நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் மிகவும் சூடானதொரு துவக்கத்தையே சந்தித்திருக்கிறது.
கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்ட இரண்டு அவசரச்சட்டங்கள், நாட்டின் கரும்பு விவசாயிகளைக் கொதித்தெழச் செய்தன. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் இந்த அவசரச்சட்டங்களைக் கடுமையாக எதிர்க்க முற்பட்ட நிலையில், மத்திய அரசு அந்த அவசரச்சட்டங்களை அதே வடிவில் மசோதாக்களாகக் கொணர்ந்து நிறைவேற்ற இயலாத ஒரு நெருக்கடியை எதிர்கொண்டது. இதில் மத்திய அரசு சற்றே பின்வாங்கி இந்த அவசரச்சட்டங்களின் ஆட்சேபத்துக்குரிய முக்கிய ஷரத்துக்களில் மாற்றம் கொண்டு வரச் சம்மதித்தது.
இதன் காரணமாகக் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒரு சிறிய வெற்றி கிடைத்துள்ளது. இது ஒருவகையில் இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியும் கூட.
எனினும், இந்தப் பிரச்னையின் மற்றொரு முக்கிய அம்சம் மத்திய - மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டது. நம் நாட்டின் அரசமைப்பு முறைக்குக் கூட்டாட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது வெறும் கோஷமாகவே நின்று விட்டது.
மத்திய அரசில் தனிக்கட்சி ஆட்சி என்பது கடந்த சில பொதுத்தேர்தல்களாகவே விடைபெற்றுக் கொண்டு விட்டது. ஒரு வலுவான தேசியக் கட்சி சில - பல மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்துத்தான் ஆட்சி நடத்த முடியும் என்றாகி உள்ளது. இந்த நிலை எதிர்காலத்திலும் நீடிக்கவே செய்யும் என்பதே எதார்த்தம்.
ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசு, மாநிலங்களின் உரிமைகளை மதித்து நடக்கிற கூட்டாட்சிக் கோட்பாட்டை மட்டுமன்றி, ஆட்சியில் பங்காளிகளாக உள்ள கட்சிகளை மதிக்கிற கூட்டணி தர்மத்தைக் கூடக் கடைப்பிடிக்க மறுத்து வந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக - 2009 பொதுத் தேர்தலுக்குப் பின் - பதவியேற்றவுடன் மேற்கொண்ட முதல் நடவடிக்கையான பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக, திமுகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான டி.ஆர். பாலுவே குரல் எழுப்ப நேரிட்டது. இந்த முடிவை மத்திய அரசு கூட்டணிக்கட்சிகளைக் கூடக் கலந்தாலோசிக்காமல் எடுத்தது, கூட்டணி தர்மத்தை மீறுகிற இத்தகைய நடைமுறையை அனுமதிக்க முடியாது என்பதுதான் திமுக தரப்பில் ஒலிக்கப்பட்ட கம்பீரமான பிரகடனம். ஆனால், இதன் கம்பீரமும், வலிமையும், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா சென்னைக்குப் புனிதப்பணயம் மேற்கொண்டு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதியைச் சந்தித்த உடனேயே தொலைந்து போனது.
இப்போது, கரும்புக்கு விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் உள்ளடக்கம், மாநில அரசுகளை மதிக்கவில்லை என்று சொன்னால் அது பாதி உண்மைதான். மத்திய அரசு நிர்ணயித்து வந்துள்ள சட்டரீதியான குறைந்தபட்ச விலைக்குக் கூடுதலாக, மாநில அரசுகள் அறிவித்து வந்துள்ள மாநில அரசு பரிந்துரைத்த விலையை சர்க்கரை ஆலை அதிபர்கள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டியதில்லை என்று சட்டமியற்ற முற்பட்ட மத்திய அரசின் நடவடிக்கை, மாநில அரசுகளை இழிவுபடுத்துவதாகவே அமைந்தது என்பதுதான் முழு உண்மை.
மத்திய அரசு நிர்ணயிக்கிற விலையை நியாயமான-கட்டுபடியாகும் விலை என்று பெயர் மாற்றம் செய்து, அதற்குக் கூடுதலாக மாநில அரசு கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யுமானால், அதனால் நேரிடக்கூடிய சர்க்கரை விலை உயர்வின் சுமையை மாநில அரசுகள்தான் தாங்க வேண்டும் என்று விதித்தது இந்த அவசரச்சட்டம். பொது விநியோகத்திற்காகக் கட்டாயமாகத் தர வேண்டிய சர்க்கரைக்காக ஆலை முதலாளிகள் ரூ.15,000 கோடி வரை நிலுவைத் தொகையை வசூலித்துக் கொள்ளவும் அது வகை செய்தது. இப்போது இந்த 15,000 கோடி ரூபாயை வட்டச் செலவு கணக்கு எழுதித் தள்ளுபடி செய்ய சர்க்கரை முதலாளிகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கரும்பு விலை நிர்ணய ஏற்பாட்டில், மாநில அரசுகளுக்கு எந்தப்பங்கும், உரிமையும், அதிகாரமும் இல்லை என்பதைச் சட்டமாக்க மத்திய கூட்டணி அரசு முடிவெடுக்க முற்பட்டது, தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு போன்றவற்றில், காங்கிரசல்லாத கூட்டணிக்கட்சிகளின் அமைச்சர்கள் சிலர் இடம் பெற்றிருந்தாலும், கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தானடித்த மூப்பாக முடிவுகளைத் திணித்துச் செயல்படுத்தி வருகிற நடைமுறையையே இந்த நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மத்திய அரசின் இந்தப் போக்கு, தமிழ்நாட்டில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியது. அதனாலேயே அவர்கள் தங்களின் மவுன வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எதிர்ப்பை பகிரங்கமாகக் காட்ட வேண்டியதாயிற்று.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் கடல்சார் மீன்வளம் (முறைப்படுத்தல் மற்றும் நிர்வாகம்) நகல் சட்டம் வெளியிடப்பட்டுள்ள நடைமுறை கண்டனத்துக்குரியது. இந்த நகல் சட்டம் குறித்து ஏற்கெனவே மாநில அரசு அதன் கருத்துகளைத் தெரிவித்திருந்தும் அவை இதில் சேர்க்கப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளது வெறும் முறையீடு அல்ல; கடும் குற்றச்சாட்டே ஆகும்.
மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டமுன்வடிவு அப்படியே தாக்கல் செய்யப்படுமானால், அது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு புயலையே எழுப்பும்.
மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகார வரம்புக்கு மட்டுமே உள்ளடங்கிய விஷயங்களாகவே இருந்தாலும், அவற்றின் மீது மாநில அரசுகளோடு முன்கூட்டியே கலந்தாய்வு நடத்துவதுதான், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு ஒத்திசைவான நடைமுறையாக அமையும். ஆனால், மாநில அரசுகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் உள்ள பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் குறித்தே மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து சட்டமியற்ற முற்பட்டிருப்பது அரசியல் சட்டம் சார்ந்த ஒரு நெருக்கடியையே உருவாக்கும்.
மத்தியில் அமையும் கூட்டணி ஆட்சியில் சிறிய - பெரிய மாநிலக் கட்சிகளுக்குப் பங்கும் வாய்ப்பும் கிடைத்து வந்துள்ள போதிலும், அது மட்டுமே கூட்டாட்சிக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் தொடர் முயற்சிகளுக்குத் தடைக்கல்லாக இல்லை. இது கவலைக்குரிய ஒரு போக்கு என்பதை ஆளுங்கூட்டணிக்கட்சிகள் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சிகளும் உணர்ந்து, புரிந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கூட்டாட்சிக் கோட்பாடு - மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்கள் கடந்த காலங்களில் அரசியல் சட்டப்பிரிவு 356 ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டு எழுந்து வந்தன. சர்க்காரியா கமிஷன் பரிந்துரை, பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை காரணமாக, 356வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கலைக்கிற மத்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை லகான் போட்டு இழுத்துப் பிடித்து வைக்க நேரிட்டுள்ளது. ஆனால், 356வது பிரிவைத் தாண்டியும், மத்திய- மாநில உறவுகள் சம்பந்தமான கடுமையான பிரச்னைகள் எழுந்து நிற்கின்றன. இவையும் ஒரு பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு வலு சேர்ப்பதற்கான ஆரோக்கியமான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டியுள்ளன.
1983-ம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஷேக் அப்துல்லாவின் முயற்சியில் ஸ்ரீநகரில் நடைபெற்ற உச்சி மாநாடு, மத்திய - மாநில உறவுகள் மறுசீரமைக்கப்படுவதற்கான ஒரு நல்ல முயற்சியாக அமைந்தது. இந்த உச்சி மாநாட்டில் திமுக, தெலுங்கு தேசம், அகாலிதளம், குடியரசுக்கட்சி, அசாம் கண பரிஷத் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் பங்கேற்றன. இதற்கும் முன்பாக 1977-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மேற்கு வங்க இடதுசாரி முன்னணி அரசும் மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக ஒரு 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.
ஸ்ரீநகர் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, முதலமைச்சர்கள் மாநாடுகள்,1990-ல் தேசிய முன்னணி அரசு நிறுவிய மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டங்கள், முழுமையாக நிறைவளிக்காவிட்டாலும் சில குறிப்பிடத்தக்க பரிந்துரைகளைச் செய்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை ஆகியவை, மத்திய-மாநில உறவுகள் தொடர்பான பல அடிப்படையான அம்சங்களை முன்நிறுத்திய மைல் கற்களாக அமைந்தன. இந்த வரிசையில் 2007 ஏப்ரல் மாதத்தில் நீதிபதி பூஞ்சி தலைமையில் அமைக்கப்பட்ட பூஞ்சி கமிஷனின் பணி இன்னும் நிறைவடைய வேண்டியுள்ளது. இந்தப்பணி முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், அதுவும் நூலக அலமாரியில் வைக்கப்படும் இன்னொரு புத்தகமாக ஆகி, அலங்காரப் பொருளாக நின்றுவிடும் சாத்தியக்கூறு இருக்கவே செய்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டுகளில், கைவிடப்பட்ட வரி வருவாய் என்பது, 2006-2007-ல் ரூ.2.39 லட்சம் கோடி, 2007-2008-ல் ரூ.2.78 லட்சம் கோடி, 2008-2009-ல் ரூ.4.18 லட்சம் கோடி என்று உயர்ந்து வந்துள்ளது. இது மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய மத்திய அரசின் வருவாயைச் சுருக்கும் என்பதால், மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்கையும் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டத் தேவையில்லை.
இப்படி மாநிலங்களின் உரிமைகள், சட்டமியற்றும் அதிகாரம், நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்தும் ஒட்டு மொத்தத் தாக்குதலுக்கு இலக்காகி நிற்பது, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு உலை வைக்கும் கட்டத்தை நோக்கி நாடு நகர்த்தப்படுவதற்கான அடையாளமே. கூட்டணி ஆட்சியிலேயே கூட்டாட்சி இந்தப் பாடுபடுகிறது என்றால், மத்தியில் தனிக்கட்சி ஆட்சி தப்பித்தவறி வந்து விட்டால் என்ன ஆகுமோ ? ஜனநாயக சக்திகள் விழிப்போடு செயல்பட வேண்டிய தருணமிது.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment