Thursday, July 31, 2008

மறுபடியும் தள்ளாடுகிறது பங்குச் சந்தை



சந்தை மறுபடியும் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. இந்த முறை தள்ளாட்டம், ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர்., ஆகிய விகிதங்களை கூட்டியதால் வந்தது. திங்களன்றும், நேற்றும் கூடிய புள்ளிகளை வைத்துப் பார்க்கும் போது நேற்று முன்தினம் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறது எனக் கூறலாம். சென்ற வாரம் முடிவடைந்த புள்ளிகளை, பங்குச் சந்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம் உடனடியாகக் குறையாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் விடுத்த அறிவிப்பே, அடுத்த நாளில் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர்., சதவீதம் கூடலாம் என்று பலரும் யூகிக்க ஆரம்பித்து விட்டனர். எதிர்பார்த்தபடியே ரெப்போ ரேட் 50 புள்ளிகளும், சி.ஆர்.ஆர்., 25 புள்ளிகளும் கூட்டப்பட்டது. தற்போது, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 9 சதவீதமாக உள்ளது. இது, ஒன்பது ஆண்டுகளில் தற்போது தான் இவ்வளவு அதிகமாக உள்ளது. மேலும், சி.ஆர்.ஆர்., 9 சதவீதமாகவும் கூடியுள்ளது.
வங்கிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா?: வங்கிகளிடைய முக்கியமான தொழிலே டிபாசிட்கள் வாங்குவது, கடன்கள் வழங்குவது தான். உதாரணமாக ஒரு வங்கி ரூபாய் 100 ஐ ஒரு வாடிக்கையாளரிடமிருந்து டிபாசிட் வாங்குகிறது என்றால், தற்போது அதில் 9 ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் வட்டியில்லாமல் டிபாசிட்டாக வைக்க வேண்டும். மேலும் ரூபாய் 25யை பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது வாங்கிய டிபாசிட் ரூபாய் 100ல் அந்த வங்கியிடம் ரூபாய் 66 தான் கடன் வழங்க உள்ளது. இதனால், கடன்கள் வழங்க வங்கிகளிடம் இருக்கும் பணம் குறைவாக இருக்கும். ஆதலால், கொடுக்கும் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் கூடும். வட்டி விகிதங்கள் கூடினால் கம்பெனிகள், வங்கிகளிடம் தாங்கள் வாங்கும் கடன்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். ஆதலால், அவர்களின் லாபங்கள் குறையும். இதனால் தான் வட்டி விகிதங்கள் கூட்டப்படும் போதும், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய கையிருப்பு பணம் (சி.ஆர்.ஆர்.,) கூட்டப்படும் போதும் பங்குச் சந்தை படுத்து விடுகிறது. வங்கிகள் வட்டி விகிதங்களை கூட்டக் கூடும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 1 சதவீதம் உடனடியாக கூட்டியுள்ளது. மற்ற வங்கிகளும் இது போல வட்டி விகிதங்கள் கூட்டுவது உறுதியான ஒன்றாகும்.
அப்படியெனில் நாம் வங்கிகளிடம் வைக்கும் டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடுமா?: நீங்கள் யூகிப்பது சரி தான். வங்கிகள் தாங்கள் வாங்கும் டிபாசிட்களுக்கு அதிக வட்டி கொடுக்கலாம். தற்போதே அதிக போட்டி இருக்கிறது. நீண்ட கால வட்டி விகிதங்கள் தற்போது 9 முதல் 10 சதவீதம் வரை உள்ளது. நேற்று முன்தினம் வங்கிப் பங்குகள் எல்லாம் ஒரேயடியாக கீழே சரிந்தன. பாங்க் ஆப் இந்தியா 12.5 சதவீதமும், ஆக்சிஸ் பாங்க் 11 சதவீதமும், கோட்டக் மகேந்திரா பாங்க் 10 சதவீதமும், பாங்க் ஆப் பரோடா 9.5 சதவீதமும், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் 9.5 சதவீதமும் குறைந்தன. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 558 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.
நேற்று முன்தினம் குறைந்த சந்தை, நேற்று ஏன் ஏறியது?: நேற்று முன்தினம் நமக்கு பிறகு துவங்கிய அமெரிக்க சந்தைகள் நன்றாக மேலே சென்றன. அங்கு நுகர் பொருட்கள் விற்பனை கூடியிருப்பதாக வந்த செய்திகளை அடுத்து அங்கு சந்தைகள் 2 சதவீதத்திற்கு மேலாக கூடியது. அதன் பிரதிபலிப்பு, இந்திய சந்தைகளிலும் நேற்று இருந்தது. சமீபத்தில் வெளியான இந்துஸ்தான் லீவர், கோத்ரேஜ் ஆகிய கம்பெனிகளின் விற்பனைகளும் கூடுதலாக இருந்தது இந்தியாவிலும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை கூடிவருவதைக் காட்டுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள் நேற்று மேலே சென்றது சந்தைக்கு வலுவூட்டியது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 495 புள்ளிகள் கூடி 14,287 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 124 புள்ளிகள் கூடி 4,313 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
காலாண்டு முடிவுகள்: சில கம்பெனிகளுக்கு இந்த காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கின்றன. சில கம்பெனிகளுக்கு பாதகமாகவும் இருக் கின்றன. வங்கிகளின் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்த்தால், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு சாதகமாக இல்லை. அதே சமயம் எச்.டி.எப்.சி., பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன. மேலும், கெய்ர்ன் இந்தியா, யுனிடெக், அஜந்தா பார்மா, திஷ்மன் பார்மா ஆகிய கம்பெனிகளும் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன.
மகேந்திரா அண்டு மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி., ஆகிய கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் நன்றாக இல்லாததால் சந்தையில் அந்தக் கம்பெனிகளின் பங்குகள் கீழே விழுந்தன.
-சேதுராமன் சாத்தப்பன்-


நன்றி : தினமலர்


No comments: