Friday, November 14, 2008

ஹெச்.சி.எல்., நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மெமரி கார்டு விற்க சேன்டிக்ஸ் உடன்பாடு

சேன்டிஸ்க் கார்பரேஷன் இந்தியா நிறுவனம், ஹெச்.சி.எல்., இன்ஃபோசிஸ்டத்துடன் இணைந்து இந்தியாவில் மொபைல் போனுக்கான மெமரி கார்டுகளை விற்க உடன்பாடு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஹெச்.சி.எல்.,இன் இன்ஃபர்மேஷன், கம்யூனிகேஷன்ஸ், டெக்னாலஜியை ( ஐ சி டி ) சேன்டிஸ்க் பயன்படுத்திக்கொள்ளும். இந்தியாவில் மொபைல் போன் சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், அதற்கு தகுந்தபடி நாங்களும் எங்களது தயாரிப்புகளின் வினியோகத்தை வேகப்படுத்த வேண்டியதிருக்கிறது என்றார் சேன்டிஸ்க் கார்பரேஷனின் தலைவர் மற்றும் சி.இ.ஓ., சஞ்சய் மெஹ்ரோத்ரா. ஹெச்.சி.எல்.,லுடன் இணைந்திருப்பதால் எங்களால், உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொபைல் சந்தையில் எங்களது பலதரப்பட்ட மாடல் மெமரி கார்டுகளை வேகமாக சப்ளை செய்ய முடியும் என்றார் அவர். சேன்டிஸ்க் நிறுவனம் 2 ஜிபி முதல் 16 ஜிபி வரை உள்ள மெமரி கார்டுகளை தயாரிக்கிறது.
நன்றி : தினமலர்


இந்தியாவில் விலை அதிகம் என்பதால் பாகிஸ்தானில் இருந்து காட்டன் இறக்குமதி செய்யும் இந்திய டெக்ஸ்டைல் மில்கள்

இந்தியாவில் காட்டனுக்கான குறைந்தபட்ச விலை ( மினிமம் சப்போர்ட் பிரைஸ் - எம்.எஸ்.பி ) அதிகரித்திருப்பதால், குஜராத்தில் இருக்கும் டெக்ஸ்டைல் மில் உரிமையாளர்கள், பக்கத்து நாடான பாகிஸ்தானில் இருந்து குறைந்த விலைக்கு காட்டனை இறக்குமதி செய்து கொள்கிறார்கள். சில மில் உரிமையாளர்கள் அமெரிக்காவில் இருந்து கூட காட்டனை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இந்திய டெக்ஸ்டைல் இன்டஸ்டிரி கூட்டமைப்பு செயலாளர் டி.கே.நாயர் இதனை தெரிவித்தார். இது குறித்து குஜராத்தில் இருக்கும் ஒரு இறக்குமதியாளர் நீரவ் தலால் கூறும்போது, நாங்கள் சமீபத்தில்தான் பாகிஸ்தானில் இருந்து 1,50,000 பேல்கள் ( ஒரு பேல் என்பது 170 கிலோ ) காட்டனை இறக்குமதி செய்து இங்குள்ள மில்களுக்கு சப்ளை செய்தோம் என்றார். இதில் பாதி இந்தியாவின் மிகப்பெரிய மில்லுக்கு போனது என்கிறார் அவர். இந்தியாவை விட குறைந்த விலையில் அங்கு காட்டன் கிடைப்பதுதான் இதற்கு காரணம் என்றார். இது குறித்து அரவிந்த் மில்ஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, நாங்கள் குறைந்த விலை காட்டனை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்கு சந்தையில் வீழ்ச்சி

சர்வதேச அளவில் பங்கு சந்தையில் இன்று நல்ல முன்னேற்ற நிலை இருந்த போதிலும், இந்திய பங்கு சந்தையில் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக வீழ்ச்சியே ஏற்பட்டள்ளது. கேப்பிடல் குட்ஸ், ஆட்டோ, மெட்டல், சிமென்ட், பவர், ரியல் எஸ்டேட், டெக்னாலஜி, மற்றும் ஆயில் பங்குகள் இன்று அதிகம் நஷ்டமடைந்தன. டாடா டெலி மற்றும் டோகோமோ உடன்பாட்டை அடுத்து டெலிகாம் பங்குகள் லாபமடைந்தன. இன்றைய சரிவுக்கு பெரிதும் காரணமாக இருந்தது ஓ.என்.ஜி.சி., பெல், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஹெச்.டி.எப்.சி., எல் அண்ட் டி, செய்ல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃராஸ்டிரெக்சர் நிறுவனங்கள்தான். மும்பை பங்கு சந்தையில் காலையில் வர்த்தகம் துவங்கி கொஞ்சம் நேரம் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் பின்னர் குறைய துவங்கியது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 150.91 புள்ளிகள் ( 1.58 சதவீதம் ) 9,385.42 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 38.10 புள்ளிகள் ( 1.34 சதவீதம் ) குறைந்து 2,810.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

பார்தி வால்-மார்ட் நிறுவனம் 2009ல் இங்கு கடைகளை திறக்கின்றன

இந்தியாவின் பார்தி என்டர்பிரைசஸ், அமெரிக்காவின் வால்-மார்ட் இணைந்து நடத்தும் பார்தி வால்-மார்ட் என்ற பலசரக்கு மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனம், 2009ல் இங்கு நிறைய ஸ்டோர்களை திறக்க இருக்கிறது. பார்தி வால்-மார்ட்டின் தலைமை செயல் அதிகாரி ராஜ் ஜெயின் இதனை தெரிவித்தார். இதன் மூலம் இந்திய ரீடெய்ல் தொழிலில் அதிக அளவில் ஈடுபட அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இது, இங்கு மொத்த கேஷ் அண்ட் கேரி வியாபாரத்தையும் பேக் எண்ட் சப்ளை நிர்வாகத்தையும் நடத்த இருக்கிறது. அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அது, அதன் முதல் ஸ்டோரை பஞ்சாபில் திறக்க இருக்கிறது. இப்போது அந்த நிறுவனம் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், ஜலந்தர் மற்றும் லூதியானாவில் அதற்கான கட்டிடத்தை கட்டும் வேலையை செய்து வருகிறது. 50,000 இலிருந்து 1,00,000 சதுர அடி வரை இருக்கக்கூடிய கட்டிடத்தில் இந்த ஸ்டோர்கள் திறக்கப்படுகின்றன. காய்கறிகள், பழங்கள், பலசரக்கு, செருப்பு, ஆடை மற்றும் பொதுவான பொருட்கள் இங்கு விற்கப்படும். இன்னும் 7 வருடங்களில் 15 ஸ்டோர்களை திறக்க இருக்கும் இவர்கள் 5,000 பேருக்கு வேலை கொடுக்கவும் இருக்கிறார்கள்.

நன்றி : தினமலர்



ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் 3,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது

ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் ( ஆர் பி எஸ் ) அதன் 3,000 ஊழியர்களை இன்னும் சில வாரங்களில் வேலை நீக்கம் செய்கிறது. உலக அளவில் இருக்கும் அதன் வங்கி சேவையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, அது இந்த நடவடிக்கையை எடுக்கிறது. இருந்தாலும் அதன் முக்கிய பணிகள் ஏதுவும் பாதிக்கப்படாது என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த வருடத்தில் முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்த அந்த வங்கி, பிரிட்டிஷ் அரசிடமிருந்து 20 பில்லியன் பவுண்டுகளை கடனாக கேட்கிறது. உலகெங்கிலும் இருக்கும் அதன் கிளைகளில் மொத்தம் 1,70,000 பேர் பணியாற்றுகிறார்கள். அதில் 1,00,000 பேர் பிரிட்டனிலேயே பணியாற்றுகிறார்கள். பிரிட்டனின் பிரபல டெலிகாம் நிறுவனமான பி.டி.,10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்த 24 மணி நேரத்தில் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்டில் இருந்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இவர்கள் தவிர விர்ஜின் மீடியா, யெல், கிளாஸ்கோ ஸ்மித்லைன், மற்றும் ஜேசிபி அகியோரும் மொத்தமாக 5,000 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள். இதனால் பிரிட்டனில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவாக 1.82 மில்லியனாக உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


சுமார் 500 கிளைகளின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க ஐசிஐசிஐ வங்கி திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சுமார் 500 கிளைகளில் வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் வேலைத்திறனை அதிகரிக்க அந்த வங்கி முடிவெடுத்திருக்கிறது. இப்போது காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை என்றிருக்கும் வேலை நேரத்தை டிசம்பர் ஓன்றாம் தேதியில் இருந்து காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை என்று மாற்ற இருக்கிறார்கள். இந்தியாவில் அவர்களுக்கு 1,450 கிளைகள் இருக்கின்றன. அதில் சுமார் 500 கிளைகளில் 9 டு 6 என்று வேலை நேரத்தை மாற்றப்போகிறார்கள். நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களின் வருகையை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வந்தோம். அதில் கொஞ்சம் வாடிக்கையாளர்கள் காலை 9 இலிருந்து மாலை 6 க்குள்ளும், கொஞ்சம் பேர் காலை 10 இலிருந்து மாலை 6 க்குள்ளும் வருவது தெரிந்தது. மாலை 6 மணிக்கு மேல் வங்கி சேவையை பயன்படுத்துபவர்கள் மிக சிலரே என்று தெரிய வந்தது.இதனால் முதல் கட்டமாக கொஞ்சம் கிளைகளில் மட்டும் வேலை நேரத்தை 9 டு 6 என்று மாற்ற இருக்கிறோம் என்று ஐசிஐசிஐ வங்கியில் மனித மேம்பாட்டு துறை தலைவர் ராம்குமார் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்