Wednesday, August 12, 2009

மத்திய கிழக்கு நாடுகள் சந்தையில் பலமான எதிர்கால வியாபார திட்டம் : வோல்டாஸ் வியூகம்

மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையில் வர்த்தக போட்டியில் வென்று தனக்கென தனிச்சிறப்பான இடம் பிடிக்க டாடா குரூப்சின் வோல்டாஸ் நிறுவனம் அதிகம் முயன்று வருவதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த வோல்டாஸ் கம்பெனியின் வருடாந்திர பொது கூட்டத்தில், பங்குதாரர்கள் மத்தியில் பேசிய வோல்டாஸ் சேர்மன் இஷாத் ஹூசைன் இத் தகவலை தெரிவித்தார். இதற்காக சவுதியில் ஒரு சப்சிடிரி கம்பெனி நிறுவ திட்டமிட்டுள்ளத‌ாகவும் ஏற்கனவே அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் பணிகள் துவங்கி விட்டதாகவும் தெரிவித்தார். சர்வதேச பொருளாதர நெருக்கடியில் பாதிக்கப்படாத நாடுகள் என்ற வரிசையில் கதார், அபுதாபி, சவுதிஅரேபியா ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிளான திட்டங்களை செயல்படுத்த இந்நாடுகள் ஆயத்தமாக இருக்கின்றன. இந்நிலையில் வோல்டாசின் சர்வதேச திட்டங்கள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சீராக இயங்கி வருகின்றன. சர்வதேச நிதி சுழலையும் மீறி , வோல்டாஸ் கடந்த நிதி ஆண்டில் ரூபாய் 1,334 கோடிக்கு வர்த்தக ஆர்டர்கள் பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது என்றார்.

நன்றி : தினமலர்


தீண்டாமை தீண்டாத இஸ்லாம்!

இந்திய சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும் என்கிற தூய நோக்கத்துடன் இடஒதுக்கீடு என்கிற கருத்துரு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்து சமூகத்தில் தீண்டாமை இழிவுகளால் நீண்டகாலமாக கொடுந்துன்பத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு சமநிலையும், சம அந்தஸ்தும், சம வாய்ப்பும் கிடைத்திட வேண்டும் என்பதே இடஒதுக்கீட்டு தத்துவத்தின் அடிப்படை நோக்கமாகும்.

தீண்டாமை இழிவுகளால் எந்தச் சமூகம் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளதோ அந்தச் சமூகம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றது. இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிப்பதற்குத் தகுதி படைத்தோரைக் கண்டறிய அளவுகோலாக தீண்டாமைக் கொடுமைகளே கணக்கில் கொள்ளப்பட்டன.


தீண்டாமை இழிவுகள் என்பது பொது வீதி, பொதுக் கிணறு, குளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி மறுப்பு, பெண்கள் மேலாடை அணியும் உரிமை மறுப்பு, காலில் செருப்பு அணிந்து பொது வீதியில் நடக்க உரிமை மறுப்பு, ஆலயங்களுக்குள் நுழைய அனுமதி மறுப்பு, சமமாக அமர்வதற்குக்கூட உரிமை மறுப்பு, கல்வி கற்க அனுமதி மறுப்பு, சுடுகாடுகளில் கூட தனி சுடுகாடு, வசிப்பிடங்கள் கூட ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட சேரிப் பகுதி, இரட்டைக் குவளை முறை, தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என பட்டியல் நீள்கிறது.


தீண்டாமைக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமயத் துறையிலும், ஆன்மிகத் துறையிலும் சம நீதி கிடைத்திட ஆதிசங்கரர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்ட அருளாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து பாடுபட்டனர். ஸ்ரீராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வீடுபேறு அடைந்திடும் உரிமை உண்டு என்கிற உரிமையை நிலைநாட்டி எட்டெழுத்து மந்திரத்தை அனைவருக்கும் உபதேசம் செய்து, பெரும் புரட்சியை உருவாக்கினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருக்குலத்தோர் எனப் பெயரிட்டு அழைத்துச் சிறப்பித்தார்.


ஆன்மிகவாதிகளைத் தொடர்ந்து சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா புலே, ஸ்ரீநாராயணகுரு, சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர் உள்ளிட்டோர் சமுதாய அமைப்பில் தீண்டாமையை ஒழிக்கத் தொடர் முயற்சிகளைச் செய்து வந்தனர். திலகர், வீரசாவர்க்கர், டாக்டர் ஹெட்கேவார், அண்ணல் காந்தியடிகள், அம்பேத்கர் உள்ளிட்டோர் மக்களுக்கு சமூகத்திலும், அரசியலிலும், ஆட்சி அதிகாரங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்று ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டனர். இதில், அண்ணல் காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜனங்கள் எனப் பெயரிட்டு அழைத்தார்.


அண்ணல் அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக தம்மை அர்பணித்துக் கொண்டார். இடஒதுக்கீடு என்ற ஆயுதத்தின் மூலம் இந்து சமுதாயத்துக்குள் பிரிவுகளை உருவாக்கி, மக்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தனர். ஆங்கிலேயர்களின் இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு பல நற்பணிகளைச் செய்தவர் அம்பேத்கர். இடஒதுக்கீட்டின் பலன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேரடியாகக் கிடைத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அவர்.


ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் சுதந்திரப் போராட்டத்தின்போதே வகுப்புவாத பிரதிநிதித்துவக் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது. தீண்டாமை ஒழிப்புக் கொள்கையும், வகுப்பு வாத பிரதிநிதித்துவக் கொள்கையும் இருவேறுபட்ட தன்மையுடையதாகும். தீண்டாமை ஒழிப்புக்கும், வகுப்புவாத பிரதிநிதித்துவக் கொள்கைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அம்பேத்கரின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, தீண்டாமையையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் ஓரளவுக்காவது ஒழித்துக்கட்ட உதவியது.


வகுப்புவாத பிரதிநிதித்துவக் கொள்கையின்படி நடைமுறைப்படுத்துகின்ற இடஒதுக்கீட்டுத் திட்டங்கள் மேலும் மேலும் சாதி வேறுபாடுகளை அதிகப்படுத்தியதோடு தீண்டாமைக் கொடுமை தொடர்ந்திடவும் வழிவகுத்தன. புதிது புதிதாக சாதிச் சங்கங்கள் உருவாகவும் சாதிக் கட்சிகள் தோன்றவும் வழிவகை செய்தன. பொதுவாக, தாழ்த்தப்பட்ட மக்கள் தற்போது தலித் என்று பரவலாக அழைக்கப்பட்டு, அடையாளம் காணப்படுகின்றனர்.


தற்போது இடஒதுக்கீடு என்பது நான்கு பிரிவுகளாக மத்திய, மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதலாவதாக, "எஸ்.சி.' என்று அழைக்கப்படுகின்ற பட்டியல் சாதியினர், (schedule caste) அரிஜனங்கள், தலித்துகள் ஆகியோர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இரண்டாவதாக, "எஸ்.டி.' என்று அழைக்கப்படுகின்ற மலைச்சாதியினர், ஆதிவாசிகள் இவர்கள் பழங்குடியினர் பட்டியலில் (schedule tribes) இடம்பெற்றுள்ளனர். மூன்றாவதாக, "பி.சி.' (Backward class) என்று அழைக்கப்படுகின்றவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதியினர் ஆவர். நான்காவதாக, "எம்.பி.சி.' (Most backward class) என்று அழைக்கப்படுகின்றவர்கள் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சாதியினர் ஆவர். இப்படி நான்கு விதமாக, இடஒதுக்கீட்டுச் சலுகைகள் அமல்படுத்தப்படுகிறது. இந்த நான்கு பட்டியல்களிலும் இடம்பெறாத சாதியினர் "ஒ.சி.', (other caste) இதர சாதியினர் அல்லது "எப்.சி.' (forward caste) முற்பட்ட சாதியினர் என்று அழைக்கப்படுகின்றனர்.


தற்போது முற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களும் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற வேண்டும் என்கிற உள் நோக்கத்துடன் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர். இதில், சில சாதியினர் வெற்றியும் அடைந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதியினர் தங்களை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர். இதிலும், சிலர் வெற்றியும் பெற்றுள்ளனர்.


மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சாதியினர் தங்களை எஸ்.சி., எஸ்.டி., பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு சலுகைகளை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். இதிலும், சிலர் வெற்றியும் பெற்றுள்ளனர். இதன் காரணமாக, இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை நோக்கமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமநீதி, சமஅந்தஸ்து, சம வாய்ப்புகள் என்கிற உண்மை லட்சியத்தை அடைவதில் பெரும் தடைகள் தோன்றியுள்ளன.
தற்போது, மத அடிப்படையில் இடஒதுக்கீடு, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.


சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு என்கிற அடிப்படையில் மத ரீதியான இடஒதுக்கீட்டுக் கோரிக்கை வைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மத இயக்கங்கள் போராடி வருகின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகள் கொள்கை அளவில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான இடஒதுக்கீட்டு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. மத்திய மாநில அரசுகள் ஆங்காங்கு வாய்ப்புகள் உள்ள இடங்களில் மத ரீதியிலான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை அமல்படுத்தி வருகின்றன.


இந்திய அரசியல் சாசன ரீதியாக ஆரம்பகாலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது பெரும்பான்மை இந்து சமூக மக்களை மையமாக வைத்தே அமைக்கப்பட்டது. இந்து சமுதாயத்தில் இருந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களுக்கு மதம் மாறிச் செல்பவர்கள் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற அரசியல் சாசன ரீதியாகத் தகுதியற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். ஏனென்றால், இந்து சமுதாயத்தில் மட்டுமே சாதி ஏற்றத்தாழ்வுகளும், தீண்டாமைக் கொடுமைகளும் நிலவி வந்தது என அறியப்பட்டது. இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்களில் தீண்டாமை இழிவுகள் இல்லையென்றும், சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இல்லையென்றும், அனைவரும் சமம் என்றும் கருதப்பட்டது. அதனால்தான், சாதி ரீதியான இடஒதுக்கீட்டுக் கொள்கை முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை.


கிறிஸ்தவர்களாக மாறிய தலித்துகள், தங்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிக் கொண்ட பிறகும் தீண்டாமை இழிவுகள் நீங்கவில்லை என குற்றம்சாட்டி, தங்களை தலித் கிறிஸ்தவர்கள் என அழைத்துக் கொண்டு இந்து தலித்துக்கான இடஒதுக்கீட்டுச் சலுகைகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, "எஸ்.சி.', "எஸ்.டி.' பட்டியலில் தங்களை இணைத்திட போராடி வருகின்றனர். இதை கிறிஸ்தவ மதத் தலைமை அமைப்புகளும் ஆதரித்து வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு தலித் கிறிஸ்தவர்களை "எஸ்.சி.' பட்டியலில் இணைப்பது என்பதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன.


இந்து மதத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்குத் தீர்வு காண கிறிஸ்தவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டவர்கள் மதம் மாறியதன் மூலம் சில சலுகைகளை ஏற்கெனவே அனுபவித்து வருகின்றனர். அதனால், இந்து அரிஜனங்களின் சலுகைகளில் இடம் கேட்டுப் பெறுவது அவர்கள் இரட்டைச் சலுகையை அனுபவிப்பதாக ஆகிவிடும்.


ஏற்கெனவே இந்தப் பட்டியலில் இந்து தலித்துகள் உள்ளனர். இதில், கிறிஸ்தவ தலித்துகளும் இடம்பெற்றால், இந்து தலித்துகளின் இடங்களை மிகச் சுலபமாக கிறிஸ்தவ தலித்துகள் ஆக்கிரமித்துக் கொள்வார்கள். இதன் காரணமாக, இந்து தலித்துகளின் வாய்ப்புகள் முழுமையாகப் பாதிக்கப்படும். இந்து தலித்துகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.


இந்த விஷயத்தில் இஸ்லாமிய மத தலைமை அமைப்புகளை பாராட்டியே ஆக வேண்டும். இந்துக்களாக இருந்து முஸ்லிம்களாக மாறிய உடனேயே தங்களது சாதி அடையாளங்களை மதம் மாறியவர்கள் இழந்துவிடுகின்றனர். அனைவரும் முஸ்லிம்கள் என்று மட்டுமே கருதப்படுகின்றனர். முஸ்லிமாக மதம் மாறிய பிறகும் தீண்டாமை இழிவுகள் தொடர்வதாகச் சொல்லி, தலித் முஸ்லிம்கள் என்று இஸ்லாமியர்கள் யாரும் தங்களை அழைத்துக் கொள்ளவில்லை. "எஸ்சி' பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கவில்லை.


மத அடிப்படையில் இடஒதுக்கீடு என்கிற கோரிக்கை சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பிற்படுத்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டு சலுகையில் உள்ஒதுக்கீடாக முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் என சலுகைகளை அறிவித்தார்.


மத அடிப்படையில் சலுகை வேண்டும் என போராடி வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தன. ஓராண்டு காலம் அமல்படுத்திய பிறகு கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் இதன் காரணமாக பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி மத அடிப்படையில் எங்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு சலுகையில் உள்ஒதுக்கீடு தேவையில்லை என முதலவரிடம் கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை வைத்தன. முதல்வரும் கிறிஸ்தவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்தவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்தார். இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீடு மட்டும்தான் இப்போதும் தொடர்கிறது.


சாதி ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமை இழிவுகளையும் ஒழித்துக் கட்ட நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையின் பலன் இந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கே உரியதாகும். இதில், சாதி ரீதியாக வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், மத ரீதியாக வாக்கு வங்கி அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளும் தங்களது சுயநலத்துக்காக தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகைகளை கூறு போட்டு சிதைக்க முயற்சிக்கின்றன.


எங்கள் மதத்தில் சாதியக் கொடுமைகள் இல்லை என்று காரணம் காட்டி மதமாற்றத்துக்கு வழிவகுத்த பிறகு, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கோர ஊக்குவிப்பது என்பதுபோன்ற மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. ஒன்று கிறிஸ்தவ மதத்திலும் சாதிக் கொடுமைகள் தொடர்கின்றன என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.


இல்லையென்றால், இஸ்லாமிய மதத்தைப்போல, சாதிகளற்ற சமுதாயமாகக் கிறிஸ்தவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில், தாழ்த்தப்பட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது!


அர்ஜுன் சம்பத்
(கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி)

நன்றி : தினமணி


இந்தியா புல்ஸ் ஷேர் டிரேடிங் நிறுவன துணை தலைவர் கைது

இந்தியாபுல்ஸ் ஷேர் டிரேடிங் நிறுவனத்தின் துணை தலைவர் சித்தார்த்த தாகா கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் மூலம் ஷேர் டிரேடிங்கில் மோசடி செய்த குற்றத்துக்காக சித்தார்த்தை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. சித்தார்த் அரவது நிறுவனத்தில் பணிபுரியும் சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஒருவரின் டிரேடிங் அக்கவுண்ட் மூலம் முறைகே‌டாக வர்த்தகத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதியன்று நடந்த வர்த்தகத்தின் ‌போது ஒரு குறிப்பிட்ட பங்கின் மீதான வர்த்தக பரிமாற்றத்தில் மட்டும் 46 லட்சம் மோசடி செய்துள்ளார் சித்தார்த். இந்த ஊழலில் சித்தார்த்தின் சக ஊழியர்களுக்கு பங்கு இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோச‌டியால் பாதிக்கப்பட்ட சார்டர்ட் அக்கவுண்டன்ட சக்ரபர்த்தி , தனது அக்கவுண்ட‌ை ஆக்சரு் செய்ய முடியாமல் போனதால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் வங்கியை அணுகிய போது, அவரது அக்கவுண்டை பயன்படுத்தி வர்த்தகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
நன்றி : தினமலர்


விமான சேவையை வாபஸ் பெற்றதால் டிக்கெட் தொகையை ரீபண்ட் செய்தது ப்ளை துபாய்

விமான ‌சேவையை வாபஸ் பெற்றதால் டிக்கெட் தொகையை ரீபண்ட் செய்தது ப்ளைதுபாய். ப்ளை துபாய் நிறுவனம் புதிதாக மூன்று விமானங்களை இந்தியாவுக்கு இயக்க முடிவு செய்து, அறிவித்திருந்தது. . இந்தியாவில் சண்டிகர், கோவை மற்றும் லக்னோவுக்கு துபாயிலிருந்து விமானங்களை இயக்க முடிவு செய்தது. இந்நிலையில் சில ஆபரேஷனல் விவகாரங்களால் விமான சேவையை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்கள் தவிக்க கூடாது என்பதால், விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக் செய்த அனைவருக்கும் ரீபண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளை உற்சாக படுத்துவதற்கு அவர்களது விமான சேவைக்கு உட்பட்ட எந்த ஒரு பகுதிக்கு வேண்டுமானாலும் இலவசமாக செல்ல டிக்கெட்டும் அனுப்பப்பட்டுள்ளதாக பிளை துபாய் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


பன்றிக்காய்ச்சல் எதிரொலி : டல் அடிக்கும் மகாராஷ்டிரா மல்டிபிளக்சுகள்

பன்றிக்காய்ச்சல் எதிரொலியாக நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள மல்டிப்ளக்சுகளில் கூட்டம் இல்லாமல் இருக்கிறது, குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள மல்டிபிளக்சுகள் டல்லாக காணப்படுகின்றன. முதலில் ஐ.பி.எல்., போட்டிகளின் பரபரப்பால் மல்டிப்ளக்ஸ் பக்கம் கூட்டம் எதிர்பார்த்த அளவு திரும்பவில்லை. ஐ.பி.எல்., முடிந்தவுடன் மல்டிப்ள்க்ஸ் உரிமையாளர்களுக்கும் , சினிமா பட தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலால், மல்டிபிளக்சுகள் மூடப்பட்டன. பேச்சுவார்த்தை என நீண்ட இழுபறிக்கு பிறகு திறக்கப்பட்டன தியேட்டர்கள். அதற்குள் வந்து விட்டது பன்றிக்காய்ச்சல். மகாராஷ்டிரா மாநிலம் தான் பன்றிக்காய்ச்சல் நோயால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதால், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை 3 நாட்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இந்த தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என மல்டிபிளக்சுகள் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுதந்திர தின விடுமுறை வருவதால், அன்றைய தினம் புதுப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது, ‌யூ.டி.வி., பிரியங்கா சோப்ரா, சாஹித் கபூர் நடிப்பில் வெளிவரும் இந்த திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கமினே படத்தின் 1300 பிரிண்டகளை போட்டு வீக் எண்டில் திரைப்படத்தை வெளியிட இருந்தது யூ.டி.வி. ஆனால், மகாராஷ்டிரா அரசின் திடீர் உத்தரவால், பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் இருக்கிறது யூ.டி.வி. இந்திய பாக்ஸ் ஆபீசுக்கு புனே 5 சதவீதம் வருமானத்தை ஈட்டித் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 3 நாட்கள் கட்டாய மூடலால், கமினே படத்தை திரையிட முடியாமல் போனதால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களுக்கு ரூபாய் 2 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்