Tuesday, July 14, 2009

புதிய விமானங்களை வாங்குவதை தள்ளி வைக்க ஏர் - இந்தியா முடிவு

ரூ.7,200 கோடி நஷ்டம் அடைந்து, கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஏர் - இந்தியா நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்ய பங்குகளை விற்பது மற்றும் குறைந்த கால கடன் பெறுவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அத்துடன் அது ஆர்டர் செய்திருக்கும் புது விமானங்களை இப்போது பெறாமல், பெறுவதை தள்ளி வைக்கவும் முடிவு செய்திருக்கிறது. ஏர் - இந்தியாவின் நிலை குறித்தும் அதனை காப்பாற்ற மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்பது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் இதனை தெரிவித்தார். புது விமானங்களுக்காக செய்திருக்கும் ஆர்டரை மாற்றி அமைப்பது, அல்லது ரத்து செய்வது, லாபம் வராத விமான வழித்தடங்களில் விமானங்களை இயக்குவதை குறைப்பது, ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது, ஊக்க தொகையை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரபுல் படேல் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


ஏறியது பங்கு சந்தை

கடந்த வாரத்தில் 10 சதவீத புள்ளிகளை இழந்திருந்த மும்பை பங்கு சந்தை, இன்று இழந்த புள்ளிகளில் கொஞ்சத்தை மீட்டது. சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 135 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்திருந்தது. அமெரிக்க மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் இந்திய பங்கு சந்தையில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. எல்லா துறை பங்குகளும் இன்று நல்ல லாபத்தில் விலை போனது. மெட்டல், ரியால்டி, இன்ஃப்ராஸ்டிரக்சர், பேங்கிங் மற்றும் ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் அதிகம் விற்பனை ஆயின. ஹெச்டிஎப்சி பேங்க் பங்குகள் மட்டுமே இறங்கியிருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 453.38 புள்ளிகள் ( 3.38 சதவீதம் ) உயர்ந்து 13,853.70 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 137.35 புள்ளிகள் (3.46 சதவீதம்) உயர்ந்து 4,111.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. டிஎல்எஃப், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎப்சி, சுஸ்லான் எனர்ஜி, யூனிடெக் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் அதிகம் லாபம் பார்த்தன. அவைகள் 7 முதல் 11.5 சதவீத வளர்ச்சியை பெற்றிருந்தன.
நன்றி : தினமலர்


பருப்பு, அரிசி விலை: ஓட்டல்களில் விலை உயர்வு

உணவு தயாரிப்பு மூலப் பொருட்களான பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை தமிழகத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால், ஓட்டல்களில் சாப்பாடு, டிபன் வகைகளின் விலையை ஆகஸ்ட் 15 முதல் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஓட்டல் உரிமையாளர்கள், நஷ்டத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், கடந்த மாதமே அரசு சாப்பாடு தவிர, மற்ற சாப்பாடு வகைகளில் 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலை ஏற்றத்தை சப்தம் இன்றி அரங்கேற்றி உள்ளனர். தற்போது துவரம் பருப்பு கிலோ 100 ரூபாயை தாண்டும் நிலையில், உளுந்தம் பருப்பு கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாளை முதல் வெளிநாடுகளுக்கான அரிசி ஏற்றுமதி தடை நீக்கப்படும் என்ற தகவல் பரவி வருவதால், அரிசி விலை மீண்டும் உயரும் நிலை உருவாகி உள்ளது. அரிசி, துவரம் பருப்பு விலையில் உயர்வு ஏற்படும் என்ற தகவல் ஓட்டல் உரிமையாளர்களுக்கு முன்னரே தெரிய வந்ததால், தங்களின் இரண்டு மாத தேவைக்கான மூலப்பொருட்களை இருப்பு வைத்துள்ளனர். இந்த விலை உயர்வு மேலும் தொடரும் பட்சத்தில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல், உணவு பண்டங்களின் விலையை பல மடங்கு அதிகரிக்க வேண்டிய நிலைக்கு ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து நடுத்தர நகர ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: பருப்பு வகை, மளிகை சாமான்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வில் இருந்து எங்கள் தொழிலை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அளவு சாப்பாடு 28 ரூபாய்க்கும், ஸ்பெஷல் சாப்பாடு 35 ரூபாய்க்கும், டிபன் வகைகளில் இரண்டு இட்லி 10 ரூபாய், ப்ளைன் தோசை 12 ரூபாய், வடை 7 ரூபாய், பொங்கல் 18 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் முதல் தேதிக்குள் மூலப்பொருட்களின் விலையில் சரிவு ஏற்படாத பட்சத்தில், டிபன் வகைகளின் விலையில், வகைகளுக்கு தக்கபடி 2 முதல் 7 ரூபாய் வரையும், சாப்பாடு விலை 5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
நன்றி : தினமலர்


லண்டன் நிகழ்ச்சிக்காக மீண்டும் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மைக்கேல் ஜாக்ஸன்

உலகத்திலேயே அதிக தடவைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது மைக்கேல் ஜாக்ஸன்தான். முகத்தை பலமுறை பிளாஸ்டிக் செய்ததால் அவரது முகத்தில் முகப்பருக்களும் சிராய்ப்புகளும் அதிகமாக இருந்ததால் அது அசிங்கமாக இருக்கிறது என்று எண்ணி வருந்திய மைக்கேல் ஜாக்ஸன், அதனை மாற்றி அமைக்க விரும்பினார். எனவே மீண்டும் என்னிடம் வந்து முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, வழக்கமான முகத்திற்கு மாறிக்கொண்டார் என்றார், அவருக்கு சுமார் 25 வருடங்களாக பிளாஸ்டிக் சர்ஜனாக இருக்கும் டாக்டர். அர்னால்ட் கிளீன். லண்டனில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன் இந்த ஆப்பரேஷனை செய்து கொள்ள மைக்கேல் ஜாக்ஸன் விரும்பினார் என்றார் அவர். சி என் என் டி.வி.க்கு அளித்த பேட்டியில் டாக்டர். கிளீன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.ஆனால் மைக்கேல் ஜாக்ஸனின் மூக்கு கீழே விழுந்து விட்டது என்று வந்த வதந்தியை மறுத்துள்ளார். அவரது மூக்கு எடுக்கப்படவில்லை. ஆனால் அவரது மூக்கு மிக சிறியதாக இருக்கும் என்றார் அவர். கடந்த மாதம் 25ம் தேதி மைக்கேல் ஜாக்ஸன் மர்மமான முறையில் இறந்து போனார்.
நன்றி : தினமலர்


அரசு ஊழியர்கள் ஏர் - இந்தியா விமானத்தை மட்டுமே பயன்படுத்த உத்தரவு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் - இந்தியாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் மத்திய தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, இனிமேல் மத்திய அரசு ஊழியர்கள், அலுவலக வேலையாக வெளியூருக்கு பயணம் செய்யும் போது, இனிமேல் ஏர் - இந்தியா விமானத்தையே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏர் - இந்தியா விமானங்களையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஏர் - இந்தியா, நிதி பிரச்னையை குறைக்கும் விதமாக, குறைந்த காலத்திற்கு கடன் வாங்க திட்டமிட்டிருக்கிறது. அவ்வாறு கடன் கொடுப்பவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்கிறார்கள். ஒரு வேளை அரசு ஊழியர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஏர் - இந்தியா விமானம் செல்லவில்லை என்றால், எவ்வளவு தூரத்திற்கு ஏர் - இந்தியாவில் போக முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு போய்விட்டு, அப்புறம் வேறு விமானத்தில் போய்க்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. அந்த வேறு விமானமும் ஏர் - இந்தியாவுடன் கூட்டு வைத்திருக்கும் விமானமாக இருந்தால் நல்லது என்றும் சொல்லியிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் அவர்களது அலுவலக பயணங்களுக்கு தனியார் விமானங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கடந்த 2005 டிசம்பரில்தான் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
நன்றி : தினமலர்