Thursday, July 31, 2008

வட்டி உயர்வால் பாதிக்கப்படும் இந்திய சிறிய கார் தொழில்


கடந்த செவ்வாய் அன்று, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியதை அடுத்து எல்லா வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சிறிய கார் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கார் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கார் சந்தை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. இப்போது வங்கிகள் வட்டியை உயர்த்தி விட்டால் அது மேலும் மோசமாகும். குறிப்பாக சிறிய கார் சந்தை பாதிக்கப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் வைஸ் பிரசிடென்ட் ( கார்பரேட் விவகாரம் ) பாலேந்திரன் தெரிவித்தார். இந்தியாவை பொறுத்தவரை சிறிய கார் சந்தையில் தான் நாம் வளர்ச்சியை காண முடியும். வங்கிகள் வட்டியை உயர்த்தி விட்டால் அதிலும் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் கம்பெனியான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்) அர்விந்த் சேக்ஸானா இது பற்றி கூறுகையில், வங்கிகள் வட்டியை உயர்த்தினால், கடந்த நிதி ஆண்டில் டபுள் டிஜிட்டில் இருந்த இந்திய ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி வளர்ச்சி, இந்த நிதி ஆண்டில் சிங்கிள் டிஜிட் ஆகி விடும் என்றார். செவ்வாய் அன்று வங்கிகளுக்கான குறைந்த கால கடனுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதமும், சி.ஆர்.ஆர்.எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.25 சதவீதமும் உயர்த்தி இருக்கிறது. இதனால் வங்கிகளும் அவர்களிடம் கடன் வாங்குபவர்களுக்கு ( குறிப்பாக கார் லோன் வாங்குபவர்களுக்கு ) வட்டியை ஒரு சதவீதம் வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி : தினமலர்


அதிகம் மாற்றமின்றி முடிந்த இன்றைய பங்கு சந்தை


இந்திய பங்கு சந்தை இன்று லேசான மாற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 68.54 புள்ளிகள் ( 0.48 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,355.75 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 19.40 புள்ளிகள் ( 0.45 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,332.95 புள்ளிகளில் முடிந்துள்ளது. மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் வாங்கப்பட்டன.பார்மா, டெக்னாலஜி, பேங்கிங், டெலிகாம் பங்குகள் விற்கப்ட்டன.


நன்றி : தினமலர்


ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் ? ராகேஷ் மோகனா, அலுவாலியாவா

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்கின் கவர்னராக இருக்கும் ஓய்.வி.ரெட்டியின் ஐந்து வருட பதவிக்காலம் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடைகிறது. அவர் தனது பதவிக்காலத்தின் கடைசி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை கடந்த செவ்வாய் அன்று வெளியிட்டார். ஒரு வேளை அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படாவிட்டால் அவருக்கு பதிலாக கவர்னராக வர இருப்பவர் யார் என்ற பேச்சு இப்போதே டில்லியில் அடிபடத்துவங்கி விட்டது. அவருக்கு பதிலாக இப்போது ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னராக இருக்கும் ராகேஷ் மோகன் அல்லது திட்ட கமிஷன் துணை தலைவராக இருக்கும் மான்டேக் சிங் அலுவாலியா வரலாம் என்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.ராகேஷ் மோகன் பிரின்ஸ்டன் மற்றும் யேல் பல்கலைக் கழகங்களில் படித்தவர். மத்திய நிதித்துறையில் பணியாற்றிய பின் ரிசர்வ் வங்கிக்கு வந்தவர். எனவே இவருக்கு நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கியில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஆக்ஸ்போர்டில் படித்த அலுவாலியாவை அடுத்த கவர்னராக நியமித்தால் அதை எதிர்கட்சிகள் விரும்பாது என்கிறார்கள். இவரது நியமனம் பிரச்னைக்குள்ளாகும் என்கிறார்கள். எனவே ஆசியாவில் இரண்டாவதாக மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவின் மத்திய வங்கிக்கு யார் தலைவராக வருவார் என்பது இப்போதைக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

நன்றி : தினமலர்

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலராக உயர்ந்தது


சர்வதேச சந்தையில் பேரலுக்கு 122 டாலருக்கும் கீழே போயிருந்த கச்சா எண்ணெய் விலை இன்று 126 டாலருக்கு மேல் உயர்ந்து விட்டது. யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 4.58 டாலர் உயர்ந்து பேரலுக்கு 126.77 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 4.39 டாலர் உயர்ந்து 127.10 டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் கிடைத்து வந்த கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துள்ளதாக அமெரிக்க எனர்ஜி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாக சொல்கிறார்கள். கடந்த வாரத்தில் அமெரிக்க கச்சா எண்ணெய் சப்ளை 81,000 பேரல்கள் குறைந்து 295.2 மில்லியன் பேரல்களாகி விட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து விலை உயர்ந்து விட்டது. ஜூலை 11ம் தேதி 147 டாலருக்கும் மேல் சென்ற கச்சா எண்ணெய் விலை நேற்று 122 டாலருக்கும் குறைவாக போனது. அதற்கு டாலரின் மதிப்பு சிறிது அதிகரித்திருப்பதும், அமெரிக்காவில் பெட்ரோலுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்து போனதும் தான் காரணம் என்று சொன்னார்கள்.

நன்றி : தினமலர்


மறுபடியும் தள்ளாடுகிறது பங்குச் சந்தை



சந்தை மறுபடியும் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. இந்த முறை தள்ளாட்டம், ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர்., ஆகிய விகிதங்களை கூட்டியதால் வந்தது. திங்களன்றும், நேற்றும் கூடிய புள்ளிகளை வைத்துப் பார்க்கும் போது நேற்று முன்தினம் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறது எனக் கூறலாம். சென்ற வாரம் முடிவடைந்த புள்ளிகளை, பங்குச் சந்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம் உடனடியாகக் குறையாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் விடுத்த அறிவிப்பே, அடுத்த நாளில் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர்., சதவீதம் கூடலாம் என்று பலரும் யூகிக்க ஆரம்பித்து விட்டனர். எதிர்பார்த்தபடியே ரெப்போ ரேட் 50 புள்ளிகளும், சி.ஆர்.ஆர்., 25 புள்ளிகளும் கூட்டப்பட்டது. தற்போது, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 9 சதவீதமாக உள்ளது. இது, ஒன்பது ஆண்டுகளில் தற்போது தான் இவ்வளவு அதிகமாக உள்ளது. மேலும், சி.ஆர்.ஆர்., 9 சதவீதமாகவும் கூடியுள்ளது.
வங்கிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா?: வங்கிகளிடைய முக்கியமான தொழிலே டிபாசிட்கள் வாங்குவது, கடன்கள் வழங்குவது தான். உதாரணமாக ஒரு வங்கி ரூபாய் 100 ஐ ஒரு வாடிக்கையாளரிடமிருந்து டிபாசிட் வாங்குகிறது என்றால், தற்போது அதில் 9 ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் வட்டியில்லாமல் டிபாசிட்டாக வைக்க வேண்டும். மேலும் ரூபாய் 25யை பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது வாங்கிய டிபாசிட் ரூபாய் 100ல் அந்த வங்கியிடம் ரூபாய் 66 தான் கடன் வழங்க உள்ளது. இதனால், கடன்கள் வழங்க வங்கிகளிடம் இருக்கும் பணம் குறைவாக இருக்கும். ஆதலால், கொடுக்கும் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் கூடும். வட்டி விகிதங்கள் கூடினால் கம்பெனிகள், வங்கிகளிடம் தாங்கள் வாங்கும் கடன்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். ஆதலால், அவர்களின் லாபங்கள் குறையும். இதனால் தான் வட்டி விகிதங்கள் கூட்டப்படும் போதும், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய கையிருப்பு பணம் (சி.ஆர்.ஆர்.,) கூட்டப்படும் போதும் பங்குச் சந்தை படுத்து விடுகிறது. வங்கிகள் வட்டி விகிதங்களை கூட்டக் கூடும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 1 சதவீதம் உடனடியாக கூட்டியுள்ளது. மற்ற வங்கிகளும் இது போல வட்டி விகிதங்கள் கூட்டுவது உறுதியான ஒன்றாகும்.
அப்படியெனில் நாம் வங்கிகளிடம் வைக்கும் டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடுமா?: நீங்கள் யூகிப்பது சரி தான். வங்கிகள் தாங்கள் வாங்கும் டிபாசிட்களுக்கு அதிக வட்டி கொடுக்கலாம். தற்போதே அதிக போட்டி இருக்கிறது. நீண்ட கால வட்டி விகிதங்கள் தற்போது 9 முதல் 10 சதவீதம் வரை உள்ளது. நேற்று முன்தினம் வங்கிப் பங்குகள் எல்லாம் ஒரேயடியாக கீழே சரிந்தன. பாங்க் ஆப் இந்தியா 12.5 சதவீதமும், ஆக்சிஸ் பாங்க் 11 சதவீதமும், கோட்டக் மகேந்திரா பாங்க் 10 சதவீதமும், பாங்க் ஆப் பரோடா 9.5 சதவீதமும், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் 9.5 சதவீதமும் குறைந்தன. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 558 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.
நேற்று முன்தினம் குறைந்த சந்தை, நேற்று ஏன் ஏறியது?: நேற்று முன்தினம் நமக்கு பிறகு துவங்கிய அமெரிக்க சந்தைகள் நன்றாக மேலே சென்றன. அங்கு நுகர் பொருட்கள் விற்பனை கூடியிருப்பதாக வந்த செய்திகளை அடுத்து அங்கு சந்தைகள் 2 சதவீதத்திற்கு மேலாக கூடியது. அதன் பிரதிபலிப்பு, இந்திய சந்தைகளிலும் நேற்று இருந்தது. சமீபத்தில் வெளியான இந்துஸ்தான் லீவர், கோத்ரேஜ் ஆகிய கம்பெனிகளின் விற்பனைகளும் கூடுதலாக இருந்தது இந்தியாவிலும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை கூடிவருவதைக் காட்டுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள் நேற்று மேலே சென்றது சந்தைக்கு வலுவூட்டியது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 495 புள்ளிகள் கூடி 14,287 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 124 புள்ளிகள் கூடி 4,313 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
காலாண்டு முடிவுகள்: சில கம்பெனிகளுக்கு இந்த காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கின்றன. சில கம்பெனிகளுக்கு பாதகமாகவும் இருக் கின்றன. வங்கிகளின் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்த்தால், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு சாதகமாக இல்லை. அதே சமயம் எச்.டி.எப்.சி., பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன. மேலும், கெய்ர்ன் இந்தியா, யுனிடெக், அஜந்தா பார்மா, திஷ்மன் பார்மா ஆகிய கம்பெனிகளும் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன.
மகேந்திரா அண்டு மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி., ஆகிய கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் நன்றாக இல்லாததால் சந்தையில் அந்தக் கம்பெனிகளின் பங்குகள் கீழே விழுந்தன.
-சேதுராமன் சாத்தப்பன்-


நன்றி : தினமலர்


கிரெடிட் கார்டு புகாரா? : ரிசர்வ் வங்கி விசாரிக்கிறது



''வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த குறைகள் அல்லது புகார்களை ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கி தீர்வாணையம் (பேங்கிங் ஆம்புட்ஸ்மன்) பிரிவில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்,'' என ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் ஜோசப் தெரிவித்தார்.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குனர் ஜோசப் கூறியதாவது:
வங்கிகள், 'கிரெடிட் கார்டு' தொடர்பான விவரங்களை வட்டார மொழிகளிலும் கண்டிப்பாக வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் அனைத்து வங்கிகளுக்கும் தெரிவித்திருக்கிறோம்.
வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் பிரதிநிதிகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் செயல்பாடு குறித்த தங்களது புகார்களை தெரிவிக்க, ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், வங்கி தீர்வாணையம் இயங்கி வருகிறது. வங்கிக் கணக்கு செயல்படுவதில் உள்ள குறைகள், வங்கி கணக்கு ஆரம்பிப்பது/முடிப்பதில் தாமதம், வங்கி சேவைகளை வழங்குவதில் உள்ள குறைகள், காசோலை, 'டிடி' பரிசீலனையில் தாமதம், சேவைகளுக்கு முன் அறிவிப்பின்றி கட்டணம் வசூலித்தல், ஏ.டி.எம்., டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாதது, குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அல்லது நாணயங்களை பெற மறுப்பது, டிபாசிட்டிற்கான வட்டி விகிதம் தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறையை பின்பற்றாதது, கடன் வழங்குவதில் தாமதம், உரிய காரணங்கள் இன்றி கடன் வழங்க மறுப்பது ஆகியவை குறித்து பொதுமக்கள் இங்கு புகார் தெரிவிக்கலாம். வங்கிகளின் செயல்பாடு குறித்த தங்களது குறைகள்/புகார்களை பொதுமக்கள், ' 'The Banking Ombudsman, c/o Reserve Bank of India, Fort Glacis, 16, Rajaji Salai, Chennai 600001' என்ற முகவரியில் தெரிவிக்கலாம். மேலும் 044-25399174 என்ற தொலைபேசி எண், 044-25395488 என்ற பேக்ஸ் எண் மற்றும் 'bochennai@rbi.org.in' என்ற இ-மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு ஜோசப் கூறினார்.


நன்றி : தினமலர்