Tuesday, July 28, 2009

கவலையளிக்கும் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு...!

2008 - 2009, பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, 71.9 சதவிகித கிராமப்பகுதி மக்களும், 32.3 சதவிகித நகர்ப்புறப் பகுதி மக்களும் ஒரு நபருக்காகச் செலவிடும் நுகர்வு செலவினம் ஒரு நாளுக்கு, ரூ. இருபதுக்கும் குறைவானதே. இதன் அடிப்படையில் தேசிய அளவில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உள்ளதாக சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

இந்தக் கணக்கெடுப்புகளும் தோராயமானவையே. உண்மையில் பெரும்பான்மை மக்கள் நல்ல தரமான வாழ்க்கையோ, வாழ்வாதாரமோ, சமூகப் பாதுகாப்போ இன்றி அன்றாடம் பிழைப்பிற்காக அல்லலுறும் நிலையிலேயே உள்ளனர். இந்நிலையில், மக்கள்தொகையில் 40 சதவிகிதம் உள்ள குழந்தைகளின் நிலையை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 76 சதவிகிதம் குழந்தைகள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைச் சார்ந்தே வாழ்பவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்களின் பெற்றோர்கள் அடிப்படை உயிர் வாழ்விற்கான உணவு உத்தரவாதத்திற்கே போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான்.

கிராமப் பகுதிகளில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின், உணவிற்கு கூட அரசின் அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளின் ஒருவேளை மதிய உணவுத் திட்டத்தையே நம்பியுள்ளனர். இவ்வாறு பெரும்பான்மை மக்கள், அரசின் நலத் திட்டங்களை நம்பி வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உணவு, ஆரோக்கியம் - மருத்துவம், கல்வி, பாதுகாப்பு (பெற்றோர் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு) ஆகியவற்றுக்கான நிதியானது, சமூக சேவைத் துறைகள் என்ற தலைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி, சமூகத் துறைகளுக்கான பொறுப்பு மத்திய, மாநில அரசுகள் இரண்டிற்கும் பொதுவான பொதுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், இரண்டு இயந்திரங்களும் இதற்கு சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலம் சம்பந்தப்பட்ட துறைகளில் நிதி ஒதுக்கீடு 2007 - 08-ல் 4.93 சதவிகிதமாக இருந்தது, 2008 - 09-ல் 4.13 சதவிகிதமாகக் குறைந்து, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2009 - 10 பட்ஜெட்டில் 4.15 சதவிகிதமாக உள்ளது. இந்த 0.2 சதவிகிதம் உயர்வின் மதிப்பு ரூ. 5,193 கோடி.

இதில் அதிகபட்சமாக கல்விக்கான செலவினம் ரூ. 3,515 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில், 1,450 கோடி கூடுதல் ஒதுக்கீடாக மத்திய அரசு நடத்தும் கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,350 கோடி நடுநிலைக் கல்விக்கான பள்ளிகள், வகுப்பறைக் கட்டடங்களுக்கான திட்டமும், பிரதமர் அறிவித்த மாடல் பள்ளிகளுக்கான (வட்டார அளவில்) 350 கோடி திட்டமும் கல்விக்கான கூடுதல் செலவினத்தில் அடங்கும். மற்றபடி, மதிய உணவுத் திட்டத்திற்கோ, தொடக்கக் கல்விக்கோ எந்தவித நிதி உயர்வும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 13,100 கோடியும் உலக வங்கிக் கடன் மூலமே செயல்படுத்தப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும், சமமான, தரமான, கட்டாயத் தொடக்கக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்நிலையில் 6 வயது முதல் 14 வயது வரை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையின்படி நிறைவேற்ற வேண்டிய தொடக்கக் கல்விக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை.

ஏற்கெனவே, தொடக்கக் கல்விக்கான 88 சதவிகிதம் நிதி, மாநில அரசுகளாலேயே ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்கள் தொடக்கக் கல்வியில் தனியார்மயத்தை அதிக அளவில் ஊக்குவித்து வருகின்றன. இதனால் கல்வியில் மிக அதிகமான பாகுபாடுகளைக் குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பட்ஜெட்டில் (4.15 சதவிகிதம்), 71 சதவிகிதம் மத்திய அரசின் கல்வித் திட்டங்களுக்காகவும், 11 சதவிகிதம் குழந்தைகள் ஆரோக்கியம் - மருத்துவம் (போலியோ சொட்டு மருந்து, பிற தடுப்பு மருந்துகள் திட்டம் போன்றவற்றுக்கானவை), 17 சதவிகிதம் குழந்தைகள் வளர்ச்சி (அங்கன்வாடிகள் - ஊட்டச்சத்து - ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை), 0.8 சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் (ஆதரவற்ற, கைவிடப்பட்ட, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மையங்கள் அமைத்தல்) ஒதுக்கப்பட்டுள்ளது. இப் புள்ளிவிவரங்களை மேலோட்டமாகப் பார்த்தால் குழந்தைகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதுபோல் தோன்றும். ஆனால் இவை அனைத்தும் அவ்வப்போது வெளியிடும் திட்டங்களே அன்றி, நிலையான முதலீடுகள் அல்ல.

மேலும், மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போதும், அடிமட்ட அளவில் குழந்தைகளுக்கான தேவைகளைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இந்த ஒதுக்கீடு மிகச் சொற்பமே. 2005-ல் தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உறுப்பினராக இடம் பெற்றிருந்த கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுமம் தெரிவித்த கணக்கின்படி, இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான, கட்டாயத் தொடக்கக் கல்வி 14 வயது வரை உறுதி செய்ய வேண்டுமானால், தற்போது தொடக்கக் கல்விக்காகச் செலவிடப்பட்டு வரும் ரூ. 47,100 கோடியுடன் (2003 - 04) சேர்த்து கூடுதலாக ஒவ்வோர் ஆண்டும் 53,500 கோடி முதல் 72,700 கோடி வரை 6 ஆண்டுகளுக்கு மொத்தம் 3,21,000 கோடியிலிருந்து 4,26,000 கோடி வரை செலவிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் நிதியை மத்திய அரசு ஏற்கெனவே வசூலித்து வரும் கல்வி வரியைக் கொண்டு சரிக்கட்டலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இவையனைத்தும் மத்திய அரசின் நிதிக் கொள்கையைப் பொறுத்தே செயல்படுத்தப்படும். தற்போதைய நிலை, மத்திய அரசு எப்படியாவது இக்கூடுதல் நிதிச்சுமையை தனியார்மயத்தைக் கொண்டு சமாளிக்க முடியுமா என்று பார்ப்பதாகவே தெரிகிறது. இதனால் பொதுப் பள்ளிக் கல்வி முறையின் மூலமான சமச்சீர்கல்வி என்பது எட்டாக்கனியாகி வருகிறது.

குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு இந்தப் பாடுபட்டு வரும் நிலையில், 2008 - 09-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்காக அப்போது ஒதுக்கப்பட்ட 180 கோடியில், 54 கோடி மட்டுமே மாநிலங்களால் செலவிடப்பட்டதால், 2009 - 10-ம் நிதி ஆண்டில், அதற்கான ஒதுக்கீடு 60 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த பட்ஜெட் குறைப்பிற்கு காரணம், இதில் பெரும் தொகை ஆதரவற்ற குழந்தைகள் இல்லக் கட்டட உருவாக்கத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அவற்றை நடைமுறைப்படுத்த மாநில, மாவட்ட அளவில் உள்ள நிர்வாகச் சிக்கல்களே காரணம்.

மாவட்ட அளவில், அனைத்துத் துறைகளுக்கும் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற ஒரு நபரே பொறுப்பாக இருப்பதால், அவரால் அனைத்துத் துறைகளின் திட்டங்களையும் குறித்த நேரத்திற்கு நிறைவேற்ற இயலாமல் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தவிர, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சட்டம், ஒழுங்கு, வருவாய் நிர்வாகம் ஆகிய மிகப்பெரும் இரண்டு பொறுப்புகள் உள்ளன. மேலும் ஓராண்டுக்கான நிதி, மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் வந்து சேர்வதற்குள் பாதி நிதியாண்டு முடிவடைந்து விடும். மீதமுள்ள காலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், தரமில்லாமல், ஊழல் குறைபாடுகளுடனே நிறைவேற்றப்படுகின்றன அல்லது செலவிடப்படாமல் வைக்கப்படுகின்றன.

இவ்வாறு குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் அனைத்து செலவினங்களும், திட்டம் சார்ந்த நிதியாகவே உள்ளது. மேலும், அவை மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே அதற்கான வரையறைகளைப் பின்பற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் பெரும்பாலான தொகை மாநிலங்களால் செலவிடப்படாமலேயே உள்ளது.

உதாரணமாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பிற்கான திட்டம் என்பது அரசின் கண்ணோட்டத்தில் குழந்தைகள் இல்ல கட்டடங்கள் அமைத்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம அளவில் உள்ளாட்சி மன்றங்களைக் கொண்டு, சமூகக் குழுக்களை வலுப்படுத்துவதன் மூலமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அரசுகள் தங்கள் விருப்பப்படி அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் திட்ட நிதியாகவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

நிலையான முதலீடுகள் குழந்தைகளுக்கான முழுமையான வளர்ச்சி, பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்யப்படுவதில்லை. இதற்கு உதாரணம், கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம். 6 வயது வரையிலான பள்ளி முன்பருவப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய வேண்டிய இத்திட்டம் சரியான முதலீடின்றி, ஊழியர்களுக்கான மிகக் குறைந்த ஊதியத்துடனே செயல்படுத்தப்படுகிறது. தேசம் முழுமைக்கும் இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,705 கோடி மட்டுமே.

உள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய அதிகாரம் அளித்து, அதற்கான அரசின் நிதி முறையாக ஒதுக்கப்பட்டால் பல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். மேலும், சமூகத் துறைகளுக்கு மத்திய அரசின் நிதி திட்ட நிதியாக மட்டுமல்லாமல், திட்டம் சாரா முதலீடுகளாக அமைந்து, உள்ளாட்சிகள் உள்ளூர் சூழலுக்குத் தக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் நடைமுறையும் கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும், உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, குடிநீர் விநியோகம், குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகிய சமூக சேவைத் துறைகள், பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமையாக இல்லை. இவை தேர்தல் அறிக்கைகளில் மட்டுமே அலங்காரத்திற்காக இடம்பெறும் வாக்கியங்களாக உள்ளன.

மேலும், பாரம்பரியமாக இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், குழந்தைகளுக்கான மூலதனமாக அல்லாமல், மத்திய அரசின் நலத்திட்டங்களாகவே தொடர்வது குழந்தை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.

போதுமான நிதி ஆதாரங்களும், ஊழியர்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினரான குழந்தைகளுக்கும் நேரிடையாக எந்தவித குளறுபடிகளும் இன்றி சென்றடைய வேண்டுமானால் மத்திய, மாநில உள்ளாட்சிகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

இவற்றுக்கான, நிதிச் சுமையை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதோடு, முறையான வழிகாட்டுதலுடன், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே மக்களால் ஜனநாயகத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டும். இதற்கான, கொள்கை, சட்டம், நிர்வாக மாற்றங்களும், சீர்திருத்தங்களும் இன்றைய உடனடி தேவை.
கட்டுரையாளர் : கல்பனா சதீஷ்
நன்றி : தினமணி

இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி இன்னமும் குறைவாகவே இருக்கிறது

இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி முன்பை விட அதிகரித்திருந்தாலும், உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவாகவே இருக்கிறது. உற்பத்தி அதிகமாக இருந்தாலும் அதற்கு தகுந்த ஏற்றுமதி இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் உபயோகம் அதிகமாகி இருப்பது, உற்பத்தி ஆன பழங்கள் உபயோகிப்போருக்கு சென்று அடைவதில் ஏற்படும் சிக்கல், விவசாயிகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக நிலங்கள் இருப்பது, சரியான உள்கட்டமைப்பு இல்லாதிருப்பது, பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் செலவு அதிகமாக இருப்பது, உலக அளவிலாள தரத்திற்கு பழங்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனது, சர்வதேச அளவில் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் இருந்து அதிக அளவில் பழங்கள் ஏற்றுமதி ஆவதில்லை என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிட்டால், 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரி வரை உள்ள காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏற்றுமதி 17 சதவீதம் மட்டுமே அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2007 - 08 நிதி ஆண்டில் மொத்தம் 17.24 லட்சம் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. அது 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரியுடன் முடிந்த காலத்தில் 20.26 லட்சம் டன்னாக மட்டுமே உயர்ந்திருக்கிறது என்றார் அவர்.
நன்றி : தினமலர்


தடுப்பு மருந்துக்கும் தட்டுப்பாடு

"நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு, மருந்து உற்பத்தியைக் குறைத்துள்ளது பற்றி விசாரணை நடத்தப்படும்' என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் உறுதி கூறியுள்ளார்.

இந்தியாவில் 2.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை, கக்குவான், போலியோ, மஞ்சள்காமாலை போன்ற நோய்த் தடுப்பு மருந்துகள் அரசால் இலவசமாகத் தரப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை. காரணம், தடுப்பு மருந்து தயாரிக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது தனியார் மருந்து உற்பத்தியாளர்கள்தான் இந்தத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகின்றனர். இவர்களிடம் இரு மடங்கு விலை கொடுத்து அரசு வாங்குகிறது.

இமாலயப் பிரதேசத்தில் கசெüலி என்ற இடத்தில் உள்ள மத்திய ஆய்வு நிறுவனம், சென்னையில் பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகிய மூன்றும் இந்தியாவுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மருந்துகளில் 80 சதவீதத்தை தயாரித்து வந்தன. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்து உற்பத்திக்கான உரிமம் 2008, ஜனவரி 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதற்குக் காரணமாக, மத்திய சுகாதாரத் துறை மேற்கோள் காட்டிய விஷயம் என்னவெனில், உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வில் இந்த மூன்று நிறுவனங்களும் "தரமான உற்பத்தி முறைகளை (ஜிஎம்பி) கடைப்பிடிக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளது' என்பதுதான்.

உலக சுகாதார நிறுவனம் இந்த விஷயத்தை 2007 ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது என்பது உண்மையே. இருப்பினும், இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் 80 சதவீத தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றன என்ற உண்மை நிலையை மத்திய அரசு உணர்ந்திருக்குமானால், தரமான உற்பத்தி முறைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கும். ஆனால், உரிமத்தை ரத்து செய்துவிட்டு, தனியாரிடம் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கியது மத்திய அரசு. இதனால் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை இரு மடங்காக உயர்த்தின. தடுப்பு மருந்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.140 கோடியைக் கொடுத்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து தேவைப்படும் மருந்தில் பாதி அளவுக்கே வாங்க முடிந்தது; இப்போது தட்டுப்பாடு!

""தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக இவ்வாறு உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று கூற முடியாது'' என்று குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போன்றது.

மூன்று அரசு நிறுவனங்களின் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருள்களை திசை திருப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எஸ்.பி. சுக்லா (முன்னாள் தனிச்செயலர்) உள்பட சில தன்னார்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இதுதான்: தட்டம்மை தடுப்பு மருந்துக்கான மூலப்பொருளை ஹைதராபாதில் உள்ள அரசு நிறுவனமான "இந்தியன் இம்யுனோலாஜிகல் லிமிடெட்' இலவசமாகத் தருகிறது. இருப்பினும்கூட, சென்னையில் உள்ள பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி அவற்றை சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் விலைக்கு வாங்கியது ஏன்? அதேபோன்று, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனமும், தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டு, ரூ.17.8 கோடிக்கு தட்டம்மை மருந்து தயாரிக்கவும், இதன் உரிமத் தொகையில் (ராயல்டி) 70 சதவீதத்தை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கவும் முன்வந்தது ஏன்?

இத்தகைய தவறுகள் எங்கே, ஏன், யாரால் நடந்தது என்பது இன்றைக்கான பிரச்னை அல்ல. ஆனாலும், 2.5 கோடி குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் அரசு நிறுவனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் முன்பாக மாற்று ஏற்பாடுகளைப் பற்றி ஏன் மத்திய அரசு யோசிக்கவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

இதுபற்றி மத்திய அரசுக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பிரச்னை, 2008 தொடக்கத்திலேயே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலும் தரப்பட்டுள்ளது. அதன் பிறகும் இந்தப் பிரச்னைக்கு உரிய கவனம் தரப்படாமல் இப்போது இந்தியா முழுவதற்கும் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்றால், இதற்கு அப்போதும் இப்போதும் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிதானே முழுப்பொறுப்பு?
நன்றி : தினமணி

லேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்திருக்கிறது. வங்கிகளின் பங்குகள் மற்றும் ஹெச்யுஎல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ், எல் அண்ட் டி, கிராசிம், ஐடியா, ஏபிபி, ரேன்பாக்ஸி, ஹீரோ ஹோண்டா நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. பவர், டெலிகாம், ரியாலிட்டி, சிமென்ட், மெட்டல் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்று நாள் முழுவதும் அவ்வளவாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 43.10 புள்ளிகள் குறைந்து 15,331.94 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 8.20 புள்ளிகள் குறைந்து 4,564.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


இந்தியாவின் அலட்சியம்

இந்திய, பாகிஸ்தான் உறவில் "ஹாட் நியூஸ்' பலுசிஸ்தான் விவகாரம். அணிசாரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்ற மன்மோகனும், கிலானியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பலுசிஸ்தான் என்ற சொல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பிறகே, இரண்டு நாடுகளுக்கு இடையேயும், இந்தியாவுக்குள்ளும் அறிக்கைப் போர் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டறிக்கை பலுசிஸ்தான் பற்றி விவகாரமாக எதையும் கூறிவிடவில்லை. "இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டபோது, பலுசிஸ்தானுக்கு வெளியிலிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என பாகிஸ்தானுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக மன்மோகனிடம் கிலானி கூறினார்' என்கிறது அந்த சர்ச்சைக்குரிய வாசகம். எங்கேயும் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், இது பழிபோடும் முயற்சிதான்.

1970-களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவு மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானின் ஒரு பகுதி, தனி நாடாக சுதந்தரித்துக்கொள்ள இந்தியா வெளிப்படையாக உதவி செய்தது. அப்போதைய சூழலில் அது நியாயமாகவே கருதப்பட்டது. பலுசிஸ்தான் தொடர்பாகவும் இந்தியா மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. அது அந்தக் காலம். இந்தியா இப்போது பலுசிஸ்தானை மறந்துவிட்டது. இன்றைய சூழலில், பலுசிஸ்தானை சுட்டிக்காட்டுவதை இந்தியா அனுமதித்தது மாபெரும் தவறுதான். அதற்குக் காரணம் அலட்சியம். அந்த அலட்சியம்தான் இப்போது விபரீதமாகியிருக்கிறது.

வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கும் இன்னொரு விஷயத்திலும் இந்திய அரசு அலட்சியமாகவே இருக்கிறது. அது கிரிக்கெட் வாரியம். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அங்குள்ள ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை அவ்வப்போது நினைவூட்டுகின்றன. இப்படியொரு பயங்கரமான சந்தேகம் எழுந்ததற்கான அடிப்படைக் காரணம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 49 போட்டிகளில் இந்தியாவுக்கு 21 போட்டிகளும், பாகிஸ்தானுக்கு 14 போட்டிகளும், இலங்கைக்கு 8 போட்டிகளும், வங்கதேசத்துக்கு 6 போட்டிகளும் ஒதுக்கப்பட்டன. நொடிந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஒரு வாய்ப்பாகவே கருதப்பட்டன.

இந்தச் சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைக் காரணம்காட்டி, பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் முடிவுக்கு ஐசிசி வந்தது. போட்டிகளை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடமிருந்து பறிக்கப்பட்டது.

போட்டிகளை துபை, சார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் நடத்துகிறோம் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையும் எடுபடவில்லை. இந்த இடங்களில் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை; நிர்வாகச் சிக்கலும் இல்லை. அப்படியிருந்தும் இந்தக் கோரிக்கையை ஏற்காததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஏக அதிருப்தி.

இறுதியில், பாகிஸ்தானில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட 14 போட்டிகளில் ஒரு அரையிறுதிப் போட்டி உள்ளிட்ட 8 போட்டிகள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டன. உலகக் கோப்பை போட்டிகளின் தலைமையிடம் லாகூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. இப்படியாக ஒரு நோஞ்சான் கிரிக்கெட் வாரியத்தை எல்லோருமாகச் சேர்ந்து நசுக்கினார்கள்.

இதெல்லாம் ஐசிசியின் முடிவு என்று கூறுவது காதில் பூச்சுற்றும் வேலை. உண்மையில் ஐசிசியின் எந்தவொரு முடிவையும் மாற்றும் வலு இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது. சைமண்ட்ஸ்-ஹர்பஜன் விவகாரம் உள்ளிட்ட பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போதும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோதும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பேசியது என்பது அனைவருக்கும் தெரியும்.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தானில் சூழ்நிலை மாறக்கூடும். ஒரே மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும் என்றால், சூழ்நிலைக்கேற்ப கொஞ்ச காலம் கழித்து முடிவெடுக்கலாமே? அப்படியில்லாமல், அவசர, அவசரமாக பாகிஸ்தானிலிருந்து போட்டிகளை மாற்றுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு கொழுத்த லாபம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானியர்கள் அப்படிச் சந்தேகப்படுவதற்கு கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அரசுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடமும் கசப்புணர்வு அதிகரிக்கும்.

இப்படி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்க, அதற்கு நேரெதிர் பாதையில் கிரிக்கெட் வாரியம் சென்று கொண்டிருக்கிறது. உரிய கட்டுப்பாடுகளை விதிக்காதவரை, விளையாட்டு என்கிற பெயரில் வெளியுறவுக் கொள்கையுடன் இவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் அலட்சியமாக இருந்தால், நாட்டுக்கு ஆகாது.

கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி

சீனா தயாரிப்பு சாக்லேட்களுக்கு இந்தியா தடை விதித்தது

பளபளப்பான கவர்களில் பார்சல் செய்யப்பட்டு, பார்ப்பவர்களை கவர்ந்திழுத்து வந்த சீனா தயாரிப்பு சாக்லேட்கள் இனிமேல் இந்தியாவில் கிடைக்காது. அந்நாட்டு சாக்லேட்களில் மெலமைன் என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று பார்லிமென்ட்டில் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சீன தயாரிப்பு பால் மற்றும் பால் பொருட்களுக்கு இந்தியா தடைவிதித்திருக்கிறது. இப்போது அந்த வரிசையில் சாக்லேட்டும் சேர்ந்திருக்கிறது. சீன தயாரிப்பு பால் பொருட்களிலும் நச்சு கெமிக்கல் கலந்திருப்பது தெரிய வந்து, அதற்கு பல நாடுகள் தடை விதித்தன. அப்போது இந்தியாவும் தடை விதித்தது. ஆனால் இந்தியாவுக்குள் வரும் சீன தயாரிப்பு சாக்லேட்கள் பெரும்பாலும் முறையான வழிமுறையில் வருவதில்லை என்றும், கள்ள மார்க்கெட் வழியாகத்தான் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் சாக்லேட்களுக்கு இருக்கும் சுமார் ரூ.2,000 கோடி சந்தையில், சீன சாக்லேட்கள் வெறும் 5 - 10 சதவீத பங்கையே வைத்திருக்கின்றன. எனவே இந்த தடையால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பிரிட்டனில் சராசரியாக ஒவ்வொருவரும் 10 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒவ்வொருவரும் 40 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம்.
நன்றி : தினமலர்


புதிய 50 ரூபாய் நோட்டு

கடந்த 2005ல் வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டில், சிறு மாற்றம் செய்து புதிய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இதுகுறித்து, இந்திய ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் எம்.எம். மாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட, மகாத்மா காந்தி வரிசை 2005ம் ஆண்டைச் சேர்ந்த ரூபாய் நோட்டுகளில் இரு வரிசை எண்களுக்கும் நடுவே உட்பொதிந்த ஆங்கில எழுத்து இல்லாத 50 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ., விரைவில் வெளியிட உள்ளது. இந்த மாற்றம் தவிர, இப்போது வெளியிடப்படும் நோட்டுகளின் வடிவம் ஆகஸ்ட் 24, 2005ல் வெளியிடப்பட்ட கூடுதலான, புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளை எல்லா விதத்திலும் ஒத்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி, இதற்கு முன் வெளியிட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுக்களும் சட்டப் படி செல்லத்தக்கவையே.
நன்றி : தினமலர்


கற்றதனால் ஆய பயன் என்கொல்...

கல்வித்துறையில் மிகப்பெரிய மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்த பின் பல விவாதங்கள் உருவாகியுள்ளன. பள்ளிக் கல்வியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவை இல்லை எனும் அதிரடி அறிவிப்பு முதல் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்கள் குறித்த யஷ்பால் கமிட்டி அறிக்கையின் பல பரிந்துரைகள்வரை பல முக்கியமான முடிவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

ஒரு தேசத்தின் நலன் அதன் பொருளாதார முன்னேற்றத்திலும், அவ்வாறான முன்னேற்றத்தினால் கிடைக்கும் அபரிமிதமான தேச வருமானம் எல்லா மக்களுக்கும் சென்றடையச் செய்வதிலும், அவ்வாறு வருமானம் பெற்ற மக்கள் வளமுடனும் எல்லா வசதிகளுடனும் வாழ்க்கையை நடத்திச் செல்வதிலும் அடங்கும்.

ஆனால், தேசநலன் என்பதே கல்வியினால்தான் உருவாக்கப்பட முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு ஆராய்ச்சியுடன்கூடிய உயர்கல்வி, திறமையான பொறியாளர்கள், நிதித்துறை மற்றும் நிர்வாகத்திறன் பெற்ற மேலாளர்கள் முதல் கணினிப் பொறியாளர்கள்வரை கல்வி நிலையங்களிலிருந்து உருவாகி வரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளிகளின் உற்பத்தியை பல பள்ளிகளும், ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி நிலையங்களும் செய்கின்றன.

வேலைவாய்ப்புப் பெருகி மக்களிடம் வருமானம் அதிகரிக்கும்போது வளமான வாழ்க்கைத் தரம் உருவாக சுகாதாரமும் சுகாதாரத்துறைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் மருந்தாளுநர்கள் வரை சுகாதாரக் கல்வியினால் பெற முடிகிறது.

ஒரு நாட்டின் சமூக அமைப்பும் அரசும் இரண்டறக் கலந்து கல்விக் கட்டமைப்பை உருவாக்கி மூன்று தேவைகளை எதிர்கொள்ளும்.

ஒன்று, நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் கல்வியின் பங்கேற்பு எத்தகையது என்பது பற்றியது. இந்தியா காலனி அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நமது பொருளாதார நடவடிக்கை என்பது நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்டி இங்கிலாந்திற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்து, அங்கே பல பொருள்கள் பெரிய தொழிற்சாலைகளில் உருவாகி பின் அவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. இச்சூழ்நிலையில் நமது மக்கள் கல்வி கற்று பெரிய தொழிற்சாலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. எனவே நிறையப் பேர் கல்வி கற்க வேண்டிய அவசியமும் உருவாகவில்லை. அதனால் அதிக கல்வி நிலையங்களும் கிடையாது.

வசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பென்சில்கள், அழிப்பான்கள்வரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட காலம் அது. மேலும் இங்கு கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகி இந்தியர்களின் கல்வியறிவு பெருகி அறிவு முதிர்ச்சியின் காரணமாக நம் நாடு ஏன் அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படலாம் என்ற காரணத்தினால் கல்வி வளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டது அன்னியர் ஆட்சி. உலகின் வேறு பல அடிமை நாடுகளிலும் இதுதான் நிலைமை.

இரண்டாவதாக, கல்வியின் மூலம் ஏற்படும் முன்னேற்றம், வளர்ச்சித் திட்டங்களின் தன்மையைப் பொருத்து நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். உதாரணமாக, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளத்திற்கு வித்திட்ட பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நமது நாட்டிலேயே கனரக தொழிற்சாலைகளை அரசுத் துறையில் நிறுவி பல பெரிய இயந்திரங்கள், ரயில் எஞ்ஜின்கள், ரயில் பெட்டிகள், லாரிகள், பஸ்கள், லேத் மிஷின்கள், நூற்பாலை இயந்திரங்கள், மின்னுற்பத்தி இயந்திரங்கள் என நூற்றுக்கணக்கான முதலீட்டு இயந்திரங்களை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்தினார். இதன் விளைவு வேலைவாய்ப்பும், சிறுதொழிலும், நம் நாட்டில் பல்கிப் பெருகி உற்பத்தி வருமானம் வெளியே சென்று விடாமல் அதன் முழுப்பலனும் நம் தேசத்திற்கே கிடைத்தது.

இதுபோன்ற ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி அகில உலகிலும் வளர்ச்சி பெறாத ஏழை நாடுகளுக்கும் முன்மாதிரியாக இந்தியப் பொருளாதாரம் திகழ்ந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஐ.ஐ.டி. முதல் பல தொழிற்கல்வி நிலையங்களும், பல கல்லூரிகளும் பள்ளிகளுமே ஆகும். தொழில் வளர்ச்சியின் தன்மையைப் பொருத்துத்தான் நமது கல்வி வளர்ச்சியின் பலன் நம்மாலேயே உருவாக்கி உபயோகப்படுத்த முடிந்தது.

மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து சமூக நீதி அடிப்படையில் கல்வியும் அரசின் வேலைவாய்ப்பும் சமூகத்தில் எல்லா பிரிவினருக்கும் சென்றடையும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் உருவாயின. பெருவாரியான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும் கல்வி நிலையங்களை நாடும் சூழ்நிலை உருவாகி கிராமங்கள்தோறும் பள்ளிகளும் சிறு நகரங்களில் கல்லூரிகளும் உருவாயின.

மேலே கூறப்பட்ட மூன்று நிலைப்பாடுகளுக்கும் வித்திட்ட காலம் நேரு சகாப்தம் என மேலைநாட்டு பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் ஹடேகர், டோங்க்ரே ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நேரு சகாப்தம் எனக் கூறும் காலம் 1950 முதல் 1964 வரை. அதாவது இந்திய திட்டக்கமிஷன் உருவாகியதிலிருந்து நேரு மறைந்தது வரை. அப்போது இடப்பட்ட அடித்தளத்தில் உருவான கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பு நமது நாட்டை இன்றுவரை உலகப் பொருளாதாரப் பின்னடைவு தாக்காத வகையில் பாதுகாக்கிறது எனலாம்.

இதே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் கனரக இயந்திரங்களின் தயாரிப்பில் ஈடுபடாமல் பெரிய தொழிற்சாலைகளை நிறுவாமல் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்தன. இதனால் இந்தியாவிற்கு கிடைத்தது போன்ற பரவலான பொருளாதார வளர்ச்சியும் கல்வித்துறையின் அபிரிமிதமான வளர்ச்சியும் அந்நாடுகளுக்குக் கிடைக்காமல் போயிற்று. இந்தச் சாதனையை இன்றளவும் நாம் பெருமையுடன் பேசிக்கொள்வதுடன் அதன் பலனையும் அனுபவித்து வருகிறோம்.

கல்வியின் முக்கியமான இரண்டு அம்சங்கள் எல்லோருக்கும் கல்வி என்பதும், தரம் வாய்ந்த கல்வி என்பதுவுமாகும். நிறைய பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்போது கல்வி விரிவாக்கம் உருவாகிறது. ஆனால், பாடத்திட்டங்களிலும், பயிற்சி முறையிலும் தரம் உயரும்போதுதான் நமது கல்வி தனது சீரிய பணியை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழங்க முடியும். தரமான கல்வியில் அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது வளர்ந்துவிட்ட நாடுகளில் உள்ள நடைமுறை. ஆனால் நமது நாட்டில் அறிவும் புத்திசாலித்தனமும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஊட்டப்படுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது.

இதுபற்றிய கருத்தரங்கு ஒன்றில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நான் கலந்துகொண்டபோது இரண்டு விஷயங்களைப் பற்றி பேசிய ஞாபகம் இருக்கிறது. இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கும் போதனை முறைகள், பரீட்சை ஆகியன அறிவு வளர்ச்சிக்கு உதவுமா என்ற கேள்வியை எடுத்து விவாதித்தோம்.

உதாரணமாக, ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் விலங்கியல் பாடத்தில் மூன்று ஆண்டுகள் படிக்கிறான். அவனுக்கு ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் போதிக்கும் பாடங்களை மூன்று மணி நேரத்தில் ஒரு பரீட்சையில் அவன் கேள்விகளுக்கு எழுதும் விடையை வைத்து அவனைச் சோதிக்கிறது இன்றைய பரீட்சை முறை.

அதிலும் பாடம் போதித்த ஆசிரியர்கள் வேறு, பரீட்சைக்கு கேள்விகளை உருவாக்கும் ஆசிரியர் வேறு. மாணவன் பரீட்சையில் எழுதிய விடைகளைத் திருத்துபவர் வேறொரு ஆசிரியர். கண்ணுக்குத் தெரிந்த ஆசிரியர் போதித்த பாடங்களைக் கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் உருவாக்கிய கேள்வித்தாள்கள் மூலம் விடையளித்து, அவ்விடைகளை கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் மதிப்பீடு செய்யும் இன்றைய பரீட்சை முறையில் ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியுமா? மாணவனின் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமையை வேண்டுமானால் மதிப்பீடு செய்ய முடியும் என்பதுதான் அந்த விவாதத்தில் கண்டறிந்த முடிவு.

அடுத்து, நாம் பாடங்களைப் போதிக்கும்போது முழுமையாக எல்லா விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா அல்லது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேயும் தன்மையில் பாடபோதனைகள் உள்ளனவா எனும் கேள்வி எழுந்தது.

அதுசமயம், ஒரு அறிவியல் ஆசிரியர் நல்லமுறையில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன எனப் பதில் அளிக்க, அவரிடம், "ஐயா, நீங்கள் எம்.எஸ்ஸி. படித்தவர். அந்தப் பட்டமாகிய, மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் என்பதில் உள்ள சயின்ஸ் (விஞ்ஞானம்) என்றால் என்ன என்பதைக் கூற முடியுமா?'' எனக் கேட்க, அவர் கொஞ்சம் தயங்கினார்.

""பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டக்கூடிய பல விஷயங்களையும் விதிமுறைகளையும் உள்ளடக்கியது சயின்ஸ்'' எனும் கிரேக்கர் காலத்து கூற்றினை நான் கூறியபோது உள்ளபடியே அந்தக் கூட்டத்தில் இருந்த எல்லோருக்கும் நமது கல்வி முறையில் ஆழமான, விரிவான போதனைகள் இல்லை என்ற ஆதங்கம் உருவானது. எல்லா பொருளையும் முழுமையாகக் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வேண்டும் என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.

அடுத்து, அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதே கருத்தரங்கில், புத்திசாலித்தனம் எனும் வார்த்தைக்கு என்ன விளக்கம் எனக் கேட்க, பலரும் தயங்க, ""அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்'' எனக் கூறினோம். புத்திசாலித்தனத்திற்கு பட்டப்படிப்பு தேவையில்லை, ஆனால் வெகுவாக உதவி செய்யலாம் என விவாதம் தொடர்ந்தது.

அறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் அறிவு அதற்குமேல் வளர்வதில்லை என்பதை ஹஸ்லிட் எனும் அறிஞர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: ""இவர்கள் இறந்தபின் இவர்களது கல்லறையில் நான் எழுத விரும்புவது - 30 வயதில் இறந்த இவரை 60 வயதில் இங்கே அடக்கம் செய்துள்ளோம்''.

இதுபோன்ற அடிப்படைக் கருத்துகளை உள்ளடக்கி கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா? அப்படி ஒரு கல்விக் கொள்கை தீர ஆலோசித்தும் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்டால் மட்டுமே, நாம் எதிர்பார்ப்பதுபோல, உலக அரங்கில் நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளைப்போலத் தரமான கல்வியை அளிக்கும் நாடு என்கிற பெயர் பெற முடியும். கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி!

கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி