகரில் நடைபெற்ற உச்சி மாநாடு, மத்திய - மாநில உறவுகள் மறுசீரமைக்கப்படுவதற்கான ஒரு நல்ல முயற்சியாக அமைந்தது. இந்த உச்சி மாநாட்டில் திமுக, தெலுங்கு தேசம், அகாலிதளம், குடியரசுக்கட்சி, அசாம் கண பரிஷத் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் பங்கேற்றன. இதற்கும் முன்பாக 1977-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மேற்கு வங்க இடதுசாரி முன்னணி அரசும் மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக ஒரு 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.

ஸ்ரீநகர் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, முதலமைச்சர்கள் மாநாடுகள்,1990-ல் தேசிய முன்னணி அரசு நிறுவிய மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டங்கள், முழுமையாக நிறைவளிக்காவிட்டாலும் சில குறிப்பிடத்தக்க பரிந்துரைகளைச் செய்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை ஆகியவை, மத்திய-மாநில உறவுகள் தொடர்பான பல அடிப்படையான அம்சங்களை முன்நிறுத்திய மைல் கற்களாக அமைந்தன. இந்த வரிசையில் 2007 ஏப்ரல் மாதத்தில் நீதிபதி பூஞ்சி தலைமையில் அமைக்கப்பட்ட பூஞ்சி கமிஷனின் பணி இன்னும் நிறைவடைய வேண்டியுள்ளது. இந்தப்பணி முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், அதுவும் நூலக அலமாரியில் வைக்கப்படும் இன்னொரு புத்தகமாக ஆகி, அலங்காரப் பொருளாக நின்றுவிடும் சாத்தியக்கூறு இருக்கவே செய்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டுகளில், கைவிடப்பட்ட வரி வருவாய் என்பது, 2006-2007-ல் ரூ.2.39 லட்சம் கோடி, 2007-2008-ல் ரூ.2.78 லட்சம் கோடி, 2008-2009-ல் ரூ.4.18 லட்சம் கோடி என்று உயர்ந்து வந்துள்ளது. இது மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய மத்திய அரசின் வருவாயைச் சுருக்கும் என்பதால், மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்கையும் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டத் தேவையில்லை.

இப்படி மாநிலங்களின் உரிமைகள், சட்டமியற்றும் அதிகாரம், நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்தும் ஒட்டு மொத்தத் தாக்குதலுக்கு இலக்காகி நிற்பது, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு உலை வைக்கும் கட்டத்தை நோக்கி நாடு நகர்த்தப்படுவதற்கான அடையாளமே. கூட்டணி ஆட்சியிலேயே கூட்டாட்சி இந்தப் பாடுபடுகிறது என்றால், மத்தியில் தனிக்கட்சி ஆட்சி தப்பித்தவறி வந்து விட்டால் என்ன ஆகுமோ ? ஜனநாயக சக்திகள் விழிப்போடு செயல்பட வேண்டிய தருணமிது.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி

தனிமைப்பட்டது இலங்கை மட்டுமல்ல - இந்தியாவும்

டிரினிடாட் தீவில் நடைபெற்ற காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் அடுத்த மாநாட்டினை 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் கூடி உலக அரசியல் நிலைமை குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் அடுத்த மாநாட்டினை எங்கு நடத்துவது என்பது குறித்துக் கடும் போட்டியிருந்தது.

பிரதமர்கள் மாநாட்டுக்கு முன்பாக நடைபெற்ற வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா உள்பட 45 நாடுகள் இலங்கையில் அடுத்த மாநாட்டினை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போரில் வெற்றி பெற்ற கையோடு இலங்கையில் இம்மாநாட்டினை நடத்துவதன் மூலம் உலக நாடுகளில் தனக்கு எதிராக எழுந்திருக்கும் கடும் கண்டனத்தைத் திசைதிருப்புவதற்கு இலங்கை அதிபர் ராஜபட்ச திட்டமிட்டார். போர்க் குற்றவாளியாகவும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை ஈவு இரக்கமின்றி நடத்தியவர் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியிருந்த ராஜபட்ச அதிலிருந்து தப்புவதற்கு ஒரு வழியாக காமன்வெல்த் மாநாட்டினை நடத்த பெருமுயற்சி செய்தார்.

÷ஏற்கெனவே ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உதவியோடு தோற்கடித்ததைப்போல இப்போதும் இந்தியாவின் உதவியை ராஜபட்ச நாடினார். இந்தியா கொஞ்சமும் தயங்காமல் உதவ முன்வந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியாவின் உதவியால் 45 நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தன.

÷பிரதமர்கள் மாநாட்டில் வழக்கமாக வெளியுறவுத் துறை அமைச்சர்களின் முடிவு ஏற்றுக்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அவ்வாறு செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் இலங்கையில் மாநாடு நடத்துவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பிரதமர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். போர்க் குற்றம் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் ஈடுபட்ட இலங்கை அரசின் அழைப்பை ஏற்று அங்கு மாநாடு நடத்துவது சரியல்ல என பெரும்பாலான பிரதமர்கள் முடிவு செய்தனர். சர்வதேச அரங்கில் ராஜபட்சவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு இதுவாகும்.÷

÷பிரிட்டிஷ் பிரதமர் முன்நின்று இலங்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததற்குப் பதில் நியாயமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்டதன் மூலம் காமன்வெல்த் அமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகளின் மதிப்பிலிருந்து தாழ்ந்துவிட்டார். காமன்வெல்த் அமைப்பிலேயே மிகப்பெரிய நாடு இந்தியாதான். ஆனால் அதனுடைய முயற்சிக்கு இத்தகைய அவமதிப்பு நேர்ந்திருப்பது மன்மோகன் சிங்கின் தவறான அணுகுமுறையின் விளைவாக என்பதை நாம் உணர வேண்டும்.

÷இதே காமன்வெல்த் அமைப்பின் கூட்டத்தில் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். தென்னாப்பிரிக்க அரசு நிறவெறிக் கொள்கையைக் கைவிட வேண்டும் அல்லது காமன்வெல்த்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என பிரதமர் நேரு கொண்டு வந்த

தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக தென்னாப்பிரிக்கப் பிரதமர் காமன்வெல்த் அமைப்பில் மட்டுமல்ல, உலக அரங்கில் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.

÷தென்னாப்பிரிக்காவில் மொத்த மக்கள்தொகையில் 79 சதவீதத்துக்கு மேல் உள்ள கருப்பின மக்கள் (இந்தியர்கள் உள்பட) சுமார் 2 கோடி பேர் வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கையின் விளைவாக பல்வேறு இழிவுகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 2 கோடி கருப்பின மக்களுக்கு 13 சதவீத இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. 50 லட்சம் வெள்ளையர்களுக்கு 87 சதவீத இடப்பகுதி ஒதுக்கப்பட்டது. வெள்ளையர்களின் வாழ்விடங்களுக்கு வெளியே ஒதுக்குப்புறங்களில் அவர்கள் வாழ வேண்டுமென ஆணையிடப்பட்டது. பொது இடங்களிலும் அவர்களுக்கு அனுமதி இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருப்பர்கள் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகினர். மகத்தான தலைவரான நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகாலம் சிறையில் வாட நேர்ந்தது.

÷இந்திய மக்களுக்காக மட்டுமல்ல, கருப்பின மக்கள் அனைவருக்காகவும் இந்தியா போராடியது. நிறவெறியின் காரணமாக கொடுமைகளுக்கு ஆளான அனைத்து மக்களுக்காகவும் காமன்வெல்த் அமைப்பில் பிரதமர் நேரு நெஞ்சு நிமிர்த்தி நின்று தென்னாப்பிரிக்காவை வெளியேற்ற வேண்டுமென்று போராடினார். வெற்றியும் பெற்றார்.

÷ஆனால் நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் வழிநடத்தப்படும் மன்மோகன் சிங் நிறவெறியைவிட மோசமான இனவெறியர் ராஜபட்சவுக்கு ஆதரவாக காமன்வெல்த் மாநாட்டில் நடந்துகொண்டது இந்தியாவுக்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.

மன்மோகன் சிங் செய்யத் தவறியதை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் துணிந்து செயல்பட்டு இலங்கையில் மாநாடு நடத்தப்படுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அவரும் மற்ற நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தும் திட்டத்தைத் தடுக்காமல் போயிருந்தால் உலக அரங்கில் தன்மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து ராஜபட்ச சுலபமாகத் தப்பிக்க வழிபிறந்திருக்கும்.

÷மன்மோகன் சிங் செய்த மற்றொரு முக்கியமான தவறையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மே மாதத்தில் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றும் வகையில் தாற்காலிகப் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை வற்புறுத்திச் செய்ய வைத்து அதைத் தொடர்ந்து அந்த மக்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்க கப்பல்களை அனுப்பி உதவியிருக்க வேண்டும். ஆனால் அந்த மனித நேயம் மன்மோகனுக்கு இருக்கவில்லை.

÷1983-ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மூண்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, பிரதமராக இருந்த இந்திரா காந்தி உடனடியாகத் தலையிட்டார். வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவை அனுப்பி இலங்கை அரசை எச்சரிக்கச் செய்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை.

இரு கப்பல்களை கொழும்புவுக்கு அனுப்பி எஞ்சிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள காங்கேசன் துறைக்குப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்க்க உதவினார்.

÷பிரதமர் இந்திராவைப்போல செயல்பட்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட மக்களைப் பத்திரமாக மீட்க மன்மோகன் சிங் எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல. இதற்கு நேர்மாறாக வரக, விக்கிரகா என்ற இரு இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களை இலங்கை அரசுக்குத் தந்து அந்தக் கப்பல்கள் கரையோரத்தில் தஞ்சமடைந்து தவித்த தமிழர்கள் மீது ஏவுகணைகளை ஏவின. இதன் விளைவாகவும் சிங்கள விமானத் தாக்குதல்கள் விளைவாகவும் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்குக் காரணமான மன்மோகன் சிங்குக்கு எல்லாவகையிலும் துணை நின்றவர் முதல்வர் கருணாநிதி. அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு எதுவும் செய்ய முன்வரவில்லை. இவருடைய தயவில்தான் அப்போதைய மத்திய ஆட்சி பதவியில் இருந்தது. ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று இவர் மிரட்டியிருந்தால், இந்திய அரசு பணிந்திருக்கும். ஈழத் தமிழர் மக்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஆனால் முதல்வர் கருணாநிதியோ உண்ணாவிரத நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார் அவருடைய விவேகம் அதற்குத்தான் பயன்பட்டது.

÷விடுதலைப் புலிகளுக்கு வீரம் இருந்த அளவுக்கு விவேகம் இல்லையென இப்போது நீட்டி முழக்குகிற கருணாநிதி பதைக்கப் பதைக்க ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு மட்டுமே சொந்தமான விவேகத்தை கொஞ்சமும் பயன்படுத்தவில்லையே ஏன்? தில்லியில் மகனுக்கும், பேரனுக்கும் பணம் கொழிக்கும் துறைகளைப் பெற்றுத் தருவதில் அவரது விவேகம் செலவழிந்துவிட்டதோ என்னவோ?

ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடையுமாறு கருணாநிதி கூறிய யோசனைக்கு புலிகள் செவிசாய்க்கவில்லை என அங்கலாய்க்கிறார். இவர் இந்த யோசனையைக் கூறுவதற்கு முன்பாக ஐ.நா.வின் பொதுச் செயலாளரின் ஆலோசகரான விஜய நம்பியார் அளித்த ஆலோசனையின்படிதானே விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன் புலித்தேவன் ஆகியோர் ஆயிரக்கணக்கான மக்களுடன் ஆயுதங்கள் இல்லாமல் வெள்ளைக்கொடியேந்திச் சென்ற வேளையில் சிங்கள ராணுவ வெறியர்கள் அவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொன்ற மாபாதகம் நிகழ்ந்தபோது கருணாநிதி எங்கே போயிருந்தார்? மனித தர்மத்துக்கே எதிராக நடைபெற்ற இந்தக் கொடுமையைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்ல அவர் முன்வரவில்லையே? விவேகத்துக்கு மொத்தக் குத்தகைதாரரான அவர் வாய்மூடி மௌனம் சாதித்தது ஏன்?

÷இந்தியாவின் பிரதமர்களாக நேரு, இந்திரா ஆகியோர் இருந்தபோது உலகப் பிரச்னைகளில் மனிதநேயத்தோடும் துணிவோடும் செயல்பட்டு உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தார்கள். இதன் விளைவாக உலகில் மிகப்பெரும்பான்மையான நாடுகளின் இயற்கையான தலைமை இந்தியாவுக்குக் கிடைத்தது. வல்லரசுகளுக்குக் கூட கிடைக்காத இந்தப் பெருமை இந்தியாவைத் தேடி வந்தது.

÷ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் நேரு, இந்திரா ஆகியோர் வகுத்த பாதையிலிருந்து விலகிச் சென்றதோடு மட்டுமல்ல, போர்க்குற்றத்துக்கும் மனித உரிமையை மீறிய செயல்களுக்கும் ஆளான ராஜபட்ச போன்றோருக்கு உலக அரங்கில் ஆதரவு தேடும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுத் தனது மரியாதையை இழந்து இன்று தனித்து நிற்கிறது.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

"அணு' அளவும் இல்லை

அணுமின் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதால் கடந்த மாதம் 16-ம் தேதி அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி கைது செய்யப்பட்ட பிறகுதான் இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசுக்கு துப்பு கிடைத்தது.

சரியாக 12 நாள்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் கார்வார் அருகே உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் மிகை கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகி இருப்பது, வழக்கமாக அவர்கள் உட்படுத்தப்படும் சிறுநீர் சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. இதற்குக் காரணம், அணுஉலைக் கூடத்தில் பணியாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் குளிர் குடிநீரில் டிரைடியம் கலந்திருந்ததுதான் என்று தெரியவந்துள்ளது.

இதுவே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விஷயம். ஆனாலும் இதைவிட ஒரு படி மேலேபோய், "இந்த அணுஉலைக் கூடத்தில் எந்த இடத்திலும் கனநீர் கசிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது' என்று அணுமின் நிலையம் அறிவித்திருப்பது நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அணுமின் நிலையத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றால், வெளியிலிருந்துதான் டிரைடியம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அர்த்தமா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

அணுமின் உலைக்கூடங்களில் யுரேனியம் பயன்படுத்தும்போது அதைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் கனநீரின் காரணமாக, மிகச்சிறிய அளவிலான டுடேரியம், டிரைடியம் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. இதுதான் ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள். இத்தகைய ஆபத்தான மூலப்பொருள் தற்போது குளிர் குடிநீர்த் தொட்டிக்கு வந்த டிரைடியம், நாளை வெளியே செல்லாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

அணுமின் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று அமெரிக்கா துப்பு கொடுத்தால், ஏதோ பயங்கரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் வந்து தாக்கியதைப்போல துப்பாக்கிகளுடன் வருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அணுமின் நிலையம் போன்ற ஓர் இடத்துள் புக வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வர மாட்டார்கள். விஞ்ஞானிகளுக்கு இணையான அறிவுடன் கருப்பு ஆடுகளாகத்தான் வருவார்கள் என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

டிரைடியம் போன்ற கதிர்வீச்சுப் பொருளை அதே உலைக்கூடத்தின் குடிநீரில் கலப்பது மட்டுமல்ல, எந்தவொரு நகரத்தின் குடிநீர்த் தொட்டியிலும்கூட கலந்துவிட முடியும் என்பதை இந்த அணுமின் நிலையங்களும், அரசும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய அணுஉலைக் கூடங்களைத் திறக்க தயாராகி வருகிறோம். எத்தகைய பாதுகாப்பை இந்திய அரசு நமக்கு வழங்கவுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் கல்பாக்கம் பாதிக்கப்பட்டபோது இந்திரா காந்தி அணுமின் நிலையமும் பேரலையின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணுஉலைக் கழிவுப் பொருள்களும் பேரலையால் வெளியேறியதாகப் பேச்சு எழுந்தது. ஆனால் அணுமின் நிலையம் அதை மறுத்தது. சுனாமியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னார்கள். ஆனால், கூடங்குளம், கல்பாக்கம், மும்பை பாபா அணுஉலைக் கூடம் எல்லாமும் கடலோரத்தில்தான் இருக்கின்றன.

பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தின் தொழில்துறை பாதுகாப்பில்கூட நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இவை களவுபோகும்போது அந்த நிறுவனமும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் படும் அவதி சொல்லிமாளாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி துவாக்குடியில் உள்ள நிறுவனத்தில் பாபா அணுமின் நிலையம் வழங்கிய பயன்படுத்தப்பட்ட யுரேனியம் திருடுபோனது. திருடியவருக்கு அதன் மதிப்போ ஆபத்தோ தெரியாது. அவரைப் பொருத்தவரை அது பொருத்தப்பட்டிருந்த தேனிரும்பு மட்டுமே மதிப்பு கொண்டதாக இருந்தது. பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார். கதிர்வீச்சை அறியும் கருவிகளுடன் பாபா அணுமின் நிலைய அதிகாரிகள் வந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து கதிர்வீச்சு வருவதைக் கண்டுபிடித்து தேடி எடுத்தார்கள்.

ஓராண்டுக்கு முன்பு மணலியில் உள்ள பைப் தயாரிக்கும் கம்பெனியில், பாபா அணுமின் நிலையத்தில் இதேபோன்ற வேதிப்பொருள் திருடுபோனதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தப் புகாரும் பதிவாகவே இல்லை.

இவை நம் உள்நாட்டுத் திருடர்களால், அவர்களுக்கே அதன் மதிப்பு தெரியாமல் நடந்த திருட்டுகள். ஆனால், தீவிரவாதிகள் அப்படியல்ல. அவர்களுக்கு இத்தகைய கதிர்வீச்சுப் பொருள்களின் மதிப்பு தெரியும், அதன் ஆபத்து தெரியும். அதன் பயன்பாடுகளும் அத்துப்படி. அப்படியானால், தொழில்துறைப் பயன்பாட்டிலும்கூட இந்திய அரசு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பது புறியும். இது அரசுக்குப் புரியாதவரை நமக்கு அணு அளவும் பாதுகாப்பு இல்லை!

நன்றி : தினமணி


ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 5000 கோடி நஷ்டம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டத்தில் இருந்தே ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நஷ்ட கணக்கு கூடி வருகிறது. தற்போது, அந்நிறுவனத்தின் நஷ்டகணக்கு இரட்டிப்பாகி ரூ. 5000 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறும்போது, உலக பொருளாதார சீர்குலைவு, லாபம் அதிகம் வராதது ஆகியவையே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஏர் இந்தியாவின் நிலையை சரி செய்ய தேசிய இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டுக்குள் ரூ. 2000 கோடி அளவுக்கு செலவுகளைக் குறைக்குமாறு ஏர் இந்தியா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஏற்கனவே, 2007-08ம் ஆண்டில் ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூ. 2,226.16 கோடியாக இருந்தது. இது தற்போது 5000 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது
நன்றி : தினமலர்


கேரளாவில் ஸ்மார்ட் நகரம் துபாய் நிறுவனம் தவிப்பு

கேரளாவில் ஸ்மார்ட் நகரம் உருவாக்க தேர்ந் தெடுக்கப்பட்ட துபாயை மையமாக கொண்டு செயல்படும் 'டெக்காம்' நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக, அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம், கொச்சியில், 1,500 கோடி ரூபாய் மதிப்பில் 'ஸ்மார்ட் நகரம்' அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த நகரம் அமைக்கும் பணிக்காக, துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'டெக்காம்' நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதுகுறித்து நிருபர்களிடம் பேட்டியளித்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியதாவது:

கொச்சி 'ஸ்மார்ட் நகரம்' திட்டத்திற்காக ஒதுக் கப்பட்ட 246 ஏக்கர் நிலத்தில், 12 சதவீதம் நிலத் தில் தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என 'டெக்காம்' நிறுவனம், கேட்டது. இதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிபந்தனை ஒரிஜினல் ஒப்பந்தத் தில் இல்லை. 'ஸ்மார்ட் நகரம்' உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு வேறு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க தயங்காது.இவ்வாறு அச்சுதானந்தன் கூறினார்.இவ்வாறு முதல்வர் கருத்து வெளியிட்ட தினத்தன்று மாலையே, 'டெக்காம்' நிறுவனம், முதல்வர் அச்சுதானந்தனை துபாய் வருமாறு அழைப்பு விடுத்தது.'ஸ்மார்ட் நகர' திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அப்துல் ரகுமான் கூறுகையில், 'இத்திட் டம் தாமதமானாலும், கேரள மக்களின் நலனுக்காகவும், மாநில பொருளாதாரத்திற்காகவும், அதை வெற்றிகரமாக செயல்படுத்துவோம்' என்றார்.
நன்றி : தினமலர்