Monday, March 16, 2009

தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்த பங்கு சந்தை

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பங்கு சந்தை உயர்ந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது கடைசி இரண்டு மணி நேரத்தில் குறியீட்டு எண் வேகமாக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்கும் எற்ற நிலையும் இந்திய பங்கு சந்தையை உயர்த்த உதவியது எனலாம். சென்செக்ஸ் 8,900 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 2,700 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. பேங்கிங், டெலிகாம், ஆயில் அண்ட் கேஸ், கேப்பிடல் குட்ஸ் மற்றும் பவர் பங்குகள் இன்று உயர்ந்திருந்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முலம் அதிக தொகை பங்கு சந்தைக்கு வந்தது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 186.93 புள்ளிகள் ( 2.13 சதவீதம் ) உயர்ந்து 8,943.54 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 58 புள்ளிகள் ( 2.13 சதவீதம் ) உயர்ந்து 2,777.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி., பெல், டி.எல்.எஃப், ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், ஹெச்.யு.எல், டி.சி.எஸ், எல் அண்ட் டி போன்ற நிறுவனங்கள் அதிகம் லாபம் பார்த்தன. இருந்தாலும் இன்போசிஸ், மாருதி, சன் பார்மா, கிராசிம், சிப்லா, கெய்ர்ன், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, யூனிடெக் ஆகியவை சரிவை சந்தித்தன.
நன்றி :தினமலர்


ரிடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்திடமிருந்து 350 மில்லியன் டாலர் ஆர்டர் பெற்றது ஹெச்.சி.எல்

பிரபல மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட், 350 மில்லியன் டாலர் ( சுமார் 1,785 கோடி ரூபாய் ) மதிப்புள்ள ஐ.டி.அவுட்சோர்சிங் வேலைக்கான ஆர்டரை ஹெச்.சி.எல்.,க்கு கொடுத்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம், ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்திற்கு தேவையான ஐ.டி.தொடர்பான வேலைகளை ஏழு ஆண்டுகளுக்கு ஹெச்.சி.எல் நிறுவனம் செய்து கொடுக்கும். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்பட்டு ஐ.டி.தொழில் முடங்கிப்போயிருக்கும் இந்த வேளையில் இப்படியொரு ஆர்டர் ஹெச்.சி.எல்.,க்கு கிடைத்திருப்பது பெரிய விஷயமாக சொல்லப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து ரீடர்ஸ் டைஜஸ்டின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( சர்வதேச நடவடிக்கைகள் ) அல் பெரூசா தெரிவிக்கையில், ஐ.டி., வேலைகளில் செலவையும் குறைத்து அதே நேரத்தில் நல்ல சேவையையும் ஹெச்.சி.எல்., அளிக்கும் என்று நாங்கள் நம்புவதால் இந்த வேலையை அவர்களிடம் கொடுத்திருக்கிறோம் என்றார்.
நன்றி: தினமலர்


டாடாவின் ' நானோ ' வருகையால் ஆட்டோ ரிக்ஷா விற்பனை பாதிக்கும் ?

உலகின் மிக மலிவான கார் ' நானோ ' விற்பனைக்கு வர இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்நிலையில் அதன் வருகையால் ஆட்டோ சந்தையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்போதே ஆராய துவங்கிவிட்டன. ' நானோ ' கார் வருகையால் ஆட்டோ ரிக்ஷா விற்பனை படுத்து விடும் என்று சில கம்பெனிகள் கருதுகின்றன. ஆட்டோவில் சென்று கொண்டிருந்தவர்கள் இனிமேல் ' நானோ ' வில் செல்ல ஆரம்பிப்பார்கள் என்கின்றனர் சிலர். மாருதி 800 கார் விற்பனையை நானோ குறைக்கும் என்கின்றனர் சிலர். பழைய கார் வாங்குபவர்கள் மற்றும் அதிக விலை மோட்டார் சைக்கிளை வாங்குபவர்கள் இனிமேல் நானோ வுக்கு மாறுவார்கள் என சில நிறுவனங்கள் கருதுகின்றன. ஆனால் ' நானோ ' வால் வரக்கூடிய உண்மையான அபாயம், அதன் டீசல் மாடல் கார் வெளிவரும்போதுதான் இருக்கும் என்கிறார்கள் பலர். இப்போதைக்கு வெளிவரும் பெட்ரோல் கார், முதல் வருடத்தில் வருடத்திற்கு ஒரு லட்சம் தயாரிக்கப்படுகிறது. பின்னர், அதன் தொழிற்சாலையில முழு அளவிலான தயாரிப்பு துவங்கியதும் அதை விட அதிக அளவில் தயாரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. நானோ காரால் ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து, இந்தியாவின் மிகப்பொரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் சேர்மன் ஆர்.சி.பார்கவா கருத்து தெரிவித்தபோது, ஆட்டோ ரிக்ஷாவின் விலையில் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே ' நானோ ' கிடைக்கிறது. ஆட்டோ அளவுக்கு ' நானோ 'வும் கிலோ மீட்டர் கொடுக்கும். மேலும் ஆட்டோவை விட ' நானோ ' அதிக தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும். எனவே ஆட்டோ ரிக்ஷாவுக்கு நிச்சயமாக ' நானோ ' ஒரு மாற்று வாகனமாக இருக்கும் என்றார். இந்தியாவில் வருடத்திற்கு 3,00,000 ஆட்டோ ரிக்ஷாக்கள் விற்பனையாகின்றன. அதன் விலை ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்கிறது. மேலும் ' நானோ ' வின் வருகையால் மாருதி 800 விற்பனையும் கொஞ்சம் பாதிக்கும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், ரூ.2 லட்சம் அளவில் கிடைக்கும் மாருதி 800 காருக்கு பதிலாக ஏன் ரூ.ஒரு லட்சத்தில் ' நானோ ' னை வாங்கக்கூடாது என்று கார் பிரியர்கள் எண்ணுவது இயற்கைதான் என்றார்.
நன்றி : தினமலர்


ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு விற்பனை ?

கடந்த ஒரு வருடத்திற்கு முன் மூடப்பட்ட ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் இன்று மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இருக்கும் அதன் 1,432 பெட்ரோல் பங்க்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு விற்கப்படும் அல்லது குத்ததைக்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷனும் இணைந்த நிறுவனமாக ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்கள் மாற்றப்படும் என்றும், அதன் நிர்வாகம் இந்தியன் ஆயில் கார்பரேஷனிடம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்க்களை அமைக்க ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ரூ.5,000 கோடியை முதலீடு செய்திருக்கிறது. அதை அப்படியே விட்டு விட அது தயாராக இல்லை. எனவே, அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷனுடன் பார்ட்னராக சேர்ந்து விட்டால், இதுவரை அரசிடமிருந்து பெட்ரோலுக்காக கிடைக்காத மானியம் இனிமேல் கிடைக்கும். ஏனென்றால், குஜராத் ஜாம் நகரில் ரிலையன்ஸ் க்கு சொந்தமாக இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலுமாக ஏற்றுமதிக்காக ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அதிலிருந்தும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்களுக்கு பெட்ரோலை எடுத்துக்கொள்ள முடியாமல் இருந்தது.எனவே அது நஷ்டத்திலேயே பெட்ரோல் மற்றும் டீசலை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. எனவேதான் ஒரு வருடத்திற்கு முன் அவைகள் மூடப்பட்டன.
நன்றி : தினமலர்


பண்ணை சாரா கடன்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் வசூலாகாமல் உள்ள பண்ணை சாராக் கடன்களுக்கான அபராத வட்டியை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் காலங்கடந்து நிலுவையில் இருந்த பண்ணை சாராக் கடன்களை வசூலித்து, வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்த, வட்டிக் குறைப்புத் திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இத்திட்டம், கடந்த 2008 ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களை சரிவர திருப்பி செலுத்தாவிட்டால், அவை தவணை தவறிய கடன்களாகி, வசூல் ஏதுமின்றி வங்கிகளின் லாபம் குறைந்தது. இந்நிலையில், பண்ண சாரா கடன்கள், நில அடமான கடன், தொழில் மற்றும் வணிகம் செய்ய பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டுமென சட்டசபை பட்ஜெட் தொடரில் வலியுறுத்தப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதத்துக்கு கடந்த மாதம் 25ம் தேதி பதிலளித்த நிதியமைச்சர் அன்பழகன், 'இந்த கடன் தொகை 739 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளதால், அவற்றை ரத்து செய்ய முடியாது. எனினும் கடன் தொகையை மட்டும் செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார். இதன்படி, பண்ணை சாராக் கடன்களுக்கான வட்டிக் குறைப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதன்படி, அபராத வட்டியை தள்ளுபடி செய்து கடந்த மாதம் 28ம் தேதி, கூட்டுறவுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பண்ணை சாராக் கடன்கள், சிறு போக்குவரத்துக் கடன்கள், வீட்டு வசதி கடன்கள், வீட்டு அடமானக் கடன்கள், நுகர்பொருள் கடன்கள், சம்பளக் கடன்கள், தொழில் வல்லுனர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், சிறு வியாபாரக் கடன், தொழில், சேவை வியாபாரம் போன்றவற்றின் கீழ் வரும் இதரக் கடன்கள், தனி நபர்கள் பெற்ற காசுக் கடன்கள் ஆகியவற்றுக்கு இத்திட்டம் பொருந்தும்.
இத்திட்டப்படி, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பண்ணை சாராக் கடன்கள் பெற்று, தவணை தவறி நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும், 2001 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வட்டி விகிதம் 12 சதவீதமாக கணக்கிடப்பட்டு, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள கடன்களுக்கான இச்சலுகை, கடன்காரர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தவறிய நிலுவைத் தொகைக்கு மட்டுமே நேர் செய்யப்படும். இதனால், கூட்டுறவு வங்கிகளில் இருந்து நிதி வெளியேற்றம் ஏதும் இருக்கக் கூடாது. இதில், தீர்ப்பாணை நிறைவேற்று மனு தாக்கல் செய்யப் பட்ட இனங்களுக்கும், மற்ற சாதாரணக் கடன்கள் போலவே வட்டி குறைப்பு அளிக்கப்படும். திருத்தியமைக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி வசூலிக்க வேண்டிய தொகையில் 25 சதவீதத்தை இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு, மீதமுள்ள 75 சதவீத தொகையை வரும் ஜூன் 30ம் தேதிக்குள் செலுத்தி கடனை முடிக்க, கடன்தாரர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட தேதிக்குள், இச்சலுகையை பயன்படுத்தி தவணை தவறிய கடன்கள் முழுவதையும் செலுத்துவோருக்கு மட்டுமே சலுகைகள் முறைப்படுத்தப்படும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் நேர் செய்யாதவர்களிடம், வர வேண்டிய தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வங்கிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்படுவதாலும், அபராத வட்டி தள்ளுபடி செய்வதாலும் ஏற்படும் நிதியிழப்பை அந்தந்த கூட்டுறவு வங்கிகளே ஏற்க வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட பிப்ரவரி 28ம் தேதி நிலுவையில் உள்ள கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஏற்கனவே, 2008 ஜூன் 30ம் தேதி வரை வட்டி குறைப்புத் திட்டப்படி, 25 சதவீத தொகையை மட்டும் செலுத்தி, எஞ்சிய 75 சதவீத தொகையை அந்த தேதிக்குள் செலுத்த முடியாமல் போன கடன்தாரர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வாறு கூட்டுறவுத் துறை செயலர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
நன்றி : தினமலர்


வங்கிகள் வராக்கடன் ரிசர்வ் வங்கி புது திட்டம்

பொதுத்துறை வங்கிகளில் உள்ள பெரிய அளவில் உள்ள வராக்கடன் விஷயத்தில் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவரப் போகிறது. வராக்கடனைக் கட்டுவதற்கு உடன்பாடு ஏற்பட்டால், இனி சி.பி.ஐ., அதற்கு ஒப்புதல் தரவேண்டும். பொதுத்துறை வங்கிகளில் வராக்கடன் அளவு குறைந்து வந்தாலும், சில விஷயத்தில் கோடிக்கணக்கில் அதிகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நிலை உள்ளது. தற்போது எந்தெந்த நிறுவனம் அல்லது தனியார் மீது கிரிமினல் நடவடிக்கை உள்ளதோ அந்த விஷயத்தில் சி.பி.ஐ.,யின் அனுமதி பெற்ற பின்பே வராக்கடன் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. ஏனெனில், ஒரு வர்த்தகர் வங்கி ஒன்றில் தன் மீதிருந்த கடன் பாக்கி வசூல் கிரிமினல் வழக்கில், வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 525 கோடி ரூபாய் கட்ட வேண்டியதற்கு, பேசி முடிவு செய்து 400 கோடி ரூபாய் கட்டி, வராக்கடன் புகாரில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். அத்துடன், பணம் கட்டியதால், கிரிமினல் வழக்கு இல்லை என்று எழுதியும் வாங்கிக் கொண்டார். ஆகவே, பணபாக்கி உள்ள வராக்கடன் வைத்திருப்பவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது, கிரிமினல் வழக்கு இல்லை என்று அத்தாட்சி பெறுமுன் சி.பி.ஐ ., அனுமதியையும் பெற வேண்டும். இதற்கான நடைமுறையை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


கடலுக்கு நடுவே கன்டெய்னர் டெர்மினல்: சீனாவுக்கு அடுத்து சென்னையில் உருவாகிறது

சீனாவுக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே முதன் முறையாக சென்னை துறைமுகம் அருகே நடுக்கடலின் மத்தியில், 'மெகா கன்டெய்னர் டெர்மினல்' எனப்படும் மிகப்பெரிய சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படவுள்ளது. மூன்றாயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த சரக்கு பெட்டக முனையம், இந்தியாவிலேயே பெரிய முனையமாக இருக்கும். சென்னை துறைமுகத்தில் தற்போது சரக்குகளை ஏற்றி இறக்குவதில் உள்ள இடப்பற் றாக்குறை சிரமங்களைத் தவிர்க்க, கூடுதலாக மேலும் ஒரு கன்டெய்னர் டெர்மினல் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இரண்டாவது கன்டெய் னர் டெர்மினல் அமைத்து அதன் பணிகள் முடிவு பெற்றுள்ளன. இரண்டொரு மாதங்களில் இந்த டெர்மினல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெர்மினல் மூலம் சரக்குகள் கையாளப்பட்டு வரும் நிலையில், தற்போதைய இரண்டாவது டெர்மினல் மூலம் கூடுதலாக ஒரு மடங்கு சரக்குகளைக் கையாள வாய்ப்புள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு புதிய டெர்மினல் அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து இரண்டு கி.மீ., தூரத்தில் நடுக்கடலுக்கு மத்தியில் மெகா கன்டெய்னர் டெர்மினல் அமைக்கப்படவுள்ளது. மூன்றாயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த டெர்மினல் பெர்த் 22 மீட்டர் ஆழமும், இரண்டு கி.மீ., வரை நீளமும் கொண்டதாக இருக்கும். இந்த டெர்மினலுக்கு என கடலுக்குள் இரண்டு கி.மீ., தூரம் வரை சாலை அமைக்கப்படவுள்ளது.
கடலுக்கு மத்தியில் கன்டெய்னர் டெர்மினல் என்பது சீனாவில் மட்டுமே உள்ளது. அந்நாட்டின் புகழ் பெற்ற ஷாங்காய் துறைமுகத்தில் மட்டுமே இது போன்ற கடல் நடுவிலான கன்டெய்னர் டெர்மினல் உள்ளது. கடற்கரையில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் கடல் நடுவே இந்த கன்டெய்னர் டெர்மினல் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாகவும் இந்தியாவிலேயே முதன்முறையாகவும் சென்னையில் தற்போது, 'மெகா கன்டெய்னர் டெர்மினல்' அமைக்கப்படவுள்ளது. இந்த டெர்மினல் அமைப்பதற்கு, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விடுத்த டெண்டரில், சர்வதேச நிறுவனங்கள் பலவும் கலந்து கொண்டு, இறுதியில் ஒன்பது நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. லார்சன் அண்ட் டியூப்ரோ, முந்திரா, புஞ்ச்லாய்ட், லான்கோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இந்த சூழ்நிலையிலும் கூட இத்தனை நிறுவனங்கள் போட்டியில் குதித்துள் ளது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. பொது மற்றும் தனியார் கூட்டு நடவடிக்கையாக அமைக் கப்படவுள்ள இந்த டெர்மினலில் பங்கெடுக்க பெரிய நிறுவனங்கள் போட்டியிட, போர் நினைவுச் சின்னத்திலிருந்து மதுரவாயல் வரை அமைக்கப்படவுள்ள மேம்பாலச் சாலை திட்டமே காரணம். போர் நினைவுச் சின்னத்தில் இருந்து தங்குத் தடையே இல்லாமல் மதுரவாயல் வரை சரக்குகளை எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் இந்த சாலை திட்டப்பணிகள் அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது. கடல் நடுவிலான கன்டெய்னர் டெர்மினல் அமைக்கும் பணி குறித்த திட்டம், பொது முதலீட்டு ஆணையம் மற்றும் மத்திய அமைச்சரவை ஆகியவற்றின் ஒப்புதல் பெறுவதற்கு மூன்று மாதங்கள் ஆகும் என்றும், அதன்பின் மளமளவென பணிகள் துவங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : தினமலர்