Sunday, July 19, 2009

தங்கம் போல மின்னப்போகிறது பங்குச் சந்தை?

வியாழன் அன்று பங்குச் சந்தை காலை முதல் மேலேயே இருந்தது. ஆனால், பெற்ற லாபம் அவ்வளவையும் முடிவாக இழந்து நின்றது. எல் அண்ட் டி கம்பெனியின் காலாண்டு லாபம் சிறப்பாக இருந்தாலும், கம்பெனியின் ஆர்டர் புக் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதால், அந்த கம்பெனியின் பங்குகள் கீழே விழுந்தன. இது தவிர, பலரும் லாப நோக்கில் விற்றனர். இதுவும் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். அன்றைய தினம் முடிவாக சந்தை லாபமும் இல்லாமல், நஷ்டமும் இல்லாமல் முடிவடைந்தது. வெள்ளியன்று காலையில் சிறிது டல்லாக இருந்த பங்குச் சந்தை மதியத்திற்கு மேலே பறந்தது. நிதித்துறை சீர்திருத்த மசோதாக்கள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பையடுத்து சந்தைகள் வெகு வேகமாக முன்னேறியது. வங்கித் துறை பங்குகள் மேலே சென்றன.
கடந்த சில வாரங்களாக வராமல் பயமுறுத்திக் கொண்டிருந்த மழையும் ஓரளவு சென்ற வாரத்தில் மிகவும் நன்றாகவே வந்ததால் சந்தையில் அதற்கும் சந்தோஷம் தெரிந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 494 புள்ளிகள் கூடி 14,744 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 143 புள்ளிகள் கூடி 4,374 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.புதிய வெளியீடுகள்: மகிந்த்ரா ஹாலிடே ரிசார்ட் புதிய வெளியீடு ஒன்பது தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டது ஞாபகமிருக்கலாம். அந்த கம்பெனியின் பங்குகள் வியாழனன்று சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஆனால், பெரிய அளவில் பரிணமிக்கவில்லை; அதே சமயம், வாங்கியவர்களுக்கு நஷ்டமும் தரவில்லை. ராஜ் ஆயில் மில் என்ற கம்பெனி (கோக்கோ ராஜ், கினியா மற்றும் ராஜ் போன்ற எண்ணெய் பிராண்ட்களைத் தயாரிக்கும் கம்பெனி) தனது புதிய வெளியீட்டை கொண்டு வரவுள்ளது. நாளை துவங்கி 23ம் தேதி முடிக்கவுள்ளது; விலை 100 முதல் 120 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் வெளியிடப்போகும் பங்குகள் 95,00,000 ஆகும். திரட்டப்படும் மூலதனத்தின் அளவு 114 கோடி ரூபாய். 1943ல் துவங்கப்பட்ட கம்பெனி, வட இந்திய மாநிலங்களில் மிகவும் புகழ் பெற்ற பிராண்ட்கள். ஆகவே, போடத்தகுந்த வெளியீடு. இது தவிர, அதானி பவர் வெளியீடு இந்த மாதத்தில் வருகிறது எனவும், என்.எச்.பி.சி., வெளியீடு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகிறது எனவும் செய்திகள் வருகின்றன.
பணவீக்கம்: இந்த வார பணவீக்கம் மைனஸ் 1.21 சதவீதமாக உள்ளது. இது, சென்ற வாரத்தை விட 0.34 சதவீதம் குறைவு. ஏன் குறைந்தது? பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் கூட்டப்பட்டது அல்லவா, அதனால் தான்.
மின்னிய தங்கம்: தங்கம் மறுபடி 15,000ஐ முத்தமிட்டு இறங்கியது. கடந்த ஒரு ஆண்டில் இது தான் அதிகபட்சம். இப்போது யாரும் வாங்கத் தயாரில்லை. அதே சமயம் விற்பதற்கு கியூ நிற்கிறது. ஏனெனில், இது தான் விற்க நல்ல சமயம்; பின் விலை குறையும் போது வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான். இது குஜராத் மற்றும் வட மாநிலங்களில் அதிகமாக நடக்கிறது. தமிழகத்தில் யாராவது வாங்கிய தங்கத்தை விற்க விடுவார்களா? வீட்டிற்குள் வந்த லஷ்மியை வெளியே அனுப்பலாமா, இது தான் மனைவிகளின் கேள்வியாக இருக்கும். நல்ல மழை இருந்து, நல்ல அறுவடை இருந்தால் விலை கூடுதலாக இருந்தாலும் தங்கம் விற்பனை கூடும்.
காலாண்டு முடிவுகள்: எல் அண்ட் டி கம்பெனியின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 200 சதவீதத்திற்கு கூடியுள்ளது. வேறு வருமானங்கள் கூடியுள்ளதால் காலாண்டு லாபங்களும் 1,500 கோடி ரூபாய் அளவில் வந்திருக்கிறது. மேலும், பஜாஜ் ஆட்டோ நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்: வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவது மறுபடி அதிகரித்துள்ளது பங்குச் சந்தை கூடுவதற்கு ஒரு காரணம். செவ்வாயன்று 452 கோடி ரூபாய்க்கும், புதனன்று 1,031 கோடி ரூபாய்க்கும் பங்குகளை வாங்கியுள்ளனர். ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 5,112 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இது, ஜூன் மாதத்தில் 3,224 கோடி ரூபாயாக இருந்தது. ஜனவரி 1 முதல் ஜூலை 15ம் தேதி வரை 30,000 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? உலகளவில் பங்குச் சந்தைகளின் ஏற்றம், அமெரிக்காவில் பெரிய கம்பெனிகளின் நல்ல காலாண்டு முடிவுகள் (ஜே.பி. மார்கன், இன்டெல், கோல்டுமென் சாக்ஸ் போன்றவை), அதிகமாகி வரும் வெளிநாட்டு முதலீடுகளை வைத்துப் பார்க்கும் போது சந்தை, தங்கம் போல் மிளிரும்.
- சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்