Saturday, March 28, 2009

கியர் வண்டிகளை இனிமேல் தயாரிப்பதில்லை : ஹோண்டா இந்தியா முடிவு

இனிமேல் கியர் உள்ள இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் தயாரிப்பது இல்லை என்று ஹோண்டா இந்தியா முடிவு செய்திருக்கிறது. கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவதால் அது, அதன் 150 சிசி மாடல் ' எடர்னோ ' வை சந்தையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருக்கிறது. ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தின் 100 சதவீத இந்திய நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா, நேற்று ' ஆக்டிவா ' என்ற புதிய கியர் இல்லாத ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன் விலை ரூ.39,800 ( எக்ஸ் ஷோரூம் - டில்லி ). நாங்கள் இனிமேல் ' எடர்னோ ' வை தயாரிக்கப்போவதில்லை. ஏனென்றால் இனிமேல் கியர் உள்ள இரு சக்கர வாகனங்களை தயாரிக்கப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம் என்றார் ஹோண்டா இந்தியாவின் தலைவர் மற்றும் சி.இ.ஓ.,ஷிஞ்சி அயோமா. இனிமேல் நாங்கள் கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் தயாரிப்பில்தான் கவனம் செலுத்த இருக்கிறோம். எனவே இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்டிவா மூலம் இரு சக்கர வாகன விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை 2009 - 10 ல் எதிர்பார்க்கிறோம் என்றார். எங்களது எடர்னோ, வருடத்திற்கு 40 ஆயிரம் மட்டுமே விற்பனையானது. இது மிக மிக குறைந்த விற்பனை. எனவே தான் அதை சந்தையில் இருந்து வெளியேற்றுகிறோம் என்றார் அயோமா. எடர்னோவை விட, இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்டிவா 15 சதவீதம் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்றார் அவர்.
நன்றி : தினமலர்


டாடா குழுமத்தின் முக்கிய மூன்று அதிகாரிகள் விரைவில் மாற்றம்

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களில் மேலாண் இயக்குனர்கள் விரைவில் மாற்றப்பட இருக்கிறார்கள். சமீப காலமாக இந்த மூன்று பேரும் தான் டாடா குழுமத்தின் முக்கிய பெரிய அதிகாரிகளாக பேசப்படுகிறார்கள். ஆனால் இந்த மூன்று பேருமே விரைவில் அவர்களுக்கு பதிலாக வரப்போகிறவர் யார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டாடா குழுமத்தில் இந்த மூன்றும்தான் முக்கிய நிறுவனங்கள் . டாடா குழுமத்தின் மொத்த வரவு செலவில் 80 சதவீத வரவு இந்த மூன்று நிறுவனங்களில்தான் நடக்கிறது. இதிலிருந்து முதலில் வெளியேற இருப்பது டாடா மோட்டார்ஸின் மேலாண் இயக்குநர் ரவி காந்த் தான். வரும் ஜூன் மாதம் அவர் ஓய்வு பெறுகிறார். டாடா குழுமத்தில் சட்டதிட்டப்படி, எக்ஸிகூடிவ் டைரக்டர்கள் கண்டிப்பாக 65 வயதில் ஓய்வு பெற்று விட வேண்டும். இவர் தவிர டாடா ஸ்டீல் மேலாண் இயக்குனர் முத்துராமன் செப்டம்பர் மாதத்திலும், டி.சி.எஸ்.சின் மேலாண் இயக்னர் ராமதுரை அக்டோபர் மாதத்திலும் ஓய்வு பெறுகின்றனர். முக்கியமான இந்த மூன்று பேரும் ஓய்வு பெற்றாலும் டாடாவில் இருந்து முழவதுமாக வெளியேறிவிட மாட்டார்கள். அங்குள்ள ' நான்- எக்ஸிகூடிவ் 'களுக்கு ஒய்வு பெரும் வயது 75 தான் என்பதால், இவர்கள் மூன்று பேருமே அதே நிறுவனத்தில் ' நான் - எக்ஸிகூடிவ் ' ஆக பணியாற்றுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ' நான் - எக்ஸிகூடிவ் ' களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த சில வருடங்களுக்கு முன் தான் 70 இலிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டு, ரத்தன் டாடா தொடர்ந்து சேர்மனாக இருந்து வருகிறார்.
நன்றி : தினமலர்


எஸ்.பி.ஐ.,யில் ரூ.3,000 கோடி கிரிடிட் லிமிட் கேட்கிறது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.1,500 கோடியில் இருந்து ரூ.3,000 கோடி வரை கிரிடிட் லிமிட் ( அதிகபட்டமாக வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படும் கடன் ) கொடுக்கும் படி கேட்டிருக்கிறது. கிங்ஃபிஷர் நிறுவனத்தின் நிர்வாக செலவுக்கு பணம் தேவைப்படுவதால் கடன் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து கிங்ஃபிஷரின் சேர்மன் விஜய் மல்லையா, கடந்த செவ்வாய் அன்று மும்பையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளதாகவும், அதற்காக , கம்பெனியின் வளர்ச்சி திட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் கடன் தேவைக்கான காரணம் போன்றவற்றை கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கடன் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் அதிகாரிகளும் சாதகமான பதிலையே அளித்திருப்பதாகவும், எவ்வளவு காலத்திற்கு கடன் அளிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இப்போது கடும் நிதி சிக்கலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பல நிறுவனங்களுக்கு அது பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனவரி மாதத்தில் அது, ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியாவுக்கு, பேங்க் கியாõரன்டி மற்றும் போஸ்ட் டேட்டட் செக் கைதான் கொடுத்ததாகவும் செல்லப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் மற்ற நிறுவனங்களைப்போலவே கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸூம் கடுமையாக நஷ்டமடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிதி ஆண்டில் அது அடைந்திருக்கும் நஷ்டத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதாலும், சர்வதேச விமான சேவைக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாலும், விமானங்களுக்கான குத்ததை பணம் அதிகமாக இருப்பதாலும், வட்டி உயர்ந்திருப்பதாலும் நஷ்டம் அதிகரிக்கிறது என்கிறது கிங்ஃபிஷர் நிறுவனம்.
நன்றி : தினமலர்


பாகிஸ்தானுக்கு உலக வங்கி 500 மில்லியன் டாலர் வட்டியில்லா கடன்

சீரழிந்து போயிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, உலக வங்கி, அந்நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.2,500 கோடி ) வட்டியில்லாத கடன் வழங்க ஒத்துக்கொண்டிருக்கிறது. இந்த கடன் மூலம் அந்நாடு மீண்டும் பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக உயரும் என்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த சில காலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னை காரணமாக பாகிஸ்தானின் நுண்பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் நிலவும் மோசமான அரசியல் நிகழ்வுகள் காரணமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அந்நாடு இழந்து விட்டது என்றும், அதனால் உள்நாட்டு நுண்பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப் பட்டிருப்பதாக அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யில் விலை ஏற்றத்தால் பாகிஸ்தானில் உணவுப்பொருட்களின் விலையும் உயர்ந்து என்றும், அதன் காரணமாக அங்கு பணவீக்கமும் அதிகரித்து விட்டது என்கிறார்கள். மேலும் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை காரணமாக, பாகிஸ்தானில் தயாராகும் பொருட்களுக்கான தேவை குறைந்து அதனால் அந்நாட்டு ஏற்றுமதியும் குறைந்து விட்டது என்கிறார்கள். இது போன்ற காரணங்களால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டு பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, உலக வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் அசோசியேஷன் ( ஐடிஏ ) என்ற கடனளிக்கும் நிறுவனம், பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலர் ( சுமார் 2,500 கோடி ரூபாய் ) வட்டியில்லா கடன் கொடுக்கிறது. வட்டி கிடையாது என்றாலும் இதற்காக சர்வீஸ் சார்ஜ் ஆக 0.75 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படும். 35 வருடங்களில் இந்த கடனை திருப்பி கொடுத்தால் போதுமானது.
நன்றி : தினமலர்


சத்யத்தை வாங்கும் திட்டத்தில் இருந்து விலகியது ஸ்பைஸ் குரூப்

நிதி மோசடியில் சிக்கி சீரழிந்து போயிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 51 சதவீத பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து நிறைய நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. ஆனால் அதிலிருந்து சில நிறுவனங்கள் பின்னர் வேண்டாம் என்று அதிலிருந்து விலகிக்கொண்டன. இப்போது பி.கே.மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் குரூப்பும் வேண்டாம் என்று விலகிக்கொண்டுள்ளது. இப்போதைக்கு நாங்கள் அதை வாங்க விரும்பவில்லை என்று ஸ்பைஸ் குரூப்பின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். கம்பெனி சட்ட வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் வெளிப்படையாக ( டிரான்ஸ்பரன்ட் ஆக ) நடப்பதாக இருந்தால், மீண்டும் வாங்கும் முன்வருவோம் என்றார் ஸ்பைஸ் இன்னோவேட்டிவ் டெக்னாலஜிஸின் எக்ஸிகூட்டிவ் இயக்குனர் பிரீத்தி மல்ஹோத்ரா. இந்த விற்பனை, கம்பெனி சட்ட வாரியத்தின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு நடப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. எனவே அதன்படி நடந்தால் மட்டுமே நாங்கள் மீண்டும் அதை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார் அவர். மேலும் இந்த விற்பனையை அவர்கள் ( மத்திய அரசு நியமித்த சத்யத்தின் போர்டு ), வெளிப்படையான ஏலம் மூலம் நடத்தியிருக்கலாம். சர்வதேச அளவில் வெளிப்படையான ஏலம் மூலம் தான் கம்பெனிகள் விற்கப்படுகின்றன. கோரஸ் கம்பெனியை டாடா, வெளிப்படையான ஏலம் மூலம் தான் வாங்கியது. அவ்வாறு விற்கும்போது நிறைய விலை கிடைக்கலாம். சந்தேகங்களும் தீரும். ஆனால் சத்யத்தில் 51 சதவீத பங்குகள் மூடப்பட்ட ஏலம் மூலம் நடக்கிறது. எனவே இதில் நாங்கள் ஆர்வம் கொள்ளவில்லை என்றார் அவர்.
நன்றி : தினமலர்


மாதம் 6,250 ரூபாய் சம்பளம் பெறுபவரா? : நானோ வருகையால் வங்கி கடன் உண்டு

மாதம் 6,250க்கு மேல் சம் பளம் பெறுபவரா நீங்கள்? அப்படியானால், கார் வங்குவதற்கு உங்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கும். டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படுத்தக் கூடிய வகையிலான கார் என தொழில் அதிபர் ரத்தன் டாடா இதை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குறைந்த வருவாய் உடையவர்கள் இந்த காரை வாங்குவதற்கு வங்கிகளில் கடன் வசதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தற்போது கார் கடன் வாங்க வேண்டுமெனில், ஒருவரது ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தாலும் அவரது ஆண்டு வருமானமும் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண் டும். தற்போது நானோ கார் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதால், குறைந்த அளவு வருவாய் பெறுவோரும், அதை வாங்குவதற்கு வகை செய்யும் விதமாக கடன் பெறுவதற்கான வருமானத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரமாக இருந்தால், அவருக்கு கார் வாங்குவதற்கு கடன் வசதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் 6,250 ரூபாய் சம்பளம் பெறுபவரும் இனிமேல் காருக்கான கடன் வசதியை பெற முடியும். அதே நேரத்தில், சொந்தமாக தொழில் செய்பவர், கார் கடன் பெற வேண்டுமெனில் அவரது ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண்டும்'என்றார்.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறியதாவது: இரு சக்கர வாகனங்களை வாங்குவோரை, காருக்கு மாறச் செய்யும் வகையில் தான் நானோ கார் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய் நானோ காரின் 'எகானமி' மாடலை வாங்குவதற்கு 2,999 ரூபாய் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். நடுத்தர ரக காருக்கு 3,499 ரூபாயும், உயர் ரக காருக்கு 3,999ம் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு நானோ கார் ஒதுக்கீடு செய்யப்பட்டால், முன்பதிவு கட்டணம், வங்கியின் நானோ கார் கடன் வசதி திட்டத்துக்கு மாற்றப்படும்.அதிகபட்சமாக ஏழு ஆண்டு காலத்திற்கு 11.75 சதவீதத்தில் இருந்து 12 சதவீத வட்டி வரை கடன் வழங்கப்படும். இவ்வாறு வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமலர்