Friday, August 8, 2008

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் ராஜினாமா

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக இருந்த டாக்டர்.சி.ரங்கராஜன் ( 76 ) பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜ்யசபா மெம்பராக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் அமைச்சராவார் என்று சொல்லப்படுகிறது. இதற்காகத்தான் ராஜினாமா செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போது அதே பொருளாதார கவுன்சிலில் மெம்பராக இருக்கும் பொருளாதார நிபுணர் சுரேஷ் டெண்டுல்கர் இவருக்கு பதிலாக தலைவராக நியமிக்கப்படுகிறார் என்கிறார்கள். அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஹெச்.டி.பட்டம் பெற்றிருக்கும் சுரேஷ் டெண்டுல்கர், 2005 ஜனவரியில் இருந்து பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் பகுதி நேர மெம்பராக இருக்கிறார். இவர் 2006 ஜூலையில் இருந்து தேசிய புள்ளியியல் கமிஷனிலும் பகுதி நேர சேர்மனாக இருக்கிறார். இது தவிர 2006 ஜூனில் இருந்து ரிசர்வ் வங்கியின் டைரக்டர்கள் போர்டிலும் இருக்கிறார்.டாக்டர் சி.ரங்கராஜனும் ஒரு சிறந்த பொரளாதார நிபுணர். ஆந்திராவின் கவர்னராக இருந்தவர். 12 வது நிதி கமிஷனில் சேர்மனாக பணியாற்றியவர். கடந்த மே மாதத்தில் காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே இறந்து விட்டதால் ஒரு ராஜ்ய சபா மெம்பர் இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை ரங்கராஜன் நிரப்புவார் என்று சொல்லப்படுகிறது. அவர் ராஜ்ய சபா மெம்பராக்கப்பட்டு, கேபினட் அமைச்சர் பதவியும் கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அல்லது முக்கிய பொருளாதார துறை பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


பெண்களுக்காக தனி வங்கி : இந்தியன் வங்கி துவங்குகிறது

பெண்களுக்காக தனி வங்கி கிளை ஒன்றை இந்தியன் வங்கி துவங்குகிறது. பெண்கள் சுயஉதவி குழுவினரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அவர்களது அக்கவுட்டை வைத்துக்கொள்ள வசதியாக, அதன் மூலம் விரைவான சேவையை பெற மைக்ரோ ஸ்டேட் பிராஞ்ச் என்ற பெயரில் வங்கி கிளை ஒன்றை இந்தியன் வங்கி துவங்குகிறது. பெண்கள் சுய உதவி குழுவினருக்காக பிரத்யேகமாக இந்த வங்கி துவங்கப்பட்டாலும், அதில் மற்ற பெண்களும் கணக்கு வைத்துக்கொள்ளலாம் என்று இந்தியன் வங்கி தெரிவித்திருக்கிறது. தர்மபுரியில் இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் இந்த புதிய மைக்ரோ ஸ்டேட் பிராஞ்ச் துவங்கப்படும் என்று இந்தியன் வங்கியின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் மற்றும் தர்மபுரி சர்க்கிளின் தலைவர் முத்தப்பன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 6,500 பெண்கள் சுய உதவி குழுக்கள் இயங்குகின்றன என்றும், அவர்கள் மூலம் பெண்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக ரூ.90 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் முத்தப்பன் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்

கச்சா எண்ணெய் விலை 120 டாலரை ஒட்டியே இருக்கிறது


சர்வதேச சந்தையில் இன்று மதியம் நடந்த வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 120 டாலரை ஒட்டியே இருக்கிறது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 23 சென்ட் குறைந்து 119.79 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 26 சென்ட் குறைந்து 117.60 டாலராக இருக்கிறது. இத்தனைக்கும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து மேலை நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும் பைப்லைன்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கிழக்கு துருக்கியில் இருக்கும் பி.டி.சி. என்ற ஆயில் கம்பெனிக்கு சொந்தமான ஆயில் பம்பில் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளதால் அங்கிருந்து வரும் பைப்லைன் தற்காலிகமாக 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


அதிக மாற்றமின்றி முடிந்த இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை இன்று அதிக மாற்றமின்றி முடிந்துள்ளது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து குறைந்த நிலையிலேயே இருந்த சென்செக்ஸ், மதியம் 2 மணிக்கு மேல்தான் கூடியது. அதுவும் சிறிய அளவில்தான். மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 50.57 புள்ளிகள் மட்டும் ( 0.33 சதவீதம் ) உயர்ந்து 15,167.82 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 5.65 புள்ளிகள் மட்டும் ( 0.12 சதவீதம் ) உயர்ந்து 4,529.50 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக காணப்பட்டது. கேப்பிட்டல் குட்ஸ், மெட்டல்,பேங்கிங், பவர் நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. டெக்னாலஜி, ரியல் எஸ்டேட் பங்குகள் விற்கப்பட்டன.

நன்றி : தினமலர்


பணவீக்கம் 12.01 சதவீதமாக உயர்ந்தது


ஜூலை 26ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 12.01 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.98 சதவீதமாக இருந்தது. 0.03 சதவீதம் மட்டும் உயர்ந்திருக்கிறது. பருப்பு வகைகள், வாசனை திரவியங்கள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பணவீக்கம் சிறிது உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மத்திய நிதித்துறையின் செய்திக்குறிப்பில், போன வாரத்திற்கும் இந்த வாரத்திற்குமிடையே விலைவாசி அவ்வளவாக உயரவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல பழங்களின் விலை 0.5 சதவீதம் குறைந்திருக்கிறது. முக்கியமான 98 பொருட்களில் 18 பொருட்களின் விலை குறைந்திருப்பதாக சொல்கிறது அந்த அறிக்கை. மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, விலைவாசியை கட்டுப்படுத்தும் விதமாக இன்னும் சில விவசாய பொருட்களின் ஃபியூச்சர் டிரேடிங்கிற்கு தடைவிதிக்கவுள்ளோம் என்றார். இந்த வாரத்தில் இரும்பு மற்றும் ஸ்டீல் விலை உயரவில்லை. ஆனால் சிமென்ட் விலை சிறிது உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.7 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.
நன்றி : தினமலர்