மாதம் 6,250க்கு மேல் சம் பளம் பெறுபவரா நீங்கள்? அப்படியானால், கார் வங்குவதற்கு உங்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கும். டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படுத்தக் கூடிய வகையிலான கார் என தொழில் அதிபர் ரத்தன் டாடா இதை அறிவித்துள்ளார்.இந்நிலையில், குறைந்த வருவாய் உடையவர்கள் இந்த காரை வாங்குவதற்கு வங்கிகளில் கடன் வசதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தற்போது கார் கடன் வாங்க வேண்டுமெனில், ஒருவரது ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தாலும் அவரது ஆண்டு வருமானமும் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண் டும். தற்போது நானோ கார் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதால், குறைந்த அளவு வருவாய் பெறுவோரும், அதை வாங்குவதற்கு வகை செய்யும் விதமாக கடன் பெறுவதற்கான வருமானத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரமாக இருந்தால், அவருக்கு கார் வாங்குவதற்கு கடன் வசதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் 6,250 ரூபாய் சம்பளம் பெறுபவரும் இனிமேல் காருக்கான கடன் வசதியை பெற முடியும். அதே நேரத்தில், சொந்தமாக தொழில் செய்பவர், கார் கடன் பெற வேண்டுமெனில் அவரது ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண்டும்'என்றார்.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறியதாவது: இரு சக்கர வாகனங்களை வாங்குவோரை, காருக்கு மாறச் செய்யும் வகையில் தான் நானோ கார் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய் நானோ காரின் 'எகானமி' மாடலை வாங்குவதற்கு 2,999 ரூபாய் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். நடுத்தர ரக காருக்கு 3,499 ரூபாயும், உயர் ரக காருக்கு 3,999ம் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு நானோ கார் ஒதுக்கீடு செய்யப்பட்டால், முன்பதிவு கட்டணம், வங்கியின் நானோ கார் கடன் வசதி திட்டத்துக்கு மாற்றப்படும்.அதிகபட்சமாக ஏழு ஆண்டு காலத்திற்கு 11.75 சதவீதத்தில் இருந்து 12 சதவீத வட்டி வரை கடன் வழங்கப்படும். இவ்வாறு வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமலர்

No comments:
Post a Comment