Monday, March 23, 2009

நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்குகிறது ; கார் ஜூலையில் கிடைக்கும்

மக்கள் கார் என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வால் அழைக்கப்படுவதும், உலகின் மிக மலிவான கார் என்றும் சொல்லப்படுவதுமான நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்கும் என்று ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 9 ம் தேதி துவங்கப்படும் புக்கிங், ஏப்ரல் 23ம் தேதி வரை இருக்கும் என்றும், முதலில் புக் செய்யும் ஒரு வட்சம் பேருக்கு முதலில் நானோ விற்கப்படும் என்றும் அதன் விலை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ரத்தன் டாடா தெரிவித்தார். ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ கொடுக்கப்படும் என்று முதலில் நாங்கள் சொன்ன வாக்கு காப்பாற்றப்படும் என்று சொன்ன அவர், அதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்றார். இருந்தாலும் இப்போது அதன் விலை கொஞ்சம் குறைந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது என்றார். முதலில் புக் செய்த ஒரு லட்சம் பேருக்கு வரும் ஜூலை மாத துவக்கத்தில் கார் சப்ளை செய்யப்படும் என்றும், அதற்கான விண்ணப்ப பாரம் இந்தியா எங்கும் 1,000 நகரங்களில் 30,000 இடங்களில் கிடைக்கும் என்றார். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் 850 கிளைகள் அதிகாரம் கொண்டதாக இருக்கும். கடன் மூலமாக வாங்க விரும்புபவர்கள் முதலில் ரூ.2,999 மட்டும் செலுத்தி விட்டு மீதியை கடன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்றார். புக்கிங்கை பெற்றுக்கொள்ள மேலும் 15 நிதி நிறுவனங்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் பெயர் இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். கார் கடனுக்கான வட்டி எவ்வளவு என்பதை கடன் கொடுக்கும் வங்கியே தீர்மானிக்கும் என்று சொன்ன ரவி காந்தி, பொதுத்துறை வங்கிகளும் கடன் கொடுக்க முன் வந்திருக்கின்றன என்றார். குஜராத்தில் சனாண்ட் என்ற இடத்தில் நானோ வுக்காக பிரத்யேகமாக துவங்கப்பட்டிருக்கும் தொழிற்சாலையில் வருடத்திற்கு 2.5 லட்சம் கார்களை தயாரிக்க முடியும். அது, விரைவில் 5 லட்சம் கார்களை தயாரிக்க கூடியதாக விரிவாக்கம் செய்யப்படும். 4.5 மீட்டர் நீளமும், 624 சிசி இஞ்சினையும் கொண்டா நானோ காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம். இப்போதுள்ள இரு சக்கர வாகனங்கள் வெளியிடும் புகையை விட குறைவான அளவே புகையை வெளியிடும் இந்த காரில் அதிகபட்சமாக லிட்டருக்கு 26.6 கி.மீ.தூரம் வரை போகலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் லக்ஸூரி என்று மூன்று மாடல்களில் நானோ கிடைக்கிறது. நானோவின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு, தேவையை பொறுத்து 2011 வாக்கில் ஏற்றுமதி செய்யப்படும் என்றார் ரத்தன் டாடா.
நன்றி : தினமலர்


ஏறியது பங்கு சந்தை : சென்செக்ஸ் 457 புள்ளிகள் உயர்ந்தது

பங்கு சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 457.34 புள்ளிகள் ( 5.1 சதவீதம் ) உயர்ந்து 9,424.02 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 132.85 புள்ளிகள் ( 4.73 சதவீதம் ) உயர்ந்து 2,939.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது ஆயில் அண்ட் கேஸ், மெட்டல் மற்றும் பேங்கிங் பங்குகள் பெறுமளவில் வாங்கப்பட்டன. அமெரிக்க வங்கிகளில் இருக்கும் வராக்கடன்களை அமெரிக்க அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றை அந்நாட்டு நிதி அமைச்சர் டிம் கெய்த்னர் இன்று அறிவிப்பதாக இருப்பதால், அந்த எதிர்பார்ப்பை அடுத்து உலக அளவில் பங்கு சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, செய்ல், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி.பேங்க், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன. டி.எல்.எப். மற்றும் ஹெச்.சி.எல் டெக் ஆகிய இரு நிறுவன பங்குகள் மட்டுமே விலை குறைந்திருந்தன.
நான்றி : தினமலர்


பெரிய கனவுகளுடன் இன்று வர இருக்கும் சிறிய கார்

இந்தியா முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான கார் பிரியர்கள் பெரிய கனவுகளுடன் காத்திருக்கும் சிறிய காரான ' நானோ ' இன்று வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. நானோ கார் வெளிவருவதை அடுத்து, இன்று பங்கு சந்தையில் டாடா மோட்டார்ஸின் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ' மக்கள் கார் ' என்று சொன்ன உலகின் மிக மலிவு விலை காரான நானோ மூன்று மாடல்களில் வெளிவருகிறது. ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் லக்ஸூரி ஆகிய மாடல்களில் வெளிவருகிறது. விலை, மாடலுக்கு தகுந்தபடி ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.1.30வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் காரில் ஏ.சி.இருக்காது.இன்று மும்பையில் வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்படும் நானோ, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில்தான் இந்தியாவின் மற்ற நகரங்களில் உள்ள டாடா மோட்டார்ஸின் டீலர்களுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. புக்கிங்கும் அப்போதுதான் ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது. புக் செய்யும்போதே முன்பணம் ரூ.70,000 செலுத்த வேண்டும். கடந்த 15 மாதங்களுக்கு முன்பே டில்லியில் நடந்த ஆட்டோ ஷோவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தும், வர்த்தக ரீதியாக வெளியில் வருவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு, மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு எதிராக நடந்தப்பட்ட அரசியல் போராடம்தான் காரணம். கடந்த அக்டோபரிலேயே இந்த கார் விற்பனைக்கு அனுப்ப டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருந்தும், மே.வங்கத்தில் உள்ள சிங்கூரில் இவர்கள் அமைத்த தொழிற்சாலையை நடத்த விடாமல் அரசியல் கட்சி ஒன்று தடுத்ததை அடுத்து, அந்த தொழிற்சாலையை அங்கிருந்து குஜராத்தில் உள்ள சனான்ட் என்ற இடத்திற்கு மாற்ற வேண்டியதாகி விட்டது. அங்கும் முழு அளவிலான தயாரிப்பு நடக்க இந்த வருடம் அக்டோபர் வரை ஆகி விடும் என்று சொல்லப்படுகிறது. டாடாவின் மற்ற தொழிற்சாலைகளிலேயே இப்போது குறைந்த அளவில் நானோ கார் தயாரிக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு புது திட்டம்

கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் வசதிக்காக லேண்ட் லைனில் ஒரே நேரத்தில் பலருடன் 'ஆடியோ கான்பரன்சிங்' வசதியை பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக ஒருவர் மற்றொருவருக்கு போன் செய்து பேசிக்கொள்வது சாதாரண விஷயம். ஆனால், ஒருவர் ஒரே நேரத்தில் பலருடன் பேசிக் கொள்ளும் வசதியும் தற்போது உள்ளது. அது தான் ஆடியோ கான்பரன்ஸ் வசதி. இந்த வசதியை தற்போது பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளலாம். இந்த தொடர்பை ஏற்படுத்துவதற்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் '128888' என்ற எண்ணை அழைத்து, பேச வேண்டிய எண்களை அளிக்க வேண்டும். பின், ஒவ்வொரு எண்ணாக இணைப்பு அளிக்கப்படும். மொபைல் போனில் இந்த வசதி இருந்தாலும் எண்ணிக்கையில் குறைந்த அளவே நாம் பேச முடியும். அதுவும் ஒரே நிறுவனத்தின் போன் எண்களில் மட்டுமே பேச முடியும்.
ஆனால், பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் முதன்முறையாக லேண்ட் லைன் இணைப்பில் அறிமுகப்படுத்தியுள்ள கான்பரன்ஸ் வசதியில் ஒரே நேரத்தில் 20, 30 பேரைக் கூட தொடர்பு கொள்ளலாம். வெவ்வேறு நிறுவனங்களின் இணைப்புகளில் கூட பேசிக் கொள்ளலாம். மேலும், எஸ்.டி.டி - ஐ.எஸ்.டி., என அனைத்து பிரிவுகளிலும் தொடர்பு கொள்ள முடியும். பயன்பாட்டிற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஒரே நேரத்தில் 1,500 பேர் வரையில் பேசும் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆடியோ கான்பரன்சிங் சேவையை பயன்படுத்துவதன் மூலம் பயண நேரம், பயணச் செலவு குறைகிறது. அத்துடன் வர்த்தகத்திற்கான அதிகப்படியான செலவும் குறைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பலர் ஆலோசனை செய்யும் வசதியும் இதில் கிடைக்கிறது. இதில், சாதாரண மற்றும் அவசர கான்பரன்சிங் என இரண்டு பிரிவு உள்ளது. அவசர கான்பரன்சிங் என்பது ஒரு மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படுவதாகும். ஒரு மணி நேரத்திற்கு மேல் இணைப்பு கிடைப்பதென்றால் அது சாதாரண கான்பரன்சிங். இதற்கான கட்டணம், தமிழகத்திற்குள் எனில் சாதாரண இணைப்பிற்கு நிமிடத்திற்கு 2.40 ரூபாயும், அவசர இணைப்பிற்கு நிமிடத்திற்கு 4.80 ரூபாயும், தமிழகம் தவிர இந்தியா முழுவதும் சாதாரண இணைப்பிற்கு நிமிடத்திற்கு 3.60 ரூபாயும், அவசர இணைப்பிற்கு 7.20 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அழைப்பவர் மற்றும் ஐந்து பேர் ஆடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொள்ளும் போது, ஐந்து நிமிடங்கள் பேசினால் 6 பேர் *5 நிமிடம்* 2.40 காசுகள் என 72 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணங்கள் அனைத்தும் மாதம் அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பப்படும் பி.எஸ்.என்.எல்., பில்களிலேயே இணைத்து அனுப்பப்படுகிறது. மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இந்த புதிய திட்டம் தற்போதுள்ள பொருளாதார சூழலில் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.